என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்ட தி.மு.க.: செல்லூர் ராஜூ
- சொகுசு காரில் முதலமைச்சர் வரும்போது மட்டும் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது.
- ஒரு முறைக்கு மறுமுறை ஆட்சிக்கு வராத சுவாரசியம் தி.மு.க.விற்கு இருக்கிறது.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்வர் வருகிறார் என்றால் போக்குவரத்து நிறுத்தம் செய்வது சகஜம் தானே, மதுரையில் முதல்வர் வருகைக்காக 3 மணி நேர போக்குவரத்து தடை செய்தார்கள். நடந்து செல்பவர்கள் கூட முதல்வரை காண வரவில்லை. 10 தொகுதியில் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறுகிறார். வாயில் வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் மக்கள் நினைக்க வேண்டுமே?
மக்கள் நினைத்திருந்தால் லட்சக்கணக்கானோர் கூடியிருப்பார்கள். முதல்வர் ரோடு-ஷோ இன்னொரு சித்திரை திருவிழாவாக மாறியிருக்கும். ரோடு-ஷோவிற்கு செயற்கையாக மக்கள் கூட்டப்பட்ட கூட்டம், தானா சேர்ந்த கூட்டம் அல்ல. மக்களுக்கான திட்டத்தை கொடுங்கள். திட்டங்கள் குறித்து பொதுவெளியில் விவாதிக்க நான் தயார்.
முதல்வர் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார். அவர் சென்னை கூவம் கால்வாயை பார்த்ததே இல்லையா? மதுரக்காரர்கள் எதை செய்தாலும் சற்று வித்தியாசமாக செய்கிறார்கள். மதுரையில சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதில் தான் நாம் நடந்து செல்கிறோம். நடந்து சென்றால் கூட வரி விதிக்கும் அளவுக்கு வரி மேல் வரி போடுகிறார்கள். சொகுசு காரில் முதலமைச்சர் வரும்போது மட்டும் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது.
பந்தல்குடி கால்வாயை பொருத்தவரை ஒருபுறம் இஸ்லாமியர்களும், மற்றொருபுறம் பட்டியலின மக்களும் வாழ்கிறார்கள். இந்த கால்வாயில் திரை அமைத்தது குறித்து நான் விமர்சனம் செய்தேன். என்னை தி.மு.க.வினர் விமர்சனம் செய்தார்கள். தெர்மாகோல் விஞ்ஞானியே நீ என்ன செய்தாய் என குறிப்பிட்டிருந்தார்கள். எங்க காலத்தில் சாக்கடை நீரை உறிஞ்சி சுத்தம் செய்வதற்கு இரண்டரை கோடி மதிப்பீட்டில் மறுசுழற்சி செய்து சாக்கடை நீர் தேங்காத அளவிற்கு மழைநீர் மட்டும் செல்வதற்கு வழிவகை செய்து கழிவுநீர் வைகையில் கலக்காமல் செய்தோம்.
ஆட்சி மாற்றம் ஆன பிறகு மேம்பாலம் கட்டுவதற்காக இரண்டரை கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மறுசுழற்சி திட்டம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் பந்தல்குடி கால்வாய் சாக்கடையை பார்த்து விடக்கூடாது என திரைசீலைகள் அமைக்கப்பட்டது. முதல்வர் பார்த்து விடக்கூடாது என்பதற்காக அலங்கார தோரணம் கட்டினார்கள். இதைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி நாங்கள் பல வருடமாக இங்கேதான் வாழ்கிறோம் என சண்டை போட்ட பிறகு அகற்றினார்கள்.
திரைச்சீலைகள் அமைக்கப்பட்டதற்கு மாவட்ட கலெக்டர் ஒரு விளக்கம் கொடுத்தார். யார் கட்டினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார். இது மாதிரியான ஒரு மாவட்ட கலெக்டரை நான் பார்த்ததே இல்லை. எதிர்க்கட்சி என்றால் பேசத்தானே செய்வார்கள்.
ஒரு முறைக்கு மறுமுறை ஆட்சிக்கு வராத சுவாரசியம் தி.மு.க.விற்கு இருக்கிறது. அதற்கான ஒரு சான்று, மதுரையில் பொதுக்குழு கூட்டினால் எப்பவும் வந்ததில்லை. கலைஞர் இருந்தபோதும் வந்ததில்லை. தி.மு.க.வில் தலைவர் எம்.ஜி.ஆர். இருந்தவரை ஆட்சிக்கு வந்தார்கள். தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். வெளியே வந்த பிறகு 2-வது முறையாக தி.மு.க. ஆட்சிக்கு வந்ததே இல்லை.
மதுரையில் தி.மு.க.பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ, அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. 1977-ல் நடந்த பொதுக்குழு அதன் பிறகு 12 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சி தான் வந்தது. தி.மு.க.விற்கு வனவாசம் தான். இதனால் தான் மதுரைக்காரர்கள் என்றாலே தி.மு.க. தலைமைக்கு பிடிக்காது. யாரோ சொல்லி முதல்வரை ஏமாற்றி இருக்கிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் உலகக் கோப்பை வாங்கியதாக மாவட்ட கலெக்டர் முதல் முதல்வர் வரை ஏமாற்றியது போல பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் நடத்தி முதல்வரை ஏமாற்றி இருக்கிறார்கள்.
தி.மு.க.வின் பொதுக்குழுவில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் இருப்பதை நேற்றுதான் நான் பார்த்தேன். மதுரையில் பொதுக்குழு நடத்தி தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்ட தி.மு.க. இனிமேல் 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. முதல்வர் ஏதோ அ.தி.மு.க. பொதுச்செயலாளரை திட்டுகிறார். திட்டதிட்ட திண்டுக்கல் நாங்க. எங்க பொதுச்செயலாளர் அவ்வளவு பவர்புல்லாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






