என் மலர்
கதம்பம்

தவிர்க்கக் கூடாத கிழங்கு!
- கருணைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து நிறைவாகக் காணப்படுகிறது.
- மற்ற நோய் உள்ளவர்கள் கருணைக்கிழங்கை தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
'மண்பரவு கிழங்குகளில் கருணை இன்றி புசியோம்' என்கிறார் தேரையர். அதாவது, 'மண்ணுக்கு அடியில் பரவி வளரும் கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கைத் தவிர்க்கக் கூடாது' என்றும் 'பிற கிழங்குகளை உண்ண மாட்டோம்' என்றும் 'நோய் அணுகா' விதியில் குறிப்பிடுகிறார்.
கருணைக்கிழங்கு சுவையிலும் மருத்துவ குணத்திலும் சிறந்து விளங்கக்கூடியது. சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ஆகியவையும் கருணைக்கிழங்கு வகையைச் சேர்ந்தவைதான்.
கிழங்குகளில் எளிதாகச் செரிமானமாகக் கூடியது கருணைக்கிழங்கு. மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் ஆகிய அன்றாடம் உண்ணும் உணவுகளில் சேர்த்துக்கொள்ளப்படும் கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கில் மட்டுமே அதிக நார்ச்சத்து உள்ளது. மற்ற கிழங்குகளில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே நார்ச்சத்து காணப்படுகிறது.
கருணைக்கிழங்கைத் தவிர மற்ற கிழங்கு வகைகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் வாய்வுக்கோளாறு, மந்தம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். அதனால் செரிமானக் குறைபாடு ஏற்படும்; வாய்வுக்கோளாறு அதிகரித்து உடல் முழுவதும் பரவி, தொல்லை கொடுக்கும். குறிப்பாக, மூட்டுகளில் வலியை உண்டாக்கும். ஆனால், கருணைக்கிழங்கிலுள்ள நார்ச்சத்து, வாய்வு ஏற்படாமல் தடுக்கும்.
கருணைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து நிறைவாகக் காணப்படுகிறது என்பதால் இதயத்தசைகள் வலுப்பெற உதவும். அதனால் இதயநோய்கள் நெருங்காது.
பசியைத் தூண்டி இரைப்பைக்கு வலுசேர்க்கும்; குடலில் கிருமி சேராமல் தடுக்கும்; கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேர்வதைக் குறைக்கும்; ரத்தநாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுப்பதுடன், ரத்தம் உறைதலைத் துரிதப்படுத்துவதிலும் முக்கியப் பங்குவகிக்கிறது. நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்னைகளுக்கு நல்மருந்து. பெண்களுக்கு ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படாமல் தடுக்கும். முக்கியமாக, 40 வயதுக்கு மேல் மெனோபாஸ் ஏற்படும்போது உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கும்.
மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கருணைக்கிழங்கு சாப்பிட்டுவர நிவாரணம் கிடைக்கும். மூலம், ஆசனவாயில் ஏற்படும் பிளவு, ரத்தக்கசிவு, கட்டி போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். ஆசனவாயின் உள்சவ்வில் ஏற்படும் கிழிசல், ரணத்தைச் சரிசெய்யும் ஆற்றல் கருணைக்கிழங்கிலுள்ள பைட்டோ கெமிக்கலுக்கு இருக்கிறது. அந்த வேதிப்பொருள், `ஆசனவாய்ப் புற்று வராமல் தடுக்கும்' என்று நவீன மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, பாரம்பரிய மருத்துவமுறைகளில் கருணைக்கிழங்கைத் தவிர மற்ற கிழங்குகளைக் கட்டாயம் தவிர்க்கச் சொல்கின்றனர். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக்கிழங்கை முதன்மையாகக் கொண்டு பல நோய்களுக்கு லேகியம் தயாரித்து மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.
உடல் எடை அதிகரித்து மூட்டுவலி, முடக்குவாதம் உள்ளிட்ட கோளாறுகளால் அவதிப்படுவோர் கருணைக்கிழங்கை தினசரி சாப்பிட வேண்டியது அவசியம். உடலைக் குளிர்விக்கும் உணவு என்பதால் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கிழங்கைத் தவிர்ப்பது நல்லது. மற்ற நோய் உள்ளவர்கள் கருணைக்கிழங்கை தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
-டாக்டர் தெ.வேலாயுதம்






