என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. பெட்டி பெட்டியாக கொடுத்தாலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி- நயினார் நாகேந்திரன்
    X

    தி.மு.க. பெட்டி பெட்டியாக கொடுத்தாலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி- நயினார் நாகேந்திரன்

    • ஞானசேகரன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததே சரியில்லை.
    • எங்களுடைய சந்தேகம் எல்லாம் அந்த சார் யார்? என்பதே.

    நெல்லை:

    மதுரையில் இந்த மாதம் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு நெல்லை தெற்கு, வடக்கு, தென்காசி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்பவர்கள் உண்மையான முருக பக்தர்கள் அல்ல என்று அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.

    அமைச்சர் சேகர்பாபு சபரிமலைக்கு போகக்கூடியவர். நல்ல பக்தர். அவர் இருக்கக்கூடிய இடம் சரியில்லை. அதனாலேயே கூடுதலாக பேசி வருகிறார். முருகர் அதை பற்றி கேட்பார்.

    ஞானசேகரன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததே சரியில்லை. குற்றப்பத்திரிகையை சரியாக தாக்கல் செய்தால் தான் நீதி கிடைக்கும். அந்த வழக்கை சி.பி.ஐ. தான் விசாரித்து இருக்க வேண்டும். எங்களுடைய சந்தேகம் எல்லாம் அந்த சார் யார்? என்பதே.

    ஒரத்தநாட்டில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சென்னையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்குகள் எல்லாம் ஏன் 157 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படவில்லை.

    காவல்துறை தங்களது பணியை செய்வதே இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. காவல்துறை ஏவல் துறையாக மாறி விட்டது.

    இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கிறது. அந்த மொழி, இந்த மொழி என்று பிரித்து பார்க்க வேண்டிய தேவை இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தான் பா.ஜ.க.வும் விரும்புகிறது.

    சட்டமன்ற தேர்தலில் பெட்டி பெட்டியாக பணம் இறக்குவார்கள் என்று த.வெ.க தலைவர் விஜய் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்த முறை தி.மு.க. பெட்டி பெட்டியாக கொடுத்தாலும் தேர்தலில் தோற்பது உறுதி.

    பென்னாகரம், திருமங்கலம் தேர்தல்களில் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். தற்போது 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு தயாராகி வருகிறார்கள். எவ்வளவு கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.

    பா.ம.க.வில் இருப்பது உட்கட்சி பிரச்சனை. அது பற்றி பேச முடியாது. ஆனால் பா.ம.க. எங்களோடு கூட்டணியில் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×