என் மலர்
பாகிஸ்தான்
- பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- தடையை மீறி தொண்டர்கள் இம்ரான்கான் இல்லம் முன்பு பேரணி செல்வதற்காக குவிந்தனர்.
லாகூர்:
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் லாகூரில் பிரமாண்ட பிரசார பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி தொண்டர்கள் இம்ரான் கான் இல்லம் முன்பு பேரணி செல்வதற்காக குவிந்தனர்.
அப்போது போலீசாருக்கும், தெக்ரீக்-இ- இன்சாப் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினார்கள். இந்த மோதலில் அலி பிலால் என்ற தொண்டர் இறந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக லாகூர் போலீசார் இம்ரான் கான் உள்ளிட்ட 400 பேர் மீது கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 11 மாதங்களில் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்ட 89-வது வழக்கு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இம்ரான் கான் நீதிமன்ற உத்தரவுகளை எப்போதும் பின்பற்றுவதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
- நேரில் ஆஜராவதற்கு 4 வாரங்கள் அவகாசம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக பதவியில் இருந்தபோது பெறப்பட்ட பரிசுகளை, குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை கைது செய்ய, ஜாமீன் பெற முடியாத வகையில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த கைது வாரண்டை நிறுத்திவைக்கும்படி இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இம்ரான் கான் நீதிமன்ற உத்தரவுகளை எப்போதும் பின்பற்றுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால் அவரை காவல்துறையால் கைது செய்ய முடியாது என்று அவரது வழக்கறிஞர் இமாம் இமாம் வாதிட்டார். ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகி வாரண்ட் மீது தற்காலிக தடை பெறலாம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இம்ரான் கான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மார்ச் 13ம் தேதி வரை கைது வாரண்டை நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டது.
அதேசமயம், மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு இம்ரான் கான் நேரில் ஆஜராவதற்கு 4 வாரங்கள் அவகாசம் வழங்கவேண்டும் என இம்ரான் கான் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மார்ச் 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
- பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இந்து மாணவர்கள் ஒன்று திரண்டு ஹோலியை சிறப்பாக கொண்டாடினார்கள்.
- இந்து மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமாபாத்:
ஹோலி பண்டிகை நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இந்து மாணவர்கள் ஒன்று திரண்டு ஹோலியை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ண பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
அப்போது அங்கு வந்த ஒரு அமைப்பினர் இந்து மாணவர்களை ஹோலி கொண்டாடக்கூடாது என கூறினார்கள். இதனால் அவர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்து மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் கேத் குமார் என்ற மாணவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து காயம் அடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்து மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக துணைவேந்தர் கூறும் போது, பல்கலைக்கழக வளாகத்தில் ஹோலி நிகழ்ச்சி நடத்த மாணவர்கள் அனுமதி பெறவில்லை என்றும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் இந்து மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- போலீசார் கைது வாரண்டுடன் லாகூரில் உள்ள இம்ரான் கான் வீட்டுக்கு சென்றனர்.
- இம்ரான் கான் நீதிமன்ற உத்தரவுகளை எப்போதும் பின்பற்றுவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக் இ- இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு கட்சி கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் குண்டு காயம் அடைந்த அவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இம்ரான் கான் பிரதமராக பதவியில் இருந்தபோது பெறப்பட்ட பரிசுகளை, குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த கைது வாரண்டுடன் லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லை. இதனால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். போலீசார் இம்ரான்கானை கைது செய்ய வருகிறார்கள் என்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் வீடு முன்பு திரண்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நாளை (7-ந்தேதி) அவர் கோர்ட்டில் ஆஜராவார் என அவரது வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே இம்ரான் கானின் வழக்கறிஞர்கள், இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின்போது ஆஜராகி, இம்ரான் மீதான கைது வாரண்டை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். இம்ரான் கான் நீதிமன்ற உத்தரவுகளை எப்போதும் பின்பற்றுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால் அவரை காவல்துறையால் கைது செய்ய முடியாது என்று அவரது வழக்கறிஞர் இமாம் இமாம் வாதிட்டார். ஆனால் அவர்களின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். கைது வாரண்ட் மீது இடைக்கால தடை பெறுவதற்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
- சிப்பி நகரில் இன்று போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.
- உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர் போலீஸ் வாகனம் மீது மோதினார்.
இஸ்லாமாபாத்:
தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில் இன்று போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வாகனம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.
உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர் போலீஸ் வாகனம் மீது மோதினார். இதில் குண்டு வெடித்ததில் போலீஸ் வாகனம் நொறுங்கியது. இந்த குண்டு வெடிப்பில் 9 போலீசார் பலியானார்கள். 15 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் சமீப காலமாக தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மசூதி ஒன்றிலும் போலீஸ் தலைமை அலுவலகத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிட்டத்தக்கது.
பலுசிஸ்தானில் எரிவாயு மற்றும் கனிம வளங்களை சுரண்டுவதாக குற்றம் சாட்டி போராளிகள் குழு ஒன்று அரசாங்கத்துடன் சண்டையிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டு கட்சி கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
- கோர்ட்டுக்கு வரும்போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக் இ- இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு கட்சி கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் குண்டு காயம் அடைந்த அவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்.
இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் இம்ரான்கான் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார். இந்நிலையில் கோர்ட்டுக்கு வரும்போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்ப தாவது:-
இதுவரை என்மீது 74 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு உள்ளது. இதனால் நான் அடிக்கடி கோர்ட்டுக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் அப்போது எனக்கு போதுமான அளவு பாதுகாப்பு அளிக்கப்பட வில்லை. இதனால் நான் கோர்ட்டில் ஆஜராகும் போது என்னை கொல்ல முயற்சி நடக்கிறது.
நான் ஒரு பெரிய கட்சியின் தலைவர் பதவியில் இருப்பதால் என்னை பார்க்க கோர்ட்டில் ஏராளமான தொண்டர்கள் வருவார்கள். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் நான் கோர்ட்டுக்கு வரும்போது கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்நிலையில் இம்ரான் கானை போலீசார் நேற்று கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானில் பிரதமராக பதவி வகிப்பவர்களுக்கு உலக தலைவர்கள் அளிக் கும் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அரசு கருவூலத்தில் பாதுகாக்கப்படும். இந்த பொருட்களை இம்ரான்கான் பிரதமராக இருந்த போது மலிவு விலையில் வாங்கி கோடிக் கணக்கில் விற்று விட்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக இஸ்லாமாபாத் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் ஆஜராவதை தவிர்த்து வந்தார். இதனால் அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய வீட்டுக்கு சென்றனர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லை. இதனால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். போலீசார் இம்ரான்கானை கைது செய்ய வருகிறார்கள் என்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் வீடு முன்பு திரண்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நாளை (7-ந்தேதி) அவர் கோர்ட்டில் ஆஜராவார் என அவரது வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர்.
- இம்ரான்கானுக்கு எதிரான காவல்துறை நடவடிக்கையை 'நீதியின் கேலிக்கூத்து' என்று அவரது கட்சி கூறியுள்ளது.
- அரசு தேர்தலை தாமதப்படுத்துவதற்காக சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை உருவாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்து வந்த அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அடுத்து பதவி விலகினார்.
தனது ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்தது.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தேர்தல் ஆணைய அலுவலகம் முன் இம்ரான் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் மீது வழக்குப்பதியப்பட்டு எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாயின.
இந்த நிலையில் இம்ரான்கான், 'தோஷகானா' எனப்படும் மாநில டெபாசிட்டரியில் இருந்து பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுகளை சட்டவிரோதமாக விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து வந்த விருந்தினர்கள் பரிசளித்த மூன்று விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை விற்றதன் மூலம் அவர் 36 மில்லியன் ரூபாய் சம்பாதித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலளித்த இம்ரான்கான், 21.56 மில்லியன் ரூபாய் செலுத்தி அரச கருவூலத்தில் இருந்து வாங்கிய அன்பளிப்பை விற்று 58 மில்லியன் ரூபாய் சம்பாதித்ததாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், பரிசுகள் என்னுடையது, எனவே அவற்றை என்ன செய்தேன் என்பது எனது விருப்பம் என்று கூறினார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகத் தவறியதால் கோர்ட்டு அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை பிறப்பித்தது. இதையடுத்து இன்று கைது வாரண்டுடன் இம்ரான்கானை கைது செய்த இஸ்லாமாபாத் போலீசார் லாகூரில் உள்ள ஜமான் பார்க் இல்லத்திற்கு வந்தனர். ஆனால் அவர்கள் வந்தபோது இம்ரான்கான் வீட்டில் இல்லை. எனவே அவரை கைது செய்ய முடியவில்லை.
அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சித் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் இல்லத்திற்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இம்ரான்கானுக்கு எதிரான காவல்துறை நடவடிக்கையை 'நீதியின் கேலிக்கூத்து' என்று அவரது கட்சி கூறியுள்ளது. மேலும் தற்போதைய அரசு தேர்தலை தாமதப்படுத்துவதற்காக சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை உருவாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளது.
"இம்ரான் கானைக் கைது செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் நிலைமையை மோசமாக்கும். இந்த திறமையற்ற மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு அரசாங்கத்தை நான் எச்சரிக்க விரும்புகிறேன், பாகிஸ்தானை மேலும் நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம்" என்று அக்கட்சியின் துணைத்தலைவர் சவுத்ரி கூறியுள்ளார்.
- பேரணியில் ஏந்தி செல்லக்கூடிய பதாகைகள் மற்றும் பேனர்கள் சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றன.
- மகளிர் தின எதிர்ப்பு பேரணிகளுக்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை.
லாகூர்:
பாகிஸ்தானில் 2018ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான உரிமைகள் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், முக்கிய நகரங்களில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மகளிர் தினத்தையொட்டி பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பேரணி நடத்துவதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். பேரணியில் பங்கேற்கும் பெண்கள் ஏந்தி செல்லக்கூடிய பதாகைகள் மற்றும் பேனர்கள் சர்ச்சைகளையும், பாதுகாப்பு சிக்கலையும் ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தன்று பாகிஸ்தானில் இரண்டு வெவ்வேறு குழுக்களால் பேரணிகள் நடத்தப்படும். பெண் உரிமைகளுக்காக பெண் உரிமை ஆர்வலர்கள் பேரணி நடத்துவார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதக்குழுக்கள் ஹயா என்ற பெயரில் எதிர்ப்பு பேரிணியை நடத்தும்.
இந்த ஆண்டு பெண் உரிமைக்கான பேரணியை லூகூர் அதிகாரிகள் தடை செய்துள்ளனர். இது தங்களின் உரிமைகளை மறுக்கும் செயல் என்று மகளிர் தின பேரணியின் ஒருங்கிணைப்பாளர் கூறி உள்ளார். அதேசமயம், மகளிர் தின எதிர்ப்பு பேரணிகளுக்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை.
- கடந்த சில ஆண்டுகளாக அவர் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் இருந்தார்.
- வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இத்தாலியில் சமீபத்தில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியதில், பாகிஸ்தானின் முன்னாள் ஹாக்கி வீராங்கனை ஷகிதா ரசாவும் உயிரிழந்திருக்கலம் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் பெண்கள் அணியில் இடம்பெற்றிருந்த ஷகிதா ரசா 2012 மற்றும் 2013-ல் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2019க்கு பிறகு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
ஆனால், மகனுக்கு உடல்நலக்குறைவு, விவாகரத்து, வேலையின்மை என கடந்த சில ஆண்டுகளாக அவர் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் இருந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மூன்று வயது மகனுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை அளிக்க முடியாத அளவுக்கு வருவாய் இல்லாமல் தவித்தார். மகனை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மகனை காப்பாற்றுவதற்கு பணம் சம்பாதிப்பதற்காகவும், சிகிச்சைக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் பாகிஸ்தானைவிட்டு வெளியேறிய அவர் கடந்த ஆண்டு துருக்கி சென்றுள்ளார். குழந்தையை தன் குடும்பத்தினரிடம் விட்டுச் சென்றுள்ளார். குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். விபத்து நடந்த அன்றும் பேசியிருக்கிறார்.
புகைப்படங்கள் மற்றும் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினை வைத்து ஷகிதா ராசாவின் உடலை குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் அவரது இறப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த படகு விபத்தில் கிட்டத்தட்ட 70 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
- பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு எடுத்துவந்தபோதும் பாகிஸ்தானில் பணவீக்கம் ஏறிக்கொண்டே இருக்கிறது.
- ராணுவத்திற்கான சிறப்பு நிதி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீரர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு வழங்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. எனவே உணவு தானியங்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இதனிடையே அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு, உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதனால் அரசு நிர்வாகமே கடுமையாக ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஊடகங்களில் வெளியான தகவலின்படி, ராணுவத்திற்கான சிறப்பு நிதி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீரர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு வழங்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீல்டு கமாண்டர்கள் குவார்ட்டர் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதையடுத்து, உணவுப்பொருள் விநியோகம் மற்றும் சரக்கு போக்குவரத்து பிரசனை தொடர்பாக சரக்குப் போக்குவரத்து தலைமை அதிகாரி மற்றும் ராணுவ இயக்குநர் ஜெனரல் ஆகியோருடன் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு எடுத்துவந்தபோதும் பாகிஸ்தானில் பணவீக்கம் ஏறிக்கொண்டே இருக்கிறது. வாராந்திர பணவீக்கம் 40 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஐந்து மாதங்களில் முதல் முறையாக பணவீக்கம் 40 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
- நிதி அமைப்புமுறையை மருந்து உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், ஆபத்தான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேலும், டாலர் அழுத்தத்தையும் எதிர்கொள்கிறது. இதனால் நாட்டில் முடிந்த வரையில் செலவினங்களை குறைக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் நிதி நெருக்கடியால் பாகிஸ்தானின் சுகாதாரத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், தேவையான மருந்துகள் அல்லது உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது,
இதனால், உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகளை நிறுத்திவைக்க வேண்டும் என டாக்டர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
ஆபரேஷன் தியேட்டர்களில், இதயம், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான மயக்க மருந்துகள், இரண்டு வார தேவையைவிட குறைவாகவே உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலைமை நீடித்தால் மக்களின் துயரங்கள் அதிகரிப்பதுடன், பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளில் வேலை இழப்பை ஏற்படுத்தக்கூடும் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைப்பில் ஏற்பட்ட நெருக்கடிக்கு நிதி அமைப்புமுறையை மருந்து உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வணிக வங்கிகள் தங்கள் இறக்குமதிகளுக்கு புதிய கடன் தொடர்பான கடிதங்களை வழங்கவில்லை என்றும் கூறி உள்ளனர்.
முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறையைக் கண்டறிவதற்காக அரசாங்க ஆய்வுக் குழுக்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டதாக பஞ்சாப் மருந்து விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். சில பொதுவான மருந்துகள், முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறை பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை பாதிக்கிறது என்று சில்லறை விற்பனையாளர்கள் கூறி உள்ளனர். இந்த மருந்துகளில் பனாடோல், இன்சுலின், புரூஃபென், டிஸ்ப்ரின், கால்போல், டெக்ரல், நிம்சுலைட், ஹெபமெர்ஸ், புஸ்கோபன் மற்றும் ரிவோட்ரில் போன்ற மருந்துகள் அடங்கும்.
- பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அம்மாகாண முதல்வரிடம் அறிக்கை கோரினார்.
- அப்பாவி மக்களின் இரத்தத்தை சிந்துபவர்கள் மனித குலத்தின் எதிரிகள்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள் மற்றும் இலக்கு தாக்குதல்கள் உள்பட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து, பர்கான் துணை ஆணையர் அப்துல்லா கோசோ டான் கூறுகையில், "ரக்னி மார்க்கெட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் விபத்து ஏற்பட்டது" என்றார்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவொன்று விசாரணைக்காக அப்பகுதியை சுற்றி வளைத்தகள்ளது.
குண்டு வெடிப்பு தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வளைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், குண்டு வெடிப்பு நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் ஒரு கூட்டம் கூடும்போது, ரத்தம் சொட்ட சொட்ட பாதிக்கப்பட்டவர்களை தன்னார்வலர்கள் தூக்கிச் செல்வதைக் காட்டுகிறது.
மேலும், பழுதடைந்த மோட்டார் சைக்கிள்களும், கருகிய காய்கறிகளும் சாலையில் சிதறிக் கிடப்பதைக் காண முடிந்தது.
இந்நிலையில், குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள பலுசிஸ்தான் முதல்வர் மிர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ, "குற்றவாளிகளை கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்பாவி மக்களின் இரத்தத்தை சிந்துபவர்கள் மனித குலத்தின் எதிரிகள். பயங்கரவாதிகள் தங்கள் தீய இலக்குகளை அடைய நிச்சயமற்ற நிலையை உருவாக்குகிறார்கள். ஆனால் அரசு விரோத சக்திகளை வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம்." என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்ததுடன், முதலமைச்சரிடம் அறிக்கை கோரியுள்ளார்.






