search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே மீண்டும் பேச்சுவார்த்தை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

    • அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.வை இழுக்கும் முயற்சியும் ஒருபுறம் நடந்து வருகிறது.
    • அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க.வுடன் சந்திக்க தே.மு.தி.க. முடிவு செய்து உள்ளது. இரு கட்சி நிர்வாகிகளும் 2 கட்ட பேச்சு வார்த்தை நடத்தி முடித்து உள்ளனர். தே.மு.தி.க.விற்கு 3 அல்லது 4 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    ஆனால் மேல்சபை எம்.பி. ஒன்றையும் தே.மு.தி.க. கேட்டு வருவதால் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் நீடித்து வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு மேல்சபை எம்.பி. கொடுக்க முடியாத சூழலை விளக்கி கூறினாலும் தே.மு.தி.க. பிடிவாதமாக உள்ளது.

    இதற்கிடையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.வை இழுக்கும் முயற்சியும் ஒருபுறம் நடந்து வருகிறது. பா.ம.க. வந்தால் அ.தி.மு.க. கூட்டணி வலுவடையும் என கருதி அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படுகின்ற நிலையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது குறித்தும் அறிவிக்க வேண்டிய நிலை உள்ளது.


    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தைக்கு தே.மு.தி.க. தயாராக இருந்த நிலையில் அழைப்பு இல்லாததால் பேசவில்லை. பா.ம.க.வை இழுக்கும் முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபட்டுள்ளதால் பேச்சுவார்த்தை தள்ளிப் போனது. இன்று மாலை தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு கொடுத்துள்ளது.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு இன்று சென்னை திரும்புகிறார். இதையடுத்து தொகுதி பங்கீட்டு குழுவினர் இளங்கோவன், மோகன்ராஜ், பார்த்தசாரதி ஆகியோர் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று மாலையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு விடும். ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×