search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவலிங்கம்
    X
    சிவலிங்கம்

    சிறப்பு வாய்ந்த பிரதோஷ விரதமும்.. சில நிகழ்வுகளும்..

    பிரதோஷ நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, சிவபெருமானை நினைத்து வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
    அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அது உலகையே அழிக்கும் வல்லமை கொண்டதாக இருந்தது. இதனால் உலக உயிர்கள் அனைத்தும் அஞ்சின. உடனே சிவபெருமான் தன்னுடைய தோழனான ஆலால சுந்தரனை அனுப்பி, அந்த விஷத்தை ஒரு பாத்திரத்தில் திரட்டி எடுத்துவர பணித்தார். அதன்படியே ஆலாலர் விஷத்தை எடுத்து வந்து நந்தியிடம் கொடுத்தார். நந்தி அதை வாங்கி சிவபெருமானிடம் கொடுத்தார்.

    சிவபெருமான் அந்த நஞ்சை வாங்கி உண்டு, ஆபத்தில் இருந்து உலக உயிர்களைக் காத்தார். ஆனால் அதற்கு தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் சிறு நன்றி கூட தெரிவிக்காமல், மீண்டும் அமிர்தம் கடைவதற்காக சென்றுவிட்டனர். அன்றைய தினம் ஏகாதசி ஆகும். மறுநாள் துவாதசி அன்று அமிர்தம் கிடைத்தது. அதை உண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் ஆடிப்பாடினர். மறுநாள் திரயோதசி அன்றுதான், தேவர்களுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. உலக ஆபத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்றிய ஈசனை நாம் மறந்துவிட்டோமே என்று. உடனடியாக அனைவரும் கயிலாயம் சென்று சிவபெருமானைச் சந்தித்து மன்னிப்பு வேண்டினர். இறைவனும் அவர்களை மன்னித்து, அன்று மாலை வேளையில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே ஆனந்த நடனம் காட்டியருளினார். அதுவே ‘பிரதோாஷ தினம்’ எனப்படுகிறது.

    இந்த பிரதோஷ விரதத்தைப் பற்றியும், அது தொடர்பான சில விஷயங்களையும் சிறு குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.

    மாதம் இரு பிரதோஷம்

    மாதந்தோறும் அமாவாசைக்கு பிறகு வரும் திரயோதசி தினம், ‘பட்ச பிரதோஷம்’ எனப்படும். அதே போல் பவுர்ணமிக்கு பிறகு வரும் திரயோதசி தினத்தை, ‘மாதப் பிரதோஷம்’ என்று குறிப்பிடுகிறார்கள். இப்படி மாதத்திற்கு இரண்டு பிரதோஷ தினங்கள் வரும். இந்த பிரதோஷ தினத்தின் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான பொழுதை, ‘பிரதோஷ வேளை’ என்று கூறுவார்கள். இந்த நேரத்தில்தான் சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். இந்த வேளையில் இறைவனை வழிபாடு செய்தால் அனைத்து நலன்கள் பெற வழிபிறக்கும்.

    மகா பிரதோஷம்

    சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் உயர்வாக போற்றப்படுகிறது. ஏனெனில் சிவபெருமான், நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் ஆடியது ஒரு சனிக்கிழமையில்தான் என்று புராணங்கள் சொல்கின்றன. அதிலும் பவுர்ணமிக்குப் பிறகான கிருஷ்ணபட்ச திரயோதசி சனிக்கிழமையில் வந்தால், அது மேலும் சிறப்பு பெறுகிறது. இதனை ‘மகா பிரதோஷம்’ என்கிறார்கள். சிவபெருமான் நடனம் புரிந்தது இதுபோன்றதொரு தேய்பிறை திரயோதசி தினத்தின் சனிக்கிழமையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதோஷ விரதம்

    பிரதோஷ நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, சிவபெருமானை நினைத்து வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அன்று பகல் முழுவதும் உணவருந்தாமல், நோன்பு இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். மாலை நேரத்தில் ஈசனை மனதால் நினைத்து வழிபட்டு, நந்திக்கும் ஈசனுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளை கண்குளிர காண வேண்டும். தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோவில்கள் திறந்து அந்தந்த பூஜைகள் நடைபெற்றாலும், வழிபாடு செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே வீட்டில் இருந்தபடியே பிரதோஷ வேளையில் இறைவனை நினைத்து வழிபடுங்கள்.

    நந்தி வழிபாடு

    சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கு, நந்தியின் துணையும் நமக்கு அவசியம். அந்த வகையில் நந்தியும் முக்கியத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார். பிரதோஷ வேளையில் நந்திக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுவதை பார்த்திருப்பீர்கள். பிரதோஷ வேளையில், நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில்தான் சிவபெருமான் நடனம் ஆடினார். இதனால் நந்திக்கு செய்யும் வழிபாடுகள் அனைத்தும் ஈசனுக்கே சென்றடைகின்றன. அபிஷேக, ஆராதனை என்று பெரிய அளவில் செய்யாவிட்டாலும், அருகம்புல் மாலை சூட்டி, அகல்விளக்கேற்றி வைத்தும் நந்தியை வழிபடலாம்.

    சோம சூத்திரப் பிரதட்சணம்

    கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், ஆலயத்தை இடமிருந்து வலமாக சுற்றி வருவார்கள். ஆனால் பிரதோஷ வேளையில், பிரதட்சணம் செய்வதற்கு வேறு ஒரு முறை இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த பிரதோஷ கால பிரதட்சணத்துக்கு புராணங்கள் கூறும் பெயர்தான், ‘சோம சூத்திரப் பிரதட்சணம்’ ஆகும். திருப்பாற்கடலைக் கடைந்த தேவர்களும், அசுரர்களும் மத்தாகிய மந்தார மலையை அசைப்பதற்காக, முன்னும்.. பின்னுமாக நகர்ந்து அதைச் சுழற்றினார்கள். அந்த நேரத்தில்தான் விஷம் வெளிப்பட்டது. அச்சம் கொண்ட தேவர்கள் அனைவரும் கயிலை சென்றனர். விஷமும் அவர்களை துரத்தி வந்தது. இதனால் ஈசன் வீற்றிருந்த மலையை முதலில் இடமிருந்து வலமாக சுற்றினர், தேவர்கள். ஆனால் விஷம் இப்போது வலமிருந்து இடமாக தேவர்களை மடக்க வந்தது. இதனால் தேவர்களும் வலமிருந்து இடமாக சுற்றினர். அப்படி விஷத்திற்கு பயந்து மாறி மாறி, வலம் வந்து இறைவனை அவர்கள் வழிபட்டனர். இதுவே ‘சோம சூத்திர பிரதட்சணம்’ எனப்படுகிறது.

    ஆதி பிரதோஷ தலம்

    ஆலகால விஷத்தை உண்ட ஈசனின் கழுத்து நீலநிறமாக மாறியது. அதைக் கண்டதும் நந்திக்கு மனம் தடுமாறியது. ‘ஆலகால விஷத்தை எடுத்து வந்த ஆலால சுந்தரருக்கும், அதை வாங்கி ஈசனிடம் கொடுத்த எனக்கும் எதுவும் நேரவில்லை. ஆனால் அந்த விஷம் ஈசனின் கழுத்தை நீலமாக்கிவிட்டது. அப்படியானால் சிவனை தாங்கும் நான் உயர்வானவனே’ என்று நினைத்தார். அவரது எண் ணத்தை சிவபெருமான் அறிந்துகொண்டார். மறுநொடியே சித்தம் கலங்கி, பித்துப் பிடித்தவர் போல குதிகுதியென்று குதிக்கத் தொடங்கினார், நந்தி பகவான்.

    நந்தியின் இந்நிலை கண்டு பார்வதி தேவி இரக்கம் கொண்டாள். அவள் ஈசனிடம் நந்தியை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டினாள். உடனே ஈசன், “நீயே அவனுக்கு உதவு” என்று கூறிவிட்டார். பார்வதிதேவி, நந்தியின் சித்த பிரமையை நீக்க, சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள குசலவபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வலம் வரச் செய்தாள். இதனால் தெளிவடைந்த நந்தி, அந்த ஆலயத்தில் ஈசனுக்கு பிரதோஷ விழா எடுத்தார். தன் இரு கொம்புகளுக்கிடையில் ஈசனை நடம் புரியச் செய்து நன்றி தெரிவித்தார். கோயம்பேட்டில் உள்ள குசலவபுரீஸ்வரரை பிரதோஷ காலத்தில் வணங்கினால், ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
    Next Story
    ×