என் மலர்tooltip icon

    கதம்பம்

    தற்சார்பு வாழ்க்கைக்கு வழி
    X

    தற்சார்பு வாழ்க்கைக்கு வழி

    • கலப்பையால் உழுகிறார்கள் என்கிறான் ஒரு பையன். ஒரு பெண், டிராக்டர் என்கிறாள்.
    • எது நல்லது என்ற கேள்விக்கு டிராக்டர் தான் சிறந்தது என்கிறான் மாணவன்.

    ஜே.சி.குமரப்பா ஒரு கிராமிய பொருளாதார நிபுணர். கிராமியப் பொருளாதாரத்தைப் பற்றி கற்றுத் தருவதில் அவருக்கு மிஞ்சியவர் யாருமில்லை. காந்தி நிகேதனில் தங்கியிருந்த அவர் மாணவர்களுக்கு ஒரு நாள் வகுப்பு எடுக்கும்போது, அவர்களில் எத்தனை பேர் விவசாய வீட்டுக்காரர்கள் என்று கேட்கிறார். முக்கால் பங்கு மாணவர்கள் கையைத் தூக்குகின்றனர்.

    பரவாயில்லையே, உங்களுக்கு வேண்டிய பகுதியை நான் கூறுகின்றேன் என்று சொல்லி, நீங்கள் நிலத்தை உழுவதைப் பார்த்து இருக்கிறீர்களா என்று கேட்கிறார்.

    மாணவர்கள் சிரித்தபடியே இதைக் கூடவா பார்க்காமல் நாங்கள் இருப்போம் என்கின்றனர்.

    எல்லாம் சரி. நிலத்தை எதைக் கொண்டு உழுகிறார்கள்.?

    கலப்பையால் உழுகிறார்கள் என்கிறான் ஒரு பையன். ஒரு பெண், டிராக்டர் என்கிறாள்.

    எது நல்லது என்ற கேள்விக்கு டிராக்டர் தான் சிறந்தது என்கிறான் மாணவன்.

    எப்படி என்கிறார் அவர்.?

    எங்க அப்பா ஒரு நாள் முழுவதும் உழுதால் 50 சென்ட் நிலம்தான் உழ முடியும். கடுமையான வெயிலில், சூடான மணலில் நடந்து செல்ல வேண்டும். இப்படி நாள் முழுவதும் உழ அவர் இருபது மைல் நடக்க வேண்டும்.. அந்த பாடுபட வேண்டும். ஆனால், டிராக்டரில் உழும்போது ஒரு கார் ஓட்டுவது போல அமர்ந்து ஓட்டி அன்றைய முழு வேலையையும் ஒரு பதினைந்து நிமிடத்திற்குள் முடித்துவிடலாம் என்கிறான்.

    குமரப்பா 'நீ சொல்வது சரிதான். நான் சில கேள்விகளை கேட்கிறேன், பதில் சொல்ல முடியுமா.?' என்கிறார்.

    அந்த டிராக்டர் ஒன்றை ஊரிலுள்ள யாராவது செய்ய முடியுமா? அந்த டிராக்டர் செய்ய இரும்பு உங்கள் ஊரில் கிடைக்கிறதா.?அது செயல்பட டீசல் நம் ஊரில் கிடைக்கிறதா.? பழுது ஏற்பட்டால் உன் அப்பாவால் பழுது பார்க்க முடியுமா? எல்லா விவசாயிகளும் இந்த டிராக்டரை வாங்க முடியுமா? என்று கேள்வி மேல் கேள்வி அடுக்கும்போது அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது என்கிற கேள்வியோடு இன்னொரு செய்தியும் வெளிவருகிறது.

    அந்த டிராக்டர் நிலத்தில் சென்றால் நிலம் எவ்வளவு இறுகிப் போகும் என்பது தெரியுமா.? அதைவிட அந்த அந்த டிராக்டர் சாணி போடுமா மூத்திரம் பெய்யுமா என்ற போது மாணவர்கள் சிரிக்கின்றனர்.

    உன் அப்பாவு உழும் கலப்பை மரத்தால் செய்யப்பட்டது. அந்த மரம் இங்கு கிடைக்கிறது. அந்த மரம் கிடைக்கும் தோட்டம் நம்மளால் பராமரிக்கப்படுகிறது. அந்தத் தோட்டத்தில் இருந்த மரம் வெட்டப்பட்டு அதனை ஒரு ஆசாரியார், கொல்லரால் செய்யப்பட்டு கலப்பை கிடைக்கிறது.

    கட்டியிருக்கும் பசு கன்று போடுகிறது. அது ஆண் கன்றாக இருந்தால் இரண்டு வருடங்களில் உழுவதற்கு வரும். வண்டி இழுக்க பயன்படும். தண்ணீர் இறைக்கப் பயன்படும். அதற்கு தட்டை, வைக்கோல் தான் போட வேண்டும். அது உழும்போது இடும் சாணமும், பெய்யும் மூத்திரமும் சிறந்த உரம்.

    நாம் யாரையும் சாராமல் வாழும் நிலை ஏற்பட வேண்டுமானால் டிராக்டர் நல்லதா, கலப்பை கொண்டு உழுவது நல்லதா என்று பொட்டில் அடித்தாற்போல் கேள்வி கேட்டார்.

    -என் ராஜகோபால்

    Next Story
    ×