என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதி நெருக்கடியை தவிர்க்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
    • புற்றுநோய்க்கு சாதாரண வலி நிவாரணி மருந்து கொடுப்பது போல் அரசு நடவடிக்கை உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.

    அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது. பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசின் தவறான நிர்வாகமே இதற்கு காரணமாகும்.

    மாவு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ நெய் பாகிஸ்தான் மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    நிதி நெருக்கடியை தவிர்க்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. புற்றுநோய்க்கு சாதாரண வலி நிவாரணி மருந்து கொடுப்பது போல் அரசு நடவடிக்கை உள்ளது.

    உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் இலங்கைக்கு ஏற்பட்டது போன்ற நிலைமை நமக்கு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெய் விலையை 60 ஆயிரம் கோடி ரூபாய் என வாய் தவறி இம்ரான்கான் பேசியது அந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை வைத்து பலரும் அவரை கேலி செய்து வருவதுடன் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • ரெயிலில் வேறு எங்காவது வெடி குண்டு இருக்கிறதா என்று சோதனை நடந்தது.

    பாகிஸ்தானில் குவெட்டரில் இருந்து லாகூருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. அந்த ரெயில் பஞ்சாப் மாகாணம் சிச்சாவட்னி என்ற இடத்தில் சென்றபோது ஒரு பெட்டியில் குண்டு வெடித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினார்கள். உடனே அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. குண்டுவெடிப்பில் ஒரு பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குண்டுவெடிப்பில் ரெயில் பெட்டி கடுமையாக சேதமடைந்தது. ரெயிலில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டார்கள். ரெயிலில் வேறு எங்காவது வெடி குண்டு இருக்கிறதா என்று சோதனை நடந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டு ரூ.272-க்கு விற்கப்படுகிறது.
    • மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12.90 அதிகரிக்கப்பட்டு ரூ.202.73 ஆக உள்ளது.

    பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஒரு லிட்டர் பால் ரூ.210-க்கு விற்கப்படுகிறது. கோழிகறி கிலோ ரூ.780 ஆக உள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டு ரூ.272-க்கு விற்கப்படுகிறது. அதே போல் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12.90 அதிகரிக்கப்பட்டு ரூ.202.73 ஆக உள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ.9.60 உயர்த்தப்பட்டு ரூ.196.68-க்கு விற்கப்படுகிறது.

    இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. அதே போல் பொது விற்பனை வரி 17 சதவீதமாக இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    • நாடு முழுவதும் 39 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டன.
    • உணவு விநியோகம் செய்வதற்காக 40 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்த போது, ஏழைகளுக்காக தங்கும் விடுதி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 39 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டன.

    இதற்கு பாகிஸ்தான் நாணய மதிப்பில் 189.015 மில்லியன் ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உணவு விநியோகம் செய்வதற்காக 40 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் உணவு மற்றும் வாகனங்களுக்கு என 2022 மார்ச் வரை 161.88 மில்லியன் ரூபாய் செலவாகி உள்ளது.

    இந்நிலையில் இம்ரான் கான் பதவி விலகிய பிறகு, ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சியில் முந்தைய அரசின் செலவுகள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி இம்ரான் கான் பிரதமராக இருந்த போது அவரது வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை செல்வதற்கு மட்டும் 984 மில்லியன் ரூபாய் செலவாகி உள்ளது தெரியவந்துள்ளது.

    பாகிஸ்தானின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆவணங்களின்படி, இம்ரான் கான் பயணத்திற்கு 472.36 மில்லியன் ரூபாயும், அதற்காக அவர் பயணித்த ஹெலிகாப்டரை பராமரிக்க 511.995 மில்லியன் ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    போக்குவரத்து செலவையும் தாண்டி, 2018-19 ஆண்டு காலகட்டத்தில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்திற்கு மட்டும் மின்சார கட்டணமாக 149.19 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • எரிபொருள் தட்டுப்பாடு, அன்னிய செலவாணி கையிருப்பு பற்றாக்குறையாலும் பாகிஸ்தான் திண்டாடி வருகிறது.
    • ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.

    பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட மழை-வெள்ள பாதிப்பு, நாட்டின் நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.

    எரிபொருள் தட்டுப்பாடு, அன்னிய செலவாணி கையிருப்பு பற்றாக்குறையாலும் பாகிஸ்தான் திண்டாடி வருகிறது.

    ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. சமீபத்தில் அரசு வழங்கிய இலவச கோதுமை வாங்க திரண்ட மக்களிடம் மோதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் சில்லரை விற்பனையில் ஒரு லிட்டர் பால் விலை ரூ.190-லிருந்து ரூ.210 ஆக உயர்ந்து உள்ளது. கோழிக்கறி விலை ரூ.650-லிருந்து ரூ.780 வரை உயர்ந்து உள்ளது. உயிருடன் உள்ள பிராய்லர் கோழி ரூ.480 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.

    அதே போல் இறைச்சி விலை கிலோவுக்கு ரூ.1000 முதல் ரூ.1,100 வரை உயர்ந்து இருக்கிறது.

    பால் விலை உயர்வு தொடர்பாக கராச்சி பால் விற்பனையாளர்கள் சங்கம் தரப்பில் கூறும்போது, 1000-க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் அதிக விலைக்கு பாலை விற்பனை செய்கிறார்கள். எங்கள் சங்க உறுப்பினர்கள், பால் விலையை உயர்த்தவில்லை என்று தெரிவித்துள்ளது. அதே போன்று மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

    இதற்காக கடன் மேலாண் திட்டம் ஒன்றை பாகிஸ்தான் அனுப்பியது. அதை ஆய்வு செய்து சர்வதேச நாணய நிதியம் அத்திட்டத்தை நிராகரித்து விட்டது.

    கடன் பெறுவதற்கான முயற்சி தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தானில் அத்தியாசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு செல்கிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    • இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    • வன்முறை மற்றும் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நங்கனா சாஹிப் மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதித்ததாக கூறி வரிஸ் இசா என்பவர் கைது செய்யப்பட்டு, வார்பர்டன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், ஒரு கும்பல் இன்று காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி சூறையாடியதுடன், கஸ்டடியில் இருந்த வரிஸ் இசாவை இழுத்துச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனனர். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லாகூரில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ' வார்பர்டன் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தை ஒரு கும்பல் தாக்கி, புனித நூலை அவமதித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு காவலில் வைத்திருந்த வாரிஸ் இசாவை வெளியே இழுத்துச் சென்றனர். பின்னர் அவரை நிர்வாணமாக்கி, தெருவில் இழுத்துச் சென்று அடித்துக் கொன்றனர்' என்றார்.

    இரண்டு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு திரும்பிய அந்த நபர், தனது முன்னாள் மனைவியின் படத்தை புனித நூல்களில் ஒட்டி மாந்திரீகம் செய்தார் என, அப்பகுதி மக்கள் கூறியதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

    இந்த வன்முறை  தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வன்முறை மற்றும் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

    வன்முறைக் கும்பலைத் தடுக்க காவல்துறை ஏன் தவறிவிட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்யும்படி பஞ்சாப் காவல் கண்காணிப்பாளருக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

    • பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
    • லாகூர், குஜ்ரன்வாலா, பைசலாபாத் உள்ளிட்ட மாநகரங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் விளைவாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உச்சம் தொட்டு வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அங்கு ஏராளமான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    லாகூர், குஜ்ரன்வாலா, பைசலாபாத் உள்ளிட்ட மாநகரங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. லாகூரில் உள்ள 450 பெட்ரோல் நிலையங்களில் 70 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், மற்ற பெட்ரோல் நிலையங்களிலும் தொடர்ந்து பெட்ரோல் விற்கப்படுவதில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

    • சட்டத்தின் ஆட்சி இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு எதிர்காலம் இருக்காது.
    • இம்ரான்கான் தனது இல்லத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    லாகூர் :

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் லாகூரில் உள்ள தனது இல்லத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பஞ்சாப் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களின் சட்டசபைகள் கடந்த மாதமே கலைக்கப்பட்டுவிட்டன. இந்த மாகாணங்களில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    ஆனால், இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதை எதிர்த்தும் தேர்தல் அறிவிப்பை உடனடியாக வெளியிட வலியுறுத்தியும் அகிம்சை முறையில் சிறை நிரப்பும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளேன். இதில் முதல் ஆளாக நான் சிறைக்குச் செல்வேன்.

    சட்டத்தின் ஆட்சி இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு எதிர்காலம் இருக்காது. உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியா முன்னேறுவதற்கு காரணம், அங்கு சட்டத்தின் ஆட்சி இருப்பதுதான். இந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், அதற்கு முதலில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திருப்பி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு இம்ரான்கான் கூறினார்.

    • பாகிஸ்தானில் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி பள்ளத்தாக்கில் விழுந்தன.
    • இந்த விபத்தில் 30 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் கில்கித்-பல்திஸ்தான் மாகாணத்தின் கில்கித்தில் இருந்து ராவல்பிண்டி நோக்கி நேற்று இரவு பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    டைமிர் மாவட்டம் ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது பஸ் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சும், காரும் மலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

    இந்த விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இறுதிச்சடங்கில் அதிபர் ஆரிப் ஆல்வியோ, பிரதமர் ஷெபாஸ் ஷெரீபோ கலந்துகொள்ளவில்லை.
    • ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்

    கராச்சி:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ம் தேதி அவரது உயிர் பிரிந்தது.

    இதையடுத்து அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் துபாயில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு கொண்டு வரப்பட்டது. இன்று கராச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள குல்மகர் போலோ மைதானத்தில் இறுதிச்சடங்குகள் மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. அதன்பின்னர் அங்குள்ள ராணுவ கல்லறை தோட்டத்திற்கு முஷாரப் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    இறுதிச்சடங்கில் தற்போதைய அதிபர் ஆரிப் ஆல்வியோ, பிரதமர் ஷெபாஸ் ஷெரீபோ கலந்துகொள்ளவில்லை. அதேசமயம், கூட்டுப் படைகளின் தலைவர் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, முன்னாள் ராணுவத் தளபதிகள் கமர் ஜாவேத் பஜ்வா, அஷ்பக் பர்வேஸ் கயானி மற்றும் அஸ்லம் பெக் ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர்கள் ஷுஜா பாஷா, ஜாகீருல் இஸ்லாம் மற்றும் ஓய்வு பெற்ற பல்வேறு ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    முத்தாகிதா குவாமி இயக்கத்தின் (பாகிஸ்தான்) தலைவர்கள் காலித் மக்பூல் சித்திக், டாக்டர் ஃபரூக் சத்தார், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர் அமீர் முகம், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவரும், சிந்து மாகாண முன்னாள் ஆளுநருமான இம்ரான் இஸ்மாயில், மத்திய தகவல் துறை முன்னாள் அமைச்சர் ஜாவேத் ஜப்பார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

    சிந்து மாகாணத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி அல்லது ஜமாத்-இ-இஸ்லாமியின் முக்கிய தலைவர்கள் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை. 

    • பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடின.
    • 3 ரன்கள் வித்தியாசத்தில் சர்பராஸ் அஹமதுவின் கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் கண்காட்சி போட்டி இன்று குவெட்டாவில் உள்ள புக்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெஷாவர் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் எடுத்தது.

    குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் இப்திகார் அகமது, பெஷாவர் அணியை சேர்ந்த வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் கடைசி ஓவரில், யுவராஜி சிங் பாணியில், 6 பந்துகளில் 6 சிக்சர்கள் பறக்க விட்டார். இறுதியில் இப்திகார் 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். அவர் சிக்சர் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    தொடர்ந்து களமிறங்கிய பாபர் அசாமின் பெஷாவர் அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் சர்பராஸ் அஹமதுவின் கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

    முன்னதாக, 2007 ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். அவர் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்தின் டான் வான் பங்கேவின் ஓவரில் 6 பந்துகளிலும் சிக்சர் விளாசினார். அதே ஆண்டில், இந்தியாவின் யுவராஜ் சிங், டி20 போட்டிகளில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அவர், 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்டின் ஓவரில் அடுத்தடுத்து 6 சிக்சர்கள் விளாசி 36 ரன்கள் எடுத்தார்.

    இதேபோல், முதல் தர கிரிக்கெட்டில், ஒரு ஓவரில் 6 சிக்சர்களை அடித்த சாதனையைப் படைத்த முதல் இந்திய வீரர் ரவி சாஸ்திரி ஆவார். அவர் 1984-85 ரஞ்சிக் கோப்பை தொடரில் பரோடாவுக்கு எதிராக இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

    • பாபர் ஆசம், சாகித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பாக அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் இடையேயான கண்காட்சி போட்டி நடைபெற்றது.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம், சாகித் அப்ரிடி போன்ற வீரர்கள் விளையாடிக்கொண்டிருந்த, நவாப் அக்பர் புக்டி ஸ்டேடியத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் இந்த குண்டு வெடித்துள்ளது. இதனையடுத்து பாபர் ஆசம், சாகித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பாக அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் விளையாடவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கண்காட்சி போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளான குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் இடையேயான கண்காட்சி போட்டி நடைபெற்றது. குவெட்டா மைதானமும் சூப்பர் லீக் அந்தஸ்தைப் பெற வேண்டும் என பலுசிஸ்தான் ரசிகர்கள் அழுத்தம் கொடுத்த நிலையில், போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    குண்டுவெடிப்பு நடந்தவுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போட்டி நிறுத்தப்பட்டு, வீரர்கள் சிறிது நேரம் அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அதிகாரிகள் அனுமதி கொடுத்ததும் போட்டி மீண்டும் தொடங்கியது

    பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில், கடந்த பல ஆண்டுகளாக பலவீனமான பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×