என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- கல்லீரல் தான் பித்த நீரை உருவாக்குவது கொழுப்பு திசுக்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.
- உறுப்பு தானம் தொடர்பாக இன்னும் அதிகம் விழிப்புணர்வு தேவை.
லிவர் பெயிலியர்...
ஏதோ வாகனங்களில் உதிரி பாகம் ஒன்று பழுதாகி வாகனங்கள் நின்று விடுவது போல் மனிதன் என்ற உயிருள்ள வாகனமும் இப்படி அடிக்கடி லிவர் பெயிலியர் என்று சொல்ல கேட்டிருப்போம்.
ஆனால் பலருக்கு லிவர் என்றால் என்ன? மனித உடலில் அதன் செயல்பாடு என்ன? அதில் ஏதேனும் பிரச்சனை என்றால் என்ன நடக்கும்? என்பதைப் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
பலரும் அறிந்திராத. பலரும் புரிந்திடாத லிவர் பற்றிய தகவலை தான் இந்த கட்டுரையில் காணப் போகிறோம். நாளை உலக லிவர் தினம். லிவர் என்பது தமிழில் கல்லீரல் என்று அழைக்கப்படுகிறது. மனித உடலில் எவ்வளவோ உறுப்புகள் இருந்தாலும் அவைகளில் கல்லீரல் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதனால் தான் கல்லீரலின் முக்கியத்துவத்தை உணர்த்த கல்லீரல் தினத்தை உலகமே கடைப்பிடிக்கிறது.
மனித உடலின் நெஞ்சாங் கூட்டின் வலது புறத்தில் அடிவயிற்றுக்கு மேல் பகுதியில் அமைந்திருக்கிறது.நெஞ்சாங்கூட்டையும் வயிற்றையும் பிரிக்கும் வகையில் இரண்டுக்கும் நடுவே பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் அமைந்திருக்கிறது. இதற்கு கீழ் தான் பித்தப்பையும் இடது புறமாக இரைப்பையும் அமைந்துள்ளன.
எப்படி இந்த கல்லீரல் பெரிய ஆப்பு வடிவத்தில் அமைந்திருக்கிறதோ அதேபோல் இதில் பிரச்சினை ஏற்பட்டால் மனிதனுக்கு ஆப்பு வைத்து விடும். உடலின் உள்ளிருக்கும் உள்ளுறுப்புகள் அனைத்திலும் இதுதான் பெரிய உருப்பாக இருக்கிறது. அது மட்டுமல்ல மிகப்பெரிய சுரப்பியாகவும் திகழ்கிறது உடலின் உள்ள பல்வேறு சூழலை கட்டுப்படுத்தி சமன் படுத்துதல் வளர்சிதை வளர் மாற்றங்களில் ஏற்படும் நச்சுத்தன்மையை அகற்றுவது புரத தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்து கொடுப்பது உள்ளிட்ட மிகப்பெரிய பணிகளை கல்லீரல் கச்சிதமாக செய்கிறது. ரத்த சிவப்பு அணுக்கள் சிதைவு மற்றும் ஹார்மோன்கள் உற்பத்தி ஆகியவற்றிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கல்லீரல் தான் பித்த நீரை உருவாக்குவது கொழுப்பு திசுக்களின் செரிமானத்திற்கு உதவுகிறது. கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் பித்த நீர் கல்லீரலில் கீழ் அமைந்திருக்கும் நார்த்திசுவாலான ஒரு சிறிய பையில், தான் பித்த நீர் சேமிக்கப்படும் 500-க்கும் மேற்பட்ட செயல்கள் இந்த சின்னஞ்சிறு கல்லீரலால் செயல்படுத்தப்படுகிறது. நாம் உட்கொள்ளும் உணவை செரிமானம் செய்ய வைத்து அதன் மூலம் ஆற்றலை உருவாக்குவது. சுரப்பிகளை செயல்பட வைப்பது ரத்தத்தை உறைய வைக்கவும் தேவையான புரதங்களை உற்பத்தி செய்யவும் இந்த கல்லீரல் உதவுகிறது ரத்த அணுக்களில் இருந்து பிலிறும்பின் என்னும் கழிவு பொருளை நீக்கி பித்தநீரை உருவாக்குகிறது. இவ்வாறு கல்லீரலில் உருவாகும் பித்த நீர் சிறுகுடலுக்கு அனுப்பப்படுகிறது அங்கு கொழுப்பு நிறைந்த உணவை செரிக்க வைக்கிறது.
செம்பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த கல்லீரல் தான் உடலின் உள் உறுப்புகளில் பெரிய உறுப்பு என்று குறிப்பிடப்படுகிறது பெரிய உறுப்பு என்றால் இதன் எடை எவ்வளவு தெரியுமா? 1.4 முதல் 1.6 கிலோ.
இவ்வாறு இந்த கல்லீரல் நமது உடலின் இயக்கத்திற்கு தேவையான பல வேதிப்பொருட்களை உடலுக்குள் உருவாக்கி கொடுத்துக் கொண்டிருப்பதால் இதை உடலின் வேதிப்பொருள் தொழிலகம் என்று வேடிக்கையாக கூறுகிறார்கள்.
சில ஆச்சரியமான வேலைகளையும் இந்த கல்லீரல் மேற்கொள்கிறது கல்லீரல் செரித்த உணவை ரத்தத்தில் இருந்து சிறிதளவு எடுத்து சேமித்து வைத்துக் கொள்கிறது. தேவைப்படும் போது அதை மீண்டும் ரத்தத்தில் செலுத்துகிறது. அதாவது மனித உடலின் சீரான இயக்கத்திற்கு எது எப்போது தேவையோ அதை அறிந்து இந்த கல்லீரல் வழங்குகிறது.
கல்லீரலில் ஏற்படும் நோய்கள் அவ்வளவு எளிதில் வெளியே அறிகுறியை காட்டுவதில்லை. எனவே உடலின் இந்தப் உறுப்பில் தான் பிரச்சனை என்பதை மருத்துவர்கள் கண்டுபிடிப்பதும் சவாலான விஷயம்தான்.
உலக அளவில் ஆண்டு தோறும் சுமார் 20 லட்சம் பேர் இந்த கல்லீரலில் ஏற்படும் நோய்களால் உயிரிழக்கிறார்கள் அதிலும் கல்லீரல் புற்றுநோயால் 3.5 சதவீதம் பேர் இறந்து போகிறார்கள் உலக அளவில் இந்த எண்ணிக்கை என்றாலும் இந்தியாவிலும் கல்லீரல் புற்றுநோயால் ஏற்படும் உயரிழப்புகள் அதிகரித்து வருகிறது.
இதனால்தால் தான் உலக கல்லீரல் தினம் கடந்த 2005-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தான் இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
கொஞ்சம் கல்லீரலை கொடுத்தும் உதவலாம்!
வாகனத்தின் பழுதடைந்த பாகங்களை அகற்றிவிட்டு புதிய உதிரி பாகம் பொருத்தப்படுவது போல் பாதிக்கப்பட்ட கல்லீரலுக்கு மாற்றாக புதிய கல்லீரலை பொருத்தும் மகத்தான மருத்துவ சிகிச்சையை மருத்துவ உலகம் கண்டறிந்து செயல்படுத்தி வருகிறது எனவே கல்லீரல் பழுதுபட்டாலும் மாற்றுக் கல்லீரலால் ஒரு மனிதனை ஆபத்திலிருந்து மீட்க முடியும் என்கிறது மருத்துவ உலகம்
இது தொடர்பாக சென்னை லிவர் பவுண்டேசன் டிரஸ்டியும், பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் விவேகானந்தன் கூறியதாவது:-

கல்லீரல் முற்றிலும் சேதம் அடைந்து விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கட்டாயமாகி விடுகிறது. கல்லீரலில் ஏற்படும் சிரோசிஸ் அதாவது சுருக்கம் தடுத்து நிறுத்த முடியாது. அதே நேரம் கல்லீரலில் ஏற்படும் சுருக்கத்துக்கான மாற்று அறுவை சிகிச்சை கட்டாயமில்லை.
இரண்டு விதமாக கல்லீரல் தானம் பெறப்படுகிறது. ஒன்று மூளைச்சாவு அடைந்தவர்களின் முழு கல்லீரலையும் எடுத்து தேவைப் படுபவர்களுக்கு பொருத்துவது. மற்றொன்று குடும்பத்தினரிடம் இருந்து தானமாக பெறுவது. உயிருடன் இருப்பவர்கள் கல்லீரல் தானம் செய்வதால் கொடுப்பவர்களுக்கு பாதிப்பு வராது. ஏனெனில் கல்லீரலில் தேவையான அளவுதான் வெட்டி எடுக்கப்படும். கல்லீரல் இயற்கையாகவே வளரும் தன்மை கொண்டது.
எனவே சிறிதளவு வெட்டி எடுக்கப்பட்டவரின் கல்லீரலும், பொருத்தப்பட்டவரின் கல்லீரலும் 3 வாரங்களுக்குள் 90 சதவீதம் வளர்ச்சி அடைந்து விடும். அதே நேரம், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகளிடம் இருந்து தானம் பெறப்படுவதில்லை. அதற்கு காரணம் கொடுப்பவர்களுக்கு ஆபத்து அதிகம்.
சின்ன வயதிலேயே பலர் மது பழக்கம், தேவையற்ற உணவு பழக்கங்களுக்கு ஆளாவதால் மூளைச்சாவு அடைந்தாலும் அவர்களின் கல்லீரல் உபயோகமற்றதாகி விடுகிறது.
உலக அளவில் 60 வருடங்களாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. நம் நாட்டிலும் 1990 முதல் நடந்து வருகிறது. வருடத்துக்கு சராசரியாக 4,500 அறுவை சிகிச்சைகள் நடக்கிறது.
உறுப்பு தானம் தொடர்பாக இன்னும் அதிகம் விழிப்புணர்வு தேவை. அதன் மூலம் பலரை காப்பாற்றி நீண்ட நாட்கள் உயிர் வாழ வைக்க முடியும்.
80 சதவீதம் கல்லீரல் பாதிப்பை தவிர்க்க முடியும். கல்லீரல் பாதிப்புக்கு மிக முக்கிய காரணங்கள் மூன்று தான். முதலில் மது பழக்கத்துக்கு ஆளாவது. 2-வதாக கொழுப்பு நிறைந்த உணவை அதிகமாக எடுத்துக் கொள்வது, மூன்றாவதாக வைரஸ் கிருமிகளால் ஏற்படும் பாதிப்பு. வைரஸ் கிருமி பாதிப்பை தவிர்க்க ஹெப்பாடைடிஸ் 'பி' தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் கல்லீரலை எந்த பாதிப்பு அண்டாது. முக்கியமாக மஞ்சள் காமாலை என்பது நோய் அல்ல. உள்ளே ஏற்பட்டுள்ள பாதிப்பின் அறிகுறிதான். அதை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்தால் போதுமானது. கல்லீரல் தன்னைத்தானே சரியாக்கி கொள்ளும்.
கல்லீரல் பாதுகாப்பில் கவனம் தேவை
டாக்டர் லோகநாதன் வானகரம் அப்பல்லோ மருத்துவமனை கல்லீரல் மற்றும் குடல் மருத்துவ சிகிச்சை துறை நிபுணர் டாக்டர் லோகநாதன் கூறியதாவது:-
நம்மை பாதுகாக்கும் கல்லீரலை பாதுகாப்பதில் நாமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கல்லீரல் என்பது உடலில் புரதச்சத்து உற்பத்தி செய்யும் அற்புதமான எந்திரம் அதேபோல் உடலில் இருந்து நச்சுத்தன்மையை வெளியேற்றுவதும் அதுதான் நாம் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளில் இருந்து ஏற்படும் நச்சுக்களை கூட இந்த கல்லீரல் தான் வெளியேற்றுகிறது ரத்தத்தில் பிலுருவின் உற்பத்தி கொழுப்புச்சத்தை ஜீரணம் செய்வது ஆகியவற்றை இந்த சுரப்பி தான் செய்து கொண்டிருக்கிறது இந்த கல்லீரலுக்கு பாதிப்பு என்பது ஹெப்படைட்டிஸ் ஏ பி மற்றும் சி வைரஸ்களால் ஏற்படலாம் அதேபோல் உலக அளவில் பேட்டி லிவர் கல்லீரல் அலர்ஜி என்பதும் அதிக அளவில் காணப்படுகிறது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பாதிப்பு பற்றி மிகப் பெரிய அளவில் தெரியாமல் இருந்தது.
ஆனால் இப்போது இளம் வயதினரை கூட இந்த பாதிப்புகள் தாக்குகிறது என்பது தெரிய வந்துள்ளது பேட்டி லிவர் என்பது உடல் பருமன் மதுப்பழக்கம் தைராய்டு சுரப்பிகள் மூலம் ஏற்படுகிறது கல்லீரல் பாதிப்பை பொருத்தவரை உடனடி பாதிப்பு நீண்ட கால பாதிப்பு என்று இரண்டு வகை படுத்தலாம் இவை எல்லாவற்றிற்கும் வைத்தியங்கள் உள்ளன சிலர் ஒரு சில மருந்துகளை தாமாகவே அறிந்து எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது அது சரியான வைத்தியமாக இருக்க முடியாது காய்ச்சலுக்கு எப்படி ஒரே மாத்திரைகள் உதவாதோ அதேபோல் காரணத்தை கண்டறிந்து அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வது தான் சரியான பலன் கொடுக்கும் தாமதப்படுத்துவது ஒரு கட்டத்தில் உயிருக்கு ஆபத்தை உருவாக்கலாம் ஈரல் அலர்ஜிக்கான காரணங்களை கண்டுபிடித்து அதை கட்டுப்படுத்த முடியும் முக்கியமாக மதுபானங்களை தவிர்க்க வேண்டும் பேட்டி லிவர் ஏற்படாமல் இருக்க நல்ல உடற்பயிற்சிகள் மேற்கொள்வது உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது மூலம் கட்டுப்படுத்த முடியும் நாள்பட்ட கல்லீரல் பாதிப்புகள் சிரோசிஸ் ஆகியவற்றின் இறுதிக்கட்ட முயற்சி தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது இப்போது இந்த சிகிச்சை மிக சாதாரணமாகிவிட்டது அதிலும் தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அடிப்படையான உறுப்புகளை தானம் செய்வதில் முன்னிலையில் இருக்கிறோம் இதற்கு அரசின் முயற்சி தான் முக்கிய காரணம் உறுப்பு தானம் செய்பவர்களை வீடுகளுக்கே நேரில் சென்று கௌரவிப்பதால் இப்போது உறுப்பு தானத்தின் எண்ணிக்கைகள் இந்திய அளவில் அதிகரித்து வருகிறது சரியான நேரத்தில் முறையான சிகிச்சைகள் மூலம் கல்லீரல் பாதிப்புகளை குணப்படுத்த முடியும்
- தமிழக மக்கள் அதுவும் குறிப்பாக தென் தமிழக மக்கள் அவரை சின்ன ஐயா என்று தான் அழைத்தார்கள்.
- அரசியலில் இல்லாமலே அரசியல்வாதிகளின் மனம் கவர்ந்த தலைவராக சிவந்தி ஆதித்தனார் இருந்தார்.
ஒரு காலத்தில் தமிழகத்தின் திரைப்படத் துறையில் சின்னவர் என்ற பெயருக்குச் சொந்தக்காரராக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் இருந்தார்கள். ஒட்டுமொத்த தமிழ்த் திரை உலகமே அவரை சின்னவர் என்றுதான் அழைக்கும்.
அதற்கு இணையாக "சின்ன ஐயா" என்ற ஒருவர் தமிழகம் முழுக்க அறியப்பட்டார், அழைக்கப்பட்டார் என்றால் அது ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களை தான் குறிக்கும்.
தமிழக மக்கள் அதுவும் குறிப்பாக தென் தமிழக மக்கள் அவரை சின்ன ஐயா என்று தான் அழைத்தார்கள். அந்த அளவிற்கு மக்களின் அன்பிற்குரியவராக, மரியாதைக்குரியவராக திகழ்ந்தார் என்றால் அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
திருக்குறளில் வள்ளுவன் சொல்கிறார்,
"தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்."
என்று சொல்கிறார்.
ஒரு மனிதன் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தான் என்பதை தெரிந்து கொள்வதற்கு அவன் எத்தகைய விஷயங்களை விட்டு சென்றான் என்று தான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தின் பத்திரிகைத் துறையில் பத்திரிகை சாம்ராஜ்ய அதிபதியாக இருந்த ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்கள் தினத்தந்தியை 1947லில் தொடங்கி, எளிய மக்களையும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை உருவாக்கினார்.
தினத்தந்தி பத்திரிகை தான் ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்களை வள்ளுவர் வரையறையின்படி தக்கார் என்று முடிவு செய்த வரலாற்று நிகழ்வுகள்.
தன் தந்தை ஆதித்தனார் அவர்களது காலத்தில் மூன்று இடங்களிலிருந்து பதிப்புகளாக வந்த தினத்தந்தி நாளிதழ், சிவந்தி ஆதித்தனார் அவர்களது தலைமையின் கீழ் இன்று தமிழகத்தில் பதினைந்து நகரங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து வெளிவருகிறது.
15 நகரங்களிலிருந்து மட்டுமல்லாமல் துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளிலிருந்தும் வெளிவருகிறது என்றால் தனது தந்தையின் சாம்ராஜ்யத்தை மகன் எந்தளவு விரிவு படுத்தியிருக்கிறார் என்பது தெரியும்.

இராம ஸ்ரீநிவாசன்
இன்றைக்கும் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் என்ற பெயரை தினத்தந்தி தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது என்பதை இந்த இடத்தில் நினைவுகூற விரும்புகிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடவுள் கொடுத்த கொடை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்கள். அவர் மட்டும் அங்கு கல்வி நிறுவனங்களை தொடங்கியிராவிட்டால் அப்பகுதி இன்னும் கூட பின்தங்கியிருக்கும்.
இப்ப எல்லாம் கல்வித்துறையில் சம்பாதிப்பதற்காகவே நிறையபேர் கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஆதித்தனார் அவர்கள் சம்பாதித்தது எல்லாம் வேறு வேறு துறைகள். சம்பாத்தியத்தை செலவிட்டதெல்லாம் இந்த கல்லூரிகளில் தான். இப்படி சேவை நோக்கில் கல்விப்பணி செய்தவர் ஆதித்தனார் அவர்கள்.
திருச்செந்தூரில் சி.பா. ஆதித்தனார் அவர்கள் நிறுவியது ஆதித்தனார் கல்லூரி. ஆனால் தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடிப் பாயும் என்பதை போல மகன் டாக்டர். சிவந்தி ஆதித்தனார் அவர்கள் பொறியியல் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் கல்லூரி, சிவந்தி ஆதித்தனார் உடல் கல்வியியல் கல்லூரி, சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி என்று பல்வேறு கல்லூரிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கினார் என்பது அந்தப் பகுதி மக்களுக்கு எவ்வளவு பெரிய வரமாக அமைந்தது என்பதை வரலாறு சொல்லும்.
நான் ஆதித்தனார் கல்லூரியில் படித்த மாணவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன். வேறு எந்த கல்லூரிகளிலும் பார்க்க முடியாத சிறப்புகளை ஆதித்தனார் கல்லூரியில் பார்க்க முடியும். அவர்கள் காந்திய சிந்தனையை வளர்த்தெடுப்பதில் ஆர்வம் கொண்ட காரணத்தினால், எங்கள் ஊர் டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமப் பள்ளியில் இருந்து ஆண்டுதோறும் பத்து பதினைந்து மாணவர்களாவது ஆதித்தனார் கல்லூரியில் வந்து சேருவார்கள். அந்த வகையில் தான் நானும் இங்கு வந்து படித்தேன்.
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் ஸ்காலர்ஷிப் தருவது என்பது நமக்கெல்லாம் தெரியும். இதைவிட ஆதித்தனார் கல்லூரியில் தருகிற மேனேஜ்மென்ட் ஸ்காலர்ஷிப் பல மடங்கு அதிகமாக இருக்கும். சாதி மத இன வேறுபாடின்றி நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்குவார்கள்.
சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தினுடைய சிண்டிகேட் உறுப்பினராக இருந்துள்ளார் என்பதும் அவரது கல்விப் பணிக்கு பல்கலைக் கழகங்கள் கொடுத்த நற்சான்றிதழ்.
விளையாட்டுத்துறையிலேயும் சிவந்தி ஆதித்தனாரது பங்கு அளப்பரியது. அவர் அகில இந்திய ஒலிம்பிக் சங்கத்தினுடைய தலைவராக இருந்தார். ஆசிய கைப்பந்து விளையாட்டுச் சங்கத்தினுடைய தலைவராக இருந்தார். அகில இந்திய கராத்தே அமைப்பின் நிறுவனத் தலைவராக இருந்தார்.
பத்திரிகை, விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் அவரது சேவையைப் பாராட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1994 நவம்பர் 23 அன்று அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது எனபது நினைவு கூறத்தக்கது.
அதேப்போல அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் இவை எல்லாம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி தங்களுக்கு பெருமை சேர்த்துக்கொண்ட பல்கலைக்கழகங்கள்.
பல்வேறு துறைகளிலும் அவரது பங்களிப்பைப் பாராட்டி மத்திய அரசாங்கம் 2008 ஆண்டில் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு "பத்மஸ்ரீ" விருது வழங்கியது.
1982-83 ஆண்டு தொடர்ந்து இரண்டு முறை சென்னை மாநகரின் ஷெரிப் ஆக ஒரு கவுரவப் பதவியை கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மீக பணிகளை ஆர்வத்துடன் செய்வதிலும் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் குறை வைக்கவில்லை. ஏராளமான கோவில் திருப்பணிகளைச் செய்தவர். குறிப்பாக அவர் தென்காசி கோவில் இராஜ கோபுரத்தைக் கட்டிய அந்த வரலாறு இன்னமும் பேசப்படுகிற வரலாறாக இருக்கிறது. அதனால் அவர் இன்றும் அந்த பகுதி மக்களால் இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்றே அழைக்கப்படுகிறார்.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ல் சிவந்தி ஆதித்தனார் நம்மை எல்லாம் விட்டு பிரிந்து சென்றார் என்பது மிகப் பெரிய துரதிருஷ்டம்தான், ஆனாலும் அவர் நினைவில் இன்று தமிழகம் வாழ்கிறது என்பதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பை சுட்டிக் காட்டிக்கொண்டு இருக்கிறது.
தமிழக அரசு சிவந்தி ஆதித்தனார் அவர்களின் வாழ்வை பாராட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அவருக்கென்று ஒரு மணி மண்டபத்தையும் திருஉருவச்சிலையும் அமைத்திருக்கிறது என்பது அவருடைய வாழ்நாள் பங்களிப்பு எத்தகையது என்பதை நமக்குக் காட்டுகிறது.
சிவந்தி ஆதித்தனாரின் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்கள் அரசியலிலும் ஆர்வம் உள்ளவர், அரசியல் பணியும் செய்தவர். தன் தந்தை ஆர்வம் காட்டிய அளவிற்கு அரசியலில் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் கூட தமிழகத்தின் அத்தனை அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள், தலைவர்கள், தொண்டர்களுக்கெல்லாம் அவர் மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய தலைவராக இருந்தார். அரசியலில் இல்லாமலே அரசியல்வாதிகளின் மனம் கவர்ந்த தலைவராக சிவந்தி ஆதித்தனார் இருந்தார்.
நான் கல்லூரி மாணவனாக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் எண்பதுகளின் தொடக்க ஆண்டுகளில் படித்த போது சிவந்தி ஆதித்தனார் ஐயா அவர்களை நான் சந்தித்திருக்கிறேன். ஒரு திரைப்பட கதாநாயகனுக்கு உரிய தோற்றப் பொலிவு, பார்த்தால் யாரையும் வசீகரிக்கிற ஒரு ஆளுமை, தன்னை சந்திக்க வரும் மக்களுக்கெல்லாம் அவர்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து வாரி வழங்குகிற வள்ளல் குணம், குறிப்பாக கல்லூரிக்கு கல்விக்காக அவர் தாராளமாக வழங்குகிற நிதி, இவை எல்லாம் என்னை இளம் வயதிலேயே பிரமிக்க வைத்த நிகழ்வுகள்.
அவரிடம் ஒரிருமுறை பேசியும் இருக்கிறேன். அப்போது எனக்கு குறைந்த வயது. அதிகமாக உரையாடியது இல்லை. என்றாலும் கூட நிறைந்த மன நிறைவை என்றும் தருகிற நினைவலைகளோடு தான் நான் இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
- இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் உதவி நிதி ஆலோசகராகப் பணியாற்றினார்.
- மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டார்.
உலகின் மூத்த குடி தமிழ்க் குடி என நிரூபித்த பெருமை தொல்லியல் அறிஞரும் தமிழ் அறிஞருமான ஐராவதம் மகாதேவனுக்கு உரியது. தொன்மையான சிந்து சமவெளி கலாசாரம், திராவிட கலாசாரமே என உறுதி செய்த பெருமையும் அவருக்குரியதுதான்.
சிந்து சமவெளிக் கல்வெட்டுகளை ஆராய்ந்து தமது இந்த முடிவை உலகிற்கு அறிவித்து தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தார் ஐராவதம் மகாதேவன். சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் பண்டைய தமிழர் நாகரிகத்துக்கும் இடையேயான தொடர்பை உறுதிப்படுத்தும் சான்றாதாரங்கள் ஐராவதம் மகாதேவனின் கல்வெட்டியல் ஆராய்ச்சிகளால்தான் கிடைத்தன.
அவர் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர். தமது கடும் நேர்மை காரணமாக பணிவாழ்வில் பெரும் புகழ் பெற்றவரும் கூட.
அவரிடம் தொல்லியல் துறையில் ஆர்வம் தோன்றக் காரணமாக இருந்தவர் வரலாற்று ஆய்வாளரான அமரர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி. நேரில் நீலகண்ட சாஸ்திரி சொன்ன அறிவுரைகளாலும் தொடர்ந்து பல்லாண்டுகள் நீலகண்ட சாஸ்திரி எழுதிய வரலாற்றுப் புத்தகங்களைப் படித்துப் படித்துக் குறிப்பெடுத்தும் தமது தொல்லியல் ஆர்வம் வளர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
24 வயதில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். 27 ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் உதவி நிதி ஆலோசகராகப் பணியாற்றினார். கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

திருப்பூர் கிருஷ்ணன்
அதன்பின் தொல்லியல் ஆர்வத்தாலேயே 51 வயதில் விருப்ப ஓய்வு பெற்று, கல்வெட்டியல் ஆய்வில் முழுமையாக இறங்கினார். பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து, பலப்பல கல்வெட்டுகளை ஆராய்ந்து பண்டைத் தமிழர் சரித்திரத்தை நூல்களாக வெளியிட்டார்.
சிந்து எழுத்துக்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மீதான ஆர்வம்தான் அவரைக் கல்வெட்டு எழுத்தியலுக்கு ஈர்த்தது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டார். கரூர் அருகே புகலூரில் உள்ள குகைகளில் தென்பட்ட குகை எழுத்துக்களில் கூறப்பட்டிருந்த செய்தியை அவர் வெளிக்கொண்டு வந்திருந்த தருணம் அது. அதையொட்டியே அவர் உலகத் தமிழ் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
தொல்லியல், பழந்தமிழ் இலக்கியம், இதழியல் என்ற மூன்று துறைகளுக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். ஏடு தேடி நடந்து பழந்தமிழ்ச் செல்வத்தை நமக்குக் கொண்டுவந்து சேர்த்த தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் மேல் அளவற்ற மதிப்புடையவர். சரியாகச் சொல்லப் போனால், அவரைப் பொறுத்தவரை தமிழ்த் தாத்தா அவரது தெய்வம்.
உ.வே.சா. 1937இல் எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையை ஆராய்ச்சிக் குறிப்புகளோடு பதிப்பித்தார். பல்லாண்டுகள் கழித்து, 2017இல் உ.வே.சா.வின் அதே ஆய்வுக் குறிப்புகளோடு குறுந்தொகையை மீண்டும் பதிப்பித்தது சென்னையில் இயங்கும் டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம்.
கிரியா எஸ். ராமகிருஷ்ணனின் அச்சு மேற்பார்வையோடு மிகச் சிறப்பாக அந்த மாபெரும் ஆய்வுப் பதிப்பு, மறுபடி வெளிவரக் காரணமாக இருந்தவர் ஐராவதம்தான்.
`குறுந்தொகைப் பதிப்பிற்குப் பெருந்தொகை நல்கியவர்` என்று அவரை அந்நூலின் முன்னுரையில் போற்றுகிறார் உ.வே.சா. நூல் நிலையத் துணைத் தலைவரும் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் மேனாள் துணைவேந்தருமான தமிழறிஞர் இ. சுந்தரமூர்த்தி. நூலின் முதல் பிரதி தம் வீட்டுக்கு வந்தபோது, உ.வே.சா. படத்தின்முன் அந்தப் பிரதியை வைத்து தியானம் செய்து கண்ணில் ஒற்றிக்கொண்டு அதன்பின்னர்தான் பிரதியைத் திறந்து பார்த்தார் ஐராவதம்.
தமிழ்த் தாத்தாவுக்கும் ஐராவதம் மகாதேவனுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அவர் ஏடுதேடி நடந்தார் என்றால், இவர் கல்வெட்டுகளைத் தேடித்தேடி நடந்தார்.
ஐராவதம் மகாதேவனுக்கு ஆன்மிக நம்பிக்கை உண்டு. காஞ்சி மகாசுவாமிகள் மீது பெரும் மதிப்புண்டு. இளம் வயதில் தாம் மகாசுவாமிகளைச் சந்தித்தது பற்றி ஒரு சுவாரஸ்யமான கட்டுரை எழுதியிருக்கிறார்.
ஆனால் சடங்குகளில் அறவே நம்பிக்கையற்றவர் ஐராவதம். அவரது அன்பு மனைவி கவுரி அவர் காலமாவதற்குச் சில ஆண்டுகள் முன் காலமானார். சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்ட முதல் சடலம் கவுரி அவர்களுடையதுதான்.
அப்போதும் மனைவியின் மரணம் தொடர்பான எந்தச் சடங்கிற்கும் அவர் தம்மை உட்படுத்திக் கொள்ளவில்லை. சடலம் எரியும்வரை அங்கிருந்த அவர், `என் மனைவி இந்த மின்மயானத்தைத் தன் உயிரைக் கொடுத்துத் தொடங்கி வைத்திருக்கிறாள்!` எனச் சொல்லிவிட்டு தம் இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
அவர் இருக்கும்போதே ஒரு விபத்தில் காலமானான் அவரது மகன் வித்யாசாகர். மகன் பெயரில் வித்யாசாகர் அறக்கட்டளை என்ற ஓர் அறக்கட்டளையை நிறுவினார் ஐராவதம். அந்த அறக்கட்டளை மூலம், பல தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் நன்கொடை வழங்கிவந்தார்.
சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், சென்னை சாரதா வித்யாலயா மகளிர் பள்ளி, சங்கர நேத்ராலயா போன்ற சேவை நிறுவனங்கள் அந்த அறக்கட்டளையால் பயன் பெற்றன.
தாம் காலமான பிறகு, அந்த அறக்கட்டளைத் தொகை முழுவதையும் சென்னை ராமகிருஷ்ண மடம் மாணவர் இல்லத்திற்கு வழங்கி விட வேண்டும் என்ற தம் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். அந்த விருப்பத்தின் படியே எஞ்சிய தொகை முழுவதும் ராமகிருஷ்ண மடத்தின் மாணவர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது.
தினமணி நாளிதழின் ஆசிரியராகவும் நான்கு ஆண்டுகள் (1987 - 1991) பணிபுரிந்தார். தமிழ்மணி என்ற எட்டுப் பக்க இலவச இணைப்பைத் தோற்றுவித்து, மொழியியல், தொல்லியல், பழந்தமிழ் இலக்கிய ஆய்வு உள்ளிட்ட துறைகளை வளர்த்தார். தமிழ் இதழியல் துறையில் தடம் பதித்த முக்கியமான இதழ்களில் ஒன்று தமிழ்மணி.
நாணயவியல் அறிஞரான இரா. கிருஷ்ணமூர்த்தி இவரின் நெருங்கிய நண்பர். தொடக்கத்தில் ஐராவதம் மகாதேவனும் பழங்கால நாணயங்களைப் பற்றித்தான் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.
இயன்றவரை தமிழ்ச் சொற்களையே தமிழ்ப் பத்திரிகைகளில் பயன்படுத்த வேண்டும் என்ற கோட்பாடுடையவர் ஐராவதம் மகாதேவன். அந்தச் சொற்கள் பண்டிதத் தமிழாக இல்லாமல் பழகுதமிழாக இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்.
கவர் ஸ்டோரி என்ற தலைப்புடன் வெளியிடப்படும் கட்டுரையை முகப்புக் கட்டுரை என்று குறிப்பிட்டு வெளியிடச் சொல்வார். தமிழில் கலந்த பல அன்னிய மொழிச் சொற்களை நீக்கித் தமிழைத் தமிழாகவே இயங்கச் செய்வதில் விருப்பம் கொண்டிருந்தார்.
1930ஆம் ஆண்டு காந்தி ஜயந்தியன்று திருச்சிராப்பள்ளியில் உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்த அவர், அப்பழுக்கில்லாத நேர்மையாளர். ஒருசிறிதும் வளைந்து கொடுக்காத அவரது நேர்மை வியக்க வைக்கும் அளவு கண்டிப்பு நிறைந்தது.
அவரின் கீழ் பணிபுரிந்த நேர்மையாளர்களை அவர் மனமாரப் பாராட்டினார். அதே நேரம், சற்றேனும் நேர்மைக் குறைவு தென்பட்டால் அத்தகையவர்களைக் கடுமையாய்த் தண்டிக்கவும் அவர் தயங்கியதில்லை.
அரசியல் தொடர்பான அவரது தலையங்கங்கள் நெஞ்சுரம் நிறைந்தவை. வெட்டொன்று துண்டிரண்டு என்று தமக்குச் சரி என்று பட்டதைப் பட்டவர்த்தனமாக எழுதும் இயல்புடையவர்.
இட ஒதுக்கீடு பற்றிய அவரது முற்றிலும் நடுநிலையான தலையங்கம் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. அந்தத் தலையங்கம் அதன் பெருமை கருதி நாளிதழின் முதல் பக்கத்திலேயே வெளியிடப் பட்டது. ஜெயந்தி என எழுதுவது தவறு, ஜயந்தி என்றே எழுதவேண்டும் என்பார். அந்த சமஸ்கிருதச் சொல் ஜயந்தி தானே தவிர ஜெயந்தி அல்ல. ஐராவதம் ஆசிரியரானவுடன் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வை ஜயலலிதா என வெளியிடச் செய்தார்.
பின்னர் அந்தப் பெயருக்குரியவர் `தன் பெயரைத் தன் விருப்பம்போல் எழுதத் தனக்கு உரிமையில்லையா?` என வினா எழுப்பியதும் ஜயலலிதா பெயர் மட்டும் மாற்றமில்லாமல் ஜெயலலிதா என்றே வெளியிடப் பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கருத்துக்கு மதிப்பளித்தாலும், பெயரளவில் மட்டுமே தம் கருத்தை மாற்றிக் கொண்டார் ஐராவதம். மற்ற இடங்களில் ஜயம் என்றே குறிப்பிட்டார்.
தாம் பணிபுரிந்த நாளிதழில் சீர்திருத்த எழுத்துக்களை இடம்பெறச் செய்தார். தமிழறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் போன்றோர் சீர்திருத்த எழுத்துகளை எதிர்த்து வந்த காலகட்டம் அது.
ஆனாலும் கணிப்பொறிக் காலத்தில் சீர்திருத்த எழுத்துக்களே தமிழை வளர்க்கும் எனக் கூறிய ஐராவதம் மகாதேவன், தம் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் வழங்கிய தொல்காப்பியர் விருது உள்ளிட்ட இன்னும் பற்பல பெருமைகளைப் பெற்றவர். அவரது ஆய்வுகள் பல்கலைக் கழகங்களில் பாடங்களாக உள்ளன. ஐராவதம் மகாதேவன் என்பதைத் தமிழ்ப் படுத்திக் கொண்டு, `வெள்ளை யானை பெரிய சாமி` என்ற பெயரிலும் அவர் சிற்சில கட்டுரைகளை எழுதியதுண்டு. 2018 நவம்பர் 26-ந் தேதியன்று தம் எண்பத்து எட்டாம் வயதில் காலமானார் ஐராவதம் மகாதேவன். தம் சேகரிப்பில் இருந்த ஏராளமான அரிய நூல்களைச் சென்னை தரமணியில் இயங்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு வழங்கிவிட்டார்.
ஐராவதம் மகாதேவனின் வெண்கல மார்பளவு சிலை சிற்பக் கலைஞர் ஜி. சந்திரசேகரனால் உருவாக்கப்பட்டு, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழன்பர்களும் சிந்தனையாளர்களும் கற்றுக் கொள்வதற்கு ஐராவதம் மகாதேவனின் வாழ்க்கையில் நிறையப் பாடங்கள் உண்டு.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail
- ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துணை வேண்டும்.
- பொருள், செல்வச்செழிப்பு போன்றவையும் நமக்கு ஓர் துணையாகவே உள்ளது.
அதிகாரம்: பெரியோரை துணைக்கோடல்
இந்த அதிகாரத்தில்,
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
என்ற குறளில் தொடங்கி
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துணை வேண்டும். கணவனுக்கு மனைவி துணை, மனைவிக்கு கணவன் துணை, குழந்தைகளுக்கு தந்தை துணை, தந்தைக்கு மக்கள் துணை, நண்பனுக்கு நண்பன் துணை.
இவ்வாறு பெரியோர்களின் துணை அவசியம் என்பது இவ்வதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. முன்வினை நன்றாக இருந்தால் நல்லோர் நட்பு அமையும். முன்வினை சரியில்லை எனில் தீயோர் நட்பு ஏற்பட்டு துயரத்திற்கு ஆளாக நேரிடும்.
பொருள், செல்வச்செழிப்பு போன்றவையும் நமக்கு ஓர் துணையாகவே உள்ளது. அதனை வைத்து புண்ணியத்தைத் தேடிக்கொண்டால் அதுவே உண்மையான துணை. பொருளும், செல்வமும் மட்டுமே முழுமையான துணை என்று கூறிவிட முடியாது. புண்ணியம் துணையாக இருந்தால் மட்டுமே ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம். நிலையில்லாத பொருள்கள் நிலையான துணையை உண்டாக்காது. பெரியோர் நட்பு இருந்தால் சிறந்த அறிவு ஏற்படும்.
வள்ளுவன் கூறுகின்ற பெரியோர் யார்? பெரியோர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று சமூகச் சான்றோர், அவர்கள் பிறர் பொருளை விரும்ப மாட்டார்கள். தன்னுடைய முயற்சியால் ஈட்டிய பொருளைக் கொண்டு மனைவி மக்களுடன் வாழ்வார்கள். மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிட்டு இடையூறு செய்யமாட்டார்கள். வஞ்சனை இல்லாதிருப்பார்கள், சிறந்த அறிவாளியாகவும், கல்வியாளர்களாகவும் இருப்பார்கள், நல்ல காரியங்களுக்கு உதவி செய்வார்கள், நடுநிலைமை வகித்து நல்லதை செய்வார்கள்.
இவர்களை சமூகச் சான்றோர் என்று கூறுவர். மற்றொருவர் ஆன்மீக சான்றோர். அவர்கள் மரணத்தை வென்றவர்கள். பொருள்பற்று இல்லாதவர்கள், காம விகாரமற்றவர்கள், சாதிவெறி இல்லாதவர்களாக இருப்பார்கள், பிறருடைய குற்றத்தை மன்னித்து அவர்களுக்கு நல்லது செய்பவர்களாக இருப்பார்கள், நிலையில்லாததைக் கண்டு மயங்காதவர்களாக இருப்பார்கள்.
இத்தகைய பெரியோர்களின் துணை, சிறப்பறிவை உண்டாக்கும், நல்வினை தீவினையை அறிய செய்யும்.
நிலையில்லாததைக் கண்டு மயங்காத அறிவை உண்டாக்கும், ஆன்மாவை மாசுபடுத்தும் எதையும் நமக்கு கூறமாட்டார்கள், நம் ஆன்மா ஆக்கம்பெற வலியுறுத்தி நம்மை நல்வழிப்படுத்துவார்கள்.
இத்தகையவர்கள் பல ஜென்மங்களில் புண்ணியமும் பூஜையும் செய்து மரணத்தை வெல்லுகின்ற நிலையை பெற்றிருப்பார்கள். அத்தகையவர்களின் தொடர்பு புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

தீவினை நமக்கு அறியாமையை உண்டாக்கும். தலைவனின் திருவடியைப் பற்றினால் அத்தகைய உயர்ந்த சான்றோர்களை துணையாக கொள்ளமுடியும். ஞானிகளை பூஜை செய்தால் அத்தகையவர்களின் திருவடி துணையை பெற முடியும்.
முழுமையாக தவத்தை முடித்தவர்கள் ஜோதி நிலையில் இருப்பார்கள். தவம் பூர்த்தி அடையாதவர்கள் மக்களோடு மக்களாகவே இருப்பார்கள்.
ஞானிகள் பொதுநோக்கு உடையவர்கள், காம விகாரமற்றவர்கள், பாவத்தை பொடியாக்குபவர்கள். சாபத்தை நீக்குபவர்கள். இத்தகையவர்கள் மீது பக்தி செலுத்த வேண்டும். அத்தகைய உண்மையை சொற்குரு சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லாவிட்டால் உண்மை தெரியாது.
புண்ணியத்தாலும், முற்றுப் பெற்றவர்களின் ஆசியாலும் அவர்கள் நம்மீது கருணை கொண்டு வழங்கிய பொருளைப் பெண் வழியிலோ அல்லது தவறான வழியில் செலவிட்டாலோ அவன் நரகத்திற்குச் செல்வான்.
எதைக் கண்டும் மயங்காத நிலையை பெற்றவர்கள், புண்ணியத்தை மட்டும் செய்து மரணத்தை வெல்லுவார்கள். அவர்களிடம் சொல் ஒன்று செயல் ஒன்றாக இருக்காது. சொல்லும் செயலும் ஒன்றாகவே இருக்கும்.
பெரிய புகழுடன் வாழ்ந்த மன்னர்கள் நாட்டை அரசாட்சி செய்துள்ளார்கள். அவை ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே. அவர்களுக்கும் மரணம் உண்டு. ஆனால் ஞானிகள் அழியக்கூடிய ஒன்றைக் கண்டு மயங்காதவர்கள், மரணத்தைவென்றவர்கள், அத்தகையவர்களின் துணை அல்லது அவர்கள்மீது செலுத்துகின்ற பக்தி நம் சாபத்தைப் போக்கும், சினத்தை தீர்க்கும், புண்ணியத்தை செய்யக்கூடிய வல்லமை கிடைக்கும். மேலும் மரணத்தை வெல்லும் உபாயத்தையும் அறியலாம்.
ஞானிகளின் ஆசியும் அவர்களின் துணையும் இருந்தால் உண்மையான ஆன்மீகத்தைப் பற்றி கூறமுடியும். முற்றுப் பெற்றவர்களின் பெருமையை கூறலாம். உண்மையான தொண்டர்கள் அமைவார்கள்.
நற்குணம் கொண்டவர்களுக்கு தூய மனமே துணை. அவர்கள் செய்த புண்ணியமே துணை, செய்கின்ற நாமஜெபமே துணை. பண்புடையவர்களின் நட்பு நல்ல துணை. சிறந்த கல்வியாளர்களுக்கு நல்லறிவு துணை. வஞ்சனை இல்லாது பேசுவது நல்ல அறம், அதுவும் ஓர்துணை. நம் சொல்லாலும் செயலாலும் பிறருக்கு நல்லவை செய்தால் அதுவும் நமக்குத் துணை. நம்மை பாவத்திலிருந்து பாதுகாத்துக் கொள்கின்ற எல்லாமே நல்லறம். இவைகள் எல்லாமே நமக்கு உற்றதுணை.
நல்ல அறிவினை போதிப்பது, ஒருவர் செய்த குற்றத்தை உணரவைத்து அவரை நல்வழிப்படுத்துவது, அறியாமையில் இருப்பவனை தெளிவுப்படுத்துவது, மனமுவந்து செய்த உதவியை மறக்காமல் இருப்பது போன்ற அறச்செயல்கள் எல்லாமே நமக்கு துணையே. அரிய செயல்களைச் செய்தவர்களை துணையாக்கிக் கொள்ளவேண்டும். முற்றுப் பெற்றவர்களின் திருவடியே உயர்ந்த துணை.
- பொதுவாக பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
- பொதுவாகவே வயது கூடும்போது எல்லா தசைகளுமே பலவீனமாகும்.
பெண்கள் அதிகமாக எதிர்நோக்கும் உடல்நல பிரச்சனைகளை பற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பெண்களுக்கு 40 வயதாகும் போது ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று சிறுநீர் கசிவு பிரச்சனையாகும். எங்களிடம் 40 வயதில் சிகிச்சைக்கு வரும் நிறைய பெண்கள் இதுபற்றி சொல்வது உண்டு.
'டாக்டர் என்னால் சிறுநீரை அடக்கவே முடியவில்லை. கழிவறைக்கு செல்லும் முன்பே அவசரமாக கசிந்து விடுகிறது. மேலும் பல நேரங்களில் அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்பது போல் இருக்கிறது. சில நேரங்களில் சிறுநீர் கழித்து முடிந்தவுடன் மறுபடியும் மறுபடியும் சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
எப்போதுமே சிறுநீர் பை நிரம்பி இருப்பது போன்ற உணர்வு தென்படுகிறது. சிறுநீர் கசிவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இருமல், தும்மல் வரும் போதும், குனிந்து ஏதாவது பொருளை எடுக்கும் போதும் என்னை அறியாமல் சிறுநீர் கசிந்து விடுகிறது. சில நேரங்களில் சிரிக்கும் போது கூட சிறுநீர் கசிவு ஏற்படுகிறது' என்று கூறுகிறார்கள்.
பெண்களுக்கு சிறுநீர் கசிவு எதனால் ஏற்படுகிறது?
பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பிரச்சனைகளை யூரினரி இன்காண்டினன்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வோம். இது கட்டுப்பாடு இழந்த சிறுநீர்ப்போக்கு அல்லது தன்னிச்சையான சிறுநீர் கசிவு என்று பொருள்படும். அதாவது சிறுநீர் உங்களை அறியாமலேயே கசியக்கூடிய சில விஷயங்கள் ஆகும். சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
இந்த யூரினரி இன்காண்டினன்ஸ் என்பது 40 வயதுக்கு மேல் நிறைய பெண்கள் எதிர்நோக்குகிற ஒரு முக்கியமான விஷயம் ஆகும். குறிப்பாக 48 வயது, 49 வயதாகும் போது பெண்கள் எல்லோருக்கும் மெனோபாஸ் வந்து விடும். மெனோபாஸ் வந்த பிறகு பெண்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சனை இதுவாகும்.
பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணங்கள் என்ன? இதற்கான தீர்வுகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
பொதுவாக பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதல் முக்கியமான காரணம் ஹார்மோன்கள் ஆகும். ஏனென்றால் சிறுநீர்ப்பையின் பிரதான ஆதரவு பகுதியே பெல்விக் டயப்ரம் எனப்படும் இடுப்பு தள தசை தான். இடுப்பு தள தசை என்பது இடுப்பை சுற்றியுள்ள தசைகளின் அடுக்காகும். சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரை வெளியே கொண்டு போகிற குழாய், இந்த இடுப்பு தள தசையின் ஆதரவுடன் தான் இயங்கும்.
சிறுநீரை குழாய் வழியாக வெளியே கொண்டு செல்வதில் இந்த இடுப்பு தள தசை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தசைதான் சிறுநீரை கட்டுப்படுத்தும். சிறுநீர் செல்லும் குழாயை கட்டுப்படுத்தி அதனை இறுக்கி பிடித்திருக்கும். மேலும் அதில் இருக்கிற ஒரு வேல்யூலர் மெக்கானிசத்துக்கு இந்த இடுப்பு தள தசைதான் மிக முக்கியமான ஒன்றாகும்.
சிறுநீரை கட்டுப்படுத்தும் இடுப்பு தள தசை பலவீனம் அடைதல்:
பல நேரங்களில் இந்த தசைகள் பலகீனமாகி, தளர்வாகி தானாக திறக்கும் போது இந்த பெண்களுக்கு சிறுநீர் கசிவு பிரச்சனை ஏற்படலாம். இந்த இடுப்பு தளதசை எப்போதெல்லாம் தளர்வாகும் என்றால், முக்கியமாக பெரி மெனோபாஸ், மெனோபாஸ் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவாகும் போது இந்த இடுப்பு தள தசை பலவீனம் அடைகிறது. இந்த பலவீனம் தான் பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும்.

டாக்டர் ஜெயராணி காமராஜ்
குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்
செல்: 72999 74701
பொதுவாகவே வயது கூடும்போது எல்லா தசைகளுமே பலவீனமாகும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தசைகள் பலவீனமாக தொடங்கும். நமது வீடுகளில் உள்ள தாத்தா, பாட்டி போன்ற வயது முதிர்ந்தவர்களை பார்க்கும்போது அவர்களின் தசைகள் மிகவும் பலவீனமாக தொளதொளவென காணப்படும். அந்த தசைகளின் அடர்த்தி குறைவாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
ஒருவருக்கு வயதாகும் போது ஏற்படுகிற செல்களின் மாற்றங்கள், உடல் ரீதியாக ஏற்படுகிற சில ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அவர்களுடைய ஸ்டெம்செல்களின் வலிமையில் தளர்வு ஏற்படுதல் ஆகியவை தசைகள் பலவீனமாவதற்கு ஒரு காரணம். இதேபோல அந்த இடுப்பு தள தசை பலவீனம் ஆகி அதன் செயல்பாடு குறைவாவதும் சிறுநீர் கசிய ஒரு காரணம். மேலும் வயதாகும்போது அந்த சிறுநீர்ப்பையின் தசை சுவர்களே பலவீனமாகும். வழக்கமாக ஒரு லிட்டர் சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் சிறுநீர்ப்பையானது, அதன் தசைகள் பலவீனம் அடைவதால் 300 மில்லி, 400 மில்லி சிறுநீரை கூட அதனால் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாது. அதற்குள்ளேயே அவர்களுக்கு ஒரு அவசரநிலை வந்துவிடும். இதனால் அதை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் தன்மை குறைவாகும்.
சிறுநீர்ப்பை தசைகளின் வலுவில் மாற்றம் ஏற்படுதல்:
பல நேரங்களில் சிறுநீர்ப்பை தசைகளின் வலுவில் மாற்றம் ஏற்பட்டு முறையற்ற வகையில் கட்டுப்பாட்டை இழக்கும். அதன் காரணமாக சிறுநீர்ப்பையின் கீழே உள்ள வால்வு திறந்து இடுப்பு தள தசையில் தளர்வு ஏற்படுவதால் சிறுநீர் கசிவு ஏற்படும்.
வயதாகும்போது சிறுநீர்ப்பையில் உள்ள தசைகளின் வலிமை குறைவாவதன் மூலம் சுருக்கம் சரியாக ஏற்படாததால் சிறுநீர்ப்பையில் சிறுநீர் முழுமையாக காலி ஆகாது. ஒருவேளை முழுமையாக காலியாகாமல் கொஞ்சம் குறைவாக சிறுநீர் இருக்கும் போது அது ஒருவித எரிச்சல் தன்மையை கொடுத்து அந்த பெண்களுக்கு சிறுநீரை கட்டுப்படுத்துவதில் பிரச்சனைகள் வரும். இவைதான் முக்கியமான காரணங்கள் ஆகும்.
இவை தவிர வயதாகும்போது நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு நரம்புகள் சேதம் அடையும். சில நேரங்களில் நீரிழிவு வரலாம், ரத்த அழுத்தம் ஏற்படலாம். இதனால் ஏற்படுகிற நரம்பு தளர்வுகளும் இந்த இடுப்பு தள தசைக்கும், சிறுநீர்ப்பைக்கு போகிற நரம்புகளை பாதித்து, அதனால் இந்த நரம்புகள் பலவீனமாகி சிறுநீர் கசிவு ஏற்படலாம்.
இந்த மாதிரியான சிறுநீர் கசிவு ஏற்படுகிற பெண்கள் செய்ய வேண்டிய பல முக்கியமான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஹார்மோன் குறைவது என்பது இயற்கை தான். அதேபோல் உடல் வயதாகும்போது தளர்வு அடைவதும் இயற்கை தான். வியாதிகள் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், குறிப்பாக சர்க்கரை வியாதி வரும்போது அதை கட்டுப்பாட்டில் வைத்தால் சிறுநீர் கசிவு என்பது குறைவாகும். கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாகும்.
ஏற்கனவே இயற்கையாகவே தசைகளின் வலு குறைவாக உள்ளவர்களுக்கு இந்த சர்க்கரை வியாதியானது அதன் பாதிப்பை மேலும் அதிகரிக்கும். மேலும் சர்க்கரை அதிகமாக இருக்கும்போது தொற்றுக்கள் வருவதை அதிகப்படுத்தும். சில நேரங்களில் சிறுநீர்ப்பையில் சிறுநீர் முழுமையாக காலியாகாமல் சிறுநீர் தேங்கி இருப்பதால் கூட தொற்றுக்கள் அதிகமாகும். எனவே இதுவும் ஒரு காரணமாக அமையும்.
சிறுநீர் கசிவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள், பயிற்சிகள்:
இந்த வகையில் சிறுநீர் கசிவு ஏற்பட்டு எங்களிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு முதலில் நாங்கள் பரிசோதனைகளை செய்வோம். இடுப்பு தள தசையின் செயல்பாடு மற்றும் அதன் வலிமை ஆகியவற்றை பரிசோதித்து பார்ப்பதற்கு சில வழிமுறைகள் உண்டு.
மேலும் அதன் பாதிப்புகளை சரி செய்து அதனை கட்டுப்படுத்துவதற்கு சில பயிற்சி முறைகளும் உண்டு. முதலில் இதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதற்கான தீர்வுகளை கொடுக்க வேண்டும். அதற்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும். தொற்றுக்கள் இருந்தால் அதை சரி செய்து குணப்படுத்த வேண்டும்.
ஹார்மோன் மிகவும் குறைவதால் இடுப்பு தள தசை பலவீனம் ஆகிறது. இதன் காரணமாக இந்த தசைகள் மிகவும் சுருங்கி போய் காணப்படும். அப்படி இருந்தால் கண்டிப்பாக அதற்கு ஹார்மோன் ரீபிளேஸ்மெண்ட் தெரபியோ அல்லது அதற்கு பிரத்தியேகமான ஈஸ்ட்ரோஜனை அதிகப்படுத்துவதற்கான ஜெல், கிரீம் ஆகியவற்றை கொடுப்பதன் மூலமாக இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்த முடியும்.
இதற்கு நாங்கள் வழக்கமாக பார்ப்பது யூரோ டைனமிக் பரிசோதனை ஆகும். இந்த யூரோ டைனமிக்ஸ் பரிசோதனை மூலம் எந்தெந்த மட்டத்தில் இந்த தளர்வு பாதிப்பு இருக்கிறது என்பதை முறையாக பரிசோதிப்போம். பல நேரங்களில் சிறுநீர்ப்பை திறக்கும் இடத்தில் உள்ள வால்வு பகுதியில் தளர்வு ஏற்பட்டு அது திறப்பது கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கலாம். அதற்கு ஸ்ட்ரெஸ் இன்காண்டினன்ஸ் என்று சொல்வோம். அதை சரி செய்வதற்கு பல நேரங்களில் இடுப்பு தளதசை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இவற்றின் மூலமாக இந்த தசையை பலப்படுத்தும் போது இந்த வால்வு மெக்கானிசம் வலுவடைந்து பல நேரங்களில் சிறுநீர் கசிவு ஏற்படுவதை தடுக்க முடியும். மேலும் சிறுநீர்க்குழாயின் தன்மை சுருங்கும் போதும் இது வரலாம். இதற்கும் ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி மூலமா கத்தான் தீர்வு காண முடியும்.
மேலும் தொற்றுக்கள் அதிகரிப்பதன் மூலமும் சிறுநீர் கசிவு ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
- முருகன் மீது பாடிய பாடல்களால் புகழ் பெற்ற கந்தசாமி புலவரிடம் ஒரே ஒரு குறை இருந்தது.
- திருச்செந்தூர் முருகன் ஒரே நேரத்தில் கட்டபொம்மன், கந்தசாமி புலவர் இருவரது பக்தியையும் கவுரவித்து உலகுக்கு உணர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் முருகன் தன் மீது உண்மையான பக்தி கொண்டவர்களை ஒருபோதும் கைவிட்டதே இல்லை. நூறு சதவீதம் முழு நம்பிக்கையுடன் இருந்தால் அவன் அருள் நிச்சயமாக கிடைக்கும். இதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமானால் கந்தசாமி புலவரை சொல்லலாம்.
இவர் நெல்லை சீமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். நெல்லை அருகே உள்ள முத்தாலங்குறிச்சி என்ற சிறிய கிராமம்தான் இவரது சொந்த ஊராகும். இந்த ஊர் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்திருக்கும் கிராமங்களில் ஒன்றாகும்.
கந்தசாமி புலவர் தீவிர முருகப் பக்தர். முருகனின் பெயரை சொல்லாமல் அவர் எதையும் செய்யவே மாட்டார். எப்போதும் முருகனை பற்றியே அவர் பாடல்களை பாடிக் கொண்டு இருப்பார்.
இதனால் அவரது புகழ் நெல்லை சீமை முழுவதும் பரவி இருந்தது. இவரது பாடல்களை கேட்க வீரபாண்டிய கட்டபொம்மனே பாஞ்சாலங் குறிச்சியில் உள்ள தனது அரண்மனையில் இருந்து குதிரையில் ஏறி முத்தாலங்குறிச்சி கிராமத்துக்கு வந்து விடுவாராம். பல தடவை கட்டபொம்மன் அப்படி வந்ததாக வரலாறு இருக்கிறது.
முருகன் மீது பாடிய பாடல்களால் புகழ் பெற்ற கந்தசாமி புலவரிடம் ஒரே ஒரு குறை இருந்தது. அது அவருக்கு 2 கண்களுமே தெரியாது. பார்வையற்ற அவர் முருகனை தனது மனதுக்குள் நினைத்து நினைத்து பாடல்களை பாடுவது உண்டு. ஒருநாள் கூட அவர் திருச்செந்தூர் முருகனை பற்றி பாடாமல் இருந்ததே கிடையாது.
திருச்செந்தூர் முருகன் எந்த வடிவழகில் இருப்பார் என்பது அவருக்குத் தெரியாது. ஆனாலும் முருகனின் அழகை மற்றவர்கள் சொல்வதை கேட்டு மனதுக்குள் கற்பனைகளை வரவழைத்து அவர் பாடல்கள் பாடுவது தனித்துவம் நிறைந்ததாக இருந்தது.
கந்தசாமி புலவரிடம் இன்னொரு பழக்கமும் இருந்தது. ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அவர் முத்தாலங்குறிச்சியில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்செந்தூர் முருகன் ஆலயத்துக்கு நடந்தே வந்து விடுவார்.
சாலை வசதிகள் இல்லாத அந்த காலக்கட்டத்தில் கம்பை ஊன்றிக் கொண்டு தட்டு தடுமாறி அவர் திருச்செந்தூர் ஆலயத்துக்கு வந்து விடுவது உண்டு. கடலில் குளித்து விட்டு, ஆலயத்தை ஒரு முறை வலம் வந்து உள்ளே சென்று கருவறை சன்னதி முன்பு நின்று மனமுருக முருகனை பாடுவார்.
மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் முருகன் முன்பு நின்று அவர் பாடும் பாடல்களை கேட்க பக்தர்கள் திரண்டு விடுவார்கள். அவர் பாடி முடித்ததும் கருவறை அர்ச்சகர்கள் முருகன் காலடியில் இருந்து பூக்களும், பன்னீர் இலை திருநீரும் பிரசாதங்களும் எடுத்து வந்து அவர் கையை பிடித்து கொடுப்பார்கள்.
முருகன் பிரசாதம் கிடைத்ததும் கந்தசாமி புலவர் திருச்செந்தூர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் முத்தாலங்குறிச்சிக்கு சென்று விடுவார். கடைசி வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் வீட்டில் இருக்கும் போதும் அவர் முருகன் படம் முன்பு அமர்ந்து முருகனைப் பற்றி பாடிக் கொண்டே இருப்பார்.
அவர் திருச்செந்தூர் முருகன் மீது வைத்திருந்த பக்தி முழுமையானது. சிறுதுளி அளவுகூட மாசு மருவற்றது. இதனால்தான் திருச்செந்தூர் முருகனின் கருணை பார்வையை அவர் பெற முடிந்தது. கந்தசாமி புலவருக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. ஒருநாள் அவர் வாய் நிறைய வெற்றிலையை போட்டுக் கொண்டு ரசித்து ருசித்து சுவைத்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு முருகனை பாட வேண்டும் என்ற உணர்வு எழுந்தது.
அடுத்த வினாடி திருச்செந்தூர் முருகனை புகழ்ந்து பாடினார். ஆனால் அவர் வாயில் இருந்து வெற்றிலைச் சாறு தெறித்து விழுந்தது. அவர் எச்சிலுடன் வெற்றிலைச் சாறின் ஒரு பகுதி அவர் முன்பு இருந்த முருகன் படம் மீது விழுந்தது.
அதே சமயத்தில் மற்றொரு அதிசயமும் நடந்தது. திருச்செந்தூர் ஆலயத்தின் கருவறையில் உள்ள முருகனின் அலங்கரிக்கப்பட்ட வஸ்திரம் மீது வெற்றிலைச் சாறு விழுந்து இருந்தது. முத்தாலங்குறிச்சியில் கந்தசாமி புலவர் வாயில் இருந்து தெறித்த வெற்றிலைச் சாறு திருச்செந்தூர் முருகன் வஸ்திரம் மீது பட்டு இருந்தது.
அந்த சமயத்தில் பூஜையை செய்து வந்த அர்ச்சகர் முருகன் வஸ்திரத்தில் வெற்றிலை கரையை கண்டதும் பதறி அதிர்ச்சி அடைந்தார். நாம் வெற்றிலை போடவில்லை. வேறு யாரும் கருவறைக்குள் வர மாட்டார்கள். அப்படியானால் முருகன் அணிந்திருக்கும் ஆடை மீது வெற்றிலைச் சாறு எப்படி வந்தது என்று மனதுக்குள் கேள்விகளை கேட்டபடி குமுறினார்.
கடைசியில் இது முருகனின் லீலைகளில் ஒன்றாக இருக்கும். உரிய நேரத்தில் இதற்கான காரணத்தை முருகன் சொல்வார் என்று நினைத்த படி அந்த அர்ச்சகர் பணிகளை முடித்து வீட்டுக்கு சென்று விட்டார். அன்று இரவு அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது திருச்செந்தூர் முருகன் கனவில் வந்தார்.
ஒளியில் ஜொலித்த முருகப்பெருமான் அர்ச்சகரைப் பார்த்து, "என்னப்பா.... இன்று எனக்கு நீ பூஜை செய்யும்போது என் ஆடையில் காணப்பட்ட வெற்றிலைச் சாற்றை கண்டு குழம்பிப் போய் விட்டாய் அல்லவா? அதை பார்த்து பயந்து விட்டாயா? பயப்படாதே, நான் சொல்வதை நன்றாக கேள். முத்தாலங்குறிச்சியில் இருந்து மாதந்தோறும் வரும் கந்தசாமி புலவர் பற்றி உனக்கு தெரியும். இரண்டு கண்களும் பார்வை இல்லாத அவனுக்கு நான் பார்வை கொடுக்க முடிவு செய்து இருக்கிறேன். இந்த மாதம் கடைசியில் அவன் என்னை பாட வரும்போது நீ ஒன்றை செய்ய வேண்டும்.
கந்தசாமி புலவர் என்னை போற்றி பாடி முடித்ததும் நீ பிரசாதம் கொடுக்க செல்வாய். அப்போது என் கழுத்தில் கிடக்கும் மாலையில் இருந்து ஒரே ஒரு பூவை எடுத்துக் கொண்டு போ. அந்த பூவை கந்தசாமி புலவரின் ஒரு பக்க கண்ணில் மட்டும் வைத்து எடுத்து விடு. அவனுக்கு பார்வை கிடைத்து விடும்" என்றார்.
முருகனின் உத்தரவை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அர்ச்சகர், "அவருக்கு இன்னொரு கண் பார்வை எப்படி கிடைக்கும்?" என்று கேட்டார். அதற்கு முருகப்பெருமான் பதில் அளிக்கும்போது, "கந்தசாமி புலவருக்கு ஒரு கண்ணில் பார்வை வந்ததும் அவரே உன்னிடம் இன்னொரு கண் பார்வை எப்போது கிடைக்கும் என்று கேட்பார். உடனே நீ பாஞ்சாலங்குறிச்சியில் இருக்கும் கட்டபொம்மன் மன்னர்கள் பரம்பரையில் 46-வது மன்னராக இருக்கும் திக்விஜய கட்டபொம்மனை போய் பார். அவர் மூலம் உனக்கு மற்றொரு கண்ணில் பார்வை கிடைக்கும் என்று சொல். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.
முருகன் இவ்வாறு சொல்லி முடித்த மறுவினாடி கனவு கலைந்தது. அர்ச்சகருக்கு வியர்த்து கொட்டியது. முருகனின் திருவிளையாடலை நினைத்து வியந்து போனார். கடைசி வெள்ளிக்கிழமைக்காக அவர் காத்து கொண்டிருந்தார்.
கடைசி வெள்ளிக்கிழமையும் வந்தது. கந்தசாமி புலவரும் வழக்கம் போல முத்தாலங்குறிச்சியில் இருந்து புறப்பட்டு வந்து கடலில் நீராடி ஆலயத்தை சுற்றி வழிபட்டு கருவறை முன்பு நின்று முருகனை பாடினார். அவர் பாடி முடித்ததும் அர்ச்சகர் முருகன் சொன்னபடி பிரசாதமும், ஒரே ஒரு பூவையும் எடுத்து வந்தார்.
கந்தசாமி புலவரின் ஒரு பக்க கண்ணில் முருகா சரணம்.... முருகா சரணம்... என்று சொன்னபடி பூவை வைத்து விட்டு எடுத்தார். அடுத்த வினாடி கந்தசாமி புலவருக்கு அந்த கண்ணில் பார்வை கிடைத்தது. அவர் மகிழ்ச்சியால் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
கருவறை முருகன் அழகைப் பார்த்தார். ஆனந்த கூத்தாடினார். மேலும் மேலும் புகழ்ந்து பாடினார். மகிழ்ச்சி குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும் அர்ச்சகரை பார்த்து எனக்கு இன்னொரு கண்ணிலும் பார்வையை முருகன் தந்து இருக்கலாமே என்றார்.
உடனே அர்ச்சகர் சிரித்தபடி, "நீ இப்படி கேட்பாய் என்று முருகன் ஏற்கனவே என்னிடம் சொல்லி இருக்கிறான். நீ பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று திக்விஜய கட்ட பொம்மனை பார். அவன் மூலம் உனக்கு இன்னொரு கண்ணிலும் பார்வை கிடைக்கும் என்று முருகன் கூறி இருக்கிறான்" என்றார்.
கந்தசாமி புலவருக்கு இதை கேட்டதும் மேலும் ஆச்சரியமாக இருந்தது. திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்றார். அங்கு அரண்மனையில் திக் விஜய கட்டபொம்மனை சந்தித்தார். கட்டபொம்மன் அவரை வரவேற்று ஆசனத்தில் அமர செய்து என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டான்.
கந்தசாமி புலவர் திருச்செந்தூர் ஆலயத்தில் தனக்கு முருகன் அருளால் ஒரு கண் பார்வை கிடைத்த அற்புதத்தை எடுத்துக் கூறினார். இன்னொரு கண் பார்வை உன் மூலம் கிடைக்கும் என்று முருகன் உத்தரவிட்டிருக்கிறார். எனவேதான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன் என்றார்.
இதை கேட்டதும் திக்விஜய கட்டபொம்மனுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக இருந்தது. திருச்செந்தூர் முருகன்தான் உன்னை அனுப்பி வைத்தாரா? என்று கண்ணீர் மல்க கேட்டான். சரி.... வா போகலாம் என்று கந்தசாமி புலவரை அழைத்துக் கொண்டு தனது குல தெய்வ ஆலயமான ஜக்கம்மாள் ஆலயத்துக்கு நடந்தே சென்றார்.
அப்போது திக்விஜய கட்டபொம்மன் தனது உடைவாளை உருவி கையில் ஏந்தியபடி கம்பீரமாக நடந்து வந்தான். இதைக் கண்டதும் கந்தசாமி புலவருக்கு கோபம் ஏற்பட்டது. கோவிலுக்கு தானே போகிறோம். வாள் எதற்கு? என்று அவர் நினைத்தார். கட்டபொம்மனை பார்த்து, "நீ மன்னன் என்பதால் அகந்தையுடன் நடந்துக் கொள்கிறாய். எதற்காக இப்போது வாளை உருவி கையில் வைத்துக் கொண்டு வருகிறாய்?" என்று கேட்டார். ஆனால் அவரது கேள்விக்கு கட்ட பொம்மன் எந்த பதிலும் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டே நடந்தார்.
இருவரும் ஜக்கம்மாள் ஆலயத்துக்குள் நுழைந்தனர். அங்கு கட்டபொம்மன் மனமுருகி ஜக்கம்மாளை வணங்கினான். பிறகு ஜக்கம்மாள் கழுத்தில் கிடந்த மாலையில் இருந்து ஒரே ஒரு பூவை மட்டும் எடுத்து கந்தசாமி புலவரின் பார்வை வராத மற்றொரு கண் மீது வைத்து எடுத்தார்.
என்ன ஆச்சரியம்... கந்தசாமி புலவரின் அந்த கண்ணில் இருந்தும் குறைகள் நீங்கி பார்வை தெரிந்தது. கந்தசாமி புலவரும், திக்விஜய கட்ட பொம்மனும் மகிழ்ச்சி கடலில் மிதந்தனர். திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு பார்வை தருவதற்காக எனக்கு மிகுந்த பாக்கியத்தை கொடுத்து இருக்கிறான் என்று கட்டபொம்மன் உணர்ச்சி பொங்க கூறினார். ஆனால் கந்தசாமி புலவர், "என்னதான் இருந்தாலும் உனக்கு ஆணவம் போகவில்லை. எதற்காக வாளை பிடித்து இருக்கிறாய்? ஆணவம் மிகுந்த உன்னால் எனக்கு கிடைத்த பார்வை வேண்டாம். உன் வாளை தா... என் கண்ணில் குத்திக் கொள்கிறேன்" என்றார்.
இதை கேட்டதும் திக்விஜய கட்டபொம்மன் சிரித்தபடி, "புலவரே என்னை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஒருவேளை உங்களுக்கு பார்வை கிடைக்காமல் போய் இருந்தால் இந்த வாளால் என்னை குத்தி மாய்த்துக் கொள்ள மனதுக்குள் நினைத்திருந்தேன். ஆனால் திருச்செந்தூர் முருகன் உனக்கு அருள்பாலித்து விட்டார்" என்றார்.
கட்டபொம்மனின் இந்த வார்த்தைகளை கேட்டதும் கந்தசாமி புலவர் மெய் சிலிர்த்துப் போனார். "மன்னா... உன் பக்தி எந்த அளவுக்கு உயர்ந்ததாக இருக்கிறது. இது தெரியாமல் நான் பேசி விட்டேன்" என்று மனம் உருகினார். இந்த சம்பவத்தில் திருச்செந்தூர் முருகன் ஒரே நேரத்தில் கட்டபொம்மன், கந்தசாமி புலவர் இருவரது பக்தியையும் கவுரவித்து உலகுக்கு உணர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்ற ஒரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.
- விடியற்காலை மூச்சு பயிற்சி செய்ய சிறந்த நேரம்.
- பொதுவில் பால், பாதாம், விதைகள், கீரை வகைகள் நிறைந்த உணவுகள் ஆகும்.
கொலஸ்டிரால்- இன்று பலரது பிரச்சினை கொழுப்பு எனப்படும் கெர்லஸ்டிரால் அதிகம் என்பதுதான். எந்த வயதிலும் இருதய பாதுகாப்பு எனும் போது கொலஸ்டிரால் அளவினை கவனம் கொடுத்து பார்க்க வேண்டி உள்ளது.
கொலஸ்டிரால் என்பது உயிரணு மெல்லிய சவ்வுகளில் காணப்படும் கொழுப்பாகும். கொலஸ்டிரால் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு இன்றியமையாதது தான். இந்த கொலஸ்டிராலை பொதுவில் இரு வகையாகப் பிரிக்கலாம்.
* நல்ல கொலஸ்டிரால் (HDL) * தீய கொலஸ்டிரால் (LDL) என பிரித்துக் கொள்ளலாம். இதற்கு மேலும் விவரங்கள் இருந்தாலும் இந்த அளவு புரிதலே நம்மை காத்து கொள்ள வழி வகுக்கும். நல்ல கொலஸ்டிரால் இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும். தீய அல்லது கெட்ட கொலஸ்டிரால் தமனிகளில் படிந்து பல்வேறு இதய நோய்களை உண்டாக்கும். கொலஸ்டிரால் நமக்கு இரு வழிகளில் கிடைக்கின்றது.
* உடலாகவே உற்பத்தி செய்து கொள்ளும். * நாம் உட்கொள்ளும் உணவில் இருந்தும் கிடைக்கின்றது.
கொலஸ்டிராலின் பணிகள்- * ஹார்மோன் உற்பத்தி- ஈஸ்ட்ரொஜன், புரோ ஜெஸ்ட்ரான், டெஸ்டோ ஸ்டிரான், கார்டிஸால் இவைகளின் உற்பத்திக்கு காரணம் கொலஸ்டிரால்தான்.
* எலும்பு, பல் இவை உறுதியாய் இருக்க வைட்டமின் 'டி' தேவை அல்லவா. அதனை சூரிய ஒளியில் இருந்து உறிஞ்சி உடலில் 'டி' சத்தினை சேர்க்க கொலஸ்டிரால்தான் காரணம்.
* பித்த நீர் செரிமான திரவம் உருவாகவும் கொலஸ்டிரால்தான் பொறுப்பாகின்றது.
* செல்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கின்றது.
* நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்பட அவசியமாகின்றது.
* இன்னும் பல முக்கிய பங்களிப்பு கொலஸ்டிராலின் மூலம் உடல் இயக்கத்திற்கு கிடைக்கின்றது.
இருப்பினும் இதன் அளவு மீறும்போது இருதய பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
அதிகம் பொரித்த, வறுத்த உணவுகள் நம் பழக்கத்தில் அதிகமாகவே இன்றும் உள்ளன. இவை இருதயத்திற்கு நல்லதல்ல.
கரையும் நார் சத்து உணவுகள், ஓட்ஸ், முழு தானிய உணவு, பீன்ஸ் வகைகள், கொட்டை வகைகள், ஆப்பிள், திராட்சை, சிட்ரஸ் பழ வகைகள், மீன், ஆலிவ் எண்ணை, விதைகள் இவை கெட்ட கொழுப்பினை குறைக்க பெரிதும் உதவுகின்றன.
ஒரு முறை மருத்துவ ஆலோசனை பெற்று சரி செய்து கொள்ளலாம்.
மாரடைப்பு என்பது இருதயத்துக்கு போதுமான ரத்த ஓட்டம் இல்லாதபோது அதாவது ரத்த குழாயில் ரத்த ஓட்டம், ஆக்ஸினே தடைபடும்போது ஏற்படுகின்றது. இந்த அடைப்பு கொழுப்பு, கொலஸ்டிரால் இவற்றால் ஏற்படுகின்றது. பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் இருதய தசை பாதிக்கப்படுகின்றது. இதற்கு உடனடி சிகிச்சை கிடைத்தாலே மனிதனை இறப்பில் இருந்து காப்பாற்ற முடிகின்றது. இதன் அறிகுறிகளாக...
* நெஞ்சு வலி, அழுத்தம், இறுக்கம் இருக்கும், இருக்கலாம்.
* தோள் பட்டை, கழுத்து, தாடை, பல், மேல் வயிற்றில் வலி இருக்கலாம். * வியர்த்து கொட்டலாம்.
* நெஞ்செரிச்சல், அஜீரணம் இருக்கலாம்.
* மயக்கம் * வயிற்று பிரட்டல் * மூச்சு வாங்குதல் இருக்கலாம்.
வயது கூடுதல், புகை, மது, உயர் ரத்த அழுத்தம், கூடுதல் எடை, சர்க்கரை நோய், பரம்பரை, போதிய உடற்பயிற்சி இன்மை, மன உளைச்சல் ஆகியவை மாரடைப்பு அபாயத்தினைக் கூட்டும் காரணங்கள் ஆகின்றன.
முறையான மருத்துவ கவனிப்பும், வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாறுதல்களும் பாதிப்பினை தவிர்க்க பெரிதும் உதவுகின்றன. உடனடியாக பாதிக்கப்பட்டவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே சிறந்த தீர்வு.
எழுத்தின் மூலமாக அனைத்தையும் விளக்குவது கடினம் என்பதாலும், கூடுதல் கவனம் தேவை என்பதாலும் சிலவற்றினை எழுத்தில் தவிர்க்கின்றோம்.

டோபமைன்- டோபமைன் என்ற ஹார்மோன் உடலின் பல செயல்பாடுகளுக்கு முக்கியம் ஆகின்றது. அசைவுகள், ஞாபகம், மனநிலை, படிப்பாற்றல் இவைகளுக்கு முக்கியமானதாகின்றது. இதனை "Happy Hormone-Feel Goodhormone" என்பர். ஒருவித மன மகிழ்வோடு இருக்கச் செய்யும் ஹார்மோன் இது. இது சீராக இருக்கும்போது மூளை நன்கு செயல்படும். நரம்பு மண்டல தொடர்பும் சீராய் இருக்கும்.
டோபமைன் குறைவாக இருக்கும்போது பார்க்கின்ஸன் நோய் பாதிப்பு-நடுக்கு வாதம், மனச்சோர்வு, மன உளைச்சல் இருக்கும்.
இன்றைய கால சூழ்நிலையில் சமூக ஊடகங்கள், போனில் விளையாட்டுகள் இவை மகிழ்விப்பது போல் தோன்றினாலும் பின்பு அவை ஒருவரை சோர்வாக, மன உளைச்சலோடு இருப்பவராக ஆக்கி விடுகின்றன. அடிக்கடி கடைக்கு செல்பவர்கள் காபி, டீ குடிப்பார்கள். ஜாலி புட் எனப்படும் ஆரோக்கியம் இல்லாத உணவினை உண்பவர்கள் காலப் போக்கில் சோர்வாக, மகிழ்ச்சி இன்றி இருப்பர். * நல்ல புத்தகங்களை படிப்பது. * சூரிய ஒளி உடலில் படும்படி காலை (அ) மாலை வெளியில் செல்பவர்கள். * அன்றாடம் முறையாக உடற்பயிற்சி செய்பவர்கள். * தன்குறிக்கோள்களை விடாது தொடர்பவர்கள். * சாதாரண நீரில் ஷவர் முறையில் குளியல் எடுப்பவர்கள்.
* இசை போன்ற கலைகளில் ஈடுபடுதல் (அ) ஆர்வம் இருப்பவர்களுக்கு இயற்கையிலேயே 'டோபமைன்' அளவு சீராக இருக்கும்.
மூளைக்கான உணவு: பாதாம், கிரீன்டீ, மீன், முட்டை, பூசணி விதை, அடர்ந்த சாக்லேட், மஞ்சள், தயிர், ஓட்ஸ், புரோக்லி, ஆரஞ்சு, காபி.போன்றவை மூளைக்கு சிறந்த உணவாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உணவினைக் கூட எப்ப சாப்பிட வேண்டும். அதாவது எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதனைக் கூட ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர் சத்துணவு நிபுணர்கள்.
* பொதுவில் காலை 7 மணி முதல் 9 மணி வரை காலை உணவிற்கான சிறந்த நேரம் என்கின்றனர். இது வயிற்றுக்கு உகந்தது என்கின்றனர். * காலை 9 மணி முதல் 11 மணி வரை கணையம் செயல்பாட்டுத் திறனைக் கூட்டுகிறது. * 11 மணி முதல் 1 மணிக்குள் காலை அளவான நிதான உணவு இருதயத்திற்கு நல்லது. * பகல் 1 மணி முதல் 3 மணி வரை சீரண மண்டலம் இயங்குகிறது.
விடியற்காலை மூச்சு பயிற்சி செய்ய சிறந்த நேரம்.
* வயிற்றினை பாதுகாக்க முட்ட, முட்ட உணவு மற்றும் கனத்த உணவு இவைகளைத் தவிர்க்க வேண்டும்.
* கணையத்தினை பாதுகாக்க அதிக இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.
* இருதயத்தினை பாதுகாக்க இரவில் அதிக நேரம் கண் விழிக்கக் கூடாது.
இரவில் 7 மணி முதல் 9 மணி வரை கடினமான உணவு சாப்பிடக் கூடாது.
இரவு 9 மணி முதல் 11 மணி அளவில் டி.வி.பார்த்து நொறுக்குத்தீனி, சுவீட்ஸ் இவை சாப்பிடக் கூடாது.
இரவு 1 மணி முதல் 3 மணிவரை பிரியாணி, பரோட்டா சாப்பிடுபவர்களும் உண்டு. இது குடல் சுத்தம் செய்யும் நேரம். இந்நேரத்தில் மசாலா உணவுகள் உடலுக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
இயற்கையோடு ஒன்றி வாழ்வோம். முறைப்படி உணவு உட்கொள்வோம்.

கமலி ஸ்ரீபால்
கால்சியம்
தசைகளில் வலி, பிரச்சினை, நகங்களில் பிரச்சினை, பல் பாதிப்பு, கை, கால்களுக்கு ஒரு வித குறுகுறுப்பு இப்படி பாதிப்புகள் இருக்கின்றதா? கால்சியம் குறைபாடு இருக்கின்றதா என்று மருத்துவர் மூலம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
பொதுவில் பால், பாதாம், விதைகள், கீரை வகைகள் நிறைந்த உணவுகள் ஆகும்.
இன்று அதாவது இந்த கால கட்டத்தில் அதிகமாக பேசப்படும் ஒரு வார்த்தை (மருத்துவம் சம்பந்தமாக) Fatty Liver. கொழுத்த, கொழுப்பு நிறைந்த கல்லீரல் என்பதாகும்.
அதிக மருந்துகள், ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை நோய், பரம்பரை, அதிக எடை, மிக வேகமாக எடையை குறைத்தல் இவை கொழுப்பு கல்லீரலுக்கு காரணமா கின்றன.
மது, வறுத்த, பொரித்த உணவுகள், அதிக உப்பு-ஊறுகாய், அப்பளம் அதிக சர்க்கரை, அதிக அரிசி உணவு, சிகப்பு அசைவம் இவற்றினைத் தவிர்க்க வேண்டும்.
பச்சை காய்கறிகள்-குறிப்பாக புரோகலி, பசலை இவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். ஒமேகா 3 மீன் உணவு நல்லது. வால்நட்-ஒமேகா 3 சத்து நிறைந்தது. ஆலிவ் எண்ணை, கிரீன் டீ, டோப்பூ, சூரியகாந்தி விதை, ஓட்ஸ் இவையும் கொழுப்பு கல்லீரலை சரி செய்யக்கூடியவை.
நம்மவூர் மாதிரி எல்லா ஊரிலும் தத்துவ கருத்துகள் மருத்துவ கருத்துகள் உண்டு போல. படித்துத்தான் பாருங்களேன். ஊர் எதுவா இருந்தாலும், மொழி எதுவா இருந்தாலும், சொன்னது யாரா இருந்தாலும் கருத்துகள் நல்லா இருந்தா எடுத்துக்க வேண்டியதுதான். பார்ப்போமா.... உடற்பயிற்சி செய்யாததற்கும், உணவு கட்டுப்பாடு இல்லாததற்கும் ஆயிரம் நியாயமான காரணங்களை சொன்னாலும், சாக்கு போக்கினை சொன்னாலும் உடலில் கலோரி சத்து எரிந்து விடுமா என்ன? எரிக்கத்தான் முடியுமா?
உடல் ஆரோக்கியத்திற்காக அன்றாடம் சிறிது நேரம் செலவழிக்கத்தான் வேண்டி வரும். இல்லாவிட்டால் நோய்வாய்பட்டு இருக்க சிறிது காலத்தினை ஒதுக்க வேண்டும்.

ஒரு நம்பர் கலோரி சத்தினை கூட உங்கள் உடலுக்குத் தெரியாமல் நீங்கள் எடுத்துக் கொள்ள முடியாது. உங்கள் உடல் கணக்கில் புலி. உடல் எடை அளவுக்கான கிராம் அளவு புரதம் அன்றாடம் தேவை. நிறைய வருடங்கள் தவறான உணவு பழக்கம், ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறையில் இருந்து விட்டு ஒரு நிமிடத்தில் மாற்றங்களை எதிர்பார்க்காதீர்கள்.
சவுகர்யம் என்று பார்த்து விட்டால் பக்கத்தில் இருக்கும் பொருளினை எடுப்பதற்குக் கூட ஆள் தேவைப்படும். முடிந்தவரை தன் வேலைகளை தானே செய்து அசவுகரியத்திலேயே பழகிக் கொள்ளுங்கள்.
மாஜிக் மாத்திரை கிடையாது. உடலை உடனே எடை குறைத்து, இளமையாக மாற்ற எதனையும் டயட், உடற்பயிற்சி இவைகளை தொடர்ந்து செய்யும் பழக்கம் வேண்டும்.
- குழந்தைகளுக்கு தளர்வான, இலகுவான ஆடைகளை அணிவிக்கவும்.
- வெப்ப காலங்களில் உணவு, பால், பழங்கள் ஆகிய அனைத்துமே விரைவாகக் கெட்டுவிடும் தன்மையுடையன.
வெப்பத்தினால், பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல் உஷ்ணம் (ஹீட் ஸ்ட்ரோக்), உணவு நஞ்சாதல், அதனால் ஏற்படும் வயிற்றுப்போக்கு என பல பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, அதன் அறிகுறிகள், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள், சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்:
குழந்தைகளுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக் காரணம்:
குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் உஷ்ணம் என்பது உடலின் வெப்பநிலை 40°செல்சியம் (104°பாரன்ஹீட்) -க்கு மேல் உயர்ந்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு நிலையைக் குறிக்கிறது. அவ்வாறு ஏற்பட்டு, உடலை குளிர்விக்க முடியாமல் போகும் போது, உடலின் முக்கிய உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
தோல் வறண்டு, சூடாக இருத்தல்.
குழப்பம், மயக்கம், தலைவலி, தலைசுற்றல்.
மந்தமான பேச்சு, விரைவான இதயத் துடிப்பு.
குமட்டல், வாந்தி.
உணர்ச்சி இன்மை, வலிப்பு.

எவ்வாறு தடுத்துக் கொள்ளலாம்?
வெயிலில் குழந்தைகளை அதிக நேரம் அழைத்துச் செல்ல வேண்டாம். குறிப்பாக, வெப்பமான நேரங்களில் (மதியம் 12 மணி முதல் 3 மணி வரை) குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.
குழந்தைகளுக்கு தளர்வான, இலகுவான ஆடைகளை அணிவிக்கவும்.
வெயிலில் செல்லும்போது, குழந்தைக்கு தொப்பி, கண்ணாடி அணிவிக்கவும்.
அடிக்கடி தண்ணீர் குடிக்க வைக்கவும்.
நிழலான, குளிர்ந்த இடத்தில் குழந்தைகளை வைத்திருக்கவும்.
வெப்பமான நேரங்களில், குழந்தைகளை அதிக நேரம் விளையாட விட வேண்டாம்.
வெயில் தாக்கத்தினால் உடல் உஷ்ணம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
உடனே குழந்தையை நிழலான, குளிர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லவும்.
ஈரமான துணி கொண்டு உடலை துடைக்கவும்.
விசிறி வீசி உடலை குளிர்ச்சியாக வைக்கவும்.
குளிர்ந்த நீரை குடிக்க கொடுக்கவும்.
குழந்தையின் நிலைமை மோசமடைந்து, மயக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.
ரத்தக் குழாய்கள் வழியாக நீரேற்றம் செய்வது அவசியம்.
உணவு நஞ்சாதல்:
வெப்ப காலங்களில் உணவு, பால், பழங்கள் ஆகிய அனைத்துமே விரைவாகக் கெட்டுவிடும் தன்மையுடையன. ஆகவே சமைத்து நீண்ட நேரம் ஆன உணவுகளை உண்பதற்கு முன்பு வீணாகி விட்டதா? என்பதைப் பரிசோதித்த பின் எடுத்துக்கொள்வது நல்லது.
சால்மோனெல்லா, கேம்பைலோ பாக்டர் போன்ற பாக்டீரியாக்கள், வெயில் காலங்களில் அதிகமாகப் பரவும் தன்மையுடையவை. சில பாக்டீரியாக்கள் பால், பால் சார்ந்த பொருட்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றில் அதிகமாகப் பல்கிப் பெருகக்கூடியன. இதுமட்டுமல்லாமல் மேலும் சில பாக்டீரியாக்கள் சமைத்து நீண்ட நேரம் ஆன உணவுகளைக் கெட்டுவிடச் செய்கிறது. தொடக்க நிலையில் சிலருக்கு உணவின் சுவை மாறியுள்ளதைக் கண்டறிய முடிவதில்லை. இப்படிக் கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவதால் ஏற்படுவதுதான் உணவு நஞ்சாதல் என்கிறோம்.
சமைத்த உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மீண்டும், மீண்டும் சூடுபடுத்தி உண்ணுவதும் உணவு நஞ்சாவதற்கு மற்றுமொரு காரணம் ஆகும். உணவை ஆக்கும் ஒருவரின் கைகள் தூய்மை கெட்டு இருந்தாலும், அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும், அவருக்குள்ள நோயும் உணவின் மூலம் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.
உணவு நஞ்சாதலின் அறிகுறிகள்:
கெட்டுப்போன உணவை எடுத்துக் கொண்ட சில மணி நேரங்களிலேயே இதன் அறிகுறிகள் தொடங்கிவிடும். அவையாவன,
உடல் சோர்வு
வயிற்று வலி
வாந்தி
வயிற்றுப்போக்கு
மயக்கம்
வயிற்றுப் பிடிப்பு
பசியின்மை

மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.
உணவு நஞ்சாவதைத் தடுக்க...
சமைத்த 4 மணிநேரத்திற்குள் உணவை உண்டு விடுவது நல்லது.
வெளியிடங்களில் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
உணவு ஆக்குவதற்கு மற்றும் உண்பதற்கு முன்பு கைகளை நன்றாகத் தூய்மை செய்ய வேண்டும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை நன்கு தண்ணீரில் சுத்தப்படுத்திய பின்பு பயன்படுத்த வேண்டும்.
மலம் கழித்த பின்பு கைகளை நன்கு தூய்மை செய்ய வேண்டும்.
வெயில் காலங்களில் பரவும் தொற்று நோய்கள்:
அம்மை நோய்
தட்டம்மை
சின்னம்மை
விளையாட்டம்மை
புளு காய்ச்சல்
இருமல், சளி
போன்ற தொற்று நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுவதற்கு அதிக வாய்புள்ளது. எனவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
- ஆயுர்வேத மையங்கள் பல அமைந்துள்ள பகுதி இது.
- 108 வைணவ திவ்ய தலங்களுள் இதுவும் ஒன்று.
தூய்மையான காற்று, மனதை மயக்கும் தென்னை மரங்கள் சூழ்ந்த இயற்கைச் சூழ்நிலை, அற்புதமான கடற்கரைகள், ஆகியவற்றைக் கொண்ட கோவளம் அனைவரது பட்ஜெட்டிற்கும் ஏற்ற ஒரு சுற்றுலா பயண இடமாகும்.
கேரளத்தில் அரபிக் கடலில் அமைந்துள்ள இந்த கடற்கரை பகுதி வெளி நாட்டோர் விரும்பி வரும் இடமாகும்.
கோவளம் என்றாலே மலையாள மொழியில் தென்னந்தோப்பு பகுதி என்றே பொருள்.
இது திருவனந்தபுரத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல டாக்சி, கார் வசதிகள் உண்டு.
கலங்கரை விளக்கக் கடற்கரை, ஹவா கடற்கரை, சமுத்திரக் கடற்கரை ஆகிய மூன்று அடுத்தடுத்த பிறை போன்ற கடற்கரைகளை இது கொண்டுள்ளது.
டைவிங் உள்ளிட்ட நீர் விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அருமையான இடமாகும்.
இங்குள்ள ஏராளமான பீச் ரிஸார்ட்களில் ஏதேனும் ஒன்றில் தங்கி இருந்தால் நிச்சயமாக சூரியோதயம் மற்றும் அஸ்தமனத்தில் மிளிரும் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
கோவளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள லைட் ஹவுஸ் பீச் அனைவரும் செல்ல விரும்பும் பிரசித்தமான ஒரு கடற்கரையாகும். 118 அடி உயரமுள்ள லைட் ஹவுஸ் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. 140 படிகள் ஏறி பார்வையாளர்கள் பார்க்கும் இடத்தை அடைந்தால் அங்கிருந்து ரம்யமான காட்சியைப் பார்க்கலாம்.
இங்குள்ள மணல் விசேஷ தாதுக்களின் கலவையினால் உண்டான ஒரு விதமான கருப்பு நிற மணலாகும்,
கோவள கடற்கரைக்குப் போட்டி போடும் விதத்தில் விழிஞ்சத்துக்கு அருகே அற்புதமான காட்சிகளோடு இருப்பது பூவார் கடற்கரையாகும்,.
இங்கு நெய்யாறு அரபிக் கடலில் கலக்கும் காட்சி கண்ணைக் கவரும் ஒன்று.

ஆயுர்வேதத்திற்குப் பெயர் பெற்ற இடமான திருவனந்தபுரத்தில் சவுவாரா கடற்கரையில் மசாஜ் உள்ளிட்டவற்றைச் செய்து கொள்வதோடு பல வியாதிகளைப் போக்கும் சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ளலாம். ஆயுர்வேத மையங்கள் பல அமைந்துள்ள பகுதி இது.
கடற்கரையில் காற்று வாங்கிய பின் நிம்மதியாக அருகிலுள்ள திருவனந்தபுரத்தில் உள்ள பார்க்க வேண்டிய பல இடங்களுக்கும் செல்லலாம்.
விஷ்ணு எழுந்தருளியுள்ள பத்மநாப சுவாமி ஆலயம் வழிபாட்டுக்குரிய இடமாக அமைகிறது.
108 வைணவ திவ்ய தலங்களுள் இதுவும் ஒன்று. இங்குள்ள பத்மநாப சுவாமியின் மூல விக்கிரகம் 12008 சாளக்கிராமங்களால் ஆனதாக குறிப்பிடப்படுகிறது. இவை நேபாளத்தில் உள்ள கந்தகி நதியில் இருந்து கொண்டு வரப்பட்டவையாகும்.
கர்பகிருகத்தில் உள்ள ஒரு கல் மேடை மேல் அமைந்துள்ள மூல விக்ரகம் 18 அடி நீளத்திற்கு உள்ளது.
மூன்று வெவ்வேறு வாயில்களில் இருந்து இதை தரிசிக்கலாம். முதல் வாயிலில் தலையையும் மார்பையும் தரிசிக்கலாம். இரண்டாவது வாயிலில் கைகளும், மூன்றாம் வாயிலில் பாதங்களும் தரிசிக்கலாம். இங்குள்ள சிற்ப வேலைப்பாடுகளும் , ஓவியங்களும் மனதைக் கவர்பவை.
இந்தக் கோவிலில் ஆறு பாதாள அறைகள் உள்ளன. சமீப காலத்தில் இவற்றைத் திறந்து பார்த்த போது ஏராளமான தங்க நகைகள், வைர வைடூரியங்கள் உள்ள பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என மதிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் அதிக பணமுள்ள கோவிலில் இதுவும் ஒன்று என்பதை இந்த பாதாள அறைகள் உறுதிப்படுத்துகின்றன.
திருவனந்தபுரத்தில் உள்ள மிருகக்காட்சிசாலை மிகவும் பழமையான ஒன்றாகும். இங்கு விலங்குகள் கூண்டில் அடைக்கப்படாமல் இருப்பதால் இவற்றைப் பார்ப்பது இயற்கைச் சூழ்நிலையில் இவற்றைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு அருங்காட்சியகமான இதில் வெங்கலச் சிலைகள், அணி கலன்கள் உள்ளிட்டவற்றைக் கண்டு மகிழலாம். தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ளது இது.
நேப்பியர் மியூசியத்தை ஒட்டி அமைந்துள்ள சித்ரா ஆர்ட் காலரி பாரம்பரியமான கலைப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் கலையகமாகும்.
ஆகப் பெரும் ஓவியரான ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ராஜபுதன பாணி, பாலினீசிய பாணி, தஞ்சாவூர் பாணி உள்ளிட்ட பல வகை ஓவியங்களை இங்கு பார்த்து பரவசம் அடையலாம்.
கனகக்குன்னு அரண்மனை:
இது திருவனந்தபுரத்தின் மையத்தில் உள்ள நேப்பியர் அருங்காட்சியகம் அருகே உள்ள அருங்காட்சியகமாகும்.

ச.நாகராஜன்
இது பல கலை நிகழ்ச்சிகள் அரங்கேறும் இடமாகும். பாரம்பரிய கலை விழா நடக்கும் போது சுற்றுலாப் பயணிகள் திரளாக வந்து இதில் கலந்து கொள்கின்றனர். இதைக் கட்டியவர் ஸ்ரீ மூலம் திருநாள் ஆவார்.
குதிரை மாளிகை அரண்மனை
இது திருவிதாங்கூர் அரசுக்குச் சொந்தமான ஒரு அரண்மனையாகும். பத்மநாப சுவாமி கோவிலுக்கு அருகில் உள்ளது இது. இந்த மாளிகையில் கூரைப் பகுதிக்குக் கீழே 22 குதிரைச் சிற்பங்கள் உள்ளதால் இது குதிரை மாளிகை என்று அழைக்கப்படுகிறது.
80 அறைகள் கொண்ட இந்த மாளிகையில் 20 அறைகள் அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ளது. திருவிதாங்கூர் அரசுக்குச் சொந்தமான படைக்கலங்கள், சிம்மாசனங்கள், ஓவியங்கள் உள்ளவற்றை இங்கு காணலாம. கேரள வரலாற்றை நன்கு அறிந்து கொள்ளலாம். இங்குள்ள மாடத்தில் இருந்து பத்மநாப சுவாமி கோவிலைப் பார்த்து மகிழலாம்.
பிரதான சாலையான மகாத்மா காந்தி சாலை ஷாப்பிங் செய்ய உகந்த இடமாகும்.
பசுமை நகரம் என்று மகாத்மா காந்தியால் புகழப்பட்ட திருவனந்தபுரத்தில் பார்ப்பதற்கு இன்னும் நிறைய இடங்கள் உள்ளன.
வேலி லகூன், கரமண நதி, வெள்ளயானி ஏரி, கவுடியார் அரண்மனை உள்ளிட்ட இடங்களை நமக்குள்ள நேரத்தைப் பொறுத்து திட்டமிட்டுப் பார்க்கலாம்.
கேரளத்தின் இந்தப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தால் ஒருவர் மனதில் தோன்றும் எண்ணம்: "சும்மாவா சொன்னார்கள் இதை கடவுளின் சொந்த நாடு" என்று!
- கேழ்வரகு, சிறுதானிய வகையைச் சேர்ந்தது.
- செரிமானத் தன்மை நன்றாக இருந்தால் மெலிந்த உடல்வாகு உடையவர்களுக்கும் நல்ல ஊட்டமளிக்கும் உணவாக இருக்கும்.
கேழ்வரகுத் தானியமாக ஊறவைத்து பத்து மணிநேரம் கழித்து அதனை மிக்ஸி ஜாரில் இட்டு அரைத்து பாலெடுத்து வடிகட்டிக் காய்ச்சி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் என்று பார்தோம்.
முற்காலத்தில் ஊறவைத்த கேழ்வரகை அம்மியில் அரைத்துப் பாலெடுத்துக் காய்ச்சிக் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். குழந்தையை ஈன்ற தாயிடம் போதிய பால் சுரக்கவில்லை என்றால் சுரப்புக்குத் தூண்டுகிற வண்ணம் நாவில் சுரீன்று சுவையை ஏற்றக்கூடிய கருவாட்டுக் குழம்பினை அவ்வப்போது கொடுப்பார்கள். அதேபோல ஆட்டிறைச்சியைக் காயவைத்துச் சுக்காக் கறி தயாரித்து அதில் குழம்பு வைத்தும் கொடுப்பார்கள். இவ்வகையான உணவுகள் மந்தித்துப் போன தாயின் செரிமான மண்டலத்தையும், சுரப்பு மண்டலத்தையும் தூண்டலுக்கு உள்ளாக்கி அவர்களுக்குப் புத்துணர்வு ஊட்டும். பால் சுரக்கச் செய்யும்.
ஆனால் காடு மேடுகளில் வெயிலில் கடின உடலுழைப்பு இல்லாத பெண்களுக்கு மேற்படி உணவுவகைகள் எதிர்விளைவுகளைக் கொடுத்து விடலாம். எனவே அவர்களுக்குப் பால் சுரப்பைத் தூண்ட வேண்டும் என்றால் வெந்தயக்களி, உளுந்தங்களி, கேழ்வரகுக்களி போன்றவையே பொருத்தமாக இருக்கும். முளைகட்டிய பயிறு வகைகளைச் சேர்த்துக் கூட்டு, குழம்பு போன்றவை சமைத்துக் கொடுத்தும் பால் சுரப்பைத் தூண்ட முயற்சிக்கலாம். அது சாத்தியப்படாத பொழுது கடந்த வாரம் சொன்னது போல கேழ்வரகுப் பால் குழந்தைகளுக்குப் பொருத்தமாக இருக்கும்.

பால் பற்றாக்குறைக்கு மட்டுமல்ல, குழந்தை தவழத் தொடங்குகிற பொழுது எலும்புகளுக்கு ஊட்டம் தருவதற்கு கேழ்வரகு உலர் மாவுடன் உலர் பச்சரிசி மாவும் சமபங்கு கலந்து, உடன் வாசனைக்காக பசும்பால் அல்லது பால் பவுடர் போன்றவற்றைச் சேர்த்து களியாகவும் இல்லாமல், கூழாகவும் இல்லாமல் பசைப் பதத்திற்குக் காய்ச்சி ஊட்டலாம்.
முற்காலத்தில் கன்றை ஈன்ற தாய்ப்பசு அல்லது எறுமை அல்லது ஆடு இறந்து விட்டால் பச்சிளம் குட்டியைத் தேற்றி வளர்க்க அரிசிக் கஞ்சித் தண்ணியை ஊட்டுப் புட்டியில் (ஃபீடிங் பாட்டில்) ஊற்றி முளைக்காம்பு போன்ற ரப்பர் போட்டு அரவணைத்துச் சொந்தக் குழந்தைக்குப் புகட்டுவது போலக் கன்றிற்குப் புகட்டுவார்கள். தன்னினமில்லாத தன்னோடு வளர வேண்டிய சக உயிரிடத்தும் அத்தகைய கரிசனம் இருந்தது.
இன்றோ சொந்தக் குழந்தைக்கு பால்குடியை சீக்கிரமாகவே மறக்கடித்து பசும்பாலுக்கோ, மாவுப் பாலுக்கோ பழக்கி விட்டு வேலைக்கு ஓடியாக வேண்டும் என்று பொருளியல் சார் வாழ்க்கை நிர்பந்தித்துக் கொண்டுள்ளது. தாயை இழந்த இளங்கன்றிற்கு கஞ்சித் தண்ணிக் கொடுத்து ஒரு நிலைக்குக் கொண்டுவந்த ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் அதனை விரைவாகவும் வலுவாகவும் வளர்த்தெடுக்க கேழ்வரகு மாவினை நீர்க்கக் காய்ச்சிக் கொடுப்பார்கள்.
அதேபோல் மாட்டில் பால் நிறைய கறக்க வேண்டும் என்றால் தானியங்கள் அனைத்தையும் ஊற வைத்து வேக வைத்து பின்னர் உறலில் இட்டு ஆட்டி மாட்டிற்கு வைப்பார்கள். அதனை ஆவலுடன் சர் சர் சரென்று உறிஞ்சிக் குடிக்கும் மாட்டின் மடிக் காம்பு பால்கட்டி கோவைக்காயைப் போல விரைத்துத் தொங்கும்.
இன்றைய பெண்களுக்கு சிறுதானியங்களைப் போன்ற வீர்யம் தரும் உணவு உண்ணக் கிடைக்காததால் உரமிட்ட நிலத்தில் விளைந்த நெல்லையு ம் பலமுறை தீட்டிய அரிசியையே உண்பதால் உடலில் ஊட்டம் குறைவாக இருக்கிறது. எனவே பெற்ற குழந்தைக்குப் போதிய பாலைக் கொடுக்க முடியாதது மட்டுமல்ல கருத்தரித்தலே அரிதாகி வருகிறது. இன்று குழந்தைப் பேறு என்பதே அதிர்ஷ்டம் என்கிற அளவிற்கு ஆண், பெண் இருபாலரிடமும் இனப்பெருக்க ஆற்றல் குறைந்து வருகிறது. குழந்தைப்பேறில்லாத இளம் தம்பதியர் எடுத்த எடுப்பிலேயே மருந்து ஊசி, செயற்கைக் கருத்தரித்தல் என்று இறங்குவதை விட்டு நம்முடைய உணவில் வீர்யமானவற்றைத் தேர்வு செய்து முயற்சித்துப் பார்த்தல் பாதுகாப்பானது.
கேழ்வரகு, சிறுதானிய வகையைச் சேர்ந்தது. அதே நேரத்தில் மிகவும் கடினமான தானியமும் ஆகும். எனவே பிற தானியங்களை ஊற வைத்து இடித்து அல்லது ஈரமாவாக அரைத்துப் பயன்படுத்துவது இயலாததாகும். பெரும்பாலும் உலர் மாவாகவே சமைப்பர் நம் மக்கள். வட ஆந்திர மக்கள் உலர் மாவல் சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு போன்றவற்றை இடித்துப் போட்டு வெந்நீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து உருட்டிக் காயவைத்து விடுவார்கள்.
வெளியூர்ப் பயணங்களின் போதும், தொலைதூரத்திற்கு ஆடுமாடுகள் மேய்க்கப் போகும் போதும் இந்த உருண்டைகளைப் பழந்துணியில் போட்டுக் கட்டித் தூக்கிக் கொண்டு போவார்கள். பசிக்கிற நேரத்தில் இம்மாவுருண்டையை எடுத்து பொடித்துப் போட்டு கிடைத்தால் வெங்காயம், புளித்தண்ணி போன்றவற்றை உடன் சேர்த்துப் பிசைந்து உண்பார்கள். வறண்ட நில மக்களிடம் இன்றளவும் இப்பழக்கம் உண்டு. தமிழகத்துத் தென்மாவட்டங்களில் அவசரடி சிற்றுண்டிக்கு மாவை லேசாக நல்லெண்ணை விட்டு வறுப்பார்கள். உடன் சீரகம், பொட்டுக்கடலை, அரிந்த வெங்காயம், இருந்தால் மல்லித்தழையும் பொடியாக அரிந்து போட்டுக் கலக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் நொறுக்குத் தீனியாகத் தின்பார்கள். பலவகைகளிலும் ஆபத் பாந்தவனாக விளங்கும் கேழ்வரகு.

கேழ்வரகு மாவில் வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய், எண்ணை விட்டு வதக்கிய முருங்கைக் கீரை, உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து இரு உள்ளங்கையளவிற்கு வட்டமாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் நன்றாக வேக விட்டு எடுத்தால் குளிர் காலத்தில் கொடு கொடு என்று வாங்கிச் சாப்பிடுவார்கள். புறச்சூழலில் ஈரப்பதம் நிலவும் போது உடலில் வெப்பம் ஏற்றுவதற்குப் பொருத்தமான உணவாக இருக்கும். செரிமானத் தன்மை நன்றாக இருந்தால் மெலிந்த உடல்வாகு உடையவர்களுக்கும் நல்ல ஊட்டமளிக்கும் உணவாக இருக்கும்.
பொதுவாக இதுபோன்ற அடையாகச் செய்வது மட்டுமே நம்முடைய முன்னோர்களின் வழக்கம். இன்று உணவுப் பொருட்கள் ஓரளவு தாராளமாகக் கிடைக்கும் போது சத்தான உணவுக்காக கேழ்வரகு மாவில் மாற்றுப் பண்டங்கள் அவ்வளவாக முயற்சித்துப் பார்ப்பதில்லை.
கேழ்வரகில் ரிப்பன் பக்கோடா முறுக்கு, சன்னத்துளை உருளையில் இட்டு மிக்சர் போன்றவை அங்கங்கே நொறுவித்தீனியாக விற்பனைக்கு வருகிறது. மாற்றுப் பண்டங்கள் தயாரிக்கும் போது அவற்றிற்கு உரிய மூலப்பொருளின் பண்பை உணர்ந்து தயாரித்தலே பயன் தரும். முன்னரே சொன்னது போல கெட்டித்தன்மையும், வறள் தன்மையுமான கேழ்வரகு மாவில் எண்ணையில் பொறித்தெடுக்கிற பொழுது மேலும் வறள் தன்மை கூடியதாகி விடும் அப்பண்டம். எனவே அப்பண்டங்களை மெல்லும் பொழுது கடினமாக இருக்கும். கடினத்தன்மையைக் குறைக்க வணிகப் பண்டங்களில் சமையல் சோடாவைக் கலப்பார்கள். அது உண்போரின் இரைப்பையையும், குடலையும் கடுமையாகப் பாதிப்பதோடு நிரந்தரமாகச் செரிமானச் சிக்கலையும் கொண்டு வந்து விடும்.
சமையல் சோடா கலக்காத போதும் எண்ணையில் பொறிக்கிற கேழ்வரகு மாவுப் பண்டங்களை உண்டால் அவை செரிமான மண்டலத்தில் உள்ள நீரை வற்றச் செய்து விடும். எனவே உண்போருக்கு வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கி விடும். எனவே இதுபோன்ற வணிகப் பண்டங்களைத் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதேநேரத்தில் உணவைக் கடித்துண்ணும் பழக்கம் குறைந்து வரும் இந்நாளில் கேழ்வரகு மாவினைக் கொண்டு மெத்தென்ற பலகாரங்கள் தயாரிக்கலாம்.
கேழ்வரகு மாவுடன், மைதா மாவும் கலந்து நாட்டுச் சக்கரை கலந்து வழக்கமான முறையில் கேக் தயாரித்தல் இன்று பரவலாகி வருகிறது. அதுபோலவே கேழ்வரகு மாவுடன் தாராளமாகத் தேங்காய்ப்பூ சேர்த்து தயாரிக்கும் எதுவானாலும் சுவையாக இருக்கும்.

போப்பு, 96293 45938
கே.வ மாவுடன் பாதியளவு அரிசி மாவும் தேங்காய்ப்பூ, ஏலக்காய், வாழைப்பழம் ஆகியவைச் சேர்த்து தோசைப்பதத்தை விட சற்றே கெட்டியான மாவாகக் கலக்கி தோசைக்கல்லில் வார்த்து நெய் ஊற்றி வார்த்தெடுத்தால் உண்ணவும் சுவையாக இருக்கும். நவீன உணவுகளால் சுவை மொட்டுகள் கெடுக்கப்பட்ட நாவிற்கும் ஏற்கும் விதத்தில் இருக்கும். கேழ்வரகின் வறள் தன்மையைப் புரிந்துகொண்டு பதமாகத் தயாரிக்கும் உணவுபண்டங்களைப் புதிது புதிதாக முயற்சித்துப் பார்க்கலாம். அல்லது கேழ்வரகு மாவினை இரவில் ஊறவைத்துக் காலையில் கனமான மண்பாத்திரம் அல்லது வேறு கனமான பாத்திரத்தில் ஊற்றி கேஸ் அடுப்பில் ஏற்றி, ஒரு கொதி வந்தபிறகு சிம்மில் வைத்து பத்து நிமிடங்களில் இறக்கினால் இரண்டு மூன்று நாட்களுக்கு இந்த வெயில் காலத்தில் அவ்வப்போது கரைத்துக் குடிக்கலாம். கூழ் சமைக்கத் தெரியாதவர்களுக்கும் அளித்து மகிழ்ச்சி அடையலாம். இன்று கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறு – பெரு நகரங்களிலும் கூழ் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் அவற்றை விற்கும் எளிய மனிதர்கள் கூட ரேசன் அரிசியை மாவாக அரைத்து கேழ்வரகு மாவில் அதிகபட்சமாக கலந்து வெள்ளை வெளேரென்று கரைத்து விற்பனை செய்கிறார்கள்.
ஆனாலும் வணிக மயமான இக்காலத்திலும் கேழ்வரகோ வேறு தானியமோ தேர்வு செய்து கூழ்க்காய்ச்சி விற்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இந்த உண்மையைப் புரிந்து தள்ளுவண்டிக் கடையிலேயே கூழருந்துவது பொருத்தமே ஆகும். அதிலும் குறிப்பாக வெயிலின் தாக்கம் கூடி வரும் இந்நாட்களில் மதியவேளைக்குப் பொருத்தமான உணவு கேழ்வரகுக் கூழே ஆகும்.
பிற தானியக் கூழ் குறித்தும் வேறு உணவுகள் குறித்தும் தொடர்ந்து பார்ப்போம்.
- நம்முடைய தேவைக்கேற்ப அவை நமது வெளி மனதில் வெளிப்படுகின்றன.
- நமது அடிமனது என்பது நமது ஆற்றல்கள் அனைத்தும் குவிந்து கிடக்கும் ஒரு சுரங்கம்.
ஒவ்வொரு மத நம்பிக்கைகளிலும் தீயசக்திகளை ஏவி விடுவது போன்ற செய்திகள் காணப்படுகின்றன. ஏவல், பில்லி சூனியம் என்றெல்லாம் கூறுகின்றனர்.
இவையெல்லாம் உண்மையா?
அவைகளுக்கெல்லாம் சக்தி உண்டா?
அவைகளைக் கண்டு நாம் பயப்பட வேண்டுமா?
புத்தரிடம் சீடராக இருந்த ஒருவர் புத்தரிடம் இது பற்றி விளக்கம் ஒன்றைக் கேட்டார்.
நான் உங்களிடம் சீடனாகச் சேர்ந்திடுவதற்கு முன்னால், உங்கள் மீது பொறாமை கொண்டு உங்களுக்கு எதிராக தீய சக்திகளை யெல்லாம் ஏவி விட்டேன்.
ஆனால் அதனால் உங்களுக்கு எந்த ஒரு சேதாரமும் பாதிப்பும் ஏற்படவில்லை.
என்ன நடந்துள்ளது? தீய சக்திகளை எதிர்த்து நீங்கள் என்ன செய்தீர்கள்?
எப்படி அதனை வெற்றி கொண்டீர்கள்?
புத்தர் அவரைப் பார்த்து புன்முறுவலுடன் கூறினார்: "உனக்கு முன்பாக ஒரு பெரிய மாமரம் நிற்பதாக வைத்துக் கொள்வோம். நீ அதை நோக்கிக் ஒரு கல்லை எறிந்தால் என்ன ஆகும்? அது மரத்தில் பட்டு மரத்துக்கு ஏதாவது ஒரு சேதத்தை ஏற்படுத்திவிடும். நீ அப்படி கல்லை எறியும் போது அங்கு மரமே இல்லையென்றால் அந்த கல் என்ன ஆகும்?...
" நீ வேகமாக எறிந்த கல் படிப்படியாக வேகத்தை இழந்து தானாகவே கீழே விழுந்து விடும்.
என்னைப் பொறுத்தவரை எனக்குள் "நான்" என்று எதுவுமே கிடையாது. அதனால் எந்தவொரு சக்தி வந்தும் எனக்குள் மோதி எந்தவொரு பாதிப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தி விடமுடியாது!"
புத்தர் ஒரு ஞானி. அவர் நான் எனும் அகந்தை இல்லாதவர். அவரால் ஏவல் போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடிகிறது.
நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர்களால் இத்தகைய பிரச்சினைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியுமா?
மேஜையின் மீது ஒரு அட்டைப் பெட்டி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
"இந்த அட்டைப் பெட்டியில் ஐம்பது கிலோ இனிப்பு உள்ளது. இந்தப் பெட்டியை எடுத்துச் சென்று இதிலுள்ள இனிப்புகளை இங்குள்ள மக்களுக்கு விநியோகம் செய்யுங்கள்" என்று உங்களிடம் கூறுகிறேன்.
ஐம்பது கிலோ எடையுள்ள பெட்டியைத் தூக்குகிறீர்கள்.
உண்மையில் அந்தப் பெட்டியினுள் எதுவுமே இல்லை. அது ஒரு காலிப் பெட்டி.
ஐம்பது கிலோ எடையுள்ள பெட்டியைத் தூக்கும் முயற்சியில் அதை நீங்கள் தூக்கினால் என்ன ஆகும்?
அது விருட்டென்று மேலே எழும்பி விடும்.
ஏன் அப்படி?
நீங்கள் ஐம்பது கிலோவைத் தூக்கவேண்டும் என்று முடிவு செய்த உடனேயே, ஐம்பது கிலோவைத் தூக்கக் கூடிய ஆற்றல் உங்கள் கைகளுக்கு வந்துவிடுகின்றது.
அது வெற்றுப் பெட்டி தான் எனத் தெரிந்திருந்தால், நீங்கள் வெறும் இரண்டு விரல்களைக் கொண்டுதான் தூக்குவதற்கு முயன்றிருப்பீர்கள்.
நம்முடைய சக்திகள் அனைத்தும் நமது அடிமனதினுள்ளேயே குவிந்து கிடக்கின்றன. நம்முடைய தேவைக்கேற்ப அவை நமது வெளி மனதில் வெளிப்படுகின்றன.
நமது அடிமனது என்பது நமது ஆற்றல்கள் அனைத்தும் குவிந்து கிடக்கும் ஒரு சுரங்கம்.
அங்கு என்னவெல்லாம்குவிந்து கிடக்கின்றன என்பது நமக்கே தெரியாது. ஏனெனில் அது நாம் எட்டிப் பிடிக்கும் எல்லைகளுக்கும் அப்பால் உள்ளது. அந்த அடிமனதின் ஒரு பகுதியாகவே நமது ஆழ்மனதும் உள்ளது.
அந்த ஆழ்மனதினுள் பிரபஞ்ச இரகசியங்களும் சக்திகளும் சேமிக்கப்பட்டுள்ளன.
நம்மைப் பொறுத்தவரை நாம் ஒவ்வொருவரும் ஒரு குட்டிக் கடவுளராகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறோம்.
உங்களைப் பற்றி நீங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டால் என்ன ஆகும்? நீங்கள் சக்தியற்றவராக மாறி விடுவீர்கள்.
அளப்பரிய சக்திகள் உங்களுக்குள்ளே புதைந்து கிடக்கின்றன என்பதை நீங்கள் நம்புவீர்களானால் நீங்கள் பலம் மிகுந்தவர்களாகி விடுவீர்கள்.
அந்நிலையில் எந்தவொரு தீய சக்திகளாலும் உங்களை நெருங்க முடியாது.
அக்காலத்தில் நாடு சுபிட்சம் அடைய பல விதமான யாகங்கள் நடத்தினர். அத்தகைய யாகங்கள் இன்றளவும் நடந்து வருகின்றன.
அது போல் எதிரி நாட்டுக்கு கஷ்டங்கள் கொடுக்கவேண்டும் என்பதற்காகவும் சில யாகங்களை நடத்தியுள்ளனர். அவை அபிசார யாகம் என கூறப்பட்டன.
அத்தகைய செயல்கள் அனைத்து மதங்களாலும் தூற்றப்படுகின்றன.
கிராமப்புற பகுதிகளில் சிலர் இப்படி ஒருக்கொருவர் செய்வினை, ஏவல் போன்றவற்றை வைத்து விடுவதாகக் கேள்விப்படுகிறோம்.
அது எந்த அளவுக்கு சாத்தியம்?
A மற்றும் B என இரண்டு நபர்களை எடுத்துக் கொள்வோம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக இருக்கின்றனர். A என்பவர், B-க்கு எதிராக செய்வினை எதையோ செய்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம்.
இந்நிலையில் B வீட்டில் ஒரு விஷேட நிகழ்ச்சி தற்செயலாக நடைபெறுகிறது. ஊர் வழக்கப்படி, B ஊரிலுள்ள அனைவரையும் அந்த விஷேடத்துக்கும் அதைச் சார்ந்த விருந்துக்கும் அழைக்கிறார். அந்த விஷேடத்தில் A கலந்து கொண்டாலும் அவர் அந்த விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட மாட்டார்.
ஏன் அப்படி?
ஏவல், பில்லி சூனியம் அனைத்தும் எதிரிகளிடத்தில் மட்டுமே வேலை செய்யும்.
கொடுத்த உணவை சாப்பிடும் பட்சத்தில், எதிரித் தன்மை முறிந்து விடும். அந்நிலையில் B-க்கு எதிராக A வைத்த செய்வினையும் பலமிழந்து முறிந்து விடும்.
இப்படி நமக்கு எதிராக ஏவல் செய்தவருக்கு, விருந்து கொடுத்துதான் அவரிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமா?
ஒருவர் நம்மை எதிரியாக எண்ணிக் கொள்ளலாம். அதற்காக நாம் அவரை எதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டுமா என்ன? நாம் அவரை எதிரியாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் மட்டும் போதுமா ?
அது மட்டும் போதாது. அவரை நமது அன்புக்கு உரியவராக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் மீது நாம் அன்பு காட்ட வேண்டும்.
அன்பைக் காட்டுதல் என்றால் என்ன?
நம்மிடம் இருக்கும் அன்பை, அவர் மீது செலுத்த வேண்டுமா?
அன்பு என்றால் என்ன?
அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று கூறுவதைக் கேட்டிருப்போம்.
அன்பு என ஒன்று எப்போதும் நம்மிடம் இருப்பது போலவும் அதை நாம் எவரிடம் வேண்டுமானாலும் காட்டலாம் என்பது போலவும் பலரும் கூறுகின்றனர்.
உண்மையில் அப்படி எதுவுமே கிடையாது.
நமது குடும்பத்தில் உள்ளவர்கள் மீதும், நமது நண்பர்கள் மீதும் நாம் அன்பு செலுத்துகிறோம் என்றால் அதன் பொருள் என்ன?
அவர்கள் நமக்கு நல்லது மட்டுமே செய்வார்கள் என்றும், அவர்கள் நம்முடைய நன்மையின் மீது அக்கறை கொண்டவர்கள் என்றும் நாம் அவர்களைப்பற்றி எண்ணுகிறோம். அதனால் நமக்கு அவர்கள் மீது ஓர் ஈடுபாடு ஏற்படுகிறது. அந்த ஈடுபாட்டு உணர்வுக்குப் பெயர்தான் அன்பு.
நாம் அவர்களைப்பற்றி நல்லவிதமாக எண்ணும் தோறும், இந்த அன்பு என்பது ஒரு ரியாக்ஷன் ஆக நமக்குள் ஏற்படுகிறது.
அன்பு என்பது இப்படி தற்காலிகமாக வந்து செல்லும் ஒரு ரியாக்ஷன் மட்டுமே.
அது நிரந்தரமான ஓர் அமைப்பு அல்ல.
நம்மை எதிரியாக எண்ணிக் கொள்பவர் நம்மைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளலாம். ஆனால் அவர் நலமாக இருக்கவேண்டும் என்றும் அவருக்கு நாம் நல்லவைகளையே செய்ய வேண்டும் என்றும் நாம், நாமாகவே எண்ணிக் கொள்வோமேயானால்,
- நம்மையறியாமலேயே நமக்கு அவர் மீது அன்பு ஏற்பட்டுவிடும்.
இந்நிலையில், அவர் நம்மீது எத்தனை ஏவல் செய்தாலும் அவற்றால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
அது மட்டும் அல்ல.
நீங்கள் ஒரு மரத்தை நோக்கி ஒரு கல்லை எறிந்தால் அந்தக் கல் அந்த மரத்தை சேதப்படுத்துகிறது.
ஒரு வேளை உங்கள் குறி தவறிவிட்டால், உங்கள் கல் அந்த மரத்தைத் தாக்காது. அது எதையுமே தாக்காமல் பலமிழந்து போய்விடும்.
ஆனால் இந்த ஏவல் மற்றும் பில்லி சூனியத்தின் கதையே வேறு.
ஒருவர் உங்களுக்கு எதிராக இத்தகைய ஏவல்களில் ஈடுபடுவதாக வைத்துக் கொள்வோம்.
நீங்கள் அவர்மீது அன்பு செலுத்தும் பட்சத்தில், அந்த ஏவல் உங்களைத் தாக்காது.
அதன் பிறகு அந்த ஏவல் என்ன ஆகும்?
வீசிய கல் பலமிழந்து விழுந்ததைப் போல் ஆகிவிடுமா?
அப்படி ஆகாது. பிறகு அது என்ன ஆகும்?
அப்படியே அது சுற்றிவந்து, அது எங்கிருந்து புறப்பட்டதோ அங்கேயே வந்து சேர்ந்து விடும்.
அது மட்டும் அல்ல. அவர் என்ன தீங்கினை ஏற்படுத்துவதற்காக ஏவினாரோ அந்தத் தீங்கினை, ஏவல் செய்த அவருக்கே ஏற்படுத்திவிடும்.
நாம் ஒரு கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வதாக வைத்துக் கொள்வோம்.
அங்கு என்னவெல்லாம் நிகழ்கின்றன?
இறைவனுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. நீங்களும் பூஜையில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு உங்களுக்கு வேண்டியவைகளைப் பிரார்த்திக்கிறீர்கள்.
அந்நிலையில் என்ன நிகழ்கிறது?
இறைவன் உங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு அருள் புரிகிறாரா?
இறைவன் மற்றும் பூஜைகள் அனைத்தும் வெறும் கண்ணாடி மட்டுமே.
உங்கள் அடிமனம் மற்றும் ஆழ்மனதினுள் புதைந்து கிடக்கும் உங்களது சக்திகளே அந்தக் கண்ணாடியில் பிரதிபலித்து உங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றன.
அனைத்து சக்திகளும் உங்களிடமிருந்தே புறப்படுகின்றன.
நீங்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே தெய்வீக சக்திகளும் பலம்பெறும்; தீய சக்திகளும் பலம்பெறும்.
நல்லவற்றையே எண்ணுங்கள் நல்லவையே நிகழ்ந்திடும்.
தொடர்புக்கு: வாட்ஸப் - 8608680532
- மா.ரா. அரசு பச்சையப்பன் கல்லூரியில் முப்பத்தைந்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
- கடந்த கால இதழ்கள் தமிழுக்குக் கிடைத்த அபூர்வமான சொத்து என்றும் அவர் குறிப்பிடுவதுண்டு.
*தமிழறிஞரான காலஞ்சென்ற மா.ரா. அரசுவைப் பார்த்தவர்கள் இப்போதும் அவரது வசீகரமான தோற்றத்தை மனத்தில் நினைத்து மகிழ்வார்கள். கம்பீரமாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் போல் இருப்பார் அவர். மாநிறம். சுருள் முடி. களையான முகம். நல்ல உயரம்.
ராஜாவுக்கேற்ற உடைகளை உடுத்தச் சொல்லிக் கையில் ஒரு வாளையும் கொடுத்துவிட்டால் அவர் ராஜாவே தான். மா.ரா. அரசு அல்ல, மாறா அரசர் என்று தோன்றும். எல்லோரிடமும் பிரியம் செலுத்தி, அன்பு மயமாக வாழ்ந்த உண்மையான தமிழறிஞர் அவர். அவர் யாரையும் வெறுத்ததில்லை. அவரையும் யாரும் வெறுத்ததில்லை.
அவரது மாணவர்கள் பலர் அவரை உயிருக்குயிராக நேசித்தார்கள். அவர் பேராசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னாலும், அவரைச் சுற்றி அவர்மேல் அன்பு செலுத்தும் மாணவர் கூட்டம் ஒன்று எப்போதும் இருந்தது. பல மாணவர்கள் அவரை தெய்வம்போல் கருதினார்கள்.
மா.ரா. அரசு பச்சையப்பன் கல்லூரியில் முப்பத்தைந்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர். தொடக்கத்தில் தம் தந்தையாரான தமிழறிஞர் மா. இராசமாணிக்கனாரைப் போல் வரலாற்றுத் துறையில் ஆர்வமுடையவராக இருந்தார். மா.ரா.அரசுவின் அண்ணன் மா.ரா. இளங்கோவன் இதழியலில் ஆர்வம் கொண்டவர். இளங்கோவன் காலமான பிறகு அரசுவுக்கு இதழியலில் ஆர்வம் கூடியது.
பின்னர் வரலாற்றுத் துறையை விட்டுவிட்டு முழுமையாகத் தம்மை இதழியல் துறையில் ஈடுபடுத்திக் கொண்டார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் சேர்ந்து இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், தமிழ் ஆய்வு இதழ்கள், பொதுவுடைமை இயக்க இதழ்கள், மகளிர் இதழ்கள், தமிழ் இலக்கிய இதழ்கள் என்பன போன்ற தலைப்புகளில் பத்துக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை வெற்றிகரமாக நடத்தினார்.
முக்கியமான பல அறிஞர்களை அழைத்து அந்தக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரை வாசிக்கச் செய்தார்.
அப்படி வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் ஒன்றைக் கூட விட்டுவிடாமல் தொகுத்து நூல்களாக ஆக்கி வெளியிட்ட பெருமையும் அவருக்கு உண்டு. அவர் வெளியிட்ட இதழியல் சார்ந்த தொகுப்புகள் ஒவ்வொன்றும் எண்ணற்ற ஆய்வுத் தகவல்களைத் தாங்கிய தமிழின் காகிதப் புதையல்கள்.
அந்த ஆய்வு நூல்களைக் கொண்டு வருவதற்காக அவர் உழைத்த உழைப்பு நினைக்க நினைக்க பிரமிப்பைத் தருவது. ஒவ்வொரு தொகுப்பு நூலையும் உருவாக்க இரவு பகல் பாராமல் உழைத்தார்.
தம் உடல் நலனைக் கூடப் புறந்தள்ளிக் கருமமே கண்ணாக அவர் உழைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். எழுத்துப் பிழை இல்லாமல் நூல்கள் வெளிவர வேண்டும் என்பதில் தனிப்பட்ட அக்கறை காட்டினார்.

தமிழுக்கு அவரின் இதழியல் தொடர்பான தொகுப்பு நூல்கள் ஒவ்வொன்றும் பெரும் கொடையாக அமைந்துவிட்டன. இனியொருவர் நினைத்தாலும் அத்தகைய சாதனையைச் செய்ய முடியாது என்று சொல்லுமளவு அவரது இதழியல் ஆய்வுச் சாதனை சிகரத்தைத் தொட்டுவிட்டது.
அந்தத் தொகுப்புகள் இல்லாவிட்டால் மறைந்துபோன பல பழைய தமிழ் இதழ்களைப் பற்றிய வரலாறே நமக்குக் கிட்டாமல் போயிருக்கும். ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய மாபெரும் பணியைத் தனியொரு மனிதராக இருந்து வெற்றிகரமாகச் செய்து முடித்தார் மா.ரா. அரசு என்றுதான் சொல்ல வேண்டும்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் மக்களிடையே விடுதலை உணர்ச்சியைத் தோற்றுவிக்கும் வகையில் வெளிவந்த இதழ்கள் மீது மா.ரா. அரசுக்கு மட்டற்ற மதிப்பிருந்தது. சமரசம் செய்து கொள்ளாமல் அத்தகைய இதழ்களை நடத்திய அன்றைய இதழாசிரியர்களை அவர் மனமாரப் போற்றினார்.
விடுதலைப் போராட்டக் காலத்திலும் அதன் பின்னரும் வெளிவந்த இதழ்களே அந்தந்தக் காலத்துத் தமிழ் மக்களின் உண்மையான மனப்போக்கை நாம் புரிந்துகொள்ள உதவும் காலக் கண்ணாடிகளாகத் திகழ்கின்றன என்று அவர் சொல்வதுண்டு. கடந்த கால இதழ்கள் தமிழுக்குக் கிடைத்த அபூர்வமான சொத்து என்றும் அவர் குறிப்பிடுவதுண்டு.
இன்றைய இதழ்கள் அன்றைய இதழ்கள் காட்டிய அதே பாணியிலேயே சமரசம் செய்து கொள்ளாமல் நாட்டு நலன், மொழி நலன் போன்றவற்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தங்கள் பணியைத் தொடர வேண்டும் என அவர் விரும்பினார். மா. இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம் என்று தம் தந்தை பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார். அந்த அமைப்பின் மூலம் இதழாளர் இராஜாஜி என்னும் ஆய்வு நூலை வெளியிட்டார். தவிர மாணவர்களுக்கான இதழ் ஒன்றையும் வெளியிட்டுவந்தார்.
தொடர்ந்து பல இலக்கியக் கூட்டங்களை நடத்திவந்தார். அவர் ஏற்பாடு செய்த கூட்டங்களுக்கு சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், பிரசண்ட விகடன் ஆசிரியரான முதுபெரும் எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன், இலங்கைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோரெல்லாம் வருகை தந்தார்கள்.
வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சமகால தமிழ் இலக்கிய ஆய்வுகள் பலவற்றை வெளிக்கொண்டு வந்த பெருமை அவருக்கு உண்டு. வ.உ.சி. பற்றிய ஆய்வே அவருக்கு முனைவர் பட்டம் பெற்றுத் தந்தது. அவரது ஆய்வேட்டில், ஆய்வைப் போலவே அதற்கு அவர் ஆதாரமாகக் காட்டும் அடிக் குறிப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
மா.ரா.அரசு, வ.உ.சிதம்பரனாரின் தமிழ்ப் பணிகள் என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாதமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வ.உ.சி. பற்றிய நூலை எழுதியவரும் இவர்தான்.
ஏராளமான புத்தகங்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் அவருக்கிருந்தது. தமது வருமானத்தை மீறி அவர் நூல்களை வாங்கினார்.
வெறுமே புத்தக சேகரிப்புக்காக வாங்கும் புத்தகங்கள் அல்ல அவை. ஒவ்வொன்றையும் படித்துக் குறிப்பெடுப்பார். முக்கியமான வரிகளைத் தாம் படித்த புத்தகங்களில் கோடிட்டு வைத்திருப்பார். இதெல்லாம் தம் தந்தை மா. இராச மாணிக்கனாரிட மிருந்து தாம் கற்றுக் கொண்ட பழக்கம் என்று அவர் சொல்வதுண்டு.
பேராசிரியராகப் பணிபுரிந்து அதன் மூலம் பற்பல தமிழ் அறிஞர்களை உருவாக்கிய பெருமையும் உள்ளவர். அவ்வை நடராசன், இ. சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பல முதல்நிலைத் தமிழறிஞர்களின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றவர்.
அவரிடம் பத்திரிகைக்காகவோ தொகுப்பு நூல்களுக்காகவோ யாரேனும் கட்டுரை கேட்டால் சிரத்தையுடன் எழுதிக் கொடுப்பார். அந்தக் கட்டுரையை எழுதுவதற்கென்று பல நாட்கள் உழைப்பார். கட்டுரைக்கான சான்றாதாரப் படங்களையும் கட்டுரையுடன் இணைத்து அனுப்புவார்.
அந்தக் கட்டுரை எந்தப் பத்திரிகையில் வெளிவந்தாலும் எந்தத் தொகுப்பு நூலில் இடம்பெற்றாலும் தனித்த கம்பீரத்துடன் காட்சி தரும்.
அவர் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட. நல்ல தயாரிப்புடன் வந்து மேடையில் சொற்பொழிவாற்றக் கூடியவர். கையில் குறிப்பேதும் இல்லாமல் ஒருமணி நேரத்திற்கும் மேல் பேசும் ஆற்றல் பெற்றவர்.
அவருடைய மேடைப் பேச்சிலும் உரையாடலிலும் நாகரிகமான மெல்லிய நகைச்சுவை இழையோடும். பகட்டான அலங்கார வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு, இயல்பாக அருகே அமர்ந்து உரையாடுவதுபோல் மேடையில் பேசக் கூடியவர். எண்ணற்ற இலக்கிய மேடைகள் அவர் பேச்சால் பெருமை பெற்றிருக்கின்றன.
மாபெரும் தமிழறிஞர் என்றாலும் இலக்கியக் கட்டுரைகளை விடவும் அதிகம் இதழியல் சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில்தான் ஆர்வம் காட்டினார். மா.ரா.அரசுவின் நூல்கள் அனைத்தும் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
அவரது குடும்பத்தில் அவர் தமிழ் அறிஞராக இருந்ததில் வியப்பேதும் இல்லை. அவர் குடும்பம் முழுவதுமே தமிழ் அறிஞர்களைக் கொண்ட குடும்பம்.
தந்தை மா. இராசமாணிக்கனார் பற்றித் தமிழுலகில் அறியாதவர்கள் இல்லை. மா.ரா. அரசுவின் சகோதரர் இரா. கலைக்கோவன் தொல்லியல் ஆய்வில் தடம் பதித்த மருத்துவர்.
இன்னொரு சகோதரரான காலஞ்சென்ற இளங்கோவன் இதழியல் ஆய்வில் நாட்டமுடையவர். அவரிடமிருந்தே இவருக்கும் இதழியல் நாட்டம் தோன்றியது. இளங்கோவனின் மனைவி திருமதி புனிதவதி இளங்கோவன் சென்னை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர்.
தமது தெய்வத்துள் தெய்வம் என்ற மகாசுவாமிகள் பற்றிய நாடகத்தின் மூலம் தமிழ் நாடகத் துறையில் தடம் பதித்திருக்கும் இளங்கோ குமணன், மற்றும் பிரபல திரைப்பட நடிகர் குமரவேல் இருவரும் புனிதவதி இளங்கோவனின் புதல்வர்கள்.
மா.ரா. அரசுவின் மனைவி திருமதி திரிபுரசுந்தரி, ராஜாஜியின் இதழியல் பணிகளை ஆய்வு செய்த ஆய்வாளர். ராஜாஜி ஆங்கிலக் கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்வதில் ஆர்வம் காட்டினார் என்பது போன்ற யாரும் அதிகம் அறியாத அரிய செய்திகளெல்லாம் அவர் ஆய்வின் மூலம் வெளிப்பட்டன.
ராஜாஜி நடத்திய விமோசனம் என்ற பத்திரிகை முழுமையாகத் தன்னை மதுவிலக்குக் கொள்கைக்கு அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகை. விமோசனம் பத்திரிகை குறித்து ஆய்வு செய்ததோடல்லாமல், அதன் பழைய இதழ்களைத் தொகுத்து ஒரு நூலாகவும் வெளியிட்டிருக்கிறார் திருமதி திரிபுரசுந்தரி. மா.ரா. அரசு எத்தனையோ மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தாலும் வாழ்நாள் முழுதும் தம்மை ஒரு மாணவராகவே கருதி வந்தார். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக எதையேனும் கற்றுக்கொள்ள அவர் தயங்கியதே இல்லை. மாபெரும் சாதனையாளராக அவர் விளங்கியதற்கு அவரின் இந்தப் பண்பு ஒரு முக்கியக் காரணம். தாம் வாழ்ந்த காலத்தில் தாம் செய்த இதழியல் ஆய்வுப் பணிகள் மூலம் தமிழில் ஒரு நிலைத்த முத்திரையைப் பதித்துள்ளார் தமிழறிஞர் மா.ரா. அரசு.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail






