என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • கட்டிடம் இடிந்து விழுந்ததால், அப்பகுதி முழுவதும் தூசி நிறைந்து காணப்பட்டது.
    • கடந்த 4 ஆண்டுகளாக பயனற்றுக் கிடந்த 22 மாடி கட்டிடம் தகர்ப்பு.

    அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் சூறாவளியால் சேதமடைந்து, கடந்த 4 ஆண்டுகளாக பயனற்றுக் கிடந்த 22 மாடி கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

    சில நொடிகளில் கட்டிடம் இடிந்து விழும் காட்சி வைரலாகி வருகிறது.

    கட்டிடம் இடிந்து விழுந்ததால், அப்பகுதி முழுவதும் தூசி நிறைந்து காணப்பட்டது. மேலும், சுமார் ஐந்து மாடி உயரத்திற்கு இடிந்த குவியல்கள் இருந்தது.

    இதற்கு முன்பு கேபிடல் ஒன் டவர் என்று அழைக்கப்பட்ட கட்டிடம், லாரா மற்றும் டெல்டா சூறாவளிகளில் மோசமாக சேதமடைந்தது.

    கட்டிடத்தின் உரிமையாளர்கள், அதை சரிசெய்ய பல முயற்சிகளை மேற்கொண்டு, இறுதியில் அதை இடிக்க முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • சிகாகோவில் நடந்த அமெரிக்கவாழ் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார்.

    சிகாகோ:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    சிகாகோ நகரில் சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கவாழ் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன். நம்முடைய தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் 'வேர்களைத் தேடி' திட்டத்தின் மூலமாக, தமிழ்நாட்டைப் பார்க்க நம்முடைய பண்பாட்டை இறுகப் பற்றிக் கொள்ள நம்முடைய சொந்தங்களை அடையாளம் காண வந்த இளைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி அது.

    அதிலும் ராதிகா என்ற மியான்மர் நாட்டைச் சேர்ந்த நம் சகோதரி, பல ஆண்டுகளாக விட்டுப்போன உறவை மீண்டும் கண்டுபிடித்து நா தழுதழுக்கப் பேசியது என் நெஞ்சிலேயே இருக்கிறது.

    தன்னுடைய வள்ளிப் பாட்டியைக் கண்டுபிடிக்க நினைத்த அவர், இப்போது தன் மாமா வீட்டோடு சேர்ந்திருக்கிறார். "அங்கு கலாச்சாரம் எல்லாம் இருக்கிறது. ஆனால், சொந்தக்காரர்கள் குறைவு" என சொல்லி அவர் கலங்கியது, உறவுகளைப் பிரிந்து ஏங்கும் அத்தனை அயலகத் தமிழர்களின் உணர்வின் பிரதிபலிப்பாக இருந்தது.

    ஊரைத் தாண்டிய ஊரும் உலகமும் எப்படி இருக்கும் என்று அறியாக் காலத்திலேயே, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'என எல்லோரையும் சொந்தமாகக் கருதி இலக்கியம் படைத்த புகழுக்குச் சொந்தக்காரர்கள் நாம்.

    அதனால்தான் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என நான் தொடர்ந்து சொல்கிறேன்.

    இன்றைக்கு பல நாடுகளில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கிறோம். அந்த உயர் பொறுப்புகளுக்குக் கடைக்கோடியில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வரமுடியும் என்பதை சாத்தியப்படுத்தியது, நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கும் சமூக நீதியும் அதற்காகப் பாடுபட்ட தலைவர்களும்தான்.

    தமிழ்நாட்டுத் தமிழர்களை மட்டுமல்ல; உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக நமது திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது.

    புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக 'அயலகத் தமிழர் நலவாரியம்' உருவாக்கி இருக்கிறோம். ஜனவரி 12-ம் நாளை அயலகத் தமிழர் நாளாகக் கொண்டாடுகிறோம். அந்த வாரியத்தின் மூலமாக, 'தமிழால் இணைவோம்', 'உலகெங்கும் தமிழ்', 'தமிழ் வெல்லும்' ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருக்கிறது.

    கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,398 பேரை அயல்நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மீட்டு வந்தோம்.

    மொத்தத்தில், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், "நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது" என்ற உணர்வை, நம்பிக்கையை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்படுத்தி வருகிறது. இது அனைத்துக்கும் முத்தாய்ப்பான திட்டம்தான் 'வேர்களைத் தேடி' என்று, அயலகத்தில் வாழும் நம்முடைய குழந்தைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம். அதனால்தான், நான் எப்போதும் சொல்வேன்: "இது ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு!"

    சாதி-மத வேறுபாடுகளை வீழ்த்தும் வல்லமையும், எல்லோரையும் ஒற்றுமைப்படுத்தும் வலிமையும் தமிழுக்கு தான் இருக்கிறது. "வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என்ற உணர்வு கொண்டவர்கள் நாம். இந்த எண்ணத்தை விதைத்தது திராவிட இயக்கம். உலகத்தில் வேறு எந்த இனத்துக்கும் இல்லாத பெருமை நம் தமிழினத்துக்கு உண்டு.

    மொழிப்பற்றுக்கும் மொழி வெறிக்குமான வேறுபாட்டையும்-இனப்பற்றுக்கும் இனவெறிக்குமான வேறுபாட்டை அறிந்தவர்கள் நாம்.

    இங்கு கூடியிருக்கும், உங்களில் சிலர் மட்டும்தான் இந்த நாட்டுக்கு விரும்பி வந்திருப்பீர்கள். மற்றவர்கள் சூழ்நிலை காரணமாகவும், பணிகளுக்காகவும் இங்கு வந்திருப்பீர்கள். கிணற்றுத் தவளைகள் அல்ல தமிழர்கள்; வானத்தையே வசப்படுத்தும் வானம்பாடிகள். திறமையால் தமிழன் தலை நிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடை யாளம் நீங்கள்.

    உங்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கை. உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். உங்கள் உயர்வுக்குக் காரணமான அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள்.

    உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது எல்லாம். ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள். உங்களால் முடிந்த செயல்களை தமிழ்நாட்டுக்குச் செய்யுங்கள். தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் உங்கள் குழந்தைகளிடம், "நம்முடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இங்கு முதலமைச்சராக இருக்கிறார். அவர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என சொல்லுங்கள்.

    நான் இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரமும் மகிழ்ச்சியான முகங்களும்தான் எப்போதும் என் ஞாபகத்துக்கு வரும் என தெரிவித்தார்.

    இந்த விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சிகாகோ துணைத் தூதர் சோம்நாத் கோஷ், அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, ராம்பிரசாத் 37 தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையரில் ஆஸ்திரேலிய ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பர்செல்-ஜோர்டான் தாம்சன் ஜோடி, ஜெர்மனியின் டிம் புட்ஸ்-கெவின் ஜோடியுடன் மோதியது.

    இதில் ஆஸ்திரேலிய ஜோடி 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.

    • ஜோ பைடன், மோடி, ஆஸ்திரேலியா பிரதமர், ஜப்பானிய பிரதமர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
    • பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தில் 22-ந்தேதி இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசுகிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. குவாட் அமைப்பின் 2024-ம் ஆண்டு மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு மாநாடு இந்தியாவுக்கு பதிலாக அமெரிக்காவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.

    அவர் மாநாட்டை தலைமை தாங்கி நடத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா சம்மதம் தெரிவித்தது.

    இதையடுத்து வருகிற 21-ந்தேதி ஜோ பைடனின் சொந்த ஊரான டெலாவேர் வில்மிங்டனில் குவாட் உச்சிமாநாடு நடக்கிறது. இதில் ஜோ பைடன், மோடி, ஆஸ்திரேலியா பிரதமர், ஜப்பானிய பிரதமர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஐ. நா. பொதுச்சபையின் அமர்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்ல உள்ளனர். இதையடுத்து அவர்கள் அமெரிக்காவில் நடக்கும் குவாட் மாநாட்டில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த ஆண்டுக்கு பதில் அடுத்த ஆண்டு இந்தியாவில் குவாட் உச்சி மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தில் 22-ந்தேதி இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசுகிறார். 22, 23-ந்தேதிகளில் ஐ.நா.வின் எதிர்கால மாநாட்டில் உரையாற்றுகிறார்.

    • காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடுஅமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் லெக்சிங்டனுக்கு தெற்கே கிராமப்புற பகுதியில் உள்ள இன்டர்ஸ்டேட் 75 நெடுஞ்சாலையில் வாலிபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர் சரமாரியாக சுட்டதில் 7 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இதையடுத்து சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் 32 வயதான ஜோசப் ஏ. கூச் என்பது தெரியவந்துள்ளது.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.
    • 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் சபலென்கா 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    2-வது முறையாக அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா தனது முதல் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

    கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்யிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • பெண்கள் இரட்டையரில் ஜெலினா-லுட்மிலா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோ-உக்ரைனின் லுட்மிலா கிச்னாக் ஜோடி, சீனாவின் ஷாங் ஷுய்-பிரான்சின் கிறிஸ்டினா மெடோனோவிக் ஜோடியுடன் மோதியது.

    இதில் ஜெலினா-லுட்மிலா ஜோடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.

    இந்த ஜோடிக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

    • பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது.
    • அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பெண் குண்டு பாய்ந்து இறந்தார்.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

    அப்போது இஸ்ரேல் ராணுவ வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஐசெனுா் எஸ்கி (26) என்ற அமெரிக்க பெண் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா்.

    சமூக செயற்பாட்டாளரான ஐசெனுா் எஸ்கி துருக்கி குடியுரிமையும் பெற்றவர். சர்வதேச ஒற்றுமை இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார்.

    இந்நிலையில், இச்சம்பவத்துக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு.

    அமெரிக்க குடிமகன் ஒருவரின் துயர மரணத்தால் நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். நாங்கள் இஸ்ரேல் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு மேலும் தகவல்களைக் கேட்டுள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    இதேபோல் துருக்கி அரசும் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் கடந்த 10 நாளாக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டிருந்த இஸ்ரேல் படையினா் அங்கிருந்து வெளியேறினர்.

    • ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது.
    • நீதிபதி ஜுவான் மெர்ச்சனை டிரம்ப், சந்தித்து தேர்தலுக்குப் பிறகு தண்டனை வழங்கும் வகையில் தேதியைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது.

    இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் கமலா ஹாரிசின் பிரசார குழுவுக்கு டிரம்பை விட கிட்டத்தட்ட3 மடங்கு அதிக நன்கொடை வந்துள்ளது. கமலா ஹாரிசுக்கு 361 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி குவிந்துள்ளது.

    டிரம்புக்கு 130 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை கிடைத்துள்ளது. கமலா ஹாரிசுக்கு கிடைத்த தொகை, இந்த அமெரிக்க தேர்தலில் ஒரு மாதத்தில் ஒரு கட்சிக்கு கிடைத்த அதிகபட்ச தொகையாகும்.

    தேர்தலில் முதலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் தனது உடல்நிலை காரணமாக தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோபைடன் கடந்த ஜூலை 21-ந்தேதி அறிவித்தார்.

    அதன்பின் கமலா ஹாரிஸ் தேர்தல் களத்தில் குதித்தார். அன்றில் இருந்து கமலா ஹாரிசின் பிரசார குழு 615 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

    இதுகுறித்து கமலா ஹாரிஸ் பிரசார மேலாளர் ஜூலி சாவேஸ் ரோட்ரிக்ஸ் கூறும்போது, குறுகிய காலத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு வரலாற்றை உருவாக்கி உள்ளார். இது தேர்தலில் நெருங்கிய வெற்றி தரும் என்றார். தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த நிதி ஆதாயம் ஹாரிசுக்கு சாதகமாக உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.



    இதற்கிடையே ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இதில் வருகிற செப்டம்பர் 18-ந்தேதி டிரம்புக்கு தண்டனை விதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நீதிபதி ஜுவான் மெர்ச்சனை டிரம்ப், சந்தித்து தேர்தலுக்குப் பிறகு தண்டனை வழங்கும் வகையில் தேதியைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, அதிபர் தேர்தல் முடியும் வரை, டிரம்ப் மீதான தண்டனை அறிவிப்பதை ஒத்தி வைக்க உத்தரவிட்டார்.

    • சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்றனர்.
    • ஹீலியம் வாயு கசிவு உள்ளிட்ட கோளாறுகளால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது

    வாஷிங்டன்:

    இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5-ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அவர்கள் 8 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது.

    ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஹீலியம் வாயு கசிவு உள்ளிட்ட கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் விண்வெளியில் சிக்கி உள்ளனர்.

    இதற்கிடையே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளியில் இருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என அமெரிக்க விண்வெளி கழகமான நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இல்லாமல் பூமிக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளியில் இருந்து இந்திய நேரப்படி நேற்று மாலை பூமிக்கு புறப்பட்டது.

    இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை 9.30 மணிக்கு நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சேன்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பரில் தரையிறங்கியது.

    பூமியை நெருங்கியபோது விண்கலத்தில் இருந்து பாராசூட் விரிவடைந்தது. அதன்பின் விண்கலம் மெதுவாக தரையில் இறங்கியது.

    சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் இல்லாமல் விண்கலம் திரும்பி உள்ளது. விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதன் அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீரர் பிரிட்ஸ் போராடி வென்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், பிரான்சிஸ் தியாபே ஆகியோர் மோதினர்.

    தொடக்கம் முதலே இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் செட்டை தியாபே கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை பிரிட்ஸ் கைப்பற்றினார்.

    இதேபோல் 3வது செட்டை தியாபேவும், 4வது செட்டை பிரிட்சும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை பிரிட்ஸ் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில் பிரிட்ஸ் 4-6, 7-5, 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இது இவரது கிராண்ட்ஸ்லாம் போட்டியின் முதல் இறுதிப்போட்டி ஆகும்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் பிரிட்ஸ், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்கொள்கிறார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதன் அரையிறுதி சுற்றில் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர்,

    இங்கிலாந்தின் ஜாக் டிராப்பர் உடன் மோதினார்.

    இதில் சின்னர் 7-5, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை இறுதிப் போட்டி நடைபெறும்.

    ×