என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbakonam Court"

    • பொதுக்குளத்தை மீன் வளர்ப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஏலம் எடுத்திருந்தார்.
    • ஏலம் எடுத்துள்ள குளத்தில் தன்னை கேட்காமல் எப்படி மண் அள்ளலாம் என தட்டிக்கேட்டுள்ளார்

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கோவனூர் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் குழந்தைராஜ் (வயது 65). இவருடைய மகன் சார்லஸ்.

    இவர் அதே பகுதியில் உள்ள பொதுக்குளத்தை மீன் வளர்ப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஏலம் எடுத்திருந்தார்.

    அந்த குளத்தில் சம்பவத்தன்று கோவனூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த டிரைவர் சகாயராஜ் (60) என்பவர் மணல் அள்ளினார்.

    அப்போது அங்கு சென்ற சார்லஸ் தான் ஏலம் எடுத்துள்ள குளத்தில் தன்னை கேட்காமல் எப்படி மண் அள்ளலாம் என சகாயராஜிடம் தட்டிக்கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த சகாயராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சார்லசை சரமாரியாக வெட்டினார்.

    இதில் சார்லசின் தோள்பட்டை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    இதை தடுக்க வந்த குழந்தைராஜையும், சகாயராஜ் கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

    பின்னர் பலத்த வெட்டுக்காயம் அடைந்து மயங்கி கிடந்த சார்லசை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து குழந்தைராஜ் நாச்சியார் கோவில் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயராஜை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் முதன்மை சார்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

    இதில் நீதிபதி சண்முகப்பிரியா சகாயராஜுக்கு 4½ ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    கும்பகோணம் அருகே வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கரிக்குளம் மெயின் சாலையில் வசிப்பவர் ரத்தினம் (65). இவரது மகன் செல்வம் (30). இவர்களது குடும்பத்திற்கும், அதே பகுதியில் வசிக்கும் ராசு குடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் செல்வம் அதே பகுதியில் சென்ற போது அவரை ராசு மகன் கண்ணதாசன் (42) வழிமறித்து தகராறு செய்துள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசி அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வம் அதே இடத்தில் இறந்தார்.

    இதுகுறித்து திருவிடை மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. குற்றவாளி கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
    கதிராமங்கலம் போராட்ட வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் ஜெயராமன் நேரில் ஆஜரானார். #kathiramangalamprotest #professorjayaraman

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஆண்டு விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எரிவாயு குழாய்களை பதித்தது.

    இந்த குழாய்களால் விளைநிலங்கள் பாதிப்படைவதாக கூறி மயிலாடு துறையை சேர்ந்த மீத்தேன் எதிர்ப்பு கூட்டடைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

    இதையடுத்து பேராசிரியர் ஜயராமன் உள்பட சிலர் மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்குகள் இன்று கும்பகோணம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் ஜெயராமன் நேரில் இன்று ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தவிட்டார். மீதி 5 வழக்குகளை மார்ச் மாதம் 1-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. காவிரி படுகையில் மீத்தேன் எடுக்க விளைநிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிப்பது கண்டிக்கதக்கது.

    வரும் பிப்ரவரி மாதம் மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி மயிலாடுதுறையில் மாநாடு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #kathiramangalamprotest #professorjayaraman

    சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூரின் கூட்டாளி பரமதுரையை 15 நாள் காவலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கும்பகோணம்:

    நெல்லை மாவட்டம் பழவூரில் பிரசித்தி பெற்ற நாறும்பூநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது.

    இந்த வழக்கில் சுபாஷ் சந்திரகபூர், வல்லப பிரகாஷ், ஆதித்யா பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 18 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ் சந்திரகபூர், வல்லப பிரகாஷ், ஆதித்யா பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் தேடிவந்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூரின் கூட்டாளியான தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பரமதேவன்பட்டியை சேர்ந்த பரமதுரை (வயது 42), கடந்த 13 ஆண்டுகளாக போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பரமதுரை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சென்னைக்கு சென்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்ற பரமதுரையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரமதுரையை போலீசார் நேற்று கும்பகோணத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    தொடர்ந்து அவரை போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பரமதுரையை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு கொண்டு சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.

    இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள நாறும்பூநாதர் கோவிலில் கொள்ளை போன பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளில் ஆடல் நடராஜர், சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திர தேவர், வெயில்காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் உள்ளிட்ட 9 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் நடராஜர் சிலை மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ளது. கைது செய்யப்பட்ட பரமதுரை மீது சிலை கடத்தல் வழக்கு மட்டுமின்றி பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×