என் மலர்
நீங்கள் தேடியது "Mahathir Mohamad"
- 97 வயதான அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- மலேசியாவில் 1981 முதல் 2003 வரை தொடர்ந்து 22 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.
கோலாலம்பூர் :
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 97 வயதான அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது உடல் நிலை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மகாதீர் முகமது பல முறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் 1981 முதல் 2003 வரை தொடர்ந்து 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த மகாதீர் முகமது, 2018-ம் ஆண்டு தனது 92 வயதில் மீண்டும் மலேசியா பிரதமரானது மூலம் உலகின் மிகவும் வயதானவர் என்கிற பெருமையை பெற்றார். எனினும் கூட்டணி குழப்பங்களால் 2020-ல் அவரது அரசு கவிழ்ந்து அவர் பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் இஸ்லாமிய சட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு 2 பெண்கள் ஒரு காரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு, பிடிபட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவர்கள் குற்றவாளிகள் என கண்டு தலா 3,300 ரிங்கிட் (சுமார் ரூ.57 ஆயிரம்) அபராதம் செலுத்தவேண்டும் என்றும், அவர்களுக்கு தலா 6 பிரம்படியும் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.
அதைத் தொடர்ந்து அந்த கோர்ட்டில் வைத்து சுமார் 100 பேர் முன்னிலையில் அந்தப் பெண்களுக்கு பிரம்படி தரப்பட்டது. இதற்கு எதிராக அங்கு கருத்துக்கள் எழுந்தன.
வடக்கு மாகாணமான டெரங்கானுவில் இப்படி பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டது இதுவே முதல் முறை.
இந்த நிலையில் அந்த பெண்களுக்கு பிரம்படி தண்டனை கொடுத்ததற்கு பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “இந்த தண்டனை தொடர்பாக நான் மந்திரிகளிடம் விவாதித்தேன். அவர்கள் இந்த தண்டனை, இஸ்லாமிய மதம் கூறுகிற நீதியையும், சகிப்புத்தன்மையையும் பிரதிபலிக்கவில்லை என்று கருதுகின்றனர். இந்த தண்டனை இஸ்லாமிய மதம் பற்றிய ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். இதேபோன்ற குற்றங்கள் நடக்கிறபோது, சற்று லேசான தண்டனைகளை நாம் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இஸ்லாம் என்பது மக்களை இழிவுபடுத்துகிற மதம் அல்ல என்பதை நாம் காட்ட வேண்டியது முக்கியம்” என குறிப்பிட்டார். #Malaysia #MahathirMohamed
வங்காளதேசத்தின் டாக்கா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவரை கண்காணிக்கும்படி வங்கதேச அரசு இந்திய அரசினை கேட்டுக்கொண்டது.
அதன்படி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
இந்தியாவில் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு தொடர்புடைய 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், புலனாய்வு அமைப்புகள் அந்த அமைப்பின் அனைத்து நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறது.
இதையடுத்து, தற்போது மலேசியா நாட்டில் தலைமறைவாக உள்ள ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட் போன்றவற்றை மீண்டும் அளிக்க உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம். சவந்த் மற்றும் ரேவதி மோகிதே அமர்வு, ஜாகிர் நாயக் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறையிடம் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
மேலும், தனது பாஸ்போர்ட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த வழக்கு மிகப்பெரிய தண்டனைக்குரிய வழக்கு என்றும், ஜாகிர் நாயக் நீதிமன்றத்திலோ, விசாரணை ஆணையத்திடமோ ஆஜர் ஆகாமல் எந்த முடிவும் எடுக்க இயலாது எனவும் கூறினர்.

தேடப்படும் நபர்களை ஒப்படைக்க இந்தியா - மலேசியா இடையிலான உடன்படிக்கையின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரசை இந்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஜாகிர் நாயக் இந்தியா வந்து நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதை ஜாகிர் நாயக் சமீபத்தில் மறுத்திருந்தார்.
நான் இந்தியா வருவதாக வந்துள்ள செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. தவறானவையும் கூட. எனக்கெதிராக நியாயமற்ற விசாரணை நடைபெறாது என்பதை உறுதிப்படுத்தும் வரை இந்தியாவுக்கு வருவதாக திட்டமில்லை.
நீதியான, நியாயமான அரசு நடைபெறுவதாக நான் உணரும்போதுதான் என் தாய்நாட்டுக்கு வருவேன் என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜாகிர் நாயக்குக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டதால் அவரை இந்தியாவுக்கு வெளியேற்ற முடியாது என மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் அருகேயுள்ள புட்ரஜெயா நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மஹதிர் முஹம்மது, ‘ஜாகிர் நாயக்குக்கு மலேசிய நாட்டின் நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவரால் இங்கு எந்த பிரச்சனையும் உருவாகும் வரை நாங்கள் அவரை வெளியேற்ற மாட்டோம்’ என குறிப்பிட்டுள்ளார். #ZakirNaikextradition #MahathirMohamad

பணமோசடி வழக்கில், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அலுவலகம் என 6 இடங்களில் காவல்துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர்.
சோதனையின் போது சுமார் 284 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மாடர்ன் கைப்பைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பைகள் பலவற்றில் நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில், இன்று அதிகாலை நஜீப் ரசாக்கிற்கு சொந்தமான இடத்திலிருந்து விலையுயர்ந்த கைப்பைகள், நகைகள், கைக்கடிகாரம் போன்றவற்றை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக அப்பகுதி தொலைக்காட்சிக்கு அளிக்கப்பட்ட பேட்டி ஒன்றில் பேசிய குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை காவல் உயர் அதிகாரி அமர் சிங், கைப்பற்றபட்ட பணம், நகைகளின் மதிப்பை தற்போது வெளியிட முடியாது எனவும், மீதமுள்ள பைகளையும் சோதனை செய்து அவற்றின் மதிப்பையும் கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டாலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது நஜீப் ரசாக்கும் அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Malaysia #NajibRazak
மலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில், தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டாலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதனை மறுத்துள்ள நஜீப்பின் வழக்கறிஞர் ஹர்பால் சிங், ‘ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை’ என தெரிவித்துள்ளார். மேலும், ‘கைப்பை போன்ற சில பொருட்கள் காவல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன, ஆனால் அதுகுறித்து அச்சப்பட ஏதுமில்லை’ எனவும் தெரிவித்துள்ளார்.
நஜீப் ரசாக் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஹர்பால் சிங், ‘அதற்கான அவசியம் இல்லை, நஜீப்பும் அவரது குடும்பத்தினரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்’ என கூறியுள்ளார். #Malaysia #NajibRazak #moneylaunderingcases
கடந்த வாரம் நடைபெற்ற மலேசிய பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 92 வயது நிரம்பிய மஹாதிர் முகமது மலேசியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதன்முலம், உலகிலேயே மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை டோக்கியோவில் நடத்தும் கருத்தரங்கு ஒன்றில் பேசிய மஹாதிர் முகமது, இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டு காலம் மட்டுமே மலேசிய பிரதமராக பதவி வகிப்பேன். பிரதமர் பதவியை விட்டு கீழே இறங்கினாலும், மலேசிய அரசின் பின்னல் இருந்து முக்கிய பங்காற்றுவேன் என தெரிவித்தார்.
மேலும், தான் பிரதமராக தொடர்ந்தாலும், விரைவில் சிறையிலிருந்து வெளிவர உள்ள அன்வர் இப்ராஹிம் கூட்டணி கட்சிகளின் தலைவராக தொடர்வார் என அவர் தெரிவித்துள்ளார். தனது தேர்தல் பிரசாரத்தின் போது, அன்வர் இப்ராஹிம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு பிரதமராக்கப்படுவார் என மஹாதிர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அன்வர் இப்ராஹிமின் மனைவி தற்போது மலேசியா துணை பிரதமராக உள்ளார் என்பதும் நினைவு கூறத்தக்கது. #MahathirMohamad
மலேசியாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 92 வயதான மஹாதிர் முகம்மது நேற்று பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மஹாதிர் கூறியிருந்தார். அதன்படி, அன்வரை விடுவிப்பது தொடர்பாக இன்று மஹாதிர் தலைமையில் அந்நாட்டு மன்னர் சுல்தான் முகம்மதுவை சந்தித்து முக்கிய கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரதமர் மஹாதிரின் கோரிக்கையை ஏற்ற மன்னர், அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க சம்மதித்துள்ளார். இதனை மஹாதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் மஹாதிரின் பிஎச் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
அன்வர் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணை பிரதமராக பதவியேற்றுள்ளார். அன்வர் இப்ராஹிம் விரைவில் சிறையிலிருந்து வெளிவரும் பட்சத்தில் முக்கிய பொறுப்பு அவருக்கு அளிக்க மஹாதிர் தயாராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.






