search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grace marks"

    இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. #NEET #NEETExam #SC
    புதுடெல்லி:

    தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடியால் மதிப்பெண்கள் குறைந்தன.

    இதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. டி.கே.ரங்கராஜன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை 10-ந்தேதி தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ., சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழகத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, 196 கருணை மதிப்பெண்கள் அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து ஜூலை 20-ந்தேதி உத்தரவிட்டது.

    இதே அமர்வில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த அக்டோபர் 23-ந்தேதியன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்தது. தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நீட் தேர்வு நடத்திய நிறுவனம் கேள்வித்தாளை மூலமொழியான ஆங்கிலத்தில் இருந்து பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் போது அதன் மொழிபெயர்ப்பு தரத்தை நிச்சயம் உறுதிப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு ஆங்கிலத்தில் இருந்து ஒரு கேள்வித்தாளை தமிழில் மொழிபெயர்த்த பிறகு மீண்டும் அதனை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அது சரியான பொருளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    தேர்வு எழுதிய மாணவர்களால் கண்டறிந்து விடை அளிக்காமல் ஒதுக்கி இருக்கக்கூடிய மொழிபெயர்ப்புக் குளறுபடிகளை காரணமாக வைத்து 196 கருணை மதிப்பெண்கள் ஐகோர்ட்டால் வழங்கப்பட்டுள்ளது.

    கேள்வித்தாளின் மொழிபெயர்ப்பில் ஏதேனும் குழப்பம் இருக்கும்பட்சத்தில் ஆங்கில மூலத்தில் உள்ள கேள்வித்தாளில் உள்ள கேள்விகளையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. பிளஸ்-2 மாணவர்கள் முழுக்க தமிழில் படித்து இருந்தாலும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பு முற்றிலும் ஆங்கிலத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே அடிப்படை ஆங்கில அறிவு மாணவர்களுக்கு தேவைப்படுகிறது.

    இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆங்கில மூலத்தையும் சரிபார்த்து விடைகளை எழுதி இருக்க வேண்டும். சரியான விடையை எழுதியும் தேர்வாகவில்லை என்று மாணவர்கள் கூறமுடியாது. ஆங்கிலத்தில் இருந்து தவறாக மொழிபெயர்த்ததால் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது. மூல மொழியான ஆங்கில கேள்வித்தாளில் குளறுபடி எதுவும் கிடையாது.



    எனவே, இந்த வழக்கில் ஜூலை 10-ந்தேதியன்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. எதிர்வரும் கல்வியாண்டு 2019-2020-ல் மருத்துவ மேல்படிப்புக்கான நீட் தேர்வை ஏற்கனவே பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்தவண்ணம் தேசிய தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) நடத்த வேண்டும்.

    மொழிபெயர்ப்பில் குளறுபடிகள் எதுவும் நேராத வகையில் இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பரிசீலித்து கவனத்துடன் இந்த தேர்வை நடத்த வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. #NEET #NEETExam #SC

    தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #NEET #NEETGraceMarks #CBSE
    புதுடெல்லி:

    நீட் தேர்வின்போது தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்ததால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த கருணை மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவக் கலந்தாய்வை நடத்தவும் உத்தரவிட்டது.



    இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண் வழங்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை தொடர்ந்து விசாரித்தது.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    இந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்துவிட்டதால் கருணை மதிப்பெண் விஷயத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க விசாரணை நடத்த தயார் என்று தெரிவித்தனர். #NEET #NEETGraceMarks #CBSE
    தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து சிபிஎஸ்இ தாக்கல் செய்த மனுவை வெள்ளிக்கிழமையன்று சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது.
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ கல்விக்கான நீட் நுழைவு தேர்வை 24 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் கடந்த 10-ந்தேதி வழங்கிய தீர்ப்பில், ‘மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட 49 கேள்விகள் தவறாக இருந்ததால் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். மேலும், மறு தரவரிசை பட்டியலை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.


    ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு தடை கோரி சி.பி.எஸ்.இ. தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று  சிபிஎஸ்இ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட்,  வரும் 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்து உள்ளது. மாணவர் சத்யா தேவர் தொடர்ந்த வழக்கையும் 20 ஆம் தேதியே விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.

    தமிழகத்தை சேர்ந்த மாணவர் சத்யா தேவர், தான் ஆங்கிலத்தில் நீட் தேர்வு எழுதியுள்ளதாகவும் தனக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளதாகவும், ஐகோர்ட்டு உத்தரவால் தனக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதே கல்லூரியில் ஒதுக்கீடு நீடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #NEETGraceMarks #CBSEAppeal
    ×