என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஏற்கனவே வங்காள தேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஹோல்டருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
    • முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி 5டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணிக்கு எதிரான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆல் ரவுண்டர் ஹோல்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் முதல் ஒருநாள் போட்டியில் இடம் பெறவில்லை.

    ஏற்கனவே வங்காள தேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஹோல்டருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்தனர். அதனால் தேர்வாளர்கள் அவரது அனுபவத்தை இந்திய தொடரில் பயன்படுத்த விரும்பினர்.

    ஹோல்டர் முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை என்றாலும் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் தற்போது வரை தெரிவிக்கவில்லை.

    • 1.1.2002-க்கு பிறகு பிறந்தவர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள தகுதி படைத்தவர்கள்.
    • மாநில இளையோர் கைப்பந்து போட்டி ராஜபாளையத்தில் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது.

    சென்னை:

    மாநில இளையோர் கைப்பந்து போட்டி ராஜபாளையத்தில் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தேர்வு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 25-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.

    1.1.2002-க்கு பிறகு பிறந்தவர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள தகுதி படைத்தவர்கள். இந்த தேர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தகுந்த வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சி.ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளார். அதோடு 9444842628 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மஹ்முதுல்லா கடைசியாக மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி20 தொடரில் வங்கதேச அணிக்கு கேப்டனாக இருந்தார்.
    • முஷ்பிகுர் ரஹீம் டி20 தொடரில் இடம்பெறவில்லை

    வங்காள தேசம் அணி 3டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இதற்கான வங்காள தேசம் அணி அறிவிக்கப்பட்டது. டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட மஹ்முதுல்லாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் கேப்டனாக நூருல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். மஹ்முதுல்லாவின் கேப்டன்ஷிப் நிர்வாகத்துக்கு திருப்திகரமாக இல்லாததால் நூருல் ஹசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மஹ்முதுல்லா கடைசியாக மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி20 தொடரில் வங்கதேச அணிக்கு கேப்டனாக இருந்தார். முஷ்பிகுர் ரஹீம் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம்பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அதே நேரத்தில் எபடோட் ஹொசைன் தனது இடத்தை தக்கவைக்க தவறிவிட்டார். ஷாகிப் அல் ஹசன் இந்த தொடரில் இடம் பெறவில்லை. அவர் ஆசிய கோப்பைக்கு திரும்புவார் என்று தெரிகிறது.

    டி20 அணி:-

    முனிம் ஷஹ்ரியார், அனாமுல் ஹக் பிஜோய், லிட்டன் தாஸ், அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன் சோஹன் (கேப்டன்), மஹேதி ஹசன், நாசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், மொசாதெக் ஹொசைன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹெதி ஹசன் மிராஸ், பர்வேஸ் ஹொசைன் எமன்

    ஒருநாள் அணி:-

    தமீம் இக்பால் (கேப்டன்), அனாமுல் ஹக் பிஜோய், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா ரியாத், அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன் சோஹன், நஸூம் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், மொசாடெக் ஹொசைன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹெடி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம்.

    • சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் சுப்மான் கில் ஆடினார்.
    • சுப்மான் கில் 36 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை விளாசினார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஷிகர் தவானுடன் களமிறங்கிய தவான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். எதிர்கொண்ட முதல் பந்திலேயே கொஞ்சமும் கூட பயம் இல்லாமல் பவுண்டரிக்கு பந்தை கில் விரட்டினார். இதனைத் தெதாடர்ந்து ஆட்டத்தின் 3-வது ஓவரில் அல்சாரி ஜோசப் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினார் கில்.

    இதனைத் தொடர்ந்து அடிக்க வேண்டிய பந்தை சுப்மான் கில் அடித்து ஆட, 36 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதற்கு முன்பு 3 போட்டியில் நடுவரிசையில் இறங்கி மொத்தம் 49 ரன்கள் அடித்த சுப்மான் கில், தற்போது தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டார்.

    வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்த கில் 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். கில் அரை சதம் அடித்ததன் மூலம் தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இளம் வயதில் அரை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளினார் கில். சச்சின் 24 வயதில் முதல் அரை சதம் அடித்தார். முதல் இடத்தில் விராட் கோலி 22 வயது 215 நாட்களில் அரை சதம் அடித்தார். சுப்மன் கில் 22 வயது 317 நாட்களில் அரை சதம் அடித்துள்ளார்.

    • 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
    • செஸ் ஆட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் பிரபலப்படுத்தும் நோக்கிலும் போட்டிக்கான ஏற்பாடுகளை வெகுவிமரிசையாக செய்து வருகிறது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் இன்று முதல் மாமல்லபுரத்துக்கு வருகின்றனர் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். மாமல்லபுரம், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. செஸ் விளையாட்டில் ஒலிம்பிக்காக கருதப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல்முறையாக நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் இந்தியா, நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின் உள்பட 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். கவுரவமிக்க செஸ் ஒலிம்பியாட்டை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள தமிழக அரசு இந்த போட்டியை என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கும் வகையிலும், செஸ் ஆட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் பிரபலப்படுத்தும் நோக்கிலும் போட்டிக்கான ஏற்பாடுகளை வெகுவிமரிசையாக செய்து வருகிறது.

    இந்த நிலையில் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள நவீன அரங்கம், விளையாட்டு வீரர்களுக்கு செய்யப்பட்டு இருக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறப்பினர்கள், மாவட்ட கலெக்டர்கள், சமூக அமைப்புகள், பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை என எல்லா துறைகளும் எல்லா இடத்துக்கும் பரவலாக கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 187 நாடுகளில் இருந்து 2,000 வீரர்கள், 200 நடுவர்கள், சர்வதேச செஸ் கூட்டமைப்பை சேர்ந்த 400 பேர் என மொத்தம் 3,000 பேர் சென்னைக்கு வர உள்ளனர். வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் இன்று முதல் சென்னைக்கு வர இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    வெளிநாட்டு செஸ் வீரர்களுக்கு தமிழக கலாசாரம், பண்பாட்டின்படி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள 29 நட்சத்திர விடுதிகளில் 2,600 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்கு 47 வகையான உணவு வகைகளும் தயார் செய்யப்பட்டு உபசரிக்கப்பட இருக்கிறது. தமிழ் கலாசாரம், பண்பாடு பற்றிய புத்தகங்களையும் வழங்க உள்ளோம். வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து அவர்களின் நாட்டிற்கு திரும்பி செல்லும் வரை 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    வெளிநாட்டு வீரர்களின் உடல் நலத்தை காக்கும் பொருட்டு 198 டாக்டர்கள், 74 செவிலியர்கள், 163 பிற களப்பணியாளர்கள் என மொத்தம் 435 பேர் அடங்கிய 7 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார். அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி அமைப்பு குழு தனி அதிகாரி சங்கர், மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், மாவட்ட நில எடுப்பு பிரிவு வருவாய் அலுவலர் நாராயணன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • முதலில் விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்கள் குவித்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 75 ரன்கள் அடித்தார்.

    டிரினிடாட்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு அணியுடன் இந்தியா பங்கேற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ஷுப்மான் கில் ஆகியோர் ஆரம்பம் முதல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்கள் சேர்த்தது. அரை சதமடித்த ஷுப்மான் கில் 64 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 54 ரன்கள் அடித்தார்.

    தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 13 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அக்சர் படேல் 21 ரன்னிலும், தீபக் ஹூடா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து, 309 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீரர் ஹோப் 7 ரன்னுக்கு வெளியேற, சிறப்பாக விளையாடி 75 ரன்கள் குவித்த கைல் மேயர்ஸ் ஆட்டமிழந்தார். ஷமர் ப்ரூக்ஸ் 46 ரன்களும், பிராண்டன் கிங் 54 ரன்களும் அடித்தனர். கேப்டன் பூரன் 25 ரன்கள் எடுத்தார்.

    பாவெல் 6 ரன்னுடன் வெளியேற, பின்னர் ஜோடி சேர்ந்த அகேல் ஹோசின், ரொமாரியோ ஷெப்பர்டும் அணியின் வெற்றிக்கு போராடினர். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 12 ரன்கள் அடித்தது.

    50 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்ததால், இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஹோசின் 32 ரன்னுடனும், ஷெப்பர்ட் 38 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் சிராஜ், தாக்கூர், சாகல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

    • இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்னில் அவுட்டானார்.
    • மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 64 ரன்னில் வெளியேறினார்.

    டிரினிடாட்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் இறங்கினர். ஆரம்பம் முதல் இருவரும் அதிரடியாக ஆடினர். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

    ஷுப்மான் கில் முதலில் அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்கள் சேர்த்தது.

    சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யரும் அரை சதமடித்து 54 ரன்னில் வெளியேறினார்.

    தொடர்ந்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 13 ரன், சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அக்சர் படேல் 21 ரன்னிலும், தீபக் ஹூடா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 309 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

    • சேப்பாக் அணியின் சாய் கிஷோர் வெறும் 2 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • சேப்பாக் அணி சார்பில் சசிதேவ் அதிகமாக 45 ரன்களை எடுத்தார்.

    சேலம்:

    சேலத்தில் இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி முதலில் ஆடிய சேப்பாக் அணி 9 விக்கெட்டுக்கு 133 ரன்களை எடுத்தது. சசிதேவ் அதிரடியாக ஆடி 45 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ராதாகிருஷ்ணன் 24 ரன்னும், சாய் கிஷோர் 19 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 134 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. சேப்பாக் அணி வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் திருப்பூர் அணி விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    குறிப்பாக, சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 3 மெய்டன் எடுத்து, வெறும் 2 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில் திருப்பூர் அணி 73 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சேப்பாக் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • இந்த ஆட்டத்தில் வென்றால் பிளேஆப் சுற்று வாய்ப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உறுதி செய்துவிடும்.
    • சேப்பாக் அணி சார்பில் சசிதேவ் அதிகமாக 45 ரன்களை எடுத்தார்.

    சேலம்:

    சேலத்தில் இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் டக் அவுட்டானார். கேப்டன் கவுசிக் காந்தி 2 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ராதாகிருஷ்ணன் 24 ரன்னும், சாய் கிஷோர் 19 ரன்னும் ராஜகோபால் சதீஷ் 5 ரன்னும், சோனு யாதவ் 12 ரன்னும், ஹரீஷ்குமார் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில், சேப்பாக் அணி 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்தது. சசிதேவ் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 45 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 134 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

    • இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இடம்பெறவில்லை.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியில் கொரோனா தொற்றால் ஜேசன் ஹோல்டர் இடம்பெறவில்லை.

    டிரினிடாட்:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    இரு அணிகளின் விவரம் வருமாறு:

    இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.

    வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், பிரான்டன் கிங், ஷமார் புரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோமன் பவெல், அகில் ஹூசைன், ரொமாரியோ ஷெபர்ட், அல்ஜாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஜெய்டன் சீலஸ்.

    • வெஸ்ட் இண்டீசில் போட்டிகளை அனுபவித்து விளையாடுவோம்.
    • இங்குள்ள வானிலை கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும்.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா, கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி போர்ட்-ஆப்-ஸ்பெயினில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரடிப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர் குறித்து வீரர்கள் மத்தியில் இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-

    வெஸ்ட் இண்டீசில் போட்டிகளை அனுபவித்து விளையாடுவோம். இங்குள்ள வானிலை கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும்.

    ஒவ்வொருவரும் தங்களது திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். அந்த வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி உள்ளனர். இதில் நிறைய புன்னகை, நிறைய வெற்றிகள் கிடைத்தன.

    வெஸ்ட் இண்டீசில் நாம் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம். நமது திறமையை வெளிப்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார்.

    இதற்கிடையே இன்றைய போட்டியில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது. அவருக்கு முழங்காலில் லேசான காயம் உள்ளதாகவும், காயத்தின் தீவிர தன்மை குறித்து மருத்துவ ஆலோசனை பெறப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    • விராட் கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்தை எட்ஜ் செய்து அடிக்கடி அவுட் ஆகி வருகிறார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட வைக்காதது இந்திய நிர்வாகத்தினர் எடுத்த தவறான முடிவு.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் தற்போது அதிக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் கடந்த 2019-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது சதம் அடித்த விராட் கோலி அதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் திணறி வருகிறார். அது மட்டும் இன்றி சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடர் அவருக்கு மறக்கக் கூடிய ஒரு தொடராக மாறியுள்ளது.

    இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய அவர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் அந்த தொடர் முடிந்ததும் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மீண்டும் ஆசிய கோப்பையின் போது அணிக்கு திரும்பவார் என்று கூறப்பட்டுள்ளது.

    விராட் கோலியின் மீது ஏற்பட்டிருக்கும் இந்த விமர்சனம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான திலீப் வெங்சர்க்கார் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியா மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதால் கோலி போன்ற முக்கியமான வீரர்கள் எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டியது அவசியம். எந்த அளவிற்கு அதிக போட்டிகளில் அவர்களைப்போன்ற வீரர்கள் விளையாடுகிறார்களோ அந்த அளவிற்கு அவருக்கு தன்னம்பிக்கையும், பார்மும் திரும்ப கிடைக்கும்.

    எனவே என்னை பொறுத்தவரை விராட் கோலி தொடர்ந்து விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அவரை இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட வைக்காதது இந்திய நிர்வாகத்தினர் எடுத்த தவறான முடிவு.

    எப்போதுமே ஒரு வீரர் தொடர்ச்சியாக ரன்களை குவிக்காமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அதிக போட்டிகளை வழங்க வேண்டும். ஏனெனில் அதிக போட்டிகளில் அவர்கள் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் மைதானத்தில் நின்று விளையாட முயற்சிப்பார்கள். மீண்டும் அவர்களுக்கு ரன் குவிக்க வாய்ப்பு கிடைக்கும் அதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கையும் திரும்ப கிடைக்கும்.

    விராட் கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்தை எட்ஜ் செய்து அடிக்கடி அவுட் ஆகி வருகிறார். 2003-2004 ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது சச்சின் டெண்டுல்கர் இதே மாதிரி வெளியேறினார். எனவே அந்த திசையில் ரன் எடுப்பதை முற்றிலுமாக தவிர்த்த சச்சின் அந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் கவர் டிரைவ் விளையாடாமல் 241 ரன்கள் எடுத்து பார்முக்கு திரும்பினார்.

    விராட் கோலிக்கும் அதேபோல் செய்யும் திறன் உள்ளது. எனவே அவர் அந்த பகுதியில் கடினமாக உழைத்து திறம்பட விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×