என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • 1984ல் வேல்ஸ் (Wales) பகுதியில் சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்
    • தாக்கப்படும் அபாயம் இருந்தும் இங்கு வந்து உதவினர் என உக்ரைன் தொழிலாளர்கள் கூறினர்

    கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 ஆண்டுகளை கடந்து தீவிரமாக நடைபெற்று வருவதால், உக்ரைனில் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

    நூற்றுக்கணக்கான உக்ரைன் சுரங்க தொழிலாளர்களும் ரஷியாவிற்கு எதிராக போரில் களம் இறங்கி உள்ளனர்.

    1984ல் ஐரோப்பாவின் வேல்ஸ் (Wales) பகுதியில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உக்ரைன், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து சுரங்க தொழிலாளர்களும் ஆதரவளித்தனர்.

    நீண்ட நாள் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தினால் வருவாய் இல்லாமல் தவித்த அந்த தொழிலாளர்களுக்கு உலகெங்கும் இருந்து பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.


    அப்போது சோவியத் யூனியன் (Soviet Union) என அழைக்கப்பட்ட ஒருங்கிணைந்த ரஷியாவில், உக்ரைன் பகுதியில் இருந்த சுரங்க தொழிலாளர்களில் ஏராளமானவர்கள், வெல்ஷ் (Welsh) சுரங்க தொழிலாளர்களுக்கு பலவித உதவிப்பொருட்களை அனுப்பி வைத்தனர்.

    சுமார் 40 வருடங்கள் கடந்த பிறகும், தங்களுக்கு உக்ரைனியர்கள் செய்த உதவியை மறக்காத வெல்ஷ் பணியாளர்கள், தங்களின் ஊதியத்தை நன்கொடையாக வழங்கி, பல சரக்கு வாகனங்களில் மருந்து, மளிகை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களை தெற்கு வேல்ஸ் பகுதியில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நகருக்கு, சாலை வழியே கொண்டு சென்று வழங்கினர்.

    இது குறித்து உக்ரைன் சுரங்க தொழிலாளர்கள், "சுரங்க தொழிலாளர்கள் அனைவரும் ஒரே இனம் என்பதை 1984ல் நாங்கள் மறக்கவில்லை. அதே போல் அவர்களும் எங்களை இப்போது மறக்கவில்லை. குண்டு வீச்சில் தாக்கப்படும் அபாயம் உள்ளதை அறிந்தும் அவர்கள் துணிந்து வந்து எங்களுக்கு உதவினர்" என பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

    • நேற்றுடன், ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்தது
    • இங்கிலாந்து உக்ரைனுக்கு அளிக்கும் உதவிகளை வரவேற்கிறேன் என்றார் மன்னர்

    கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று, தனது அண்டை நாடான உக்ரைனை, ரஷியா, "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது.

    நேற்றுடன், ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால், தற்போது வரை போர் நிற்பதற்கான அறிகுறிகள் இல்லை.

    போர்நிறுத்தம் குறித்து உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை அமைப்பினர் விடுத்த கோரிக்கைகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.

    இப்பின்னணியில், உக்ரைனுக்கு அமெரிக்காவில் இருந்து கிடைத்து வந்த நிதியுதவிகள் தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைனுக்கு நிதியுதவி தொடர்ந்து அளிக்க போவதாக உறுதியளித்தார்.


    இந்நிலையில், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், உக்ரைனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    மன்னர் சார்லஸ் தெரிவித்திருப்பதாவது:

    எந்த வித முன்னறிவிப்போ, தூண்டுதலோ இன்றி ஒரு தாக்குதலை உக்ரைன் சந்தித்தது.

    அந்நாட்டு மக்கள் வார்த்தையில் விவரிக்க முடியாத அளவு துன்பத்தையும், அடக்குமுறையையும் சந்தித்து வருகின்றனர்.

    இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து அளித்து வரும் உதவிகளை வரவேற்கிறேன். இங்கிலாந்தில் உக்ரைன் வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ராணுவ பயிற்சியையும் பாராட்டுகிறேன்.

    அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு நிலவுகின்ற நேரத்தில் உக்ரைன் மக்களுக்கு சர்வதேச நாடுகள் உதவுவது பாராட்டத்தக்கது.

    மிகவும் நெருக்கடியான காலகட்டத்திலும் உக்ரைன் மக்கள் அசாத்திய மன உறுதியையும், வீரத்தையும் காட்டி வருவதை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு மன்னர் சார்லஸ் தெரிவித்தார்.

    பிப்ரவரி 6 அன்று மன்னர் சார்லசுக்கு புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டதும், அவர் பூரண நலம் பெற உலகெங்கும் உள்ள மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு செய்தி அனுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    • பிப்ரவரி 6 அன்று மன்னர் சார்லசுக்கு கேன்சர் இருப்பதாக அரண்மனை தெரிவித்தது
    • உலகெங்கிலும் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேலான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது

    கடந்த பிப்ரவரி மாதம், இங்கிலாந்து மன்னரான மூன்றாம் சார்லஸ், புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் அரண்மனை அதிகாரபூர்வமாக கடந்த பிப்ரவரி 6 அன்று தெரிவித்தது. ஆனால், எந்த வகையான கேன்சர் என்பது பற்றியோ உடலின் எந்த பாகத்தில் உள்ளது என்பது குறித்தோ அரண்மனை அலுவலகம் தகவல் வெளியிடவில்லை.

    மேலும், மன்னர் சார்லஸ் இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவர் புற்று நோய்க்கான சிகிச்சை பெற தொடங்கி விட்டதாகவும் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகெங்கும் உள்ள பல முக்கிய தலைவர்கள் செய்தி அனுப்பி வந்தனர்.

    மேலும், பல இங்கிலாந்து மக்களும் மன்னர் சார்லஸ் நலம் பெற அவருக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.

    இதுவரை உலகெங்கிலும் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேலான கடிதங்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குழந்தைகள் தங்கள் கைப்பட எழுதி மற்றும் வரைந்து அனுப்பியுள்ள கடிதங்கள் தினந்தோறும் அரண்மனையில் குவிகின்றன.


    இது குறித்து மன்னர் சார்லஸ் தெரிவித்திருப்பதாவது:

    இது போன்ற அன்பான எண்ணங்கள்தான் எனக்கு பெரும் ஆறுதலையும், ஊக்கத்தையும் தருகின்றன. பல கடிதங்களை படிக்கும் போது எனக்கு கண்களில் நீரே வந்து விட்டது.

    நான் நலமடைய விரும்பும் அனைவருக்கும் என் நன்றி.

    எனக்காக நேரம் ஒதுக்கி தங்களின் அன்பான வார்த்தைகளால் கடிதம் எழுதிய அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு சார்லஸ் தெரிவித்தார்.

    • மண்வெட்டியினால் தோண்டும் போது அது ஒரு பொருளின் மீது இடித்தது
    • 15 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், வெடிகுண்டு நிபுணர்கள் வந்திறங்கினர்

    இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள டேவன் (Devon) பிராந்தியத்தில் உள்ளது பிளைமவுத் (Plymouth) துறைமுக நகரம்.

    இந்நகரின் செயின்ட் மைக்கேல் அவென்யு (St. Michael Avenue) பகுதியில் வசித்து வந்த ஒருவர் தனது மகளின் வீட்டின் பிற்பகுதியை விரிவாக்கம் செய்ய கட்டுமான நிபுணருடன் ஆலோசித்து பணிகளை தொடங்கினார்.

    அப்போது மண்வெட்டியினால் அங்கு தோண்டும் போது ஒரு பொருளின் மீது அது இடித்தது. உடனடியாக வெளியே எடுக்க முடியாத அளவிற்கு பெரிதாக இருந்த அந்த பொருளை நீண்ட முயற்சிக்கு பிறகே அவர்களால் காண முடிந்து.

    தனது மனைவியின் ஆலோசனையின் பேரில், பெரிய உலோக உருண்டை வடிவிலான அந்த பொருளின் புகைப்படங்களை அந்த உரிமையாளர், காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பினார்.

    சுமார் 15 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், அவர் வீட்டிற்கு காவல்துறை அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் வந்திறங்கினர்.


    அந்த பொருள் ஒரு "வெடிகுண்டு" என்றும் அதை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகளுக்காக வந்துள்ளதாக தெரிவித்த அவர்கள், அந்த வீட்டின் சுற்றுப்பகுதியில் உள்ள அனைவரையும் தொலைதூரம் போகச் சொல்லி உத்தரவிட்டனர். அப்பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது.

    அந்த உலோக பொருள் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளில் ஒன்று என்பதால், அதனை அங்கேயே வெடிக்க முயன்றால் பல வீடுகள் நாசமடையலாம் என்பதால் நீண்ட ஆலோசனைக்கு பிறகு அந்த வெடிகுண்டை அந்த தோட்டத்தில் இருந்து, மிக பத்திரமாக வெளியே எடுத்து, ராணுவ வாகனத்தில் ஏற்றி, சுற்றி ஏராளமான மணல் மூட்டைகளை அடுக்கி, ஆட்கள் நடமாட்டமில்லாத சாலைகளின் வழியே எடுத்து சென்று, பின் ஒரு பெரிய காற்றடைத்த ரப்பர் படகில் ஏற்றி, கடலில் நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


    வெடிகுண்டு நிபுணர்களின் மேற்பார்வையில், எந்த பாதிப்புமின்றி அந்த குண்டு கடலில் வெடிக்க செய்யப்பட்டது.

    சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகே அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

    வெடிகுண்டு வெடித்தால் அதன் தாக்கம் 4,300 கட்டிடங்களுக்கும், பொதுமக்களில் 10,320 பேருக்கும் இருந்திருக்கும் என பிளைமவுத் நகர கவுன்சில் தெரிவித்தது.

    500 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு இரண்டாம் உலக போரில் இங்கிலாந்தில் வீசப்பட்டு வெடிக்காத பல குண்டுகளில் ஒன்று என வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

    • ரஷியாவிற்கு எதிராக பல வர்த்தக கட்டுப்பாடுகளை இங்கிலாந்து கொண்டு வந்தது
    • "உக்ரைனுக்கு இன்றும் என்றும் ஆதரவு தொடரும்" என்றார் ரிஷி சுனக்

    இன்றுடன், "சிறப்பு ராணுவ நடவடிக்கை" (special military operation) எனும் பெயரில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்து, 2 வருடங்கள் ஆகின்றன.

    ரஷியாவை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.

    போர் நிறுத்தம் மற்றும் படைகளை உக்ரைனிலிருந்து திரும்ப பெறுவது குறித்து பல உலக நாடுகள் கடந்த பல மாதங்களாக முன் வைத்த கோரிக்கைகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து வந்தார்.

    இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் ரஷியாவிற்கு எதிராக மேலும் பல பொருளாதார மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை இங்கிலாந்து கொண்டு வந்தது.

    பல்வேறு காரணங்களால் அமெரிக்காவிலிருந்து உக்ரைனுக்கு கிடைத்து வந்த பொருளாதார மற்றும் ராணுவ உதவிகள் தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைனை தொடர்ந்து ஆதரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமது நாடு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் ரிஷி சுனக், உக்ரைனுக்கு சுமார் ரூ. 2600 கோடி (250 மில்லியன் பவுண்ட்) மதிப்பிற்கு ராணுவ தளவாட உதவிக்காக நிதி ஒதுக்கியுள்ளார்.

    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்ததாவது:

    போர் தொடங்கி 2 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் ரஷியாவின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்க்கும் நிலைப்பாட்டில் இங்கிலாந்து மேலும் உறுதியாக உள்ளது.

    என்றுமே சர்வாதிகாரம் வெற்றி பெறுவதில்லை.

    நாங்கள் இன்றும் உக்ரைன் பக்கமே நிற்கிறோம்; தொடர்ந்தும் நிற்போம்.

    இதற்காக எத்தனை நாட்கள், என்னென்ன செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்வோம்.

    இவ்வாறு ரிஷி சுனக் தெரிவித்தார்.

    • விற்பனைத்தொகையில் 1000 யூரோக்களை சிறுவனின் பெற்றொர் நன்கொடையாக வழங்கினர்
    • ஆஸ்டனை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக ஆஸ்டனின் தாயார் கூறினார்

    இங்கிலாந்தின் நார்தாம்ப்டன் (Northampton) பகுதியை சேர்ந்த ஆஸ்டன் (Aston) எனும் சிறுவன், நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு உதவுவதற்காக, "திங்க்ஸ் அபவுட் ஸ்பேஸ்" (Things About Space) எனும் புத்தகத்தை தனது 8-வது வயதில் எழுதி, படிப்பதற்கு சிரமம் உள்ளவர்களுக்கு அதன் ஒலி பதிப்பையும் வெளியிட்டு புகழ் பெற்றான்.

    ஆஸ்டனின் புத்தகம், 700 பிரதிகளுக்கும் மேல் விற்று தீர்ந்தது.

    தற்போது 11-வயது ஆகும் ஆஸ்டன் எழுதிய புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைத்த தொகையில் 1000 யூரோக்களை இங்கிலாந்து வானியல் நிறுவனத்திற்கு நன்கொடையாக ஆஸ்டனின் பெற்றோர் வழங்கினர்.

    ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அந்த புத்தகத்தின் பல பிரதிகளை வாங்கி உள்ளூர் பள்ளிகளில் வினியோகித்தார்.

    ஆஸ்டன் முதலில் எழுதிய பதிப்புகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால், கடந்த ஆண்டு, அதன் இரண்டாவது பதிப்பை மீண்டும் வெளியிட வேண்டியிருந்தது.

    "பல நண்பர்கள் அந்த புத்தகத்தைப் பற்றி கேட்டது எனக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது. புத்தகம் எழுதி வெளியிடுவது எப்படி என கேட்பவர்களுக்கு நான் சொல்வது, மனது வைத்தால் யாராலும் இதை செய்ய முடியும் என்பதுதான். என்றாவது ஒரு நாள் எதிர்காலத்தில் விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்" என்று ஆஸ்டன் வானொலி பேட்டியில் கூறினார்.

    "ஆஸ்டனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று ஆஸ்டனின் தாயார் கூறினார்.

    பிரிட்டிஷ் விண்வெளி வீரர் டிம் பீக் (Tim Peake) ஆஸ்டனின் புத்தகத்தை குறித்து கேள்விப்பட்டு அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியதுடன், ஆஸ்டனின் புத்தகத்தின் பிரதியில் கையெழுத்திட்டு வாழ்த்தினார்.

    ஆஸ்டனுக்கு சில குழந்தைகளை தாக்கும் அபூர்வ வளர்ச்சி குறைபாட்டு நோய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இட்லி, தோசை, வடை, பொங்கல் என தென்னிந்திய உணவு வகைகளை வெளிநாட்டுகாரர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
    • வீடியோ வைரலாகி 18 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.

    தென்னிந்திய உணவு வகைகளுக்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. குறிப்பாக இட்லி, தோசை, வடை, பொங்கல் என தென்னிந்திய உணவு வகைகளை வெளிநாட்டுகாரர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

    இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சமையல்கலைஞரான ஜேக் ட்ரையன் என்பவர் தமிழ்நாட்டின் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றான பொரியலை தயார் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இன்ஸ்டாகிராமில் 'ட்ரையன் கிரீன் பீன் பொரியல்' என்ற தலைப்பில் அவர் பாரம்பரிய உணவு வகையான பொரியலை தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அந்த வீடியோவில், ட்ரையன் தனது பார்வையாளர்களை அன்புடன் வணக்கம் என வாழ்த்து சொல்லி தொடங்குகிறார். பின்னர் கறிவேப்பிலை, துருவிய தேங்காய், பருப்பு, வதக்கிய காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்து பொரியலை தயாரிக்கும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.

    இந்த வீடியோ வைரலாகி 18 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.

    • நோய்க்கான பல சிகிச்சை முறைகளிலும் நோயாளிகளுக்கு வலி குறைவதில்லை
    • வலியற்ற கேன்சர் சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

    உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று, கேன்சர் (cancer) எனப்படும் புற்றுநோய்.

    உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படக் கூடிய கேன்சர் நோய்க்கு, நவீன மருத்துவத்தில் பல சிகிச்சை முறைகளும், மாத்திரைகளும், மருந்துகளும் உள்ளதால் நோயை கட்டுக்குள் வைக்க முடிகிறது.

    ஆனால், இத்தகைய சிகிச்சை முறைகளில் நோயாளிகளுக்கு வலி அதிகம் இருப்பது தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது.

    கேன்சர் நோய் தீர்க்கும் வழிமுறைகள் மற்றும் வலியற்ற சிகிச்சை முறைகள் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், இங்கிலாந்தின் "கிழக்கு சஃபோல்க் மற்றும் வடக்கு எஸ்ஸெக்ஸ்" (East Suffolk and North Essex) பகுதியில் தேசிய சுகாதார சேவையின் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (NHS Foundation Trust) எனும் லாப நோக்கமற்ற அமைப்பு கேன்சர் நோயாளிகளுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் கேன்சர் நோய்க்கான சிகிச்சை அளித்து வருகிறது.

    இந்த அமைப்பை சார்ந்த மருத்துவர்கள் தங்கள் ஆய்வில் "லைட் தெரபி" (light therapy) எனப்படும் "ஓளி சிகிச்சை" மூலம் கழுத்து மற்றும் தலை (head and neck) கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி (மருந்து சிகிச்சை) மற்றும் ரேடியோதெரபி (கதிரியக்க சிகிச்சை) ஆகியவற்றின் பக்கவிளைவாக ஏற்படும் வலி, பெருமளவு குறைவதை கண்டுபிடித்துள்ளனர்.

    பிற தெரபிகளின் பக்க விளைவாக வாய் பகுதியில் ஏற்படும் வலியை "லைட் தெரபி" குறைக்கிறது.

    "ஃபோட்டோ பயோ மாடுலேஷன்" (Photo Bio Modulation) சிகிச்சை எனப்படும் பிபிஎம் (PBM) பெற்று கொண்ட நோயாளிகளுக்கு வலி நிவாரண மருந்துகள் தேவைப்படுவதில்லை என தெரிய வந்துள்ளது.

    சீராக அகச்சிவப்பு ஓளியை (infrared light) வாய் பகுதியில் பாய்ச்சுவதன் மூலம் வாய் புண் மற்றும் வலி குறைந்துள்ளது.

    "பிற சிகிச்சைகளினால் ஏற்பட்ட வாய் புண் குறையாமல் இருந்தது. அதன் காரணமாக திரவ உணவு மட்டுமே உட்கொள்ளும் நிலை இருந்து வந்தது. மேலும், நாவினால் எந்த சுவையையும் அறிய முடியவில்லை. ஆனால், பிபிஎம் சிகிச்சை நிம்மதியான அனுபவத்தை கொடுத்தது" என ஒரு நோயாளி தெரிவித்தார்.

    வரும் மாதங்களில், பிபிஎம் சிகிச்சையின் பரவலான பயன்பாடு குறித்து மேலும் தகவல்கள் வெளிவரலாம்.

    • பிடி டவரை 1965ல் அப்போதைய பிரதமர் ஹெரால்ட் வில்சன் திறந்து வைத்தார்
    • பிடி டவர் உரிமையாளர்கள் எம்சிஆர் ஓட்டல்களுக்கு (MCR Hotels) $347 மில்லியனுக்கு விற்றனர்

    இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உலக கட்டிடக்கலை துறையின் சிறப்புகளை உணர்த்தும் பல கட்டிங்கள் உள்ளன.

    அவற்றில் ஒன்று லண்டன் "வெஸ்ட் எண்ட்" பகுதியில் உள்ள 1964ல் உருவாக்கப்பட்ட"பிடி டவர்" (British Telecommunications Tower) எனப்படும் 620 அடி உயர கோபுரம். இந்த கோபுரத்தின் மத்திய பகுதி 581 அடிகள் உயரம் கொண்டது.

    பிடி டவரை 1965ல் அப்போதைய பிரதமர் ஹெரால்ட் வில்சன் திறந்து வைத்தார்.

    அதன் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள 360 டிகிரி எல்.ஈ.டி. (LED) திரை செய்திகளை ஒளிபரப்புகிறது.

    இந்த கோபுரத்தை தொடக்கத்தில் தொலைக்காட்சி சிக்னல்கள் அனுப்ப பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில், பிடி டவரின் உரிமையாளராக இருந்த பிடி குழுமம் (BT Group), அதனை எம்சிஆர் ஓட்டல்கள் (MCR Hotels) குழுமத்திற்கு $347 மில்லியனுக்கு விற்பனை செய்து விட்டதாக அறிவித்தது.

    மொபைல் போன்கள் தொழில்நுட்பம் பரவலான பிறகு தகவல் தொடர்பில் இந்த கோபுரத்தின் பயன்பாடு குறைய தொடங்கியதால் இதில் பொருத்தப்பட்டிருந்த நுண்ணலை ஏரியல்கள் நீக்கப்பட்டன.


    எம்சிஆர் ஓட்டல்கள் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டைலர் மோர்ஸ் (Tyler Morse), "இந்த பழமையான கட்டிடத்தை அதன் பெருமை குறையாமல் மேம்படுத்தி புதிய தலைமுறையினருக்கு சுகமான அனுபவத்தை வழங்கும் முயற்சியில் மகிழ்ச்சியாக உள்ளோம்" என கூறினார்.

    பல வருடங்களாக இதனை பொதுமக்கள் நேரடியாக பயன்படுத்த முடியாமல் இருந்து வந்த நிலையில், அவர்களின் நேரிடையான பயன்பாட்டிற்கு இது வருவது உற்சாகம் அளிக்கும் செய்தியாக அந்நகரில் பார்க்கப்படுகிறது.

    ஒரு காலகட்டத்தில் அந்த டவரின் உச்சியில் உள்ள வட்ட மாடத்தில் ஒரு சுழலும் உணவகம் இருந்ததும், அது சுற்றி முடிக்க 22 நிமிடங்கள் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

    • வகுப்பறையில் செல்போன்கள் எரிச்சலூட்டுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்
    • நல்ல கல்வியை குழந்தைகள் பெற நாம் சூழலை உருவாக்க வேண்டும் என்றார் சுனக்

    இங்கிலாந்து பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மொபைல் போன்களை உபயோகிக்க புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.

    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    முக்கியமான உரையாடலின் போது மொபைல் போன் தொடர்ந்து ஒலிப்பது எரிச்சலூட்டுகிறது.

    பல பள்ளிகளில் மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யாமல் உள்ள பள்ளிகளுக்கு உதவ நமது கல்வி துறை புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

    பல ஆசிரியர்கள், தங்களால் வகுப்புகளில் கவனம் செலுத்த முடிவதில்லை என புகார் அளித்தனர்.

    மொபைல் போன்கள் வகுப்புகளில் கவனச்சிதறலை தூண்டுகிறது. எங்கெல்லாம் வகுப்புகளில் மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளதோ அங்கு மாணவர்களுக்கு கற்றலுக்கான சூழ்நிலை நன்றாக உள்ளது.

    எனவே புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அவர்களுக்கு உரிமையுள்ள கல்வியை பெற அனைத்து சூழலையும் நாம் உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கற்றல் நேரம் குறைவதை தவிர்க்க, கல்வி துறை வகுத்துள்ள புதிய விதிமுறைகளில் ஒன்றாக, குழந்தைகள் பள்ளிக்கு வந்ததும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும், அவற்றை நிர்வாகம் பாதுகாப்பாக வைத்து குழந்தைகள் செல்லும் போது திரும்ப வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பள்ளி முடியும் நேரம் வரை மாணவர்கள் செல்போனை பயன்படுத்துவதை தடுக்க தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் வழங்கி உள்ளது.

    இங்கிலாந்தில் 12 வயதை எட்டிய 97 சதவீத குழந்தைகளின் கைகளில் செல்போன் உள்ளது.

    கடந்த வருடம், ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டிற்கான அமைப்பு (UNESCO) பள்ளிகளில் செல்போன்களை பயன்படுத்த அனுமதிப்பதால், குழந்தைகளின் கல்வி திறன் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைனின் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்
    • பாதிரியார் டுப்மேனுக்கு பல ஊர்களில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் போரிட்டு வருகிறது.

    இரு தரப்பிலும் உயிர்சேதங்களும், கட்டிட சேதங்களும் பலமாக ஏற்பட்டிருந்தும், போர் தீவிரமாக 710 நாட்களை கடந்து தொடர்கிறது.

    ரஷியாவின் வான்வழி தாக்குதலால் உக்ரைன் நாட்டில் சுமார் 40 சதவீத மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்தன. இதனால் உக்ரைனின் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்

    உதவிகள் கேட்டு அமெரிக்க அதிபரை சந்தித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மின்சார உற்பத்தி நிலையங்களை இயங்க செய்யவும் அமெரிக்க உதவியை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


    இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது சாஸ்டன் (Sawston) கிராமம்.

    சாஸ்டன் பகுதியில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர், 29 வயதான வில் லயான் டுப்மேன் (Will Lyon Tupman).

    உக்ரைன் மக்கள் இருளில் அவதிப்படுவதை கேள்விப்பட்டு 2022லிருந்தே பாதிரியார் டுப்மேன், பாதி உபயோகப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மெழுகுவர்த்திகளை சேகரிக்க தொடங்கினார்.

    தங்கள் தேவாலயத்திலும் இருந்த பயன்படுத்தப்படாத மெழுகுவர்த்திகளையும் தனது சேகரிப்பில் இணைத்தார். மேலும், இவரது கோரிக்கைக்கு உதவ பலர் முன் வந்ததால், தங்கள் வீட்டில் இருந்த பாதி எரிந்த நிலையில் உள்ள மற்றும் உபயோகப்படுத்தாத மெழுகுவர்த்திகளையும் அவரிடம் வழங்கினர்.


    இவையனைத்தையும் பாதிரியார் டுப்மேன், அங்குள்ள ஒரு மெழுகுவர்த்தி உற்பத்தி நிலையத்தில் கொடுத்து, உருக்கி, புது மெழுகுவர்த்திகளாக மாற்றினார். அந்த புது மெழுகுவர்த்திகளை உக்ரைன் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    இந்த அரிய பணியை, பாதிரியார் டுப்மேன் தற்போது வரை தொடர்கிறார். இவரது முயற்சிக்கு அப்பகுதி மக்களிடம் இருந்தும், சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள சர்ச்களிலில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

    உக்ரைன் மக்கள் டுப்மேனின் இந்த பெரும் உதவியினால் பயனடைந்துள்ளதால், அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

    • 2022 அக்டோபரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமரானார்
    • குடிநீர், தேநீர் மற்றும் கலோரி-இல்லா பானங்களை மட்டும் அருந்துகிறார் சுனக்

    உணவில் கவனம் செலுத்தாமல் வாரம் முழுவதும் உழைத்து விட்டு, வார இறுதியில் விருப்பமான உணவு வகைகளை உண்பதும், ஓய்வெடுப்பதும் பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கும் வழக்கம்.

    ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இதற்கு விதிவிலக்காக திகழ்கிறார்.

    2022 அக்டோபர் 25 அன்று இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் (43), தனது உடலாரோக்கியம் மற்றும் வாழ்க்கைமுறை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    வாரந்தோறும் 36 மணி நேரம் விரதம் இருக்கிறேன்.

    ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணி தொடங்கி செவ்வாய்கிழமை காலை 05:00 மணி வரை எதுவும் உண்பதில்லை. இக்காலகட்டத்தில் நான், குடிநீர், தேநீர் மற்றும் கலோரி இல்லாத பானங்கள் மட்டுமே அருந்துகிறேன்.

    வாரம் ஒரு முறை விரதம் இருப்பது எனக்கு முக்கியமான சுய கட்டுப்பாடு.

    எனக்கு இனிப்பு பண்டங்கள் என்றால் அதிக விருப்பம். இதன் மூலம் விரதம் இருந்த நாட்களைத் தவிர பிற நாட்களில் என் விருப்பம் போல் உண்ண முடிகிறது.

    இவ்வாறு சுனக் கூறினார்.


    மெக்சிகோ நாட்டின் கோக்கோ கோலா பானத்தை மிகவும் விரும்பி அருந்துபவர் சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.

    2009 ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவிய இந்தியாவின் கோடீசுவரர் என்ஆர் நாராயண மூர்த்தியின் மகள், அக்ஷதாவை சுனக் திருமணம் செய்தார்.

    சுனக்-அக்ஷதா தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    உண்ணாவிரதம் இருப்பதால் உடலில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் அதிக கொழுப்பு குறைய சாத்தியக்கூறு உள்ளதை ஒப்பு கொள்ளும் மருத்துவர்கள், இத்தகைய பழக்கங்களை ஏற்படுத்தி கொள்ளும் முன் ஒவ்வொருவரும் தக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என எச்சரிக்கின்றனர்.

    ×