என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கிடைத்தால் சந்தோஷம்- துரை வைகோ
- கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன.
- குறுக்குவழியில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என அமித்ஷா நினைக்கலாம்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ம.தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிட எத்தனை சீட்டுகள் எண்ணிக்கை என்பது முக்கியமில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் வளா்ந்து விடக்கூடாது, சாதி-மத மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்படக்கூடாது என 9 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருந்து வருறோம்.
ம.தி.மு.க. எத்தனை சீட்டுகளில் போட்டியிட வேண்டும் என்பதை இயக்கத்தின் தலைமை முடிவெடுக்கும். உரிய எண்ணிக்கைக்கான சீட்டு எங்களுக்கு தி.மு.க. வழங்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
ம.தி.மு.க. எப்போதும் தி.மு.க. கூட்டணியுடன் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வேறு எந்த கூட்டணியில் இருந்தும் அழைப்பு வந்ததா? என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. மதவாத சக்திகள் தமிழகத்தில் கால் பதிக்கும் சூழ்நிலையில், எங்களது கூட்டணி உறுதியாக உள்ளன.
கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன. அதனை வளர விடக்கூடாது என்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகள் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம்.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளாம். அவர் மதவாத சக்திகளை எதிர்க்கிறார். விஜய் அறியாமலேயே மதவாத சக்திகளுக்கு உதவி விடக்கூடாது. மதவாத சக்திக்கு எதிரான தி.மு.க. கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும்.
த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் இணைய மாட்டார். அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே மதவாத சக்திக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளார். மேற்கு வங்காளம், தமிழகத்தையும் கைப்பற்றுவோம் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகிறார். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு கூறுகிறார்.
எஸ்.ஐ.ஆர். மூலம் தமிழகம், உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு இடங்களில் தகுதியான வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. எஸ்.ஐ.ஆர்-ஐ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கான காலக்கெடு தான் குறைவு. அதில் உள்ள குறைபாடுகளை நாங்கள் எதிர்க்கிறோம்.
இப்படி குறுக்குவழியில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என அமித்ஷா நினைக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது தகுதியான வாக்காளர்களை நீக்கி விடக்கூடாது என்பது தான் எங்களது அச்சம். ஏனெனில் இத்தகைய தவறுகள் ஒருசில மாநிலங்களில் நடந்துள்ளது. அது தமிழகத்தில் நடந்து விடக்கூடாது என்றார்.
இறுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு குறைந்த தொகுதிகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறதே என்று கேள்விக்கு, "எங்களுக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்பதை எங்கள் கட்சியின் தலைமை முடிவெடுக்கும். அதுகுறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கூட்டணியில் பேச்சுவார்த்தை நடக்கும் போது கூட்டணி தலைமையிடம் எங்கள் கட்சி தலைமை பேசும்.
தொகுதி எண்ணிக்கை குறைந்தால் யாருக்கும் சந்தோஷமாக இருக்காது. எண்ணிக்கை கூடினால் சந்தோஷப்படுவோம். தொகுதி எண்ணிக்கை குறைப்பு தொடர்பாக தி.மு.க. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.






