என் மலர்tooltip icon

    மற்றவை

    • பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • பெண்களால் இலகுவாக பல மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும்.

    பெண்களைப் பொருத்தவரை அவர்களால் 180 டிகிரி கோணத்தில் தமக்கு அருகாமையில் உள்ளவற்றை நன்கு தெளிவாகப் பார்க்க முடியும்.!ஆனால் தூர இருப்பவற்றை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியாது.!

    இதேவேளை ஆண்களைப் பொருத்தவரை அவர்களால் 90 டிகிரி கோணத்தில் தூர இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும்.!அருகில் உள்ளவற்றை அவர்களால் சரியாகப் பார்க்க முடியாது.!

    உங்கள் வீட்டிலும் இந்தப் பிரச்சினை சில சமயங்களில் இருக்கும். கணவன் வேலைக்குச் செல்ல தயாராகும் போது, என் பைக் சாவி எங்க.? சாக்ஸ் பாத்தியா.? ஷூவப் பாத்தியா.?என்று மனைவியைப் போட்டு வதைப்பதும்..

    மனைவியும் "இது என்ன? கண்ணுக்கு முன்னே வச்சிக்கிட்டு தேடுறீங்க.?எப்பவுமே நானே வந்து தேடிக் கையில தரனும்" என திட்டிக் கொண்டே அருகில் உள்ள பொருளைத் தேடிக்கொடுப்பதும் வீடுகளில் அன்றாடம் நடக்கும் சங்கதி.!

    இப்போது இதற்குக் காரணம் புரிந்திருக்கும்.ஆண்களைவிட பெண்களால் இலகுவாக ஊசிக்கு நூல் கோர்க்க முடிவதும் இதனால்தான்.!

    பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பெண்களால் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே பிள்ளைகளுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்யவும் முடியும்.

    ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டுமே செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஆண்கள் ஆடைக் கடைகளுக்குச் சென்றால் குறுகிய நேரத்தில் தமக்கான ஆடையை பிடித்த நிறத்தில் பார்த்து எடுத்துக்கொண்டு வருவார்கள். ஆனால் பெண்கள் மிக நீண்ட நேரம் எடுப்பார்கள்.!

    காரணம் ஆண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்களை விட பெண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்கள் மிக துல்லியமானவையாகவும் ஒரு நிறத்தில் உள்ள பல உப நிறங்களை வேறு பிரித்தறியும் விதத்திலும் இருப்பதனால்தான்.

    பெண்களால் இலகுவாக பல மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும். மூளையின் இந்த அமைப்பே காரணம்.

    அவ்வாறே ஒரு நாளைக்குப் பெண்கள் சுமார் 7000 வார்த்தைகளைப் பேசுகின்றார்கள். ஆண்கள் ஒரு நாளைக்குப் பேசும் வார்த்தைகள் சுமார் 2000 மட்டும்தான்.

    பெண்களால் இலகுவாக ஆண்களின் உடல் மொழிகளைப் படித்திட முடியும். சோர்வு, விரக்தி, கவலை, கோபம், சந்தோசம் என எதனையும் ஒரு பெண்கள் இலகுவாகக் கண்டுபிடித்து விடுவார்கள்!

    ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக இது பொய்தான் என்பதை அறிந்து கொள்வார்கள். ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.

    ஆண்கள் ஒரு பிரச்சினைக்கான தீர்வை யோசித்து, திட்டமிட்டு நடைமுறை ரீதியாக அதனைத் தீர்க்க முனையும்போது, பெண்களோ அப்பிரச்சினையை உணர்ச்சி மூலம் தீர்த்துக்கொள்ள முற்படுகின்றனர்! சிறு பிரச்சினைக்கும் பெண்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவது இதனால்தான்!

    இலக்கங்களை ஆண்களால் அதிகம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான்.!மனைவியிடம் கேட்டுத்தான் சொல்வார்கள்.

    ஆனால் இந்தவிஷயத்தில் பெண்கள் நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள்.!கணவன், பிள்ளைகள் என எல்லோருடைய பிறந்த தினத்தையும் அவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.!

    ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான இந்த வித்தியாசங்களை எல்லோரும் அறிந்து கொள்வது அவசியமாகும்.!

    -ஸ்ரீராம் கோவிந்த்

    • ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை.
    • ஒருவழியாக 1970 - ல் வெறும் 500 ரிகார்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம்..

    இசையில் ஆர்வம் கொண்ட ஒரு இளம் பெண், தன் சகோதரியோடு இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட நினைத்து பல கிராமபோன் ரிகார்டு [இசைத்தட்டு] கம்பெனிகளை கேட்டுப் பார்த்தாராம்...

    ஆனால் இசைத்தட்டு கம்பெனிகள் இதற்கு மறுத்து விட்டார்களாம்.

    அவர்கள் சொன்ன ஒரே காரணம்... 'ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை...வேண்டாம் இந்த வீண்வேலை.... விட்டு விடுங்கள்..'

    விடவில்லை அந்த சகோதரிகள்..

    இசைத்தட்டு சுழல்வது போல் இசைத்தட்டு கம்பெனிகளை சுற்றி சுழன்று வந்து முயற்சித்தும் கீறல் விழுந்த இசைத்தட்டாக "முடியாது "என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்...

    ஆனாலும் மனம் தளராத அந்த சகோதரிகள் அந்தப் பாடலை பல ராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்...

    முதலில் 'ஆபேரி'.. அடுத்து 'சுப பந்துவராளி'.. அதனைத் தொடர்ந்து 'கல்யாணி.'. இறுதியாக 'தோடி'.. இப்படி நான்கு ராகத்தில் பாடினார்கள் இந்தப் பாடலை...!

    ஒருவழியாக 1970 - ல் வெறும் 500 ரிகார்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம்..

    ஆனால்.... அந்த ரிக்கார்ட் பல ரிக்கார்டுகளை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது.

    இப்படி அந்தக் காலத்தில் படாத பாடுபட்டு பாடி இந்த இசைத்தட்டை வெளியிட்ட சகோதரிகள் சூலமங்கலம் சகோதரிகள் !

    அந்தப் பாடல் கந்த சஷ்டி கவசம்...

    "சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

    சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்.."

    கந்தசஷ்டி கவசத்தை வேறு சிலரும் பாடியிருந்தாலும், சூலமங்கலம் சகோதரிகள் அளவுக்கு வேறு எதுவும் நம்மைக் கவரவில்லை...!

    • ஆஸ்திரேலியாவில் இந்தியாவை விட இரு மடங்கு நிலப்பரப்பு.
    • மும்பை அளவே ஜனத்தொகை. மத்திய ஆஸ்திரேலியா முழுக்க பாலைவனம்.

    ஆஸ்திரேலிய நிலப்பரப்பு மிக வித்தியாசமானது. ஆசியா, ஆபிரிக்கா என மற்ற கண்டங்களிடம் இருந்து பல லட்சம் ஆண்டுகளாக துண்டிக்கபட்டு இருந்தது.

    மனிதன் அங்கே போனதும் முயல், எலி, டிங்கோ நாய், பூனை மாதிரி மிருகங்களின் பரவலை தடுக்க அங்கே சிங்கம், புலி, ஓநாய், நரி எதுவும் இல்லை. இவை பல்கிப்பெருகி மிகப்பெரும் சுற்றுசூழல் பிரச்சனையை உருவாக்கின.

    ஆஸ்திரேலியாவில் இந்தியாவை விட இரு மடங்கு நிலப்பரப்பு. மும்பை அளவே ஜனத்தொகை. மத்திய ஆஸ்திரேலியா முழுக்க பாலைவனம்.

    கார்கள் இல்லாத 19ம் நூற்றாண்டில் பாலைவனத்தில் ஒட்டகம் இருந்தால் நல்லது என ஏதோ மகானுபாவனுக்கு தோன்றி ஒட்டகங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டன.

    20ம் நூற்றாண்டில் கார்கள் கண்டுபிடிக்கப்பட்டபின் அவற்றுக்கு அவசியமின்றி போய்விட்டது.

    இன்று 12 லட்சம் ஒட்டகங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. அனைத்தும் காட்டு ஒட்டகங்கள். பாலைவன பூமியில் இருக்கும் புல், பூண்டை எல்லாம் தின்று தீர்க்க, மிகப்பெரும் சுற்றுச்சூழல் பிரச்சனையாக மாறியது.

    அதனால் ஒட்டகங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி சுட்டுகொல்லலாம் என ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்தது.

    ஒட்டகத்தை எல்லாம் மாடுகள் மாதிரி பண்ணைகளில் வளர்க்கமுடியாது. ஏற்றுமதி செய்யவும் செலவு ஆகும். வரும் வருமானம் போக்குவரத்து செலவுக்கே காணாது. ஆண்டுக்கு ஐயாயிரம் ஒட்டகங்கள் தான் உணவாகின்றன.

    அதனால் ஆஸ்திரேலியா ஒட்டகங்களின் மேலான போரை அறிவித்தது. அங்காங்கே ஒட்டகங்களை ஹெலிகாப்டர்களில் இருந்து சுட்டு கொன்றார்கள். பெண் ஒட்டகம் ஒன்றை பிடித்து ஜி.பி.எஸ் பொருத்தி விட்டுவிடுவார்கள். அது ஒட்டக கூட்டத்துடன் சேர்ந்துவிடும். அதன்பின் அதை டிராக் செய்து அந்த ஒட்டகத்தை தவிர மற்றதை எல்லாம் ஹெலிகாபாப்டரில் இருந்து சுடுவார்கள். அது அங்காங்கே விழுந்து இறந்துவிடும். பெண் ஒட்டகம் மீண்டும் அடுத்த குழுவை தேடிப்போகும்.

    இறக்கும் ஒட்டகங்கள் காட்டில் இருக்கும் மற்ற மிருகங்களுக்கு உணவாகும். இயற்கை எதையும் வீணடிப்பதில்லை.

    - நியாண்டர் செல்வன்

    • தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது.
    • பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம்.

    தானம், தர்மம் என்கிறார்களே?

    அப்படியென்றால் என்ன?

    இந்த கதை பிரமாணத்தை படியுங்கள்...

    சூரியபகவான், சிவ பெருமானிடம் கேட்டார்.

    பரம்பொருளே, பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணன், கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

    இறை சிரித்தது... தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.புண்ணியக் கணக்கில் சேராது.

    ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும்.

    பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

    கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.

    எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. இப்போது புரிந்ததா? என கேட்க, ஈசனை வணங்கி நின்றார் சூரியத் தேவன்.

    கேட்டு கொடுப்பது தானம்!

    கேட்காமல் அளிப்பது தர்மம்!

    -சாது சுப்பிரமணி

    • நள்ளி - கண்டீர நாடு. தன்னை அண்டி வந்தவர்க்கு தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் உதவி செய்தவர்.
    • ஓரி - கொல்லிமலை. விற் போரில் வல்ல ஓரி கொல்லிமலைக் கவிஞர்களுக்கு தன் நாட்டையே பரிசளித்தவர்.

    கடையேழு வள்ளல்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். அவர்கள் எந்தெந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியுமா?

    1) பேகன் - பழநி (வைகாவி நாடு) மயிலுக்கு போர்வை அளித்தவர்.

    2) பாரி - திருப்புத்தூர் (பிரான்மலை எனும் பறம்பு மலை, சிவங்கை மாவட்டம்) முல்லைக் கொடி படர தேர் வழங்கியவர்.

    3) காரி - திருக்கோவிலூர் (மலாடு - திருவண்ணாமலை) தன் குதிரையையும் ஏனைய செல்வங்களையும் வாரி வழங்கியவர்.

    4) ஆய் - ஆய்குடி பொதிகைமலை. நாகர்கோவில் பகுதி, கன்னியாகுமரி மாவட்டம். நாகம் வழங்கிய அரிய ஆடையை சிவ பெருமானுக்கு அளித்தவர்.

    5) அதியமான் - தர்மபுரி (தகடூர்) நீண்ட நாள் வாழக்கூடிய அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு கொடுத்தவர்.

    6) நள்ளி - கண்டீர நாடு. தன்னை அண்டி வந்தவர்க்கு தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் உதவி செய்தவர்.

    7) ஓரி - கொல்லிமலை. விற் போரில் வல்ல ஓரி கொல்லிமலைக் கவிஞர்களுக்கு தன் நாட்டையே பரிசளித்தவர்.

    இதில் வள்ளல் நள்ளி வாழ்ந்த கண்டீர நாடு என்பது மட்டும் தான் தெரியவில்லை. நளிமலை நாடன் நள்ளி என்னும் பெயரை பார்க்கும்பொழுது இவனும் மலை நாட்டை ஆண்டவன் என தெரிகிறது. தோட்டி மலை எனவும் இந்த மலை அறியப்படுகிறது.

    - கார்த்திகேயன்

    • பாரதி கவிதை எழுதவில்லை. இதனைத் தனது இருண்ட காலம் என்று குறிப்பிட்டு வருந்தி எழுதுகிறார்.
    • புதுச்சேரியில் 10 ஆண்டுகள்தான் வாழ்கிறார். இந்த 10 ஆண்டுதான் பாரதியின் சாதனை.

    பாரதியின் மொத்த வாழ்க்கை 39 ஆண்டுகள். 5 வயதில் தாயையும் 14 வயதில் தந்தையையும் இழக்கிறார். வறுமை. 11 வயதிலேயே புலமை. பாரதி பட்டம். 4 ஆண்டுகள் காசியில் வாழ்க்கை. இங்குதான் கிராப்பும், மீசையும் வைக்கிறார். இந்தியும், சம்ஸ்கிருதமும் படிக்கிறார்.

    வறுமைக் கொடுமையால் எட்டையபுரம் ஜமீனிடம் வேலைக்குச் செல்கிறார். இந்த 6 ஆண்டுகள் (1898-ஆம் ஆண்டு முதல் ஜூலை 1902 வரை ) பாரதி கவிதை எழுதவில்லை. இதனைத் தனது இருண்ட காலம் என்று குறிப்பிட்டு வருந்தி எழுதுகிறார்.

    24 வயதில் எட்டையபுரம் ஜமீனிடமிருந்து வெளியேறுகிறார். பிறகு மதுரையில் ஆசிரியப்பணி. 26 வயதில் புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரியில் 10 ஆண்டுகள்தான் வாழ்கிறார். இந்த 10 ஆண்டுதான் பாரதியின் சாதனை.

    6 ஆண்டுகள் கவிதை எழுதாத காலத்தைத்தான் பன்றி வாழ்க்கை வாழ்ந்த காலம் என்று சுயவிமர்சனம் செய்து கொள்ளுகிறார்.

    -இந்திரன்

    • கருணைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து நிறைவாகக் காணப்படுகிறது.
    • மற்ற நோய் உள்ளவர்கள் கருணைக்கிழங்கை தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

    'மண்பரவு கிழங்குகளில் கருணை இன்றி புசியோம்' என்கிறார் தேரையர். அதாவது, 'மண்ணுக்கு அடியில் பரவி வளரும் கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கைத் தவிர்க்கக் கூடாது' என்றும் 'பிற கிழங்குகளை உண்ண மாட்டோம்' என்றும் 'நோய் அணுகா' விதியில் குறிப்பிடுகிறார்.

    கருணைக்கிழங்கு சுவையிலும் மருத்துவ குணத்திலும் சிறந்து விளங்கக்கூடியது. சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ஆகியவையும் கருணைக்கிழங்கு வகையைச் சேர்ந்தவைதான்.

    கிழங்குகளில் எளிதாகச் செரிமானமாகக் கூடியது கருணைக்கிழங்கு. மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் ஆகிய அன்றாடம் உண்ணும் உணவுகளில் சேர்த்துக்கொள்ளப்படும் கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கில் மட்டுமே அதிக நார்ச்சத்து உள்ளது. மற்ற கிழங்குகளில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே நார்ச்சத்து காணப்படுகிறது.

    கருணைக்கிழங்கைத் தவிர மற்ற கிழங்கு வகைகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் வாய்வுக்கோளாறு, மந்தம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். அதனால் செரிமானக் குறைபாடு ஏற்படும்; வாய்வுக்கோளாறு அதிகரித்து உடல் முழுவதும் பரவி, தொல்லை கொடுக்கும். குறிப்பாக, மூட்டுகளில் வலியை உண்டாக்கும். ஆனால், கருணைக்கிழங்கிலுள்ள நார்ச்சத்து, வாய்வு ஏற்படாமல் தடுக்கும்.

    கருணைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து நிறைவாகக் காணப்படுகிறது என்பதால் இதயத்தசைகள் வலுப்பெற உதவும். அதனால் இதயநோய்கள் நெருங்காது.

    பசியைத் தூண்டி இரைப்பைக்கு வலுசேர்க்கும்; குடலில் கிருமி சேராமல் தடுக்கும்; கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேர்வதைக் குறைக்கும்; ரத்தநாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுப்பதுடன், ரத்தம் உறைதலைத் துரிதப்படுத்துவதிலும் முக்கியப் பங்குவகிக்கிறது. நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்னைகளுக்கு நல்மருந்து. பெண்களுக்கு ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படாமல் தடுக்கும். முக்கியமாக, 40 வயதுக்கு மேல் மெனோபாஸ் ஏற்படும்போது உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கும்.

    மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கருணைக்கிழங்கு சாப்பிட்டுவர நிவாரணம் கிடைக்கும். மூலம், ஆசனவாயில் ஏற்படும் பிளவு, ரத்தக்கசிவு, கட்டி போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். ஆசனவாயின் உள்சவ்வில் ஏற்படும் கிழிசல், ரணத்தைச் சரிசெய்யும் ஆற்றல் கருணைக்கிழங்கிலுள்ள பைட்டோ கெமிக்கலுக்கு இருக்கிறது. அந்த வேதிப்பொருள், `ஆசனவாய்ப் புற்று வராமல் தடுக்கும்' என்று நவீன மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    எனவே, பாரம்பரிய மருத்துவமுறைகளில் கருணைக்கிழங்கைத் தவிர மற்ற கிழங்குகளைக் கட்டாயம் தவிர்க்கச் சொல்கின்றனர். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக்கிழங்கை முதன்மையாகக் கொண்டு பல நோய்களுக்கு லேகியம் தயாரித்து மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

    உடல் எடை அதிகரித்து மூட்டுவலி, முடக்குவாதம் உள்ளிட்ட கோளாறுகளால் அவதிப்படுவோர் கருணைக்கிழங்கை தினசரி சாப்பிட வேண்டியது அவசியம். உடலைக் குளிர்விக்கும் உணவு என்பதால் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கிழங்கைத் தவிர்ப்பது நல்லது. மற்ற நோய் உள்ளவர்கள் கருணைக்கிழங்கை தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

    -டாக்டர் தெ.வேலாயுதம்

    • அதிக திருஷ்டிபட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும்.
    • கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம்.

    சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் "உடல் பலவீனம்", இரண்டாவது "கண்திருஷ்டி".

    நம் உடலில் "ஏழு சக்கரங்கள்" உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும்.

    அதிக திருஷ்டி பட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும். இதற்கு பரிகாரம் "கடல் தண்ணீர்". கடல் தண்ணீரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.

    ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும்.

    கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும்.

    இனிமேலாவது கண்திருஷ்டிக்கு பரிகாரம் தேடாமல் மாதம் ஒரு தடவை கடலில் குளிக்க வேண்டும் என்ற சங்கல்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

    - சிவசங்கர்

    • கலப்பையால் உழுகிறார்கள் என்கிறான் ஒரு பையன். ஒரு பெண், டிராக்டர் என்கிறாள்.
    • எது நல்லது என்ற கேள்விக்கு டிராக்டர் தான் சிறந்தது என்கிறான் மாணவன்.

    ஜே.சி.குமரப்பா ஒரு கிராமிய பொருளாதார நிபுணர். கிராமியப் பொருளாதாரத்தைப் பற்றி கற்றுத் தருவதில் அவருக்கு மிஞ்சியவர் யாருமில்லை. காந்தி நிகேதனில் தங்கியிருந்த அவர் மாணவர்களுக்கு ஒரு நாள் வகுப்பு எடுக்கும்போது, அவர்களில் எத்தனை பேர் விவசாய வீட்டுக்காரர்கள் என்று கேட்கிறார். முக்கால் பங்கு மாணவர்கள் கையைத் தூக்குகின்றனர்.

    பரவாயில்லையே, உங்களுக்கு வேண்டிய பகுதியை நான் கூறுகின்றேன் என்று சொல்லி, நீங்கள் நிலத்தை உழுவதைப் பார்த்து இருக்கிறீர்களா என்று கேட்கிறார்.

    மாணவர்கள் சிரித்தபடியே இதைக் கூடவா பார்க்காமல் நாங்கள் இருப்போம் என்கின்றனர்.

    எல்லாம் சரி. நிலத்தை எதைக் கொண்டு உழுகிறார்கள்.?

    கலப்பையால் உழுகிறார்கள் என்கிறான் ஒரு பையன். ஒரு பெண், டிராக்டர் என்கிறாள்.

    எது நல்லது என்ற கேள்விக்கு டிராக்டர் தான் சிறந்தது என்கிறான் மாணவன்.

    எப்படி என்கிறார் அவர்.?

    எங்க அப்பா ஒரு நாள் முழுவதும் உழுதால் 50 சென்ட் நிலம்தான் உழ முடியும். கடுமையான வெயிலில், சூடான மணலில் நடந்து செல்ல வேண்டும். இப்படி நாள் முழுவதும் உழ அவர் இருபது மைல் நடக்க வேண்டும்.. அந்த பாடுபட வேண்டும். ஆனால், டிராக்டரில் உழும்போது ஒரு கார் ஓட்டுவது போல அமர்ந்து ஓட்டி அன்றைய முழு வேலையையும் ஒரு பதினைந்து நிமிடத்திற்குள் முடித்துவிடலாம் என்கிறான்.

    குமரப்பா 'நீ சொல்வது சரிதான். நான் சில கேள்விகளை கேட்கிறேன், பதில் சொல்ல முடியுமா.?' என்கிறார்.

    அந்த டிராக்டர் ஒன்றை ஊரிலுள்ள யாராவது செய்ய முடியுமா? அந்த டிராக்டர் செய்ய இரும்பு உங்கள் ஊரில் கிடைக்கிறதா.?அது செயல்பட டீசல் நம் ஊரில் கிடைக்கிறதா.? பழுது ஏற்பட்டால் உன் அப்பாவால் பழுது பார்க்க முடியுமா? எல்லா விவசாயிகளும் இந்த டிராக்டரை வாங்க முடியுமா? என்று கேள்வி மேல் கேள்வி அடுக்கும்போது அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது என்கிற கேள்வியோடு இன்னொரு செய்தியும் வெளிவருகிறது.

    அந்த டிராக்டர் நிலத்தில் சென்றால் நிலம் எவ்வளவு இறுகிப் போகும் என்பது தெரியுமா.? அதைவிட அந்த அந்த டிராக்டர் சாணி போடுமா மூத்திரம் பெய்யுமா என்ற போது மாணவர்கள் சிரிக்கின்றனர்.

    உன் அப்பாவு உழும் கலப்பை மரத்தால் செய்யப்பட்டது. அந்த மரம் இங்கு கிடைக்கிறது. அந்த மரம் கிடைக்கும் தோட்டம் நம்மளால் பராமரிக்கப்படுகிறது. அந்தத் தோட்டத்தில் இருந்த மரம் வெட்டப்பட்டு அதனை ஒரு ஆசாரியார், கொல்லரால் செய்யப்பட்டு கலப்பை கிடைக்கிறது.

    கட்டியிருக்கும் பசு கன்று போடுகிறது. அது ஆண் கன்றாக இருந்தால் இரண்டு வருடங்களில் உழுவதற்கு வரும். வண்டி இழுக்க பயன்படும். தண்ணீர் இறைக்கப் பயன்படும். அதற்கு தட்டை, வைக்கோல் தான் போட வேண்டும். அது உழும்போது இடும் சாணமும், பெய்யும் மூத்திரமும் சிறந்த உரம்.

    நாம் யாரையும் சாராமல் வாழும் நிலை ஏற்பட வேண்டுமானால் டிராக்டர் நல்லதா, கலப்பை கொண்டு உழுவது நல்லதா என்று பொட்டில் அடித்தாற்போல் கேள்வி கேட்டார்.

    -என் ராஜகோபால்

    • பாலைவனமும் சந்திக்கும் பகுதிகளில் பசுமைக்குடில்களை நிறுவி விவசாயம் செய்கிறார்கள்.
    • பாலைவனங்களில் இப்படி பழங்கள், காய்கறிகள் எல்லாம் விளைவிக்கப்படுகின்றன.

    உலகில் ஏராளமாக இருக்கும் வீணான வளங்கள் என பாலைவனத்தையும், கடல்நீரையும் சொல்லலாம்.

    பாலைவனங்களில் ஏராளமான இடம் இருக்கிறது. கடலில் ஏராளமான நீர் இருக்கிறது. கடல்நீரை வைத்து பாலைவனத்தில் விவசாயம் செய்யமுடிந்தால் எப்படி இருக்கும்?

    இது எப்படி சாத்தியம் என டென்சன் ஆகவேண்டாம். இருக்கும் தொழில்நுட்பமே போதும் என்கிறது Seawater greenhouse கம்பனி. இவர்கள் ஏற்கனவே ஜோர்டான், சோமாலியா, ஆஸ்திரேலியா மாதிரி கடலும், பாலைவனமும் சந்திக்கும் பகுதிகளில் பசுமைக்குடில்களை நிறுவி விவசாயம் செய்கிறார்கள்.

    இதன் தொழில்நுட்பம் மிக எளிமையானது. ஆப்பிரிக்காவின் எரித்ரியா பாலைவனத்தில் கடலுக்கு அருகே பசுமைக்குடில் அமைத்தார்கள். அங்கே ஏராளமான சூரியவெளிச்சம் இருந்தது. சோலார் பேனல் மூலம் உற்பத்தி ஆன மின்சாரம் கடல்நீரை மோட்டர் மூலம் உறிஞ்சி இழுத்தது.

    தாவரங்களுக்கு காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் மிக குறைவான நீர் தான் தேவைப்படும். பசுமைக்குடில்களுக்குள் பைப்புகள் வழியே உப்புநீர் செலுத்தப்பட்டது. அங்கே பாலைவனத்தில் வெப்பம் மூலம் அவை நீராவியாக்கபட்டு பசுமைக்குடில்களுக்குள் நீராவி செலுத்தபட்டது. இது காற்றை ஈரப்பதம் மிகுந்ததாக்கியது. மின்விசிறிகள் சுழன்று வெப்பகாற்று மேலே எழுந்து கூரையில் பட்டு மழையாக மீண்டும் உள்ளேயே விழுந்தது

    காற்றில் ஈரப்பதம் இருந்து ஏசி போட்டது போல் இருந்ததால் தாவரங்களுக்கு தேவைப்படும் நீரின் அளவு நூற்றில் ஒரு பங்காக குறைந்தது. கடல்நீர் மூலம் எரித்ரியா, சோமாலியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா பாலைவனங்களில் இப்படி பழங்கள், காய்கறிகள் எல்லாம் விளைவிக்கப்படுகின்றன.

    ஏக்கருக்கு 100 டன் காய்கறிகளை இப்படி விளைவிக்கமுடியும் என்கிறார்கள். புதிய தொழில்நுட்பம்.. துவக்கும் செலவுகள் கூடுதல்.. நிதி உள்ளிட்ட பல சிக்கல்கள் என எல்லாவற்றையும் தாண்டி விரைவில் இதை பரவலாக்குவோம் என்கிறார்கள்.

    விரைவில் உலகெங்கும் பரவி பாலைவனங்களில் இருந்து பழங்களும், காய்கறிகளும் வரட்டும். ஒரு கட்டு கட்டுவோம்.

    - நியாண்டர் செல்வன்

    • சுற்றுமுற்றும் பார்த்து டால்ஸ்டாய் இருப்பதைக் கண்டுகொண்டார்.
    • நீ இங்கிருந்ததை நான் கவனிக்கவே இல்லை” என்று சொல்லி மிரட்டினார்.

    டால்ஸ்டாய் ஒருநாள் சர்ச்சுக்குப் போனார். அதிகாலை நேரம். ஊரிலேயே பெரும் பணக்காரர் ஒருவர், அந்த அதிகாலை இருட்டில் மண்டி போட்டுத் தான் ஒரு பாவி என்று சொல்லிப் புலம்பித் தொழுது கொண்டிருந்தார்.

    இவருக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. சுவாரசியமாகவும் பட்டது. அந்தப் பணக்காரர் தன் மனைவிக்குத் தான் செய்த துரோகத்தை எல்லாம் சொல்லிப் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்.

    டால்ஸ்டாயின் வியப்பு அதிகமாகிப் போய்விட்டது. நெருங்கிப் போனார். அந்தப் பணக்காரர் கம்பீரமாகக் கடவுளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

    "நான் பாவி, நீங்கள் என்னை மன்னிக்கவில்லையென்றால் எனக்கு வேறு வழியே இல்லை. எப்படிச் சுரண்டிக் கொண்டிருந்துவிட்டேன். எப்படியெல்லாம் மக்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்துவிட்டேன். நான் ஒரு பாவி. எப்படி என்னைத் திருத்திக் கொள்வதென்றே எனக்குத் தெரியவில்லை. உங்கள் கருணை எனக்கு இல்லாமல் போய்விட்டால் எனக்கு ஈடேற்றமே இல்லை." கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

    திடீரென வேறு ஒருவர் இருப்பதைத் தெரிந்துகொண்டார். சுற்றுமுற்றும் பார்த்து டால்ஸ்டாய் இருப்பதைக் கண்டுகொண்டார். விடிந்து வெளிச்சம் அதற்குள் வந்துவிட்டது.

    டால்ஸ்டாயிடம் கோபத்தோடு.."நான் சொன்னதெல்லாம் கடவுளிடம்தான் உன்னிடமல்ல. நான் சொன்னதை வேறு யாரிடமாவது சொன்னால் உன்னைக் கோர்ட்டுக்கு இழுத்துவிட்டுவிடுவேன், மான நஷ்ட வழக்குப் போடுவேன், கேட்டதை எல்லாம் அப்படியே மறந்துவிடு. எனக்கும் கடவுளுக்குமான நேரிடையான பேச்சு இது, நீ இங்கிருந்ததை நான் கவனிக்கவே இல்லை" என்று சொல்லி மிரட்டினார்.

    இப்படி கடவுளுக்கு ஒரு முகம். உலகத்துக்கு ஒரு முகம். இது ஏமாற்று வேலை. அடுத்தவர்களை மட்டுமல்ல, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.

    -ஓஷோ.

    • நான் ஒரு திருமணத்தை நடத்தி வைத்தேன்.
    • அறிவுரை வேலை செய்யவில்லை என்று பதில் எழுதி அனுப்பினார்.

    ஒரு இலக்கியக் கழகத்தில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் உரையாற்றிய போது கூறிய நகைச்சுவை...

    நான் ஒரு திருமணத்தை நடத்தி வைத்தேன். மூன்று மாதங்கள் கழித்து அந்த மாப்பிள்ளையிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. அதில் தன் மனைவி தன்னை மதிப்பதில்லை என்றும், மிகவும் அதிகாரத் தோரணையில் நடந்து கொள்வதாகவும், தன்னால் அவளோடு ஒத்துப்போக முடியவில்லை என்றும், தக்க அறிவுரை தர வேண்டும் என்றும் எழுதிக் கேட்டிருந்தார்.

    நான் உடனே எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓர் அறிவுரையை அவருக்கு எழுதி அனுப்பினேன். அவர் அந்த அறிவுரை வேலை செய்யவில்லை என்று பதில் எழுதி அனுப்பினார்.

    நான் உடனே ஏழு எழுத்துக்கள் அடங்கிய ஓர் அறிவுரையை எழுதி அனுப்பினேன். அதுவும் பயனில்லை என்று அவர் மறுமொழி எழுதி அனுப்பினார்.

    சரி, வேறு வழியில்லை என கடைசியாக ஆறு எழுத்துக்கள் அடங்கிய ஓர் அறிவுரையை எழுதி அனுப்பினேன்.

    "ஆஹா... இது பிரமாதமான அறிவுரை அய்யா...இப்போது அதைத்தான் கடைப்பிடித்து வருகிறேன். இப்போது எங்களிடையே எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று மகிழ்ச்சியாக அந்த மாப்பிள்ளை பதில் அனுப்பி இருந்தார்.

    சரி, அந்த அறிவுரைகள் என்னென்ன என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருப்பீர்கள்! அந்த எட்டு எழுத்து அறிவுரை என்பது "அரவணைத்துப் போ", ஏழு எழுத்து அறிவுரை என்பது "அடக்கிக் பார்". இந்த இரண்டும் தான் பயன்படவில்லையே ! மூன்றாவதாய் அனுப்பிய அறிவுரை "அடங்கிப் போ" இதுதான் உள்ளபடியே பிரச்சினையை தீர்த்த அறிவுரை!

    -பரதன் வெங்கட்

    ×