என் மலர்tooltip icon

    கால்பந்து

    • 4வது லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
    • முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு நடந்த குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் 9வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக பிரான்ஸ் வீரர் ஆட்ரியன் ரேபியாட் 27-வது நிமிடத்திலும், ஆலிவர் கிரௌட் 32-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்தில் கைலியன் மாப்பே ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஆலிவர் கிளெய்ட் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

    இறுதியில், பிரான்ஸ் அனி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    • இன்று நடந்த 3வது லீக் ஆட்டத்தில் மெக்சிகோ, போலந்து அணிகள் மோதின.
    • ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் டிராவில் முடிந்தது

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் மெக்சிகோ, போலந்து அணிகள் மோதின.

    ஆரம்பம் முதல் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆனால் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது. இதையடுத்து நடந்த 2-வது பாதியிலும் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை.

    கூடுதலாக வழங்கப்பட்ட 10 நிமிடத்திலும் கோல் அடிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் 0-0 என சமநிலையில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • 2வது பாதியிலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டென்மார்க் - துனிசியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர்.

    முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்திலும் கோல் எதுவும் அடிக்கப்படாதால், ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

    • முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
    • அர்ஜென்டினாவுக்காக 4 உலக கோப்பை தொடரிலும் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு  10 வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

    எனினும் 2வது பாதியில் சவுதி அரேபிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 48 வது நிமிடத்தில் அந்த அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர். இதை முறியடிக்க முயன்ற அர்ஜென்டினா வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த உலக கோப்பையில் முதலாவது கோலை பதிவு செய்ததன் மூலம் அந்த அர்ஜென்டினா அணிக்காக 4 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

    • கொல்லத்தில் நடந்த பேரணியில் பிரேசில், அர்ஜென்டினா அணி ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    கொல்லம்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் அணிகளுக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். உலக கால்பந்து போட்டி தொடங்கிய நாளன்று தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணியின் டி-சர்ட்டுகளை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர்.

    அந்த வகையில், கேரள மாநிலம் கொல்லத்தில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பிரேசில், அர்ஜென்டினா அணி ரசிகர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் எத்தனை பேருக்கு காயம் ஏதும் ஏற்பட்டது? என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    உள்ளூர் பிரமுகர் ஒருவர் இரு அணி ரசிகர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்த மோதல் தொடர்பாக புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    இதேபோல் பாலக்காட்டிலும் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கால்பந்து ரசிகர்கள் மோதிக் கொண்டபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • அமெரிக்கா,வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
    • அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் தலா ஒரு கோல் அடித்தன.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் சிறப்பாக ஆடியது அமெரிக்க அணி. முதல் பாதியின் 36-வது நிமிடத்தில் அமெரிக்க அணியின் திமுதி வியா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 82-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வேல்ஸ் வீரர் பாலே அபாரமாக கோலாக மாற்றினார்.

    இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
    • 2வது பாதியில் நெதர்லாந்து அணி 2 கோல்களை அடித்து வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் ஏ பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் செனகல், நெதர்லாந்து அணிகள் மோதின.

    தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர்கள் போராடினர். ஆட்டத்தின் 84 வது நிமிடத்தில் கோடி கேக்போ ஒரு கோல் அடித்து அசத்தினார்.

    ஆட்டம் முடிந்ததும் கூடுதலாக 10 நிமிடம் அளிக்கப்பட்டது. 99வது நிமிடத்தில் நெதர்லாந்தின் டேவி கிளாசன் ஒரு கோல் அடித்தார்.

    இதன்மூலம் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தியது.

    • இங்கிலாந்து அணி முதல் பாதியில் 3 கோல்களை அடித்து வலுவான முன்னிலை பெற்றது.
    • போட்டியை எப்படியாவது டிரா செய்துவிடவேண்டும் என ஈரான் வீரர்கள் தொடர்ந்து போராடினர்.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில், இன்று கலிபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற குரூப்-பி முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதின.

    துவக்கத்தில் இருந்தே ஆட்டத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்து அணி முதல் பாதியில் 3 கோல்களை அடித்து வலுவான முன்னிலை பெற்றது. ஜூட் பெலிங்காம் (35வது நிமிடம்), புகாயோ சகா (43), ரகீம் ஸ்டெர்லிங் (45+1) கோல் அடித்தனர்.

    இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. புகாயோ சகா 62வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

    இங்கிலாந்து வீரர்களுக்கு பதிலடி கொடுக்க ஈரான் அணியின் வீரர்கள் ஆக்ரோஷமாக முன்னேறினர். போட்டியை எப்படியாவது டிரா செய்துவிடவேண்டும் என தொடர்ந்து போராடினர். 65-வது நிமிடத்தில் அந்த அணியின் மெஹ்தி கோல் அடித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு 71வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். போட்டியின் இறுதிக்கட்டத்தில் ஜேக் கிரீலிஸ் (89வது நிமிடம்) கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 6-1 முன்னிலை பெற்றது. கூடுதல் நேரத்தில் ஈரான் வீரர் மெஹ்தி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 6-2 என அபார வெற்றி பெற்றது. 

    • உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
    • முதல் போட்டியில் கத்தார்- ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடக்கிறது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடந்த தொடக்க ஆட்டத்தில் கத்தார், ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டம் தொடங்கிய 16-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஈகுவடார் அணியின் வேலன்சியா கோல் அடித்தார். தொடர்ந்து, 31-வது நிமிடத்தில் 2வது கோலையும் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் ஈகுவடார் அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், ஈகுவடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை தோற்கடித்து முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா, தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி.

    தோகா:

    உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.

    இந்நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18-ம் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஏ பிரிவு - கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

    பி பிரிவு - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

    சி பிரிவு - அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

    டி பிரிவு - பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

    இ பிரிவு - ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்

    எப் பிரிவு - பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

    ஜி பிரிவு - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

    எச் பிரிவு - போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். டிசம்பர் 2-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நாக் அவுட்டுக்கு தகுதி பெறும். டிசம்பர் 3 முதல் 6-ம் தேதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.

    டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கால் இறுதியும், 13 மற்றும் 14-ம் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடக்கிறது.

    உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. ஏ பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    முன்னதாக இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணி உலக கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை கைப் பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த முறை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • 2வது பாதியில் ஸ்பெயின் அணிக்காக கொலம்பிய வீராங்கனை கோல் அடித்தார்.

    நவி மும்பை,

    17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதி ஆட்டத்திற்கு ஸ்பெயின்- கொலம்பியா மகளிர் அணிகள் தகுதி பெற்று இருந்தன.

    மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள பாட்டில் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியில் கொலம்பியா அணி வீராங்கனை அனா மரியா குஸ்மான் ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் தவறுதலாக ஸ்பெயின் அணிக்காக ஒரு கோல் அடித்தார்.

    இதையடுத்து அதை சரி செய்ய கொலம்பியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் மகளிர் அணி வெற்றி பெற்றதுடன் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    • ஆரம்பம் முதல் அமெரிக்க வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினர்.
    • ஆட்டத்தின் முடிவில் 8-0 என்ற கோல்கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்றது.

    புவனேஷ்வர்:

    17 வயதுக்கு உட்பட்டவருக்கான ஜூனியர் உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. நேற்று தொடங்கி உள்ள இந்த போட்டித் தொடர் 30-ந் தேதி வரை புவனேஷ்வர், கோவா, நவி மும்பை ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்நிலையில் துவக்க நாளான நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இந்திய மகளிர் கால்பந்து அணி பலம் வாய்ந்த அமெரிக்க மகளிர் அணியை எதிர்கொண்டது.

    ஆரம்பம் முதல் தீவிரம் காட்டிய அமெரிக்க வீராங்கனைகள் அடுத்தடுத்து கோல் அடித்தனர். அந்த அணி சார்பில் அதிகபட்சமாக மெலினா ரெபிம்பாஸ் பிரே 2 கோல்களை அடித்தார். பதிலுக்கு கோல் போடுவதற்கு இந்திய வீராங்கனைகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இறுதிவரை இந்திய அணி கோல் அடிக்காததால் அமெரிக்க ஜூனியர் கால்பந்து அணி 8-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    ×