search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் கோவில்
    X
    சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் கோவில்

    பக்தியும் ஞானமும் ஒருங்கே இணைந்த சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் கோவில்

    சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் தலத்தின் கருவறையைச் சுற்றி வரும் போது தெற்குப் பிரகாரத்தில் வியாக்யான சிம்மாசனத்தில் ஸ்ரீ சாரதாம்பிகையின் உற்சவ விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது.
    துங்கா நதியின் இடது கரையில் சிக்மகளூர் மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ளது சிருங்கேரி. நெல்வயல்கள், பாக்கு மரங்கள் புடைசூழ அமைந்துள்ளது.

    ராமாயணத்தில் வரும் கலைக் கோட்டு முனிவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் தான், குழந்தை வேண்டி தசரதன் செய்த புத்திர காமேட்டி யாகத்தை முன்னின்று நடத்தியவர். பெயர் கலைக்கோட்டு முனிவர். இவருடைய வேறு பெயர் ரிஷ்ய சிருங்கர். இவர் பெயரில் அமைந்தது இவ்வூர். அத்வைத தத்துவத்தை உலகறியச் செய்த ஆதி சங்கரருடன் தொடர்புடையது. கல்விக் கடவுளாகக் கருதப்படும் சாரதா தேவிக்கும், ஆதி சங்கரருக்கும் இங்கு கோவில்கள் உள்ளன.

    இவை தவிர சிற்பக்கலைச் சிறப்பு வாய்ந்த வித்யாசங்கரர் கோவிலும் இங்கு உள்ளது. மலைக்குன்றுகளும் நிலமும் நீர்வளமும் அமைதியான சூழ்நிலையை உண்டாக்குகின்றன. ஆதிசங்கரர் ஏற்படுத்திய நான்கு மடங்களில் சிருங்கேரியில் உள்ள சாரதா பீடமே முதன்மையானது. அதாவது முதன்முதலில் நிறுவியது.
    நமது நாட்டில் நிலவிய பல்வேறு சமயங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் ‘அத்வைதம்’ என்னும் தமது கொள்கையை நிலை நாட்டுவதற்காகத் தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் தாம் ஒருவராகவே பயணம் செய்து போதனைகளை செய்தார் ஆதிசங்கரர்.

    பாரத நாட்டின் நான்கு இடங்களில், அதாவது பத்ரிநாத், பூரி, சிருங்கேரி, துவாரகை ஆகியவற்றில் மடங்களை நிறுவினார் ஆதிசங்கரர். ஆதிசங்கரர் வாரணாசிக்குச் சென்று அங்கிருந்த ‘சுரேஸ்வராச் சாரியார்’ என்ப வரைச் சந்தித்து பல சமயக்கருத்துகளைப் பற்றி உரையாடிய பிறகு சிருங்கேரியில் முதலில் சாரதா பீடத்தை நிறுவினார்.

    சாரதா பீடத்திற்கு பல்வேறு மரபைச் சேர்ந்த மன்னர்கள் கொடைகளை வழங்கியுள்ளார்கள். விஜயநகர மன்னர்கள், ஐதராபாத் நவாப்புகள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர் உடையார்கள், மராட்டிய பேஸ் வாக்கள், கேரள அரசர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் கள். பிரிட்டிஷ் அரசும் இந்த மடத்திற்கு தனது பங்கை செய்துள்ளது. மிகச்சிறந்த கல்விமான்களாகவும், மதாச்சாரியார் களாகவும் விளங்கிய வித்யா தீர்த்தர், பாபதி தீர்த்தர், வித்யாரணயர், நரசிம்மபாரதி, சந்திர சேகர பாரதி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இந்த மடத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள். இவர்களுக்கெல்லாம் மூலகாரணமாக விளங்குபவர் ஆதிசங்கரர். இங்குள்ள ‘சாரதாம்பாள் கோவில்’ திராவிடக் கலைப்பாணியில் அமைந்துள்ளது. கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜனார்த்தனர் கோவில் விஜயநகர மன்னர்களின் காலத்தை சேர்ந்தது.

    சிருங்கேரியிலுள்ள ஒரு சிறிய மலையின் மீது பழமையான சிவன் கோவிலும் உள்ளது. இந்நகரிலுள்ள மற்றொரு பழமையான கோவில் பார்சுவ நாத தீர்த்தங்கரர் என்றும் சமண முனிவருக்காக எழுப்பப்பட்டது. சிருங்கேரி மடத்திற்கு நாடு முழுவதும் எழுபதுக்கும் மேற்பட்ட கிளை மடங்கள் உள்ளன. அங்கு வேத பாடசாலைகளும், ஆன்மீகச் சொற்பொழிவுகளும் நடந்து வருகின்றன.

    ஒவ்வொரு கிளையிலும் நன்கு பராமரிக்கப்படும் நூலகம் ஒன்றும் உள்ளது.சிருங்கேரிக்கு வரும் பயணிகள் ‘பயணிகள் விடுதிகளில்’ தங்கலாம். அவை மடத்தின் நிருவாகத் தில் உள்ளன. இலவச உணவும் வழங்கப்படுகிறது. கோவிலின் அன்னசாலையிலும் இரவு 8.30 மணி வரைத்தான் உணவு வழங்கப்படும். அந்த இடம் மிகத் தூய்மையாகக் காணப்படுகிறது. உணவு பரிமாறப்படும் எவர்சில்வர் தட்டுகள் ஆங்காங்கு சிறுசிறு குன்றுகளாகக் காணப்படுகின்றன.

    முதலில் சூடான அரிசிச் சாப்பாடு, பிறகு மிளகு ரசம், சாம்பார், மோர் இந்த முறையில் பரிமாறப்படுகிறது. அளவு கிடையாது. சாரதாம்பிகை கோவில் ஒரு திருச்சுற்றுடன் அமைந்துள்ளது. எளிமையான கட்டமைப்பு. சிருங்கேரி பீடாதிபதி தினமும் இரவு பத்து மணிக்கு சிறப்பு பூஜை நடத்துவார். அந்த சிறப்பு பூஜை தனியாக ஒரு தியான மண்டபத்தில் நடக்கிறது. அந்த இடத்திற்கு செல்ல துங்கா ஆற்றை கடந்து செல்ல வேண்டும். அதற்கு வசதியான பாலம் கட்டப்பட்டுள்ளது. “யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம். சுழல் உள்ளது”.

    கோவில் அமைப்பு :

    சாரதா அன்னை வீற்றிருக்கும் மண்டபத்திற்குக் கீழ்ப்புறமாய் பலிபீடம், உற்சவ மூர்த்திகள், வெள்ளியாலான விக்னேஷ்வரர், இடதுப்புறம் கலைவாணியாம், சரஸ்வதிதேவி ஆகியோர் காட்சியருளுகின்றனர்.

    கருவறையைச் சுற்றி வரும் போது தெற்குப் பிரகாரத்தில் வியாக்யான சிம்மாசனத்தில் ஸ்ரீ சாரதாம்பிகையின் உற்சவ விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது. இம் மடத்தின் பீடாதிபதியாய் பட்டம் ஏற்கும் ஒவ்வொரு சன்னிதானமும் இச்சிம்மாசனத்தில் தான் முதலில் அமர்வார்களாம். இச்சிம்மாசனத்தின் அருகே வெள்ளி சிம்மாசனம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

    மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீ சக்தி கணபதி பத்து கரங்களுடன் காட்சியளித்திடுகின்றார். இவைத் தவிர வீடுகளில் விக்கிரகங்களை வைத்து பூஜை செய்திட இயலாதவர்கள் கொண்டு வந்து வைத்துச் சென்ற பலதரப்பட்ட விக்கிரகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. அன்னையின் சன்னிதிக்கு நேர் மேற்குப் புறமாய் ஸ்ரீ புவனேஸ்வரியின் பஞ்சலோக விக்கிரகம் உள்ளது. இதனை அடுத்து வெள்ளிரதம் உள்ளது.

    பிரதி வெள்ளிக்கிழமையும் அன்னையை இத்திருத்தேரில் அமரச் செய்து பிரகாரத்தைச் சுற்றி வருகிறார்கள். நவராத்திரி தினங்களில் தினமும் இந்த ரதோற்சவம் நடைபெறும். முன் மண்டபத்தில் காணப்படும் இரு தூண்களில் ஸ்ரீராஜ ராஜேஸ்வரியும், ஸ்ரீ மகிஷாசுர மர்த்தனியும் அபய, வரத கரங்களுடன் எழுந்து அருளியுள்ளனர். இம்மண்டபத்தில் இரு துவார பாலகர்களும் உள்ளனர்.

    சிருங்கேரி கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வடக்கிலும், தெற்கிலும் நுழை வாயில்கள் உள்ளன. கோபுரத்திற்கு வெளியே முப்பத்து ஐந்தடி உயரமுடன் கூடிய தீபஸ்தம்பம் காணப்படுகிறது. சாரதா கோவிலுக்கு இடபுறமாய் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் திருக்கோவில் கொண்டுள்ளார். இரண்டு அடி உயரத்துடன் கூடிய பீடத்தில் யோகாசனத்தில் ஆச்சாரியார் அமர்ந் திருக்கிறார். ஆதிசங்கரர் வலப்பக்கமும் தண்டமுடன் இடப்பக்கம் கமண்டலமும் வைக்கப்பட்டுள்ளன. பீடத்தின் கீழே நான்கு சீடர்கள் காணப்படுவதுடன் பீடத்தின் அடியில் ஒரு சிவலிங்கமும் வைக்கப்பட்டுள்ளன.

    அம்மாளின் திருக்கோவிலுக்கு தென்புறம் ஆதிசங்கரரின் சீடர்களின் ஒருவரும் இம் மடத்தின் முதல் ஆச்சாரியாருமான ஸ்ரீ சுரேச்வதாச்சாரியாரின் அதிர்ஷ்டான ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கும் துங்க நதித்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா சங்கர ஆலயத்திற்கும் இடையே ஸ்ரீ ஜனார்த்தனனின் சிறிய அளவிலான கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.

    ஸ்ரீ வித்யா சங்கர ஆலயம் ஸ்ரீசக்கரவடிவுடன் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் 600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுப்பப்பட்டது. அக்கால சிற்ப கட்டுமான வேலைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் இவ்வாலயம் விளங்குகிறது. கருவறையில் ஸ்ரீ வித்யா சங்கரர் லிங்க உருவாய் எழுந்தருளியுள்ளார். கருவறைக்கு வெளியே உள்ள இரண்டு சிறுமண்டபங்களில் ஸ்ரீ வித்யா கணபதியும் மகிஷாசுர மர்த்தினியும் சன்னிதி கொண்டுள்ளனர்.

    கருறை மண்டப வெளிச் சுவருக்கு தெற்கில் மகா விஷ்ணு, சரஸ்வதி, மேற்கில் உமையவள் மகேஸ்வரர் ஆகியோருக்கான சன்னிதிகள் அமைந்துள்ளன. இவை அல்லாமல் சிவதாண்டவ மூர்த்தி நம்பி நாராயணர், ஸ்ரீநிவாசர், ஹரிகரர் ஆகியோருக்கான வெண்கல திருஉருவங்களும் சிவலிங்கங்களும் சாளக்கிராமங்களும் உள்ளன.

    இத்தலத்தில் பக்தியும் ஞானமும் ஒருங்கே இணைந்து இருப்பதை உணர முடிகிறது. ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை விளக்கிடும் ஒளி விளக்காய் திகழும் இவ்வாலயத்தை தரிசிப்பது பிறவிப்பயன் ஆகும்.


    Next Story
    ×