என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    முருகனை விரதம் இருந்து வழிபடுவோருக்கு அல்லல்கள் தீரும். துன்பங்களும் துயரங்களும் நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பகை விலகி பாசம் பெருகும்.
    வேத ஜோதிடத்தில் அசுவினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களில் விசாகம் நட்சத்திரம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். குருபகவானின் ஆதிக்கத்தில் வரும் நட்சத்திரம். இந்த ஆண்டு வைகாசி விசாகம் குருவின் அருள் நிறைந்த வியாழக்கிழமையில் வருவது சிறப்பு.

    வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். எதிரிகள் பயம் அகலும், தீராத நோய்கள் தீரும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பகை விலகி பாசம் பெருகும். இன்று 108 முறை ஜெபிக்கவும் முருகன் மூல மந்திரம் : ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ வைகாசி விசாக தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.

    அசுரர்களை அழிக்க சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான் என்கின்றன புராணங்கள். விசாக நட்சத்திர நாளில் முருகனை விரதம் இருந்து வழிபடுவோருக்கு அல்லல்கள் தீரும். துன்பங்களும் துயரங்களும் நீங்கும். குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவைகளை தானம் செய்தால் பிள்ளை வரத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திர பாக்கிய கிடைக்கும் குலம் தழைக்கும் என்பது நம்பிக்கை.

    முருகனுக்கு விசாகம் விரதம் முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் விரும்பியது நடக்கும். கொரோனா வைரஸ் லாக்டவுனால் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் முருகனை நினைத்து வீட்டிலேயே விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும். விநாயகரை வழிபட்டு முருகனின் படத்தை பூஜை அறையில் வைத்து கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம். 
    தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் இருக்கும் நிரந்தரமற்ற தன்மைகளையும், நோய் நொடிகளையும் சனி வார விரத பூஜா முறைகளால் நாம் தீர்க்க முடியும்.
    அரசர் முதல் ஆண்டி வரை சனி என்றாலே ஒருகணம் சிந்தனையில் ஆழ்ந்து விடுவர். காரணம் நன்மை தீமை இரண்டையும் உறுதியாகவும் சரியாகவும் செய்யக் கூடிய கதிர் வீச்சுகளை தமது இயல்பாக அமைந்தது சனிக்கிரகம். அதுமட்டுமின்றி ஒருவரது ஆயுள், ஆரோக்கியதன்மைகளின் அளவீட்டு முறைகளை குறிப்பிடும் அம்சமும் உடைய ஒரு மெதுவான கிரகம் 'சனீஸ்வரன்' எனப்படும் 'காரி' ஆகும்.

    இது வாரநாட்களில் ஏழாவது நாளாக வரும். தனிமனித வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை துல்லியமாகக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய அலை இயக்கத்தை, ஜனன கால நேரத்தில், ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்வியல் பக்கங்களின் அனுபவப் பதிவுகளை, செயல் களமாக்கிக் காட்டி உலகியல் அனுபவம் பெற வைக்கக் கூடிய மிகப்பெரும் தனித்தன்மை சனிக்கிரகத்துக்கு உண்டு.

    ஒவ்வொரு மாதத்திலும் 8, 17, 26 ஆகிய தேதிகளிலும், மகரம், கும்பம் ராசிகளிலும், சனிக்கிழமைகளிலும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும் பிறந்தவர்கள் சனீஸ்வரனின் கிரக அலை இயக்கத்தை நன்மை தரத்தக்க அமைப்பில் கூடுதலாகப் பெற்றவர்களாவார்கள்.

    மேற்கூறிய அமைப்பில் பிறந்தவர்கள், கலியுகம் சார்ந்த ஆதிக்க அம்சம் பெற்றிருக்கும் சனீஸ்வரனால் தொழில், தொழில் நுட்பம், அறிவு, உழைப்பு, உலகியல் சார்ந்த இரு கூறு அனுபவங்கள் (இன்பம்-துன்பம்) ஆகியவற்றில் பிறரை விட முன்னணியில் இருப்பார்கள். துன்பத்தால் துவண்டு போனாலும் கூட ஒரு காலகட்டத்தில் நிச்சயம் வாழ்வில் தலையெடுத்து வெற்றிநடை போடுவார்கள்.

    உடலின் கால்சியம் சத்து, எலும்புகளின் வலிமை, கைகால் மூட்டுகள், மருத்துவச் சிகிச்சைக்குக் கட்டுப்படாத நோய்கள் ஆகியவற்றை சனி குறிப்பிட்டுக் காட்டும். சனியின் பலம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் தன் மக்களுடைய ஆதரவால் பதவிகளை அடைய இயலும். அது சிறிதோ பெரிதோ சனி பகவான் ஒருவருடைய பிறந்த காலத்தில் பலமாக அமைந்திருக்க வேண்டியது முக்கியம்.

    தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் இருக்கும் நிரந்தரமற்ற தன்மைகளையும், நோய் நொடிகளையும் சனி வார விரத பூஜா முறைகளால் நாம் தீர்க்க முடியும். மேலும் சனி திசை, ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகச் சனி, ஆகிய கோட்சாரக் கோளாறுகளை சனிக்கிழமை விரத முறைகள் நல்ல முறையில் தீர்த்து வைக்கும் சக்தி பெற்றவை ஆகும்.

    காரணம் தெரியாத தொழில் வகைச் சிக்கல்கள், ஒருவரது சகிப்புத் தன்மையையும் தாண்டிய தினசரி சோதனைக்களமாக அமைந்த பணியிடச் சங்கடங்கள், மருத்துவ உலகிற்கு சற்றும் பிடிகொடுக்காத நோய் நொடிகள் ஆகிய துன்ப துயரங்கள் அனைத்தும் சனியினால் வரக்கூடியவையாகும்.

    இவற்றை நாம் தீர்க்க அல்லது தவிர்க்க வேண்டுமானால், கர்மப் பதிவுகளின் வெளிப்பாட்டை அன்றாட அனுபவமாக வெளிப்படுத்தும் சனீஸ்வரரின் ஆதிக்க நாளான சனிக்கிழமையை நாம் விரத நாளாக கடைப்பிடிக்க வேண்டும்.

    மேலும், அந்த நாளில் ஆதரவற்ற முதியோர்களுக்கு பொருள் உதவி செய்யும் நாளாகவும், வயதில் மூத்த பெரியோர்களிடம் ஆசிகளைப் பெறும் நாளாகவும், உடல் ஊனமுற்ற ஆதரவற்றவர்களுக்கு வஸ்திர தானம் வழங்கும் நாளாகவும் கடைப் பிடிப்பது மிக முக்கியமானதாகும்.

    “சனி கெடுப்பின் யார் கொடுப்பார், சனி கொடுப்பின் யார் கெடுப்பார்”

    சனியை போன்று கொடுப்பவரும் இல்லை சனியை போன்று கெடுப்பவரும் இல்லை.
    விரதம் இருந்து கடவுளை வழிபாடு செய்து விட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார்.
    துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகி போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக பைரவர் விரத வழிபாடு கூறப்படுகிறது. விரதம் இருந்து கடவுளை வழிபாடு செய்து விட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள்.

    இந்த துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் விரத பூஜை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைரவர் விரத பூஜை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

    நமது ஜாதகத்தில் எந்த கிரகத்தால் தோஷம் உள்ளதோ அதற்குரிய பைரவரை விரதம் இருந்து வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும். நவக்கிரங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ விரத வழிபாடுகள் பரிகாரங்களாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.
    பிரதோஷ நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, சிவபெருமானை நினைத்து வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
    அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அது உலகையே அழிக்கும் வல்லமை கொண்டதாக இருந்தது. இதனால் உலக உயிர்கள் அனைத்தும் அஞ்சின. உடனே சிவபெருமான் தன்னுடைய தோழனான ஆலால சுந்தரனை அனுப்பி, அந்த விஷத்தை ஒரு பாத்திரத்தில் திரட்டி எடுத்துவர பணித்தார். அதன்படியே ஆலாலர் விஷத்தை எடுத்து வந்து நந்தியிடம் கொடுத்தார். நந்தி அதை வாங்கி சிவபெருமானிடம் கொடுத்தார்.

    சிவபெருமான் அந்த நஞ்சை வாங்கி உண்டு, ஆபத்தில் இருந்து உலக உயிர்களைக் காத்தார். ஆனால் அதற்கு தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் சிறு நன்றி கூட தெரிவிக்காமல், மீண்டும் அமிர்தம் கடைவதற்காக சென்றுவிட்டனர். அன்றைய தினம் ஏகாதசி ஆகும். மறுநாள் துவாதசி அன்று அமிர்தம் கிடைத்தது. அதை உண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் ஆடிப்பாடினர். மறுநாள் திரயோதசி அன்றுதான், தேவர்களுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. உலக ஆபத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்றிய ஈசனை நாம் மறந்துவிட்டோமே என்று. உடனடியாக அனைவரும் கயிலாயம் சென்று சிவபெருமானைச் சந்தித்து மன்னிப்பு வேண்டினர். இறைவனும் அவர்களை மன்னித்து, அன்று மாலை வேளையில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே ஆனந்த நடனம் காட்டியருளினார். அதுவே ‘பிரதோாஷ தினம்’ எனப்படுகிறது.

    இந்த பிரதோஷ விரதத்தைப் பற்றியும், அது தொடர்பான சில விஷயங்களையும் சிறு குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.

    மாதம் இரு பிரதோஷம்

    மாதந்தோறும் அமாவாசைக்கு பிறகு வரும் திரயோதசி தினம், ‘பட்ச பிரதோஷம்’ எனப்படும். அதே போல் பவுர்ணமிக்கு பிறகு வரும் திரயோதசி தினத்தை, ‘மாதப் பிரதோஷம்’ என்று குறிப்பிடுகிறார்கள். இப்படி மாதத்திற்கு இரண்டு பிரதோஷ தினங்கள் வரும். இந்த பிரதோஷ தினத்தின் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான பொழுதை, ‘பிரதோஷ வேளை’ என்று கூறுவார்கள். இந்த நேரத்தில்தான் சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். இந்த வேளையில் இறைவனை வழிபாடு செய்தால் அனைத்து நலன்கள் பெற வழிபிறக்கும்.

    மகா பிரதோஷம்

    சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் உயர்வாக போற்றப்படுகிறது. ஏனெனில் சிவபெருமான், நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் ஆடியது ஒரு சனிக்கிழமையில்தான் என்று புராணங்கள் சொல்கின்றன. அதிலும் பவுர்ணமிக்குப் பிறகான கிருஷ்ணபட்ச திரயோதசி சனிக்கிழமையில் வந்தால், அது மேலும் சிறப்பு பெறுகிறது. இதனை ‘மகா பிரதோஷம்’ என்கிறார்கள். சிவபெருமான் நடனம் புரிந்தது இதுபோன்றதொரு தேய்பிறை திரயோதசி தினத்தின் சனிக்கிழமையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதோஷ விரதம்

    பிரதோஷ நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, சிவபெருமானை நினைத்து வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அன்று பகல் முழுவதும் உணவருந்தாமல், நோன்பு இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். மாலை நேரத்தில் ஈசனை மனதால் நினைத்து வழிபட்டு, நந்திக்கும் ஈசனுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளை கண்குளிர காண வேண்டும். தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோவில்கள் திறந்து அந்தந்த பூஜைகள் நடைபெற்றாலும், வழிபாடு செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே வீட்டில் இருந்தபடியே பிரதோஷ வேளையில் இறைவனை நினைத்து வழிபடுங்கள்.

    நந்தி வழிபாடு

    சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கு, நந்தியின் துணையும் நமக்கு அவசியம். அந்த வகையில் நந்தியும் முக்கியத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார். பிரதோஷ வேளையில் நந்திக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுவதை பார்த்திருப்பீர்கள். பிரதோஷ வேளையில், நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில்தான் சிவபெருமான் நடனம் ஆடினார். இதனால் நந்திக்கு செய்யும் வழிபாடுகள் அனைத்தும் ஈசனுக்கே சென்றடைகின்றன. அபிஷேக, ஆராதனை என்று பெரிய அளவில் செய்யாவிட்டாலும், அருகம்புல் மாலை சூட்டி, அகல்விளக்கேற்றி வைத்தும் நந்தியை வழிபடலாம்.

    சோம சூத்திரப் பிரதட்சணம்

    கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், ஆலயத்தை இடமிருந்து வலமாக சுற்றி வருவார்கள். ஆனால் பிரதோஷ வேளையில், பிரதட்சணம் செய்வதற்கு வேறு ஒரு முறை இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த பிரதோஷ கால பிரதட்சணத்துக்கு புராணங்கள் கூறும் பெயர்தான், ‘சோம சூத்திரப் பிரதட்சணம்’ ஆகும். திருப்பாற்கடலைக் கடைந்த தேவர்களும், அசுரர்களும் மத்தாகிய மந்தார மலையை அசைப்பதற்காக, முன்னும்.. பின்னுமாக நகர்ந்து அதைச் சுழற்றினார்கள். அந்த நேரத்தில்தான் விஷம் வெளிப்பட்டது. அச்சம் கொண்ட தேவர்கள் அனைவரும் கயிலை சென்றனர். விஷமும் அவர்களை துரத்தி வந்தது. இதனால் ஈசன் வீற்றிருந்த மலையை முதலில் இடமிருந்து வலமாக சுற்றினர், தேவர்கள். ஆனால் விஷம் இப்போது வலமிருந்து இடமாக தேவர்களை மடக்க வந்தது. இதனால் தேவர்களும் வலமிருந்து இடமாக சுற்றினர். அப்படி விஷத்திற்கு பயந்து மாறி மாறி, வலம் வந்து இறைவனை அவர்கள் வழிபட்டனர். இதுவே ‘சோம சூத்திர பிரதட்சணம்’ எனப்படுகிறது.

    ஆதி பிரதோஷ தலம்

    ஆலகால விஷத்தை உண்ட ஈசனின் கழுத்து நீலநிறமாக மாறியது. அதைக் கண்டதும் நந்திக்கு மனம் தடுமாறியது. ‘ஆலகால விஷத்தை எடுத்து வந்த ஆலால சுந்தரருக்கும், அதை வாங்கி ஈசனிடம் கொடுத்த எனக்கும் எதுவும் நேரவில்லை. ஆனால் அந்த விஷம் ஈசனின் கழுத்தை நீலமாக்கிவிட்டது. அப்படியானால் சிவனை தாங்கும் நான் உயர்வானவனே’ என்று நினைத்தார். அவரது எண் ணத்தை சிவபெருமான் அறிந்துகொண்டார். மறுநொடியே சித்தம் கலங்கி, பித்துப் பிடித்தவர் போல குதிகுதியென்று குதிக்கத் தொடங்கினார், நந்தி பகவான்.

    நந்தியின் இந்நிலை கண்டு பார்வதி தேவி இரக்கம் கொண்டாள். அவள் ஈசனிடம் நந்தியை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டினாள். உடனே ஈசன், “நீயே அவனுக்கு உதவு” என்று கூறிவிட்டார். பார்வதிதேவி, நந்தியின் சித்த பிரமையை நீக்க, சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள குசலவபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வலம் வரச் செய்தாள். இதனால் தெளிவடைந்த நந்தி, அந்த ஆலயத்தில் ஈசனுக்கு பிரதோஷ விழா எடுத்தார். தன் இரு கொம்புகளுக்கிடையில் ஈசனை நடம் புரியச் செய்து நன்றி தெரிவித்தார். கோயம்பேட்டில் உள்ள குசலவபுரீஸ்வரரை பிரதோஷ காலத்தில் வணங்கினால், ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
    இன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடிந்தவர்கள் உபவாசித்தும் முடியாதவர்கள் முழு அரிசியால் ஆன உணவைத் தவிர்த்தும் விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழிபடலாம்.
    நம்மில் பலருக்கும் மாதமிருமுறை வரும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் இந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்வதில் விருப்பம் இருக்கலாம்.

    அதிகாலையில் எழுந்து நீராடி அந்த வாசுதேவனை வணங்க வேண்டும். நாள் முழுவதும், `ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்று உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இந்த நாளில் முடிந்த அளவுக்கு தான தருமங்கள் செய்ய வேண்டும். இன்று தானம் செய்யும் செல்வம் பல மடங்காகப் பெருகி நம்மிடம் வந்து சேரும். அந்த நாளின் இரவிலும் இறைச்சிந்தனையிலேயே நிறைந்திருக்க வேண்டும். மறுநாள் துவாதசி திதி தொடங்கும் வேளையில் பகவான் விஷ்ணுவை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி இந்த விரதத்தை முடிக்கலாம்.

    பீமசேனன், குருவின் வாக்கை வேதவாக்காகக் கொண்டு இந்த விரதத்தை மேற்கொள்ள முடிவு செய்தான். அவ்வாறே நிர்ஜலா ஏகாதசி விரதத்தையும் முடித்தான். அதனால் அவனுக்குப் புண்ணிய பலன்கள் கிடைத்தன. பீமனே உணவை விட்டு உபவாசித்த ஏகாதசி என்பதால் அந்த ஏகாதசிக்கு பீம ஏகாதசி என்றும் பாண்டவ ஏகாதசி என்றும் பெயர் உண்டானது.

    இன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடிந்தவர்கள் உபவாசித்தும் முடியாதவர்கள் முழு அரிசியால் ஆன உணவைத் தவிர்த்தும் விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழிபடலாம். நாள் முழுவதும் நாராயண நாமமோ அல்லது ராம நாமமோ சொல்லி ஜபம் செய்யலாம். இதன் மூலம் நம் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும். 
    மகாலட்சுமிக்கு உகந்த நாளான வரலட்சுமி விரத நாளில் சந்தான லட்சுமியை (கையில் குழந்தையைத் தாங்கி இருப்பவள்) விசேஷமாகப் படத்துடன் வணங்குங்கள்.
    மகாலட்சுமிக்கு உகந்த நாளான வரலட்சுமி விரத நாளில் சந்தான லட்சுமியை விரதம் இருந்து (கையில் குழந்தையைத் தாங்கி இருப்பவள்) விசேஷமாகப் படத்துடன் வணங்குங்கள். வசதி படைத்தவர்கள் சந்தான லட்சுமி மூல மந்திரத்தால் அக்னி வழிபாடும் செய்யலாம். 108 தடவை ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் சந்தான லட்சுமியே நம என்று ஜெபித்து விட்டு, வணங்கவும். வெறும் சாதத்தில் நெய் பருப்பிட்டு படைத்தபின் காக்கைக்கு ஒரு உருண்டை சாதம் வைத்து காக்கையை பித்ருக்களாக எண்ணி வணங்கவும்.

    அடுத்ததாக மாதவிலக்கு வந்து குளித்து விட்ட பின் அடுத்த நாள் காலை குளித்து விட்டு ஒரு மாங்கொத்தை எடுத்துப் பெண் தலையை மும்முறை சுற்றிவிட்டு வீட்டு நடுவாசலில் புதைத்து விடவும். அன்று முதல் 3 நாட்களுக்குத் தலைக்கு குளித்தபிறகு, அகில் கட்டையை பொடி செய்து பால்சாம்பிராணி தூளுடன் கலந்து, தணலில் சிறிது சிறிதாகப் போட்டு உடலைத் துணியால் மூடிக் கொண்டு ஜலதோஷத்திற்கு வேவு பிடிப்பது போல உடலில் புகையை வாங்கிக் கொள்ளவும்.

    இதனால் உடலில் உள்ள துர்நீர், துர்சக்திகள் வெளிவந்து மலட்டுத் தன்மை நீங்கிக் கர்ப்பம் தரித்து அழகான குழந்தை பிறக்கும். இச்செய்தி புலிப்பாணி முனிவரின் சித்த ரகசியப் பாடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    அஷ்டமி, ஆயில்யம், சுவாதி, பரணி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் மதிப்பும் பதவி உயர்வும் கிட்டும். செய்தொழிலில் லாபம் வரும்.
    1. நமது ஜாதகத்தில் அமைந்துள்ள அனைத்து கிரக தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது பைரவர் வழிபாடு.

    2. இறைவனின் அருவ வழிபாட்டுமுறை- சிவலிங்கம், இறைவனின் திருஉருவம் வழிபாட்டு முறை- ஸ்ரீகால பைரவ ஸ்வரூபம் எனப்படும்.

    3. இறைவன் கண்விழி திறந்தால் கால பைரவர் ஸ்வரூபம், இதுவே ஓங்காரம் தத்துவம்.

    4. கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் நிகழ்ந்ததாக சத்ருத்ர சம்ஹிதாவின் 8-வது அத்தியாயம் குறிப்பிடுகிறது.

    5. நமது வழிபாடுகளுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகிறார்.

    6. விரதம் இருந்து பைரவரை காலையில் வழிபட அனைத்து நோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பியது அனைத்தும் கிட்டும். மாலையில் வழிப்பட செய்த பாவங்கள் விலகும். இரவில் வழிபட முக்தி நிலை கிட்டும்.

    7. பைரவரை உபாசனை செய்து வழிபட்டால் அடுத்த பிறவி இல்லை.

    8. வாழ்க்கையில் பல தரப்பட்ட காரணங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய பரிகாரங்களாக கால பைரவர் விரத வழிபாடு முறைகளை வகுத்து தந்துள்ளனர்.

    9. ஜாதகத்தில் 19 வருடம் சனி திசை நடப்பில் இருந்தால் அந்த ஜாதகத்துக்குரியவர் சனிக்கிழமையில் ஸ்ரீபைரவர் விரதம் இருந்து வழிபாட்டை செய்து வர வேண்டும்.

    10. செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமையில் விரதம் இருந்து எமகண்டம் நேரத்தில் ஸ்ரீ பைரவருக்கு தயிர், தேங்காய், தேன் படைத்து, வில்வ, வன்னி செவ்வரளி மாலை அணிவித்து, வேக வைத்த கொள்ளும், சர்க்கரையும் கலந்து செய்த உருண்டை, கொள்ளுப்பொடி கலந்து அன்னம் விளாம்பழம் அலல்து வில்வப்பழம் படைத்து ஒரு பூசணியில் மிளகு தீபமும், ஒரு தேங்காயில் மிளகு தீபமும் ஏற்றி அர்ச்சனை செய்து வந்தால் கேது தசையின் பாதிப்புகள் நீங்கி நல்லது நடக்கும்.

    11. பிரதோஷம் அல்லது மாதசிவராத்திரி அன்று சிவலிங்கம் சுவாமிக்கு அல்லது விநாயகருக்கு மூன்று நெய்தீபம் ஏற்றி பைரவருக்கு தயிர் அன்னம், வடைமாலை செலுத்தி ஐந்து பழங்களில் மிளகு தீபம் ஏற்றி பஞ்சதீபம் வழிபட்டால் வாழ்க்கையிலும், வழக்குகளிலும் வெற்றி கிட்டும்.

    12. வலம்புரி சங்கில் ஐந்து வித எண்ணெய் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து முப்பது மிளகுத்தூள் செய்து தாமரை தண்டு திரியையும் சிவப்பு துணியையும் சேர்த்து திரியாக திரித்து 48 நாட்கள் பைரவருக்கு வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செவ்வாய், சனிக்கிழமையில் செய்து வந்தால் வாஸ்து தோஷம் நிவர்த்தியாகும்.

    13. வீட்டில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கணபதி, லட்சுமி, நவக்கிரக, மிருத்துஞ்சனம், தன்வந்திரி யாகங்களை செய்து கடைசியில் மஹா ருத்ர பைரவர் யாகம் செய்வது நல்லது.

    14. விரதம் இருந்து ஒன்பது தேய்பிறை அஷ்டமிகளில் பைரவருக்கு சிவப்பு நிற அரளிப்பூ அணிவித்து பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல மக்களையும், 16 செல்வங்களையும் பெறலாம்.

    15. அஷ்டமி, ஆயில்யம், சுவாதி, பரணி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் மதிப்பும் பதவி உயர்வும் கிட்டும். செய்தொழிலில் லாபம் வரும்.

    16. பித்ரு தோஷம் உள்ள ஒருவரின் குடும்பத்தில் தொடர்ந்து துன்பங்களும், கஷ்டங்களுமே ஏற்படும். அப்படிப்பட்ட ஜாதகர், ஸ்ரீபைரவர் பூஜை மூலம் பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்து வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் பெறலாம்.

    17. கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்கள் மாலையாக இருக்கிறது. எனவே கால பைரவரை விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் சர்ப்ப தோஷங்கள் விலகும்.

    18. விரதம் இருந்து பைரவருக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளில் தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. பூசணி, பறங்கி போன்ற பெரிய பழங்களில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு வசதி இல்லாதவர்கள் நாரத்தை எலுமிச்சை பழம் போன்ற சிறிய பழங்களில் கூட தீபம் ஏற்றலாம்.

    19. 64 கோத்திர ரிஷிகளும் பைரவருக்குள் அடங்கி இருக்கிறார்கள். எனவே பைரவர் சன்னிதானத்தில் அமாவாசையில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் ரிஷி தர்ப்பணம் செய்த பலன் சித்திக்கும்.

    20. விரதம் இருந்து கால பைரவரை இடைவிடாமல் தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு ஆகம தந்திர சாஸ்திரங்களில் உயர்ந்த நிலை கிடைக்கும்.
    சிதம்பரம் நடராஜரை நினைத்தவுடன் நினைவுக்கு வருவது அவரது திருநடனமும், அந்த நடனத்தை காட்டி அருளிய திருவாதிரை திருநாளும்தான். இத்தகைய சிறப்பு மிக்க திருவாதிரை தோன்றிய கதையை அறிந்து கொள்ளலாம்.
    சிதம்பரம் நடராஜரை நினைத்தவுடன் நினைவுக்கு வருவது அவரது திருநடனமும், அந்த நடனத்தை காட்டி அருளிய திருவாதிரை திருநாளும்தான். மார்கழி மாத திருவாதிரை தினத்தில் நடராஜரின், ஆருத்ரா தரிசனத்தை காண்பது மிகப்பெரும் பேறு ஆகும்.

    இத்தகைய சிறப்பு மிக்க திருவாதிரை திருநாளில் ‘களி’ என்பது முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ‘திருவாதிரையில் ஒரு வாய்க்களி’ என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மை உண்டாக்கும். திருவாதிரை தினத்தில் களிக்கும் தனி இடம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

    அத்தகைய சிறப்பான இடத்தை ‘களி’ பிடித்ததற்கான கதையை காணலாம். சிதம்பரத்தில் சேந்தனார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் பட்டினத்தாரிடம் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். சேந்தனாரும், அவரது மனைவியும் சிறந்த சிவபக்தர்களாக விளங்கினர். தினமும் உணவு உட்கொள்ளும் முன்பாக சிவதொண்டர்களுக்கு உணவிட்ட பின்னரே அவர்கள் இருவரும் சாப்பிடுவார்கள்.

    தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை உணர்ந்திருந்தனர் இருவரும். தவிர இயல்பாகவே, அந்த தம்பதியரிடம் ஈகை குணம் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் பட்டினத்தார் அனைத்தையும் துறந்து துறவு வாழ்வுக்கு திரும்பி விட்டார். இதனால் அவரது சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார் சேந்தனார்.

    ஆனால் தனக்கென்று எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. காலம் கழிக்க வேண்டுமே என்ன செய்வது?. விறகு வெட்டி அதனை விற்பனை செய்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தினர் சேந்தனார் தம்பதியர். அந்த ஏழ்மை நிலையிலும் சிவ தொண்டர் களுக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் நற்குணம் பெற்றவர்களாக அவர்கள் திகழ்ந்தனர்.

    ஒருநாள் கடுமையான மழையின் காரணமாக சேந்தனார், விற்பனைக்காக கொண்டு சென்ற விறகுகள் ஒன்று கூட விற்பனையாகவில்லை. விறகுகளை விற்றால்தானே காய்கறி வாங்கி வீட்டில் சமையல் செய்ய இயலும்; சிவதொண்டர்களுக்கு உணவளிக்க முடியும் என்ற கவலையுடன் வீடு திரும்பினார் சேந்தனார்.

    ஆனால் அவரது மனைவி வீட்டில் இருந்த உளுந்தை அரைத்து மாவாக்கி அதில் சுவையான களி சமைத்தார். பின்னர் தாங்கள் சமைத்த உணவுடன் சிவதொண்டர் யாராவது வருவார்களா? என்று காத்திருக்க தொடங்கினர். சேந்தனாருக்கு மனது ஒரு நிலையில் இல்லை. ‘இந்த மழைக்குள் யார் வந்து உணவு கேட்கப்போகிறார்கள்?, அப்படியே உணவுக்காக ஏதாவது ஒரு அடியார் வந்தாலும் கூட, அவருக்கு இந்த களி பிடிக்குமா? அவர்கள் இதனை சாப்பிடுவார்களா? என்ற மனக் கவலை தொற்றிக்கொண்டது.

    இதே மனநிலையுடன் தம்பதியர் சிறிது நேரம் காத்திருக்க தொடங்கினர். அப்போது ஒரு சிவ தொண்டர், சேந்தனாரின் வீட்டு வாசலில் மழைக்காக ஒதுங்கினார். பின்னர் அந்த அடியார், சேந்தனாரிடம், ‘ஐயா! உங்கள் வீட்டில் உண்பதற்கு ஏதாவது உணவு இருக்கிறதா? எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது’ என்று கேட்டார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த சேந்தனார், அந்த அடியாரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மனைவியிடம் களியை எடுத்து பரிமாறும்படி கூறினார். களியை சாப்பிட்ட அடியார் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்க தொடங்கி விட்டார். ‘அருமையான சுவை! இதே போல் சுவையுடன் நான் எந்த உணவும் சாப்பிட்டதில்லை.

    இந்த களி, அமிர்தத்தையும் மிஞ்சிடும் சுவையில் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது’ என்று கூறினார். இதனை கேட்டதும் மனவருத்தத்தில் இருந்த சேந்தனாருக்கும், அவரது மனைவிக்கும் ஆனந்தம் தாளவில்லை. அந்த அடியார் மேலும் பேசத் தொடங்கினார். ‘நீங்கள் சமைத்துள்ள இந்த களி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இன்னும் இருந்தால் கொடுங்கள்.

    நான் அடுத்த வேளைக்கு வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்’ என்று கூறினார். ‘சமைத்ததே கொஞ்சம்தான். நாம் சாப்பாட்டிற்கு என்ன செய்வது’ என்று சேந்தனார் எண்ணவில்லை. அடியாரின் ஆனந்தமே முக்கியம் என்று நினைத்து இருந்த அனைத்து களியையும் எடுத்து கொடுக்கும்படி மனைவியிடம் கூறினார்.

    கணவரின் சொல்படியே மீதமிருந்த களியை எடுத்து அடியாரிடம் கொடுத்து விட்டு அன்றைய தினம் பட்டினிக் கிடந்தனர் தம்பதியர். மறுதினம் காலை வழக்கம் போல், தில்லை நடராஜப் பெருமான் கோவில் சன்னிதியை திறக்க வந்த அர்ச்சகருக்கு, அங்கு கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்! நடராஜரின் வாயில் களி ஒட்டிக் கொண்டிருந்தது.

    கருவறையில் கொஞ்சம் சிதறியும் கிடந்தது. ‘யார் கருவறைக்குள் புகுந்தது. களியை யார் நடராஜரின் வாயில் வைத்தது’ என்று தெரியாமல் பதற்றம் அடைந்தார். இது பற்றி ஊர் முழுவதும் தெரியவந்தது. பின்னர் இந்த பிரச்சினையை அரசரிடம் கொண்டு சென்றனர். அவர்கள் கூறியதை கேட்ட அரசருக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை, மாறாக ஆச்சரியம் ஏற்பட்டது.

    ஏனெனில் முன்தினம் இரவு அரசனின் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘நீ தினமும் எனக்கு படைக்கும் உணவை விட, இன்று சேந்தனார் என்ற தொண்டன் கொடுத்த களி, அமிர்தம் போல் இருந்தது’ என்று கூறியது அரசனுக்கு நினைவுக்கு வந்தது. அதுவரை ஏதோ கனவு என்று நினைத்திருந்த அரசன் இப்போது, அது நிஜம் என்பதை உணர்ந்து கொண்டான்.

    உடனடியாக சேந்தனார் யார் என்றும், அவரை தேடி கண்டுபிடிக்கும்படியும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டான். ராஜாங்க பணியாளர்கள், சேந்தனாரை தேடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சிதம்பர நடராஜ பெருமானுக்கு தேர் திருவிழா நடைபெற்றது. விழாவில் அரசரும், மக்களும் கலந்துகொண்டனர்.

    சேந்தனாரும் அந்த விழாவில் கலந்துகொண்டிருந்தார் மக்களோடு மக்களாக. ஆனால் அவர்தான் சேந்தனார் என்பது யாருக்கும் தெரியாது. அப்போது முன்தினம் பெய்திருந்த மழையின் காரணமாக தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து கொண்டது. அனைவருக்கும் இது அபசகுனமாக தென்பட்டது. ஆனால் இறைவன் நடத்தும் விளையாட்டு யாருக்கும் புரியாது.

    எவ்வளவு முயன்றும் தேர் சக்கரத்தை மண்ணில் இருந்து விடுவிக்க இயலவில்லை. யானைகள் முட்டித் தள்ளிய போதும், தேரானது கடுகளவும் முன்னேறவில்லை. இதனால் அரசரும், மக்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர். அந்த நேரத்தில், ‘சேந்தனாரே! நீ பல்லாண்டு பாடு’ என்று ஒரு அசரீரி கேட்டது.

    அது இறைவனின் ஒலி என்று அனைவரும் அறிந்து கொண்டனர். அந்த குரலைக் கேட்ட சேந்தனாரோ, ‘இறைவா! அடியேன் என்ன பாடுவது? எனக்கு பதிகம் பாடத் தெரியாதே!’ என்ற பொருளில் தன்னை அறியாமலே பாடலை பாடிக் கொண்டிருந்தார். மேலும், ‘மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல’ என்று தொடங்கி, ‘பல்லாண்டு கூறுதுமே’ என்று பதிமூன்று பாடல்களை பாடி முடித்தார்.

    அந்த பாடல்களை கேட்டு மனமகிழ்ந்த இறைவன், மண்ணில் புதைந்திருந்த தேர் சக்கரத்தை விடுவித்தார். தேர் நகரத் தொடங்கியது; வெகு சுலபமாக நகரத் தொடங்கியது. தேரை பஞ்சு மூட்டையை இழுத்துச் செல்வது போல் இழுத்துச் சென்றனர் பக்தர்கள். அதுவரை நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மன்னன், சேந்தனாரிடம் நேராக சென்று, ‘தங்கள் வீட்டில் விருந்துண்டது அந்த ஈசன்தான்.

    என் கனவில் தோன்றிய இறைவன், நீங்கள் கொடுத்த களி அமிர்தத்தை விட சுவையாக இருந்ததாக கூறினார். நீங்கள் தான் சேந்தனார் என்பதையும் இறைவன் எனக்கு காண்பித்து கொடுத்து விட்டார்’ என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இறைவனே தன் வீட்டிற்கு வந்து களியை உண்டது கேட்டு சேந்தனாரின் உள்ளம் பூரித்துப் போய் இருந்தது.

    சேந்தனாரின் வீட்டிற்கு சிவதொண்டராக சென்று சிவபெருமான் முதன் முதலில் களி சாப்பிட்ட தினம் ‘திருவாதிரை திருநாள்’ ஆகும். ஆகையால் தான் திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை நடராஜருக்கு, களி நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

    நோன்பு இருப்பது எப்படி?

    திருவாதிரை தினத்தன்று காலையில் இறைவனை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். திருவாதிரையில் சிவபெருமான் தனது, பக்தர் சேந்தனாரால் அளிக்கப்பட்ட களியை உட்கொண்டதைப் போல, திருவாதிரை விரதம் இருப்பவர்கள் வீட்டில் களி செய்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, அதனை மட்டும் ஒரு வாய் உட்கொண்டு விரதத்தை தொடர வேண்டும்.

    மாலையில் திருவெம்பாவை பாடல்களை பாராயணம் செய்தபடி இறைவனை வேண்டுவது சிறப்பான நலன்களை அருளும். திருவாதிரையில் நோன்பு இருப்பவர்களுக்கு எந்த நோயும் அண்டாமல் இன்பமான வாழ்வு கிடைப்பதற்கு தில்லை அம்பலவாணர் அருள்புரிவார்.
    வீட்டில் எப்போதும் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கவும், செல்வம் பெருகவும் கடைபிடிக்க வேண்டிய விரதம் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்..
    வீட்டில் எப்போதும் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கவும், செல்வம் பெருகவும் கடைபிடிக்க வேண்டிய விரதம் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்..

    அதிகாலையில் எழுந்ததும் கொல்லைபுற வாசலை திறந்து வைத்து, அதன்பின் தலைவாசலைத் திறக்க வேண்டும்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும்.

    மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவம் விலகி பாக்கியங்களும், பொருளும் சந்தோஷமும் பெருகும்.

    பவுர்ணமி தோறும் விரதம் இருந்து மாலையில் குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து பால் பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து வணங்கிய பின்னரே, இரவு உணவு உட்கொள்ள வேண்டும்.

    வைரம் வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்கு சீராக அளிக்கப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களை தன் காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கு கூட அன்பளிப்பாக கொடுக்கவோ கூடாது. தன் காலத்திற்கு பின்னரே அவர்களுக்கு சேர வேண்டும்.
    சாய்பாபாவிற்கு வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்ய உகந்த நாளாகும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    சாய்பாபாவிற்கு வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்ய உகந்த நாளாகும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

    ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும். ஒன்பது வியாழக்கிழமைகளும் சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வரவும். இந்த விரதம் ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வியாழக்கிழமை சாய்பாபா படத்திற்கு பூஜை செய்யவும்.

    மஞ்சள் நிற மலர்கள் (அல்லது) மாலை அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம் அர்ப்பணம் செய்து, மக்களுக்கு வழங்கி சாய்பாபாவை தியானம் செய்யவும். சாய் விரத கதை, சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி இவற்றைப் பக்தியுடன் படிக்கவும்.

    ஒன்பதாவது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். ஒன்பதாவது வியாழக்கிழமை இந்த பாபா தொடர்பான புத்தகங்களை இலவசமாக 5, 11, 21 என்ற எண்ணிக்கையில் பலருக்கு வழங்கவும்.

    9-வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப்பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும்.

    சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, சாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம். 9-வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும்.

    இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். 
    துர்க்கை அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் அனைத்து விதமான தோஷங்களும் தீரும் என்பார்கள் நம் முன்னோர்கள். ஒவ்வொரு கிழமையிலும் துர்க்கை அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்யும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    ராகு - கேது பெயர்ச்சியால் சில பிரச்னைகள் வருமானால் அவற்றை நிவர்த்தி செய்துகொள்ள துர்க்கை அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் போதுமானது என்பார்கள் நம் முன்னோர்கள். ஒவ்வொரு கிழமையிலும் அவ்வாறு விரதம் இருந்து வழிபாடு செய்யும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    ஞாயிற்றுக்கிழமையில் விரதம் இருந்து துர்க்கை சந்நதியில் மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் புதிய வெள்ளைத் துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

    திங்கட்கிழமையில் விரதம் இருந்து காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும், வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

    செவ்வாய்கிழமையில் விரதம் இருந்து மாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்று நம்பிக்கை.

    புதன்கிழமையில் விரதம் இருந்து மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரி செய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும்; ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பது நம்பிக்கை.

    வியாழக்கிழமையில் விரதம் இருந்து மதியம் 1.30 மணி முதல் 3 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம்பழ சாதம் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் துர்க்கையை வழிபட மற்ற நாட்களைவிட மிக ஏற்ற காலம். எலுமிச்சம் பழத்தைப் பிழிந்துவிட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

    சனிக்கிழமை விரதம் இருந்து காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.

    மேலே குறிப்பிட்ட நேரங்கள் அந்தந்த கிழமையின் ராகுகாலமாகும்.
    பஞ்சமி திதியில் விரதம் இருந்து வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.
    சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை.

    சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    பஞ்சமி திதியில் விரதம் இருந்து வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.

    வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து மகிழ்ந்து அருள்வாளாம் அன்னை!

    மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு. சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி.

    மிளகும் சீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாகச் செய்து விரதம் இருந்து வராஹி தேவியை வணங்கலாம்.
    ×