என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உதயநிதியின் விமர்சனங்களால் தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள்- ஆர்.பி. உதயகுமார் பதிலடி
    X

    உதயநிதியின் விமர்சனங்களால் தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள்- ஆர்.பி. உதயகுமார் பதிலடி

    • அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் எதிர்காலம் அ.தி.மு.க. தான். அப்படிப்பட்ட வலிமையான இயக்கத்தை என்ஜின் இல்லாத கார் என்றும் அதை பா.ஜ.க. என்ற லாரி கட்டி இழுக்க முயன்று வருகிறது என்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி உறுதியான கூட்டணி. இந்த கூட்டணியால் தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று கலங்கி போய் ஒரு நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி உள்ளார்.

    இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு தடையாக இருப்பது அ.தி.மு.க. தான்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை கண்டு நடுங்கிப் போயிருக்கும் உதயநிதி ஸ்டாலின் வரம்பு மீறி 54 ஆண்டு பொது வாழ்வில் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வந்த அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    வாரிசு அரசியலில் டெல்லியில் முடிவுரை எழுதப்பட்டு தற்போது பீகாரிலும் வாரிசு அரசியலுக்கு முடிவுரை எழுதி மக்கள் தந்த தீர்ப்பை கண்டு தான் ஸ்டாலினும், உதயநிதியும் அரண்டு போய் உள்ளார்கள்.

    அந்த காரில் சென்றார், இந்த காரில் சென்றார் என காரின் மீது கவனம் செலுத்தும் உதயநிதி ஸ்டாலின் தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும். வகுப்பு அறையில் மாணவிகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். சக மாணவர்களால் மாணவன் அடித்து கொலை.

    இப்படி எங்கே செல்கிறது இளைய சமுதாயம்? அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், இளைஞரணி என்ற பெயரில் அ.தி.மு.க.வை பற்றியும் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் வசை பாடி தான் கலங்கி நிற்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

    இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி என்ற சாமானியர் முடிவுரை எழுதும் வகையில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். அ.தி.மு.க.வை வெற்றிப்பாதை அழைத்துச் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாத நீங்கள் எத்தனை கோடி விமர்சனங்கள் வைத்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்கொள்வார்கள். தமிழக மக்கள் உங்கள் விமர்சனத்தை புறம் தள்ளுவார்கள்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அமர்வார். தி.மு.க.விற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியல் அநாகரீகம் இன்றி எத்தனை விமர்சனம் செய்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள், எள் முனையளவும் பின் வாங்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×