search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீராபாய்சானு
    X
    மீராபாய்சானு

    எனது மகளின் வெள்ளிப்பதக்கம் எங்களுக்கு தங்கம் போன்றது - மீராபாய்சானு தந்தை மகிழ்ச்சி

    பளுதூக்குதலில் புதிய வரலாறு படைத்த மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி, பிரதமர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இம்பால்:

    டோக்கியோ ஒலிம்பிக் கோட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பளுதூக்கும் வீராங்கனை மீராபாய்சானு பெற்றுக்கொடுத்தார்.

    49 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்ற அவர் வெள்ளிப்பதக்கம் பெற்றார். அவர் ஸ்னாட்ச் முறையில் 87 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 115 கிலோவும் ஆக மொத்தம் 202 கிலோ தூக்கி 2-வது இடத்தை பிடித்தார்.

    இதன் மூலம் 26 வயதான மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு புதிய வரலாறு படைத்தார். 21 ஆண்டுகளுக்கு பிறகு பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுக்கொடுத்தார்.

    இதற்கு முன்பு 2000 ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப்பதக்கம் வென்றார். அவரை விட சானு சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

    ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற 6-வது இந்தியர் என்ற பெருமையை மீராபாய்சானு பெற்றார். இதற்கு முன்பு நார்மன் ரிச்சர்டு (தடகளம்), ராஜ்வர்தன் ரத்தோர் (துப்பாக்கி சுடுதல்), சுஷில்குமார் (மல்யுத்தம்), விஜய்குமார் (துப்பாக்கி சுடுதல்), பி.வி.சிந்து (பேட்மிட்டன்) ஆகியோர் ஒலிம்பிக் தனி நபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்று இருந்தனர்.

    பளுதூக்குதலில் புதிய வரலாறு படைத்த மீராபாய் சானுவுக்கு நாடுமுழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. ஜனாதிபதி, பிரதமர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ஒலிம்பிக்கில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் பெற்றதால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவரது தந்தை சாய்கோம் மெய்த்தி கூறியதாவது:-

    எனது மகள் மீராபாய்சானு இந்தியாவுக்காக பதக்க கணக்கை தொடங்கியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்பினோம்.

    ஆனால் அவர் பெற்ற வெள்ளி எங்களுக்கு தங்க பதக்கம் போன்றது. நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளோம். எனது மகளை நினைத்து நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரியா ஒலிம்பிக்கின் தோல்விதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. எனது இந்த வெள்ளிப்பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். நம்பிக்கை வைத்து எனக்காக நிறைய தியாகங்கள் செய்த எனது குடும்பத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

    Next Story
    ×