search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு கவுரவமான தொகுதிகள் கிடைக்கும்- செல்வபெருந்தகை
    X

    திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு கவுரவமான தொகுதிகள் கிடைக்கும்- செல்வபெருந்தகை

    • தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளின்போது இதுபோன்று காலதாமதம் ஏற்படுவது இயல்புதான்.
    • தி.மு.க. தலைமையுடன் டெல்லி மேலிட தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எத்தனை? என்பது இன்னும் முடிவாகாமலேயே உள்ளது.

    இதுதொடர்பாக தி.மு.க.வுடன் தமிழக காங்கிரசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

    இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    காங்கிரஸ் மேலிட தலைவர்களின் அழைப்பை ஏற்று டெல்லிக்கு பயணமான இருவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றியும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது நடந்த விஷயங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இருவரும் சென்னை திரும்பினார்கள்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக செல்வபெருந்தகையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளின்போது இதுபோன்று காலதாமதம் ஏற்படுவது இயல்புதான். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது? எந்தெந்த இடங்களில் களம் காண்பது என்பது பற்றியெல்லாம் தி.மு.க. தலைமையுடன் டெல்லி மேலிட தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    இந்த பேச்சுவார்த்தையில் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்படும். காங்கிரசுக்கு கவுரவமான தொகுதிகளை தி.மு.க. தலைமை ஒதுக்கி தரும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு செல்வ பெருந்தகை கூறினார்.

    Next Story
    ×