search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க-அ.தி.மு.க. குழுக்களின் சுற்றுப்பயணம் தொடங்கியது
    X

    தி.மு.க-அ.தி.மு.க. குழுக்களின் சுற்றுப்பயணம் தொடங்கியது

    • தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன.
    • கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் அட்டவணை இந்த மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    இதையொட்டி தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன. தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசின் இந்தியா கூட்டணிக்கும் இடையே பல தொகுதிகளில் போட்டி ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.


    தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியின் தேர்தல் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார். அந்த வகையில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பேச பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் எம்.எல்.ஏ., கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி., அயலக அணி செயலாளர் அப்துல்லா எம்.பி., மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அமையும் மத்திய அரசிடம் என்னென்ன எதிர்பார்ப்புகள், தேவைகள் இருக்கிறதோ அதனை தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்களிடம் கேட்க உள்ளனர். இதற்காக அந்த குழுவின் சுற்றுப்பயண விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அந்த குழுவினர் இன்று (திங்கட்கிழமை) தூத்துக்குடியில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்கள். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரி எதிரி உள்ள மாணிக்கம் மகாலில் இதற்கான கூட்டம் நடை பெற்றது.

    இதில் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர். கூட்டத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், செஞ்சி மஸ்தான், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் ஆலோசனை பெறப்பட்டது. கூட்டம் தொடங்கியதும் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-


    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டம் இன்று தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது.

    இதில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்களில் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய திட்டங்கள் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்படும்.

    பின்னர் இதுகுறித்து அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும். பொதுமக்களின் அனைத்து கருத்துக்களும் கேட்கப்பட்டு தயாரிக்கப்படும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக வெளி வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோரிடம் தி.மு.க. குழுவினர் கருத்துக்களை கேட்டனர். பலரிடம் அவர்களது கோரிக்கைகள் மனுக்களாக எழுதி வாங்கப்பட்டன.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும், தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், தூத்துக்குடி துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை மேம்படுத்த வேண்டும், கப்பல் போக்குவரத்து வசதிகளை பெருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தி.மு.க. குழுவினர் பொதுமக்களிடம் தெரிவித்தனர். இன்று காலை 10 மணி முதல் நீண்ட நேரம் விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட பகுதி மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    அவர்களது அடிப்படை தேவைகள், எந்தெந்த பகுதிகளில் அரசு திட்டங்கள் தேவைப்படுகிறது மற்றும் முக்கிய எதிர்பார்ப்புகள் குறித்து கேட்கப்பட்டது. இன்று பிற்பகலில் ராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது.

    இந்த குழு நாளை கன்னியாகுமரிக்கும், நாளை மறுநாள் (7-ந்தேதி) மதுரைக்கும் செல்கிறது. தொடர்ந்து 8-ந்தேதி தஞ்சை, 9-ந்தேதி சேலம், 10-ந்தேதி கோவை, 11-ந் தேதி திருப்பூர். 16-ந்தேதி ஓசூர், 17-ந்தேதி வேலூர், 18-ந்தேதி ஆரணி, 20-ந் தேதி விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கிறார்கள். இறுதியில் 21, 22, 23-ந்தேதிகளில் 3 நாட்கள் சென்னையில் முகாமிட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்துக்களை கேட்கிறார்கள்.

    தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்ததும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் பொது மக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையாக இறுதி செய்யப்படும்.

    அடுத்த மாதம் முதல் வாரத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கை ஹீரோவாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. ஏற்கனவே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தி.மு.க.வை போலவே அ.தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்துக்கள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு குழு அமைத்துள்ளார்.


    இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் நந்தம் விசுவநாதன், பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் குழுவும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பெற உள்ளது.

    இதற்காக சென்னையில் இருந்து தங்களது பயணத்தை இன்று (திங்கட்கிழமை) தொடங்கினார்கள். வேலப்பன்சாவடியில் இன்று காலை அ.தி.மு.க. குழுவினர் கட்சி நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    பொதுமக்களிடம் எழுத்து பூர்வமாகவும் கருத்துக்களை கோரிக்கைகளை அ.தி.மு.க. தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.

    சென்னையை தொடர்ந்து வேலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை என மண்டலம் வாரியாக பிரித்து கருத்துக்களை பெற உள்ளனர். வருகிற 10-ந்தேதி கோவை மண்டலத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நிறைவடைய உள்ளது. அதன் பிறகு மக்களிடம் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாகும் சமயத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×