search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை கிரிக்கெட் - இன்று இங்கிலாந்து-வங்காளதேசம், நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்
    X

    உலகக்கோப்பை கிரிக்கெட் - இன்று இங்கிலாந்து-வங்காளதேசம், நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து-வங்காளதேசம், நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    கார்டிப்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 10-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

    கார்டிப்பில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது.

    இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் பணிந்தது. பாகிஸ்தான் நிர்ணயித்த 349 ரன் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியால் 9 விக்கெட்டுக்கு 334 ரன்களே எடுக்க முடிந்தது. ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோர் அடித்த சதம் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.

    மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. 2-வது லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் போராடி வீழ்ந்தது. துடிப்பு மிக்க இளம் வீரர்களை கொண்ட வங்காளதேச அணிக்கு வாய்ப்பு கிடைத்தால் அதனை வகையாக பிடித்துக்கொண்டு ஆட்டத்தில் ஏற்றம் காண்பதுடன், எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆற்றல் படைத்தது.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எளிதல்ல. எனவே இந்த ஆட்டம் வங்காளதேச அணிக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காலையில் ஈரப்பதமான காற்று வீசும் என்றும் பின்னர் வெயில் அடிப்பதுடன் மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே ‘டாஸ்’ வெல்லும் அணி பவுலிங்கை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இங்கிலாந்து: ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க்வுட்.

    வங்காளதேசம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், முகமது சைபுதீன், மெஹிதி ஹசன், மோர்தசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரகுமான்.



    மற்றொரு போட்டி: டவுன்டானில் இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்து வலுவான நிலையில் உள்ளது.

    குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடமும், 2-வது ஆட்டத்தில் 34 ரன் வித்தியாசத்தில் இலங்கையிடமும் தோல்வி கண்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முகமது ஷேசாத் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நியூசிலாந்து அணி தனது வெற்றிப் பயணத்தை தொடர அதிக ஆர்வம் காட்டும். ஆப்கானிஸ்தான் அணி வெற்றி கணக்கை தொடங்க போராடும். நியூசிலாந்து அணியின் சவாலை சமாளிக்க ஆப்கானிஸ்தான் சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும் எனலாம். போட்டி நடைபெறும் டவுன்டானில் வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும் பிற்பகலில் மழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

    ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜஜாய், நூர் அலி ஜட்ரன், ரமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி, முகமது நபி, குல்படின் நைப் (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், ரஷித் கான், தவ்லத் ஜட்ரன், ஹமித் ஹசன், முஜீப் ரகுமான்.
    Next Story
    ×