search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் திறப்பது எப்போது?-மாநகராட்சி கமிஷனர் பதில்
    X

    சந்திப்பு பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் கட்டிடப்பணிகள் முடிவடைந்து இருப்பதை படத்தில் காணலாம்.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் திறப்பது எப்போது?-மாநகராட்சி கமிஷனர் பதில்

    • திருட்டு சம்பவங்களை குறைப்பதற்காக ரூ.21 லட்சத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
    • ஒரே நேரத்தில் சுமார் 25 பஸ்கள் வரை வந்து நிற்கும் வகையில் சந்திப்பு பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சந்திப்பு பஸ்நிலையம்

    அதன் ஒரு பகுதியாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் சந்திப்பு பஸ் நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு புதிதாக பஸ் நிலையம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது.

    இதற்காக ரூ.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு பஸ் நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டது.

    உடனடியாக பணிகள் தொடங்கிய நிலையில் பள்ளம் தோண்டும்போது தண்ணீர் அதிக அளவு ஊறியதால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

    பின்னர் சுமார் ஓராண்டுக்கு பிறகு 2019-ம் ஆண்டு கடைசியில் பணிகள் மீண்டும் தொடங்கின. அங்கு தற்போது ஒரு பகுதி பணிகள் முடிவடைந்து உள்ளது.

    144 கடைகள்

    இந்த பஸ் நிலையத்தில் 144 கடைகளை உள்ளடக்கிய வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடைகள் மூலமாக மாநகராட்சிக்கு ரூ.2 கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த 3 அடுக்கு வணிக வளாகங்களுக்கு கீழே 106 கார்கள், 1,629 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கீழ்த்தளம் அமைக்கப்படுகிறது.

    ஒரே நேரத்தில் சுமார் 25 பஸ்கள் வரை வந்து நிற்கும் வகையில் சந்திப்பு பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.மழைக்காலத்தில் இந்த பகுதியில் அதிகமாக தண்ணீர் தேங்கும் என்பதால் அதனை சமாளிக்கும் வகையிலும் தண்ணீர் தேங்காத அளவுக்கு நவீன முறையில் வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    காமிரா

    திருட்டு சம்பவங்களை குறைப்பதற்காக ரூ.21 லட்சத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இது தவிர மேல் தளங்களுக்கு செல்வதற்காக தானியங்கி படிக்கட்டுகள், தேவையான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட உள்ளது.

    மேலும் பயணிகள் அமர்வதற்கு துருப்பிடிக்காத இருக்கைகள், 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் அறிவிப்பு பலகைகள் வசதி, ஆங்காங்கே தொலைக்காட்சிகள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.

    மாநகராட்சி ஏற்பாடு

    தற்போது ஒரு பகுதி பணி முடிவடைந்துள்ளதால் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் சந்திப்பு பஸ்நிலையத்தின் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் முடிவடைந்துள்ளது.

    அந்த பகுதியை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பஸ் நிலையம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே தற்போது அதனை திறப்பதில் சாத்தியமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×