என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 524 ரன்கள் குவித்தது.
    • ஒல்லி போப் இரட்டை சதமடித்து அசத்தினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுருண்டது.

    இங்கிலாந்து சார்பில் பிராட் 5 விக்கெட்டும், ஜேக் லீச் 3 விக்கெட்டும், மேத்யூ பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்கம் முதல் இங்கிலாந்து வீரர்கள் அடித்து ஆடினர். ஜேக் கிராவ்லி 56 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் சதமடித்து 24 பவுண்டரி 1 சிக்சருடன் 182 ரன்களை விளாசினார். ஒல்லி போப் இரட்டை சதமடித்து 22 பவுண்டரி 3 சிக்சருடன் 205 ரன்கள் குவித்தார். ஜோ ரூட் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    இதையடுத்து, 352 ரன்கள் பின்தங்கிய நிலையில், அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஹாரி டெக்டர் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். மார்க் அடைர் 88 ரன் எடுத்து வெளியேறினார். ஆண்டி மெக்பிரின் 86 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், அயர்லாந்து 9 விக்கெட்டுக்கு 362 ரன்கள் எடுத்தது.

    இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டாங் 5 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 12 ரன் எடுத்து அபார வெற்றி பெற்று 1-0 என தொடரை கைப்பற்றியது. ஒல்லி போப் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    • இங்கிலாந்து நாட்டு பிரதமராக இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார்.
    • காரை ஓட்டி வந்தது 50 வயது மதிக்கதக்கவர் என்பது தெரியவந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டு பிரதமராக இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவரது அதிகாரப்பூர்வ இல்லம் லண்டன் நகரில் எண் -10 டவுணிங் தெருவில் உள்ளது.

    இங்குள் ஒயிட் ஹவுஸ் என்ற பகுதியின் முதலாவது கேட்டில் பிரதமர் ரிஷிசுனக் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இந்த முதலாவது கேட் நுழைவு வாயிலில் மர்ம கார் ஒன்று மோதியது. இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் காரை ஓட்டி வந்தது 50 வயது மதிக்கதக்கவர் என்பது தெரியவந்தது. அவரது தலை முழுவதும் நரைத்து இருந்தது.

    இது தொடர்பாக ஒரு வரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஏதேச்சையாக நடந்த விபத்தா? அல்லது சதி வேலையா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
    • கோஹினூர் வைரத்தைத் திரும்பத்தர முடியாது என்று இங்கிலாந்து கூறிவிட்டது.

    லண்டன் :

    உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்று, கோஹினூர் வைரம்.

    இந்த கோஹினூர் வைரம், இந்தியாவில் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. இதன் எடை 105.6 கேரட்.

    இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் வைத்திருந்தார் என்றும், அது 1857-ம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்கு பின்னர் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    இந்த வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்த வைரத்தைத் திரும்பத்தர முடியாது என்று இங்கிலாந்து கூறிவிட்டது.

    இந்த வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தைத்தான் மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்தார். ஆனால், இந்த வைரத்தை இந்தியா சொந்தம் கொண்டாடுவது உள்பட பல்வேறு சர்ச்சைகள் உள்ளதால், இது பதிக்கப்பட்ட கிரீடத்தை அணிவதை இங்கிலாந்து ராணி கமீலா பார்க்கர் தவிர்த்து விட்டார். அவர் அதற்கு பதிலாக ராணி மேரி அணிந்திருந்த கிரீடத்தைத்தான் அணிந்தார்.

    இருப்பினும் இந்த வைரம், இங்கிலாந்து அரசின் சொத்தாகத்தான் இருக்கிறது.

    லண்டன் நகரில் உள்ள லண்டன் டவரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற நவம்பர் மாதம் வரை நடைபெறுகிற புதிய ஆபரணக் கண்காட்சியில் இந்த வைரம் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்தியா சொந்தம் கொண்டாடுகிற வைரத்துக்கு, இது வெளிப்படையான அங்கீகாரமாக அமைகிறது.

    கோஹினூர் வைரம் மட்டுமின்றி, மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆபரணங்களும் இந்தக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

    இதுபற்றி லண்டன் டவரின் உறைவிட கவர்னர் ஆண்ட்ரூ ஜாக்சன் கூறும்போது, "மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து இந்த புதிய ஜூவல் ஹவுஸ் கண்காட்சியைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆபரணக் கண்காட்சி, வரலாற்றை முன் எப்போதையும் விட விரிவாக ஆராய்கிறது" என தெரிவித்தார்.

    • துறைமுகத்தின் புகைப்படம் மே மாதத்தின் ஆரம்பத்தில் டிரோன் மூலம் எடுக்கப்பட்டது.
    • புகைப்படக் கலைஞர் ரய் ஜோன்ஸ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    இங்கிலாந்தில் உள்ள துறைமுகம் ஒன்று டால்பினின் தலை போன்று காட்சியளிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

    இந்த புகைப்படம் மே மாதத்தின் ஆரம்பத்தில் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்டது.

    துறைமுகத்தின் அழகிய புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் ரய் ஜோன்ஸ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

    அப்போது அவர், "இங்கிலாந்தில் உள்ள அந்த துறைமுகத்திற்கு நாம் பலமுறை சென்றிருந்தபோதிலும் தனித்தன்மை வாய்ந்த அதன் வடிவத்தை இதற்கு முன்பு நாம் பார்த்திருக்க மாட்டோம்" என்றார்.

    இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

    • எதிர்பார்த்ததைவிட ஏழு மடங்கு அதிகமாக ரூ.140 கோடிக்கு வாள் ஏலம் போனதாக ஏல நிறுவனம் அறிவிப்பு.
    • போர்களில் அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் இந்த வாள் ஏலத்தில் விடப்பட்டது.

    இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வாள் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.140 கோடிக்கு விற்பனையானது.

    லண்டனில் போன்ஹாம்ஸ் எனப்படும் ஏல நிறுவனம் ஒன்று திப்பு சுல்தானின் வாள் விற்பனைக்கான ஏலத்திற்கு ஏற்பாடு செய்தது.

    இந்த வாள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள திப்பு சுல்தானின் அரண்மனையின் தனிப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

    போர்களில் அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் இந்த வாள் தற்போது ஏலத்தில் விடப்பட்டது.

    ஏலத்தின்போது இரண்டு ஏலத்தாரர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிகழ்ந்ததாகவும், அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை எனவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதியில் எதிர்பார்த்ததைவிட ஏழு மடங்கு அதிகமாக ரூ.140 கோடிக்கு வாள் ஏலம் போனது.

    இதுகுறித்து ஏல நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் ஒயிட் கூறுகையில், திப்பு சுல்தானின் அனைத்து ஆயுதங்களிலும் இந்த வாள் சிறப்பு வாய்ந்தது. திப்பு சுல்தானுடன் நெருங்கிய தனிப்பட்ட தொடர்பை கொண்டுள்ளது. அதன் பழமை மற்றும் சிறந்த கைவினைத்திறன் வாளை தனித்துவமாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் மாற்றியுள்ளது என்றார்.

    கடந்த 1799ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அன்று நான்காவது ஆங்கிலோ- மைசூர் போரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளால் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதன்பிறகு, துணிச்சலின் அடையாளமாக கருதப்பட்ட அவரது வாள் பிரிட்டிஷ் மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டின் பின்பகுதியில் இருந்து தீ பரவியதாக தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்தார்.
    • அந்த வீடு கடுமையாக சேதமடைந்ததால் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    லண்டன்:

    பிரிட்டனின் எஸ்செக்ஸ் கவுண்டியில் உள்ள டன்மாவ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமையன்று  நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் சிறிது நேரத்தில் நெருப்பில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, அந்த வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்கள் அங்குமிங்கும் ஓடியபடி சத்தமாக குரைத்தன.

    நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த வீட்டு உரிமையாளர், வீடுகள் தீப்பிடித்து எரிவதை அறிந்து உடனடியாக தன் மனைவியுடன் வெளியேறினார். சிறிது நேரத்தில் வீட்டின் மேற்பகுதி கொழுந்துவிட்டு எரிந்து சாம்பலாகியது. சரியான சமயத்தில் நாய்கள் குரைத்ததால் வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.

    வீட்டைவிட்டு வெளியேறியதும் தீயணைப்பு துணைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். வீட்டின் பின்பகுதியில் இருந்து தீ பரவியதாக தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்தார்.

    அந்த வீடு கடுமையாக சேதமடைந்ததால் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. தீப்பற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

    • இந்த கட்டிடம், மிகவும் சிதிலமடைந்து கல்நார் படிந்துள்ளதால் இப்போது ஆபத்தில் உள்ளது
    • சீரமைப்பு பணிகளை மேலும் தாமதம் செய்தால் செலவு அதிகமாகும்.

    லண்டன்:

    பிரிட்டன் பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மறுசீரமைப்புத் திட்டம் தாமதமானால், 147 ஆண்டுகள் பழமையான அந்த வளாகம் இடிந்து விழுந்து பேரழிவு ஏற்படலாம் என்று அந்நாட்டின் பாராளுமன்ற குழு எச்சரித்துள்ளது.

    கட்டிடக் கலையில் சிறந்த படைப்பாக கருதப்படும் இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையானது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது. பாராளுமன்றம் செயல்படக்கூடிய இந்த கட்டிடம், மிகவும் சிதிலமடைந்து கல்நார் படிந்துள்ளதால் இப்போது ஆபத்தில் உள்ளதாகவும், கட்டிடத்தில் பல ஆபத்துகள் இருப்பதாகவும் பாராளுமன்ற குழு கூறி உள்ளது.

    இதுபற்றி பிரிட்டன் பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையைச் சரிசெய்து மீட்டெடுக்க வேண்டும் என்று ஒருமித்த கருத்து நிலவினாலும், பல்வேறு காரணங்களால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்றுவரை, கட்டிடத்தைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களைவிட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதே கவனம் செலுத்தப்படுகிறது.

    பாராளுமன்றம் இருக்கும் அரண்மனையைச் சீரமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் என்னென்ன சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்று கூட முடிவெடுக்கவில்லை. பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு மற்றும் செலவும் முடிவு செய்யப்படவில்லை. சீரமைப்பு பணிகளை மேலும் தாமதம் செய்தால் செலவு அதிகமாகும். அது வரி செலுத்துவோருக்கே கூடுதல் சுமையாகும்.

    அரண்மனையில் சிறிய அளவிலான சீரமைப்பு பணிகளுக்காக பிரிட்டன் பாராளுமன்றம் ஒரு வாரத்திற்கு 2 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 20,56,92,200) செலவு செய்கிறது. ஆனாலும், சுகாதாரம், பாதுகாப்பு பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. எனவே இந்த பிரச்சினையில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ஜேமி மெக்டொனால்ட் முதலாவதாக சீனாவில் உள்ள பெருஞ்சுவரை பார்வையிட்டார்.
    • சூப்பர்ஹீரோ அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதே இந்த பயணத்தின் நோக்கம் ஆகும்.

    லண்டன்:

    சிலர் வழக்கத்திற்கு மாறான செயல்களை செய்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்வதுடன், உலக சாதனைகளை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் உலகின் ஏழு அதிசயங்களையும் ஒரு வாரத்திற்குள் சுற்றிப் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    ஜேமி மெக்டொனால்ட் என்ற அந்த நபர், ஏழு நாட்களில் உலகின் அனைத்து அதிசயங்களையும் பார்வையிடும் சவாலை ஏற்று வெற்றிகரமாக முடித்துள்ளார். முதலாவதாக சீனாவில் உள்ள பெருஞ்சுவரை பார்வையிட்டார். அதன்பின்னர் இந்தியா வந்து தாஜ் மஹாலை பார்த்தார். ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரம், ரோமில் உள்ள கொலோசியம், பிரேசில் நாட்டில் உள்ள மீட்பர் கிறிஸ்து சிலை, பெருவில் உள்ள மச்சு பிச்சு, மெக்சிகோவில் உள்ள சிச்செனிட்சா இட்சா ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த ஏழு அதிசயங்களையும் சரியாக 6 நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்களில் அவர் பார்வையிட்டுள்ளார்.

    இந்த சாதனையை செய்து முடிக்க அவர் 13 விமானங்கள், 9 பேருந்துகள், 4 ரெயில்கள், 16 டாக்சிகள் மற்றும் ஒரு டோபோக்கன் ஆகியவற்றை பயன்படுத்தி 4 கண்டங்களில் மொத்தம் 36780 கி.மீ. பயணம் செய்திருக்கிறார்.

    மெக்டோனால்டின் இந்த சாதனைப் பயணத்திற்கு டிராவல்போர்ட் என்ற நிறுவனம் ஆதரவு அளித்தது. சூப்பர்ஹீரோ அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதே இந்த சாதனைப் பயணத்தின் நோக்கம் ஆகும். 

    • 2025ம் ஆண்டு வரை சோதனை அடிப்படையில் ஓட்டுனர் இல்லாத ஐந்து தானியங்கி பேருந்துகள் இயக்கப்படும்.
    • வாரத்திற்கு சுமார் 10,000 பயணிகள் பயணம் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

    உலகிலேயே முதல்முறையாக பிரிட்டனின் முதல் தானியங்கி பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து ஸ்காட்லாந்தின் ஃபோர்த் ரோடு பாலத்தின் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.

    இத்திட்டத்தின் சோதனை முயற்சியாக இன்வெர்கீதிங், ஃபைஃப் மற்றும் எடின்பர்க் பூங்காவிற்கு அருகிலுள்ள பெர்ரி டால் வரை பேருந்து சேவை இயக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் கெவின் ஸ்டீவர்ட் இந்த பேருந்தில் முதல் பயணியாக பயணம் செய்தார்.

    மேலும், 2025ம் ஆண்டு வரை சோதனை அடிப்படையில் ஓட்டுனர் இல்லாத ஐந்து தானியங்கி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் வாகனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பாதுகாப்பு ஓட்டுநர் மற்றும் டிக்கெட் விற்பனையாளர் என இரண்டு பணியாளர்கள் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஸ்டேஜ்கோச் தானியங்கி பேருந்துகள் எதிர்வினை நேரத்தைக் குறைப்பதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் வாரத்திற்கு சுமார் 10,000 பயணிகள் பயணம் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மழையால் போட்டி 45 ஓவராகக் குறைக்கப்பட்டது.
    • முதலில் ஆடிய அயர்லாந்து 319 ரன் குவித்தது.

    லண்டன்:

    அயர்லாந்து, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 45 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் பேட் செய்த அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஹாரி டெக்டர் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 112 பந்தில் 10 சிக்சர் உள்பட 140 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டாக்ரெல் 47 பந்தில் 74 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. நஜ்மல் ஹொசைன் சிறப்பாக ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார். தவ்ஹித் ஹிர்தோய் 68 ரன்கள் சேர்த்தார்.

    இறுதியில், ஆட்டத்தின் கடைசி ஓவரில் வங்காளதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • பொறியியல் பட்டதாரியான வெற்றியழகன் லண்டனில் பணிபுரிந்து, கடந்த 15 ஆண்டுகளாக அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
    • இங்கிலாந்து குடியுரிமை பெற்ற வெற்றியழகன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட நிலையில் கவுன்சிலராக வெற்றி.

    இங்கிலாந்தில் கடந்த 4ம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெற்றியழகன் என்பவர் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தை சேர்ந்தவரும், எம்.ஜி.ஆர் முதமைச்சராக இருந்தபோது குத்தாலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவரான பாப்பா சுப்ரமணியனின் மூத்த மகன் வெற்றியழகன்.

    பொறியியல் பட்டதாரியான இவர் லண்டனில் பணிபுரிந்து, கடந்த 15 ஆண்டுகளாக அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இங்கிலாந்து குடியுரிமை பெற்ற வெற்றியழகன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட நிலையில் கவுன்சிலராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில், மகனின் வெற்றி குறித்து தந்தை பாப்பா சுப்பிரமணியன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    • மன்னர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
    • இந்த விழாவில் கலந்து கொள்ள உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் லண்டனில் குவிந்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணை ஏறினார். ஆனால் அவரது அதிகாரபூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது.

    மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

    முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் லண்டனில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயம் வரை வண்ண மிகு ஊர்வலம் நடந்தது.

    மன்னர் சார்லசும், அவரது மனைவியும், ராணியுமான கமீலாவும் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட 6 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ராணுவ வீரர்கள் புடைசூழ ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இந்த சாரட் வண்டி தங்க முலாம் பூசப்பட்டது

    சாலையோரம் கொடியுடன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    மன்னர் சார்லஸ் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தைச் சென்றடைந்ததும் முறைப்படி மன்னர் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. 700 ஆண்டுகள் பழமையான சிம்மாசனத்தின் பின் நின்று கொண்டு கேண்டர்பரி ஆர்ச் பிஷப் மன்னர் சார்லசை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பினர். ராணுவ இசைக் கருவிகள் இசைக்கப்பட்டது. அதன்பின், மன்னர் 3-ம் சார்லஸ் சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

    உறுதிமொழி எடுத்ததும் மன்னரின் தலை மற்றும் உடல் பகுதியில் புனித எண்ணை தேய்த்து அபிஷேகம் நடைபெறும். இந்த எண்ணை மன்னருக்காக விசேஷமாக தயாரிக்கப்பட்டதாகும். பின்னர் மதம் மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரத்தை அளிக்கும் வகையில் அரச குடும்ப புனித உருண்டை அவருக்கு அளிக்கப்படும்.

    இந்நிலையில், மூத்த மதகுருமார்கள் புனிதப்படுத்தப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்ட பிறகு மன்னர் சார்லசுக்கு செங்கோல் வழங்கப்பட்டு ஆர்ச் பிஷப் அவரது தலையில் புனித எட்வர்ட்டின் கிரீடத்தை சூட்டி தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் அமர வைத்தார். அவரது மனைவி கமீலா சார்லசுக்கும் கிரீடம் சூட்டப்பட்டது. இந்த கிரீடம் 1953-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 முக்கிய தலைவர்கள், 203 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் மற்ற நாடுகளின் அரச குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    இந்திய அரசின் சார்பில் பங்கேற்க துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் தனது மனைவி டாக்டர் சுதிப் தன்கருடன் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று மாலை பக்கிங்காம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் பங்கேற்றார்.

    இந்த விழாவில் இந்து, சீக்கியம், முஸ்லீம், புத்தமதம், ஜெயின் உள்ளிட்ட அனைத்து மத தலைவர்களும் பங்கேற்கின்றனர். விழாவையொட்டி லண்டன் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×