என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம்.
    • ஆலிலை வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.

    தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார்.

    பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள். எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான்.

    மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும்.

    ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான்.

    ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய்.

    குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

    • வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.
    • விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை சந்திரனின் நான்காவது திதியை சதுர்த்தி என்றும், பவுர்ணமிக்குப் பிறகு குறைந்து வரும் சந்திரனின் நான்காவது திதியை சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைப்பது வழக்கம்.

    இதில் ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு கூடுதல் சிறப்பு வாய்ந்தது. இதை மகா சங்கட ஹர சதுர்த்தி என்பார்கள். அதாவது விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

    ஒரு வருடத்தில் 12 சங்கடஹர சதுர்த்திகள் வரும். இவை அனைத்திலும் விரதம் இருந்து விநாயகரை வழிபட முடியாமல் போனாலும் மகா சங்கடஹர சதுர்த்தி அன்று மட்டும் விரதம் இருந்து விநாயகரை மனதார வழிபட்டால், வருடம் முழுவதும் வரும் 12 சங்கடஹர சதுர்த்திகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். நினைத்த காரியங்களை நடத்தி வைக்கும் அற்புத விரதம் இது ஆகும்.

    புதிதாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கத் தொடங்குபவர்கள் மகா சங்கடஹர சதுர்த்தியில் தங்களின் விரதத்தை துவங்கலாம். அதோடு மகா சங்கடஹர சதுர்த்தி அன்று ஒரு குறிப்பிட்ட முறையில் விநாயகரை வழிபட்டால் வீட்டில் எப்படிப்பட்ட கஷ்டம் இருந்தாலும் அது விலகி விடும்.

    இந்த ஆண்டு மகாசங்கடஹர சதுர்த்தி இன்று (வியாழக்கிழமை) வருகிறது. இன்றைய தினம் மாலை 6.14 மணிக்கு பிறகே சதுர்த்தி திதி தொடங்குகிறது. மறுநாள் பகல் 3.48 மணி வரை மட்டுமே சதுர்த்தி திதி உள்ளது. இதனால் இன்றே மகாசங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினையும், விநாயகர் வழிபாட்டினையும் மேற்கொள்ளலாம்.

    பொதுவாக சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினை மாலையில் தான் மேற்கொள்ள வேண்டும். விநாயகரை வழிபட்ட பிறகு, சந்திரனை தரிசனம் செய்த பிறகு தான் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதி.


    இன்று அதிகாலையில் எழுந்து பூஜை அறையில் உள்ள விநாயகரை அலங்கரித்து, அருகம்புல் சாத்தி, விளக்கேற்றி விரதத்தை துவக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் பால்,பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

    அதுவும் முடியாதவர்கள் எளிமையான உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். மாலையில் வீட்டிலோ அல்லது விநாயகர் கோவிலுக்கு சென்றோ விநாயகர் வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

    விநாயகருக்கு விருப்பமான சுண்டல், கொழுக்கட்டை, மோதகம், பிள்ளையார் உருண்டை போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். விநாயகருக்கு கொழுக்கட்டை செய்யும் போதே உங்களின் வேண்டுதல்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

    பூஜை முடிந்த பிறகு அதை வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கோ அல்லது கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு வருபவர்களுக்கோ பிரசாதமாக வழங்கலாம். மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு உரிய விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டகம், விநாயகர் அஷ்டோத்திரம் போன்ற மந்திரங்களை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

    ஒரு ரூபாய் நாணயத்தை வீட்டில் உள்ள விநாயகரின் பாதத்தில் வைத்து மனதார உங்களின் வேண்டுதல்களை சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அந்த நாணயத்தை விநாயகர் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

    அடுத்த ஆண்டு மகா சங்கடஹர சதுர்த்தி நாளுக்குள் வேண்டுதல்கள் முழுமையாக நிறைவேறி, பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டால், இதேபோல் அடுத்த ஆண்டும் மகாசங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.

    இப்படி நீங்கள் வழிபட்டால் அடுத்த 11 நாட்களில் உங்களின் வேண்டுதல் நிறைவேறத் தொடங்குவதற்கான அறிகுறி தெரியத் தொடங்கும். மகா சங்கடஹர சதுர்த்தி தொடங்கி, ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விரதம் இருந்து விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.

    ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். சனி தோஷம், ராகு-கேது தோஷம், சனியால் ஏற்படும் பிரச்சனைகள், சர்ப தோஷத்தால் திருமணம் போன்றவற்றில் தடை உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.


    அதேபோல் சங்கடஹர சதுர்த்தி தோறும் விநாயகருக்கு மாலை வாங்கி சாற்றி, அந்த மாலையை வாங்கி வந்து வீட்டின் நிலைப்படியில் மாட்டி வைத்தால் வீடு வாங்க முடியாமல் தவிப்பவர்கள், வீட்டில் பல விதமான பிரச்சனைகளை அனுபவிப்பவர்கள், பலவிதமான தடை, தோல்விகளை சந்திப்பவர்கள் ஆகியோருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

    விநாயகருக்கு அணிவிக்கப்படும் அருகம்புல்லை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடுவதால் தீய சக்திகளால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.

    ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகருக்கு விரதம் இருக்க முடியாதவர்கள் அல்லது மாதந்தோறும் வரும் சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபட்டு, பூஜை செய்ய முடியாதவர்கள் இன்று மகா சங்கடஹர சதுர்த்தி அன்று, விரதம் இருந்து வழிபட்டால், ஓராண்டு முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


    இந்த சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது. ஜாதக ரீதியாக சந்திர தோஷம் இருந்தால் கூட நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருக்க முடியாதவர்கள், சந்திரன் உதயமாகும் நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தமனம் ஆகி சந்திரன் தோன்றிய பிறகு விநாயகரை வழிபடுவது எல்லா விதமான தோஷங்களையும் போக்கும். வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.

    • இன்று சுபமுகூர்த்த தினம். மகா சங்கட ஹர சதுர்த்தி.
    • வாஸ்து நாள் (காலை 7.23 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று).

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-6 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை இரவு 6.14 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: உத்திரட்டாதி பின்னிரவு 3.13 மணி வரை பிறகு ரேவதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். மகா சங்கடஹர சதுர்த்தி. வாஸ்து நாள் (காலை 7.23 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று). சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-சாந்தம்

    கடகம்-களிப்பு

    சிம்மம்-பெருமை

    கன்னி-வெற்றி

    துலாம்- மகிழ்ச்சி

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- கீர்த்தி

    மகரம்-வரவு

    கும்பம்-வாழ்வு

    மீனம்-சிறப்பு

    • பரமசிவம் கட்டளையிட்டபடி வேதகிரியில் தம் மூக்குகளால் கீறினர். இதனால் தடாகம் உண்டாகியது.
    • அதில் மூழ்கி மலையை வலம் வந்து இறைவனைப் பூசித்துக் கொண்டிருக்கலாயினர்.

    கலியுகம் தொடங்கியது முதல் திருக்கழுக்குன்றத்தில் பூடா, விருத்தா என்கிற இருமுனிவர் நெடுங்காலம் தவம் செய்தார்கள். இளையவனும் மூத்தவனும் அரிய தவஞ்செய்த அளவில் சிவபெருமான் திருவுளம் மகிழ்ந்து, ''உங்களுக்கு நம்முடைய திருமேனியருள் செய்தோம். ஒருகற்ப காலம் அந்தப் பதவியில் இருங்கள்.

    அவ்வாறிருந்தால் பிறகு முத்தியையும் அளிக்கிறோம்'' என்றருளிச் செய்தார்.

    அவர்கள் ''அதுவரைக்கும் ஐம்பொறிகள் நன்மார்க்கத்தில் இருப்பதை யார் கண்டார்கள்? நிருமல மூர்த்தியே! இப்போதே எங்களுக்கு முத்திப்பேற்றினை அளித்தருள வேண்டும்'' என்றார்கள்.

    சிவபெருமான் ''நம்முடைய திருமேனிபோல் உருவந்தரித் திருத்தலையும் விரும்பாதவர்களாய், நம்முடைய திருவருளால் உரைத்த ஏவலையும் ஏற்றுக் கொள்ளாது நீக்கி விட்டீர்கள். ஆதலால், நீங்கள் கழுகுருவமாகப் பிறந்து கடல் சூழ்ந்த உலகில் திரியுங்கள்'' என்று சபித்தார்.

    அந்த இருவரும் பயந்து 'எங்கள் குறையைப் பொறுத்தருளும்'' எனப் பணிந்து, ''கழுகு உருவமாகப் பிறந்தாலும் உம்முடைய திருவடித் தொண்டில் மயக்கம் இல்லாமையும் இந்தச் சாபத்தின் முடிவும் கட்டளையிட்டருள வேண்டும்'' என்று விண்ணப்பித்தனர்.

    சிவபெருமான் ''நீங்கள் காசிபமுனிவரிடத்தில் கழுகுகளாய்ப் பிறந்து, உங்களுடைய மூக்குகளால் இந்த மலையினைக் கீறினால் அதில் ஆகாய கங்கை அலைவீச உண்டாகும்.

    அந்தத் தீர்த்தத்தில் முழுகி விருப்பத்துடன் எம்மைப் பூசியுங்கள். அவ்வாறு பூசித்துக் கலியுக முடிவில் முத்தியடையுங்கள்'' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    இவ்வாறு அருளியவுடன் அவ்விருவரும் கை குவித்துத் தொழுது, காசிப முனிவரிடத்தில் போய் சம்பு & ஆதி என்ற பெயருடன் கழுகுகளாய்ப் பிறந்து, பரமசிவம் கட்டளையிட்டபடி வேதகிரியில் தம் மூக்குகளால் கீறினர். இதனால் தடாகம் உண்டாகியது. அதில் மூழ்கி மலையை வலம் வந்து இறைவனைப் பூசித்துக் கொண்டிருக்கலாயினர்.

    கழுகு முனிவர்கள் முறையே பூசித்துக் கொண்டு வருவதால் இப்பதிக்கு திருக்கழுக்குன்றம் எனும் பெயருண்டாகியது.

    • அது கேட்ட இளையவன் ‘‘சக்தியே பெரிது’’ என்று கூறினான். இதனால், இவர்களுக்குள் ஒழியாத பகையுண்டாகியது.
    • சிவபெருமான் கூறியும் இருவரும் ஒருவரோடொருவர் பொறுமை இழந்து சத்தியே பெரிதென்றும் சிவமே பெரிதென்றும் வாதிட்டனர்.

    துவாபரயுகத்தில், பார்வதி தேவியாருக்கு ஒருபாகம் தந்தருளிய பரமசிவம் வீற்றிருந்தருளுகின்ற உருத்திரகோடியில் சம்புகுத்தன், மாகுத்தன் எனும் பெயரினையுடைய இருவர் நெடுங்காலம் தவஞ்செய்து கொண்டிருந்தார்கள். இரண்டு உடலுக்கு ஓருயிர்போல் இருந்த இவர்களில் மூத்தவன் ''சிவமே பெரிது'' என்றான்.

    அது கேட்ட இளையவன் ''சக்தியே பெரிது'' என்று கூறினான். இதனால், இவர்களுக்குள் ஒழியாத பகையுண்டாகியது.

    சிவபெருமான் கூறியும் இருவரும் ஒருவரோடொருவர் பொறுமை இழந்து சத்தியே பெரிதென்றும் சிவமே பெரிதென்றும் வாதிட்டனர்.

    அவ்விருவரின் நிலையைக் கண்டு பரமசிவமும் பராசத்தியும் ஒருவர் முகத்தை யருவர் பார்த்துப் புன்சிரிப்புக் கொண்டனர்.

    ஒளியும் மாணிக்கமும், கடலும் அலையும், அமுதமும் சுவையும், எள்ளும் எண்ணெய்யும், பொன்னும் அணியும் போல் பிரியாமலிருக்கிற தங்களைப் பிரித்துரைத்த அவர்களை சத்தி பெரிதென்றவனைச் சத்தியும், சிவம் பெரிதென்றவனைச் சிவமும் நோக்கி ''நீங்கள் இருவரும் கழுகுகளாய்ச் சுழலக் கடவீர்கள்'' என்று சபித்தார்கள்.

    அவர்கள் இருவரும் அப்பொழுதே கழுகுகளாகி நடுநடுங்கி ''அய்யனே! எங்கள் குற்றங்களைப் பொறுத்தருளி, இக்கழுகுருவம் நீங்கும் இடமும் காலமும் கட்டளையிட்டருள வேண்டும்'' என்று விண்ணப்பம் செய்ய ''இந்த யுகம் நீங்கும் போது அந்த வரம் உங்களுக்குத் தந்தருளுகிறோம். அப்படித் தருகிறவரைக்கும் தவத்தையும் பூசையையும் நீங்கள் இவ்வேதகிரித் தலத்தில் செய்யுங்கள்'' என்று கட்டளையிட்டருளினர்.

    அவ்விருவரும் அவ்வாறே தவத்தையும் பூசையையும் அன்புடன் செய்து பழைய உருவம் பெற்றுய்ந்தார்கள்.

    • அவர்கள் தங்களுக்குள், பலத்தால் நான் பெரியவன் நான் பெரியவனென்று பகைத்தனர்.
    • விண்மீன்களும் கதிர் மண்டலத்துப் பச்சைக் குதிரைகளும் பறந்து செல்கின்றவர்களைக் கண்டு மனங்கலங்கிக் கண்களை மூடின.

    திரேதாயுகத்தில் ஒளிபொருந்திய திங்களைப் போன்ற வெண்மை நிறம் உடைய கழுகுகளுக்கு இறைவர்களாகிய சம்பாதி, சடாயு என்னும் கழுகுகள் மிகுந்த பலத்துடன் விளங்கி இருந்தனர்.

    அவர்கள் தங்களுக்குள், பலத்தால் நான் பெரியவன் நான் பெரியவனென்று பகைத்தனர்.

    மூத்த சம்பாதியும் பலம் பொருந்திய சடாயு என்கிற தம்பியும் 'கதிரவனுக்கு மேல் போய் திரும்புவோம். திரும்பும்போது பார்க்கின்றவர்களுக்கு நம் உடல்பலம் தெரியும்' என்று சபதம் செய்து முனிவர் கூட்டத்தைச் சான்று வைத்து மேருகிரியினின்று எண்ணில் காலம் வானையொட்டிப் பறக்கலாயினர்.

    அளவிலாக் காதங்கள் இவர்கள் பறத்தலைக்கண்டு தேவர்களும் முனிவர்களும் மயங்கி ஓடினார்கள்.

    அவர்களுடைய சிறகுக் காற்றினால் வித்தியாதரர்கள் சித்தர்கள் கின்னரர்கள் என்னும் இவர்கள் செல்கின்ற அளவற்ற தேர்களும் விமானங்களும் வழி தப்பி ஓடின.

    விண்மீன்களும் கதிர் மண்டலத்துப் பச்சைக் குதிரைகளும் பறந்து செல்கின்றவர்களைக் கண்டு மனங்கலங்கிக் கண்களை மூடின.

    இவர்கள் இவ்வாறு கதிரவன் மண்டலம் நாடி வருவதைக் கண்ட கதிரவன் மண்டலத்திலிருக்கும் கணங்கள் பயந்து ஓடி கதிரவனிடம் கூறினர். இவ்வாறு இவர்கள் கதிரவன் மண்டலத்தில் புகுந்த அளவில் அங்கிருந்த வாய்மையில் சிறந்த அஞ்சனன் என்னும் முனிவன் அக்கழுகுகளை நோக்கி, ''நீங்கள் ஆயிரங் கதிர்களையுடைய கதிரவன் கோவிலை அணுகும்படி செல்கிறீர்கள்.

    ஆதலால் நீங்கள் தீயை எடுத்து ஆடையில் அடக்கிக் கொள்ளவும் எண்ணங் கொள்வீர்கள். தம்மில் தகுதியுடையவர்களுடைய வெம்மையைக் கண்டஞ்சாதவர்கள் இப்பிறப்பில் மட்டும் அன்றி மறுப்பிறப்பிலும் துன்புறுவார்கள்.

    நெறியில் செல்லுங் கதிரவனைத் தடுத்த தன்மையால், உங்கள் தருக்கை உங்கள் தீமையே அழித்துவிடும்.

    கதிரவனுடைய நெருப்பினால் நீங்கள் இருவரும் மனம் வெந்து மேனி கரிந்து வெந்து ஒன்றாய் 'விழக்கடவீர்' என்று சாபம் மொழிந்தார்.

    முன் சென்றவனாகிய சம்பாதி, சிறகு வெந்தனன், அது வெந்தபின் சிறகு எல்லாம் சிந்திப்போய்ப் பூமியில் விழுந்தான்.

    பின்வந்த தம்பியாகிய சடாயு, ஒளிபொருந்திய சிறகு வேகாதவனாய்ப் பொலிவுள்ள உடல் பொரிந்து துன்பத்துடன் அழுதான்.

    இவ்வாறு விழுந்த இருவரும் வருந்தி வானில் இருக்கும் அம்முனிவனை அழைத்து 'வெந்த இக்குறை நீங்கும் முறைமையை அய்யனே! சொல்லும்' என்று வேண்டினர்.

    பெரிய வேதாசலத்தில் வீற்றிருக்கும் பரமசிவத்தைப் பூசித்தால் இந்தக் குறை அறிவில்லாதவர்களாகிய உங்களை விட்டோடும்' என்று அவர்களை அம்முனிவர் அனுப்பினார்.

    அந்த முனிவர் கூறிய வண்ணம் சம்பாதி, சடாயுளாகிய இருவரும் திருக்கழுக்குன்றம் வந்து அங்கு இருக்கும் தடாக நீராலும் மலர்களாலும் இறைவனைப் பூசித்தனர்.

    அந்தத் திரேதாயுகத்தில் அவ்விருவருக்கும் பரமசிவம் தரிசனம் கொடுத்தருளி அவர்கள் உடலில் பொருந்திய வெப்பத்தைத் தணித்தருளிப் பழைய பலம் உண்டாகக் கிருபை செய்து, அதன் பின்பு சம்பாதியை நோக்கி ''சீதையைத் தேட ராமன் விடுக்கும் தூதர்களால் உனக்குச் சிறையுண்டாகும்'' என்றருள் செய்தார்.

    அத்திருவருளைப் பெற்றுக் கொண்டு அவர்கள் சென்றார்கள்.

    • சான்மலி என்னும் நாட்டில் வாழ்ந்த விருத்தசிரவரன் என்கிற முனிவருக்கு சண்டன், பிரசண்டன் என்கிற இரு மைந்தர்கள் தோன்றினர்.
    • அவ்விருவரும் முன்செய்த தீவினைத் தொடர்பால் கழுகுப் பறவைகளின் உருவம் பெற்றனர்.

    சான்மலி என்னும் நாட்டில் வாழ்ந்த விருத்தசிரவரன் என்கிற முனிவருக்கு சண்டன், பிரசண்டன் என்கிற இரு மைந்தர்கள் தோன்றினர்.

    அவ்விருவரும் முன்செய்த தீவினைத் தொடர்பால் கழுகுப் பறவைகளின் உருவம் பெற்றனர்.

    அவர்களை விருத்தசிரவரன் ''நீங்கள் பறவைகளுக்கு அரசாக விளங்கி இருங்கள்'' என்று கூறினான்.

    அவர்கள் ''எங்களுக்கு அரசாட்சி செய்வதிலும் இல்லற வாழ்விலும் விருப்பம் இல்லை.

    ஞான முறையால், பரமசிவனை அடையத்தக்க முத்திப்பேற்றினைச் சொல்லுங்கள்'' என்று வேண்டினர்.

    விருத்தசிரவரன் மகிழ்ந்து, சிவபூசை முறையினை உணர்த்தி ''திருக்கழுக்குன்றம் சென்று பரமசிவத்தை வணங்குங்கள்'' என்று அனுப்பினான்.

    சண்டன், பிரசண்டனாகிய கழுகு உருவமுடைய அவ்விருவரும் வேத வெற்பை அடைந்து நறுமணமுள்ள மலரினாலும் நீரினாலும் பரவுதல் செய்து பூசித்தனர்.

    பரமசிவம் அவர்கள் முன் தோன்றி, ''உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்'' என்றார்.

    அவர்கள் ''ஒப்பில்லாத முத்தியே அடியேங்களுக்கு வேண்டியது'' என்றார்கள்.

    சிவபெருமான் ''இந்தக் கிரேதாயுகம் சென்றபின் உங்களுக்கு முத்தியை அளிக்கிறோம் அதுகாறும் நம் பேரவையில் சிவகணங்களுக்குத் தலைவராய் இருங்கள்'' என்றருள்பாலித்தார். அவர்களும் அவ்வாறிருந்து முத்தி எய்தினார்கள்.

    • திருக்கழுகுன்றத்தில் கிரிவலம் வருவதால் தூய காற்றை உட்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறோம்.
    • இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கின்றோம். ஆங்காங்குள்ள சுனை நீர்களில் குளிப்பதால் உடல் தூய்மை பெறுகிறது.

    திருக்கழுக்குன்றம் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இதை அங்குள்ள ராசராசசோழன் (பி.பி.985-1014) கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

    கருவறையில் உள்ள இறைவன் பெயர் வேதகிரியீசுவரர். இறைவி பெயர் திரிபுர சுந்தரி என்பதாகும்.

    கருவறையில் நான் முகன், திருமால், நந்தி தேவர், தட்சிணாமூர்த்தி, இந்திரன் ஆகியோர் திருவுருவங்கள் உள்ளன.

    கோவிலின் உள் சுற்றில் சொக்கம்மன் கோவிலும் உள்ளது.

    இறையின் தன்மை:

    வேதகிரி ஈசுரரை எவரும் புதுப்பிக்கவில்லை. தானே உண்டானவர்.

    இவர் எண்கோண வட்டமாகவோ, நாற் கோணமாகவோ, வட்டமாகவோ நீளமாகவோ காணப்படவில்லை. இறைவன் திருவுருவம் வாழைக் குருத்து போல் காணப்படுகிறது.

    இத்தலத்தின் மரம் வாழையேயாகும். இவ்விறைவனையும் வழிபடுவோர் தொன்று தொட்டு வந்த வல்வினையை விரைவில் விலக்கிக் கொள்வர்.

    கிரிவல பலன்கள்

    திருக்கழுகுன்றத்தில் கிரிவலம் வருவதால் தூய காற்றை உட்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறோம்.

    இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கின்றோம். ஆங்காங்குள்ள சுனை நீர்களில் குளிப்பதால் உடல் தூய்மை பெறுகிறது.

    வந்த நோய் விலகுகிறது. பிணிகளை நீக்கும் மூலிகைப் பொருள்களையும், அவற்றின் தன்மைகளையும் நேரில் கண்டறிய முடியும்.

    • பறவைகள் உண்டு எஞ்சிய உணவை தேசிகர் குடும்பத்தை சேர்ந்தவர் கொண்டு வந்து மண்டபத்தில் வைப்பார்.
    • முன்னமே மண்டபத்தில் வைத்திருந்த சோற்றோடு, கொண்டு வந்த சோற்றைக் கொட்டிக் கலந்து விடுவார்.

    மலையேறி உச்சியை அடைந்ததும் இரு வழிகள் பிரிகின்றன. ஒன்று கோவிலுக்குச் செல்கிறது.

    மற்றொன்று கழுகுகள் உணவு கொள்ளும் காட்சியைக் காணச் செல்கிறது.

    இவ்வழி ஓர் மண்டபத்தருகே நின்று விடுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் இம்மலைக்கு இருகழுகுகள் வந்து உணவு சாப்பிட்டு செல்லும்.

    அதை காண மண்டபத்திலும், அதைச் சுற்றியும் பன்னூறுக்கு மேற்பட்ட மக்கள் கொளுத்தும் வெயிலையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நான்கு புறமும் சுற்றி சுற்றி வானத்தை நோக்கியபடி காத்திருப்பார்கள்.

    11 மணியிலிருந்து 1 மணிக்குள் கழுகுகள் வரும் அதற்கு ஏற்ப ஒருவர் தூய்மையாக அகன்ற ஓர் தட்டில் நெய் கலந்த உணவை வைத்துக் கொண்டு தயாராக இருப்பார்.

    உச்சிப் பொழுதுக்குச் சற்று முந்தியும் பிந்தியும் இரண்டு கழுகுகள் வந்து தமக்கென்று காத்திருக்கும் உணவில் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிடும்.

    பிறகு வான்வழியே சென்று விடும். அதைக் கண்டதும் மக்கள் கூட்டமும் கலைந்துவிடும்.

    பறவைகள் உண்டு எஞ்சிய உணவை தேசிகர் குடும்பத்தை சேர்ந்தவர் கொண்டு வந்து மண்டபத்தில் வைப்பார்.

    முன்னமே மண்டபத்தில் வைத்திருந்த சோற்றோடு, கொண்டு வந்த சோற்றைக் கொட்டிக் கலந்து விடுவார். அவ் உணவை மக்களுக்கு வழங்குவார்.

    • பல புவனங்களையும் துன்புறுத்தி வந்த அரக்கர்களை அழிக்க சிவபெருமான் தம் மேனியினின்று ருத்திர கோடியரைத் தோற்றுவித்தார்.
    • அவர்கள் சிவபெருமான் தோற்றத்துடன் விளங்கினர்.

    ஆதியில் பரமசிவனாரிடம் இருந்து தோன்றிய வேதங்கள் கயிலாய மலையை அடைந்து தாங்கள் தேவர்கள் பிரம்மன் மற்றும் முனிவர்கள் பலரால் பலவாறு துன்பப்பட்டு வருந்துவதாகவும் பூவுலகில் தாங்கள் தங்கள் ஆறங்கங்களோடு மலையாக இருக்கவும் அம்மலையின் கொழுந்துபோன்று ஈசனே எழுந்தருளும்படியும் வேண்டித் துதித்தன.

    அவ்வாறே பரமசிவம் அருள்புரிய வேதங்கள் தங்கள் சகல பிரிவுகளுடன் மலையாயின.

    அம்மலையின் உச்சியில் சிவபெருமான் மலைக் கொழுந்தாய் எழுந்தருளினார். அந்த இடமே திருக்கழுக்குன்றம் ஆகும்.

    ருத்திர கோடியர் வரலாறு

    பல புவனங்களையும் துன்புறுத்தி வந்த அரக்கர்களை அழிக்க சிவபெருமான் தம் மேனியினின்று ருத்திர கோடியரைத் தோற்றுவித்தார்.

    அவர்கள் சிவபெருமான் தோற்றத்துடன் விளங்கினர். அவர்கள் சிவபெருமான் கட்டளையிட்டருளியபடி அரக்கர்களை அழித்து அண்டங்களைக் காத்து வந்தனர்.

    திருமால் தேவர்களுக்குப் பாற்கடலைக் கடைந்து அமுதம் தருதற்கு மத்தாக மந்திரகிரியைப் பெயர்த்தனர்.

    பெயர்த்த பாதாளத்திலிருந்து பலமுகம் பல வடிவங்களுடன் அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் எங்கும் பரவி யாவரையும் துன்புறுத்தினர்.

    தேவர்கள் அஞ்சி சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமான் ருத்திரகோடியரை அழைத்து அரக்கர்களைக் கொன்று ஒழிக்குமாறு கட்டளையிட்டருளினார்.

    ருத்திர கோடியர் சிவபெருமானைப் பணிந்து 'பெருமானே! இவர்கள் இப்பிறப்பில் அரக்கர்களாயினும் முற்பிறவியில் பெருந்தவம் செய்தவர்கள்.

    இவர்களைக் கொல்வதால் உண்டாகும் பாவத்திற்கு அஞ்சுகிறோம்' என்றார்.

    பரமசிவனார் 'இவர்களை கொல்லும் பாவம் வேதகிரியைப் பூசித்தால் நீங்கும்' என்றருளிச் செய்தார்.

    உருத்திர கோடியர் அரக்கர்களை அழித்து வேதகிரித் தலமான திருக்கழுக்குன்றத்தை நாடிவந்தனர்.

    பரமசிவம் அவர்கள் முன் கோடி சிவலிங்கங்களாக இருந்தனர். உருத்திர கோடியர் மகிழ்ந்து வணங்கி நன்னீராலும் மலர்களாலும் பூசித்தார்கள்.

    பரமசிவனார் ரிஷபம் மீது பார்வதி தேவியாருடன் காட்சி தந்தனர்.

    உருத்திரகோடியர் இறைவனை வணங்கி 'இறைவா! இந்த மலையும் தலமும் எங்கள் பெயருடன் விளங்க அருள்செய்ய வேண்டும்' என்றனர்.

    சிவபெருமான் 'இந்த வேதகிரி உருத்திரகோடிகிரி என்றும் இத்தலம் உருத்திர கோடித்தலம் என்றும் எம் பெயர் உருத்திரகோட்டீசுவரர் என்றும் பார்வதி தேவியாரின் பெயர் பெண்ணினல்லாள் எனும் உருத்திர கோட்டீசுவரி என்றும் தீர்த்தம் உருத்திர கோடி தீர்த்தம் என்றும் வழங்கப்பெறும்' என்றருளினார்.

    அவர்கள் பாவம் நீங்கித் தம்பதம் எய்தினர். அன்றுமுதல் திருக்கழுக்குன்றம் பகுதிக்கு ருத்திரகோடித்தலம் எனும் பெயருண்டாகிறது.

    • திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் ஆலயம் திராவிட கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.
    • தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இந்த தலம் 47வது தலமாக போற்றப்படுகிறது.

    1. திருக்கடையூர் திருத்தலம் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் வழித் தடத்தில் சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    2. கடவூர், திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாப விமோசன புண்ணிய வர்த்தம், பிஞ்சிலாரண்யம் என்பது உள்பட திருக்கடையூருக்கு பல புராதண பெயர்கள் உண்டு.

    3. மார்க்கண்டேயருக்காக இத்தலத்து ஈசன், எமனை உதைத்து தள்ளியதால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    4. பிரம்மன் இத்தலத்தில் உபதேசம் பெற்றார்.

    5. ஆதியில் இத்தலத்தின் தல விருட்சமாக வில்வம் இருந்தது. தற்போது மார்க்கண்டேயரால் நடப்பட்ட பிஞ்சில மரம் (சாதி மல்லிப் பூ மரம்) தல விருட்சமாக உள்ளது.

    6. இத்தலத்தில் அமிர்த தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

    7. திருமால், பிரம்மன், மார்க்கண்டேயர், அகத்தியர், எமன், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, ஏழு கன்னிகள் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    8. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.

    9. குங்குலிய கலய நாயனார், காரி நாயனார் இருவரும் இத்தலத்தில் வாழ்ந்து பல அற்புதங்கள், சேவைகள், திருப்பணிகள் செய்தனர்.

    10. அப்பர், சுந்தரர் இருவரும் ஒரு சேர எழுந்தருளி, இறைவனை தொழுது குங்கிலிய நாயனாரின் திருமடத்தில் தங்கி இருந்ததாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன.

    11. மார்க்கண்டேயர் இறையருள் பெற்ற 108 தலங்களில் இது 108வது தலமாகும். அமிர்தகடேசுவரரை கண்ட பிறகு அவர் வேறு எங்கும் செல்லவில்லை.

    12. பூமாதேவி இத்தலத்தில்தான் முழுமையான அனுக்ரகம் பெற்றுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    13. சதாபிஷேகம், கனகாபிஷேகம், ஆயுள் ஹோமம், ம்ருத்யுஞ்ச ஹோமம், உக்ரக சாந்தி, பீமரத சாந்தி ஆகியவை செய்ய தமிழ்நாட்டில் இத்தலம் மட்டுமே 100 சதவீதம் ஏற்ற தலமாக உள்ளது.

    14. இத்தலத்தில் நடக்கும் பெரிய விழாக்களில் கார்த்திகை மாதம் நடக்கும் சோமவார விழா மிகவும் சிறப்பானது. சோமவாரத்தில் 1008 சங்காபிஷேகம் நடப்பதை காண கண் கோடி வேண்டும் என்பார்கள்.

    15. திருக்கடையூர் தலத்தையும், ஊரையும் சோழ, பாண்டிய மற்றும் விஜய நகர மன்னர்கள் செப்பணிட்டு சீரமைத்து ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர். அது பற்றிய குறிப்புகள் ஆலயம் முழுவதும் உள்ள 54 கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது.

    16. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி வீடு திருக்கடையூரில் தேரோடும் வீதியில் அமைந்திருந்ததாக பாடல்கள் உள்ளன. ஆனால் இப்போது மாதவி வாழ்ந்த வீடு என்று எந்த ஒரு வீட்டையும் சுட்டிக்காட்ட இயலவில்லை.

    17. திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் ஆலயம் திராவிட கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.

    18. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இந்த தலம் 47வது தலமாக போற்றப்படுகிறது.

    19. திருக்கடையூர் ஆலயம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.

    20. மிகச் சிறந்த பரிகாரத் தலமான திருக்கடையூர் தலத்தை 04364-287429 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலத்து ஈசன் 110 வது இடத்தில் உள்ளார்.
    • அமிர்த கடேஸ்வரரை வணங்கினால் மன அமைதி உண்டாகும். தொழில் விருத்தி, பதவி உயர்வு கிடைக்கும்.

    1. திருக்கடையூர் அமிர்தகடேசுவரை அமிர்தலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.

    2. அமிர்தகடேசுவரர் மூலவராகவும் எமனை உதைத்து சம்ஹாரம் செய்த கால சம்ஹாரமூர்த்தி உற்சவராகவும் உள்ளனர்.

    3. மார்க்கண்டேயன் உயிரைப் பறிக்க எமன் வீசிய பாசக்கயிறு அமிர்தகடேசுவரர் மீதும் பட்டது. அந்த தடம் இப்போதும் லிங்கத்தின் உச்சியில் உள்ளது. மூலவருக்கு பாலாபிஷேகம் செய்யும் போது அந்த வடு தெளிவாக தெரியும்.

    4. சுயம்பு மூர்த்தியாக உள்ள இத்தலத்து மூலவர் ஒரு லிங்கம் தான் என்றாலும் அதை உற்றுப்பார்க்கும் போது பின்னால், இன்னொரு லிங்கம் பிம்பமாகத் தெரியும்.

    5. அமிர்தகடேசுரர் இங்குள்ள வில்வவனத்தில் சுயம்பு மூர்த்தியாக உறைந்து இருப்பதை சோழ மன்னர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்து ஆலயம் கட்டினார்கள்.

    6. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலத்து ஈசன் 110 வது இடத்தில் உள்ளார்.

    7. உற்சவர் காலசம்ஹார மூர்த்தியை வழி பட எம பயம் நீங்கும்.

    8. அமிர்த கடேஸ்வரரை வணங்கினால் மன அமைதி உண்டாகும். தொழில் விருத்தி, பதவி உயர்வு கிடைக்கும்.

    9. தினமும் சாயரட்சை பூஜை நடக்கும் போது மட்டும் ஆதி வில்வ நாதருக்கு முதல் பூஜை செய்கிறார்கள். அந்த சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேசுவரருக்கு அபிஷேகதீர்த்தம் எடுக்க சென்ற குகைபாதை உள்ளதாகச் சொல்கிறார்கள்.

    10. ஏராளமான சித்தர்கள் இங்கு வந்து அமிர்தகடேஸ்வரை வழிபட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.

    11. இத்தலத்து கால சம்ஹார மூர்த்தியை திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடல்களில் 134 இடங்களில் பாடி இருக்கிறார்.

    12. மேற்கே பார்த்த சிவாலயங்கள் மிக, மிக சக்தி வாய்ந்தவை என்பார்கள். திருக்கடையூரிலும் ஈசன் மேற்கு பார்த்த திசையில் தான் உள்ளார்.

    13. திருக்கடையூர் மயானக் கோவிலுக்கு அருகில் காசி தீர்த்தம் எனும் கிணறு உள்ளது. தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து தான் தண்ணீர் கொண்டு மரகத லிங்கத்துக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

    14. இத்தலத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது.

    15. அமிர்தகடேசுவரருக்கும், கால சம்ஹாரமூர்த்திக்கும், அன்னை அபிராமிக்கும் காரண, காமிக, ஆகம விதிமுறைகள் படி நித்திய பூஜை நடத்தப்படுகிறது.

    16. அமிர்கடேசுவரரை வணங்க வருபவர்கள் அவருக்கு மட்டுமின்றி கால சம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமிக்கும் அர்ச்சனை செய்ய தேங்காய் தட்டுகள் வாங்கி வருவது வழக்கமாக உள்ளது. இதற்காகவே திருக்கடையூரில் உள்ள கடைகளில் அர்ச்சனை தட்டுகளில் தலா 3 தேங்காய்கள் வைத்தே விற்பனை செய்கிறார்கள்.

    17. திருக்கடையூர் புறநகரில் தமிழக அரசு ரூ. 2 கோடி செலவில் மிகப்பெரிய தங்கும் விடுதியை கட்டி உள்ளது.

    18. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இலங்கை, பர்மா, இந்தோனேசியா, மலேசியா உள்பட தமிழர்கள் வாழும் நாடுகளில் அமிர்தலிங்கம் என்ற பெயர் பரவலாக உள்ளது. இந்த பெயர் இந்த தலத்தின் ஈசனை வைத்தே பரவியதாக சொல்கிறார்கள்.

    19. இத்தலத்தின் 2வது பிரகாரத்தில் ரூ. 1 கோடி செலவில் பெரிய மண்டபம் கட்டி வருகிறார்கள். அந்த பணி முடிந்ததும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை அந்த மண்டபத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதனால் முதல் பிரகாரத்தில் பக்தர்கள் குவிவது குறையும். அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் மற்ற சாதாரண பக்தர்கள் ஈசனை வழிபட்டு செல்ல தங்கு தடையற்ற சூழ்நிலை உருவாகும்.

    20. இத்தலம் தருமை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த ஆதீனம் சார்பில் ஏராளமான திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    ×