search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த ரகசியத்தை கூற நீங்கள் தயாரா? ஆர்.பி.உதயகுமாருக்கு, அமைச்சர் உதயநிதி சவால்
    X

    எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த ரகசியத்தை கூற நீங்கள் தயாரா? ஆர்.பி.உதயகுமாருக்கு, அமைச்சர் உதயநிதி சவால்

    • நீட் தேர்வை ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
    • நீட் தேர்வுக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    திராவிட மாடல் தி.மு.க. அரசானது மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. அது என்ன மாநாடு? என்று உங்களுக்கே தெரியும். இந்த மாநாட்டில் புளியோதரை நன்றாக இருந்ததா? பொங்கல் நன்றாக இருந்ததா? என்று மட்டும் தான் பேசப்பட்டது.

    ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனால் நீட் தேர்வு ரத்து குறித்து தீர்மானம் எதுவும் ஏன் நிறைவேற்றவில்லை? ஆனால் அதே நாளில் தி.மு.க. சார்பில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் எதிர்காலம் நலன் கருதி நீட் தேர்வுக்கு எதிராக மாநில அளவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    ஒரு மாநாடு எப்படி இருக்கக்கூடாது? என்பதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு. ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு எடுத்துக்காட்டாக சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு அமையும். இந்த மாநாட்டில் இளைஞரணியினர் உள்பட மூத்த முன்னோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு இளைஞரணி மாநாட்டை வாழ்த்த வேண்டும். அதற்கு அழைப்பு விடுக்கவும் நான் இங்கு வந்துள்ளேன்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மதுரைக்கு நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். அவரிடம் நீங்கள் நீட் தேர்வை ஒழிப்பது தொடர்பான ரகசியம் என்ன? என்று கேளுங்கள் என கூறியுள்ளார். அவருக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கோரி ஒரு செங்கலை மட்டும் வைத்து சென்றீர்கள். அந்த செங்கலையும் நான் எடுத்துக்கொண்டு வந்து விட்டேன். நீங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் ரகசியத்தை சொல்லுங்கள்.

    நீட் தேர்வை ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மாபெரும் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்த இருக்கிறோம். இதில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். நீட் தேர்வுக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி மக்களை ஏமாற்றும் கூட்டணி. சனாதனம் குறித்த எனது பேச்சை பா.ஜ.க.வினர் திரித்து பரப்பினர். சனாதனம் குறித்து அண்ணா கூறிய கருத்துக்களை அ.தி.மு.க.வினர் தைரியமாக மக்களிடம் சொல்வார்களா? அண்மையில் புதிய பாராளுமன்றம் திறப்பு விழா நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து சாமியார்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சாமியார்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்? மக்கள் பிரதிநிதிகள் கொண்ட பாராளுமன்ற திறப்பு விழாவில் நாட்டின் முதல் குடிமகளாக உள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவை கூட பா.ஜனதா அரசு அழைக்கவில்லை. காரணம் அவர் மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், கணவரை இழந்தவர் என்பதாலும் அழைக்கவில்லை. இதுதான் பா.ஜனதாவின் சனாதன அரசு. நேற்று கூட புதிய பாராளுமன்ற விழாவில் குடியரசு தலைவரை அழைக்கவில்லை. ஆனால் அதற்கு சம்பந்தமில்லாமல் இந்தி நடிகைகளை அழைத்துள்ளார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். முதலமைச்சர் செயல்படுத்தியுள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டம், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்றவற்றை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×