என் மலர்tooltip icon

    மற்றவை

    • ஐநா அவையின் அதிகாரபூர்வ ஆவணங்களில் உள்ளது.
    • உண்மையில் ஔரங்சீப் காலத்திலும் சீனாதான் இந்தியப் பகுதியை ஆக்ரமித்தது.

    கைலாஷ் மானசரோவர் சீனாவின் ஆதிக்கத்தில் உள்ளது..

    நம் நாட்டு விடுதலைக்குப் பிறகு, சீனா கைலாஷ் பர்வத் (கைலாசமலை) அல்லது கைலாஷ் மானசரோவர் மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆக்ரமித்ததால் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஐநா அவைக்குச் சென்று, "சீனா எங்கள் பகுதியை வலுக் கட்டாயமாக ஆக்ரமித்துள்ளது, எங்கள் பகுதியை மீண்டும் எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள்" என்றார்.

    இதற்குச் சீனா தரப்பிடமிருந்து வந்த பதில்: "நாங்கள் இந்தியாவின் பகுதியை ஆக்ரமிக்கவில்லை. எங்கள் நாட்டின் பகுதியை 1680ல் இந்தியாவை ஆண்ட பேரரசர் பிடுங்கியதை நாங்கள் திரும்ப எடுத்துக் கொண்டோம்".

    இந்த பதில் இன்றும் ஐநா அவையின் அதிகாரபூர்வ ஆவணங்களில் உள்ளது.

    சீனா எந்த இந்தியப் பேரரசரின் பெயரை குறிப்பிட்டது தெரியுமா?

    "ஔரங்சீப்".

    உண்மையில் ஔரங்சீப் காலத்திலும் சீனாதான் இந்தியப் பகுதியை ஆக்ரமித்தது. இதுகுறித்து பேரரசர் ஔரங்சீப், அப்போதைய சீன நாட்டின் சிங் வம்ச மன்னர் முதலாம் ஷுன்ஜிக்கு எழுதிய கடிதத்தில், "கைலாஷ் மானசரோவர் இந்தியாவின் ஒரு பகுதி. அது மட்டுமின்றி, அது எங்கள் இந்து சகோதரர்களுக்கு புனிதமான இடம். எனவே, அந்த இடத்தை விட்டுவிலகுங்கள்" என எழுதினார்.

    கடிதம் எழுதி ஒன்றரை மாதமாகியும் சீன தரப்பிடமிருந்து பதில் இல்லாததால் குமாவோன் பகுதி அரசர் பாஜ் பஹதூர் சந்த்-ன் படையுடன் இணைந்து, குமாவோன் வழியாக மலையேறிச் சென்று சீனாவைத் தாக்கி, கைலாஷ் மானசரோவர் பகுதியை இந்தியாவுடன் மீண்டும் இணைத்தார்.

    ஔரங்சீப்பை தீவிர இஸ்லாமிய அரசர் என்றும், இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் பரப்புரை செய்யப்படுகிறதோ அவர்தான் இந்தியாவின் முதல் உண்மையான 'சர்ஜிகல் ஸ்டிரைக்' நடத்தியவர்.

    வரலாற்றின் இந்த பக்கங்கள், இந்தியா விடுதலை அடைந்த காலத்து ஐ.நா. அவையின் ஆவணங்களில் உள்ளன. அது மட்டுமின்றி அந்த ஆவணங்கள் நாடாளுமன்றத்திலும் பாதுகாப்பாக உள்ளன.

    -எம்.எஸ். ராஜகோபால்

    • சிலருக்கு திருமண வாழ்க்கை வெற்றியைக் கொடுக்கின்றது.
    • ஜாதகப் பொருத்தம் பார்ப்பதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    சிலருக்கு திருமண வாழ்க்கை வெற்றியைக் கொடுக்கின்றது. சிலருக்கு துன்பத்தைக் கொடுக்கின்றது. இதற்குக் காரணம் ஆண், பெண் இவர்களின் ஜாதகப் பொருத்தமே .

    ஜாதகப் பொருத்தம் பார்ப்பதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றில் முதல் அம்சம் ஆண், பெண் இரு பாலரின் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய பொருத்தம் பார்ப்பதாகும். திருமணத்தின் பொருட்டு சாஸ்திரங்களில் மகரிஷிகளால் விதிக்கப்பட்டிருக்கும் பொருத்தங்கள் மொத்தம் 10 ஆகும். அவை

    1 - தினம், 2- கணம், 3 மகேந்திரம்,

    4- ஸ்திரி தீர்க்கம், 5 யோனி, 6 - ராசி,

    7 - ராசி அதிபதி, 8 வசியம், 9 - ரஜ்ஜு,

    10 - வேதை என்பதாகும் .

    முகூர்த்த தருப்பணம் முதலிய நூல்களில் திருமணப் பொருத்தங்கள் மொத்தம் 12 ஆக சொல்லப்பட்டுள்ளது . அதாவது, 11 - ஜாதி, 12 - நாடி என்பதாகும்.

    காலாமிர்தம் என்ற ஜோதிட நூலில் இந்த 12 பொருத்தங்களுடன் மேலும் 8 பொருத்தங்களை சேர்த்து 20 பொருத்தங்களாக சொல்லப்பட்டுள்ளது .

    அதாவது 13 - கணிதம்,14 - ஆயம்,15 - பஞ்சபட்சி, 16 - யோகினி, 17- லிங்கம், 18 - பஞ்சபூதம், 19 - சந்திர யோக கூடம் , 20 - கோத்திரம்.

    "சூடாமணி உள்ள முடையான்" என்ற ஜோதிட நூலில் 21 வதாக விருட்சப் பொருத்தம் ஒன்றை சேர்த்து மொத்தம் 21 பொருத்தங்களாக சொல்லப்பட்டுள்ளது .

    ஆனால், நட்சத்திர பொருத்தங்களில் தினப் பொருத்தம் , கணப்பொருத்தம், யோனிப் பொருத்தம் , ராசிப் பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம் ஆகிய 5 பொருத்தங்களே முக்கியமாக சொல்லப்பட்டுள்ளன. நட்சத்திர பொருத்தம் இருந்த போதிலும் ஆண் பெண் ஜாதகங்களை கூர்ந்து ஆராய்வது நல்லது. ஜாதகத்தில் உள்ள பாவங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். பொருத்தம் இருந்து ஜாதகத்தில் வலு இல்லை எனில் அந்த திருமணம் வெற்றியைத்தராது.

    எல்லாவற்றிற்கும் மேலாக ஆண், பெண்களுக்கு மனப் பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் . மனப்பொருத்தம் இல்லாமல் வலுக்கட்டாயமாக திருமணங்களை செய்து வைக்கக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.

    திருமணப் பொருத்தத்தில் மிருகசீரிஷம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய நட்சத்திரங்கள் மிகச் சிறந்த நட்சத்திரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நான்கும் ஆண் அல்லது பெண்ணுக்குரிய நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் பார்க்காமலே திருமணம் செய்யலாம் என்ற விதி ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளன.

    - ஜோதிடர் கே. ராதா கிருஷ்ணன்

    • கடன்தொல்லை போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும்.
    • வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள்.

    இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகைகளையும் வளர்த்து வருகின்றனர்.

    அகத்தியர் பெருமான் கூறி உள்ள மரம், செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல், செய்தொழில் நஷ்டம், வருவாய் இழப்பு, கடன்தொல்லை, மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதிப்படைவோர் தனது கிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக்கொண்டிருப்பார்கள்.

    எனவே கீழ் கண்ட செடி, மரங்களை உங்கள் இல்லங்களில் நடவேண்டாம். இருந்தாலும் வீட்டின் முன்புறம் நட வேண்டாம்...

    1) முருங்கை

    2) கல்யாண முருங்கை

    3) பருத்தி

    4) அகத்தி

    5) பனை

    6) நாவல்

    7) எருக்கு

    8) வெள்ளெருக்கு

    9) புளி

    10) கருவேலம்

    11) கள்ளி

    12) கருவூமத்தை

    13) இலவம்

    14) வில்வம்

    15) ருத்ராக்ஷம்

    16) அத்தி

    17) உதிரவேங்கை

    வாஸ்து குற்றமில்லா வீடாக இருந்தாலும் இந்த செடிகள், மரங்கள்வீட்டின் முன்புறம் இருந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது.

    -சித்தர் குரல் சிவசங்கர்

    • இந்தியர்களுக்கு வாட்ச் தயாரிக்கத் தேவையான பயிற்சியையும் அளித்தது.
    • டிஜிடல் கடிகாரம் என பலவற்றையும் அறிமுகம் செய்தது.

    இன்று ஒவ்வொரு வீட்டிலும் எத்தனையோ கைக்கடிகாரங்கள் இருக்கலாம். நேரத்தைக் காட்டுவதோடு பல தகவல்களைத் தரக்கூடிய ஸ்மார்ட் வாட்சுகள் இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் வாட்ச் என்பது மிகப்பெரிய ஆடம்பரம்.

    டைம்-பீஸ் எனப்படும் கடிகாரங்கள்கூட மிகச்சில வீடுகளில்தான் இருந்தன. ஆலைகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் நேரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்தந்த ஷிஃப்ட் நேரத்துக்கு சங்கு ஒலிக்கும். பல நகராட்சிகளிலும் நேரத்தை அறிவிக்க சங்கு ஒலிக்கும்.

    ஒரு முறை பிரதமர் நேருவுக்கு ஒரு ஸ்விஸ் கைக்கடிகாரம் பரிசளிக்கப்பட்டது. இது போன்ற வாட்சை இந்தியாவில் தயாரிக்க முடியுமா என்று அவர் விசாரித்தபோது நமட்டுச் சிரிப்புதான் பதிலாக வந்தது.

    அதற்குப் பின் நேருவின் அரசு ஜப்பானின் சீக்கோ நிறுவனத்திடம் வாட்ச் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பெற முயற்சித்தது. அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் சீக்கோவின் போட்டி நிறுவனம் சிட்டிசன் இந்தியாவுக்கு உதவ முன் வந்தது. சிட்டிசன் நிறுவனம் தொழில்நுட்பத்தை அளித்ததோடு நின்று விடாமல் இந்தியர்களுக்கு வாட்ச் தயாரிக்கத் தேவையான பயிற்சியையும் அளித்தது.

    இதன் விளைவாக, 1961ஆம் ஆண்டு பெங்களூரில் HMT நிறுவனத்தில் வாட்ச் தயாரிக்கும் பிரிவு துவக்கப்பட்டது. அந்தப் பிரிவைத் துவக்கி வைத்தவர் நேரு. அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் 1963இல் HMTயின் முதல் தயாரிப்பான HMT Janata வாட்ச் விற்பனையையும் துவக்கி வைத்தார்.

    இந்தியாவின் முதல் கைக்கடிகாரத் தயாரிப்பு நிறுவனமான எச்எம்டி இந்தியாவின் கைக்கடிகார சந்தையில் கோலோச்சியது. சாவி கொடுக்கும் கடிகாரங்களை அடுத்து ஆட்டோமேடிக் கடிகாரங்கள் வந்தன. அடுத்து முதல் பிரெயில் கடிகாரம், முதல் குவார்ட்ஸ் கடிகாரம், முதல் அனலாக்-டிஜிடல் கடிகாரம் என பலவற்றையும் அறிமுகம் செய்தது.

    -ஆர். ஜாஜஹான்

    • நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது.
    • நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

    உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் ஐயா நம்மாழ்வார்.

    ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,

    இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,

    மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,

    நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.'

    இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது.

    நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

    உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

    நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.

    உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

    மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

    எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு.

    -எச்.கே. ஷாம்

    • மனம் ஒரு போதும் அமைதியாக இருக்க முடியாது.
    • மனம் ஒருபோதும் தெளிவாக இருக்க முடியாது.

    மக்கள் என்னிடம் வந்து, "அமைதியான மனதை எப்படி அடைவது?" என்று கேட்கிறார்கள்.

    நான் அவர்களிடம் சொல்கிறேன்,

    "அப்படி எதுவும் இல்லை. அமைதியான மனதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. "

    மனம் எப்போதும் அமைதியாக இருக்காது;

    மனம் இல்லை என்பதே அமைதி.

    மனம் ஒரு போதும் அமைதியாக இருக்க முடியாது.

    மனதின் இயல்பே பதட்டமாக இருப்பது.,

    குழப்பத்தில் இருப்பது தான்..

    மனம் ஒருபோதும் தெளிவாக இருக்க முடியாது.

    அது தெளிவைக் கொண்டிருக்க முடியாது,

    ஏனென்றால் மனம் என்பது குழப்பம்.

    மனம் இல்லாமல் தெளிவு சாத்தியம்,

    மனம் இல்லாமல் அமைதி சாத்தியம்;

    மனம் இல்லாமல் அமைதியாக இருப்பது சாத்தியம்,

    எனவே அமைதியான மனதை அடைய முயற்சிக்காதீர்கள்.

    அப்படி நீங்கள் செய்தால், ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் சாத்தியமற்ற பரிமாணத்தில் நகர்கிறீர்கள் என்று அர்த்தம்.

    -ஓஷோ

    • தாமிரபரணி என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
    • சமவெளியில் தாமிரபரணியுடன் சேரும் முதல் துணை ஆறு மணிமுத்தாறு.

    தாமிரபரணி தோன்றும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரையில் ஆற்றின் நீளம் 125 கி.மீ. தமிழகத்திற்குள்ளேயே உற்பத்தியாகி, தமிழகத்திற்குள்ளேயே கடலில் கலக்கும் அரசியல் சிக்கல்களுக்கு ஆட்படாத ஒரே நதி இதுதான். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நதிக்கரையில் நாகரிகமான மக்கள் வாழ்ந்திருந்தார்கள் என்று அகழ்வாய்வுகள் சுட்டிக் காட்டுகிறது.

    ஆறு கடலில் கலக்கும் இடத்தில் முத்துகள் கிடைத்தன. இந்த இடத்தில் தான் கொற்கை துறைமுகம் இருந்தது. இத்துறைமுகம் குறித்து "தி பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்திரியன் ஸீ" மற்றும் தாலமியின் "ஜியாகரபி" ஆகிய இரு நூல்களிலும் காணலாம். கொழும்புக்கு அருகில் இந்த துறைமுகம் இருந்ததால் பன்னாட்டு வணிகத்திற்கான திறவுகோல் என ஆங்கிலேயர்கள் கருதினர்.

    தமிழின் பழம்பெரும் இலக்கியங்கள் எல்லாம், இந்த நதியைப் 'பொருநை' எனக் குறிப்பிடுகின்றன. தாமிரபரணி என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. வடமொழியில் 'தாம்ர' என்றால் செம்பு அல்லது சிவப்பு. 'பர்ண' என்றால் இலை. வர்ண என்றால் நிறம். எனவே செம்பு நிற ஆறு அல்லது சிவப்பு இலைகளுடனான ஆறு என்று இருந்திருக்க வேண்டும். அசோகர் கால கல்வெட்டுகளை ஆய்வு செய்த பிஷப் கால்டுவெல் தாப்ரபோனி தாம்ரபரணி மற்றும் தாம்பபாணி என்ற சொற்கள் இருப்பதைக் குறிப்பிடுகிறார்.

    கடல் மட்டத்திலிருந்து 1867 மீ உயரமுள்ள பொதிகையிலிருந்து புறப்படும் தாமிரபரணி பாணதீர்த்தம் வரையில் அடர்ந்த வனங்களின் வழியே பயணித்து பள்ளத்தாக்கில் விழுகிறது. பாணதீர்த்தம் வருவதற்குள் பேயாறு, உள்ளாறு ஆகிய இரு நதிகளும், கீழிறங்கியவுடன் பாம்பாறும், கோரையாறும் இணைகிறது. இங்கிருந்து மெலிதாக இறங்கி, பின்னர் சமமான தளத்தில் செல்கிறது.

    முண்டந்துறை எனும் இடத்தில் தாமிரபரணியின் இடது புறத்தில் மற்றொரு முக்கிய ஆறான சேர்வலாறு இணைகிறது. சேர்வலாறை சேர்த்துக் கொண்டு வரும் தாமிரபரணி அகத்தியர் அருவி, கல்யாணி தீர்த்தம் என்ற பெயரில் நூறு மீட்டர் அருவியாகக் குதிக்கிறது. இங்கிருந்தே முழுமையாக அதன் சமவெளிப் பயணம் தொடங்குகிறது. சமவெளியில் தாமிரபரணியுடன் சேரும் முதல் துணை ஆறு மணிமுத்தாறு.

    செங்கல்தேரி என்ற அடர்ந்த வனப்பகுதியில் தோன்றி, மலைப் பகுதியிலேயே வரட்டாறு, குசுங்கிளியாறு, கீழ் மணிமுத்தாறு ஆகிய ஆறுகளை தன்னுள் இணைத்துக் கொண்டு தலை அணை என்ற அணைக்கட்டை அடைகிறது. அம்பாசமுத்திரம் அருகே கன்னடியன் அணைக்கட்டில் தாமிரபரணியுடன் மணிமுத்தாறு இணைகிறது.

    ராமநதி, ஜம்புநதி ஆகிய இரு நதிகளின் தண்ணீரை தாங்கிக் கொண்டு வரும் வராகநதி பின்னர் கடனாநதியில் இணைகிறது. வராகநதி கடனாநதியில் இணைவதற்கு முன்பே கல்லாறு, கருமேனியாறு கடனாநதியில் இணைந்துவிடும். மேலக்கடையத்திலுள்ள மலைப்பகுதியில் இந்த ஆறுகள் தோன்றுகின்றன.

    கடனாநதியில் அணைகட்டக் கோரி தோழர். நல்லகண்ணு உள்ளிட்ட ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். அதன் விளைவாக அணை கட்டப்பட்டது. எனவே கடனாநதி அணைக்கு 'கம்யூனிஸ்ட்களின் கைக்குழந்தை'என்று பெயர். கடனாநதி திருப்புடை மருதூர் என்ற இடத்தில் தாமிரபரணியுடன் சங்கமிக்கிறது. களக்காடு மலையில் உற்பத்தியாகும் பச்சையாறு தருவை என்ற இடத்தில் தாமிரபரணியுடன் கலக்கிறது.

    குற்றாலம் மலைப்பகுதியில் தோன்றும் ஆறு சிற்றாறு. சிற்றாற்றில் ஐந்தருவியாறு, ஹரிஹராநதி, அழுதகண்ணியாறு, ஹனுமாநதி கழுகுமலை உப்போடை ஆகிய ஐந்து துணையாறுகள் கலக்கிறது. ஹரிஹரா நதியில் குண்டாறு, மொட்டையாறும், ஹனுமா நதியில் கருப்பா நதியும் இணைகிறது. பல நதிகளை தன்னுடன் இணைத்து சிற்றாறு பேராறாக மாறி சீவலப்பேரி எனுமிடத்தில் தாமிரபரணியுடன் கலக்கிறது.

    தாமிரபரணி தன்னுள் 137 துணை நதிகளை இழுத்துக் கொண்டு மன்னார்வளைகுடாவில் பழையகாயல் எனும் இடத்தில் கடலில் கலக்கிறது. காயல் என்றால் கடலும் நதியும் சங்கமிக்கும் இடம் என்று பொருள். தாமிரபரணி வளம்மிக்க வண்டல் பகுதியை மட்டுமா உருவாக்கியது..?

    தாமிரபரணி உருவாக்கிய அழகிய நாகரீகம் தான் ஆதிச்சநல்லூர். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள் அந்த மூதாதையர்கள். அவர்கள் மொகஞ்சதாரோ, ஹரப்பாவிற்கு முந்தையவர்கள். ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தான் இந்தியாவில் நடந்த முதல் அகழ்வாய்வு.

    -சூர்யா சேவியர்

    • காலை உணவாக பப்பாளி, அன்னாசி, மாதுளை, திராட்சை, கொய்யா போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
    • வெள்ளரிக்காய், கேரட்டை பச்சையாக துருவி மிளகு, உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.

    உடல் எடை குறைக்க தினமும் காலையில் கண் விழித்ததும், வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சைப்பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

    காலை உணவாக பப்பாளி, அன்னாசி, மாதுளை, திராட்சை, கொய்யா போன்ற உணவுகளை சாப்பிடலாம்.

    பெருஞ்சீரகத்தை கொதிக்க வைத்து ஆற வைத்த நீரைக் குடிக்கலாம். சீரகம் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த நீருடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து குடிக்கலாம்.

    முந்தின நாள் இரவில் அன்னாசிப்பழத்தை துண்டு துண்டாக்கி ஓமம் சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து மறுநாள் காலை அதை மிக்சியில் அடித்து வடிகட்டி குடிக்கலாம்.

    முளைவிட்ட அல்லது வேக வைத்த கொள்ளு சாப்பிடலாம். கொள்ளுத்துவையல், கொள்ளு சூப் நல்லது. பகல் உணவில் பப்பாளிக்காய், சுரைக்காய், பூசணிக்காய் கூட்டு, பொரியல் சேர்த்துக் கொள்ளலாம்.

    சுரைக்காய், பூசணிக்காய் ஜூஸ் (வெல்லம் சேர்த்து) காலையில் குடிக்கலாம். வெள்ளரிக்காய், கேரட்டை பச்சையாக துருவி மிளகு, உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.

    சிக்கன்... அதிலும் இன்றைக்கு விற்கப்படும் கறிக்கோழிகளை சாப்பிடவே கூடாது. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களை ஊசி மூலம் செலுத்துவதால் குறைந்த நாட்களில் கொழுகொழுவென்று வளரும் அந்தக் கோழிகளைச் சாப்பிட்டால் அவற்றைப்போலவே உடல் கொழுகொழுவென்று வளரும். கூடவே பெண்மையை வளர்க்கும் அந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களைச் சாப்பிடுவோருக்கு குறிப்பாக ஆண்களுக்கு அது ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும். பெண்கள் சாப்பிடுவதால் அவர்கள் வெகுசீக்கிரமாக பருவ வயதை அடைந்துவிடுவார்கள். மேலும் கர்ப்பப்பையில் கட்டி உண்டாவதற்கு இந்த கறிக்கோழிகள் காரணமாக அமைகின்றன.

    மேலும் உடல் பருமனாக இருப்பவர்கள் எண்ணெய்ப்பலகாரங்களைத் தவிர்ப்பது நல்லது. மாலை நேரங்களில் வடை, போண்டா, பஜ்ஜி மற்றும் சிக்கன் 65, ஃப்ரைடு ரைஸ், பீஸா, பர்கர் போன்ற உணவுகளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

    மற்றபடி சிறுதானிய உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக தினை அரிசி பொங்கல், தினை பாயசம், தினை சாதம் என விதம்விதமாகச் செய்து சாப்பிடலாம். பச்சைப்பயறு, இஞ்சி, கறிவேப்பிலை, பூண்டு உள்ளிட்டவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

    -மரிய பெல்சின்

    • திதி செளம்ய தோஷம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது.
    • எல்லாவற்றிலும் திறன்பட செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள்.

    அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக திறமை இருக்கும். அமாவாசை திதியிலும், பெளர்ணமி திதியிலும்தான் ஒன்பது கிரகங்களும் வலுவடைகின்றன.

    தாய் கிரகமான சந்திரன் மறைவதால், தாயின் அரவணைப்பு அமாவாசையில் பிறந்தவர்களுக்கு குறையும் என்பது சாஸ்திரநம்பிக்கை ஆதலால் தாயின் அரவனைப்பில் வளராத ஆணாக இருந்தால் திருடராகவும்,பெண்ணாக இருந்தால் நல்லொழுக்கம் இல்லாதவராக இருப்பார் என்பது வழிவழியாக வந்த செய்தியாகும்.

    திதி செளம்ய தோஷம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட திதியில் பிறந்தால் அன்றைய தினம் ஒரு சில கிரகங்கள் வலுவிழந்திருக்கும். அதுதான் திதி செளம்ய தோஷம். ஆனால் அமாவாசை மற்றும் பெளர்ணமி திதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த திதி செளம்ய தோஷமும் இருக்காது.

    அதனால் இவர்களுக்கு மூளை பலம் அதிகம். வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல், வாய்ப்புகளை அவர்களே உருவாக்குவார்கள். அதற்காக சில தவறுகளை அவர்கள் அறியாமல் செய்வார்கள்.

    சுயநலக்காரர்களாக இருக்க மாட்டார்கள்... திறமைசாலிகளாக இருப்பார்கள், அவர்களது திறமையை மற்றவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள், அதற்காக வெறுத்து அவர்கள் தங்களைத் தாங்களே தலைவனாகவோ அரசனாகவோ பிரகடனப்படுத்திக் கொள்வர். அதனால் அவர்களை தலைக் கனம் பிடித்தவர்கள் என்று கூறுவர்.

    அமாவாசையில் பிறந்தவர்கள் ஏதாவது ஒரு மன வருத்தத்திலேயே இருப்பார்கள், ஒரு தேடல் இருக்கும். இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தி அடைய மாட்டார்கள். ஒரு விதமான மன உளைச்சலுடன் இருப்பார்கள். ஏனெனில் அமாவாசையன்று சந்திரன் வலுவிழப்பதுதான்.. சந்திரன் மனோகாரகன் என்பதால் எப்போதும் ஒருவித மன சஞ்சலத்திலேயே இருப்பார்கள். சாதித்துவிட்ட பின்னரும் இன்னமும் சாதிக்கவில்லை சாதிக்கவில்லை என்றே மன உளைச்சலில் இருப்பர்.

    நல்ல வாழ்க்கை துணை அமையும், ஆனாலும் இன்னும் நல்லவராக அமைந்திருக்கலாமே என்று எண்ணுவர். சாப்பிடும் வரை திருப்தி அடைவர், பிறகு குறை சொல்வார்கள். எல்லாவற்றிலும் திறன்பட செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள். தாய் தந்தையை நேசிப்பவர்களாக இருப்பர்.

    -ஜோதிடர் சுப்பிரமணியன்.

    • தென் தமிழகத்தையும், வட ஈழத்தையும் பெருவெள்ளம் சூழ்வதற்கான அடிப்படைக் காரணம்.
    • புவி வெப்பமயமாதல் என்று மாநாடு கூடிப் பேசுவதற்கும் சம்பந்தம் இல்லை.

    'எல் நீனோ' (El Nino), சரியாக உச்சரித்தால் 'எல் நீன்யோ' என்று சொல்லலாம். ஸ்பானிய மொழியில் 'ஆண் குழந்தை' என்னும் அர்த்தம் தருவது. 1600 ஆம் ஆண்டுகளில் பெரு தேசத்து மீனவர்கள் , மார்கழி மாதத்தில் பசிபிக் சமுத்திரம் வெப்பமாவதை அவதானித்தார்கள். பிற்காலங்களில் அந்த விளைவுக்கு 'ஆண் குழந்தை' என்று பெயரிட்டார்கள். கடல் வெப்பமடைவதற்கு அந்த ஆண் குழந்தையே காரணம் என்ற முடிவுக்கு வந்ததால், ஸ்பானிய மொழியில் 'ஆண் குழந்தை' என அர்த்தம் தரும் 'எல் நீன்யோ' என்ற பெயர் கொடுக்கப்பட்டது.

    அது என்ன 'எல் நீன்யோ'? பசிபிக் சமுத்திரத்தின் தென்னமெரிக்கப் பகுதி ஏன் வெப்பமடைகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலே, இன்று தென் தமிழகத்தையும், வட ஈழத்தையும் பெருவெள்ளம் சூழ்வதற்கான அடிப்படைக் காரணம்.

    'தீவிர எல் நீன்யோ' (Super El Nino) வரப்போகிறது, வரப்போகிறது என்று பல மாதங்களாக, மேற்குலக வானிலை ஆராய்ச்சியாளர்களும், இயற்கைவளப் பராமரிப்பாளர்களும் தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்தியும், யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. விளைவு??? இன்று தென்தமிழகமும், வட ஈழமும் வரலாறு காணாத பாதிப்புடன் அலறிக் கொண்டிருக்கின்றன.

    2023ஆம் ஆண்டு உலகமெங்கும் ஏற்பட்ட காலநிலைப் பிறழ்வைக் கணித்த ஆராய்ச்சியாளர்கள், 2024இல் 'தீவிர எல் நீன்யோ' (Super El Nino) உருவாகும் என்று கணித்துவிட்டார்கள். அதன் பாதிப்புகள் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு இயற்கை இடர்களைக் கொண்டுவரும் என்றும் எச்சரித்துவிட்டார்கள். சில இடங்களில், பெருங்குளிர். சில இடங்களில் பெருங்காற்று, சில இடங்களில் பெருமழை மற்றும் வெள்ளம். .

    அது என்ன 'என் நீன்யோ'?

    பசிபிக் சமுத்திர நீரில் ஏற்படும் வெப்பநிலை உயர்வினால், ஆவியாகும் நீராவியின் செறிவு வளிமண்டலத்தில் ஏற்படுத்தும் மாற்றமே 'எல் நீன்யோ' ஆகும். சூடான காற்று, மேகக் கூட்டங்களாகப் பெருகிப் பசிபிக் சமுத்திரத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனைகளுக்கு நகர்ந்து, காலநிலைப் பிறழ்வை உருவாக்குகிறது. அத்துடன் கடலடி நீரோட்டத்திலும் வெப்பநிலை மாற்றங்கள் உருவாகின்றன. இவ்விழைவு, சராசரியாக ஏழு ஆண்டுகளுக்கிடையில் நடைபெறும் ஒரு இயற்கை விளைவுதான்.

    சமுத்திர நீரின் வெப்ப அதிகரிப்பால், சூடான நீராவி அதிகளவில் வளிமண்டலத்தை அடைவதால், புவியின் மொத்த வளிமண்டலக் கோளமும் வெப்பநிலை மாற்றமடைகிறது. அதனால், புவியெங்கும் பரவலாகக் காலநிலைப் பிறழ்வுகள் உருவாகின்றன.

    2023ஆம் ஆண்டு சூரியப் புயல் காரணமாக உலகம் முழுவதும் அதிகளவு வெப்பம் இருந்ததால், 2024ஆம் ஆண்டு 'தீவிர என் நீன்யோ' ஆண்டாக இருக்குமென்று திடமாகக் கணித்திருந்தார்கள். இதுவே இன்றைய நமக்கான பேரழிவுக்கும் காரணம். இந்த எல் நீன்யோ, வளிமண்டல வெப்பநிலையைச் சராசரியாக 0.5°C அளவுக்குக் குறைக்கும்வரை தொடரும். அதற்கு 2 மாதங்களோ அல்லது அதிகமாகவோ எடுக்கலாம்.

    'எல் நீன்யோ' வளிமண்டல வெப்பநிலையில் உருவாக்கும் விளைவு, இயற்கையாய் நடைபெறும் ஒன்றுதான். இதற்கும், புவி வெப்பமயமாதல் என்று மாநாடு கூடிப் பேசுவதற்கும் சம்பந்தம் இல்லை.

    எல் நீன்யோ ஏற்படுத்தும் வெப்பநிலை அதிகரிப்பைப் போல, வெப்பநிலைக் குறைப்பையும் இயற்கை உருவாக்கும். அதே பசிபிக் சமுத்திரத்தில் நடக்கும் வெப்பநிலைக் குறைப்பு விளைவை 'லா நின்யா' என்பார்கள். ஸ்பானிய மொழியில் 'பெண் குழந்தை' என்று அர்த்தம். இந்த 'லா நின்யா', அவுஸ்ரேலியக் காடுகளை அப்பப்போ எரிய வைக்கிறது.

    'எல் நின்யோ' மற்றும் 'லா நீன்யா' ஆகிய இரண்டும் இயற்கையின் இரண்டு விளைவுகளே! மனிதனுக்கும் அவற்றுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. மனிதனின் முட்டாள்தனம், இதனுடன் சேர்ந்து மேலதிகமான விளைவுகளை உருவாக்குகின்றன. அவை தனியானவை.

    -ராஜ்சிவா

    • பல பெரியவர்களுக்கு பிள்ளைகளை பார்க்காத ஏக்கத்திலேயே இதயம் வலிக்கிறது.
    • பிள்ளைகளால் மருத்துவ செலவுக்கு பணம் அனுப்ப முடிகிறது, வந்து பார்க்க வழியில்லை.

    வாழ்க்கையின் வெற்றிக்கு ஓடுவது தவறில்லை. ஆனால் நிம்மதி மற்றும் குடும்ப சந்தோஷத்தை தொலைத்துவிட்டு ஓடுவது பயனற்றது.

    எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள்..

    நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு சொந்த ஊர் சுமையாக இருந்தது.. அதை உதறி வீசினார்கள், வேகம் மேலும் கூடியது.

    பந்தயம் மேலும் கடினமான போது தாய்மொழி சுமையாக இருந்தது. அதையும் வீசினார்கள் இன்னும் வேகம் அதிகரித்தது.

    பின்னர் அறச்சிந்தனைகள் பெரும் சுமையாயின . அவை அனைத்தையும் உதறிவிட்டு ஓடினார்கள்.

    இறுதியில் உறவுகள் யாவும் சுமையாகிப்போயின. அவற்றையும் கழற்றி வீசிவிட்டு பொருளாதாரப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் நவீன மனிதர்கள்.

    இப்போது பொருளாதாரம் மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை என்ற வெறி மட்டும் எஞ்சி உள்ளது. இனி வீசி எறிய எதுவுமில்லை.

    குடும்பங்கள் யாவும் சிதறிக்கிடக்கின்றன. மடிக்கணினி திரை வழியாக பேரப்பிள்ளைகளை கொஞ்சும் பெரியவர்கள் உருவாகி விட்டார்கள். பிறந்த பிள்ளையின் பசிக்கு பால் ஊட்டவும் மலத்தை கழுவவும் கூட நேரம் இல்லாத இளம் அம்மாக்கள் உருவாகி விட்டனர்.

    பல பெரியவர்களுக்கு பிள்ளைகளை பார்க்காத ஏக்கத்திலேயே இதயம் வலிக்கிறது.

    பிள்ளைகளால் மருத்துவ செலவுக்கு பணம் அனுப்ப முடிகிறது, வந்து பார்க்க வழியில்லை.

    எல்லோருடைய நேரத்தையும் நிறுவனங்கள் விழுங்கி விட்டன. நகரங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. மனித மாண்பு வெகுவாக சுருங்கி விட்டது.

    மூன்றே வயது நிரம்பிய பிள்ளைகள் மழலைக்காப்பகத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்த கால கல்வி முறையில் பிள்ளைகள் முழுமையாக வீட்டில் இருப்பதே ஐந்து வயது வரைக்கும் தான், அதன் பின்னர் ஓடத்தொடங்கும் அவர்கள், வாழ்நாள் முழுவதற்கும் நிற்பதற்கு வழியே இல்லை.

    தொடக்கத்தில் கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக பிரிந்தன. இப்போது தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து இயங்குகிறார்கள்.

    மனித இனம் தனது அழிவுக்கான ஒரு வழிபாதையில் ஓடத்தொடங்கி விட்டது, இனி இதை தடுப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

    -சிவசங்கர்

    • மரவள்ளிக்கிழங்கில் உள்ள இரும்பு, தாமிரம் ரத்த சோகையை கட்டுப்படுத்தும்.
    • மரவள்ளிக்கிழங்கின் தன்மையால் அவை உடலுக்கு விஷமாக மாறிவிடும்.

    "மன்மதக் கிழங்கு" -ஆம் இது நமது மரவள்ளிக் கிழங்கிற்கு இன்னொரு பெயர்! மரவள்ளிக் கிழங்கில் தான் அவ்வளவு ரொமான்ஸ் இருக்கிறது! ஆண்மையை வலுவாக்கும் இந்த மன்மதக் கிழங்கைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.. மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. இதனால் உடலில் வலுவோடு புத்துணர்வு தோன்றும்!

    இன்பமான தாம்பத்ய வாழ்வு திகட்டத் திகட்ட கிட்டும்! மேலும் இக்கிழங்கு நம் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைப்பதால் வீரியம் அதிகரிக்கும்! நீண்டநேரம் கலவி கொள்ளும் ஆற்றலைத் தரும்!

    மரவள்ளிக்கிழங்கில் உள்ள இரும்பு, தாமிரம் ரத்த சோகையை கட்டுப்படுத்தும். விந்தணுக்களை அதிகரிக்கும்! மேலும் இதில் அதிக நார்சத்து இருப்பதால் எளிதில் சீரணமாக உதவும். உடல் எப்போதும் சீராக இருக்கும்! இதில் இடம்பெற்றுள்ள புரதச் சத்தும், வைட்டமின் கேவும், எலும்பு மற்றும் திசுக்கள் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைப்பதால் ஆண்கள் எல்லா நிலையிலும் உடலுறவு கொள்ளலாம்!

    இதிலிருந்து தயாரிக்கப்படும் முக்கிய மாவுப் பொருள் ஜவ்வரிசி. இது "கஞ்சி" செய்ய உதவும்! இக்கஞ்சி வயிற்று புண் ஆறுவதற்கும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. அதிக அளவில் மாவுச்சத்து மிக்க மரவள்ளிக்கிழங்கு செக்ஸ் ஆற்றலை மட்டுமின்றி உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது.

    வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு, உடலுக்கு ஆற்றலைத்தரும். இதில் கவனிக்க ஒரு முக்கியமான விஷயம் மரவள்ளிக் கிழங்கு சாப்பிடும் போதோ அல்லது சாப்பிட்டபின்போ அன்றைய நாளில் இஞ்சி/ சுக்கு சாப்பிடக்கூடாது. மரவள்ளிக்கிழங்கின் தன்மையால் அவை உடலுக்கு விஷமாக மாறிவிடும்.

    - வெங்கடேஷ் ஆறுமுகம்.

    ×