என் மலர்
பாகிஸ்தான்
- பாகிஸ்தானில் டயர் வெடித்ததால் சாலையில் வேன் கவிழ்ந்தது.
- கவிழ்ந்த வேன் மீது கார், ஜீப் அடுத்தடுத்து மோதியதில் 13 பேர் பலியாகினர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் கான் யார் மாவட்டத்தில் இருந்து வேன் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்த வேன் அங்குள்ள ருகன்பூர் பகுதியில் உள்ள விரைவு சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேனின் டயர் வெடித்தது.
கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய வேன் சாலையின் நடுவே கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த கார் வேன் மீது பயங்கரமாக மோதியது. அதைத் தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த ஜீப்பும் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 13 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மோசமான சாலைகள் மற்றும் டிரைவர்களின் அஜாக்கிரதையால் பாகிஸ்தானில் இதுபோன்ற சாலை விபத்துகள் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.
- ஏற்கனவே தனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக மர்வியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மர்வியா மாலிக், கடந்த 2018ம் ஆண்டு அந்நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி சாதனை படைத்தார்.
இவர் பாகிஸ்தானில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் லாகூர் நகரில் மர்வியா மாலிக் மீது இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மர்வியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஏற்கனவே தனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக மர்வியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பயந்து சில காலம் லாகூரை விட்டு தள்ளி இருந்ததாகவும், அண்மையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக லாகூர் வந்தபோது தன்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாகவும் மர்வியா கூறியுள்ளார்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 மர்ம நபர்கள் மாலிக் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
கராச்சி:
பாகிஸ்தானில் உள்ள ஒரு டி.வி. நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து வருபவர் மார்வியா மாலிக் (வயது 26). இவர் பாகிஸ்தானில் முதல் திருநங்கை டி.வி. தொகுப்பாளர் என்ற பெருமையை பெற்றவர்.
இவர் திருநங்கைகள் உரிமைக்காக குரல் கொடுத்து வந்தார். இவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அவர் லாகூரில் இருந்து வெளியேறி வேறு ஒரு இடத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்வியா மாலிக் ஒரு ஆபரேஷனுக்காக மீண்டும் லாகூர் வந்தார்.
நேற்று இவர் அங்குள்ள ஒரு மருந்து கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் மாலிக் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதிர்ஷ்ட வசமாக அவர் உடலில் குண்டு பாயாததால் உயிர் தப்பினார். அவர் மீது தாக்குதல் நடத்திய மர்ம மனிதர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் யார்? என்று தெரியவில்லை. இது குறித்து மார்வியா மாலிக் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
திருநங்கை மாலிக் இதற்கு முன் அளித்த பேட்டியில், மற்ற மாற்று திறனாளிகள் போல எனக்கு எனது குடும்பத்தினரிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்க வில்லை.
நான் சொந்தமாக சின்ன சின்ன வேலைகளை செய்து எனது படிப்பை தொடர்ந்தேன். ஒரு செய்தி தொகுப்பாளராக ஆக வேண்டும் ஆசைப்பட்டேன். அதற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதால் எனது கனவு நனவாகி விட்டது என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார்.
- நாட்டில் முடிந்த வரையில் செலவினங்களை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் சிக்கனமும், தியாகமும், எளிமையும் நமக்கு தேவை.
பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 350 பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட உலகின் ஐந்தாவது அதிக மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தான் அதன் மதிப்பீட்டின்படி வெறும் 3 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்புடன், ஆபத்தான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேலும், டாலர் அழுத்தத்தையும் எதிர்கொள்கிறது.
இதனால் நாட்டில் முடிந்த வரையில் செலவினங்களை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு நடவடிக்கையாக, பாகிஸ்தானில் அமைச்சர்கள் இனி பிசினஸ் கிளாஸில் பயணிக்கக்கூடாது என்றும் வெளிநாடுகளுக்கு செல்லும்போது நட்சத்திர விடுதிகளில் தங்கக்கூடாது எனவும் அந்நாட்டு அரசு அறிவித்து தடை விதித்துள்ளது.
நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் சிக்கனமும், தியாகமும், எளிமையும் தங்களுக்கு தேவை என அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கூறியதாவது:-
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அடுத்த பட்ஜெட்டில் அரசாங்கம் மேலும் சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்றும். இது காலத்தின் தேவை. காலம் நம்மிடம் இருந்து என்ன கோருகிறது என்பதை நாம் செயலில் காட்ட வேண்டும். அதுதான் சிக்கனம், எளிமை மற்றும் தியாகம்
நாட்டில் 764 மில்லியன் டாலர் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர்களும் தானாக முன்வந்து பங்களிக்கின்றனர். உயர் அதிகாரிகள் தவிர பல மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் தங்கள் சம்பளம் மற்றும் சலுகைகளை கைவிட முன்வந்துள்ளனர்.
செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு வரை ஆடம்பர பொருட்கள் மற்றும் கார்களை வாங்குவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தாடிவாலா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள லக்கி மர்வாட் என்ற இடத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் அப்பாஸ் போலீஸ் சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டி வருவதாகவும், பயங்கரவாத தடுப்பு போலீஸ் படைக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து உள்ளூர் போலீசாருடன் பயங்கரவாத தடுப்பு போலீசார் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். அவர்களைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விசாரணையில், அவர்கள் போலீசார் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் என தகவல்கள் கூறுகின்றன. சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
- பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி குறித்து கருத்துக்களை கேட்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது
- இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என பாகிஸ்தான் வாலிபர் கூறியுள்ளார்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாலும் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்த கூடிய ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன், கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. எரிசக்தி துறையில் ஏற்பட்ட பாதிப்பால், எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் கேட்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடி குறித்து மக்களிடம் கருத்துக்களை கேட்டு, பாகிஸ்தான் யூடியூபர் சனா அம்ஜத் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் பத்திரிகையாளரான சனா அம்ஜத் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், பாகிஸ்தான் இளைஞர் ஒருவர், தற்போது நாட்டில் நிலவும் விவகாரங்கள் குறித்து ஷேபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பேசுவதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை ஆட்சி செய்தால் நியாயமான விலையில் பொருட்களை வாங்கியிருக்க முடியும் என்று கூறுகிறார்.

பிரதமர் மோடியையும் அவரது செயல்பாடுகளையும் வெகுவாகப் புகழ்ந்த அந்த பாகிஸ்தானியர், மோடி இருந்தால், நமக்கு நவாஸ் ஷெரீப் அல்லது பெனாசிர் அல்லது இம்ரான் தேவையில்லை என்றார். நாட்டில் உள்ள அனைத்து விஷம சக்திகளையும் அவரால் சமாளிக்க முடியும், இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது, நாம் எங்கும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இஸ்லாமிய தேசம் கிடைத்தாலும் இங்கு இஸ்லாத்தை நிலைநாட்ட முடியவில்லை என்பது துரதிர்ஷ்டம். மோடியின் ஆட்சியில் வாழ நான் தயார். மோடி ஒன்றும் மோசமான மனிதர் அல்ல. இந்தியர்களுக்கு பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கின்றன. இரவில் உங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத நிலை வரும்போது, நீங்கள் பிறந்த நாட்டை அழிக்கத் தொடங்குகிறீர்கள். எனவே, மோடியை நமக்கு கொடுத்து, அவர் நம் நாட்டை ஆள வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார் அந்த நபர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
- புனிதமான அண்ணன்- தங்கை உறவை பல்கலைக்கழகம் கொச்சை படுத்திவிட்டதாக கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
- பல்கலைக்கழகத்தை உடனே மூட வேண்டும் எனவும் பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பாகிஸ்தானில் உள்ள காம்சாட் என்ற பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் நடந்து வருகிறது. இதில் இளங்கலை எலக்டரிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் நடந்த தேர்வில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வினா தாளில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதில் அண்ணன்-தங்கை இருவர் கோடை விடுமுறைக்காக பிரான்ஸ் செல்கிறார்கள்.
அங்கு ஓர் இரவு அவர்கள் இருவரும் தனி அறையில் தங்கும் நிலை ஏற்படுகிறது. அப்போது இருவரும் நெருக்கமாக இருந்தால் சுவாரசியமாக இருக்கும் என கருதுகிறார்கள். இந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் புதிய அனுபவமாக இருக்கும். இதுபற்றிய உங்கள் கருத்துக்களை 30 வரிகளுக்கு மிகாமல் எழுதுங்கள் என்று கேட்கப்பட்டிருந்தது.
இந்த கேள்வி தாளை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அதனை பார்த்த பலரும் பல்கலைக்கழகத்தை சரமாரியாக திட்டி தீர்க்கிறார்கள். புனிதமான அண்ணன்- தங்கை உறவை பல்கலைக்கழகம் கொச்சை படுத்திவிட்டதாக கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
குடும்ப உறவு முறையை சீரழிக்கும் இதுபோன்ற செயல்களில் பல்கலைக்கழகம் எப்படி ஈடுபடலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் இதுபோன்ற கேள்விதாள் தயாரித்த பேராசிரியரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும், பல்கலைக்கழகத்தை உடனே மூட வேண்டும் எனவும் பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பாகிஸ்தான் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வி பாகிஸ்தான் மட்டுமின்றி உலக நாடுகள் இடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது.
- பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது.
லாகூர்:
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது.
உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது.
மேலும், கையிருப்பு டாலர்களும் குறைந்து வருவதால் பாகிஸ்தான் திவால் நிலையை எட்டிவிட்டது. அதேவேளை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.
1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு பல்வேறு விதிகளை விதித்துள்ளது. கடனை பெற சர்வதேச நாணய நிதியம் விதித்த விதிகளை பின்பற்ற பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சீனா முன்வந்துள்ளது. 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை சீனா பாகிஸ்தானுக்கு வழங்க உள்ளது. இதற்கான ஒப்புதலை சீன அரசு வழங்கியுள்ளது.
சீனா கடனாக வழங்கும் இந்த பணம் இந்த வாரத்திற்குள் பாகிஸ்தான் மத்திய வங்கியில் செலுத்தப்பட உள்ளது. சீனாவின் இந்த நிதியுதவி பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கைது செய்யப்பட்ட பெண், தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்ததாக பயங்கரவாத ஒழிப்பு படை செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.
- பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்கள் ஒடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் மஹால் பலூச் என்ற பெண்ணை பயங்கரவாத ஒழிப்பு படை சமீபத்தில் கைது செய்தது. அவரது கைப்பையில் இருந்து, தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தும் கவச உடை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நிலையிலான 4 முதல் 5 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றி தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், பலூசிஸ்தான் விடுதலை முன்னணி பிரிவுக்கு ஆதரவளிக்கும்படி மஹால் பலூச் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பயங்கரவாத அமைப்பினரால் பலூச் பயன்படுத்தப்பட்டு உள்ளதுடன், ஆதரவு தெரிவிக்க நெருக்கடியும் கொடுக்கப்பட்டு உள்ளது.
பலூச் அவரது குழந்தைகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு உள்ளார். அதன்பின்னர், தற்கொலை படை பயங்கரவாதியாக மாற்றப்பட்டு உள்ளார். பலூசிஸ்தான் தாய்மார்களும், சகோதரிகளும் தீய நோக்கங்களுக்காக பயங்கரவாத அமைப்புகளால் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பலூசிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு படை செய்தி தொடர்பாளர் கூறும்போது, குற்றச்சாட்டுக்கு ஆளான தற்கொலை படை பயங்கரவாதியான மஹால் பலூச், குவெட்டா நகரில் முக்கியம் வாய்ந்த பகுதிகளை அல்லது பாதுகாப்பு படையினரை தாக்க திட்டமிட்டு இருந்துள்ளார் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
எனினும், மஹால் பலூச்சை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் பலூசிஸ்தானின் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தியபடி சென்ற அவர்கள், உடனடியாக பலூச் விடுதலை செய்யப்பட வேண்டும். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்கள் ஒடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். பலூச் மீது வழக்குகளை ஜோடித்து உள்ளனர் என்றும் அவர்கள் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், பலூச்சுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற உறுப்பினர்களை கைது செய்வதற்காக பலூசிஸ்தானில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
- பதவியில் இருந்து போது அரசு பரிசு பொருட்களை இம்ரான்கான் விற்றதாக குற்றச்சாட்டு.
- இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் இம்ரான்கான் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த வந்த அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அடுத்து பதவி விலகினார்.
தனது ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தேர்தல் ஆணைய அலுவலகம் முன் இம்ரான் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் மீது வழக்குப்பதியப்பட்டு எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள்
வெளியாயின. ஜாமின் கோரி லாகூர் ஐகோரட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று லாகூர் கோர்ட்டில் ஆஜரானார். இம்ரான்கான் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி தாரிக் சலீம் ஷேக், இம்ரான் கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
- பாகிஸ்தானில் தலைமை போலீஸ் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
- இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள், 4 போலீசார் உயிரிழந்தனர்.
லாகூர்:
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை பயங்கரவாதிகள் நேற்று இரவு திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
பயங்கர ஆயுதங்களுடன் காவல்துறை தலைமையகத்தில் புகுந்து கையெறி குண்டு, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் காவல் நிலையத்தை கைப்பற்ற முயற்சித்தனர். காவல் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 4 போலீசாரும் உயிரிழந்தனர். பல மணிநேர சண்டைக்கு பின் போலீஸ் அலுவலகத்தை போலீசார் மீட்டனர்.
காவல்துறை தலைமையகத்தில் நடந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
- பயங்கரவாதிகளை முன்னேற விடாமல் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர்.
- இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், போலீசார் 15 பேர் காயமடைந்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கராச்சி:
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை பயங்கரவாதிகள் இன்று திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். முதலில் கையெறி குண்டுகளை பிரதான வாயிலில் வீசி தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், உள்ளே நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். அவர்களை உள்ளே முன்னேற விடாமல் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், போலீசார் 15 பேர் காயமடைந்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நீடிப்பதால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கராச்சி காவல் தலைமையகம் தாக்குதலுக்குள்ளானதை காவல்துறை செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எத்தனை பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தாக்குதல் நடைபெறும் கராச்சி காவல்துறை அலுவலகம் கராச்சி நகரத்திலிருந்து விமான நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலைக்கு அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






