என் மலர்tooltip icon

    விளையாட்டு

    துவக்கத்தில் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த உக்ரைன் வீராங்கனை முதல் இரண்டு செட்களை எளிதாக கைப்பற்றினார்.
    டோக்கியோ:

    டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மணிகா பத்ரா, 4-3 என்ற செட்கணக்கில் உக்ரைன் வீராங்கனை பெசோட்ஸ்காவை வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    துவக்கத்தில் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த உக்ரைன் வீராங்கனை முதல் இரண்டு செட்களை எளிதாக கைப்பற்றினார். அதன்பின்னர் எழுச்சி பெற்ற மணிகா பத்ரா அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றி சமன் செய்தார். 5வது செட்டை பெசோட்ஸ்கா வசமாக்கினார். அடுத்த 2 செட்களை மணிகா பத்ரா கைப்பற்றியதால் வெற்றி பெற்றார்.

    முன்னதாக ஆண்களுக்கான ஒற்றையர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சத்யன், 3-4 என போராடி தோல்வி அடைந்தார்
    இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரரான மேரி கோம், முதல் போட்டியில் டொமினிக்கன் வீராங்கனையை 4-1 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    உலகளவில் இந்தியாவுக்காக பல பதக்கங்களைப் பெற்று தந்தவர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை பிளைவெயிட் பிரிவு 2-வது சுற்று இன்று பிற்பகல் நடந்தது.  இதில், மேரி கோம் டொமினிக்கன் வீராங்கனை மிகெலீனா ஹெர்னாண்டஸ்  எதிர்கொண்டார்.

    மேரி கோம் - டொமினிக்கன் வீராங்கனை

    இதில் மேரி கோம் 4-1 என எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அவர் ஐந்து ரவுண்டுகளிலும் முறையே 30-27, 28-29, 29-28, 30-27, 29-28 என புள்ளிகள் பெற்றார்.
    டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் ஜி.சத்யன் 3-4 என்ற கணக்கில் தோற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடந்த பெண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா ஜோடி உக்ரைனை சேர்ந்த சகோதரிகளான நாடியா- லுட்மைலா ஜோடியை எதிர் கொண்டது.

    இதன் முதல் செட்டை சானியாமிர்சா ஜோடி 6-0 என்ற கணக்கில் எளிதில் வென்றது. இதனால் அடுத்த செட்டையும் வென்று வெற்றி பெறும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

    ஆனால் அதற்கு அடுத்த 2 செட்டிலும் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா ஜோடி தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது. உக்ரைன் ஜோடி 0-6, 7-6, (7-0), 10-8 என்ற கணக்கில் சானியா ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    2 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஒலிம்பிக் போட்டியில் இருந்து திடீரென விலகி உள்ளார்.

    டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் ஜி.சத்யன் இன்று நடந்த 2-வது சுற்றில் ஆங்காங்கை சேர்ந்த லாமை எதிர் கொண்டார். இதில் முதல் செட்டை இழந்த அவர் அதற்கு அடுத்த 3 செட்களை கைப்பற்றினார்.

    ஆனால் அடுத்து 3 செட்களையும் இழந்து சத்யன் போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் 7-11, 11-7, 11-4, 11-5, 9-11, 10-12, 6-11 அதாவது 3-4 என்ற கணக்கில் தோற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார்.

    வெற்றிபெற நல்ல வாய்ப்பு இருந்ததை சென்னையை சேர்ந்த சத்யன் கோட்டைவிட்டது ஏமாற்றமே.

    பளுதூக்குதலில் புதிய வரலாறு படைத்த மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி, பிரதமர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இம்பால்:

    டோக்கியோ ஒலிம்பிக் கோட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பளுதூக்கும் வீராங்கனை மீராபாய்சானு பெற்றுக்கொடுத்தார்.

    49 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்ற அவர் வெள்ளிப்பதக்கம் பெற்றார். அவர் ஸ்னாட்ச் முறையில் 87 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 115 கிலோவும் ஆக மொத்தம் 202 கிலோ தூக்கி 2-வது இடத்தை பிடித்தார்.

    இதன் மூலம் 26 வயதான மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு புதிய வரலாறு படைத்தார். 21 ஆண்டுகளுக்கு பிறகு பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுக்கொடுத்தார்.

    இதற்கு முன்பு 2000 ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப்பதக்கம் வென்றார். அவரை விட சானு சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

    ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற 6-வது இந்தியர் என்ற பெருமையை மீராபாய்சானு பெற்றார். இதற்கு முன்பு நார்மன் ரிச்சர்டு (தடகளம்), ராஜ்வர்தன் ரத்தோர் (துப்பாக்கி சுடுதல்), சுஷில்குமார் (மல்யுத்தம்), விஜய்குமார் (துப்பாக்கி சுடுதல்), பி.வி.சிந்து (பேட்மிட்டன்) ஆகியோர் ஒலிம்பிக் தனி நபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்று இருந்தனர்.

    பளுதூக்குதலில் புதிய வரலாறு படைத்த மீராபாய் சானுவுக்கு நாடுமுழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. ஜனாதிபதி, பிரதமர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ஒலிம்பிக்கில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் பெற்றதால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவரது தந்தை சாய்கோம் மெய்த்தி கூறியதாவது:-

    எனது மகள் மீராபாய்சானு இந்தியாவுக்காக பதக்க கணக்கை தொடங்கியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்பினோம்.

    ஆனால் அவர் பெற்ற வெள்ளி எங்களுக்கு தங்க பதக்கம் போன்றது. நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளோம். எனது மகளை நினைத்து நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரியா ஒலிம்பிக்கின் தோல்விதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. எனது இந்த வெள்ளிப்பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். நம்பிக்கை வைத்து எனக்காக நிறைய தியாகங்கள் செய்த எனது குடும்பத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

    ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வியடைந்தனர்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் தீபக்குமார், திவ்யான்ஷ் சிங் பன்வார் பங்கேற்றனர்.  

    இப்போட்டியில் முதல் 8 இடங்களை கைப்பற்றும் விரர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவர். 6 சுற்றுகளை கொண்ட தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் தீபக் குமார் முறையே 102.9, 103.8, 103.7, 105.2, 103.8, 105.3 என மொத்தம் 624.7 புள்ளிகளை பெற்றார். இதனால், அவர் தரவரிசையில் 26-வது இடத்தை பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.

    தீபக்குமார்

    அதேபோல், மற்றொரு இந்திய வீரராக திவ்யான்ஷ் சிங் பன்வார் முறையே 102.7, 103.7, 103.6, 104.6,    104.6, 103.6 என மொத்தம் 622.8 புள்ளிகளை பெற்றார். இதனால், தரவரிசையில் 32-வது இடத்தை பெற்று அவரும் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.



    டிஎன்பிஎல் போட்டியில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் கோவை கிங்ஸ் அணியிடம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோதுகிறது.

    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது. மற்றொரு போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 16 ரன்னில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தியது.

    7-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின.

    இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் 2-வது வெற்றி யாருக்கு? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுரை அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை தோற்கடித்தது. திருச்சி அணி முதல் ஆட்டத்தில் 74 ரன்னில் நெல்லை ராயல் கிங்சை வீழ்த்தியது. 2-வது போட்டியில் 8 விக்கெட்டில் கோவை கிங்சிடம் தோற்றது.

    இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    3 புள்ளியுடன் இருக்கும் கோவை கிங்ஸ் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. புள்ளிகள் எதுவும் பெறாத திண்டுக்கல் அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    ஆண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைலில் துனிசியாவும், பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லெ பிரிவில் ஜப்பானும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றின.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4x100 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் நீச்சலில் ஆஸ்திரேலியா உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது.

    ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்த பிரிவில் 3 நிமிடம் 29.69 வினாடியில் கடந்து உலக சாதனை படைத்தது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியா 3 நிமிடம் 30.05 வினாடியில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து ஒலிம்பிக் மற்றும் உலக சாதனையை ஆஸ்திரேலியா படைத்தது.

    கனடாவுக்கு வெள்ளி பதக்கமும் (3 நிமிடம் 32.78 வினாடி), அமெரிக்காவுக்கு (3 நிமிடம் 32.81 வினாடி) வெண்கல பதக்கமும் கிடைத்தது.

    அமெரிக்காவுக்கு இன்று முதல் தங்கப்பதக்கம் நீச்சல் மூலம் கிடைத்தது. ஆண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லெ பிரிவில் அந்நாட்டு வீரர் சேஸ் காலிஸ் தங்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் வெள்ளியும், ஆஸ்திரேலிய வீரர் வெண்கலமும் பெற்றனர்.

    ஆண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைலில் துனிசியாவும், பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லெ பிரிவில் ஜப்பானும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றின.

    ரஷிய ஒலிம்பிக் கமிட்டிக்கு முதல் தங்கப்பதக்கம் இன்று கிடைத்தது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அந்நாட்டை சேர்ந்த விட்டாலினா பேட்சராஸ் கினா தங்கம் வென்றார். அவர் 240.03 புள்ளிகள் பெற்று புதிய ஒலிம்பிக் சாதனை பெற்றார்.

    பல்கேரியாவுக்கு வெள்ளி பதக்கமும், சீனாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தன. 

    விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கெத்தாக வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி, முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.
    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி ஸ்பெயின் நாட்டின் சாரா சொர்ரிபெஸ் டோர்மோவை எதிர்கொண்டார்.

    ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4-6, 6-3 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

    சானியா மிர்சா- அங்கிதா ஜோடி

    பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- அங்கிதா ஜோடி உக்ரைன் நாட்டின் நடியா கிச்சனோக்- லியுட்மைலா கிச்சனோக் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் சானியா ஜோடி முதல் செட்டில் அபாரமாக விளையாடியது. இதனால் 6-0 என முதல் செட்டை கைப்பற்றியது. 2-வது செட்டில் உக்ரைன் ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்திய ஜோடியும் பதிலடி கொடுத்தது. இதனால் செட்-பிரேக் வரை 2-வது சென்று இறுதியில் உக்ரைன் ஜோடி 6(7)- 6(0) என கைப்பற்றியது. 3-வது செட்டிலும் 8-10 என சானியா ஜோடி சரணடைந்து தோல்வியை தழுவியது. 
    ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் ஹீட் தகுதிச்சுற்று போட்டிகள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதில், இந்தியா தரப்பில் அர்ஜூன் லால் ஜாட் - அரவிந்த் சிங் ஜோடி பங்கேற்றது. தகுதிச்சுற்றின் ஒவ்வொரு பிரிவிலும் தலா 6 அணிகள் பங்கேற்கும். அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெறும்.

    எஞ்சிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றான ரிபிசேஜ் சுற்றுக்கு செல்லும். ரிபிசேஜ் சுற்றில் முதல் 3 இடங்களுக்குள் நுழைந்தால் அரையிறுதி தகுதிபெறலாம்.

    இதனிடையே, ஹீட் தகுதிச்சுற்றில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6:40.33 நிமிடங்களில் அடைந்து 5-ம் இடம் பிடித்தது. இதனால், அரையிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றான ரிபிசேஜ் சுற்றுக்கு சென்றது. ரிபிசேஜ் சுற்றில் இந்திய அணி 3-ம் இடம் பிடித்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6:51.36 நிமிடங்களில் கடந்து 3-ம் இடம் பிடித்தது.

    இதனால், இந்திய அணி ஆண்கள் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டி நாளைமறுநாள் (ஜூலை 27) நடைபெறுகிறது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி  சிந்துவும், இஸ்ரேல் வீராங்கனை செனியா பெர்லிகர்போவா ஆகியோர் இன்று காலை மோதினர்.

    இதில் பிவி சிந்து அதிரடியாக ஆடி 21-7,  21- 10 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனா, கிரீஸ், ரஷ்யா வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர்.
    டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

    இந்தியா சார்பில் யஷாஸ்வினி தேஸ்வால், மானு பாகெர் ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 6 சீரிஸ், ஒரு சீரிஸ்க்கு 10 சுடுதல் என மொத்தம் 60 முறை சுடுதல் வேண்டும். ஒரு முறை இலக்கை துல்லியமாக சுட்டால் 11 புள்ளிகள் வழங்கப்படும்.

    யஷாஸ்வினி ஒன்று முதல் ஆறு சீரிஸில் முறையே 94, 98, 94, 97, 96, 95 புள்ளிகள் பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 574-11x அவரை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல உதவவில்லை. இதனால் யஷாஸ்வினி 13-ம் இடத்தையே பிடித்தார். 

    இதேபோல், மானு பாகெர் ஒன்று முதல் ஆறு சீரிசில் 98, 95, 94, 95, 98, 95 புள்ளிகள் பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 575-14x 12ம் இடம் பிடித்தார்.

    முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இருவரும் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தனர்.

    சீன வீராங்கனை முதலிடமும், கிரீஸ் வீராங்கனை 2-வது இடமும், ரஷ்ய வீராங்கனை 3ம் இடமும் பிடித்தனர்.
    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
    கொழும்பு:

    ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடர் முடிந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

    இதன்படி இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது. 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் இது என்பதால் வீரர்களின் செயல்பாடு முக்கியத்துவம் பெறும்.

    ஒரு நாள் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் கலக்கிய இந்திய அணி கடைசி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதில் 5 புதுமுகங்களை பயன்படுத்தி பார்த்த இந்திய அணி பீல்டிங்கிலும் தடுமாறியது. எனவே இன்றைய ஆட்டத்தில் முழுமையான அணியாக இந்தியா களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அறிமுக வீரராக இடம்பெறுவார் என்று தெரிகிறது.

    இந்திய அணி

    தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி கடைசி ஆட்டத்தில் பெற்ற வெற்றி நம்பிக்கையுடன் களம் காணும். இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வெற்றி கண்டன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: பிரித்வி ஷா, ஷிகர் தவான் (கேப்டன்), இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா அல்லது கிருஷ்ணப்பா கவுதம், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல் அல்லது ராகுல் சாஹர்.

    இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா, ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, ஷனகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே, ஹசரங்கா அல்லது ஜெயவிக்ரமா, உதனா, சமீரா, அகிலா தனஞ்ஜெயா.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    ×