என் மலர்
கதம்பம்

திருமணப் பொருத்தம்!
- சிலருக்கு திருமண வாழ்க்கை வெற்றியைக் கொடுக்கின்றது.
- ஜாதகப் பொருத்தம் பார்ப்பதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
சிலருக்கு திருமண வாழ்க்கை வெற்றியைக் கொடுக்கின்றது. சிலருக்கு துன்பத்தைக் கொடுக்கின்றது. இதற்குக் காரணம் ஆண், பெண் இவர்களின் ஜாதகப் பொருத்தமே .
ஜாதகப் பொருத்தம் பார்ப்பதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றில் முதல் அம்சம் ஆண், பெண் இரு பாலரின் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய பொருத்தம் பார்ப்பதாகும். திருமணத்தின் பொருட்டு சாஸ்திரங்களில் மகரிஷிகளால் விதிக்கப்பட்டிருக்கும் பொருத்தங்கள் மொத்தம் 10 ஆகும். அவை
1 - தினம், 2- கணம், 3 மகேந்திரம்,
4- ஸ்திரி தீர்க்கம், 5 யோனி, 6 - ராசி,
7 - ராசி அதிபதி, 8 வசியம், 9 - ரஜ்ஜு,
10 - வேதை என்பதாகும் .
முகூர்த்த தருப்பணம் முதலிய நூல்களில் திருமணப் பொருத்தங்கள் மொத்தம் 12 ஆக சொல்லப்பட்டுள்ளது . அதாவது, 11 - ஜாதி, 12 - நாடி என்பதாகும்.
காலாமிர்தம் என்ற ஜோதிட நூலில் இந்த 12 பொருத்தங்களுடன் மேலும் 8 பொருத்தங்களை சேர்த்து 20 பொருத்தங்களாக சொல்லப்பட்டுள்ளது .
அதாவது 13 - கணிதம்,14 - ஆயம்,15 - பஞ்சபட்சி, 16 - யோகினி, 17- லிங்கம், 18 - பஞ்சபூதம், 19 - சந்திர யோக கூடம் , 20 - கோத்திரம்.
"சூடாமணி உள்ள முடையான்" என்ற ஜோதிட நூலில் 21 வதாக விருட்சப் பொருத்தம் ஒன்றை சேர்த்து மொத்தம் 21 பொருத்தங்களாக சொல்லப்பட்டுள்ளது .
ஆனால், நட்சத்திர பொருத்தங்களில் தினப் பொருத்தம் , கணப்பொருத்தம், யோனிப் பொருத்தம் , ராசிப் பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம் ஆகிய 5 பொருத்தங்களே முக்கியமாக சொல்லப்பட்டுள்ளன. நட்சத்திர பொருத்தம் இருந்த போதிலும் ஆண் பெண் ஜாதகங்களை கூர்ந்து ஆராய்வது நல்லது. ஜாதகத்தில் உள்ள பாவங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். பொருத்தம் இருந்து ஜாதகத்தில் வலு இல்லை எனில் அந்த திருமணம் வெற்றியைத்தராது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆண், பெண்களுக்கு மனப் பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் . மனப்பொருத்தம் இல்லாமல் வலுக்கட்டாயமாக திருமணங்களை செய்து வைக்கக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
திருமணப் பொருத்தத்தில் மிருகசீரிஷம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய நட்சத்திரங்கள் மிகச் சிறந்த நட்சத்திரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நான்கும் ஆண் அல்லது பெண்ணுக்குரிய நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் பார்க்காமலே திருமணம் செய்யலாம் என்ற விதி ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளன.
- ஜோதிடர் கே. ராதா கிருஷ்ணன்






