search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor SatyaPal Malik"

    காஷ்மீரில் சட்டசபை கலைக்கப்பட்டது ஜனநாயக படுகொலை. எனவே கவர்னர் நியமனம் குறித்து பரிசீலிக்க மீண்டும் ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். #DMK #MKstalin #JKAssemblyDissolved
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை திடீரென்று கலைத்து, அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக் அரங்கேற்றி இருக்கும் அரசியல் சட்டவிரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கவர்னருக்கு கடிதம் கொடுத்தவுடன், அவரை ஆட்சி அமைக்க அழைப்பதற்குப் பதில், இந்த ஜனநாயகப் படுகொலையை நடத்தி முடித்திருக்கிறார் அம்மாநில கவர்னர்.

    மாற்று சித்தாந்தம் உடைய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது என்று கவர்னர் ராஜ்பவனில் அமர்ந்தவாறே தன்னிச்சையாக முடிவு செய்து அந்த சட்டமன்றத்தைக் கலைத்திருப்பது, உச்சநீதிமன்றம் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பிற்கும் நேர் எதிரானது.

    கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் மதசார்பற்ற ஆட்சி அமைவதைத் தடுக்கும் பொருட்டு, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட அம்மாநில கவர்னரின் நடவடிக்கை மீது சுப்ரீம்கோர்ட்டே குட்டு வைத்த பிறகும், ஜம்மு-காஷ்மீர் மாநில கவர்னர் போன்ற பா.ஜ.க.வால் நியமிக்கப்பட்ட ஏஜெண்ட்டுகளான கவர்னர்கள் திருந்துவதாக இல்லை.

    பா.ஜ.க.வின் விசுவாசிகளாக இருப்பதிலேயே மனநிறைவு கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் பெரும்பான்மை இல்லாத அ.தி.மு.க. ஆட்சியை, அடுத்தடுத்து தமிழ்நாட்டில் பதவியேற்ற கவர்னர்கள் மத்திய பா.ஜ.க.வின் கட்டளை கேட்டு, இப்படித்தான் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அனுமதித்தார்கள்.

    அதன் விளைவு இன்றைக்கு ஒட்டுமொத்த மாநில நிர்வாகமும் ஒரே ஊழல் மயமாகி, ‘கமிஷன், கரெப்ஷன், கலெக்‌ஷன்’ என்ற கேவலமான நிலை ஏற்பட்டு, கஜா பேரிடர் போன்ற நெருக்கடியான நேரத்தில்கூட உரிய நிவாரணம் கிடைக்காமல் மக்கள் 6 நாட்களுக்கும் மேலாக இருட்டில் இடருற்று அவதிப்படுகிறார்கள் என்றால் பொறுப்பற்ற, பெரும்பான்மையற்ற அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நீடிப்பது தான் முக்கியக் காரணம்.

    இதற்கு அரசியல் சட்டத்தை வளைத்துள்ள கவர்னர்களும் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    அதேபோன்று நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய மாநிலமாகத் திகழும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலையை ஒரு கவர்னரே உருவாக்கி இருக்கிறார் என்பது வேலியே பயிரை மேய்வதைப் போல் ஆகி இருக்கிறது.

    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க.வின் சட்டமல்லாத சட்டத்திற்குப்பணிந்து, அரசியல் சட்டத்தை ஜனநாயக அக்கறை சிறிதுமின்றி காவு கொடுக்கும் கவர்னர்களால் நாட்டில் அசாதாரணமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

    அரசியல் சட்டத்தின்படி நடக்க கவர்னர்கள் தயாராக இல்லை என்ற போக்கு நீடிப்பது நாட்டின் சட்டமன்ற ஜனநாயகத்திற்கு நல்லதும் அல்ல. மத்திய-மாநில உறவுகளுக்கு உகந்த நிலையும் அல்ல. ஆகவே அரசியல் சட்டத்தின்படி நீடிக்கும் கவர்னர் பதவிக்கு நியமிக்கப்படுபவர்களின் தகுதிகள் குறித்து சர்க்காரியா கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகளையும் தாண்டி ஆலோசிக்க வேண்டிய தருணமும் கட்டாயமும் வந்து விட்டதாகவே கருதுகிறேன்.

    ஆகவே கவர்னர் நியமனம் மற்றும் அவர்களுக்கான தகுதிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து பரிசீலித்து வரையறை செய்ய மீண்டும் ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKstalin #JKAssemblyDissolved #SatyaPalMalik
    காஷ்மீரில் குதிரை பேரத்தை தடுப்பதற்காகவே சட்டசபை கலைக்கப்பட்டது என்று கவர்னர் சத்யபால் மாலிக் விளக்கம் அளித்துள்ளார். #JKAssembly #JKAssemblyDissolved #SatyaPalMalik
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் ஆட்சியில் இருந்த மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜனதா வாபஸ் பெற்றது. இதனால் பி.டி.பி. கூட்டணி அரசு கவிழ்ந்தது.

    இதை தொடர்ந்து காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபையை கவர்னர் முடக்கி வைத்து இருந்தார்.

    இதற்கிடையே மக்கள் மாநாட்டு கட்சி தலைமையில் புதிய ஆட்சியை அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டது. அதை முறியடிக்கும் வகையில் பி.டி.பி., காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

    ஆட்சி அமைக்க பி.டி. பி.யும், மக்கள் மாநாட்டு கட்சியும் உரிமை கோரி இருந்த நிலையில் கவர்னர் சத்யபால் மாலிக் காஷ்மீர் சட்டசபையை திடீரென கலைத்தார். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பி.டி.பி. தலைவர் மெகபூபா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர்அப்துல்லா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் காஷ்மீர் சட்டசபையை கலைத்தது ஏன்? என்பதற்கு அம்மாநில கவர்னர் மாளிகை விளக்கம் அளித்தது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குதிரை பேரத்தை தடுப்பதற்காகவே சட்டசபை கலைக்கப்பட்டது. அரசியல் கருத்தில் முரண்பாடு கொண்ட கட்சிகளால் நிலையான ஆட்சியை அமைக்க இயலாது. சாத்தியமற்ற சூழ்நிலை நிலவுவதால் சட்டசபை கலைக்கப்பட்டது.

    சட்டசபை கலைக்கப்பட்டதால் புதிதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலோடு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் காஷ்மீர் சட்டசபைக்கு முன்னதாக தேர்தல் நடத்துவதே சிறந்த வழி என்று பா.ஜனதா தெரிவித்து உள்ளது. #JKAssembly #JKAssemblyDissolved  #SatyaPalMalik
    ×