search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவலர்களுக்கு இலவசப் பயணம் - முதலமைச்சரின் அறிவிப்பை உடனடியாக அமல்படுத்துக!
    X

    காவலர்களுக்கு இலவசப் பயணம் - முதலமைச்சரின் அறிவிப்பை உடனடியாக அமல்படுத்துக!

    • காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?
    • முதலமைச்சரின் மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

    சென்னை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் நடத்துனரும், போலீஸ்காரரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இதையடுத்து போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில்,

    கடந்த 2021-2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

    முதலமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

    உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்துக்காக, ஆறுமுகப்பாண்டி மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×