search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பாஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா-நட்டா ஆலோசனை
    X

    தமிழக பாஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா-நட்டா ஆலோசனை

    • பி.எல். சந்தோஷ் தேர்தலை சந்திப்பதற்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுத்து கொடுத்து உள்ளார்.
    • பல்வேறு அணிகளின் தலைவர்கள் உள்பட 256 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பது தொடர்பாக பா.ஜனதா தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. பா.ஜனதா கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்று இன்னும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    அதே நேரம் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் திரைமறைவில் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    கூட்டணி பேச்சு ஒருபுறம் நடந்தாலும் பா.ஜனதா தனித்து போட்டியிடும் சூழ்நிலை வந்தாலும் அதையும் சந்திக்கும் வகையில் கட்சியை தயார்படுத்தி வருகிறார்கள்.

    பா.ஜனதா தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் சமீபத்தில் கோவையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதையெல்லாம் கடந்து பா.ஜனதா 15 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளை பெற வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் களத்தில் பணியாற்ற வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.

    ஏற்கனவே பி.எல். சந்தோஷ் தேர்தலை சந்திப்பதற்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுத்து கொடுத்து உள்ளார்.


    அதன்படி ஒவ்வொரு சட்டமன்ற அளவிலான நிர்வாக குழுக்களும், பாராளுமன்றத் தேர்தல் பணிக்குழு, முழுமையான பூத் கமிட்டி அமைத்தல், பக்க பிரமுகர்களை நியமித்தல், ஒவ்வொரு பூத்திலும் 10 முக்கிய பிரமுகர்களை இணைப்பது பஞ்சாயத்து அளவில் போட்டியிட்டவர்கள், பிரபலங்கள், சமூக, ஆன்மீக முக்கியஸ்தர்களை கட்சியில் இணைத்தல், மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் தொடர்பை ஏற்படுத்துதல், பூத் அளவில் வாட்ஸ் அப் குழுக்களை வலிமைபடுத்துதல், குறிப்பிட்ட குழுவினரை மனதில் கொண்டு அவர்களுக்காக பிரசார யுக்திகளை வகுப்பது, அரங்க கூட்டங்கள் நடத்துவது, வாக்காளர்களின் மனதை கவரும் வகையில் விளம்பரங்களை அனைத்து ஊடகங்கள், டிஜிட்டல் மூலம் வெளியிட வேண்டும்.

    கட்சியின் பல்வேறு நிலைகளிலும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல், கடை நிலையில் இருக்கும் பூத்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.

    ஒவ்வொரு பூத்திலும் கடந்த தேர்தல்களைவிட 10 சதவீத வாக்குகளை அதிகரித்தல், சாதி, தொழில் வயது வாரியான மற்றும் நடுநிலை வாக்காளர்களை தொடர்ந்து சந்திப்பது, எதிர்ப்புகளை திறம்பட சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை வகுத்து கொடுத்திருந்தார்.

    இந்த நிலையில் கட்சியின் அனைத்து நிலைகளையும் சேர்ந்த கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து இதுவரை நடந்த பணிகள் பற்றி மதிப்பிடவும், தொகுதியின் நிலவரங்கள் பற்றி நேரில் கேட்கவும் டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது.


    இதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் துணைத் தலைவர்கள், செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், பல்வேறு அணிகளின் தலைவர்கள் உள்பட 256 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    டெல்லியில் வருகிற 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் பங்கேற்று நிலவரங்களை கேட்கிறார்கள். இதுவரை செய்து முடித்துள்ள பணிகள் தொடர்பாக தொகுதி வாரியாக கேட்டறிவார்கள்.

    அதை தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியின் நிலவரங்கள், வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரங்களை கேட்டறிகிறார்.

    பின்னர் அவற்றின் அடிப்படையில் நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக விளக்கம் அளிப்பார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×