search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai-"

    சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    சென்னை:

    சென்னை-தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையில், சென்னை-தூத்துக்குடி இடையே புதிதாக 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டமானது சுமார் ரூ.13,200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இது தொடர்பாக, சமீபத்தில் தமிழக அரசுடன் மத்திய சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தமிழக அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. தற்போது, 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை-தூத்துக்குடி இடையே நிறைவேற்றப்படும் இந்த திட்டத்தில், சென்னையில் இருந்து விழுப்புரம் வரை 10 வழிச்சாலையாக அமைக்கப்பட இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூர், திருச்சி வரை 8 வழிச்சாலையாக கொண்டுவரப்பட இருக்கிறது. தஞ்சாவூர், திருச்சியில் இருந்து சிவகங்கை வழியாக தூத்துக்குடிக்கு 6 வழிச்சாலை அமைய இருக்கிறது. அதாவது, சென்னையில் இருந்து பண்ருட்டி, விருத்தாசலம், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, தூத்துக்குடி என இந்த புதிய வழித்தடம் அமைய உள்ளது.

    இந்த புதிய சாலை அமைவதன் மூலம் சுமார் 100 கிலோ மீட்டர் அளவுக்கு பயண தூரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சென்னை-தூத்துக்குடி இடையே தூரம் 600 கிலோ மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சாலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்ததும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, சாலை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கும்.

    இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் 2 முறை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருக்கிறார். இனி, நிலப்பரப்பை ஆய்வு செய்வது, எந்த வழியாக சாலையை அமைப்பது, எவ்வளவு இடத்தை கையகப்படுத்த வேண்டும் என்பது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன. 
    சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு செய்தார். #SPVelumani
    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகங்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.8.50 லட்சம் வரை உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு செய்தார். அங்கு வழங்கப்படும் உணவு மற்றும் அதன் தரம் குறித்து சோதனை மேற்கொண்டார்.

    மேலும், அங்கு தயாரிக்கப்படும் உணவு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும், வீட்டில் தயாரிப்பது போன்ற சுவையில் இருக்க வேண்டும் என ஊழியர்களிடம் தெரிவித்த அமைச்சர் வாடிக்கையாளர்களை நல்ல முறையில் உபசரிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘அம்மா உணவகம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த திட்டத்தை பாராட்டியது மட்டுமின்றி, தங்கள் மாநிலங்களிலும் இதனை செயல்படுத்தியுள்ளன’ என்றார்.

    இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் ஆர்.லலிதா, பி.மதுசுதன் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    வரலாறு காணாத உச்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாயை தாண்டியது. டீசல் ரூ.72.14-க்கு விற்பனை செய்யப்பட்டது. #PetrolDiesel
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 13-ந் தேதி வரையில் 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கு கர்நாடக சட்டசபை தேர்தல்தான் காரணம் என்ற கருத்து வெளிப்படையாக பரவியது.

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கியது.

    கடந்த 14-ந் தேதி பெட்ரோல் ரூ.77.61-க்கும், டீசல் ரூ.69.79-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பெட்ரோல் ரூ.79.79-க்கும், டீசல் ரூ.71.87-க்கும் விற்பனை ஆனது.

    இதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.55-க்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயரும் என்று கருதப்படுகிறது.

    அந்த வகையில், வரலாறு காணாத உச்சமாக, பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து 80 ரூபாயை தாண்டியது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.11-க்கும், டீசல் ரூ.72.14-க்கும் விற்பனையானது. (நேற்று டீசல் லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்தது.)

    கடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.35-ம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் விலை ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 
    ×