என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி செல்வாக்கு 52 சதவீதமாக அதிகரிப்பு- கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்
- தமிழ்நாட்டில் கட்சிகள் பெறும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை மாற்றம் இல்லை.
- அ.தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்திருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே-சி வோட்டர் மூட் ஆப் தி நேஷன் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் படி, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வாக்குகள் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. பா.ஜ.க. கூட்டணியின் வாக்கு சதவீதம் 3 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் வாக்கு 3 சதவீதம் சரிந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 18 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அ.தி.மு.க. கூட்டணி 23 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.
இந்த நிலையில், இப்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 5 சதவீதம் உயர்ந்து 52 சதவீதம் ஆக அதிகரித்திருக்கும்.
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வாக்குகள் 3 சதவீதம் அதிகரித்து 21 சதவீதம் ஆகி இருக்கும். அ.தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்திருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கட்சிகள் பெறும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியது. இதில் தி.மு.க. 22 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. இப்போது தேர்தல் வைத்தாலும் அதே நிலை தான் நீடிக்கும். பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விஜய், 2026 சட்டசபை தேர்தலில் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் இருப்பார். பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் விஜய் கட்சி ஆகியவை இணைந்து ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே தி.மு.க.வுக்கு சவாலாக மாற முடியும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.






