search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coastal districts"

    கஜா புயல் நெருங்கி வருவதால் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #Gaja #CycloneGaja #TNRains #MinisterJayakumar
    சென்னை:

    வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் எனவும், அப்போது தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளது. ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என ஒலி பெருக்கி மூலம் கடலோர காவல் படை அறிவுறுத்தி வருகிறது.

    கஜா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டம் பழையாறு, பூம்புகார், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் மட்டும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    மீனவர்களுக்கான அறிவுறுத்தல் பற்றி தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    கஜா புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருவதால், அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில் கஜா புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) முற்பகல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிமை மையம் தெரிவித்துள்ளது.

    புயல் நெருங்கி வருவதால் அனைத்து மீன்பிடி படகுகளையும் பத்திரமாக மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் இறங்குதளத்தில்  நிறுத்தி வைக்க வேண்டும்.

    ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற சென்னை மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 160 மீன்பிடி விசைப்படகுகள் பத்திரமாக கரைதிரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மீன்பிடித் துறைமுகம் மற்றும்  மீன் இறங்கு தளங்களுக்கு திரும்பும் விசைப்படகுகளை பத்திரமாக மீட்க அம்மாநில மீன்வளத்துறை இயக்குனரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Gaja #CycloneGaja #TNRains #MinisterJayakumar
    வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதால் வரும் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் பருவமழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #NortheastMonsoon #IMD #TNRains
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு வங்க கடலில் லுபான், டிட்லி என இரு புயல்கள் உருவானதால் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    தற்போது தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த காற்றழுத்தம் வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நவம்பர் 1-ந்தேதி வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


    இதன் காரணமாக 1-ந்தேதி முதல் தமிழகத்தில் பருவமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவ மழை இந்த மாதம் 21-ந் தேதி வரை நீடித்தது. தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்திலும் மழை பெய்தது. அக்டோபர் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் 24 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 12 செ.மீ. மழைதான் பெய்துள்ளது. இது 50 சதவீதம் குறைவு.

    புதுச்சேரியில் 17 செ.மீ.க்கு பதில் 16 செ.மீ. பெய்துள்ளது. இது 9 சதவீதம் குறைவு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #NortheastMonsoon #IMD #TNRains
    தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் இன்று சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. சென்னையில் பட்டினம்பாக்கம் பகுதியில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. #Tsunamirehearsal
    சென்னை:

    தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடியதில் பல்லாயிரக்கணக் கானோர் பலியானார்கள்.

    இதன்பிறகு ஆண்டுதோறும் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    சுனாமி தாக்குதல் ஏற்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆண்டும் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய பெருங்கடல் முன் அறிவிப்பு அமைப்பு ஆகியவை பாதுகாப்பு ஒத்திகையை இணைந்து நடத்தின. தமிழக வருவாய் துறை, காவல் துறை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய மீட்புபடை மற்றும் உள்ளாட்சி அமைப்பினரும் இதில் பங்கேற்றனர்.



    சென்னையில் பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம், பனையூர் குப்பம் ஆகிய 2 இடங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    இதற்காக 6 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் இன்று காலையிலேயே இந்த இடங்களில் திரண்டனர். பின்னர் 9.30 மணி அளவில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.

    சுனாமி வரப்போகிறது அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். அப்படி செல்ல முடியாதவர்களை மீட்க நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம் பயப்பட வேண்டாம் என்று ஒலி பெருக்கி மூலம் முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீசாரும் மற்ற துறைகளை சேர்ந்தவர்களும் மீட்பு நடவடிக்கையில் இறங்கினார்கள்.

    சீனிவாசபுரம் பகுதியில் கடலோரமாக உள்ள குடியிருப்புகளுக்குள் அதிரடியாக புகுந்த மீட்பு குழுவினர் வயதானவர்களையும், நடக்க முடியாதவர்களையும் குண்டுகட்டாக வெளியில் தூக்கி சென்றனர்.

    பின்னர் வீடுகளில் கட்டப்பட்டிருந்த ஆட்டு குட்டிகளையும் காப்பாற்றி வெளியில் கொண்டு சென்றனர்.

    மீட்கப்பட்ட பொதுமக்களை அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி அவர்களுக்கு முதல் உதவி செய்வது போன்று ஒத்திகை நடத்தப்பட்டது. பின்னர் அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் அவர்கள் கொண்டு விடப்பட்டனர். இதே போல கடலுக்குள் தத்தளித்தவர்களை மீட்பது போன்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. சீனிவாசபுரம் பகுதியில் நடந்த இன்றைய ஒத்திகையில் சுமார் 50 பேர் ஈடுபட்டிருந்தனர்.

    பக்கத்து மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சீபுரம் பகுதிகளிலும் அந்த மாவட்ட கலெக்டர்களின் மேற்பார்வையில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    மாமல்லபுரத்திலும் இன்று அதிகாரிகள் ஒத்திகையில் ஈடுபட்டனர். பொன்னேரியை அடுத்த பழவேற்காடு வைரவன் குப்பத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. பேரிடர் மீட்பு குழுவினர் சுனாமி எச்சரிக்கை பற்றி ஒலி பெருக்கி வைத்தும், மைக் மூலமும் அறிவித்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு பஸ்கள், வாகனங்கள் மூலம் மண்டபத்தில் தங்க வைப்பது போன்று ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத்துறை பொது சுகாதாரத்துறை, மீன வளத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து விளக்கம் அளித்தனர். இதில் பொன்னேரி தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர பாபு, வேதநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கும்மிடிப்பூண்டி அருகே ஒபசமுத்திரம் பகுதியில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம், கடலூர் உள்ளிட்ட கடலோர பகுதிகள் அனைத்திலும் இன்று பாதுகாப்பு ஒத்திகை தத்ரூபமாக நடத்தி முடிக்கப்பட்டது. #Tsunamirehearsal

    ×