search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போதைப்பொருளுக்கு எதிராக நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும்- அண்ணாமலை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    போதைப்பொருளுக்கு எதிராக நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும்- அண்ணாமலை

    • தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
    • மாற்றத்தை விரும்புபவர்கள் பாரதிய ஜனதா கட்சி பக்கம் வாருங்கள்.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மாற்றத்தை விரும்புபவர்களுக்கான ஒரே கட்சி பாரதிய ஜனதா மட்டும் தான். ஊழல் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும், தி.மு.க. இல்லாத ஒரு ஆட்சி தமிழகத்தில் வர வேண்டும் என்றால் அது பாரதிய ஜனதா கட்சியால் தான் முடியும் என்பதை மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். தமிழகத்தில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி களமிறங்கி இருக்கிறது. அதனை 2024 பாராளுமன்ற தேர்தலில் நடத்திக் காட்டுவோம்.

    தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக தான் அரசியலுக்கு வந்துள்ளேன். என்னுடைய கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன். எம்.பி.யாக வேண்டும், எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. வருகின்ற காலங்களில் அதனை நீங்கள் பார்ப்பீர்கள்.

    2026 சட்டசபை தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். அதற்கு தான் எனது முழு கவனமும் உள்ளது. மாற்றத்திற்கான அடித்தளமாக 2026 ஆண்டு இருக்கும்.

    நாங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு எப்போதோ தயாராகி விட்டோம். தேர்தலை எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கிறோம். பாரதிய ஜனதாவை பொறுத்தவரை 2024 பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் சரித்திர தேர்தலாக இருக்கும். இதனை உறுதியாக நம்புகிறோம்.

    பாரதிய ஜனதா 25 சதவீத வாக்கு வங்கியை எப்போதோ தாண்டி விட்டோம். 2024 தேர்தலை பாருங்கள். மாற்றத்திற்கான அறிகுறி அதில் இருக்கும். மாற்றத்தை விரும்புபவர்கள் பாரதிய ஜனதா கட்சி பக்கம் வாருங்கள். எல்லோரும் சேர்ந்து மாற்றத்தை கொண்டு வருவோம்.


    நடிகர் கமல்ஹாசன் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். தற்போது அவர் தி.மு.க. பக்கம் போய் இணைந்துள்ளார். இதுபற்றி மக்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அரசியல் என்பது கடினமான ஒரு வேலை. அதிலும் கொள்கை அரசியல் என்பது இன்னும் கடினமானது. கொள்கையை விடாமல் அந்த கொள்கையிலேயே பயணம் செய்ய வேண்டும் என்பது மிகவும் கடினமானது. இதனை கடைபிடிக்க முடியாமல் கமல்ஹாசன் தி.மு.க.வோடு இணைந்திருப்பது நாம் அனைவருக்கும் தெரிகிறது. இது கமல்ஹாசனின் முடிவு. சினிமாத்துறையில் இந்த அளவுக்கு தி.மு.க.வின் ஆதிக்கம் உள்ளது. கமல்ஹாசன் தன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்றி உள்ளார். தி.மு.க. கொடுக்கும் மாநிலங்களவை எம்.பி. சீட்டில் நடிகர் கமல்ஹாசன் பாராளுமன்றம் செல்ல உள்ளது வேதனையை தருகிறது. நிர்பந்தத்தால் தி.மு.க. நிலைப்பாட்டிற்கு கமல்ஹாசன் சென்றிருப்பது கவலை அளிக்கிறது.

    நடிகர்கள் எல்லா பிரச்சனைக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நடிகர்கள் எதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். அவர்கள் என்ன சமூக ஆர்வலராக இருக்கிறார்களா, தொண்டு நிறுவனம் நடத்துகிறார்களா அல்லது உங்களை போன்று என்னை போன்று சாமானிய வாழ்க்கை நடத்துகிறார்களா, ரோட்டில் போய் மக்களின் கஷ்டத்தை பார்க்கிறார்களா?

    அதனால் நீங்கள் எதற்கெடுத்தாலும் நடிகர்கள் தான் முதலில் பேச வேண்டும் என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும். நடிகர்கள் ஒரு சிறு வட்டத்துக்குள் வாழ்கிறார்கள். ஒரு கட்டம் போட்டு அந்த கோட்டுக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவ்வளவு தான்.

    இன்று சமுதாயத்தில் யார் பணி செய்கிறார்களோ அவர்களது குரல் கம்பீரமாக ஒலிக்க வேண்டும் என்று சாமானிய மக்கள் விரும்புகிறார்கள். அதனால் நடிகர்களின் வேலை நடிப்பது. அவர்கள் நடிக்கிறார்கள், பிடித்து இருந்தால் கைதட்டி விட்டு அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    கேரளாவில் பிரபல நடிகராக மம்முட்டி இருக்கிறார். அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்டனர். அதற்கு அவர் அரசியல் வேறு, சினிமா வேறு என்று கூறினார். சினிமாவை கைதட்டி பார்ப்பவர்கள், அரசியலுக்கு வரும்போது கைதட்டுவார்களா என்று தெரியாது. அதனால் ஒதுங்கி இருப்பது நல்லது என்றார். ஆந்திராவிலும் இதைப்போன்று நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வந்தனர். தற்போது அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்கள். தற்போது அதற்கு கமல்ஹாசன் ஒரு சிறந்த உதாரணம். அரசியல் என்பது முழு நேரம் செய்யக்கூடிய ஒரு பணி. நான் அமெரிக்கா போவேன், சூட்டிங் போவேன். ஓய்வு எடுப்பேன், 4 நாள் அரசியல் செய்வேன் என்பது சாத்தியமில்லா ஒன்று. சமுதாய பிரச்சனைகளுக்கு எல்லாம் அவர்கள் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

    தி.மு.க. ஆட்சியில் ஒரு இடத்தில் டெக் பார்க் அமைக்கப் போகிறார்கள் என்றால் அந்த இடம் அருகே அவர்கள் இடம் வாங்கி இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதனால் தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி என்பது கேலிக்கூத்து.

    போதைப்பொருளால் கிடைத்த பணத்தின் மூலம் ஜாபர் சாதிக் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டுள்ளார். போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து மக்கள் முன் அவர்களை நிறுத்த வேண்டும்.

    போதைப்பொருளுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×