search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gajah Storm"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட கூத்தாநல்லூர் பகுதிகளில் மின்சாரம் வழங்காததை கண்டித்து செல்போன் டவரில் ஏறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே செருவாமணி ஊராட்சியில் தாமரைபள்ளம் கிராமம் உள்ளது, இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்,

    இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்தது. ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல கிராமங்களில் மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

    இதேபோல் தாமரைக்குளம் கிராமமும் புயலால் பாதிக்கப்பட்டது. புயல் தாக்கி 35 நாட்களாகியும், தாமரைக்குளம் கிராமத்துக்கு இன்னும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் மின்சாரம், குடிநீர் கேட்டு ஆங்காங்கே அந்த கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விரைவில் மின்சாரம் வழங்ககோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்குள்ள 200 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்,

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், புயல் சேதமதிப்பீடு கணக்கெடுக்க கூட எந்த அதிகாரிகளும் இங்கு வரவில்லை. எனவே வருவாய்த்துறை அதிகாரிகளும் மின்வாரிய அதிகாரிகளும் உடனடியாக வந்து மின் இணைப்பை வழங்கவும், நிவாரண உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து திருவாரூர், சப்-கலெக்டர் பால்துரை, கூத்தாநல்லூர் தாசில்தார் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 5 நாட்களில் கிராமத்துக்கு மின்சாரம், வழங்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு உங்கள் கோரிக்கை கொண்டு சென்று அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.

    இதற்கிடையே செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதாக தாமரைபள்ளம் கிராமத்தை சேர்ந்த அந்தோணி உள்பட 8 பேர் மீது வடபாதிமங்கலம் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றார். #GajaCyclone
    கஜா புயல் நிவாரணத்தில் தமிழக அரசு ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #GajahStorm #EdappadiPalanisamy #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கஜா புயலால் நிர்க்கதியாக்கப்பட்ட மக்களுக்கு எத்தனை எத்தனையோ உதவிடும் உள்ளங்கள் ஓடோடி வந்து உதவி புரிந்ததை, 11 நாட்கள் அப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாராண உதவிகளை வழங்கியபோது நேரில் கண்டேன்.

    தொடக்கத்திலிருந்தே மேம்போக்காகவும், விளம்பரத்துக்காகவும் பழனிசாமி அரசு மறு சீரமைப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக வெறும் வெற்றுப் பேட்டிகளை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தது.

    தற்போது, 27 வகையான நிவாரண பொருட்களை கொடுக்கிறோம் என்று சொன்ன அரசு, அதை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக பத்திரிக்கை செய்தி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

    அரசு இயந்திரம் எந்த அளவிற்கு முறைகேடுகளுக்கு துணைபோயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான், அந்நிவாரண பொருட்களை பேக்கிங் செய்யும் பணிக்கு அரசு ஊழியர்களை விடுத்து, சத்துணவு முட்டை ஊழலில் சிக்கிய, கிருஸ்டி குழுமத்திற்கு சொந்தமானது என்று சொல்லப்படும், பேக்கிங் அன்டு மூவர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு, அப்பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

    இப்பணியின்போது நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கொடுக்காமல் பணியாளர்களே எடுத்துக்கொண்டதோடு, 42 டன் அளவு ரவை மற்றும் 20 டன் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளதாகவும், இன்னும் முழுமையாக நிவாரண உதவிகள் மக்களிடம் போய் சேரவில்லை எனவும் அப்பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பழனிசாமி அரசு எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதில் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகாமல் இருந்தது கிடையாது, கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து நடு வீதியில் நிற்கும் மக்களுக்கு கொடுக்கக்கூடிய நிவாரண பொருட்களில் கூடவா இந்த அரசு முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்?



    அக்கறையற்ற தனத்தோடும், மக்களை ஏளனமாக பார்க்கும் எண்ணம் கொண்ட ஒரு அரசு தமிழகத்தில் அமைந்திருப்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமானது. இது விரைவில் அகற்றப்பட வேண்டும்.

    மனசாட்சியும், மனித நேயமும் அற்றுப்போன ஒரு செயலை இந்த அரசாங்கம் செய்திருப்பதாக வரும் செய்திகள் யாராலும் தாங்கிக் கொள்ளமுடியாத ஒன்று, இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த விரிவான விசாரணையை பழனிசாமி அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்கும் அரசின் நிவாரண உதவிகள் முறையாக சென்று சேருவதை பழனிசாமி அரசு உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு தினகரன் கூறி உள்ளார். #GajahStorm #EdappadiPalanisamy #TTVDinakaran
    ×