என் மலர்
உலகம்

போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
- ஈரான் உச்சபட்ச தலைவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது தெரியும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
- ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் 90 சதவீதத்தை எட்டி விட்டதாகவும், இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி இஸ்ரேல், ஈரான் மீது கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது. அதேபோல் இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன.
இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தள பதிவில், "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" என்று தெரிவித்தார்.
அதேபோல் சதாம் உசே னுக்கு ஏற்பட்ட நிலைமை அயதுல்லா அலி காமெனிக்கு ஏற்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில் டிரம்பின் மிரட்டலுக்கு அடியபணிய மாட்டோம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "போர் தொடங்கிவிட்டது. பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு (இஸ்ரேல்) நாம் வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாங்கள் கருணை காட்ட மாட்டோம்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல்-ஈரான் 6-வது நாளாக பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன. ஈரான் தலைநகர் டெக்ரானை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. டெக்ரானுக்கு அருகில் உள்ள கோஜிர் ஏவுகணை உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணை உற்பத்தி நிலையம் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பிற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அதேபோல் டெக்ரானிலும், தலைநகருக்கு மேற்கே உள்ள கராஜ் நகரத்திலும் வெடிச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே டெக்ரானின் 18-வது மாவட்டத்தில் உள்ள ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அப்பகுதியில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறுமாறும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.
அதேபோல் இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது. டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது.
இதையடுத்து ஈரான் ஏவுகணைகளை நடுவானில் தடுக்க இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. தாக்குதல் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேல் ராணுவம் கேட்டு கொண்டது.
இந்த நிலையில் இஸ்ரேலைத் தாக்க ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும் டெக்ரான் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தளங்களை குறிவைத்து தாக்கியதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்து உள்ளது.
ஈரானின் ராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்ரஹிம் மௌசவி கூறும்போது, "இதுவரை எங்கள் ராணுவ நட வடிக்கைகள் வெறும் எச்சரிக்கைகள்தான். மேலும் கடுமையான, தண்டனைக்குரிய தாக்குதல்கள் தொடரக்கூடும். எனவே இஸ்ரேலியர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள டெல் அவிவ் மற்றும் ஹைபாவை விட்டு வெளியேற வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
மோதல் காரணமாக ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை 3 நாட்களுக்கு மூடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






