என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • முழுமனம் என்றால் என்ன என்பதை நன்றாகப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
    • நமது உணர்மனதுடன் முழு மனதும் இணைந்து கொள்ளும்.

    முழுமனம் என்பது என்ன? உணர் மனம் என்பது என்ன என்பதைப் பார்த்து வருகிறோம்.

    நிச்சயமற்ற தன்மையுடன், தடுமாற்றத்தோடு செயல்படுவது தான் உணர் மனம் ஆகும். தடுமாற்றம் இல்லாமல், திட மனதுடனும் முழு ஈடுபாட்டுடனும் செயல்படுவது தான் முழு மனம் ஆகும்.

    திருடனுடைய மகன் திருடுவதற்கு கற்றுக் கொடுக்கச் சொல்லி தகப்பனைக் கேட்டான்.

    இருவரும் சேர்ந்து ஒரு பெரிய மாளிகையினுள் நுழைந்தார்கள். பெரிய திருடன் கள்ளச் சாவிகளைக் கொண்டு இரும்புப் பெட்டியைத் திறந்தான். மகனை உள்ளே அனுப்பி நகைகளையும் பணத்தையும் மூட்டையாகக் கட்டச் சொன்னான்.

    மகனும் இரும்புப் பெட்டியினுள் நுழைந்து மூட்டையாகக் கட்டினான்.

    அந்நிலையில் அந்தத் தகப்பன், மகனை இரும்புப் பெட்டியினுள் வைத்துப் பூட்டிவிட்டு தான் மட்டும் தப்பிச் சென்றுவிட்டான்.

    உள்ளே மாட்டிக் கொண்ட மகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

    பொழுதும் விடிந்துவிட்டது. வீட்டில் உள்ளவர்கள் நடமாட ஆரம்பித்துவிட்டார்கள்.

    இரும்புப் பெட்டி இருந்த அறையை சுத்தம் செய்ய வேலைக்காரி ஒருத்தி வந்தாள்.

    பெட்டியினுள் மாட்டிக் கொண்டிருந்த மகனும், ஒரு பூனை மாதிரி குரல் கொடுத்துக் கொண்டே பூனையைப் போல் இரும்புப் பெட்டியைப் பிராண்டினான்.

    எஜமானி அம்மாள் தெரியாத்தனமாக பூனையை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டதாக வேலைக்காரி நினைத்தாள்.

    சாவிக் கொத்தும் இரும்புப் பெட்டியிலயே தொங்கிக் கொண்டிருந்தது.

    பூனையை விடுவிக்கும் நோக்கத்தில் அவள் பெட்டியைத் திறந்தாள்.

    அதனை பயன்படுத்திக் கொண்ட மகனும், மூட்டையோடு தப்பி ஓடி வீடு வந்து சேர்ந்தான்.

    "இப்படியா என்னைக் கொல்லப்

    பார்ப்பது?" என்று கேட்டு தகப்பனை திட்டு திட்டு எனத் திட்டினான்.

    தகப்பன் அதனை சட்டையே செய்யாமல்

    மிக அமைதியாகக் கூறினான்: "இப்படித்தான் அப்பா திருட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும்!".

    எதற்காக இந்தக் கதை?

    திருடனுடைய மகன் நெருக்கடியில் மாட்டிக் கொண்டான். அந்நிலையில் இந்த முழுமனம் செயல்பட்டதால் ஏதோவொரு உபாயம் செய்து தப்பிச் சென்றான்.

    அந்நிலையில் முழு மனமே

    Presence of mind ஆக வேலை செய்துள்ளது.

    இந்த முழுமனம் மனிதர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அல்லது மிருகங்களுக்கும் இது பொருந்துமா?

    அப்போது நான் ஏழாவது வகுப்பு

    படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீடு ஒரு கிராமத்துத் தோட்டத்தில் இருந்தது. எங்கள் தோட்டத்தில் நாய் ஒன்றை கட்டாமல் விட்டிருப்போம்.

    ஒரு நாள் காலை பள்ளிக்கூடம் செல்லும் போது அதுவும் என்னோடு வர ஆரம்பித்தது. விரட்டிப் பார்த்தேன். அது என்னையும் முந்திக்கொண்டு எனக்கு முன்னால் போக ஆரம்பித்தது.

    நான் பள்ளிக்கூடம் போகும் வழியில் சில தெருக்கள் உண்டு. அங்கே பல தெரு நாய்கள் உண்டு. நமது நாயைக் கண்டால் விடாது.

    நான் நினைத்த படியே முதல் தெருவினுள் நுழையும் போது பத்துப் பதினைந்து நாய்கள் கொலை வெறியோடு பாய்ந்து வந்தன.

    நமது நாய் தொலைந்தது என்றுதான் எண்ணினேன். ஆனால் அங்கு நடந்தது வேறு.

    ஏதாவது ஒரு விசேஷத்தின் போது உங்களுடைய பழைய நண்பர்களை பல வருடங்கள் கழித்து சந்திக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.

    என்ன செய்வீர்கள்?

    "நீ நல்லா இருக்கிறாயா? நீ நல்லா இருக்கிறாயா?" என்று ஒவ்வொருவரையும் பார்த்து கேட்பீர்கள் அல்லவா?

    அப்படி நமது நாயும் ஒரு வகை அன்பு ஒலியை ஏற்படுத்திக்கொண்டு, வாலையும் ஆட்டியவாறே அந்த நாய்களுக்குள் வலம்வர ஆரம்பித்தது.

    கொலைவெறியோடு வந்த நாய்கள் அனைத்தும் குழப்பமடைந்து விட்டன. அவை கடிப்பதை மறந்து வெறுமனே உறுமிக்கொண்டிருந்தன.

    அந்த நாய்களுக்கு இடையே வலம் வந்த நமது நாய், ஒரு இடைவெளியைக் கண்டுபிடித்து ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து நமது தோட்டத்துக்கே போய்ச் சேர்ந்து விட்டது.

    அந்த நாய்க்குக் கூட முழுமனம் வேலை செய்துள்ளது.

    முழுமனம் என்றால் என்ன என்பதை நன்றாகப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இதுதான் நம்முடைய வாழ்க்கை முழுவதும் நம்மோடு வந்து நமக்கு உதவிசெய்யப்போகிறது.

    இரவு நேரத்தில் நாம் ஒரு புதர் நிறைந்த பகுதியில் நடந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

    நல்ல இருள். வெளிச்சம் எதுவும் இல்லை. பாதை குண்டும் குழியுமாக உள்ளது.

    தடுமாற்றத்துடனேயே நடந்து செல்கிறோம். இடறி விழுந்து விடாமல் இருக்க, பார்த்துப் பார்த்து கால்களை வைக்கிறோம். புதர் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக கைகளாலும் தடவிப் பார்த்தபடியே நடக்கிறோம்.

    உதவிக்கு இறைவனையும் பிரார்த்தனை செய்து கொள்கிறோம். எவ்வளவுதான் கவனமாக நடந்தாலும், எங்கேயோ ஓரிடத்தில் தடுமாறி விழுந்து விடுகிறோம்.

    இனி நாம் சுதாரித்துக் கொண்டு எழுந்திட வேண்டும். இப்படி எழும்புவதா, அப்படி எழும்புவதா என்று தடுமாறிக் கொண்டிருக்க மாட்டோம். நம்மையறியாமலேயே எழுந்து விடுவோம்.

    எழுந்து கொண்ட பிறகுதான் எழுந்ததே தெரியும்.

    அப்படி எழுந்து கொள்வதற்கு இறைவனைக் கூட கூப்பிட மாட்டோம்.

    முதலில் நாம் தடுமாறிக் கொண்டு நடக்கும் போது உணர்மனம் மட்டுமே வேலை செய்துள்ளது.

    உணர் மனம் எப்போதும் தடுமாற்றத்துடனேயே இருக்கும்.

    நாம் எழுந்து கொள்ளும்போது முழுமனம் வேலை செய்துள்ளது. அங்கு தடுமாற்றம் எதுவுமே இருக்காது.

    நாம் ஒரு பைக்கில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம். ஓர் இடத்தில் வலது பக்கமாக நாம் திரும்பவேண்டும். நமக்கு எதிராக அந்தப் பக்கமிருந்தும் பைக் ஒன்று வேகமாக வருகிறது.

    நாம் அவருக்கு ஒதுங்க வேண்டும். அவர் நமக்கு ஒதுங்க வேண்டும்.

    நம்மையறியாமலேயே ஒருவருக்கு ஒருவர் சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொள்வோம்.

    இங்கு அந்த முழுமனம் வேலை செய்துள்ளது.

    நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். நீங்கள் பணியாற்றும் பிரிவில் மட்டும் நூறு நபர்கள் வேலை பார்க்கிறார்கள்.

    உங்கள் நூறு நபர்களுக்கும் ஒரு மேலாளர் இருக்கிறார். அவரோ ஒன்றாம் நம்பர் சிடுமூஞ்சி.

    நீங்கள் விடுப்பு ஏதாவது எடுக்கவேண்டும் என்றால் அவர்தான் பரிந்துரை செய்யவேண்டும். ஒரேயொரு நாள் விடுப்பு கேட்டாலே அவர் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிப்பார்.

    இப்போது உங்களுக்கு பத்து நாட்கள் விடுப்பு தேவைப்படுகிறது.

    அவரிடம் நீங்கள் விண்ணப்பத்தை நீட்டினால் என்ன ஆகும்?

    அந்நிலையில் நீங்கள் எப்படி செயல்படுவீர்கள்?

    உங்களிடம் உணர் மனம் செயல்பட்டால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

    அதே சமயம் உங்கள் முழுமனம் செயல்படுமேயானால், பத்து நாட்கள் விடுப்பு கூட பரிந்துரை செய்யப்பட்டுவிடும்.

    அந்தத் தருணத்தில் நீங்கள் எப்படி செயல்படுவீர்கள் என்பதை முன்கூட்டியே

    திட்டமிட முடியாது. ஆனால் தேவையான நேரத்தில் தேவையானதைக் கூறி சாதித்து விடுவீர்கள்.

    முப்பது படிகள் உள்ள ஒரு படிக்கட்டில் நீங்கள் இறங்குவதாக வைத்துக் கொள்வோம்.

    அது ஒரு நேரான படிக்கட்டு. நீங்கள் இரண்டாவது மூன்றாவது படிகளில் இறங்குகிறீர்கள். நீங்கள் சேர்ந்திட வேண்டியது முப்பதாவது படி. அந்த முப்பதாவது படியும் உங்கள் கண்களுக்கு நேரடியாகவே தெரிகிறது.

    உங்கள் இரண்டு கைகளிலும் பொருட்களை வேறு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கைப்பிடிச் சுவரைக் கூட உங்களால் பிடிக்கமுடியவில்லை.

    இப்போது உங்களுடைய கவனம் எதன் மீது இருக்கவேண்டும்?

    நீங்கள் அடைய வேண்டிய முப்பதாவது படியிலா?அல்லது நீங்கள் இறங்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது படியிலா?

    நீங்கள் இறங்கும் படிகளில் உங்களது முழுக் கவனமும் இருந்தால் மட்டுமே நீங்கள் பாதுகாப்பாக இறங்க முடியும்.

    அதனால் நீங்கள் அடைய வேண்டிய முப்பதாவது படியின் மீதுள்ள ஈடுபாட்டை சற்று நேரத்துக்கு தவிர்த்தாக வேண்டும்.

    நாம் நமது வாழ்க்கையிலும் சிக்கலான பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றோம். அவை வெற்றிகரமாக முடியும் என்ற உத்திரவாதம் எதுவும் கிடையாது.

    நாம் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தும் நிகழ் காலத்தில் உள்ளன. ஆனால் அதன் விளைவான முடிவு மட்டும் எதிர்காலத்திலேயே உள்ளது.

    இப்போது உங்களுடைய கவனம் எதன் மீது இருக்க வேண்டும்?

    நிகழ்காலத்தில் நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களிலா?

    அல்லது நீங்கள் அடைய வேண்டிய முடிவுகளிலா?

    அடைய வேண்டிய முடிவுகள் சம்பந்தமான உங்கள் ஈடுபாடுகளை சற்றே தள்ளி வைத்தால்தான், செய்யவேண்டிய செயல்களுக்கு தேவையான ஈடுபாட்டை உங்களால் காட்ட முடியும்.

    அடைய வேண்டிய முடிவுகளை எப்படி தள்ளி வைப்பது. நமது செயல்களின் எதிர்காலத்தை எவ்வாறு தள்ளி வைப்பது?

    நமது செயல்களின் எதிர்காலத்தை - முடிவுகளை, ஆற்றல் மிகுந்த முழுமனதிடமோ அல்லது இறைவனிடமோ ஒப்படைப்பது ஒன்றுதான் சாத்தியமான வழியாகும்.

    பொறுப்பற்ற ஒருவரிடம் நமது வேலையை ஒப்படைத்தால் என்ன ஆகும்?அவர் அதை சரியாகச் செய்திடுவாரோ, மாட்டாரோ என்று நாம் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டியிருக்கும்.

    அதே சமயம் அந்த வேலையை, பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைத்திருந்தோம் என்றால் என்ன ஆகும்?

    நாம் அந்த வேலையையே சுத்தமாக மறந்து விடலாம். ஏனெனில் அந்த வேலையை ஏற்றுக் கொண்டவர் நம்மை விடவும் சிறப்பாக அந்த வேலையை செய்து முடித்து விடுவார்.

    அப்படி செயலின் விளைவை முழுமனதிடமோ அல்லது இறைவனிடமோ ஒப்படைப்பதனால் என்ன நடக்கிறது?

    இதனால் நாம் நமது முழு ஈடுபாட்டையும் நாம் செய்ய வேண்டிய செயல்களின் மீது காட்ட முடிகிறது.

    ஈடுபாட்டுடன் செயல்படும்போது நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும்.

    நாம் செய்யும் செயல்களில் ஈடுபாட்டுடன் செயல்படும்போது, நமது உணர்மனதுடன் முழு மனதும் இணைந்து கொள்ளும்.

    இவை அனைத்துக்கும் முதற்படியாக, நமது உணர்மனமானது, முழுமனம் என ஒன்று இருப்பதையும், அது நமக்கு உதவத் தயாராக உள்ளது என்பதையும் நம்ப வேண்டும்.

    தொடர்புக்கு: வாட்ஸ்அப் - 8608680532

    • குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை ஆணுடன் பங்கிட்டுக்கொள்ள பெண் வேலைக்குப் போகிறாள்.
    • உதிரப்போக்குக் காலமும், கர்ப்ப காலமும் இயல்பாக இருந்தாலே குழந்தைப் பேறும் இயற்கையாக அமையும்.

    பெண்கள் பூப்பெய்திய காலம் தொட்டு உதிரப்போக்கு நிற்கும் காலம் வரை தொடர் தொல்லைகளை அனுபவித்து வருகிறார்கள். அன்றாடக் கூலி வேலை செய்து வாழ்வினை ஓட்டும் குடும்பப் பெண்கள் இதனால் அடையும் இன்னல் சொல்லில் அடங்காதது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சர்க்கரை ஆலைக்காக கரும்பு வெட்டும் பருவத்தில் உதிரப்போக்கினால் வேலைக்கு வரவியலாது. அந்நாட்களில் கரும்பு வெட்டுப் பாதிக்கப்படுகிறதென்று மருத்துவ சோதனை என்ற பெயரில் சினைப்பையில் புற்றுநோயென்று அச்சுறுத்தி சினைப்பையையே அகற்றும் அவலம் நடந்தேறி வருகிறது. மேல்த்தட்டு வர்க்கப் பெண்களிடம் கூட இந்நாட்களில் உடல் உபாதைகளால் அளவு கடந்த கோபம் தலைக்கேறி விடுகிறது. இது உடலியல் தொடர்பான பிரச்சனை, தற்காலிகமானதுதான் என்பதைப் புரிந்து கொள்ளாத தம்பதியர் அந்நாட்களில் கோபத்தின் உச்சத்திற்கு சென்று நிரந்தர பிரிவிற்கான முடிவைக்கூட எடுத்து விடுகின்றனர்.

    ஐம்பதாண்டுகளுக்கு முன்னரும் கூட பெண்களின் உதிரப்போக்குக் காலத்தில் உபாதைகள் இருந்து வந்ததுதான். ஆனால் அன்று இத்தனை தீவிரமாக இருந்ததில்லை. இன்று இப்பிரச்சனை பெண்களுக்கு நிரந்தர தொல்லைகளாக மாறி விட்டதற்குக் காரணம் கடந்த வாரத்தில் பார்த்தது போல உடலுழைப்பு இன்மை, இடையறாத மூளை உழைப்பு, அதீத மனவழுத்தம் ஆகியவை ஆகும். அதனோடு மிக முக்கியமான காரணி உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் இன்மை.

    இரண்டு தலைமுறைக்கு முன்னர்வரை உதிரப் போக்குக் காலத்தை வீட்டிற்குத் தூரம் என்றனர். அம்மூன்று நாட்களும் அவர்களை இயல்பான வேலையில் ஈடுபடுத்துவதில்லை. உதிரப்போக்கு சீராக செல்ல வேண்டும் என்பதற்காக உடலின் வெப்பத்தைத் தணிந்திடாத வகையில் குளிக்க மாட்டார்கள். குறிப்பாகத் தலைக்குக் குளித்து உடல் குளிர்ந்து விடாமல் இயல்பான வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.

    இன்றோ நமது கல்வி முறை அதுவும் போட்டிக்கல்வி முறை பெண்களை அந்நாட்களில் ஓய்வெடுக்க அனுமதிக்காது. நிறுவனம் சார்ந்த வேலைக்குப் போகும் பெண்களையும் விடுப்பு எடுக்க அனுமதிக்காது. எனவே மேற்படி உதிரப்போக்கு சார்ந்த பிரச்சனைகளோடு வீட்டில் சிற்சிறு வேலைகளைக் கூடச் செய்யாது ஒதுங்கி இருந்த பெண்கள் வீட்டை விட்டு வெகுதொலைவுக்குச் செல்ல நிர்பந்திக்கிறது இன்றைய பொருள்சார்ந்த வாழ்க்கை முறை. விளைவு, குடும்பத்தின் ஆதார சக்தியான பெண் எப்போதும் தொல்லைக்குள், நிரந்தர நோய்மைக்குள் சிக்கிக் கொள்கிறாள்.

    இனப்பெருக்கத்திற்கு வெப்பம் – குளிர்மையும் சீரான வகையில் இருந்தாக வேண்டும். நிலப்பகுதியில் கூட எங்கே ஒரே சீரான வகையில் பொருத்தமாக அமைந்திருக்கிறதோ அங்குதான் பல்லுயிர்ப்பெருக்கமும் நிறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் மனித இனப்பெருக்கத்திற்கு ஆதார சக்திகளான ஆண் வெப்பம், பெண் குளிர்மை.

    ரத்தம் தான் வெப்பம். ஆணின் உடலியல்பு, உடலமைப்பு, உணவுத் தேர்வு, உடலியக்கம் ஆகிய அனைத்தும் போதிய ரத்தத்தை உருவாக்கிக் கொள்ளும் விதமாகவே அமைந்துள்ளது. ஆனால் இன்று மாறிவரும் உலகியல் போக்கு பெண்ணுடலுக்கும், அவள் இன்னொரு உயிரை உருவாக்குவதற்குரிய உடலமைப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்குப் பொருத்தமானதாக இல்லை. ஒரு பெண் பொதுவெளிக்கு வருவது பொருத்தமானது தான். பெண்ணானவள் நிர்வாகத்தில், பொருளுற்பத்தியில் பங்கெடுப்பது உலக வளமைக்குக் கூடுதல் நன்மை செய்யும் தான்.

    ஆனால் பெண், பொதுவெளிக்கு வரும் அதே நேரத்தில் அவளது உடலியல்பை, பிள்ளையைப் பெறுவதில் அவளுக்குள்ள கூடுதல் சுமையை சமூகம் கருத்தில் கொண்டாக வேண்டும். அவளுக்குப் போதிய ஓய்வினைத் தரக்கூடிய பெருமனது கொண்டிருக்க வேண்டும்.

    குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை ஆணுடன் பங்கிட்டுக்கொள்ள பெண் வேலைக்குப் போகிறாள். ஆனால் பெண்ணின் வீட்டு வேலைச் சுமையை ஆண் பங்கிட்டுக் கொள்கிறானா? அவ்வாறு பங்கிடுவது சரி என்று சமூகம் நினைக்கிறதா?

    பெரிய பெரிய உணவகங்களில், நட்சத்திர விடுதிகளில், ஆயிரமாயிரம் பேர் பங்கேற்கும் விருந்துகளில் ஆண் சமைப்பதைப் பெருமைப்படுத்தும் அதே சமூகம் தான், வீட்டுச் சமையலில் ஆண் ஈடுபடுவதை கேலிச் சித்திரமாக மாற்றுகிறது. மனைவியின் உடையை ஒரு டெய்லர் கடைக்குக் கொண்டு போவதைக் கூடக் கீழ்மைச் செயலாகக் கருதுகிறது.

    அவ்வளவு ஏன் உதிரப்போக்குக் காலத்தில் கெண்டைக்கால் நரம்பு இழுக்க எழக்கூடத் திராணியற்ற போதில் ஒரு ஆண் நாப்கின் வாங்கப் போனால் கூட அதனை கருப்புப் பையில் சுற்றி இரண்டாம் நபரது கண்ணில் படாத வகையில் ரகசியப் பொருளாகத் தருகிறது. அது இயற்கையானது தானே என்ற பார்வை நம்மில் யாருக்கும் தோன்றுவதில்லை.

    பெண்ணின் சினை முட்டை முதிர்ந்து வெளியேறி பெண்ணுடலின் ரத்தம் தூய்மை அடையாமல் இந்த உலகம் புத்துயிரைக் காண முடியாது. இந்த எளிமையான இயற்கை உண்மையை ஒப்புக் கொண்டால் நெருக்கடியான நேரத்தை சிரமமின்றிக் கடந்து விட முடியும்.

    பெண்களுக்குரிய தனித்துவமான உணவு முறை, விரதமுறை, வழிபாட்டு முறை எனப் பலவகையில் தம்மைப் பராமரித்துக் கொள்ள வாய்ப்பிருந்தது.

    இன்றைய நவீன வாழ்க்கை முறையில் ஒரு பெண் தனக்குரிய தனித்துவமான சிக்கலை உளப்பூர்வமாகப் பகிர்ந்துகொள்ளக் கூட வாய்ப்பில்லை. கூட்டுக்குடும்பம் இல்லை. அக்கம் பக்கத்தாருடன் பேச வாய்ப்பில்லை. ஊர்த்தெரு கூடி தமக்கான கொண்டாட்டங்களைக் களிக்க வாய்ப்பில்லை.

    குடும்பம், படிப்பு, வேலை, குழந்தைகள் பராமரிப்பு என இடையறாத கடப்பாடுகளுக்கு இடையே தன் மீது அக்கறை கொள்ளுதல் சுயநலமென்ற குற்றவுணர்வுக்கு உள்ளாகும் உளவியல் சிக்கலுக்குத் தள்ளப்பட்டுள்ளாள். எனவே தான் மேற்பூச்சான உடை, உதட்டுச் சாயம், க்ரீம் போன்றவற்றோடு தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்கிறாள். மற்றபடி ஆண்டுக்கணக்காக குடும்ப நெருக்கடியோடு உடல் சார்ந்த நெருக்கடிகளுக்குள்ளும் உழல்பவளாகவே இருக்கிறாள் பெண்.

    இன்றைய நெல் (அரிசி), பயிறு, இறைச்சி, பால் அனைத்தும் அவற்றின் உற்பத்தி முறையால் மூலாதார சத்துக்களை இழந்து விட்டன. இந்நிலையில் நம்முடைய பாரம்பரியமான தானிய வகைகளே பெண்ணுடலுக்கு உரிய தனித்துவமான சத்துக்களை வழங்குகின்றன.

     

    கடந்தவாரம் பார்த்த கேழ்வரகு மாவில் சமைக்கும் கூழ், புட்டு, பணியாரம் போன்றவற்றோடு சிமிலி உருண்டைகள் பெண்ணின் உதிரப்போக்குக் காலம் தொடங்கி கர்ப்ப காலம் வரை பெருநன்மைகள் அளிக்க வல்லவை. உதிரப்போக்குக் காலமும், கர்ப்ப காலமும் இயல்பாக இருந்தாலே குழந்தைப் பேறும் இயற்கையாக அமையும்.

    தமிழகத்தில் தானிய வகைகளில் அதிக நீர்ச்செலவின்றி விளைபவற்றில் கேழ்வரகிற்கு அடுத்த நிலையில் இருப்பது கம்பு. நம்முடைய நாட்டுக் கம்பு சிறுதானிய வகையைச் சேர்ந்தது தான். ஆனால் பசுமைப்புரட்சி என்ற சொல்லப்பட்ட 1960 களின் நடுப்பகுதியில் கலப்பின வீர்யக் கம்பு உருவாக்கப்பட்டது. அது பெருந்தானியம் என்று சொல்லுமளவு அளவில் பெரியதாகவும் ஆகிவிட்டது. அதேநேரத்தில் அதன் ஆதாரமான ஆற்றலும் குறைக்கப்பட்டு விட்டது. எனினும் அரிசியைக் காட்டிலும் அதிக சத்துக்கள் மிக்கவை தான் என்பதில் சந்தேகம் இல்லை.

    தானியங்களில் புரதச் சத்து நிறைந்துள்ள தானியம் கம்பு மட்டுமே. இதில் சுமார் 12 சதவீதம் புரதம் உள்ளது. போக கால்சியம், நியாமின், இரும்புச் சத்து, விட்டமின் பி' ஆகியவையும் நமது உடலுக்குப் பொருத்தமான வகையில் பொதிந்துள்ளது. உயிர்ப்பண்பு மிகுந்த கம்பு தானியத்தை உண்பதால் புத்துணர்ச்சி மிளிரும்.

     

    போப், 96293 45938

    கம்பு தானியத்தைக் கூழாகக் காய்ச்சுவதை விட கெட்டியாக கஞ்சியாகக் காய்ச்சி குழம்பு ஊற்றி உண்பார்கள் விவசாயப் பெருங்குடி உழைக்கும் மக்கள். கம்பங்கஞ்சியைக் காய்ச்சும் போதே மேலேட்டில் எண்ணை மிதக்கும். இந்த கொழுப்புத் தன்மை வாய்ந்த எண்ணை நம்முடைய ரத்தநாளங்களில் படியக்கூடிய கொழுப்பு அல்ல. எளிதில் கரையக்கூடிய (unsaturated) அமிலக் கொழுப்பு என்பதால் நாம் தொடர்ந்து கம்பு தானிய உணவுகளை உட்கொண்டாலும் கொழுப்பு சார்ந்த பிரச்சனைகள் உடலுக்கு ஏற்படாது. போக இந்த எண்ணைத் தன்மை நம்முடைய உடலுக்கு பளபளப்பைக் கொடுக்கக் கூடியதாகும். இலகுவான எளிதில் கரையக்கூடிய கொழுப்பு இறுகல் தன்மையற்ற நெகிழ்வுத் தன்மை உடைய பெண்ணுடலுக்கு மிகவும் ஏற்றதாகும்.

    இன்றைய நவீன சமையல் கலாச்சாரத்தில் கம்பு மாவினை இயந்திரத்தில் அரைத்து வைத்துக் கொண்டு தோசையாக ஊற்றி உண்பதே பரவலாக உள்ளது. தோசை மட்டுமாக அல்லாமல் பல்வேறு விதமான எளிய புதிய பலகார வகைகளுக்கு ஏற்றது தான் கம்பு. அதிலும் குறிப்பாக வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நீரிழப்பை ஈடுகட்ட வல்லது கம்பினை ஆதாரமாகக் கொண்ட உணவு வகைகளைப் பார்ப்போம்.

    தொடர்ந்து பார்ப்போம்...

    • மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு.
    • அனைவரின் வாழ்விலும் நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகள், இன்ப துன்பங்கள், நிறைந்து தான் இருக்கும்.

    "மனசத் தொட்டுச் சொல்லு" "மனசாட்சியோடதான் பேசுறியா? "நீங்க மனசு வச்சாப் போதும்" என்று பேச்சு வழக்கில் நாம் பல இடங்களில் பயன்படுத்துகிறோம். மனமே! நீ ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இதைத்தான் சிந்திக்க வேண்டும் என்று நம்மால் கட்டளை இட முடியுமா? உடலைக் கொண்டு வேலைகளை எளிதாகச் செய்யும் நம்மால், மனத்தை ஒருமுகப்படுத்துவதில் எத்தனை சிக்கல்கள்! ஆனால் உண்மையில் மனம் என்ற ஒன்று நம் உடலில் எங்கு உள்ளது? என்று சிந்தித்தோமேயானால், பல உண்மைகள் புரியும். மனம் என்றால் என்ன? என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் தருவீர்கள்?

    மனம் என்றால் என்ன?

    மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு. எண்ணங்கள் என்பது நாம் பார்ப்பவை, கேட்பவை, பேசுபவை, உணர்பவை ஆகியவற்றில் இருந்துதான் தோன்றுகின்றது. இதுவரை நம் வாழ்வில் எதிர்கொள்ளாதவற்றிலிருந்து எண்ணங்கள் வருவதில்லை. எனவே நம் மனம் என்பது, எண்ணங்களைக் கொண்டுதான் உருவாக்கப்படுகின்றது. பலதரப்பட்ட அறிவியல் வளர்ச்சிகள் உள்ள இக்காலத்திலும், மனம் என்பது ஒரு புரியாத புதிராகத் தானே உள்ளது.

    நம் எண்ணங்களில் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் என்ற இரண்டு வகைகள் உள்ளன. அன்பு, கருணை, பாசம், நேசம், காதல், மகிழ்ச்சி, மனநிறைவு, ஆர்வம், மனஉறுதி போன்ற நேர்மறை எண்ணங்களும், கோபம், வெறுமை, பற்றின்மை, பயம், குற்றஉணர்வு, மனச்சோர்வு, மனக்கசப்பு, தோல்வி, சோகம், பொறாமை, இயலாமை போன்ற எதிர்மறை எண்ணங்களும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.

    இப்போதுள்ள பரபரப்பான உலகத்தில், எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இதற்கு மாறிவிட்ட நம் வாழ்வியலும் ஒரு காரணம்தான். இதனால் சிலர் மனநிறைவை இழந்து தவிக்கிறார்கள். பலர் மனஅழுத்தம் அதிகரித்து, தம் தினசரி வேலைகளைக் கூட சரிவரச் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். மனஅழுத்தம் உள்ளதா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ள மன அழுத்தத்தினால் ஏற்படும் அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வு வேண்டும்.

     

    மனஅழுத்தத்தினால் ஏற்படும் அறிகுறிகள்:

    மனஅழுத்தம் தலை முதல் கால் வரை பல அறிகுறிகளைத் தோற்றுவிக்கிறது. அதில் மிக முதன்மையானவை இதோ,

    தலைவலி, தலைப்பாரம், முடி உதிர்தல், உடல் சோர்வு, செயல்களில் பிடித்தம் இல்லாமை, கழுத்து வலி, உடல் சதையில் இறுக்கம், தோள்ப்பட்டை வலி, நெஞ்சு வலி, நெஞ்சு படபடப்பு, உடலில் சதைகள் துடித்தல், பசியின்மை, மலம் வெளியேறுவதில் சிக்கல், உறக்கமின்மை, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகம் கோபப்படுதல், தலைசுற்றல்

    மற்றவர்களுடன் சரளமாகப் பேசத் தயங்குவது, அதிகச் சத்தம் கேட்டால் நெஞ்சுப் படபடப்பு, உடலுறவில் நாட்டமின்மை, உடலில் ஒரு சில பகுதிகளில் அழுத்துவது போன்ற உணர்வு உடல் வெலவெலத்து, அதிக அளவில் வியர்ப்பது போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இவை அனைத்துமே ஒருவருக்கு வருவதில்லை இதில் ஏதேனும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் ஏற்படலாம்.

    எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த மனத்தோடு, நேர்மறையான வாழ்க்கை எப்படி வாழ முடியும்? எண்ணங்கள் எப்படியோ அப்படித் தானே வாழ்க்கையும். சிலர் மனநிம்மதி இல்லாமல், எந்நேரமும் மன அழுத்தத்துடன் இருப்பதனால், வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் சிக்கித் தவிக்கிறார்கள்.

     

    மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.

    வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள் யாவை?

    நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய், மன அழுத்த நோய், மனச்சோர்வு நோய் என்று கூறிக்கொண்டே போகலாம்.

    அனைவரின் வாழ்விலும் நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகள், இன்ப துன்பங்கள், நிறைந்து தான் இருக்கும். துன்பங்கள் மற்றும் எதிர்மறை நிகழ்வுகளை மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பதால், வாழ்வில் எதிர்கொள்ளும் மகிழ்ச்சியான தருணங்களை நாம் அனுபவிக்க மறந்து விடுகிறோம். கடந்த காலத்தின் தோல்விகளை மட்டுமே சிந்திப்பதால், எதிர்காலத்தில் வாழ்க்கைக்குத் தேவையான செயல்களைச் செய்ய முற்படாமல் விட்டு விட்டு, எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடுகிறோம். முதலில் நீங்கள் மனஅழுத்தத்துடன் இருக்கிறீர்களா? இல்லையா? என்பதைக் கண்டறிய வேண்டும்.

    மன அழுத்தத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

    மனம் என்ற ஒன்று உடலின் இன்ன பகுதியில் தான் உள்ளது என்பதை வரையறுத்துக் கூற முடியாதபோது இதைப் ஆய்வு செய்து எவ்வாறு கண்டறியமுடியும்? அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து உங்கள் எண்ணங்களில் எது மேலோங்கி உள்ளது? எது ஆதிக்கம் செலுத்துகிறது? என்பதைக் கண்டறியுங்கள். இப்படி உங்கள் எண்ணங்களை நீங்கள் கவனித்தாலே போதும். நீங்கள் மன அழுத்தத்துடன் இருக்கிறீர்களா? இல்லையா? என்பது உங்களுக்கே புரியும். அப்படி மனஅழுத்தம் இருப்பின், எதனால் ஏற்பட்டது? அதற்கு தீர்வு ஏதேனும் உண்டா? என்பதைச் சிந்திக்கவேண்டும்.

    முதலில் உங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை ஒரு தாளில் எழுதுங்கள். எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றுவது மட்டுமே, நாம் மகிழ்ச்சியாகவும், நோய்நொடி இல்லாமலும் வாழ்வதற்கான ஒரே வழி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

    எடுத்துக்காட்டுக்கு ஒரு பாத்திரத்தில் உள்ள காற்றை வெளியே அகற்ற, எப்படி அரிசி மற்றும் பிறதானியங்கள் அல்லது தண்ணீர் கொண்டு நிரப்புகிறோமோ, அது போன்று, தினம் தினம் நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொண்டே வரும்போது, எதிர்மறை எண்ணங்கள் நம்மைவிட்டு நீங்கிவிடும் அல்லது குறைந்துவிடும். அதற்கான செயல்திட்டங்களை நமக்கு நாமே உருவாக்கினால் மட்டுமே, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, மகிழ்வான வாழ்க்கையை வாழலாம்!  

    • மாணவப் பருவத்திலேயே அவர் எழுதிய `போற்றிப் பத்து` என்ற கவிதை `ஒற்றுமை` என்ற இதழில் வெளிவந்தது.
    • சங்க நூல்கள் காவியங்கள் பிரபந்தங்கள் இப்படிப் பலவற்றைப் படித்தார்.

    தமிழறிஞரும் எழுத்தாளரும் புகழ்பெற்ற பேச்சாளருமான வாகீச கலாநிதி கிருஷஷ்ணராயபுரம் வாசுதேவன் ஜகந்நாதன் என்கிற கி.வா.ஜ. அவர்கள், வாசுதேவ ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் 1906 ஏப்ரல் 11ஆம் நாள் மகனாகப் பிறந்தவர். கி.வா.ஜ. காலமான நாள் 1988 நவம்பர் 4.

    தம் 82ஆம் வயதில் காலமான அவர், அதற்குள் செய்துமுடித்த எழுத்துப் பணிகளும் பதிப்புப் பணிகளும் எண்ணற்றவை. புகழ்பெற்ற பேச்சாளராகவும் அவர் விளங்கினார்.

    கி.வா.ஜ. முருக பக்தர். இளம் வயதிலேயே காந்த மலை முருகனிடம் பேரன்பு கொண்டிருந்தார். பின்னாளில் தன் இல்லத்திற்கே காந்தமலை என்றுதான் பெயர் வைத்தார்.

    மாணவப் பருவத்திலேயே அவர் எழுதிய `போற்றிப் பத்து` என்ற கவிதை `ஒற்றுமை` என்ற இதழில் வெளிவந்தது. அவரது தமிழறிவை வியந்த நண்பர்கள் இளம்பூரணன் என்றுதான் அவரை மாணவப் பருவத்திலேயே அழைத்தார்கள்.

    வாலிப வயதில் சுதந்திரப் போரால் ஈர்க்கப்பட்டு நூல் நூற்றுக் கதர் உடுத்தலானார். இறுதிவரை கதர் ஆடையே அணிந்தார். தமிழ் நூல் மேலும் கதர் நூல் மேலும் அவருக்கிருந்த ஆர்வம் குன்றவேயில்லை.

    இளம்வயது முதலே அவருக்கு ஆன்மிக நாட்டம் அதிகமாக இருந்தது. சேந்தமங்கலத்தில் இருந்த சுயப்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். அவரிடம் தமக்குத் துறவு தரும்படி வேண்டினார். ஆனால் பெற்றோர் அனுமதியில்லாமல் துறவு தர இயலாது என மறுத்துவிட்டார் சுவாமிகள்.

    கி.வா.ஜ.வுக்குத் தமிழ்த் தாத்தா தான் திருமணம் செய்துவைத்தார். கி.வா.ஜ.வின் மனைவி பெயர் அலமேலு. அவருக்கு `சாமிநாதன், குமரன், முருகன்` என மூன்று புதல்வர்களும் `உமா` என்ற புதல்வியும் உண்டு.

    திருப்பூர் கிருஷ்ணன்


    திருமுருகாற்றுப்படை அரசு, தமிழ்க் கவி பூஷணம், உபன்யாச கேசரி, தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி என்று இன்னும் பற்பல பட்டங்கள் கி.வா.ஜ.வுக்கு உண்டு.

    ஆனால் வாகீச கலாநிதி என்ற பட்டத்தை மட்டும்தான் ஆசீர்வாதமாகக் கருதிப் போட்டுக் கொண்டார். காரணம் பட்டம் தந்தவரின் பெருமை. பட்டம் தந்தவர் காஞ்சி மகாப் பெரியவர்,

    தம் இருபத்தோரு வயதில் தமிழ்த் தாத்தா உ.வே.சா.விடம் தமிழ் மாணவராகச் சேர்ந்தார் கி.வா.ஜ.. உ.வே.சா. காலமாகிற வரை (1942) 14 ஆண்டுகள் அவரிடம் மாணவராக இருந்தார்.

    ராமன் பகைவர்களை வென்று சிறைப்பட்டிருந்த சீதையை மீட்டார். இவர் குருகுல வாசம் செய்து தமிழின் பெருமை அறியாத பாமரர்களிடமிருந்து பழந்தமிழ் ஏடுகளை வாங்கித் தமிழை மீட்டார்.

    தம் 35 வயதுவரை தமிழ்த் தாத்தாவின் மாணவனாக இருந்தார். உ.வே.சா.விடம் பல மாணவர்கள் தமிழ் பயின்றாலும் அவருக்கு அதிகம் பிடித்த மாணவர் கி.வா.ஜ. தான். உ.வே.சா. இல்லத்திற்கு எதிர் வரிசையில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒரு நாளில் 11 மணிநேரம் ஆசிரியருடனேயே இருந்து பாடங்கேட்டார்.

    பாடங்கேட்பது சில மணிநேரம். மற்றபடி அவர் இல்லத்திலேயே அமர்ந்து ஓலைச் சுவடிகளைப் படிப்பார். சங்க நூல்கள் காவியங்கள் பிரபந்தங்கள் இப்படிப் பலவற்றைப் படித்தார்.

    1930இல் உ.வே.சா.வுக்குக் காலில் ஒரு புண் ஏற்பட்டது. அப்போது குருவுக்கு அவர் செய்த பணிவிடை அவரை உ.வே.சா.வின் குடும்பத்தாருடன் நெருக்கமாகப் பிணைத்தது.

    அப்பொழுது முதல் உ.வே..சா.வின் பதிப்புப் பணியிலும் கி.வா.ஜ. ஈடுபடலானார். தக்கயாகப் பரணி நூல் முன்னுரையில்

    `இந்நூலைப் பதிப்பிக்கும்காலை உடனிருந்து எழுதுதல், ஆராய்தல், ஒப்புநோக்குதல் போன்ற பணிகளில் மோகனூர்த் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி கி.வா. ஜகந்நாத ஐயரின் உழைப்பு பாராட்டத்தக்கது` என எழுதி அவர் உழைப்புக்கு அங்கீகாரம் அளித்தார் உ.வே.சா.

    `எனக்குத் தள்ளாமை வந்துவிட்ட நேரத்தில் எனக்கு உதவியாக இறைவன்தான் உமமை எம்மிடத்தில் அனுப்பியிருக்கிறான்` என்று மனம் நெகிழ்ந்த உ.வே.சா., அவரைத் தம் குடும்பத்தில் ஒருவராகவே சேர்த்துக் கொண்டுவிட்டார்.

    1935 இல் உ.வே.சா.வுக்கு எண்பதாம் ஆண்டுவிழா நடைபெற்றது. பின் அவர் உடல் பெரிதும் தளர்ந்தது. நோயால் தாக்குண்டார்.

    கி.வா.ஜ.வுக்கு வெளியூர்களில் பெரிய பதவிகள் வந்தன. ஆனால் குருநாதருக்குப் பணிவிடை செய்வதைத் தவிர வகிக்கத் தக்க பெரிய பதவி ஒன்றுமில்லை என வந்த வாய்ப்பையெல்லாம் மறுத்துவிட்டார்.

    தந்தையை இழந்த மூன்றாம் நாள் குருவையும் இழந்தார் கி.வா.ஜ. தந்தையையும் குருவையும் அடுத்தடுத்து இழந்த துயர் கி.வா.ஜ.வைப் பெரிதும் பாதித்தது. எனினும் வாழ்வின் நிலையாமையை உணர்ந்திருந்த அவரது ஆன்மிக மனம் மெல்ல மெல்லத் தேறியது.

    உ.வே.சா.வின் மகன் கல்யாண சுந்தரமையர் எழுத நினைத்த வரலாறு அவர் விரைவில் மறைந்ததால் கைகூடவில்லை. பின் `என் ஆசிரியப் பிரான்` என்ற தலைப்பில் உ.வே.சா. அவர்களின் வரலாற்றை எழுதி நிறைவு செய்தவர் கி.வா.ஜ. தான்.

    மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அவர் சீடர் உ.வே.சா., அவர் சீடர் கி.வா.ஜ. எனத் தமிழ்சார்ந்த குருபரம்பரை தொடர்ந்தது.

    கலைமகள் மாத இதழில் உ.வே.சா. பரிந்துரையின் பேரில் கி.வா.ஜ. உதவி ஆசிரியரானார். இதனிடையே வித்வான் இறுதித் தேர்வு எழுதி முதல் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றுத் தேறினார். அதற்காக திருப்பனந்தாள் மடம் தரும் ஆயிரம் ரூபாய்ப் பரிசைப் பெற்றார்.

    கலைமகள் ஆசிரியராக இருந்த டி.எஸ். ராமசந்திர ஐயர் காலமானார். அதனைத் தொடர்ந்து ஹரிஜன் சாஸ்திரி எனப் பெயர்பெற்ற ஆர்.வி. சாஸ்திரி கலைமகள் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். கலைமகள் அதிபர் நாராணயசாமி ஐயர் உ.வே.சா.வுடன் கலந்துபேசி துணையாசிரியராக இருந்த கி.வா.ஜ.வைப் பின்னர் ஆசிரியராக்கினார்.

    கலைமகள் இதழில் `புதுமைப்பித்தன், அழகிரிசாமி, சி.சு. செல்லப்பா, த.நா. குமாரசாமி, சிதம்பர சுப்பிரமணியன், நா. பார்த்தசாரதி, தி.சா.ராஜு, ஆர்வி, அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன்` போன்ற சிறந்த எழுத்தாளர்களின் கதைகளையெல்லாம் வெளியிட்டார். கலைமகளில் நாவல் போட்டி நடத்தினார்.

    கி.வா.ஜ. சிறந்த எழுத்தாளரும் கூட. நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். அவரது பழந்தமிழ்ப் பாடல் விளக்கக் கட்டுரைகள் நெஞ்சை அள்ளுபவை.

    அவர் சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். ஜோதி என்ற புனைபெயரில் ஏராளமான மரபுக் கவிதைகளை எழுதியுள்ளார். உடனடியாக வெண்பா எழுதுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார். பல திருமண அழைப்புகளுக்கு வெண்பாவிலேயே வாழ்த்துகள் எழுதி அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

    ஏராளமான சிறுகதைகள் எழுதிய சிறுகதை எழுத்தாளரும் கூட. அவரது சிறுகதைகள் பத்துத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவர் ஆசிரியராக இருந்த கலைமகளில் மட்டுமல்லாது ஆனந்த விகடன், தினமணி மலர்கள், சுதேசமித்திரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இவர் கதைகள் வந்துள்ளன.

    `கலைஞன் தியாகம், அறுந்த தந்தி, பவழ மல்லிகை, நீலமணி, வளைச்செட்டி, அசையா விளக்கு, குமரியின் மூக்குத்தி, பூக்காரி` போன்ற இவரது சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை. தமிழ் வளர்ச்சிக் கழகம் தந்த பரிசுகளையும் இவர் சிறுகதைத் தொகுதிகள் பெற்றுள்ளன.

    சிறந்த கட்டுரையாசிரியர். சங்கப் பாடல் விளக்கங்கள், தமிழ் இலக்கிய அறிமுகங்கள்,தொல்காப்பியம் உருவான கதை போன்ற இவரது இலக்கியக் கட்டுரைகள் தனி முத்திரை பதித்தவை.

    திருமுருகாற்றுப் படை, அருணகிரிநாதரின் திருப்புகழ் போன்ற முருகக் கடவுள் சார்ந்த பக்தி இலக்கியங்களுக்கு உரை எழுதியிருக்கிறார்.

    இவரது `வீரர் உலகம்` என்ற இலக்கியப் படைப்பிற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. கம்பன் கழகம் இவர் நினைவாக இவரது பெயரில் ஒரு விருதை நிறுவி ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கி கெளரவித்து வருகிறது.

    மிகச் சிறந்த சொற்பொழிவாளர். தமிழ் இலக்கியங்களைக் கரைத்துக் குடித்த அவரது உரையைத் தமிழுலகம் விரும்பி வரவேற்றது. அவர் பேசாத இலக்கியத் தலைப்புமில்லை. அவர் போய்ப் பேசாத நாடுமில்லை.

    இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பர்மா, ஐரோப்பா போன்ற உலக நாடுகள் பலவற்றில் அவர் உரை நிகழ்த்தியுள்ளார். மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்ட பெருமையும் அவருக்கு உண்டு.

    அவரது மேடைப் பேச்சிலும் சரி, உரையாடலிலும் சரி, பாயசத்தினிடையே முந்திரிப் பருப்பாய் சிலேடை நயம் இழையோடும். தமிழில் காளமேகப் புலவருக்குப் பிறகு சிலேடை நயத்தை அதிகம் பயன்படுத்தியவர் இவர்தான். அதனால் கி.வா.ஜ.வை உரைநடைக் காளமேகம் என்று சொல்வதுண்டு. அவரது சிலேடைகள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாகவும் வந்துள்ளன.

    பல இடங்களில் அலைந்து ஆயிரக்கணக்கான நாடோடிப் பாடல்களைத் தொகுத்தவர். 22000 பழமொழிகளையும் தொகுத்தார். அவற்றை எங்கு கேட்டாலும் முதலில் தனித்தனிக் காகிதங்களில் எழுதிக் கொள்வார். வீட்டுக்கு வந்ததும் அவற்றை அவற்றுக்கென்று உரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதிய பின்னரே மற்ற காரியங்களில் ஈடுபடுவார்.

    `பெண்கள் பாடு என்றால் பாடமாட்டார்கள். ஆனால் அவர்களிடம் நாம் பாடத் தொடங்கினால் பின்னர் நாணத்தை விட்டுப் பாட ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் பல நாட்டுப்புற சகோதரிகளிடமிருந்து இந்தப் பாடல்களைக் கேட்டு எழுதினேன்` எனக் குறிப்பிடுகிறார் கி.வா.ஜ.

    ஏற்றப் பாட்டுக்கள், திருமணப் பாட்டுக்கள், தெய்வப் பாடல்கள் என அவர் தொகுத்த பாடல்கள் பலவகைப் பட்டவை. கி.வா.ஜ. தொகுத்திராவிட்டால் அந்தப் பாடல்கள் காற்றில் கலந்து மறைந்திருக்கும். கி.வா.ஜ.வின் நூல்களை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

    தமிழ்த் தாத்தாவின் அன்புக்குரிய சீடராக, ஒப்புயர்வற்ற தமிழ் அறிஞராக வாழ்ந்து மறைந்த வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்களைத் தமிழுலகம் ஒருபோதும் மறக்காது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail

    • சிறுநீர் கசிவு ஏற்படும் பெண்களுக்கு முறையாக சில நரம்பு சம்பந்தமான பரிசோதனைகளையும் செய்ய வேண்டும்
    • பொதுவாக 40 வயதை கடந்தவுடன் பெரி மொனோபாஸ், மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்ணுறுப்பில் ஒருவித மாற்றங்கள் ஏற்படும்.

    பெண்களுக்கு 40 வயதாகும்போது ஏற்படும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று சிறுநீர் கசிவு பிரச்சினையாகும். இந்த பிரச்சினை உள்ள பெண்களுக்கு எப்போதுமே சிறுநீர்ப்பை நிரம்பி இருப்பது போன்ற உணர்வு காணப்படுகிறது. இதனால் அவர்களால் சிறுநீர் கசிவதை கட்டுப்படுத்த முடிவதில்லை. இருமல், தும்மல் வரும் போது கூட அவர்களை அறியாமல் சிறுநீர் கசிந்து விடும். சில நேரங்களில் சிரிக்கும்போது கூட சிறுநீர் கசிவு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகள் எதனால் ஏற்படுகிறது என்பதை கடந்த வாரம் பார்த்தோம். அதற்கு ஹார்மோன் ரீபிளேஸ்மெண்ட் தெரபி மூலம் சிகிச்சை அளித்து சரி செய்ய முடியும் என்பது பற்றியும் அறிந்தோம்.

    சிறுநீர் கசிவு பிரச்சினையை சரி செய்வதற்கான உடற்பயிற்சிகள்:

    பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பிரச்சினையை சரி செய்வதற்கு சில உடற்பயிற்சிகளும் உள்ளன. அதாவது தசைகள் தளர்வாவதை தடுக்க, தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இதில் கிகில் உடற்பயிற்சி மிக முக்கியமான ஒன்று. இது இடுப்பு தள தசைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு உடற்பயிற்சி ஆகும். இந்த உடற்பயிற்சியானது சிறுநீர்ப்பை, குடல் மற்றும் பிற உறுப்புகளை பாதுகாக்கும் தசைகளை வலுவடைய செய்கிறது.

    மேலும் இதற்கான சிறுநீர்ப்பை தொடர்பான பயிற்சி முறைகளும் உள்ளன. இதற்கான பயிற்சிகளை அளிக்கும்போது, சிறுநீர் கசிவதை கட்டுப்படுத்த முடியும். மேலும் இந்த பயிற்சி மூலம் சிறுநீர்ப்பையில் சிறுநீரை தேக்கி வைக்கும் கொள்ளளவும் அதிகமாகும். இதனால் அந்த பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படுவது குறைவாகி, அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் சீராக்கப்படுகிறது.

    சிறுநீர் கசிவு ஏற்படும் பெண்களுக்கு முறையாக சில நரம்பு சம்பந்தமான பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். இதன்மூலம் நரம்பு இடைவெளிகள் சீராக்கப்படும். தொற்றுகள் சரி செய்யப்படும். சிறுநீர்ப்பை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தும்போது அந்த பெண்ணின் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, அவர்களுடைய சிறுநீர் கசிவு பிரச்சினை சரியாகி, அதனால் ஏற்படும் மனக்குறைபாடுகளில் இருந்தும் ஒரு நல்ல மாற்றங்களை உருவாக்கலாம்.

    சிறுநீர் கசிவு ஏற்படுகிற பெண்களுக்கு இவற்றை சீரான முறையில் சரியாக செய்தால் இதை முழுமையாக சரி செய்ய முடியும். மேலும் இதற்கு சில நல்ல மருந்துகள் கூட இருக்கிறது. அவற்றின் மூலமும் சரி செய்ய முடியும். ஆனாலும் பிரத்தியேகமான சிறுநீர்ப்பை தொடர்பான உடற்பயிற்சி முறைகளை கற்றுக் கொடுத்து கட்டுப்படுத்தும்போது இந்த பிரச்சினைக்கு முறையான தீர்வு கிடைக்கும்.

     

    திரும்பத் திரும்ப ஏற்படும் சிறுநீர் தொற்றுக்கள்:

    மேலும் சிலருக்கு 40 வயதை தாண்டிய பிறகு தொடர்ச்சியாக சிறுநீர் தொற்றுக்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் சிறுநீர் தொற்றுக்கள் திரும்பத் திரும்ப வரும். தொற்றுக்கள் இருப்பதால் இவர்களுக்கு சிறுநீர் கசிவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கும். மேலும் அவர்களுக்கு தொற்றுகள் ஏற்படுவதும் அதிகமாகும்.

    சில பெண்களுக்கு தாம்பத்திய உறவு வைத்தவுடன் சிறுநீர் தொற்று ஏற்படலாம். இதற்கான தீர்வு என்ன என்று பலரும் கேட்கிறார்கள். 40 வயதை கடக்கும்போது பெண்களுக்கு ஏற்படுகின்ற ஹார்மோன் மாற்றத்தினால் சிறுநீர் கசிவு ஏற்படலாம். இதனால் அவர்களுக்கு சிறுநீர் தொற்றுகள் அதிகமாகிறது. இதற்கான முக்கியமான காரணத்தை பார்ப்போம்.

    பொதுவாக 40 வயதை கடந்தவுடன் பெரி மொனோபாஸ், மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்ணுறுப்பில் ஒருவித மாற்றங்கள் ஏற்படும். அதனால் லூப்ரிகேஷன் குறைவாகி மிகவும் உலர்வு தன்மை காணப்படும். இந்த உலர்வு தன்மை என்பது பெண்கள் எதிர்நோக்குகிற மிக முக்கியமான பிரச்சினையாகும்.

    லூப்ரிகேஷன் குறைவாக இருக்கும்போது பெண்ணுறுப்பில் உள்ள திசுக்கள் அனைத்தும் உலர்வடைந்து காணப்படுவதால் தாம்பத்திய உறவின்போது திசுக்களில் சின்னச்சின்ன காயங்கள் ஏற்படலாம். வழக்கமாகவே நமது தோல் பகுதி உலர்வாக காணப்படும்போது அரிப்பு தன்மை இருக்கும். அரிப்பு தன்மை ஏற்படும்போது தோல் பகுதியில் லேசாக தேய்த்தால் கூட புண்ணாகிவிடும். ஏனென்றால் நமது தோல் அந்த அளவுக்கு மென்மையாக இருக்கும்.

    அதேபோல் தான் மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஹார்மோன் குறைபாடுகளால் தோல் பகுதியில் உலர்வு தன்மை ஏற்படும். லூப்ரிகேஷன் சீராக இல்லாததால் பல நேரங்களில் பெண்ணுறுப்பின் வல்வா பகுதியில் எளிதாக தொற்றுக்கள் உருவாகும். அதில் ஏற்படுகிற சில காயங்கள் மற்றும் சேதங்கள் ஆகியவற்றால் தொற்றுகள் எளிதில் பரவும்.

    பாலியல் உறவால் ஏற்படும் சிறுநீர் தொற்று பிரச்சினை:

    மேலும் பெண்ணுடைய யோனி பகுதிதான் அந்த சிறுநீர் செல்வதற்கு பயன்படும் பாதையின் ஒரு பகுதி ஆகும். சிறுநீர் செல்லும் குழாயின் பின் பகுதியில் தான் யோனி இருக்கிறது. யோனி பகுதியில் ஏற்படும் எந்த விதமான அழுத்தங்களும் மாற்றங்களும் இந்த தொற்றுகளை அதிகரிப்படுத்தும்.

    குறிப்பாக லூப்ரிகேஷன் இல்லாமல் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது ஏற்படுகிற பலவிதமான காயங்களும் தொற்றுக்களை அதிகப்படுத்தலாம். சில நேரங்களில் சிறுநீர்க்குழாய் சுருங்கி பாதிப்பு ஏற்படுவதால் தொற்றுகள் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.

    பல நேரங்களில் இந்த பாலியல் உறவு கொள்ளும்போது ஏற்படுகிற சில தொற்றுகளாலும் சிறுநீர் தொற்றுக்கள் பிரச்சினை ஏற்படலாம். பெண்களுக்கு இயற்கையாகவே இந்த கால கட்டத்தில் செல்களில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் உலர்வு தன்மையாலும் சில தொற்றுக்கள், அதாவது பூஞ்சை தொற்றுக்கள் ஏற்படும். மேலும் தோல் பகுதியில் உருவாகும் மாற்றங்கள் போன்று ஏற்படுகிற உலர்வு தன்மைகளாலும் தொற்றுகள் ஏற்படலாம்.

    எனவே திரும்பத் திரும்ப சிறுநீர் தொற்றுக்கள் வந்தால் முறையாக முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை செய்து என்ன தொற்றுக்கள் இருக்கிறது என்று பார்த்து, அதற்கான சரியான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் சாப்பிட வேண்டும்.

    அடுத்ததாக பெண்களின் யோனி பகுதியில் ஏற்படும் உலர்வு தன்மையை சரி செய்வதற்கு சில மருந்துகள் இருக்கிறது. நமது தோல் பகுதிக்கு பயன்படுத்துவது போன்று, யோனி பகுதியில் பயன்படுத்துவதற்கான லூப்ரிகேஷன் இருக்கிறது. அதனை பயன்படுத்தலாம். வல்வாவில் உள்ள தோல் பகுதியிலும் லூப்ரிகேஷன் பயன்படுத்தலாம். இவற்றின் மூலமாக உலர்வு தன்மை குறைவாகும் போது அந்த திசுக்களின் ஸ்டெம்செல் திறன் அதிகமாகும். இது மிகவும் முக்கியமான ஒன்று.

    அடுத்து சிறுநீர்ப்பையின் பலவீ னத்தால் ஏற்படும் பிரச்சினையை யூரோடைனமிக் பரிசோதனை மூலமாகவும், எளிமையான ஸ்கேன் பரிசோதனை மூலமாகவும் பார்க்கலாம். இந்த பரிசோதனைகள் மூலம் சிறுநீர் கழித்த பிறகு சிறுநீர்ப்பையில் எஞ்சி இருக்கும் சிறுநீரின் அளவு கணக்கிடப்படும். எஞ்சி இருக்கும் சிறுநீரின் அளவு அதிகமாக இருக்கிற பெண்களுக்கு திரும்பத் திரும்ப சிறுநீர் தொற்றுக்கள் ஏற்படும்.

    எனவே இதனை தீர்ப்பதற்கு தொற்றுக்களை சரிசெய்வதற்கான முறையான சிகிச்சைகளை பெற வேண்டும். சிறுநீர்ப்பையில் உள்ள சிறுநீரை முழுமையாக காலி செய்வதற்கு சில பயிற்சிகள் உள்ளன. அந்த பயிற்சிகளை கொடுத்து சிறுநீர்ப்பையில் சிறுநீரை முழுமையாக காலி செய்யும் போது சிறுநீர் தொற்றுக்கள் சரி செய்யப்படும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    சிறுநீர்ப்பையை காலியாக வைத்திருப்பதற்கான பயிற்சி:

    ஏனென்றால் பொதுவாக இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு முக்கியமான விஷயமாக, அந்த சிறுநீர்ப்பையில் ஏற்படும் தளர்வு காரணமாக சிறுநீர்ப்பை சற்று இறங்கி காணப்படும். சிறுநீர்ப்பை இறங்கி காணப்படுவதால் சிறுநீர் கழித்த பின்னரும் சிறுநீர்ப்பையில் சிறுநீர் தேங்கி காணப்பட்டு தொற்றுக்கள் ஏற்படும்.

    அதற்கான தீர்வாகத்தான் சிறுநீர்ப்பையை எப்படி காலியாக வைத்திருக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கான முறை யான பயிற்சிகளை மருத்துவர்கள் சொல்லித்த ருவார்கள். அதன் மூலமாக சிறுநீர்ப்பையில் உள்ள சிறுநீரை முழுமையாக காலியாக்கும் போது தொற்றுக்களை குறைக்க முடியும்.

    எனவே மெனோபாஸ் பெண்களுக்கு ஏற்படும் தொற்றுக்களை சரி செய்வதற்கு, முறையான சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் சிஸ்டாஸ்கோபி பரிசோதனை செய்யலாம். இந்த பரிசோதனை மூலம் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் குழாயின் உட்புறத்தை பார்த்து அதில் எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கிறது என்பதை கண்டறிய முடியும். ஒளியுடன் கூடிய ஒரு மெல்லிய குழாய் மூலம் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் சிறுநீரை எடுத்தும் பரிசோதனை செய்து தொற்றுக்களை சரி செய்வோம்.

    பல நேரங்களில் அந்த சிறுநீர்க்குழாய் சுருங்கிவிடும். அது சுருங்குவதால் சரியான முறையில் சிறுநீர் காலியாகாத நிலை வரலாம். சிறுநீர்க்குழாயை விரிவடைய செய்யும் சிகிச்சை இதற்கு ஒரு தீர்வு தீர்வாக அமையும்.

    இந்த வகையில் மாதவிலக்கு நின்று மெனோபாஸ் வந்த பெண்களுக்கு பெண்ணு றுப்பில் ஏற்படும் உலர்வு தன்மை தொற்றுக்கள் ஏற்படுவதற்கும், சிறுநீர்க்கசிவு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக இருக்கும். இதனை சரியான முறையில் பரிசோதித்து கண்டுபிடித்து சரி செய்யும் போது தொற்றுக்கள் வருவதை குறைக்க முடியும். சிறுநீர் கசிவையும் தவிர்க்க முடியும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற்பயிற்சியுடன், பெண்ணுறுப்பு சுகாதாரத்தையும் சரியாக பராமரித்தால் இந்த பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

    • வானில் செக்கு அல்லது லிங்கம் போல் பிரகாசிப்பதால் இதன் தமிழ் பெயர் செக்கு.
    • ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு பிரமாண்ட எண்ணங்கள் இருக்கும்.

    கால புருஷ தத்துவப்படி ராசி மண்டலத்தின் 24-வது நட்சத்திரம் சதயம். இதில் கும்ப ராசி அமைந்துள்ளது. இந்த ராசியின் அதிபதி சனி பகவான். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு. சதயம் என்பதன் சமஸ்கிருத பெயர் சதாபிஷா. இதன் பொருள் நூறு மருத்துவர்கள். சதய நட்சத்திரத்தின் உருவம் பூங்கொத்து, தராசு, ஒட்டகம் என பலவாறாக கூறப்படுகிறது.

    இது வானில் செக்கு அல்லது லிங்கம் போல் பிரகாசிப்பதால் இதன் தமிழ் பெயர் செக்கு. இது நூறு நட்சத்திரங்கள் சேர்ந்த கூட்டமாகும்.

    இந்த நட்சத்திரம் குணப்படுத்தும் மற்றும் சுத்திகரிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நட்சத்திரம் நோய்களைக் குணப்படுத்தும், ஒரு நபரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும் சக்தி கொண்டது என்று நம்பப்படுகிறது.

    சதயம் நட்சத்திர பொது பலன்கள்

    ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு பிரமாண்ட எண்ணங்கள் இருக்கும். அந்த எண்ணம் நிறைவேறுமா? என்பதை சுய ஜாதகத்தில் ராகு நின்ற நிலையை வைத்தே முடிவு செய்ய முடியும்.

    இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் உள்ளுணர்வு சிறப்பாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் கொண்டு இருப்பார்கள். இதில் பிறந்தவர்களுக்கு மருத்துவ ஞானம் அதிகம் உண்டு. அரசியல், அரசாங்கம் போன்றவற்றில் தனி ஆளுமைத் திறன் உண்டு. அரசியல், ஆன்மிகத்தில், பொறுப்பான நிர்வாகப் பதவிகளில் தனித் திறமையுடன் ஜொலிப்பார்கள்.

    ஆன்ம பலம் நிறைந்தவர்கள் வம்சா வழியாக அரசியல் அல்லது அரசு உத்தியோகம் மூலம் வருமானம் உண்டு. தந்தையால் ஆதாயம் உண்டு. திட்டமிட்டு காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். தோல்வி பயம் இல்லாதவர்கள். விடா முயற்சி, தன்னம்பிக்கை, துணிச்சல் மிகுந்தவர்கள். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, மங்காத புகழ் எதையும் சமாளிக்கும் திறன், நல்ல உடற்கட்டு, ஸ்திரபுத்தி, நல்ல கல்வி அறிவு, வீடு, வாகன வசதி, சொகுசு வாழ்க்கை, ஆடம்பர பொருட்கள் சேர்க்கை, போக சுகம் உண்டு. தந்தை, தந்தை வழி முன்னோர்களின் ஆதரவு கிடைக்கும்.

    முயற்சி, திறமை, முன்னேற்றமான வாழ்க்கை, உறவினர்களால், லாபம் உண்டு. நம்பிக்கை, நாணயம் மிகுந்தவர்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபடுவார்கள். இவரின் முயற்சி, திட்டமிடுதலுக்கு குடும்ப உறவுகள் பக்க பலமாக இருப்பார்கள். செல்வாக்கு, சொல்வாக்கு மிகுந்தவர்கள். வாக்கு வன்மையால் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள். இவர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டாலும் அலைச்சல், அசதி மன சஞ்சலம், பய உணர்வு மிகுதியாக இருக்கும்.

    கல்வி

    இவர்கள் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்பதால் பள்ளி பருவத்தில் ராகு தசா நடக்கும். அதனால் பள்ளி பருவத்தில் கல்வியில் சற்று பின் தங்கியே இருப்பார்கள். பாடத்திட்டம் சாரா பிற கல்வியில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். கணிதம் இவர்களின் காலை வாரும். அனுபவ பாடத்தில் மனக் கணக்கில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். பொறியியல், கனிமம், சுரங்கம், சுங்க சாவடி, விவசாயம், மின்னனுவியல், கெமிக்கல், பயோ கெமிஸ்ட்ரி, பரிசோதனை செய்யும் லேப் பற்றிய படிப்பு, இயந்திரங்கள் தொடர்பான படிப்புகள், ரேடியாலஜி, ஸ்கேனிங் தொடர்பான படிப்புகள், தகவல் தொழில்நுட்பம் ஆய்வு மையம் சார்ந்த கல்விகள் படிக்கலாம்.

    தொழில்

    குறைந்தது 10 நபர்களை வைத்து வேலை வாங்கும் ஆர்வம் மிகுதியாக இருக்கும். சட்டம், நிதித்துறை, நீதித் துறை, கல்வித்துறை, ஆசிரியர், பொருளாதாரம், அறிவியல் சார்ந்த துறைகள் வங்கிப்பணி, பொருளாதாரம், திரைப்படம், தொலைக்காட்சி, இயல், இசை, நாடகம், நடிப்பு, அழகு கலை, ஆடை, ஆபரணம், நெசவு சார்ந்த தொழில்கள் சிறப்பாக இருக்கும். வட்டித் தொழில் அல்லது பணம் அதிகம் புழங்கும். தொழிலில் ஆர்வம் உண்டு.

    ஐ.ஆனந்தி


     

    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்

    சுய உழைப்பால் அதிர்ஷ்டம் தேடி வரும். ஜாதகர் முயற்சியை மூலதனமாக கொண்டு முன்னேறுபவர். தன்னைப்பற்றி உயர்வான சிந்தனை உண்டு.

    சுமாரான குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட படிப்படியாக கோடீஸ்வர யோகம் அடைவார்கள். காதல் பாடத்தில் டாக்டரேட் பட்டம் பெறுவார்கள். சிலருக்கு காதலன், காதலி பட்டியல் நீண்டு கொண்டே போகும். இளம் வயதில் திருமணம். வீடு, வாசல் என செட்டிலாகுவார்கள். அன்பான மனைவி, மக்கள் கிடைக்கப் பெறுவார்கள். உறவுகளிடம் நல்ல மதிப்பு மரியாதை இருக்கும். நல்ல தேக ஆரோக்கியம் இருக்கும். பிறரின் பிரச்சினைகளுக்கு தீர்வு, உதவிகள் வழங்குவார்கள். தாயார், உற்றார், உறவினர்கள் போற்றுவார்கள். அதே சமயம் கஷ்டங்கள், சோதனைகள் வந்தால் அதை எதிர் கொள்ளும் வல்லமை உள்ளவராக இருப்பார்கள்.

    தசா பலன்கள்

    ராகு தசா: இது ஜென்ம தாரையின் தசாவாகும்.

    இந்த தசா வருடம் 18 ஆண்டுகள். பிறந்த கால நட்சத்திர பாதத்திற்கு ஏற்ப இதன் தசா வருடம் இருக்கும். பிறந்த காலத்தில் தாய், தந்தையை விட தாத்தாவின் மேல் அதிக பாசத்துடன் இருப்பார்கள். சிலர் தாத்தா பாட்டி வீட்டில் வளர்வார்கள். சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கும்.

    குரு தசா: இது இரண்டாவதாக வரக் கூடிய தன தாரையின் தசாவாகும்.

    இதன் தசா வருடம் 16 ஆண்டுகள்.

    இந்த காலகட்டத்தில் பலர் திருமணம், குழந்தை என இல்வாழ்க்கை துவங்குவார்கள். பலர் குரு தசாவில் நன்றாக சம்பாதிக்க துவங்குவார்கள்.

    சகல யோகங்களையும் அனுபவிக்க கூடியவராக இருப்பார். உழைக்காத வருமானம் உண்டு. கடினமாக உழைக்க விரும்ப மாட்டார்கள்.

    சனி தசா: இது மூன்றாவதாக வரக் கூடிய விபத்து தாரையின் தசாவாகும்.

    இதன் ஆண்டுகள் 19. சமுதாயம், மத நம்பிக்கை குறைந்தவர்களாக இருப்பார்கள்.குறுக்கு வழியில் முன்னேறுவார்கள். யாரையும் அனுசரித்து செல்ல மாட்டார்கள். உதட்டளவில் மட்டும் உறவாடுவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்கள்.

    முயற்சிகள், திட்டமிடுதல் தோல்வி தரும். உறவுகளிடம் பகை, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, கடன், அவமானம் ஏற்படும்.

    புதன் தசா: இது நான்காவதாக வரக் கூடிய சாதக தாரையின் தசாவாகும்.

    இதன் தசா வருடம் 17 ஆண்டுகள்.

    வாழ்க்கை முழுவதும் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சம்பாதிப்பார்கள். வசதி குறைந்த, வாஸ்து குறைபாடு நிறைந்த சொத்து அமையும். இவர்கள் பெரும்பாலும் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வதால் இவர்களுடைய சொத்துக்கள் உறவுகளால் பராமரிக்கப்படுகிறது. கோபம், பிடிவாதம் மிகுதியாக இருக்கும் இதனால் பல நல்ல வாய்ப்புகள் தள்ளிப் போகும்.

    கேது: இது ஐந்தாவதாக வரக் கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும்.

    பலர் இந்த காலகட்டத்தில் பலர் 60 முதல் 70 வயதை கடந்து கொண்டிருப்பார்கள். வயதானலும் அழகு குறையாது. ஆன்மீக யாத்திரை செய்வதிலும் தான தர்மங்கள் செய்வதிலும் ஆர்வம் மிகுதியாக இருக்கும். சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதிகள், எலும்பு, நரம்பு, மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் அவதி இருக்கும். ஆனாலும் மனம் தளர மாட்டார்கள்.

    சுக்ர தசா: இது ஆறாவதாக வரக்கூடிய சாதகதாரரின் தசாவாகும். இதன் தசாவருடம் 20 ஆண்டுகள்.வயது மூப்பு காரணமாக ஓய்வையும் தனிமையையும் விரும்புவார்கள். உயிர் எழுதுவது பாகப்பிரிவினை செய்வது போன்ற பணியில் ஈடுபடுவார்கள். பூர்வீகத்தில் செட்டிலாக விரும்புவார்கள். சான்றோர்களின் நட்பு கிடைக்கும்.

    சதயம் நட்சத்திரத்தின் சிறப்புகள்

    மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றியடைய விரும்புபவர்கள் இந்த நட்சத்திர நாளில் கால பைரவரை வழிபட வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். சனி வீட்டு ராகு என்பதால் சுய தொழில் இந்த நட்சத்தி ரத்தில் துவங்க கூடாது.

    கர்ப்பதானம், சாந்தி முகூர்த்தம் போன்றவற்றிற்கு சிறப்பான நட்சத்திரமாகும்.

    இதன் உருவம் ஒட்டகம் என்பதால் ஆடு மாடு குதிரை கழுதை வாங்கலாம்.

    தொழிலிலில் கடுமையான இழப்புகளை சந்திப்பவர்கள், அதிக நஷ்டம் உள்ளவர்கள் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்ய உயர்வு உண்டாகும்.

    கை, கால், மூட்டு வலி உள்ளவர்கள் அடிக்கடி விபத்து கண்டங்களை சந்திப்பவர்கள் சதயம் நட்சத்திரம் வரும் நாளில் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு வந்தால் உடம்பில் உள்ள எல்லா வலிகளும் நீங்கும். செய்வினை கோளாறு, மாந்திரீக பாதிப்பில் இருந்து விடுபட முடியும். இந்த நட்சத்திரம் வரும் நாளில் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை வழிபட குணப்படுத்த முடியாத நோய்கள் எல்லாம் குணமாகும் ஏவல் பில்லி சூனியம் பாதிப்புகள் விலகும்.

    நட்சத்திர பட்சி: அண்டங்காக்கா

    யோகம்: சுப்ரம்

    நவரத்தினம் : கோமேதகம்

    உடல் உறுப்பு: வலது தொடை

    திசை: வடக்கு

    பஞ்சபூதம் : ஆகாயம்

    அதிதேவதை: எமன்

    நட்சத்திர மிருகம்: பெண் குதிரை

    நட்சத்திர வடிவம்: பூங்கொத்து

    நன்மை தரும் நட்சத்திரங்கள்:

    சம்பத்து தாரை : பூரட்டாதி, புனர்பூசம், விசாகம்

    சேம தாரை: ரேவதி, ஆயில்யம்,

    கேட்டை சாதக தாரை: பரணி, பூரம், பூராடம். பரம மித்ர தாரை : அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை

    பொதுவான பரிகாரங்கள்

    ராஜா ராஜ சோழனின் ஜென்ம நட்சத்திரம் சதயம். இவர் சிவ வழி பாட்டின் மூலம் வெற்றி மேல் வெற்றியை அடைந்தார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிவ வழிபாடு செய்து வர வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று வர ஏற்றமான பலன் உண்டு.

    செல்: 98652 20406

    • வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் கயத்தாரில் தூக்கில் போடப்பட்ட போது அவர் கடைசி வார்த்தையாக திருச்செந்தூர் முருகா என்றுதான் சொன்னார்.
    • கட்டபொம்மன் உருவாக்கிய திருவிழா வழிபாடுகள் திருச்செந்தூர் ஆலயத்தில் அவரது வாரிசுகளால் இன்றளவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.

    திருச்செந்தூர் முருகன் ஆலயம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. முருகப்பெருமான் தமிழ்நாட்டிலேயே திருச்செந்தூர் மற்றும் சுவாமி மலை ஆகிய 2 ஆலயங்களில்தான் தெய்வமாகவும், குருவாகவும் அருள் பாலிக்கிறார். அதன் பின்னணியில் வரலாறும் உள்ளது.

    அதை ஆய்வு செய்தால் திருச்செந்தூர் தலத்தில் முருகப் பெருமானுக்கு குரு பகவான் சூரனை வதம் செய்ய முக்கிய தகவல்களை அளித்ததாக தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் குரு பகவானுக்கு முருகப்பெருமான் திருச்செந்தூர் தலத்தில் அருளாசி வழங்கினார். எனவேதான் திருச்செந்தூர் தலம் முருகனை குருவாக வணங்குவதற்கும் ஏற்ற தலமாக அமைந்துள்ளது.

    ஒருவரது வாழ்வில் குரு என்பவர் மிக மிக முக்கியமானவர். நாம் வாழ்வில் நல்லது செய்து புண்ணியம் சேர்க்க வேண்டுமானால் குருவின் வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே முடியும். அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் தனது பக்தர்களில் பலருக்கு குருவாக திகழ்ந்து அவர்களது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றி இருக்கிறார்.

    திருச்செந்தூரில் இதற்கான அதிசயங்கள் பல நடந்துள்ளன. குறுநில மன்னர்களாகத் திகழ்ந்த கட்டபொம்மன்களையும் திருச்செந்தூர் முருகன் குருவாக இருந்து வழி நடத்தியது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. முருகப் பெருமான் மீது கட்டபொம்மன் மன்னர்கள் வைத்திருந்த பக்திக்கு ஈடு இணையே இல்லை என்று சொல்லலாம்.

    தூத்துக்குடி அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் 250 சிற்றூர்களை உள்ளடக்கி கோட்டை அமைத்து கட்டபொம்மன் மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். வீரத்தில் சிறந்த குறுநில மன்னர்களில் ஒருவராக அவர்கள் திகழ்ந்தனர். எந்த அளவுக்கு அவர்கள் வீரம் கொண்டவர்களாக இருந்தார்களோ அதே அளவுக்கு அவர்களிடம் பக்தியும் அபரிதமாக இருந்தது.

    இதற்கு வழிவகுத்தது கட்டபொம்மன் பரம்பரையின் வழி வந்த 40-வது தலைமுறையை சேர்ந்த கட்டபொம்மன் மன்னர் ஆவார். அவரது குல தெய்வம் ஜக்கம்மா. அந்த தெய்வத்தை வழிபடுவதற்காக பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலேயே ஆலயம் உருவாக்கி இருந்தார். என்றாலும், அவரது மனம் முழுவதும் திருச்செந்தூர் முருகனிடமே இருந்தது.

    திருச்செந்தூர் முருகனை நினைக்காமல், வணங்காமல் அவர் எந்த ஒரு செயலையும் செய்ததே இல்லை. திருச்செந்தூர் முருகனிடம் உணர்விலும், உரிமையிலும் அவர் இரண்டற கலந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். மூச்சுக்கு மூச்சு திருச்செந்தூர் முருகா என்று உச்சரிப்பதையே அவர் வழக்கத்தில் வைத்திருந்தார்.

    அது மட்டுமல்ல.... திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும் மதியம் கருவறை யில் முருகப் பெருமானுக்கு நைவேத்தியம் படைத்து பூஜைகள் முடிந்தபிறகே மதிய உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

     

    திருச்செந்தூரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் பாஞ்சாலங்குறிச்சி உள்ளது. அப்படி இருக்கும்போது தினமும் மதியம் திருச்செந்தூரில் முருகனுக்கு நைவேத்தியம் ஆகி விட்டது என்பது அவருக்கு எப்படி தெரிந்தது? இதற்கு அந்த காலத்திலேயே அந்த கட்டபொம்மன் அருமையாக ஒரு ஏற்பாடு செய்து இருந்தார்.

    அதாவது திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரத்தின் 7-வது மாடத்தில் அவர் மிக பிரமாண்டமான வெண்கல மணி ஒன்றை அமைக்க உத்தரவிட்டார். அது போன்று திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை சுமார் 2 கிலோ மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே மணி கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த மண்டபங்களை அமைத்தார்.

    ஒவ்வொரு மணி மண்டபத்திலும் பணியாட்களை நியமனம் செய்து இருந்தார். திருச்செந்தூர் கோவிலில் மதியம் முருகப் பெருமானுக்கு நைவேத்தியம் படைத்து பூஜைகள் முடிந்ததும் ராஜகோபுரத்தில் 7-வது மாடத்தில் கட்டப்பட்டு இருக்கும் வெண்கல மணியை ஒருவர் வேகமாக அடித்து ஒலிக்க செய்வார்.

    அந்த ஒலி சத்தம் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் அடுத்த மணி மண்டபத்துக்கு கேட்கும். உடனே அந்த மண்டபத்தில் இருப்பவர் அங்கிருக்கும் மணியை அடிப்பார். அது அடுத்த 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மணி மண்டபத்துக்கு கேட்கும். அந்த சத்தம் கேட்டதும் அடுத்த மணி மண்டபத்தில் இருப்பவர் பிரமாண்டமான வெண்கல மணியை ஒலிக்க செய்வார்.

    இப்படியே திருச்செந்தூரில் அடிக்கப்படும் வெண்கல மணி ஓசை அடுத்தடுத்து மணி மண்டபங்கள் மூலம் கடந்து பாஞ்சாலங்குறிச்சியை எட்டி விடும். அந்த மணி ஓசை கேட்டதும் கட்டபொம்மன் மன்னர் மகிழ்ச்சி அடைவார். அதன் பிறகே அவர் திருச்செந்தூர் முருகனை மனதில் நினைத்துக் கொண்டு மதிய உணவு அருந்த அமருவார்.

    இது ஒருநாள் இரண்டு நாள் நடந்தது அல்ல. 40-வது வழிவந்த மன்னரான கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி அரண்மனையில் வாழ்ந்த அனைத்து நாட்களிலும் நடந்தது. இதன் மூலம் கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகன் மீது வைத்திருந்த பக்தியும், அன்பும் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை உணர்ந்துக் கொள்ள முடியும்.

    கட்டபொம்மன் அமைத்த அந்த மணி மண்டபங்கள் இன்றும் ஆறுமுகநேரி, ஆத்தூர், பழைய காயல், ஒட்டப்பிடாரம் உள்பட பல இடங்களில் இருப்பதை காண முடியும். அந்த 40-வது கட்டபொம்மனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு மன்னர்களும் திருச்செந்தூர் முருகனுக்கு மதியம் நைவேத்தியம் முடிந்த பிறகு சாப்பிடுவதையே வழக்கத்தில் வைத்திருந்தனர்.

    கட்டபொம்மன் மன்னர்கள் வரிசையில் 47-வது மன்னராக பதவி ஏற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி நிறைவு பெற்ற பிறகு அந்த மணி மண்டபங்கள் பயன் இல்லாமல் போய் விட்டன.

    அதுபோல திருச்செந்தூர் ஆலய ராஜகோபுரத்தின் 7-வது மாடத்தில் கட்டப்பட்ட பிரமாண்ட மான வெண்கல மணியும் பயன்படுத்தாமலேயே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் ஆலயத்தில் கும்பாபிஷேக பணிகள் நடந்தபோது அந்த மணியை சீரமைத்து மீண்டும் ஒலிக்க செய்தனர்.

    மேலும், திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் கட்டபொம்மனுக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்து இலை விபூதி பிரசாதத்தை குதிரை வீரர்கள் கொண்டு வந்து கட்டபொம்மனிடம் கொடுத்துச் செல்வார்கள். விபூதி கையில் கிடைத்தபிறகே அன்றாட பணிகளை கட்டபொம்மன் தொடங்குவார்.

    வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகன் மேல் கொண்டிருந்த பக்தியால், தன்னுடைய நெற்களஞ்சியங்களில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அன்னதானம் அளிக்க பல ஆயிரம் கோட்டை நெல்லை அனுப்பிக் கொண்டிருக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். குடிமக்களும் தம் வயல்களில் இருந்து நெல்லைக் காவடியாகச் சுமந்து கோவிலுக்குச் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வந்து பணித்திருந்தார்.

    ஒரு சமயம், தன் மனைவிக்கு தங்க அட்டிகை ஒன்றை அன்பளிப்பாக வழங்க விரும்பி பொற்கொல்லரிடம் அதைத் தயாரிக்கும்படி சொல்லி இருந்தார் கட்டபொம்மன்.

    அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முருகன் அந்த அட்டிகையை நீ எனக்குத் தந்திருக்கலாமே? என்றாராம். அட்டிகை தயாரான உடனேயே அதை எடுத்துப் போய் திருச்செந்தூர் கோவிலில் முருகனுக்கு அணிவித்து விட்டார்.

    இந்த சம்பவம் நடந்து எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடி விட்டன. காலங்கள் மாறி விட்டன. என்றாலும் வீரபாண்டிய கட்டபொம்மன் கொடுத்த ரத்தின மாலையும் இதர ஆபரணங்களும் இன்றும் பொலிவோடு திருச்செந்தூர் முருகனுக்கு அலங்கரிக்கப்படுகிறது.

    இன்னொரு சமயம், திருச்செந்தூரில் மாசி திருவிழா நடந்து கொண்டிருந்தது. தேரோட்டத்துக்குத் தேர் தயாராக நிற்கிறது. கட்டபொம்மன் வந்து வடம் பிடித்து கொடுக்க வேண்டும். ஏனோ அன்று, வர முடியவில்லை.

    சரி, நாமே தேரை இழுத்து விடலாம், என பக்தர்கள் தேரை இழுத்தனர். தேர் சிறிது தூரம்தான் உருண்டது. அதற்கு மேல் நகராமல் நின்று விட்டது. தேரின் சக்கரம் ஓரிடத்தில் பதிந்து நின்று கொண்டது. எவ்வளவோ பக்தர்கள் முயற்சித்தும் தேர் நகரவில்லை. இதற்கிடையில் கட்டபொம்மனுக்கு செய்தி கொண்டு சேர்த்து, அவரும் அங்கு வந்து சேர்ந்தார்.

    கட்டபொம்மன் தேர்வடத்தை பற்றி பிடித்தார். உடனே தேர் நகர்ந்தது. இதுபோல பல அற்புதங்களை கட்டபொம்மன் மூலம் முருகன், அவரின் பக்தியை மெச்சி அருளி இருக்கிறார். கட்டபொம்மன் மன்னர்கள் திருச்செந்தூர் முருகனுக்காக அளித்த நிலங்கள் ஏராளம். அவை இன்றும் "செந்தில் பண்ணை" என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.

    நிலங்கள் மட்டுமின்றி திருச்செந்தூர் முருகனின் தினசரி பூஜைக்காக உதய காலம், உச்சி காலம், நையினார் கட்டளை, ஞானாபிஷேகம், நிறைஅலங்காரம், நைவேத்தியம் போன்ற பல்வேறு பணிகளை உருவாக்கி இருந்தனர். தங்கள் சொத்துக்களில் இருந்து இந்த பணிகளை செய்ய ஏற்பாடு செய்து இருந்தனர். இன்றும் இந்த பணிகள் தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல கட்டபொம்மன் உருவாக்கிய திருவிழா வழிபாடுகள் திருச்செந்தூர் ஆலயத்தில் அவரது வாரிசுகளால் இன்றளவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் கயத்தாரில் தூக்கில் போடப்பட்ட போது அவர் கடைசி வார்த்தையாக திருச்செந்தூர் முருகா என்றுதான் சொன்னார்.

    கட்ட பொம்மன் மன்னர்கள் போல திருச்செந்தூர் முருகன் மீது பக்தி வைத்திருந்த குடும்பத்தினரை பார்ப்பது அரிதிலும் அரிது. இதே போன்ற இன்னொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • விஜய்யோடு இணைந்து நடிப்பதற்கு இரண்டு படங்களுக்கு வாய்ப்பு வந்தது.
    • குழந்தை நட்சத்திரமாக ரஜினி சாருடன் நடித்த நான் பின்னாளில் அவரது காதலி, மனைவி என்ற பாத்திரங்களையும் ஏற்று நடித்து இருக்கிறேன்.

    நடிகர் விஜய் ...!

    இப்போ தலைவர் விஜய் !

    அப்படி சொல்வது தான் சரியாக இருக்கும். தமிழ் திரை உலகில் இதுவரை இவரோடு நடிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டதுண்டு. விஜய்யை பொறுத்தவரை கடுமையான உழைப்பாளி. நடிப்புன்னு வந்துவிட்டால் தனது முழு திறமையையும் காட்டக் கூடியவர்.

    எல்லோரிடமும் மரியாதையாக பேசி பழகக் கூடியவர். அதற்காக எப்போதும் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருப்பவர் என்று சொல்ல முடியாது. யோசித்து தான் எதையும் பேசுவார். அதேபோல் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் தீர ஆலோசித்து தான் முடிவெடுப்பார். இது அவரோடு பழகிய எல்லா கலைஞர்களுக்கும் தெரியும்.

    விஜய் இவ்வளவு சீக்கிரம் திரைத்துறையில் இருந்து விலகி அரசியலுக்கு வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அதற்கு காரணம் அவர் நடித்துக் கொண்டிருந்த போது இவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று நினைக்கக் கூடிய அளவில் எதுவும் நடக்கவில்லை. நடிகர் விஜயகாந்த்தோடு பல படங்களில் நடித்திருக்கிறேன். அப்போது அவரை தேடி பல அரசியல் தலைவர்கள் வந்ததை பார்த்திருக்கிறேன். எனவே அவருக்கும் அரசியலுக்குமான தொடர்பு எங்களுக்கு தெரியும்.

    ஆனால் விஜய் மீது அந்த மாதிரி அரசியல் நிழல் எதுவும் பட்டதில்லை. அப்படி இருக்கும் போது திடீரென்று விஜய் அரசியலுக்கு வந்தது எங்களுக்கு நம்ப முடியாததாக தான் இருந்தது. அதே நேரம் தீர யோசிக்காமல் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பார் என்று தோன்றவில்லை. நன்றாக யோசித்து தான் அரசியலுக்கு வரும் முடிவையும் எடுத்திருப்பார்.

    அதிலும் உச்சத்தில் இருந்த நேரத்தில் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்கு வருவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அப்படி ஒரு முடிவோடு அவர் வந்திருக்கிறார் என்றால் ஏதோ ஒரு லட்சியத்தோடு தான் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

    அவர் அரசியலுக்கு வந்ததும் விஜய் இனி உங்கள் படத்தை மிஸ் பண்ணுகிறோம் என்று நேரிலேயே சொன்னேன். அது மட்டும் அல்ல அரசியல் துறையிலும் அவர் ஜெயிக்க வேண்டும் என்று விஷ் பண்ணவும் செய்தேன். திரைத்துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டவர். அதேபோல் சக கலைஞர் என்ற முறையில் அரசியலிலும் அவர் சாதிக்க வேண்டும் என்று எனது வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.

    விஜய்யோடு இணைந்து நடிப்பதற்கு இரண்டு படங்களுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. இனியாவது அவரோடு நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது அவர் அரசியலுக்கு வந்து விட்டதால் இனி அந்த வாய்ப்பும் கிடைக்கப்போவதில்லை என்பது வருத்தமாகத்தான் உள்ளது. அதே நேரம் சக கலைஞர் ஒருவர் அரசியலிலும் தலைவராக உருவெடுத்துள்ளார் என்பது மகிழ்ச்சியை தருகிறது.

    சினிமாவில் இதுவரை நான் சந்தித்த பல சம்பவங்களை நினைத்து பார்க்கும் போது சுவாரஸ்யமாக இருக்கும். முதல் முதலில் குழந்தை நட்சத்திரமாக சிவாஜி சாருடன் நடித்தது எல்லோரும் அறிந்தேன்.

    குழந்தை நட்சத்திரமாக ரஜினி சாருடன் நடித்த நான் பின்னாளில் அவரது காதலி, மனைவி என்ற பாத்திரங்களையும் ஏற்று நடித்து இருக்கிறேன்.

    மலையாளத்தில் 1984-ல் வெளிவந்த 'ஒரு கொச்சு கதா ஆரும் பறயாத கதா' என்ற மலையாள படத்தில் மம்முட்டி சாருடன் நடித்தேன். அந்த படத்தில் எனக்கு தந்தையாக நடித்த மம்முட்டி சாருடன் பின்னாளில் அவரது தாயாகவும் நடித்து இருக்கிறேன்.

    இதையெல்லாம் நினைக்கும் போது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.



    2014-ம் ஆண்டு 'பால்யகலசகி' என்ற படத்தில் மம்முட்டியின் அம்மாவாக நடித்தேன். அதே படத்தில் மம்முட்டியின் மற்றொரு கேரக்டருக்கு மனைவியாகவும் நடித்தேன். ஒரே நடிகருக்கு மகள், காதலி, தாய் என்ற மூன்ற பாத்திரங்களை ஏற்று நடித்தது பெருமையுகவும் அதே நேரத்தில் இனிமையாகவும் நினைவுகளாகவும் நிழலாடுகிறது.

    நிழல் காட்சிகளாக வெளிப்படுத்தும் சினிமாவை போலவே நிஜ வாழ்க்கையிலும் சுகமான அனுபவங்களும் இருக்கும், சோகமான தருணங்களும் இருக்கும். வாழ்க்கை பயணத்தில் இறைவன் என்ற டைரக்டர் வைக்கும் காட்சிகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

    அதையும் ஏற்று வாழும் (நடிக்கும்) பக்குவத்தை நாம் தான் பெற வேண்டும்.

    நிழலோடு தொடர்ந்த நிஜ சம்பவங்களோடு அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

    • ‘நன்றியுணர்வு’ என்பது மிகச்சிறந்த மனிதக் குணமாகவும், ஆகச் சிறந்த ஆன்மீகக் குணமாகவும் கருதப்படுகிறது.
    • அரசர் தனது நன்றியுணர்வில்லாத் தவறுக்கு வருந்தி, தண்டனையை ரத்துபண்ணி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

    நன்றியுணர்வோடு இருக்க வேண்டும் என்பதில் நன்முனைப்போடு திகழும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    'நன்றி' என்கிற தமிழ்ச்சொல்லை ஒரு செயலுக்கான முற்றுப்புள்ளிச் சொல்லாகப் பலர் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் உண்மையில், 'நன்றி' என்கிற சொல்லில் இருந்துதான் சமூகத்தின் அத்தனை நற்செயல்களும் புறப்பாடு காணுகின்றன. 'நன்றி' என்கிற தமிழ்ச் சொல்லுக்கு, நன்மை, உதவி, நற்பயன்பாடு எனப் பலபொருள்கள் உண்டு. மனித உயிர்களைப் படைத்த ஆண்டவன், மனிதத்தின் மாண்பான வாழ்க்கைக்கு உதவியாக இருக்க இயற்கையைப் படைத்தார். இயற்கையில் இருந்து, மனிதன் கற்றுக்கொண்டதும், பெற்றுக் கொள்வதும் ஏராளம்! ஏராளம்!. மனித வாழ்க்கைக்கு உதவி, அவர்களின் நேரிய வாழ்முறைக்கு வேண்டியவற்றையெல்லாம், இயற்கை பிரதிபலன் கருதாமல் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. கைம்மாறு கருதாத நிலையில் இயற்கை நமக்குச் செய்கிற நன்மைகளுக்கெல்லாம் நன்றியுணர்வோடு நாம் திருப்பிச் செய்யவேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம்.

    திருப்பிச் செய்வது என்பது, கல்யாணம் காதுகுத்துகளில் ஐந்நூறு ரூபாய் மொய்ப்பணம் பெற்று, மற்றொரு வாய்ப்பில், அவருடைய வீட்டு விசேஷத்திற்கு ஐந்நூறை, அறு நூறாகத் திருப்பிச் செய்வதல்ல; நன்றியறிதல், செய்ந்நன்றியறிதல் என்பது, ஒருவர் கைம்மாறு கருதாமல் நமக்குச் செய்த நன்மையை, உதவியை உரிய வாய்ப்பில் கடமையுணர்வோடு பன்மடங்காகத் திருப்பிச் செய்வது ஆகும். ஏனென்றால் உலகில் நிகழும் நன்மைகள் எல்லாம் செய்ந்நன்றியறியும் நற்குணங்களாலேயே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சக மனிதர்களோ, உடன்வரும் இயற்கையோ தொடர்ந்து உதவிக்கொண்டே இருக்க வேண்டுமென்றால், நாமும் நன்றி மறவாமல், இயற்கைக்கும் சக மனிதருக்கும் உதவிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மனிதர்களோ இயற்கையோ ஒருவரையொருவர் சார்ந்து வாழும் வாழ்க்கை வாழவே படைக்கப் பட்டிருக்கின்றனர்.

    'நன்றியுணர்வு' என்பது மிகச்சிறந்த மனிதக் குணமாகவும், ஆகச் சிறந்த ஆன்மீகக் குணமாகவும் கருதப்படுகிறது. தான் பெறுகிற அனைத்தையும் தனக்குத் தனக்கென வைத்துக்கொள்ளாமல், பெற்றவற்றைத் தேவைப்படுவோர்க்கு வழங்கும் மனிதர்கள் ஈகைத்திறம் மிக்கவர்கள். எங்கிருந்து பெற்றோமோ அங்கேயே திரும்ப அளிப்பது என்பது நன்றியுணர்வோடு கூடிய ஈகைக் குணமாகும். சமூகத்தில், சமூகமாக வாழ விதிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு சமூக மனிதனும், தான் வாழ்ந்ததற்கு அடையாளமாகச் சிறந்த செயல் எதையாவது இந்தச் சமூகத்திற்குத் திரும்பச் செய்துவிட்டுச் செல்லவேண்டும்; இது சமூகவியல் சார்ந்த நன்றியுணர்வு. அதே வேளையில் தன்னலம் கருதாமல் வாழ்தலே அன்பறம் என்பதை வலியுறுத்தும் ஆன்மீக நெறி, எலும்பையும் அடுத்தவர்க்கு அர்ப்பணிக்கக் காத்திருத்தலே சிறந்த குணம் என்கிறது.

    உண்மையில், தன்னலமற்ற இறைவன் தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல், எல்லாவற்றையும் மனித ஈடேற்றத்திற்கே வாரி வழங்குகிறான் என்று எல்லாச் சமயங்களும் குறிப்பிடுகின்றன. அப்படியானால், கைம்மாறு கருதாமல் நாம் இறைவனிடமிருந்து பெறும் நன்மைகளையும் உதவிகளையும், எந்த வழியில் நன்றியுணர்வோடு திருப்பிச் செலுத்துவது?. மிக எளிய வழி ஒன்று இருக்கிறது, "நடமாடக் கோவில் நம்பர்க்கு ஒன்று ஈயில், படமாடக் கோவில் பகவற்கு அது ஆமே!" என்கிற திருமூலர் காட்டுகிற வழிதான் அது. அதாவது, சமூகத்தில் நடமாடும் கோவில்களாக வலம் வந்துகொண்டிருக்கும், ஏழை எளியோர்க்கு நாம் எந்த உதவி செய்தாலும், அது நேரடியாகப் படமாடும் கோபுரக் கோவில்களிலே குடியிருக்கும் கடவுளர்க்குச் சென்று சேர்ந்து விடுமாம். என்னே ஆன்மீகம் உணர்த்தும் நன்றியுணர்வு!.

    நாம் பெறுகிற ஒவ்வொரு உதவியையும் நன்றாக நினைவில் வைத்துக்கொண்டு செய்ந்நன்றி உணர்வோடு திரும்பச் செய்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். நன்றல்லதை அன்றே மறந்து விடுவது நல்லது என்று வள்ளுவர் கூறியிருப்பதால், நன்மைகளை மட்டும் மறக்கவே கூடாது. மழையும், வெயிலும், காற்றும், ஒளியும் என இயற்கையாக நாம் பெறுகிற நன்மைகள் யாவும், கைம்மாறு கருதாமல் இயற்கை நமக்கு வழங்குகிற கொடைகள் ஆகும். இப்படி உதவும் இயற்கைக்கு உதவியாக எதைத் திருப்பி நன்றியுணர்வோடு வழங்க இருக்கிறோம். சிறப்பாக வேறு எந்த உதவியையும் செய்து விடத் தேவையில்லை. மலை, காடு, வயல், மழை, நதி, கடல், அருவி, ஏரி, குளம், கண்மாய், மரம் செடி கொடி எனும் இயற்கை வளங்கள் அனைத்தையும் மாசுபடாமல் காத்துநின்றால் அதுவே பேருதவியாகவும், பெருநன்மையாவும் அமையும்.

    ஒருமடங்கு விதைத்தால், பலமடங்கு விளைச்சலைத் தர நிலங்கள் தயாராக இருக்கின்றன. உரிய முறையில் உழுது, பண்படுத்தி, விதைவிதைத்து, நாற்றுநட்டு, நீர்பாய்ச்சிக், களைபறித்து விருப்பத்துடன் நிலத்திடம் நல்லுழைப்பை வழங்கினால், அந்த நிலம் மகிழ்ச்சியுடன் மகசூலைப் பெருக்கி நமக்கு நன்மை செய்யும். இயற்கையே இந்த அளவுக்கு நன்றியுணர்வோடு இருக்கும்போது ஆறறிவு படைத்த மனிதர்க்குச் சொல்லவும் வேண்டுமோ?. இன்று சமூகத்தில் பெருகியுள்ள, பொறாமை, அன்பின்மை, வஞ்சனை, கோபம், சகிப்புத்தன்மையின்மை, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற பல தீய குணங்களுக்கும் செயல்களுக்கும்

    நன்றியுணர்வின்மையே பெருங்காரணமாய் அமைகிறது. உலகத்தில் செய்ந்நன்றி மறந்தவர்க்கு எப்போதும் நல்ல வாழ்க்கை அமையாது என்று சாபமும் விடுகிறார் திருவள்ளுவர். பெருந் தவிப்போடு தவித்துக்கொண்டிருந்த ஒருவருக்கு, உரிய காலத்தில் ஒருவர் ஒரு சிறிய உதவியைச் செய்திருந்தால், அந்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும் அதை உலகத்தைவிடப் பெரிய உதவியாகக் கருதி மறக்கவே கூடாது; உரிய காலம் வரும்போது அவ்வுதவிக்கு பிரதியுபகாரம் செய்துவிட வேண்டும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

    சுந்தர ஆவுடையப்பன்


    ஒரு ராஜா ஒரு நாட்டைச் சிறப்பாக நடத்தி வந்தார். அவருக்கு நாட்டு நிருவாகத்தில் அவ்வப்போது ஆலோசனைகள் கூறப் பதினைந்து அமைச்சர்களைப் பணியமர்த்தி இருந்தார். அமைச்சர்கள் ஆலோசனை கூறும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும்; மீறி யாராவது தவறான ஆலோசனை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டால் வித்தியாசமான முறையில் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் எச்சரித்திருந்தார். வித்தியாசமான முறை என்றால், அரசர் கொடூரமான பத்து வேட்டை நாய்களை அரண்மனையில் வளர்த்து வந்தார்; யாராவது அமைச்சர் தவறு செய்துவிட்டால், அரண்மனை விளையாட்டு மைதானத்திற்குள், அந்த அமைச்சரைத் தள்ளிவிட்டுப், பத்து வேட்டை நாய்களையும் அவிழ்த்து விட்டுவிடுவார். அவ்வளவுதான்; நாய்க்கடி பட்டு தவறான அமைச்சர் மாண்டுபோக வேண்டியதுதான்.

    தண்டனைக்குப் பயந்தே எல்லா அமைச்சர்களும் குற்றம் எதுவும் இழைக்காமல் கவனமாக இருந்து வந்தனர். அப்படியும் ஒரு அமைச்சர் திடீரென ஒரு விஷயத்தில் ஒரு சிறு தவறு செய்துவிட்டார். இது அவர் இழைக்கும் முதல் தவறுதான் என்றாலும் தண்டனை வழங்குவதில் பாரபட்சம் கிடையாது என்று அரசர் முடிவெடுத்து விட்டார். அரசரைத் தேடி அமைச்சர் ஓடோடி வந்தார்; "அரசே! நான் தங்களிடம் கடந்த பத்தாண்டுகள் எந்தத் தவறும் செய்யாமல், நேர்மையுடன் பணியாற்றி இருக்கிறேன். அவற்றை மனத்தில் வைத்து, இந்த முதல்குற்றத்தை மன்னித்து என்னை விடுதலை செய்யும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்" என்று மன்றாடினார். "முடியவே முடியாது! நாய்க்கடி தண்டனை உறுதி!" என்று இறுதி படக் கூறினார் அரசர். "அப்படியானால் தண்டனை நிறைவேற்றத்திற்கு ஒரு பத்துநாள் அவகாசம் கொடுங்கள்" என்று கேட்டார் அமைச்சர். "சரி வழங்கப்பட்டது. பத்துநாள் கழித்து தண்டனை நிறைவேறும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் அரசர்.

    அவகாசம் வாங்கிய கையோடு, அரண்மனையில் அந்தப் பத்து வேட்டைநாய்களும் வளர்க்கப்படும் பகுதிக்குச் சென்றார் அமைச்சர். நாய்கள் பராமரிப்பாளரிடம், நடந்ததை விவரித்துக்கூறி, "எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்; இந்தப் பத்து நாட்கள் மட்டும் நாய்கள் பராமரிப்புப் பணிகளை நான் மேற்கொள்வதற்கு அனுமதி தந்து உதவி செய்யுங்கள்!" என்று கேட்டார். பராமரிப்பாளரும் சரியென்று ஒத்துக்கொண்டார். அன்று முதல் அந்தப் பத்து நாய்களுக்கும் உணவு கொடுப்பது, குளிப்பாட்டி விடுவது, விளையாட்டுக் காட்டுவது, காலாற நடக்கவைத்துக் கூட்டி வருவது... என்று எல்லாப் பராமரிப்புப் பணிகளையும் சிரத்தையோடு அமைச்சர் மேற்கொண்டார்.

    பத்துநாள் அவகாசம் முடிந்தது; அரண்மனை மைதானத்துக்கு அமைச்சர் கூட்டி வரப்பட்டார். அரசர், மற்ற அமைச்சர்கள், நாட்டுமக்கள் என்று அனைவரும் தண்டனை நிறைவேற்றத்தைக் காணவந்து கூடினர். மைதானத்தின் நடுவில் அமைச்சர் நிறுத்தப்பட்டார். பத்து வேட்டை நாய்களும் அவரை நோக்கி அவிழ்த்து விடப்பட்டன. அத்தனை நாய்களும் வால்களை ஆட்டிக்கொண்டு அவரிடம் நேசமாய் வந்து நின்றன; சில நாய்கள் அவரது கால்களையும் கைகளையும் நாவால் நக்கி அன்பை வெளிப்படுத்தின. பார்க்க வந்திருந்த மக்கள் கூட்டமேமருண்டு போனது. " நாய்களுக்கு என்னவாயிற்று?" கூச்சலிட்டுக் கேட்டார் அரசர்.

    "அரசே! அவற்றைக் குற்றம் கூறாதீர்கள்!. அவை நன்றியுணர்வோடு இருக்கின்றன!" என்று கூறிவிட்டு மேலும் பேசினார் அமைச்சர், நான் தங்களிடம் பத்தாண்டுகள் விசுவாசமாக உழைத்தேன். நான் இழைத்த ஒரு சிறு தவறு! அதுவும் தவறு! மன்னிக்கக் கேட்டேன்; நன்றியுணர்வு இருந்திருந்தால் மன்னித்திருப்பீர்கள்; நீங்கள் மன்னிக்கவில்லை; ஆனால் வெறும் பத்தே நாள்கள்தான் அந்த நாய்களிடம் பணிபுரிந்தேன்!; அவற்றிற்குச் சேவை செய்தேன்! அந்த நாய்கள் காட்டும் நன்றியுணர்வைத்தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்". அரசர் தனது நன்றியுணர்வில்லாத் தவறுக்கு வருந்தி, தண்டனையை ரத்துபண்ணி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

    ஒருவர் தற்போது கொலைபாதகச் செயலுக்கு நிகரான தீச்செயலைச் செய்திருக்கலாம்; இருந்தாலும் அவருடைய வாழ்நாளில் நமக்கு ஏதாவது ஒரு நல்ல காரியத்தை, உதவியை எப்போதாவது செய்திருந்தால் போதும்; அந்த நல்ல செயலுக்கு நேராக நினைவில் வைத்து இந்தக் கொலைகாரச் செயலை மன்னித்து விடுங்கள் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

    "கொன்றன்ன இன்னா செயினும்

    அவர்செய்த

    ஒன்றுநன்று உள்ளக் கெடும்"

    இதுவன்றோ செய்ந்நன்றியறிதல்!. நன்றியுணர்வு அன்பை வளர்க்கிறது; ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிற மனித நேயத்தை மலரச் செய்கிறது. எல்லாரும் எல்லாமும் பெறக்கூடிய சமத்துவத்தைச் செழிக்கச் செய்கிறது.

    தொடர்புக்கு 9443190098

    • இந்தியாவில் உள்ளதிலேயே சுத்தமான நகரம் என்று பெயர் பெற்றுள்ளது மைசூர்.
    • மன்னர்கள் அனைவரும் சாமுண்டி தேவியின் பக்தர்கள் என்பதால் அரண்மனை சாமுண்டி மலையை எதிர்நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

    எங்கள் பாரம்பரியம் நீங்கள் சேரும் இடம் Our Heritage Your Destination –- இது தான் மைசூர் சுற்றுலாத் துறையின் அதிகாரபூர்வமான முத்திரை வாக்கியம்!

    புராணத்தில் குறிப்பிடப்படும் இரண்டு தலைகள் உள்ள கந்த்பெருண்டா பறவை நடுவில் இருக்க இருபுறமும் அலங்காரத் துணி போர்த்தப்பட்ட யானைகள் இருக்க அங்கு பொறிக்கப்பட்டிருக்கும் இந்த வாக்கியம் மைசூரின் அதிகாரபூர்வமான முத்திரை வாக்கியமாகும். இந்தியாவில் உள்ளதிலேயே சுத்தமான நகரம் என்று பெயர் பெற்றுள்ளது மைசூர்.

    மைசூரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பார்த்து மகிழ ஏராளமான இடங்கள் உள்ளன.

    கம்பீரமான மைசூர் அரண்மனை

    நகரின் மகுடம் என்று சொல்லப்படும் மைசூர் அரண்மனை பழம் பெரும் பாரம்பரியத்தைக் கொண்டது. அம்பாவிலாஸ் என்று அழைக்கப்படும் இது 1912ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

    மூன்று வாயில்கள் கொண்ட இந்த அரண்மனையின் முக்கிய வளாகம் 245 அடி நீளமும் 156 அடி அகலமும் கொண்டது. தெற்கு வாயில் வழியே பொதுமக்கள் செல்லலாம். கிழக்கு மற்றும் மேற்கு வாயில்கள் பொதுவாக தசரா விழாவின் போது திறக்கப்படுகிறது. கஜலட்சுமி சிற்பங்கள் உட்பட ஏராளமான சித்திர வேலைப்பாடுகளையும் குவி மாடங்களையும் இங்கு கண்டுகளிக்கலாம். சுமார் 18 கோவில்கள் இங்கு உள்ளன. தர்பார் மண்டபம் அரசருக்கே உரித்தான மண்டபமாக அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வியக்கலாம். மன்னர்கள் அனைவரும் சாமுண்டி தேவியின் பக்தர்கள் என்பதால் அரண்மனை சாமுண்டி மலையை எதிர்நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயம்

    சாமுண்டீஸ்வரி அம்மனின் கோவில் மைசூரிலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ளது.

    சாமுண்டி மலையின் உச்சியில் சுமார் 3000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாமுண்டீஸ்வரி ஆலயம் 18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

    இந்த மலையின் மீது அமைந்திருக்கும் கோவிலுக்குச் செல்ல ஆயிரம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் 800வது படிக்கட்டில் ஒரு சிறு சிவன் கோவில் உள்ளது. சிவபிரானுக்கு எதிரில் அமைந்திருக்கும் நந்தி மாபெரும் நந்தியாகும். கருங்கல்லினால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நந்தியின் சிலை 15 அடி உயரம் உள்ளது. 24 அடி நீளம் உள்ளது. இதுவே நாட்டில் உள்ள நந்திகளில் பெரிய நந்தியாகும். இந்த கோவிலுக்கான கோபுரத்தை விஜயநகர சாம்ராஜ்ய மன்னர் 17ஆம் நூற்றாண்டில் கட்டினார்.

    மைசூர் ராஜ்யத்தின் காவல் தெய்வமாக சாமுண்டீஸ்வரி அம்மனை தொன்று தொட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    நினைத்ததை அருளும் சாமுண்டீஸ்வரியைப் தரிசிப்பது மைசூருக்கு வருகை புரிவோரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.

    பிருந்தாவன் கார்டன்ஸ்

    மைசூரிலிருந்து 29 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பிருந்தாவன் கார்டன்ஸ். மைசூருக்கு பயணம் மேற்கொண்டோர் தவறாமல் பார்த்து மகிழும் இது ஒரு பிரம்மாண்டமான பூங்கா தோட்டமாகும். இரவு நேரத்தில் ஒளி விளக்குகள் பளீரென மின்ன, ஆங்காங்கே நீரூற்றுகள் நீரை வானில் செலுத்த தேவலோகம் போலக் காட்சி அளிக்கும் இது ஏராளமான திரைப்படங்களில் இடம் பெற்று அனவரையும் மகிழ்வித்த தோட்டமாகும். கிருஷ்ணராஜ சாகர் அணைக்குக் கீழே அறுபது ஏக்கர் பரப்பளவில் இது அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் மையத்தில் சிறு குளம் ஒன்றில் காவேரி அம்மனின் விக்ரஹம் உள்ளது.

     இசைக்கப்படும் இசைக்கு ஏற்ப நீரூற்றுகள் இங்கு நடனமாடும் காட்சி அதிசயிக்க வைக்கும் ஆனந்தக் காட்சியாகும்.

    ரங்கந்திட்டு பறவைகள் காப்பகம்

    கர்நாடகத்தில் மாண்டியா மாவட்டதில் அமைந்துள்ள இந்த பறவைகளின் சரணாலயம் மைசூருக்கு வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் காவிரி ஆற்றின் கரையில் ஆறு தீவுகளைக் கொண்டுள்ளது. சுமார் 170க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கே உள்ளன என்பதால் பறவை ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கில் இங்கு திரள்கின்றனர். 2016-17ல் மட்டும் இங்கு மூன்று லட்சம் பயணிகள் வந்தனர். தீவுகளின் வழிகாட்டும் படகு சவாரி நாள் முழுவதும் கிடைக்கும். நுழைவுக் கட்டணம் உண்டு.

    ஸ்ரீரங்கப்பட்டண ஆலயம்

    மைசூருக்கு மேற்கே 14 கிலோமீட்டர் தூரத்தில் மாண்ட்யா மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். ஶ்ரீ ரங்கப்பட்டணம் என்ற பெயர் இந்த ஆலயத்தின் பெயரால் எழுந்ததே. இங்கு மஹாவிஷ்ணு அனந்தசயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். விஷ்ணுவின் பாதங்களில் லக்ஷ்மி தேவி காட்சி அளிக்கிறார். ஸ்ரீ்ரங்கப்பட்டணம், திருவரங்கம், கும்பகோணம், திருபேர்நகர்,, மயிலாடுதுறை ஆகிய ஐந்து இடங்களில் அமைந்துள்ள பஞ்சரங்கத் தலங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று.

    மைசூர் மிருகக்காட்சி சாலை

    157 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மிருகக்காட்சி சாலையில் 25 நாடுகளைச் சேர்ந்த 168 இனங்களைக் கொண்ட 1500 மிருகங்கள் உள்ளன. யானைகள், ஆப்பிரிக்க காட்டெருமை, ராஜ நாகம், சிறுத்தை உள்ளிட்டவற்றை இங்கு பார்க்கலாம்.

    இங்குள்ள கரஞ்சி ஏரியில் 45 வகையான பறவை இனங்கள் உள்ளன. கரஞ்சி ஏரி 77 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பிரம்மாண்டமான ஏரி; குழந்தைகளுடன் செல்ல வேண்டிய இடம் இது.

    மெழுகு அருங்காட்சியகம்


    மைசூர் அரண்மனையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் பிரமிக்க வைக்கும் மெழுகுச் சிலைகளைக் காணலாம். மகாத்மா காந்தி அமர்ந்த நிலையில் இங்கு காட்சி தருகிறார். இங்கு பல பகுதிகளைச் சேர்ந்த பலவகையான இசைக்கருவிகள் உள்ளன. பார்வையாளர் விரும்பினால் அவர் விருப்பத்திற்கேற்ப இசைக்கருவிகளை இசைக்கும் வாய்ப்பும் உண்டு. நுழைவுக் கட்டணம் உண்டு. ரயில்வே மியூசியம், கடல் சிப்பி அருங்காட்சியகம் உள்ளிட்ட இன்னும் பல இடங்கள் மைசூரில் பார்ப்பதற்கு உள்ளன.

    மைசூருக்கு வருகை தருவோர் கூறுவது:-

    இங்குள்ள ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்கிறது!

    ஒவ்வொரு இடத்திலும் போட்டோ எடுக்காமல் இருக்கவே முடியாது!!

    மாயாஜாலம், மனதைக் கவரும் காட்சிகள் – இதுவே மைசூர்!!!

    • இன்றைய உணவு முறையில் மாவுச்சத்துக்களும், இனிப்புமே முதன்மை இடம் பிடித்துள்ளன.
    • கேழ்வரகு மாவும், எள்ளும், சுக்கும் மூளை நரம்புகளுக்குத் தூண்டலைத் தரும்.

    கேழ்வரகு மாவினை மூலப்பொருளாகக் கொண்டு நற்பலனைத் தரும் கேக் போன்ற பண்டங்கள் குறித்துப் பார்த்தோம். இன்று ராகி பிஸ்கட் பரவலாகி வருகிறது. அது முழுமையாக கே.வ மாவில்லையென்றாலும் மைதா மாவு, டால்டா போன்றவை கலக்கப்படுகிறது தான். ஆனாலும் முற்ற முழுக்க மைதா மாவுகொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கட்டினை விட இது ஓரளவு நல்ல பலனைத் தரும்.

    இப்பொழுது வீட்டுப் பெண்கள் கே.வ மாவில் பணியாரம் சமைக்கிறார்கள். செட்டிநாட்டில் பிரபலமான வெள்ளப்பணியாரம் போல ராகி மாவில் தயாரிக்கிறார்கள். இது மிகவும் சுவையாகவும், சத்தாகவும் இருக்கும். புசுபுசுவென்ற பதத்தோடு (டெக்ஸ்டர்) மெத்தென்று ஈரத்தன்மையோடும் இருப்பதால் எண்ணெயில் பொறித்தெடுத்தாலும் மலச்சிக்கல் குடல் பகுதியில் வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தாது கே.வ.மாவுப் பணியாரம்.

    கேழ்வரகு மாவில் வெல்லப்பாகு, சுக்கு, எள், ஏலக்காய் போன்றவை கலந்து மிருதுத் தன்மைக்காக நெய்யும் கலந்து அரைமணிநேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். வடைக்கு எண்ணெய் சூடாக்குவது போல கடாயில் எண்ணெய் வைத்து மிதமான சூட்டில் சாம்பார்க் கரண்டியில் மாவினை எடுத்து ஊற்றினால் மீனைப் போலத் துள்ளிச் சுழன்று பொறிந்து மிதக்கும் கேழ்வரகுப் பணியாரம். புதிய நிறத்திலான தானிய உணவை ஏற்கத் தயங்கும் பிள்ளைகளின் நாவிற்கு அவர்கள் விரும்பும் வகையிலான மெத்தென்ற பணியாரத்தின் மூலம் கேழ்வரகுச் சுவையை அறிமுகப்படுத்தினால் மெதுமெதுவாக களி, புட்டு, கூழ் போன்றவற்றை விரும்ப ஆரம்பித்து விடுவார்கள். ஏனென்றால் வளர்கிற பிள்ளைகளுக்கு விதவிதமான நுண்சத்துக்கள் அவசியம். வளரும் பிள்ளைகளுக்கு உடலின் உள்ளுறுப்புகளின் கட்டுமானத்திற்கும், வளர்சிதை செம்மையாக்கத்திற்கும், மூளைக் கட்டமைப்பிற்கும் நுண்சத்துக்களே பெருமளவுக்கு உதவிகரமாக இருக்கும்.

    இன்றைய உணவு முறையில் மாவுச்சத்துக்களும், இனிப்புமே முதன்மை இடம் பிடித்துள்ளன. ஆகவே உடலின் சதையமைப்பு மேலே சொன்ன பணியாரத்தைக் காட்டிலும் புசுபுசுவென்று அல்ல சொதசொதவென்று பெருகி விடுகிறது. ஆணானாலும், பெண்ணானாலும் வயதுக்கு மீறி உடலளவில் சதைப்பற்றோடு வளர்ந்து விடுகிறார்கள். ஆனால் அதேநேரத்தில் அந்த வயதிற்குரிய வகையில் உடலுழைப்பு அதாவது ஓடியாடி விளையாடி உடலில், ரத்தத்தில் தேங்கும் கழிவுகள் வியர்வையாக வெளியேறுவதற்குரிய வாய்ப்புகள் இல்லை. படிப்பு, வீட்டுப்பாடம், வாரந்திர டெஸ்ட், மன்ந்த்லி டெஸ்ட், டேர்ம் டெஸ்ட், பள்ளிக்கல்விக்கு அப்பாலான (எக்ஸ்ட்ரா கரிகுலர்) பயிற்சிகள், அடுத்தாண்டுக்கான படிப்பு, நுழைவுத்தேர்வுக்கான தயாரிப்பு என ஓய்வும் களிப்பும் இல்லாத வகையில் தொடர் செயல்பாடுகள் இருந்து கொண்டே இன்றைய மாணவர்களுக்கு. அதிலிருந்து தளர்த்திக் கொள்ள (ரிலாக்ஸ்) அவர்கள் ஈடுபடுவதும் போன் பார்த்தல் அல்லது அதீத சுவை நிரம்பிய பேக்கரி அய்ட்டங்கள் போன்றவையும் மூளைச் சுரப்புகளையும், இயல்பான (ஹார்மோன்) சுரப்புகளையும் தாறுமாறாகத் தூண்டி விடுகின்றன.

    எனவே சுரப்புசார் நோய்களுக்கு உரிய கட்டுத்தும் மருந்துகளை பதின்ம வயதிலேயே எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சுரப்புகளை கட்டுப்படுத்த இயல்புக்கு மாறான மருந்துகளை எடுக்கும் பொழுது அவை மேலும் சில சுரப்புகளைத் ஏறுக்கு மாறாகத் தூண்டி விடவும் இளம் வயதிலேயே தொடர்மருந்துகள் எடுக்க வேண்டிய நோய்க்குத் தள்ளப்படுகிறார்கள். சுரப்புகளின் தடுமாற்றத்தால் இளம் வயதிலேயே இன்சுலின் குறைவு, கூடுதலாகச் சுரக்கும் நோய்க்கு ஆளாகி விடுகின்றனர். தைராய்டு சுரப்பு நோய்களுக்கும் ஆளாகின்றனர்.

    இந்நோய்கள் அதீத பெருக்கும் அல்லது இயல்புக்கு மாறாக மெலிதல் ஆகிய சிக்கலுக்கு உள்ளாக்கி விடுகிறது. இன்றைய வேலைகள் பெரும்பாலும் உடலுழைப்பு சாராது, மூளை உழைப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டிருப்பதால் உடலாரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் குறைந்து கொண்டே வருகிறது. அல்லது சதைக் கட்டுத்திட்டான உடலே ஆரோக்கியமானதென்று நம்பி ஜிம்முக்குப் போய் சதையை ஏற்றுவதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். தம்முடைய தாங்குதிறன் என்பதை உணராத இன்றைய இளைஞர்கள் சிலர், ஜிம்மில் போய் இலக்கு வைத்து வொர்க் அவுட் செய்து மூர்ச்சையாகி இறந்தும் கூட போவதை அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கிறோம். இதற்கு மருத்துவ, உடலறிவியல் காரணங்களை இங்கே பேசுவது பொருத்தமாக இராது. ஆனால் முன்னர் உண்ட முள்ளங்கி, பரோட்டா, பஜ்ஜி ஆகியவற்றின் மீது பழியைப் போட்டு கோப்பினை மூடி விடுகிறார்கள்.

    போப்பு

    96293 45938


    உடலாரோக்கியம் என்பது பொருத்தமான நுண்சத்துக்கள் வழங்கும் உணவிலும், பொருத்தமான உடலுழைப்பையும், போதிய தூக்கத்தையும் உறுதிப்படுத்துவதில் தான் இருக்கிறது என்பதை பிள்ளைகளுக்கு முன்னர் பெற்றோர் உணர வேண்டும். குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்குத் தேவையான நுண்சத்துக்கள் வழங்கும் உணவை உறுதிப்படுத்த வேண்டும். சுவையுணவைப் பிள்ளைகள் தேர்ந்தெடுப்பது தவறாகாது. ஆனால் அவற்றிற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அதேபோல் உடலில் அதீத கழிவுகளையும், ரசாயனங்களையும் தேங்கச்செய்யும் உணவுகளைத் தவிர்ப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று தொட்டதெல்லாம் ரசாயனமே. எனவே உண்ணத் தயார்நிலையில் உள்ள நாவினைச் சுரீரென்று தாக்கும் சுவையும் கண்ணைப் பறிக்கும் நிறமும் உடைய (அட்டைப் பொதி, பிளாஸ்டிக் பாட்டில்களில்) அடைக்கப்பட்ட உணவுகளில் இருந்து மிகவும் கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும். ஆபத்தான விளைவுகளை தோற்றுவிப்பவை என்பதை வார்னிங் என்ற தலைப்பிட்டு கண்ணுக்குத் தெரியாத எழுத்துக்களில் அந்தப் பொதிகளிலேயே அச்சிட்டு இருக்கிறார்கள். மேற்படி உணவுகளை உண்டு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு நாம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் அதிலிருந்து தப்பிப்பதற்காக இந்தத் தந்திரமான வேலையை தயாரிப்பு வணிக நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

    அப்பறம் பிள்ளைகளுக்கு என்ன தான் கொடுப்பது என்று கேள்வி எழுப்பினால் நம்முடைய பாரம்பரியமான தின்பண்டங்களில் அவர்களுக்கு எளிமையான தீர்வு உள்ளது. சத்தும் ஆரோக்கியம் மட்டுமல்ல, தயாரிக்கவும் எளிமையாகும். கேழ்வரகு மாவில் திருப்பதி லட்டினைப் போன்ற ஒரு தின்பண்டம் பாரம்பரியமாகத் தயாரிப்பார்கள். இதற்கு சில பகுதிகளில் சிம்லி என்று பெயர். இன்று பாரம்பரிய உணவகங்களில் பரவலாகி வருகிறது. இந்தச் சிம்லி என்ற பண்டம் தயாரிப்பது மிகவும் எளிதாகும்.

    கேழ்வரகு மாவில் சிறிது சிறிதாக நீர் தெளித்து இட்லிக் கொப்பரையில் வைத்து புட்டாக அவித்து எடுக்க வேண்டும். இதனை பெரிய தாம்பாளத்தில் பரத்தி நன்றாக ஆற விட வேண்டும். ஆறின பின்னர் அதில் ஒருபகுதி எடுத்து உடன் வறுத்த எள்ளையும், ஏலக்காய், மிகச்சிறிய அளவு சுக்கு ஆகியவற்றைச் சேர்த்து மிக்சி ஜாரில் இட்டு அரைக்க வேண்டும். ஒன்றிரண்டாக அரைத்த பின்னர் மீதியுள்ள புட்டுடன் தூவி மேற்படி அரைவையும், பாதியளவு சர்க்கரையும், சிறிதளவு நெய்யும் சேர்த்து சீராகக் கிளறி விட வேண்டும். பின்னர் அதனை எடுத்து உருண்டை உருண்டையாகப் பிடித்து வைக்க வேண்டும். நான்கைந்து நாட்களுக்குக் கெடாத இத்தின்பண்டம் நம்ப முடியாத அளவிற்கு உடலுக்கு ஆற்றலை வழங்கக் கூடியது. எந்த வயதினருக்கும் ஏற்றது.

    கேழ்வரகு மாவும், எள்ளும், சுக்கும் மூளை நரம்புகளுக்குத் தூண்டலைத் தரும். கேழ்வரகுடன் சர்க்கரை சேரும்பொழுது உடல் கட்டுமானத்திற்கும் ஆரோக்கியமான சதைவளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதனுடன் சேர்க்கப்பட்ட நெய் கேழ்வரகின் வறள் தன்மையை நீக்கும். ஆகையால் சிறு பெருங்குடல்களில் இலகுவாக நழுவிச் செல்லும். மலச்சிக்கல் இருந்தால் வாரத்தில் இந்த உருண்டையை இரண்டு முறை சாப்பிட்டால் போதும் அது எளிதாக நீங்கும்.

    மிகவும் குறிப்பாக மாதாந்திர உதிரப்போக்கு நடப்பதில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இளம் பெண்களுக்கு உடலில் வெப்பமும், சத்தும் வழங்குவதால் சீரான போக்கு நிகழும். கால்களுக்குப் பலம் அளிக்கும். கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்கும். உணவுப்பொருளில் நிதானமாக ஏற்றப்படும் வெப்பம் நிதானமாக உடலில் நின்று தேவைக்கு மிகுதியான குளிர்மைத் தன்மையை அகற்றும். எனவே நீர்க்கட்டிகள் உருவாக வாய்ப்பில்லை.

    கேழ்வரகுப் புட்டு, கேழ்வரகு மாவில் பிழிப்படும் இடியாப்பம் என ஆவியில் வேகவைக்கும் உணவு வகைகள் நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த உணவாக இருக்கும். உணவில் உள்ள நார்த்தன்மை குறைவாகவும், மாவுத்தன்மையும் மிகுதியாகவும் இருந்தால் அவ்வுணவில் உள்ள சர்க்கரை மிகவேகமாக ரத்தத்தில் சேரும். ரத்தத்தில் சர்க்கரை சட்டென்று உயர்வது தானே நீரிழிவு நோயின் முதன்மையான பிரச்சனை. முன்னரே பார்த்தது போல கேழ்வரகில் நார்த்தன்மை மிகுதியாக இருப்பதால் அதில் உள்ள குறைவான சர்க்கரை நிதானமாகவே இறங்கும்.

    ரத்தத்திலும் நிதானமாகவே கலக்கும். எனவே சோர்வுணர்வு இல்லாமல் உண்ட நேரத்தில் இருந்து அடுத்த வேளை பசி துவங்கும் வரை சுறுசுறுப்பு குறையாமல் இயங்க முடியும். புட்டும், சிம்லியும் அனைத்து வயதினருக்கும் மிகவும் ஏற்ற உணவாகும். பெருந்தானிய வகையைச் சேர்ந்த கம்பங்கதிர் வானத்தை நோக்கி உயர்ந்து நிற்கக் கூடியது. அது சூரிய வெப்பத்தைப் பருகும் முறையில் இருந்தே புரிந்து கொள்ளலாம் அது எத்தனை வீர்யமிக்க உணவு என்பதை.

    தொடர்ந்து பார்ப்போம்...

    • மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று மேம்போக்காகக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
    • பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது தான் மனம் ஆகும்.

    மனம், மனம் என்று நாம் பொதுவாகக் கூறுகிறோம். சாஸ்திரங்கள் இதனை அந்தக் கரணம் அல்லது அகக் கருவி என்று கூறுகின்றன.

    புறத்தில் உள்ள கருவிகள் என்பவை யாவை?

    கை, கால், கண், மூக்கு, செவி போன்றவை வெளிப்படையாகத் தெரியும்

    வெளிப்புறக் கருவிகள் ஆகும். அவற்றை பயன்படுத்திதான் நாம் பல்வேறு செயல்களையும் செய்து வருகிறோம்.

    அந்தக் கரணம் அல்லது அகக் கருவி என்பது யாது?

    வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியாத அந்த அந்தக் கரணம் என்பது நான்கு வகையாக அமைந்துள்ளது.

    மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் இவை நான்கும் மொத்தமாக சேர்ந்தால் அதன் பெயர் அந்தக் கரணம் அல்லது முழு மனம் ஆகும்.

    மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று மேம்போக்காகக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

    அதனை சற்று சுருக்கமாக பார்ப்போம்.

    நாம் வழக்கமாக நடந்து செல்லும் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கிறோம். நமக்கு சுமார் ஐநூறு மீட்டர் தொலைவில் கும்பலாக ஆட்கள் பலர் நின்று கொண்டிருக்கிறார்கள்.

    வழக்கமாக அப்படி எவரும் கூடி நிற்பதில்லை. அன்று அது வித்தியாசமாக உள்ளது.

    "அருகில் சென்று பார்த்தால் என்ன?" என்று மனம் கூறுகிறது.

    ஸ்ரீ பகவத்


    அதே மனம் வேறு ஒன்றையும் கூறுகிறது: "அங்கு கூடியிருக்கும் ஆட்களைப் பார்த்தால் ஏதோ விவகாரம் பிடித்தவர்களாகத் தோன்றுகிறது. அங்கே சென்று தேவை இல்லாமல் வம்பை விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டாம். நாம் வேறு தெருவின் வழியாகப் போய்விடலாம்."

    இப்படி இரண்டு வகையான எண்ணங்கள் நமக்கு ஏற்படுகின்றன.

    இவற்றில் ஏதாவது ஒன்றைத் தான் செயல்படுத்த முடியும்.

    பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது தான் மனம் ஆகும்.

    அவற்றில் ஏதேனும் ஒன்றை செயல்படுத்துவதற்காக தேர்வு செய்யும் அமைப்புக்குப் பெயர்தான் புத்தி ஆகும்.

    அடுத்து மூன்றாவதாக வருவது சித்தம். சித்தம் என்பது என்ன?

    சித்தம் என்பது என்ன?

    சித்தம் என்பது நமது அடிமனதைக் குறிக்கிறது. நமது இயல்புகள் அனைத்தும் குடியிருக்கும் பகுதிதான் இந்த சித்தம் ஆகும்.

    அந்த சித்தம் எவ்வாறு செயல்படுகிறது?

    கூடியிருந்தவர்களைப் பார்த்து நம் மனது இரண்டு விதமான ஆலோசனைகளை வழங்கி இருந்தது.

    நமது புத்தி முதல் ஆலோசனையை தேர்வு செய்வதாக வைத்துக் கொள்வோம்.

    முதலாவது ஆலோசனை என்ன?

    கூட்டத்தின் அருகில் சென்று பார்த்தல் தான் முதலாவது ஆலோசனை.

    நமக்கு எத்தகைய உணர்வு ஏற்பட்டால் நாம் அங்கே சென்று பார்ப்போம்?

    ஆர்வம் என்ற உணர்வு ஏற்பட்டால் நாம் அருகில் சென்று பார்ப்போம்.

    ஒரு வேளை நமது இரண்டாவது ஆலோசனையை புத்தி தேர்வு செய்வதாக வைத்துக் கொள்வோம்.

    அந்த இரண்டாவது ஆலோசனை எது?

    அந்தக் கூட்டத்தை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்பது தான் இரண்டாவது ஆலோசனை.

    நமக்கு எத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால் நாம் அப்படி ஒதுங்கி ஓடுவோம்?

    பயம் கலந்த உணர்வுகள் ஏதாவது ஏற்பட்டால்

    நாம் அவ்வாறு ஒதுங்கி ஓடிவிடுவோம்.

    இப்படி ஆர்வம் போன்ற பல்வேறு உணர்வுகளை உருவாக்கி வெளிப்படுத்தும் அமைப்புக்குப் பெயர்தான் சித்தம் ஆகும்.

    அடுத்து அகங்காரம் என்றால் என்ன?

    சித்தம் உருவாக்கும் எல்லா உணர்வுகளுடைய மொத்தமான பெயர்தான் அகங்காரம் ஆகும்.

    அந்த உணர்வுகள் தாம் நமக்கு "நான்"

    என்ற அனுபவத்தை ஏற்படுத்துகின்றது.

    மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற இவை அனைத்தும் மொத்தமாக முழு மனம் என அழைக்கப்படுகிறது.

    இந்த நான்கில் முதலாவது வரும் மனம் என்பது மட்டும் தனியாக உணர்மனம்

    என்று அழைக்கப்படுகிறது.

    முழு மனம் 100% சக்தியை உடையது. உணர்மனம் வெறும் 25% சக்தியை மட்டுமே உடையது.

    உணர்மனம் மட்டுமே செயல்படும் போது நாம் மிகவும் பலவீனமாக இருப்போம்.

    ஆனால் முழு மனம் செயல்படும் போது நாம் பலமுடையவர்களாக இருப்போம்.

    முழு மனம் என்பது சித்தம் எனும் நமது அடிமனதை உள்ளடக்கி உள்ளது.

    இந்த அடிமனதினுள்ளேதான் நமது மனோசக்திகள் அனைத்தும் மறைந்து கிடக்கின்றன. இந்த அடிமனதின் ஒரு பகுதியாகவே நமது ஆழ்மனதும் உள்ளது. ஆழ்மனது என்பது பிரபஞ்ச ஆற்றல்கள் அனைத்தும் குவிந்து கிடக்கும் ஒரு இரகசிய அமைப்பு ஆகும்.

    மொத்தத்தில், முழு மனம் என்பது ஒரு குட்டிக் கடவுளாகவே உள்ளது.

    அது மட்டும் அல்லாமல் நமது உணர் மனமும் கூட, முழு மனதின் ஒரு பகுதியாகவே உள்ளது.

    நாம் எதனைச் செய்தாலும் உணர் மனதின் மூலமாகவே செய்தாக வேண்டும்.

    அந்த உணர் மனமானது தான் மட்டும் தனியாக இருந்தும் செயல்படலாம். அல்லது முழு மனதின் பகுதியாக இருந்தும் செயல்படலாம்.

    தனியாக இருந்து செயல்பட்டால் அது தடுமாற்றத்துடன் செயல்படும். அதுவே முழு மனதின் பகுதியாக இருந்து செயல்பட்டால் தடுமாற்றம் இல்லாத ஆற்றலோடு செயல்படும்.

    அது ஒரு பெரிய பங்களா. வாயிற் காப்பாளர் மட்டும் வாசலில் நின்று கொண்டிருக்கிறார். வீட்டு உரிமையாளர் வீட்டினுள் இருக்கிறார்.

    ஒரு நாள் முரட்டு மனிதர் ஒருவர்

    வாசலுக்கு வந்து, முரட்டுக் குரலில் "உங்கள் முதலாளியைப் பார்க்க வேண்டும்"

    என்று கூறுகிறார்.

    அவர் முரட்டுத்தனமான மீசையும் வைத்திருக்கிறார். இடுப்பில் பெரிய பட்டாக்கத்தி ஒன்றையும் சொருகி வைத்திருக்கிறார்.

    அவரை வீட்டுக்குள்ளே அனுப்ப தயக்கமாக இருக்கிறது.

    முதலாளியை இன்டர்காமில் அழைத்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்கிறார்.

    முதலாளியும், வந்தவரை உள்ளே அனுப்புமாறு கூறுகிறார்.

    வாயிற் காப்பாளரும், தயக்கத்துடனேயே அவரை உள்ளே அனுப்புகிறார்.

    என்ன நடக்கிறது என்பதை இவரும் எச்சரிக்கையோடு கவனித்துக்

    கொண்டிருக்கிறார். வந்திருந்த அந்த முரட்டு மனிதர் மெயின் ஹாலினுள் நுழைந்து அங்கிருந்த முதலாளியைச் சந்திக்கிறார்.

    முதலாளிக்கு வந்தனம் செலுத்தியவாறே,

    இடுப்பில் சொருகியிருந்த பட்டாக்கத்தியைக் கழற்றி மேஜையின் மீது வைக்கிறார். மீண்டும் ஒருமுறை வணக்கம் செலுத்திவிட்டு வெளியே சென்று விடுகிறார்.

    காவலாளி நிம்மதியடைகிறார்.

    இங்கே காவலாளியாக வருபவர் தான் உணர்மனம்.

    முதலாளியாக வருபவர் தான் முழு மனம்.

    உணர்மனம் எப்போதும் தடுமாற்றத்துடனேயே இருக்கும். முடிவெடுக்கத் தெரியாது.

    முழு மனதில் தயக்கம் எதுவும் இருக்காது. அது சுலபமாக முடிவுகளை எடுத்துவிடும்.

    அந்தக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு கதை.

    அக்காலத்தில் சில குடும்பங்கள் திருடுவதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

    அப்படி ஒரு குடும்பத்தில், ஒருவர் மட்டும் திருட்டுகளைச் செய்து வந்தார்.

    அவரை நம்பி அவரது மனைவியும் மகனும் வாழ்ந்து வந்தார்கள்.

    மகனுக்கும் வயதாகிக் கொண்டு வந்தது.

    ஒரு நாள் மகன் தகப்பனிடம் கேட்டான்:

    "நீ திருடிக்கொண்டு வருவதை வைத்து தான் நாங்கள் எல்லோரும் சாப்பிடுகிறோம்.

    உனக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது.

    நானும் வளர்ந்து பெரியவனாகி விட்டேன். உனக்குப் பிறகு நான்தானே இந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். திருடுவது எப்படி என்று இதுவரை எனக்கு நீ கற்றுக் கொடுக்காமல் இருக்கிறாயே? திருடுவதை நீ எனக்கு கற்றுக் கொடுக்க வேண்டாமா?"

    அந்தத் தகப்பனும், "நீ சொல்லுவதும் சரிதான். இன்று நான் திருடப் போகும் போது நீயும் என்னுடன் சேர்ந்துகொள். நாம் இருவருமாக சேர்ந்து சென்று திருடுவோம். நீயும் திருட்டை கற்றுக் கொள்ளலாம்" என்று கூறினான்.

    அன்று இரவு ஊர் அடங்கிய பிறகு இருவரும் திருடுவதற்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

    திருடுவதற்காக ஒரு பெரிய மாளிகையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

    சாமர்த்தியமாக இருவரும் அந்த மாளிகையினுள் நுழைந்தார்கள்.

    ஒரு பெரிய அறையில் விலை உயர்ந்த நகைகளை வைக்கும் ஒரு பெரிய இருப்புப் பெட்டி இருந்தது.

    பெரிய திருடன் தன்னிடம் இருந்த கள்ளச் சாவிகளைக் கொண்டு சாமர்த்தியமாக அந்த இரும்புப் பெட்டியைத் திறந்து விட்டான்.

    ஒரு நபர் சாதாரணமாக உள்ளே நுழையும் அளவுக்கு அது ஒரு பெரிய இரும்புப் பெட்டி.

    "இரும்புப் பெட்டிக்குள் நுழைந்து நமக்கு வேண்டியதை எல்லாம் எடுத்து மூட்டையாகக் கட்டு" என்று தகப்பன் மகனிடம் கூறினான்.

    மகனும் அந்த இரும்புப் பெட்டியினுள் நுழைந்தான்.

    அந்த இரும்புப் பெட்டியினுள் இருந்த நகைகளையும் பணத்தையும் பார்த்து மலைத்துப் போய்விட்டான். போதும் போதும் என்ற அளவுக்கு நகைகளையும் பணத்தையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டினான்.

    அந்நிலையில் அந்தத் தகப்பன் அவனை அப்படியே இரும்புப் பெட்டியினுள் வைத்துப் பூட்டிவிட்டு தான் மட்டும் தப்பிச் சென்றான்.

    இரும்புப் பெட்டியினுள் மாட்டிக் கொண்ட மகன் திகைத்துப் போனான்.

    "திருடுவதற்கு கற்றுக் கொடுக்கச் சொன்னது

    தவறா? என்னைக் கொல்லவேண்டும் என்று

    திட்டம் போட்டிருந்தானா?" அவனால்

    நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை.

    மரண பயத்தினால் வேர்த்து விறுவிறுத்துப் போய்விட்டான்.

    சப்தம் போட்டும் எவரையும் உதவிக்குக் கூப்பிட முடியாது.

    செய்வதறியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டான்.

    பொழுதும் விடிந்துவிட்டது.

    அந்த அறையை சுத்தம் செய்ய வேலைக்காரியும் வந்து விட்டாள்.

    அடுத்து என்ன நடந்தது?

    தொடர்புக்கு: வாட்ஸப் - 8608680532

    ×