என் மலர்
தமிழ்நாடு

சிவசுப்ரமணிய சாமி கோவிலில் கொடியேற்ற நடந்த காட்சி
தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
தருமபுரி:
தருமபுரி குமாரசாமி பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
இந்த திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
பின்னர் ஆகம விதிகள்படி திருவிழா கொடி ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அரசால் தடை விதிக்கப்பட்டதால் இந்த விழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு கோவில் வளாகத்துக்குள் ஆட்டுக்கடா வாகனத்தில் சாமி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) புலி வாகன உற்சவமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) பூத வாகன உற்சவமும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாக வாகன உற்சவமும் கோவில் வளாகத்துக்குள்ளேயே நடக்கிறது.
வருகிற 18-ம் தேதி தைப்பூச தினத்தன்றும் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கோவில் வளாகத்துக்குள் எளிமையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சாமிக்கு சிறப்பு பால் அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கார சேவை நடக்கிறது. இரவு சாமி திருக்கல்யாண உற்சவமும், பொன் மயில் வாகனத்தில் சாமி உற்சவமும் நடக்கிறது.
ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவையொட்டி விநாயகர் தேரோட்டமும், சுப்பிரமணிய சாமி தேரோட்டமும் வெகு விமர்சையாக நடத்துவது வழக்கமாகும். இந்தாண்டு தேரோட்டம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார்.
இதனால் இந்த ஆண்டு தைப்பூச தேரோட்டம் நடைபெறவில்லை. ஆனால் ஆகம விதிகள்படி கோயில் வளாகத்துக்கு உள்ளேயே சாமி உற்சவம் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதேபோன்று தேரோட்டத்தின் போது நடைபெறும் சிற்றுண்டி மற்றும் அன்னதானம் வழங்கும் விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருகிற 21-ந் தேதி வேடர்பறி உற்சவமும், 22-ம் தேதி பூப்பல்லக்கு உற்சவமும், 23-ம் தேதி சயன உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Next Story