என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • பாகிஸ்தான் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
    • சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்டு பாகிஸ்தான் மான்றாடி வருகிறது.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானில் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் அந்த நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    இதனால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்டு பாகிஸ்தான் மான்றாடி வருகிறது. ஆனால் சர்வதேச நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் கடனை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

    இந்த நிலையில் சர்வதேச நிதியத்தின் நிபந்தனையை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக நாட்டில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்த பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தேசிய சிக்கனக் குழுவை அமைத்தார்.

    இந்த குழு அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10 சதவீதம் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும் அமைச்சகங்களின் செலவினங்களை 15 சதவீதம் குறைப்பது, மத்திய மந்திரிகள், மாகாண மந்திரிகள் மற்றும் ஆலோசகர்களின் எண்ணிக்கையை 78-ல் இருந்து 30 ஆக குறைப்பது போன்ற நடவடிக்கைகளும் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    தேசிய சிக்கனக் குழு விரைவில் தனது பரிந்துரைகளை இறுதி செய்து, பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பிடம் அறிக்கையை தாக்கல் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.
    • கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானில் மின்பகிர்மான கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் மின்வெட்டு ஏற்பட்டது.

    இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், பொருளாதார நகரமான கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, பல லட்சம் பேர் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

    கிட்டத்தட்ட 24 மணி நேரத்துக்கு பிறகு நேற்று காலை நாடு முழுவதும் மின்இணைப்பு திரும்பியதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் மின்வெட்டு காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மன்னிப்பு கேட்டார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நமது குடிமக்கள் அனுபவித்த சிரமத்திற்கு எனது அரசாங்கத்தின் சார்பாக நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது உத்தரவின் பேரில் மின்வெட்டுக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.

    • கோர்ட்டு அறையில் இளம்பெண் மீது தந்தை துப்பாக்கியால் சுட்டார்.
    • துப்பாக்கியால் சுட்ட தந்தையை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    கராச்சி:

    பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் வஜிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தந்தையின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.

    அந்த இளம்பெண் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த டாக்டரை சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதனால் அப்பெண் மீது தந்தை கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

    இளம்பெண் தனது கணவருடன் கராச்சியின் பிரபாத் பகுதியில் வசித்தார். இந்த நிலையில் காதல் திருமணம் செய்த அப்பெண் கராச்சி நகர கோர்ட்டில் தான் சுதந்திரமாக திருமணம் செய்து கொண்டதை உறுதிப்படுத்துவதற்காக வாக்குமூலம் அளிக்க வந்தார். அங்கு அவரது தந்தையும் வந்திருந்தார்.

    அப்போது கோர்ட்டு அறையில் இளம்பெண் மீது தந்தை துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.

    துப்பாக்கியால் சுட்ட தந்தையை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஷபீர் சேதர் கூறும்போது, கவுரவ கொலையின் பின்னணியில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தந்தை, கணவர், சகோதரர் அல்லது வேறு ஆண் உறவினர் உள்ளனர் என்றார்.

    • பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் சமீபத்தில் 2 நாள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டார்.
    • தற்போது 200 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலரை நீட்டிக்க அமீரகம் ஒப்புதல் அளித்தது.

    கராச்சி:

    பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் ஆளும் ஆட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 2 ஆண்டாக அந்நாடு கொரோனா பெருந்தொற்று, பொருளாதார மந்தநிலை, கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட பெருவெள்ளம் உள்ளிட்ட நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    இதற்கிடையே, சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடந்த ஆண்டு ஆகஸ்டு காலகட்டத்தில் அந்நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவி கோரியது. பொருளாதார நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியம் தேவையான நிதியை விடுவிக்க உதவ வேண்டும் என அமெரிக்காவிடமும் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது.

    பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்று திரும்பினார். தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க இங்கிலாந்து நாட்டின் லண்டனுக்குச் சென்றார். சில அரசு சார்ந்த கூட்டங்களிலும் பங்கேற்றார். நிதி உதவி கோரி ஐக்கிய அரபு அமீரக பயணமும் மேற்கொண்டார்.

    ஷாபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய 2 நாள் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின்போது தற்போதுள்ள 200 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலரை நீட்டிக்க அமீரகம் ஒப்புதல் அளித்ததுடன், கூடுதலாக 100 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலரை தருவதற்கும் ஒப்புக் கொண்டது.

    கடந்த கோடை காலத்தில் பருவகால பாதிப்புகளால் நாட்டை சூறையாடிய வெள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உதவியாக ஆயிரம் கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர் வழங்கப்படும் என, ஜெனீவா மாநாட்டின்போது சர்வதேச நாடுகள் உறுதி வழங்கியிருந்தன.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த அரசு பாகிஸ்தானுக்கு என்ன செய்கிறது என பாருங்கள். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பிச்சை பாத்திரம் ஏந்தி வெவ்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால் யாரும் அவருக்கு ஒரு பென்னி நாணயம் கூட வழங்கவில்லை.

    ஷெரீப், இந்தியாவிடம் கூட பேச்சுவார்த்தைக்காக கெஞ்சி கொண்டு இருக்கிறார். ஆனால், முதலில் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுங்கள் (அதன்பின் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை பற்றி பரிசீலனை செய்யலாம்) என புதுடெல்லி அவரிடம் கூறியுள்ளது

    என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கராச்சியில் 90 சதவீதம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
    • பெரிய அளவில் மின்சாரம் தடைபட்டதால் சீரமைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    பாகிஸ்தானில் இன்று காலை 7.30 மணி அளவில் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திடீரென மின்சாரம் துண்டிக்கபட்டது.

    கராச்சியில் 90 சதவீதம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சீரற்ற மின் வினியோகம் காரணமாக மின்சாரம் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின் ஊழியர்கள் இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் பெரிய அளவில் மின்சாரம் தடைபட்டதால் சீரமைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 22 மாகாணங்களில் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள். அவர்கள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    • வடமேற்று கைபர் பார்கை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரஷித்துல்லா சம்பத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றார்.
    • பாகிஸ்தான் ராணுவத்திற்கு துப்பு கொடுத்ததாக வாலிபர் ஒருவரை ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொன்றனர்.

    பெஷாவர்:

    பாகிஸ்தானில் அவ்வப்போது ஆப்கானிஸ்கானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறி வைத்து அவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தங்கள் இயக்கத்தை பற்றி பாகிஸ்தான் ராணுவத்திற்கு துப்பு கொடுத்ததாக வாலிபர் ஒருவரை ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொன்றனர். வடமேற்று கைபர் பார்கை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரஷித்துல்லா (வயது 17) சம்பத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றார்.

    ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் தேடினார்கள். ஆனால் அவரை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை. இது பற்றி போலீசிலும் அவர்கள் புகார் கொடுத்தனர். இந்த சூழ்நிலையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ரஷித்துல்லா தலை துண்டிக்கபட்டு பிணமாக கிடந்தார்.

    அவர் அருகே பயங்கரவாதிகள் எழுதிய துண்டு சீட்டும் கிடந்தது. அவர் பயங்கரவாதிகள் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் கொடுத்து வந்தததால் ஆத்திரம் அடைந்த பயங்கரவாதிகள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு நேரத்தையும், வளத்தையும் வீணடிப்பாதா? என்பது நம் கைகளில் தான் உள்ளது.
    • இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால், மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்

    இஸ்லாமாபாத்:

    கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தடைசெய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுடன் நடந்த போரில், பல பாடங்களை கற்றுக் கொண்டோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக 'அல் அரேபியா' டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

    பாகிஸ்தான் அமைதியையே விரும்புகிறது. நம்மிடம் பொறியாளர்கள், டாக்டர்கள் மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இந்த விலைமதிப்பற்ற சொத்துகளை முறையாக பயன்படுத்தி, வளர வேண்டும் என்பது எங்களது விருப்பம். அமைதியாக வாழ்ந்து வளர்ச்சி பெறுவதா அல்லது ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு நமது நேரத்தையும், வளத்தையும் வீணடிப்பாதா? என்பது நம் கைகளில் தான் உள்ளது.

    நாங்கள் இந்தியாவுடன் மூன்று போர்களை நடத்தியுள்ளோம், மேலும் அவை மக்களுக்கு அதிக துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை மட்டுமே கொண்டு வந்துள்ளன. போரின் மூலம் பல பாடங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம்.

    அமைதியாக வாழ்ந்து, இந்தியாவுடன் உள்ள பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் வளங்களை, வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் வீணடிக்க விரும்பவில்லை. இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள் தான். இரு நாட்டு ராணுவங்களிடமும் பல அதிநவீன ஆயுதங்கள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால், மிகப்பெரிய இழப்பு ஏற்படும். யாராலும் உயிர் பிழைக்க முடியாது. எனவே இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புகிறோம். அப்போது தான் இரு நாடுகளும் வளர முடியும். காஷ்மீர் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நேர்மையாக பேச வேண்டும். இந்திய பிரதமர் மோடிக்கு எனது செய்தி என்னவென்றால், காஷ்மீர் போன்ற பிரச்சினைகளை தீர்க்க நேர்மையான பேச்சுக்களை நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்து நிறுத்தியது.
    • அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

    பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அப்துல் ரகுமான் மக்கி. இவர் அந்த அமைப்பின் தலைவரும், மும்பை, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஆவார்.

    அப்துல் ரகுமான் மக்கி, ஜம்மு, காஷ்மீரில் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவதிலும், தாக்குதல் நடத்த திட்டமிடுவதிலும் நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.

    இதையடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாதியாக அறிவித்தன. இவரை சர்வேதச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் சீனா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்தது. இதேபோல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்து நிறுத்தியது.

    இந்தநிலையில் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

    அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கி உலக அளாவிய பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டுள்ளான். இது தொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.எஸ்.ஐ.எல். அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2016-ன் படி சொத்துகள் முடக்கம், பயண தடை, ஆயுதத் தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    அப்துல் ரகுமான் மக்கியை ஐ.நா. சபை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

    இவருக்கு மும்பை தாக்குதலில் தொடர்பு உண்டு. மேலும் இந்தியாவில் நடந்த செங்கோட்டை தாக்குதல் (2000-ம் ஆண்டு) ராம்பூர் சி.ஆர்.பி.எப். முகாம் தாக்குதல் (2008-ல்), ஸ்ரீநகர் தாக்குதல் (2018) உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்களும் தொடர்புடையவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக, அப்துல் ரகுமான் மக்கிக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதி மன்றம் சிறை தண்டனை விதித்தது.

    • பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது.

    கராச்சி:

    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். முகமது ரிஸ்வான் 77 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆகா சல்மான் 45 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 3 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. டேவன் கான்வே, கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். கான்வே 52 ரன்னிலும், வில்லியம்சன் 53 ரன்னிலும் வெளியேறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் நியூசிலாந்து திணறியது.

    கடைசி கட்டத்தில் கிளென் பிலிப்ஸ் போராடினார். அவர் அதிரடியாக ஆடினார். 42 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 63 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது கிளென் பிலிப்சுக்கும், தொடர் நாயகன் விருது டேவன் கான்வேக்கு வழங்கப்பட்டது.

    • உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.
    • அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துள்ளது.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு 80 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதன் காரணமாக அங்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை ஈடு செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து வந்தது.

    இருப்பினும் அங்கு உணவு தானியங்களின் விலை தாறுமாறாக எகிறியது. இதனால் அரசின் சார்பில் மானிய விலையில் உணவு தானியங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அங்கும் ஏராளமானோர் முண்டியடித்து சென்று வாங்கும் நிலை உள்ளது. இதற்கிடையே மாவு வாங்க சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது அந்த நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

    • தேர்தல் ஆணையத்தின் விசாரணைக் குழு இம்ரான் கான் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
    • விளக்கம் கேட்டு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டில் தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்து பதவி விலகினார்.

    தற்போது பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, தேர்தல் ஆணையம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவை இம்ரான் கான் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விசாரணைக் குழு இம்ரான் கான் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. விளக்கம் கேட்டு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை.

    இந்நிலையில், இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 255 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 258 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கராச்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 5-0 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்தது. பிரேஸ்வெல் 43 ரன்னிலும், டாம் லதாம் 42 ரன்னிலும், பிலிப்ஸ் 37 ரன்னிலும், டேரில் மிட்செல் 36 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 5 விக்கெட்டும், உசாமா மிர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் 56 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் 66 ரன்னும் எடுத்தனர். முகமது ரிஸ்வான் பொறுப்பாக ஆடினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஸ்வான் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    5 விக்கெட் வீழ்த்திய நசீம் ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    ×