என் மலர்tooltip icon

    கோவில்கள்

    விநாயகப்பெருமான் கயமுகனைக் கொன்ற கறை நீங்கச் சிவலிங்கப்பெருமானைத் ஸ்தாபித்து வழிபட்டார். அதனால் ‘கணபதீச்சரம்’ எனத் திருக்கோயில் வழங்கப்பெறுவதாயிற்று.
    இறைவன்: உத்திராபசுபதீஸ்வரர், கணபதீஸ்வரர்
    இறைவி:     திருக்குழல் அம்மை, சூளிகாம்பாள்
    தீர்த்தம்:     சூர்ய தீர்த்தம்
    பாடியோர்: சம்பந்தர், அப்பர்

    கோயிலின் சிறப்புகள்:

    தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 79 வது ஆலயம். விநாயகப்பெருமான் கஜமுகாசுரனைக் கொன்ற காலத்து அவன் உடலினின்றும் பெருகிய இரத்தவெள்ளத்தால் இவ்விடம் முழுதும் செந்நிறமாயிற்று. ஆதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது. விநாயகப்பெருமான் கயமுகனைக் கொன்ற கறை நீங்கச் சிவலிங்கப்பெருமானைத் ஸ்தாபித்து வழிபட்டார். அதனால் ‘கணபதீச்சரம்’ எனத் திருக்கோயில் வழங்கப்பெறுவதாயிற்று. இவ்வரலாற்றைக் கந்தபுராணத்து செய்யுலால் அறியலாம்.

    மிகப் பழமையான திருவாத்திவிருக்ஷம் ஒன்று, எழுந்தருள் நாயகர் திருமுன்பு இருக்கின்றது.பிராகாரத்தின் கீழ்ப்பக்கத்தில் இத்தலத்து வாழ்ந்த சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை இவர்கள் திருவுருவங்கள் இருக்கின்றன.பல்லவ மன்னனின் படை தளபதியாக வாழ்ந்த பரஞ்சோதியாரை அவரது சிவபக்தியை மெச்சி சிவத்தொண்டு புரிய மன்னன் வேண்டுகொண்டான். அவரும் சிறுத்தொண்டர் என்ற பெயருடன் மங்கை நல்லாள் என்பவரை மணந்து சீராளன் என்ற மகனை பெற்று சீராட்டி வளர்த்து வந்தார். தினமும் சிவதொண்டர்களுக்கு உணவு படைத்து பிறகுதான் உணவு உண்பார்கள்.

    ஒரு நாள் சிவனடியார்கள் யாரும் வராததால் சிவதொண்டரே கோயிலில் உள்ள திரு ஆத்திமரத்தின் கீழே அமர்ந்து இருந்த ஒரு சிவனடியாரை உணவருந்த அழைத்தார். சிவனடியாரோ திருத்தொண்டரிடம் அவரின் மகனை அறுத்து சமையல் செய்தால் மட்டுமே உணவருந்த வருவேன் என்று கூறுகிறார். சிறுத்தொண்டரும் மகனை வெட்டி கறி சமைத்தார். சிவனடியார் சாப்பிடும் முன்பு சிறுத்தொண்டரிடம் அவரின் மகனோடு உணவருந்த விருப்பம்தெரிவித்தார்.

    என்னசெய்வது என்று தெரியாமல் அவர் வெளியில் நின்று மகனை அழைக்கிறார். அப்போது அதிசயமாக கறிசமைத்த மகன் ஓடிவருவதை கண்டு மகனுடன் வீட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு உணவருந்த வந்த சிவனடியார் சிவனாக அம்பிகையுடன் காட்சி தந்தார். இந்த அடியார் பெருமகனார், திருஞானசம் பந்தப் பெருமானும், அப்ப மூர்த்திகளும் எழுந்தருளியகாலத்து அவர்கள் நட்பைப்பெற்று அவர்கள் பதிகத்துச் சிறப்பிக்கப்பெறும் தகுதியைப்பெற்றவர்.

    சித்திரைப் பூர்ணிமையில் சிறுத்தொண்டர் திருவமுதுபடைத்த திருவிழா நடைபெறும். அமுது படையல் என்றே அது வழங்குகிறது. இங்கு பிரகாரத்தில் அட்ட வீரட்ட தலங்களில் எட்டு சம்ஹார மூர்த்திகளையும் ஒன்றாக தரிசிக்கலாம்.

    இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

    திருவாரூரிலிருந்து 22.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. திருவாரூரிலிருந்து பேருந்துகள் உள்ளன.

    கோயிலின் முகவரி:

    அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில்,
    திருச்செங்காட்டங்குடி,
    நாகப்பட்டினம் மாவட்டம் 609704.

    தொலைபேசி:

    முத்துசுவாமி குருக்கள் – 9443113025, 04366 270278
    சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் தலத்தின் கருவறையைச் சுற்றி வரும் போது தெற்குப் பிரகாரத்தில் வியாக்யான சிம்மாசனத்தில் ஸ்ரீ சாரதாம்பிகையின் உற்சவ விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது.
    துங்கா நதியின் இடது கரையில் சிக்மகளூர் மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ளது சிருங்கேரி. நெல்வயல்கள், பாக்கு மரங்கள் புடைசூழ அமைந்துள்ளது.

    ராமாயணத்தில் வரும் கலைக் கோட்டு முனிவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் தான், குழந்தை வேண்டி தசரதன் செய்த புத்திர காமேட்டி யாகத்தை முன்னின்று நடத்தியவர். பெயர் கலைக்கோட்டு முனிவர். இவருடைய வேறு பெயர் ரிஷ்ய சிருங்கர். இவர் பெயரில் அமைந்தது இவ்வூர். அத்வைத தத்துவத்தை உலகறியச் செய்த ஆதி சங்கரருடன் தொடர்புடையது. கல்விக் கடவுளாகக் கருதப்படும் சாரதா தேவிக்கும், ஆதி சங்கரருக்கும் இங்கு கோவில்கள் உள்ளன.

    இவை தவிர சிற்பக்கலைச் சிறப்பு வாய்ந்த வித்யாசங்கரர் கோவிலும் இங்கு உள்ளது. மலைக்குன்றுகளும் நிலமும் நீர்வளமும் அமைதியான சூழ்நிலையை உண்டாக்குகின்றன. ஆதிசங்கரர் ஏற்படுத்திய நான்கு மடங்களில் சிருங்கேரியில் உள்ள சாரதா பீடமே முதன்மையானது. அதாவது முதன்முதலில் நிறுவியது.
    நமது நாட்டில் நிலவிய பல்வேறு சமயங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் ‘அத்வைதம்’ என்னும் தமது கொள்கையை நிலை நாட்டுவதற்காகத் தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் தாம் ஒருவராகவே பயணம் செய்து போதனைகளை செய்தார் ஆதிசங்கரர்.

    பாரத நாட்டின் நான்கு இடங்களில், அதாவது பத்ரிநாத், பூரி, சிருங்கேரி, துவாரகை ஆகியவற்றில் மடங்களை நிறுவினார் ஆதிசங்கரர். ஆதிசங்கரர் வாரணாசிக்குச் சென்று அங்கிருந்த ‘சுரேஸ்வராச் சாரியார்’ என்ப வரைச் சந்தித்து பல சமயக்கருத்துகளைப் பற்றி உரையாடிய பிறகு சிருங்கேரியில் முதலில் சாரதா பீடத்தை நிறுவினார்.

    சாரதா பீடத்திற்கு பல்வேறு மரபைச் சேர்ந்த மன்னர்கள் கொடைகளை வழங்கியுள்ளார்கள். விஜயநகர மன்னர்கள், ஐதராபாத் நவாப்புகள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர் உடையார்கள், மராட்டிய பேஸ் வாக்கள், கேரள அரசர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் கள். பிரிட்டிஷ் அரசும் இந்த மடத்திற்கு தனது பங்கை செய்துள்ளது. மிகச்சிறந்த கல்விமான்களாகவும், மதாச்சாரியார் களாகவும் விளங்கிய வித்யா தீர்த்தர், பாபதி தீர்த்தர், வித்யாரணயர், நரசிம்மபாரதி, சந்திர சேகர பாரதி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இந்த மடத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள். இவர்களுக்கெல்லாம் மூலகாரணமாக விளங்குபவர் ஆதிசங்கரர். இங்குள்ள ‘சாரதாம்பாள் கோவில்’ திராவிடக் கலைப்பாணியில் அமைந்துள்ளது. கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜனார்த்தனர் கோவில் விஜயநகர மன்னர்களின் காலத்தை சேர்ந்தது.

    சிருங்கேரியிலுள்ள ஒரு சிறிய மலையின் மீது பழமையான சிவன் கோவிலும் உள்ளது. இந்நகரிலுள்ள மற்றொரு பழமையான கோவில் பார்சுவ நாத தீர்த்தங்கரர் என்றும் சமண முனிவருக்காக எழுப்பப்பட்டது. சிருங்கேரி மடத்திற்கு நாடு முழுவதும் எழுபதுக்கும் மேற்பட்ட கிளை மடங்கள் உள்ளன. அங்கு வேத பாடசாலைகளும், ஆன்மீகச் சொற்பொழிவுகளும் நடந்து வருகின்றன.

    ஒவ்வொரு கிளையிலும் நன்கு பராமரிக்கப்படும் நூலகம் ஒன்றும் உள்ளது.சிருங்கேரிக்கு வரும் பயணிகள் ‘பயணிகள் விடுதிகளில்’ தங்கலாம். அவை மடத்தின் நிருவாகத் தில் உள்ளன. இலவச உணவும் வழங்கப்படுகிறது. கோவிலின் அன்னசாலையிலும் இரவு 8.30 மணி வரைத்தான் உணவு வழங்கப்படும். அந்த இடம் மிகத் தூய்மையாகக் காணப்படுகிறது. உணவு பரிமாறப்படும் எவர்சில்வர் தட்டுகள் ஆங்காங்கு சிறுசிறு குன்றுகளாகக் காணப்படுகின்றன.

    முதலில் சூடான அரிசிச் சாப்பாடு, பிறகு மிளகு ரசம், சாம்பார், மோர் இந்த முறையில் பரிமாறப்படுகிறது. அளவு கிடையாது. சாரதாம்பிகை கோவில் ஒரு திருச்சுற்றுடன் அமைந்துள்ளது. எளிமையான கட்டமைப்பு. சிருங்கேரி பீடாதிபதி தினமும் இரவு பத்து மணிக்கு சிறப்பு பூஜை நடத்துவார். அந்த சிறப்பு பூஜை தனியாக ஒரு தியான மண்டபத்தில் நடக்கிறது. அந்த இடத்திற்கு செல்ல துங்கா ஆற்றை கடந்து செல்ல வேண்டும். அதற்கு வசதியான பாலம் கட்டப்பட்டுள்ளது. “யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம். சுழல் உள்ளது”.

    கோவில் அமைப்பு :

    சாரதா அன்னை வீற்றிருக்கும் மண்டபத்திற்குக் கீழ்ப்புறமாய் பலிபீடம், உற்சவ மூர்த்திகள், வெள்ளியாலான விக்னேஷ்வரர், இடதுப்புறம் கலைவாணியாம், சரஸ்வதிதேவி ஆகியோர் காட்சியருளுகின்றனர்.

    கருவறையைச் சுற்றி வரும் போது தெற்குப் பிரகாரத்தில் வியாக்யான சிம்மாசனத்தில் ஸ்ரீ சாரதாம்பிகையின் உற்சவ விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது. இம் மடத்தின் பீடாதிபதியாய் பட்டம் ஏற்கும் ஒவ்வொரு சன்னிதானமும் இச்சிம்மாசனத்தில் தான் முதலில் அமர்வார்களாம். இச்சிம்மாசனத்தின் அருகே வெள்ளி சிம்மாசனம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

    மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீ சக்தி கணபதி பத்து கரங்களுடன் காட்சியளித்திடுகின்றார். இவைத் தவிர வீடுகளில் விக்கிரகங்களை வைத்து பூஜை செய்திட இயலாதவர்கள் கொண்டு வந்து வைத்துச் சென்ற பலதரப்பட்ட விக்கிரகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. அன்னையின் சன்னிதிக்கு நேர் மேற்குப் புறமாய் ஸ்ரீ புவனேஸ்வரியின் பஞ்சலோக விக்கிரகம் உள்ளது. இதனை அடுத்து வெள்ளிரதம் உள்ளது.

    பிரதி வெள்ளிக்கிழமையும் அன்னையை இத்திருத்தேரில் அமரச் செய்து பிரகாரத்தைச் சுற்றி வருகிறார்கள். நவராத்திரி தினங்களில் தினமும் இந்த ரதோற்சவம் நடைபெறும். முன் மண்டபத்தில் காணப்படும் இரு தூண்களில் ஸ்ரீராஜ ராஜேஸ்வரியும், ஸ்ரீ மகிஷாசுர மர்த்தனியும் அபய, வரத கரங்களுடன் எழுந்து அருளியுள்ளனர். இம்மண்டபத்தில் இரு துவார பாலகர்களும் உள்ளனர்.

    சிருங்கேரி கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வடக்கிலும், தெற்கிலும் நுழை வாயில்கள் உள்ளன. கோபுரத்திற்கு வெளியே முப்பத்து ஐந்தடி உயரமுடன் கூடிய தீபஸ்தம்பம் காணப்படுகிறது. சாரதா கோவிலுக்கு இடபுறமாய் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் திருக்கோவில் கொண்டுள்ளார். இரண்டு அடி உயரத்துடன் கூடிய பீடத்தில் யோகாசனத்தில் ஆச்சாரியார் அமர்ந் திருக்கிறார். ஆதிசங்கரர் வலப்பக்கமும் தண்டமுடன் இடப்பக்கம் கமண்டலமும் வைக்கப்பட்டுள்ளன. பீடத்தின் கீழே நான்கு சீடர்கள் காணப்படுவதுடன் பீடத்தின் அடியில் ஒரு சிவலிங்கமும் வைக்கப்பட்டுள்ளன.

    அம்மாளின் திருக்கோவிலுக்கு தென்புறம் ஆதிசங்கரரின் சீடர்களின் ஒருவரும் இம் மடத்தின் முதல் ஆச்சாரியாருமான ஸ்ரீ சுரேச்வதாச்சாரியாரின் அதிர்ஷ்டான ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கும் துங்க நதித்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா சங்கர ஆலயத்திற்கும் இடையே ஸ்ரீ ஜனார்த்தனனின் சிறிய அளவிலான கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.

    ஸ்ரீ வித்யா சங்கர ஆலயம் ஸ்ரீசக்கரவடிவுடன் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் 600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுப்பப்பட்டது. அக்கால சிற்ப கட்டுமான வேலைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் இவ்வாலயம் விளங்குகிறது. கருவறையில் ஸ்ரீ வித்யா சங்கரர் லிங்க உருவாய் எழுந்தருளியுள்ளார். கருவறைக்கு வெளியே உள்ள இரண்டு சிறுமண்டபங்களில் ஸ்ரீ வித்யா கணபதியும் மகிஷாசுர மர்த்தினியும் சன்னிதி கொண்டுள்ளனர்.

    கருறை மண்டப வெளிச் சுவருக்கு தெற்கில் மகா விஷ்ணு, சரஸ்வதி, மேற்கில் உமையவள் மகேஸ்வரர் ஆகியோருக்கான சன்னிதிகள் அமைந்துள்ளன. இவை அல்லாமல் சிவதாண்டவ மூர்த்தி நம்பி நாராயணர், ஸ்ரீநிவாசர், ஹரிகரர் ஆகியோருக்கான வெண்கல திருஉருவங்களும் சிவலிங்கங்களும் சாளக்கிராமங்களும் உள்ளன.

    இத்தலத்தில் பக்தியும் ஞானமும் ஒருங்கே இணைந்து இருப்பதை உணர முடிகிறது. ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை விளக்கிடும் ஒளி விளக்காய் திகழும் இவ்வாலயத்தை தரிசிப்பது பிறவிப்பயன் ஆகும்.


    அசலேஸ்வரர் கருவறை, அர்த்த மண்டபம், வெளியிலுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகிய பகுதிகளே திருவாரூர் அரநெறி என்ற தேவாரத் தலமாக கருதப்படுகிறது.
    திருவாரூர் அரநெறி என்னும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் கோவிலுக்குள்ளேயே இரண்டாம் பிராகாரத்தில் தென் கிழக்குத் திசையில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது. இச்சந்நிதியில் சிவராத்திரி வழிபாடு விசேஷமானது. இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அரநெறியப்பர், அசலேசுவரர் என்ற பெயர்களுடன் எழுந்தருளியுள்ளார்.

    இப்பெருமானின் - அசலேஸ்வரர் கோவில் மூலஸ்தான கோபுரத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுவதில்லை என்ற தனி மகிமை வாய்ந்தது. ஆறு மாதத்திற்குள் இறப்பவர் நோக்கினால் அந்த நிழலும் தெரியாது என்பது மற்றொரு சிறப்பு. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. அரநெறியப்பர் கோவிலை செம்பியன் மாதேவியார் கருங்கல்லால் கட்டி, இரு திருமேனிகளை எழுந்தருளுவித்ததோடு நாடோறும் பூஜைக்கும் கோவிலைப் பழுது பார்ப்பதற்கும் ஆக 234 காசுகளைக் கொடுத்ததையும் இத்தலத்திலுள்ள கலவெட்டுகள் குறிப்பிடுகின்றன.

    ஒரு மன்னருடைய வேண்டுகோளின்படி இறைவன் சலியாது எழுந்தருளி இருப்பதால் அசலேசர் எனப் பெயர் பெற்றார். அசலேஸ்வரர் கருவறை, அர்த்த மண்டபம், வெளியிலுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகிய பகுதிகளே திருவாரூர் அரநெறி என்ற தேவாரத் தலமாக கருதப்படுகிறது.

    63 நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தி அடிகள் இக்கோவிலில் சிவலிங்க வழிபாடு செய்து வந்தார். திருவாரூரில் பிறந்தவர்களை எல்லாம் சிவரூபமாக கருதியவர் இவர். ஒருமுறை அரநெறியப்பர் கோவிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்த நமிநந்தி அடிகள், கோவில் விளக்குகளில் உள்ள நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டு விளக்கின் ஒளி மங்கத் தொடங்கியது.

    அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும் வரவில்லை. தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும், விளக்கும் அதற்குள் அணைந்துவிடும் என்று நினைத்த நமியந்தி அடிகள் கோவில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று விளக்கிற்காக சிறிது நெய் கேட்டார். அந்தக்காலத்தில் கோவிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட வீட்டில் சமணர்கள் வாழ்ந்து வந்தனர்.

    "கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக தேவையில்லை, அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோவில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்று" என்று சமணர்கள் பரிகாசம் செய்தனர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோவிலுக்கு வந்து இறைவனிடம் மனமுருகி வேண்ட இறைவன் அசரீரியாக "அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று"' என்று கூறினார்.

    இதைக்கேட்ட நமிநந்தி அடிகள் மிகுந்த சந்தோஷத்துடன் சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். சிவபெருமானின் அருளால் தண்ணீரால் கோவில் விளக்கெல்லாம் எரியச் செய்து, சமணர்களின் கொட்டத்தை அடக்கி இறைவனின் பெருமையை உலகறியச் செய்தார். நமிநந்தி அடிகள் நாயனார் இத்தலத்தில் தண்ணீரால் விளக்கேற்றிய செய்தியை தனது தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வாலயம் தினந்தோறும் காலை 5-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்

    ஆலய முகவரி    அருள்மிகு அசலேசுவரர் திருக்கோவில்
    தியாகராஜசுவாமி திருக்கோவில் தேவஸ்தானம்
    திருவாரூர்
    திருவாரூர் வட்டம்
    திருவாரூர் மாவட்டம்
    PIN - 610001
    தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருமீயச்சூர் திருத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அதற்கு ஒரே காரணம், லலிதாம்பாள் தான்.
    திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ‘திருமீயச்சூர்’ திருத்தலம். இங்கு ‘ஸ்ரீலலிதாம்பாள்’ என்ற திருநாமத்துடன் அம்பாள் வீற்றிருக்கும் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்திற்கு ஏராளமான பெருமைகள் உள்ளன. ‘சனீஸ்வரன், எமதர்மன், சூரியனின் தேரோட்டியான அருணன், கருடன், வாலி, சுக்ரீவன்’ ஆகிய 6 பேரும் அவதரித்த தலமாக இது போற்றப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருமீயச்சூர் திருத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அதற்கு ஒரே காரணம், லலிதாம்பாள் தான்.

    உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு, ‘ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்’ பாராயணம் செய்து, இந்த அன்னையை வேண்டிக்கொள்பவர்கள் மிக அதிகம். அந்த பாடலை பாராயணம் செய்தாலே நம்முடைய மனதில் உள்ள பாரங்களும், செய்த பாவங்களும் நீங்கிவிடும். அதுவே அன்னையை நேரில் சென்று வணங்கி வந்தால், அதன் பலன் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். சிறப்புமிக்க சக்திகொண்ட ‘ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்’ உருவான தலமாகவும் திருமீயச்சூர் திகழ்கிறது.

    ஒரு முறை பண்டாசுரன் என்னும் அரக்கனால், தேவர்களுக்கும், முனிவர்களும், உலக உயிர்களுக்கும் துன்பம் விளைந்தது. இதனால் அனைவரும் சிவபெருமானை சரணடைந்தனர். அவரோ அந்த அரக்கனை அழிக்க, பார்வதியை ‘ஸ்ரீலலிதை’ என்ற நாமத்துடன் அவதரிக்கச் செய்தார். கடும் உக்கிரத்துடன் தோன்றிய அந்த அன்னை, நீண்ட காலம் போராடி அந்த அரக்கனை அழித்தாள். அவனை அழித்த பிறகும், அன்னையின் உக்கிரம் குறையவில்லை. இந்த உக்கிரத்தை பூமி தாங்காது என்பதால் அனைவரும் மீண்டும் ஈசனை தஞ்சமடைந்தனர். அவர், ஸ்ரீலலிதையிடம் “நீ சென்று, ஸ்ரீபுரம் என்ற இடத்தில் தவம் செய்து வா.. உனது உக்கிரம் தணியும்” என்றார்.

    அதன்படி ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள். அங்கே கடும் தவம் புரிந்தாள். அப்போது அன்னையின் உள்ளிருந்து எட்டு பேர் வெளிப்பட்டனர். அவர்கள் ஸ்ரீலலிதையை சுற்றி நின்று கொண்டு, அவளது கண்கள், கன்னம், நெற்றி, பாதம், கூந்தல் என்று அவளது அழகை புகழ்ந்து பாடினர். “அடடா.. என் கண்கள் இத்தனை அழகா? பிறகு ஏன் இவ்வளவு கொடூரமாக பார்க்க வேண்டும்?” என்றாள் ஒருத்தி. மற்றொருத்தியோ, “என் கன்னமும், நெற்றியும் அழகு பொருந்தியவையா? பின் எதற்காக முகத்தை உக்கிரமாக வைத்திருக்கவேண்டும்?” என்றாள். அடுத்து ஒருத்தி, “என் கரிய கூந்தலின் நீளம்தான் எத்தகையது. இதை இப்படி தலைவிரிக் கோலமாகவா வைத்திருப்பது?” என்றாள். இப்படி எட்டு பேரும் ஸ்ரீலலிதை அன்னையின் அழகை பாராட்டிப் புகழ்ந்தனர். இதனால் அன்னையின் உக்கிரம் தணிந்து, அவள் சாந்தமாக மாறிப்போனாள்.

    பின்னர் அந்த திருத்தலத்திலேயே தேவி கோவில் கொண்டாள். அங்கு வரும் அன்பர்களுக்கு தன்னுடைய அருளை அள்ளி வழங்குகிறாள். உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, லலிதா சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர்களது சகல தோஷங்களையும் போக்கி, சகல ஐஸ்வரியங்களைத் தந்து மகிழ்பவளாக இந்த அன்னை திகழ்கிறாள். இந்த ஆலயத்தில் ஸ்ரீசதாசிவ லிங்க பீடத்தில், ஸ்ரீசக்கரத்தின் மீது நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்தபடி அன்னை இந்த உலகத்தை ஆட்சி செய்கிறாள். விஜயதசமி, மாசி மாதத்தில் வரும் அஷ்டமி தினம், வைகாசி மாதத்தில் வரும் பவுர்ணமி ஆகிய மூன்று தினங்கள், இந்த அன்னைக்கு அன்னப் பாவாடை சாத்தும் வைபவம் நிகழ்கிறது. இதைக்காண்பவர்களுக்கு வாழ்வில் எந்த துன்பமும் நிகழாது என்பது நம்பிக்கை.

    திருவாரூரில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருமீயச்சூர் திருத்தலம்.
    ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலே ஆதிசேஷன், கீழே அவரது மனைவி என இங்கு பத்து தலைகளுடன் நாகத்தை தரிசிக்கலாம்.
    திருச்சி அருகே உள்ள திருநாராயணபுரம் எனும் ஊரில் திருமால், வேதநாராயணப்பெருமாள் எனும் திருப்பெயரில் வேதநாயகியுடன் அருள்கிறார். தல விருட்சமாக வில்வமும், தலதீர்த்தமாக காவிரியும் உள்ள தலம் இது. பாஞ்சராத்ர ஆகம முறைப்படி பூஜைகள் நடக்கும் இத்தலத்தின் புராணகாலப் பெயர் வேதபுரி என்பதாம். கோயில் முகப்பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்குள் ஏதேனும் பிரச்சனை உண்டானால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். இப்பகுதியில் யாராவது பொய் சொன்னாலோ, பிறரை நயவஞ்சகமாக ஏமாற்றினாலோ, கம்பத்தடியார் முன் சத்தியம் செய்து தரும்படி கேட்கும் வழக்கமும் இருக்கிறது. பதவி இழந்து, மீண்டும் படைக்கும் பொறுப்பேற்ற பிரம்மா, தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார்.

    அவருக்கு வேதத்தை உபதேசித்த பெருமாள், இங்கேயே பள்ளி கொண்டார். அதனாலேயே சுவாமிக்கு வேதநாராயணர் என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் சுவாமி சிலை மண்ணால் மூடப்பட்டது. வானவராயர் என்ற மன்னர், ஒருமுறை இவ்வூர் வந்து தங்கினார். அவரது கனவில் தோன்றிய சுவாமி, தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதைக் கூறினார். சிலையைக் கண்டெடுத்த மன்னர், கோவில் எழுப்பினார். மூலவர் வேதநாராயணர், புஜங்க சயனத்தில் தலைக்கு அடியில் நான்கு வேதங்களையும் வைத்து, நாபியிலுள்ள பிரம்மாவிற்கு வேதத்தை உபதேசிக்கும் கோலத்தில் இருக்கிறார். இரணியனை அழித்தபோது உக்கிர நரசிம்மராக பிரகலாதனுக்குக் காட்சி தந்த சுவாமி, அவனுக்கு இங்கு குழந்தை வடிவில் காட்சி தந்தார். சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயதுக் குழந்தையாக பிரகலாதன் இருக்கிறார்.

    ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலே ஆதிசேஷன், கீழே அவரது மனைவி என இங்கு பத்து தலைகளுடன் நாகத்தை தரிசிக்கலாம். இதுபோன்ற அமைப்பு வெகு அபூர்வமானது. நாக தோஷம், களத்திர தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இந்த பாம்புடன் காட்சியளிக்கும் பெருமாளை வழிபட, தோஷம் நிவர்த்தியாகும். பிள்ளைத்திருநறையூர் அரையர் என்ற பக்தர், தன் மனைவி, ஆறு குழந்தைகளுடன் சுவாமியை தரிசிக்க வந்தார். அப்போது சுவாமி சந்நதிக்கு மேலே பனை ஓலை வேயப்பட்டிருந்தது. அந்த ஓலையில் தீப்பற்றும்படி சுவாமியே மாயச்செயல் ஒன்றை நிகழ்த்தினார். அதிர்ந்துபோன பக்தர் சுவாமி மீது தீப்பிழம்புகள் விழாமல் இருக்க மனைவி, குழந்தைகளை படுக்க வைத்து, அவர்கள் மீது குறுக்காக விழுந்து தன்மீது தீப்பிழம்புகள் விழுமாறு ஏற்றுக்கொண்டார்.

    குடும்பத்தினர் மீது அக்கறை கொண்ட அவருக்கு காட்சி தந்த பெருமாள், அனைவருக்கும் மோட்சம் கொடுத்தருளினார். பிராகாரத்திலுள்ள ஆழ்வார் சந்நதியில் பிள்ளைத்திருநறையூர் அரையரை தரிசிக்கலாம். பிறப்பற்ற நிலை வேண்டியும், ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு வேண்டியும் இவரை பக்தர்கள் வழிபடுகின்றனர். பங்குனி உத்திர தினத்தன்று சுவாமி, வேதவல்லித்தாயார் சந்நதிக்கு எழுந்தருளி காட்சி தருவார். ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பிள்ளை லோகாச்சாரியார், மணவாளமாமுனிகள் ஆகியோர் பிராகாரத்தில் உள்ளனர். மூலவர் விமானம் வேதவிமானம் எனப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், கல்வியில் சிறப்பாக திகழ விரும்புவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

    பிரம்மா உபதேசம் பெற்ற தலமென்பதால், இக்கோவில் கல்வி வழிபாட்டிற்குரிய தலமாகவும் திகழ்கிறது. வேதநாராயணருக்கு திருவோணம், ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விசேஷ பூஜை நடக்கிறது. தோஷம் காரணமாக திருமணத்தடை உள்ளவர்கள், வேதநாராயணருக்கு துளசி மாலை அணிவித்து, சந்நதி யில் 27 நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டை வியாழன் அல்லது தோஷம் உள்ளவரின் பிறந்த நட்சத்திரத்தன்று செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது. ராமானுஜர் இங்கு வந்தபோது, சுவாமி அவரிடம், ‘காவிரியில் நீராடி காவி உடுத்தி வா!’ என்றாராம். ராமானுஜரும் அவ்வாறே வந்தார். அதனாலேயே சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று, ராமானுஜர் காவியுடை அணிந்து புறப்பாடாவார். மற்ற நாட்களில் இவருக்கு வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது.
    இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது
    பெயர்: திருவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில்
    மூலவர்: வைகுந்தநாதன் (நின்ற திருக்கோலம்)
    உற்சவர்: கள்ளபிரான் ,ஸ்ரீசோரநாதர்
    தாயார்: வைகுண்டவல்லி, பூதேவி
    உற்சவர் தாயார்: ஸ்ரீசோரநாயகி
    தீர்த்தம்: பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி

    கோவில் அமைப்பு

    9 நிலைகளும் 110 அடி உயரமும் கொண்டுள்ளது இக்கோவிலின் ராஜகோபுரம். மூலவர் வைகுண்டநாதர்; கோவிலுக்குள் இவர் சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் வைகுண்டநாச்சியார்.

    உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார்; தாயார் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதியும், நரசிம்மர் சன்னிதி, கோதண்டர் சன்னிதியும் உள்ளன.

    தல புராணம்

    பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலசதீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம்புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம்.

    பெயர்க் காரணம்

    உற்சவர் சோரநாதன், கள்ளபிரான் என அழைக்கப்படுவதற்கும் காரணம் தரும் மரபுவழிச் செய்தியும் உள்ளது.

    ஸ்ரீவைகுண்டம் நகரில் திருட்டுத் தொழில் செய்துவந்த காலதூஷகன் என்ற திருடன், வைகுண்டநாயகரை வழிபட்டுப் பின் தனது தொழிலைத் தொடங்குவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான். கிடைத்த பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்திவிட்டு மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்து வந்தான். ஒருமுறை அரண்மனைக்குத் திருடச் சென்றபோது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக்கொள்ள இவன் மட்டும் தப்பிவிட்டான். அரசன் இவனைப் பிடித்துவர காவலாளிகளை அனுப்பினான். காலதூஷகன் வைகுண்டநாதரிடம் வேண்ட அவனுக்காகப் பெருமாள், காலதூஷகன் உருவில் அரசவைக்குச் சென்றார். அரசனிடம், அவன் குடிமக்களைச் சரிவர காக்கத் தவறியதை உணர்த்தி, அரசனுக்கும் காலதூஷகனுக்கும் காட்சிதந்து அருளினார். திருடனாக வந்தமையால் பெருமாள் இங்கு கள்ளபிரான் என்றும் சோரநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

    சிறப்பு

    இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் முதன்மையானதாவும் உள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார். இக்கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை , ஐப்பசி மாதங்களில் 6 ஆம் நாளன்று சூரிய ஒளி வைகுண்டநாதர் மீது விழுகின்றது. அதற்கு ஏற்றாற்போல கொடிமரம் சற்றே விலகி உள்ளது. ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போரில் இக்கோவில் கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.

    திருவிழாக்கள்

    இங்கு நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது கருடசேவைத் திருவிழா ஆகும். இவ்விழா தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. விழாவில் நவதிருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருடவாகனத்தில் எழுந்தருளுவதைக் காணலாம். நம்மாழ்வாரின் உற்சவர் திருவுருவச் சிலை அன்னவாகனத்தில் ஒவ்வொரு நவதிருப்பதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த தலங்களில், அந்தந்த தலங்கள் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும்.

    அமைவிடம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ தூரத்திலுள்ளது.
    தமிழ்நாட்டில் ராஜகோபுரத்துடன் அமைந்த அய்யனார் ஆலயம் இது ஒன்றுதான் என்றும் சொல்கிறார்கள். அதோடு அய்யனாருக்கான மிகப்பெரிய திருக்கோவிலாகவும் இது பார்க்கப்படுகிறது.
    கிராமங்களின் காவல் தெய்வமாக இருப்பவர், ‘அய்யனார்’. பல கிராமங்களில் உயரமான உருவத்துடன், கையில் வாள் ஏந்தியபடி, முறுக்கு மீசையுடன் இவர் காட்சியளிப்பார். அவருக்கு முன்பாக குதிரை அல்லது யானை வாகனம் அமைந்திருக்கும். பல இடங்களில் அய்யனார்தான், ‘சாஸ்தா’ என்ற பெயரில், பலரது குடும்பங்களுக்கும் குலதெய்வமாக இருக்கிறார். இவரை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும். பெரும்பாலும் சாஸ்தா அல்லது அய்யனார்  கோவில்கள், மிகச் சிறிய அளவிலேயே இருக்கும்.

    ஆனால் திருப்பட்டூர் திருத்தலத்தில் உள்ள அய்யனார்கோவில் மிகப்பெரிய பிரகாரங்களுடன் அமைந்த தலமாக திகழ்கிறது. இத்தல அய்யனார், ‘அரங்கேற்ற அய்யனார்’ என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இவரது கையில் ‘ஞான உலா’ என்னும் ஓலைச்சுவடி இருப்பது சிறப்புக்குரியது. திருக்கயிலாயத்துக்கு நிகரான தலமாக திருப்பட்டூர் திருத்தலம் போற்றப்படுகிறது. அதற்கு காரணம், இங்குள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில். இது பிரம்மதேவன், சிவபெருமானை நோக்கி தவம் புரிந்த தலம் ஆகும். அதே போல் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் இத்தல இறைவனை வழிபட்டிருக்கிறார்கள். இங்கு காசி விஸ்வநாதர் கோவில், மாரியம்மன் கோவில் போன்ற சிறப்புமிக்க தலங்களும் இருக்கிறது.

    அதோடு திருப்பட்டூருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்ததுதான் ‘அரங்கேற்ற அய்யனார்கோவில்’. திருப்பட்டூர் ஊருக்குள் நுழையும் போதே இந்த ஆலயத்தை தரிசிக்க முடியும். தமிழ்நாட்டில் ராஜகோபுரத்துடன் அமைந்த அய்யனார் ஆலயம் இது ஒன்றுதான் என்றும் சொல்கிறார்கள். அதோடு அய்யனாருக்கான மிகப்பெரிய திருக்கோவிலாகவும் இது பார்க்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் பூரணை-புஷ்கலா தேவியருடன் அய்யனார் வீற்றிருக்கிறார். பூமியில் வாழும் மக்கள் அனைவரும் அறியாமை என்னும் இருள் நீங்கி, கல்வி ஞானம் அடையும் வகையில் சிவபெருமான் உத்தரவின்படி, சேரமான் பெருமான் நாயனார் அருளியதுதான் ‘திருக்கயிலாய ஞான உலா’ என்னும் நூல். இந்த அரிய பொக்கிஷமான நூலை, மாசாத்தனார் என்னும் திருப்பெயரைக் கொண்ட அய்யனார் அரங்கேற்றிய தலம் இதுவாகும். அதன் காரணமாகத்தான், அவரது திருக்கரத்தில் ஓலைச்சுவடியை தாங்கி இருக்கிறார்.

    இத்தலம் வந்து இந்த அய்யனாரை வேண்டுபவர்களுக்கு, கல்வி ஞானம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்திற்கு வரும் ஒருவர், தன்னுடைய வேண்டுதலை வைத்த 90 நாட்களில் அது நிறைவேறும் அதிசயத்தைக் காணலாம். அப்படி நிறைவேறும் வேண்டுதல்களுக்குப் பின்னர், சம்பந்தப்பட்டவர்கள், இங்குள்ள அய்யனாரின் வாகனமான யானைக்கு சிதறு தேங்காய் உடைத்து, ஜன்னல் வழியாக அய்யனாரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். அய்யனாரின் வாகனமான யானை சிலை, ஒற்றைக் கல்லில் வடிக்கப்பட்டது என்கிறார்கள்.

    வேண்டுதலைப் பொறுத்து, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு எண்ணிக்கையில் சிதறு தேங்காய் உடைக்கும் வழிபாட்டு முறை இங்கு இருக்கிறது. திருமணம் விரைந்து நடைபெற 11 தேங்காய்கள் உடைக்க வேண்டும். குழந்தை வரம் கிடைக்க 9 தேங்காய்களை சிதறடிக்க வேண்டும். கடன் பிரச்சினைக்கு 7 தேங்காய்கள், உயர் கல்வியில் சிறந்து விளங்க 5 தேங்காய்கள் என்ற எண்ணிக்கையில் தேங்காய்களை சிதறு காய் போட வேண்டும். இவ்வாறு செய்தால் அனைத்து வேண்டுதல்களும் விரைவிலேயே அய்யனாரால் பூர்த்தி செய்து வைக்கப்படும்.

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பட்டூர்.
    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக விட்டலர் கோவில்’ உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது பண்டரிபுரம். இங்கு விட்டலர் -ருக்மணி திருக்கோவில் அமைந்துள்ளது. இதே போல் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக விட்டலர் கோவில்’ உள்ளது. விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரச பிரதிநிதியாக இருந்த கொண்டைய தேவ சோழ மகாராஜன் என்பவரால், 16-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.

    கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று, தாயார் சன்னிதி என பல அம்சங்களுடன் இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது. ஆலயத்திற்கு வெளியே ஒரு சிறிய சன்னிதியில் பக்த ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில், விட்டலர் கோவிலை பார்த்தபடி காட்சி தருகிறார். கோவிலுக்குள் பலிபீடம், அழகிய கொடிமரம், பழமையான வடிவமைப்பில் கருடாழ்வார் சன்னிதி உள்ளன.இவற்றைக் கடந்தால் சற்று உயரமான வடிவமைப்பில் விட்டலர் கோவில் அமைந்துள்ளது. மகாமண்டபம், முகமண்டபம் இவற்றைக் கடந்து அர்த்தமண்டபத்தை அடைந்தால், கருவறையில் பிரேமிக விட்டலன் தனது இரண்டு கரங்களையும் இடுப்பில் வைத்தபடி ருக்மிணி - சத்யபாமாவோடு காட்சி தருகிறார்.

    வெளிப்பிரகாரத்தில் முதலில் சந்தானலட்சுமித் தாயார் தனி சன்னிதியில் நான்கு திருக்கரங்களோடு அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். குழந்தைப்பேறு வாய்க்காதவர்கள் இத்தலத்து தாயாரை மனமுருகிப் பிரார்த்தித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதைத் தொடர்ந்து சுற்றுப்பிரகாரத்தில் மூன்று சிறிய சன்னிதிகள் ஒரு சேரக் காட்சி தருகின்றன. இதில் முதல் சன்னிதியில் சீனிவாசப் பெருமாளும்- தாயாரும் அருள்கிறார்கள். அடுத்த சன்னிதியில் வரதராஜப்பெருமாளும் -தாயாரும் காட்சி தருகிறார்கள். மூன்றாவது சன்னிதியில் ராமானுஜரும், விஷ்வக்ஸேனரும் வீற்றிருக்கின்றனர்.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஏகாதசி தினத்தன்றும் காலை 9 மணிமுதல் 12 மணி வரை திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றுடன் பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் கார்த்திகை ஏகாதசி, ஆஷாட ஏகாதசி, யுகாதி, மகாசிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி போன்ற உற்சவங்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இத்தினங்களில் திருமஞ்சனம் மற்றும் நாமசங்கீர்த்தனம் போன்றவை நடைபெறுகின்றன. கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டும் மாலையில் திருமஞ்சனம் செய்யப்படுகின்றது.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சந்தானலட்சுமி தாயாரை மனமுருகிப் பிரார்த்தித்து, விட்டலர் சன்னிதியில் தரும் சந்தாகிருஷ்ணர் விக்கிரகத்தை மடியில் வைத்து ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே; ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற மந்திரத்தை உச்சரித்து, விட்டலனையும் தாயாரையும் மனதால் வழிபட குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது ஐதீகம்.

    அமைவிடம்

    கல்பாக்கத்தில் இருந்து நெரும்பூர் - திருக்கழுக்குன்றம் வழித்தடத்தில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இத்தடத்தில் சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கல்பாக்கம் மற்றும் நெரும்பூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணித்தும் இக்கோவிலை அடையலாம். சென்னை -புதுச்சேரி கிழக்குக்கடற்கரைச் சாலைத் தடத்தில் மாமல்லபுரத்தை அடுத்த வெங்கம்பாக்கத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இளையனார்குப்பம் என்ற ஊர் வரும். அங்கிருந்து வலது புறச்சாலையில் திரும்பினால் இரண்டு கிலோமீட்டரில் விட்டலாபுரம் சென்றுவிடலாம்.
    ஹம்பியில் சிறந்த கலை அம்சத்துடன் கூடிய விருபாக்ட்ஷா கோவில், தாமரை மகால், விஜய விட்டலா கோவில் ஆகியவை புகழ்பெற்ற பகுதிகள் ஆகும்.
    பெங்களூருவில் இருந்து 315 கிலோ மீட்டர் தொலைவிலும், பல்லாரியில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது புராதன நகரமான ஹம்பி. இங்கு எங்கு பார்த்தாலும், மன்னர்களின் கோட்டை, அரண்மனை, கோவில்களாக காட்சி அளிக்கிறது. இது விஜயநகர பேரரசர்களின் ஆட்சி காலத்தின் செல்வம், போர்ப்படை, கலாசாரம், அழகியல் ஆகியவற்றை பறைசாற்றுகிறது.

    ஹம்பியில் சிறந்த கலை அம்சத்துடன் கூடிய விருபாக்சர் கோவில், தாமரை மகால், விஜய விட்டலா கோவில் ஆகியவை புகழ்பெற்ற பகுதிகள் ஆகும். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக இருந்த ஹம்பி, பருத்தி, நறுமணப்பொருட்கள் மற்றும் ரத்தின கற்கள் விற்பனை செய்யும் சந்தையாக திகழ்ந்தது. விஜய விட்டலா கோவிலில் 56 இசை தூண்களுடன் கூடிய கலை அரங்குகள் உள்ளது. இந்த தூண்கள் ஒவ்வொன்றையும் தட்டும் போது, ஒவ்வொருவிதமான இசை ஒலி கேட்பது சிறப்பு.

    இதில் முக்கியமானது ஹம்பி விட்டலா கோவில் வளாகத்தில் உள்ள கல் தேர். இதனை 16-ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கிருஷ்ண தேவராயர் உருவாக்கினார். திராவிட கட்டிடக் கலை பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த கல் தேர், கைவினைஞர்களின் கட்டிடக் கலை திறமையை எடுத்துக்காட்டுகிறது. கிரானைட் கற்களின் அடுக்குகளால் கட்டப்பட்ட இத்தேரில் நான்கு சக்கரங்கள் உள்ளது.

    முன்புறம் அழகான 2 யானைகள் தேரை இழுத்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தேரின் ஒவ்வொரு பகுதியிலும் சிற்ப கலைகள் செதுக்கப்பட்டு உள்ளது. இத்தகைய சிறப்புகளை பெற்ற இந்த கல் தேர் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இது இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதியதாக வெளியிடப்பட்ட 50 ரூபாய் நோட்டில் இந்த கல் தேர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கர்நாடக அரசின் சுற்றுலா துறையின் சின்னமாகவும் இது விளங்குகிறது.
    நாரதர் பூஜித்த தலமாதலால் நாரதர்பூண்டி என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி நார்த்தம்பூண்டி என்றானது. முருகன், நாரதர் இருவருக்கும் தோஷ நிவர்த்தி கொடுத்த தலம் என்பது இதன் சிறப்பாகும்.
    கோவிலின் சிறப்புகள்:

    இத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் அம்மன் வழைபந்தல் என்னும் இடத்தில் சிவனின் சரிபாதி வேண்டி சிவலிங்கம் செய்து வழிபட எண்ணினாள். மண்ணால் ஆன சிவலிங்கம் செய்ய தண்ணீர் தேவைப்பட்டது. எனவே முருகனை வரவழைத்து தண்ணீருக்கு ஏற்பாடு செய்யும்படி சொன்னாள். முருகன் தனது வேலாயுதத்தை மேல் திசைநோக்கி வீசினார்.

    அங்கிருந்த மலைகுன்றுகளை பிளந்த வேல் செந்நீரை கொண்டு வந்தது.  அப்போது வேல் பட்டு மலையில் தவம் செய்துகொண்டிருந்த ஏழு முனிவர்கள் மாண்டனர். ஏழு பேரை கொன்ற பாவம் முருகனை பிடித்தது. இந்த பாவம் தீர அம்பாளின் அறிவுரைப்படி முருகப்பெருமான் சேயாற்றின் வடகரையில் ஏழு கோவில்களையும், தென்கரையில் ஏழு கோவில்களையும் ஏற்படுத்தினார்.

    காஞ்சிபுரம், கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், பூண்டி, குருவிமலை ஆகியவை வடகரையில் உள்ள சப்த கரை கண்டங்கள் என அழைக்கப்பட்டன. தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு, நார்த்தம்பூண்டி, தென்பன்றிப்பட்டு, பழங்கோவில், கரப்பூண்டி, மண்டகுளத்தூர் ஆகியவை தென்கரையில் உள்ள சப்த கைலாயங்கள் எனப்பட்டன. சப்த கைலாயங்களில் மூன்றாவதாக திகழ்வது நாரதர் பூஜித்த நார்த்தம் பூண்டி சிவன் கோவிலாகும். கந்தபுராண வரலாற்றில் இந்த தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. தட்சன் தனது மூன்று பிள்ளைகளை தனக்கு சமமாக ஆக்க விரும்பினார்.

    ஆனால் நாரதர் அவர்களுக்கு சிவபோதனை செய்து அவர்களை நல்வழிப்படுத்தினார். தனது பிள்ளைகளை தன் வழிக்கு வரவிடாமல் தடுத்த நாரதருக்கு, உடல் நிலை கெட தட்சன் சாபம் கொடுத்தான். நாரதர் அந்த சாப நிவர்த்திக்காக நார்த்தம் பூண்டியிலுள்ள கயிலாசநாதரை பூஜித்து 12 ஆண்டு காலம் தவமிருந்தார். இறைவன் பஞ்சமூர்த்திகளோடு ரிஷபவாகனத்தில் நாரதருக்கு காட்சி தந்து சாபத்தை நீக்கினார்.

    பின்பு நாரதர் முருகப்பெருமானை வணங்கி சப்தமுனிவர்களின் தலைமைப் பதவியை அடைந்தார். நாரதர் பூஜித்த தலமாதலால் நாரதர்பூண்டி என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி நார்த்தம்பூண்டி என்றானது. முருகன், நாரதர் இருவருக்கும் தோஷ நிவர்த்தி கொடுத்த தலம் என்பது இதன் சிறப்பாகும்.

    பலன்கள்:

    திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை வேண்டி பயனடையலாம் என்பது நம்பிக்கை.

    போக்குவரத்து:

    போளூரிலிருந்து 19 KM தொலைவில் இக்கோவில் உள்ளது. போளூர் திருவண்ணாமலை சாலையில் உள்ள நாயுடுமங்களம் கூட்டுரோடு சென்று அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்று கோவிலை அடையலாம். போளூரிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.

    கோவில் திறந்திருக்கும் நேரம்:

    காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

    கோவில் முகவரி:

    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்,
    நார்த்தம்பூண்டி,
    திருவண்ணாமலை மாவட்டம்.

    திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
    சிவனின் பெயர்   : மகாபலேஸ்வரர்,
    பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
    அம்மனின் பெயர் :  கவுரி
    தல விருட்சம்     : வன்னி மரம்

    கோவில் சிறப்பு :

    திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

    வரலாற்றுச் சுருக்கம்

    கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்[மேற்கோள் தேவை]. இக்கோயில் மாதோட்டம் நகரில் அமைந்துள்ளது. சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தது.

    இத்தலதிலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இத்தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் ஐதீகம்.

    இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் இதுவாகும்.

    கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும். அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் சுட்டப்பட்டிருக்கிறது.

    இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை அகழ்வாய்வுத் தரவுகள் மூலமறிய முடிகின்றது. அன்றியும் இத்திருவிடம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் சிற்பம் கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க கலைஞர்களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்[மேற்கோள் தேவை].

    திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் வங்காலை என்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் துறைமுகமாகவும வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் பாப்பாமோட்டையென்றும் இன்றும் அழைக்கப்படும் ஊர்கள் இருப்பதையும் காணலாம். அந்தணர்கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன

    ஆர்வலர் ஒருவர் பகைவரால் கவரப்படாதிருத்தற் பொருட்டு கலிங்கத்தேயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த தந்தத்துடன் மாதோட்டத்தின் கண்ணிறங்கி அன்று இரவினை அங்கேயே கழித்ததாகவும் வரலாறுண்டு.

    பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக் கோயில் சோழமன்னர்களால் இராசராசேஸ்வர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது.[2]

    வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள்.

    ராகு, கேது தோஷம் நீங்கவும், சகல ஐஸ்வர்யங்களும் பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

    கோவில் திறக்கும் : காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

    முகவரி :  

    அருள்மிகு திருக்கேதீச்வரர்  திருக்கோவில் மாதோட்ட நகரம்,
    மன்னார் மாவட்டம். இலங்கை.
    சிவனருள் பெற்ற அதிபத்த நாயனாருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.
    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் ‘கடல்நாகை’ எனும் நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை ஈசனுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் ஈசனுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார்.

    ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த நாயனாருக்கு கிடைத்தது. மனமகிழ்வுடன் அதையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார். வறுமையில் தவித்த அந்தக் குடும்பம் அன்று பசியால் வாடியது. இருப்பினும் சிவனுக்கு செய்த பணியை நினைத்து அதிபத்தர் திருப்தியடைந்தார்.

    மறுநாள் அதிபத்தரின் வலையில் தங்க மீன் கிடைத்தது. அந்த மீனையும் ஈசனுக்கே அர்ப்பணம் செய்தார். வறுமையிலும் கூட விலைஉயர்ந்த தங்க மீனை இறைவனுக்கு தியாகம் செய்த தொண்டை எண்ணி மகிழ்ந்த ஈசன், அதிபத்தருக்கு காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டார்.

    இந்த நிகழ்வு நடந்தது ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளில் ஆகும். நாகப்பட்டினம் நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் ஆலயத்தில் அதிபத்தருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. அதிபத்தருக்கு ஈசன் அருள் செய்த நிகழ்வை, ஆவணி ஆயில்ய நாளில் திருக்கோவில் அருகில் உள்ள கடலில், படகு மற்றும் மீன் வலையுடன் சென்று நடத்திக் காண்பிக்கிறார்கள்.

    ஆவணி ஆயில்ய நாளின் மாலை நேரத்தில், ஆலயத்தில் இருந்து நீலாயதாட்சி அம்மனுடன் காயாரோகணேஸ்வர சுவாமி புறப்படுகிறார். அவரோடு நாகை புதிய கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான அடியவர்களும் வருவார்கள். அப்போது அதிபத்தரின் உற்சவர் சிலையை படகில் வைத்து கடலுக்குள் எடுத்துச் சென்று, அதிபத்தர் தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வினை நடத்திக் காண்பிக்கிறார்கள்.

    பொதுவாக கோவிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால் கோவில் நடையை அடைத்து விடுவார்கள். பரிகார பூஜைகள் செய்தபின்னர் தான் நடையை திறப்பார்கள். ஆனால் இந்த தலத்தில் மட்டும் நடை திறந்தே இருக்கும். சிவனருள் பெற்ற அதிபத்த நாயனாருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.

    இறந்தவரின் உடலை ஆலயத்திற்கு முன்பாக வைத்து விடுவார்கள். அப்போது சிவாச்சாரியார், கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை இறந்தவர் உடலுக்கு அணிவித்து, தீர்த்தம் கொடுப்பார். அதன்பிறகே இறுதிச் சடங்கிற்காக தூக்கிச் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் இறந்தவரின் ஆன்மா, சிவபதம் அடைவதாக நம்பப்படுகிறது.

    காசியைப் போல இத்தலத்திலும் முக்தி மண்டபம் உள்ளது. இத்தல ஈசனையும், அம்பாளையும் வழிபடுவதால் இறப்பிற்கு பின் முக்தி நிச்சயம். வாழும்போது பக்தியுடன் வாழ்ந்தால், நம் வாழ்க்கைக்குப் பிறகு சிவபதம் நிச்சயம். இறந்தவர்களின் ஆன்மா முக்தி பெற, இத்தல ஈசனுக்கு ‘மோட்ச தீபம்’ ஏற்றியும் வழிபடலாம்.

    நாகப்பட்டினத்தின் புராண காலப்பெயர், ‘கடல் நாகைக் காரோணம்’ என்பதாகும். இத்தல ஈசனின் திருநாமம் ‘காயாரோகணேஸ்வரர்’. அன்னையின் திருநாமம் ‘நீலாயதாட்சி’ என்னும் ‘கருந்தடங்கண்ணி’. ‘காயம்’ என்றால் ‘உடம்பு’ என்று பொருள்படும். ‘ஆரோகணம்’ என்பதற்கு ‘உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளல்’ என்று அர்த்தம். இங்குள்ள ஈசன், புண்டரீக மகரிஷியின் உடலை, தன் சிவலிங்கத் திருமேனியோடு சேர்த்துக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘காயாரோகணர்’ என்றும், இத்தலத்திற்கு ‘காயாரோகணம்’ என்றும் பெயர் வந்தது.

    மனித உடலோடு சொர்க்கத்தில் இடம் கேட்டு தவம் செய்தார் புண்டரீக மகரிஷி. அவரது தவத்தை மெச்சி, அவரது உடலை தன்னுள் ஆரோகணம் செய்து முக்தி கொடுத்தார் ஈசன். இங்கு மூலவர் காயாரோகணேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நெற்றிப் பட்டத்துடன் கூடிய பெரிய சிவலிங்கமாக கிழக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். மார்க்கண்டேயர், அகத்தியர், வசிஷ்டர், கவுதமர், காசிபர், புலத்தியர், ஆங்கிரசர் முதலிய சப்த ரிஷிகளுக்கும், சிவபெருமான் மூல சிவலிங்கத்தில் இருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்த பெரும் புண்ணிய தலம் இதுவாகும். இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாக இவ்வாலயம் திகழ்கிறது. மூலவருக்கு அருகில் தியாகராஜர் சுந்தர விடங்கராய் உள்ள சன்னிதியும் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிச்சாடனர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் உள்ளன. அஷ்ட நாகங்களில் ஒன்றான ஆதிசேஷன் மகா சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. நாக தோஷங்கள் அகல, இத்தல ஈசன் வழிபாடு நமக்குத் துணை நிற்கும்.

    சம்பந்தர், அப்பர், சுந்தரரின் பாடல் பெற்ற தலம் இதுவாகும். சுந்தரருக்கு இத்தல ஈசன் நவமணிகள், முத்துமாலை, பட்டு முதலியன வழங்கியுள்ளார்.

    இத்தல ஈசன் அகத்தியருக்கு தனது திருமணக் காட்சியை இங்கும் காட்டி அருளியுள்ளார். கோவிலின் உள்ளே சென்றதும் ஐந்து தலை நாகம் குடை பிடிக்க ‘நாகாபரணப் பிள்ளையார்’ உள்ளார். இவருக்கு பின்னால் சுதை வடிவில் பெரிய நந்தி இருக்கிறது. நந்திக்கு தென்புறம் முக்தி மண்டபம் உள்ளது. ஆலயப் பிரகாரத்தில் வல்லப கணபதி, அகோர வீரபத்திரர், பஞ்சமுக லிங்கம், ஆத்ம லிங்கம், மாவடிப் பிள்ளையார், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், பழனி ஆண்டவர், இடும்பன், சூரியன், கஜலட்சுமி, அறுபத்து மூவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் சன்னிதிகள் இருக்கின்றன.

    இத்தல அம்பாள் நீலாயதாட்சியின் கண்கள் கருநீலத்தில் அழகானது. நான்கு திருக்கரங்களுடன் நின்றத் திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறார். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமளா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரின் கீர்த்தனைகளால் அலங்கரிக்கப்பட்ட வள் இந்த அன்னை. இங்குள்ள நீலாயதாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மனைப் போலவே கன்னியாக காட்சித் தருகிறாள்.

    இரட்டை நோக்கு நந்தி :

    அம்பாள் இங்கு கன்னியாக இருப்பதால், ஈசன் நந்தியை அவளுக்குப் பாதுகாப்பாக அனுப்பினார். ஆனால் நந்தி, ‘தான் அனுதினமும் ஈசனையும் தரிசிக்க வேண்டும்’ எனக் கேட்டார். உடனே ஈசன், அம்பாள் சன்னிதியில் இருந்து கொண்டே தம்மை வழிபடும்படி கூறினார். இதனால் அம்பாள் எதிரில் உள்ள நந்தி தன் கழுத்தை முழுமையாக திருப்பி, சிவன் சன்னிதியைப் பார்த்த படி உள்ளது. நந்தி தனது இடது கண்ணால் ஈசனையும், வலது கண்ணால் அம்பாளையும் பார்த்தபடி இருப்பது இவ்வாலயத்தின் சிறப்பம்சம். இதனை ‘இரட்டை நோக்கு நந்தி’ என்கிறார்கள். இந்த நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து, ஈசன், அம்பிகை, நந்தி என முறைப்படி தேன் அபிஷேகம் செய்து, 5 நெய் தீபங்கள், 5 சந்தனாதி தைல தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

    வழிபாட்டு பலன் :

    இவ்வாலயத்தில் உள்ள அகோர வீரபத்திரரை, பவுர்ணமி நாளில் வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வறுமை அகலும். இத்தல வெண்ணெய்பிரான், காசி விஸ்வநாதர், அருணாசலேஸ்வரர் சன்னிதிகள் இரட்டிப்பு பலன்களை அளிக்கவல்லவை. இங்குள்ள பைரவரை வெள்ளி மற்றும் அஷ்டமி நாட்களில் முந்திரி மாலை அணிவித்து வில்வ அர்ச்சனை செய்து, நறுமண மலர்மாலை சூட்டி 9 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கிரக தோஷங்கள் அகலும். இங்குள்ள சனீஸ்வரர், தசரதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்கிறார்கள். இவரை 9 நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் சகல விதமான சனி தோஷங்களும், சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    பிரதோஷத்தில் பெருமாள் :

    சிவன் கோவில்களில் பிரதோஷத்தின் போது ஈசனும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வார்கள். ஆனால் இத்தலத்தில் மோகினி வடிவில் பெருமாளும் அவர்களுடன் புறப்படுகிறார். இவரை பிரதோஷத்தின் போது மட்டுமே தரிசிக்க இயலும். மற்ற நாட்களில் பெருமாள், காயாரோகணேஸ்வரர் சன்னிதியிலேயே இருக்கிறார். பிரதோஷத்தின்போது மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகும் சிவதலம் இது ஒன்றேயாகும்.

    நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். 
    ×