என் மலர்
பாகிஸ்தான்
- பாபர் ஆசம், சாகித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பாக அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் இடையேயான கண்காட்சி போட்டி நடைபெற்றது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம், சாகித் அப்ரிடி போன்ற வீரர்கள் விளையாடிக்கொண்டிருந்த, நவாப் அக்பர் புக்டி ஸ்டேடியத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் இந்த குண்டு வெடித்துள்ளது. இதனையடுத்து பாபர் ஆசம், சாகித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பாக அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் விளையாடவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கண்காட்சி போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளான குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் இடையேயான கண்காட்சி போட்டி நடைபெற்றது. குவெட்டா மைதானமும் சூப்பர் லீக் அந்தஸ்தைப் பெற வேண்டும் என பலுசிஸ்தான் ரசிகர்கள் அழுத்தம் கொடுத்த நிலையில், போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
குண்டுவெடிப்பு நடந்தவுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போட்டி நிறுத்தப்பட்டு, வீரர்கள் சிறிது நேரம் அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அதிகாரிகள் அனுமதி கொடுத்ததும் போட்டி மீண்டும் தொடங்கியது
பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில், கடந்த பல ஆண்டுகளாக பலவீனமான பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் ஒரு மசோதாவை பரிந்துரை செய்துள்ளது.
- குற்றவாளி வாரண்ட் இன்றி கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் ஒரு மசோதாவை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி நாட்டின் ராணுவம் மற்றும் நீதித்துறையை அவதூறு செய்பவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு மசோதா சட்டம் நீதி அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. நீதித்துறை, ஆயுதப்படைகளை கேலி செய்யும் நோக்கத்துடன் எந்த ஊடகத்தின் மூலமாகவும் அறிக்கை வெளியிடுவது, தகவல்களை பரப்புவது ஆகியற்றுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். குற்றவாளி வாரண்ட் இன்றி கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையில், சமீப காலமாக நீதித்துறை மற்றும் ராணுவம் உள்பட அரசின் சில நிறுவனங்கள் மீது அவதூறான, இழிவான, கொடூரமான தாக்குதல்களை நாடு கண்டுள்ளது. சுயநல நோக்கங்களுக்காக சிலர் வேண்டு மென்றே தவறான பிரசாரத்தை தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
- விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட மதம் மற்றும் கடவுளுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
- எதிரான கருத்துகளை 48 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டுமென உத்தரவிட்டது.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானில் இணைய தேடுதல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட மதம் மற்றும் கடவுளுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த கருத்துகளை விக்கிப்பீடியாவில் இருந்து 48 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டுமென பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டது. ஆனால் விக்கிப்பீடியா எந்த கருத்துகளையும் நீக்கவில்லை.
அதனை தொடர்ந்து விக்கிப்பீடியாவை நேற்று பாகிஸ்தான் அரசு முடக்கியது. புகார் அளிக்கப்பட்ட சர்ச்சையான கருத்துகளை அகற்றுவது மற்றும் மீண்டும் அதுபோல கருத்துகளை பதிவிடுவதை தடுப்பதாக உறுதியளித்தால் விக்கிப்பீடியாவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் என பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
- இம்ரான்கானை கொல்ல முன்னாள் அதிபர் ஆசிப் சர்தாரி சதித்திட்டம் தீட்டுவதாக ஷேக் ரஷீத் அகமது தெரிவித்தார்.
- சுமார் 300 போலீசார் ஷேக் ரஷீத் அகமது வீட்டுக்குள் நுழைந்தனர்.
பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்தவர் ஷேக் ரஷீத் அகமது. அவாமி முஸ்லிம் லீக் கட்சி தலைவரான இவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர்.
இந்த நிலையில் இம்ரான்கானை கொல்ல முன்னாள் அதிபர் ஆசிப் சர்தாரி சதித்திட்டம் தீட்டுவதாக ஷேக் ரஷீத் அகமது தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மீது அப்பாரா போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து ஷேக் ரஷீத் அகமதை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். இதுதொடர்பாக ஷேக் ரஷீத் அகமதுவின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "நள்ளிரவு 12.30 மணி அளவில் ஷேக் ரஷீத் அகமது பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சுமார் 300 போலீசார் ஷேக் ரஷீத் அகமது வீட்டுக்குள் நுழைந்தனர். ஜன்னல், பொருட்களை நொறுக்கினர். ஷேக் ரஷீத்தை தாக்கி கைது செய்து அழைத்து சென்றார்" என்றார்.
- குண்டுகள் வெடித்ததில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் உடல் சிதறி பலியானார்கள்.
- காயமடைந்த ஏராளமானோர் பெஷாவரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டனர்.
பாகிஸ்தானின் பெஷாவரில் உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் நேற்று மதியம் போலீசார், ராணுவ வீரர்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென தற்கொலை படை பயங்கரவாதி ஒருவன் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது.
மேலும் குண்டுகள் வெடித்ததில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் உடல் சிதறி பலியானார்கள். இந்த தாக்குதலில் 46 பேர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே காயமடைந்த ஏராளமானோர் பெஷாவரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் இறந்துள்ளனர். இன்று காலை பலி எண்ணிக்கை 83 ஆக இருந்தது. அதன்பின்னர் 17 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
- பெஷாவர் குண்டுவெடிப்பில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
- இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளான்.
இந்த தாக்குதலில் மசூதி கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 17 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. அதேசமயம் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர்.
மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 150க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பின் முக்கிய கமாண்டர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கை
பெஷாவர்:
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பலத்த பாதுகாப்பு மிக்க பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பிற்பகல் தொழுகையின்போது தற்கொலைப்படை தீவிரவாதி இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளான். இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். மசூதியின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 17 பேர் உயிரிழந்த நிலையில், நேரம் செல்லச் செல்ல உயிரிழப்பு அதிகரித்தது. இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அந்த அமைப்பின் முக்கிய கமாண்டர் உமர் காலித் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவனது சகோதரன் கூறியிருக்கிறான்.
- பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில் மசூதியின் ஒரு பகுதி பயங்கர சேதமடைந்தது.
- மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 பேர் படுகாயமடைந்தனர்.
பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில் மசூதியின் ஒரு பகுதி பயங்கர சேதமடைந்தது.
இந்நிலையில், மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
- மார்ச் மாதம் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் மைய குழு கூட்டம் லாகூரில் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது.
- இடைத்தேர்தல் நடைபெறும் 33 பாராளுமன்ற தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
லாகூர்:
பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி எம்.பி.க்கள் சிலரும், கூட்டணி கட்சிகள் சிலரும் இம்ரான்கான் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.
அதன்பிறகு இம்ரான் கான் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர். அதனை பாகிஸ்தான் பாராளுமன்ற சபாநாயகர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தார். அவர்கள் தங்களது சொந்த விருப்பப்படி ராஜினாமா செய்கிறார்களா? என்பதை தனித்தனியாக சரிபார்க்க வேண்டும் என கூறினார். பின்னர் கடந்த மாதம் 35 பேரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் 33 பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மார்ச் மாதம் 16-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
பஞ்சாப் மாகாணத்தில் 12, கைபர் பக்துன்க்காவில் 8, இஸ்லாமாபாத்தில் 3, சிந்து மாகாணத்தில் 9, பலுசிஸ்தானில் 1 என மொத்தம் 33 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் 33 தொகுதிகளிலும் இம்ரான் கான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியு மான ஷா மஹ்முத் குரேஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மார்ச் மாதம் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் மைய குழு கூட்டம் லாகூரில் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. இதில் இடைத்தேர்தல் நடைபெறும் 33 பாராளுமன்ற தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சியின் ஒரே வேட்பாளராக இம்ரான் கான் இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு பஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது.
- பஸ் தாறுமாறாக ஓடி பாலத்தின் தூணில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
கராச்சி:
பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு பஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 48 பயணிகள் இருந்தனர். பலுசிஸ்தானின் லாஸ்பேலா பகுதியில் பஸ் சென்ற போது ஒரு திருப்பத்தில் வேகமாக திரும்ப டிரைவர் முயன்றார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி பாலத்தின் தூணில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்துக்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 40 பேர் பலியானார்கள். ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
- பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
- ஒரு டாலரின் மதிப்பு பாகிஸ்தான் ரூபாயில் 262 ஆக சரிந்தது.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானில் சமீப ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. இதன் விளைவாக உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு என பல்வேறு பிரச்சினைகளை பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
நிதிப்பாற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் பாகிஸ்தான் கடன் கேட்டுள்ளது. ஆனால் சர்வதேச நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் கடன் பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் இன்னும் இரு தினங்களில் பாகிஸ்தான் வரவுள்ளனர்.
இந்த சூழலில் டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு டாலரின் மதிப்பு பாகிஸ்தான் ரூபாயில் 262 ஆக சரிந்தது.
- கடந்த 10-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரையில் 18 பேர் உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களில் பெரும்பாலனோர் சிறுவர்கள் ஆவர்.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகரும், அந்த நாட்டின் மிகப்பெரிய நகருமான கராச்சியில் கெமாரி என்கிற கிராமம் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சிறுவர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகினர்.
இப்படி மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். அப்படி கடந்த 10-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரையில் 18 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் பெரும்பாலனோர் சிறுவர்கள் ஆவர். அதே போல் 3 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர். காய்ச்சல், தொண்டை வீக்கம் மற்றும் மூச்சுத் திணறலால் அவர்கள் இறந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சில ரசாயனங்களால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மரணங்கள் நிகழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிந்து மாகாணத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கிராமத்தில் உள்ள 2 தொழிற்சாலைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். எனவே தொழிற்சாலைகளில் இருந்து விஷவாயு வெளியேறி அதன் விளைவாக மக்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் முழுமையான விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






