என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- நம்மில் பலர் இதனைப் புரிந்து கொள்ளவே நெடுங்காலம் ஆகிறது.
- முதல் அடியை எடுத்து வைத்தாலே, எப்பேர்ப்பட்ட சுமையான பயணத்தையும் சுகமாக மாற்றிவிடலாம்.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். இந்த உலகில் அறம் செய்ய விரும்புகிறோமோ, இல்லையோ, பணம் செய்ய விரும்புகிறோம். காரணம் பணத்தின் மீதான பேராசை அல்ல; பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்ற உலகியல் ஞானம்தான் பணத்துக்கு இத்தனை முக்கியத்துவத்தை உண்டாக்குகிறது. அதை நோக்கிய நம் பயணம் நாம் பிறப்பதற்கு முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று.
ஆம், தாயாரை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல பணம்; டாக்டருக்குப் பணம்; நம்மை நம் பெற்றோருக்கு அறிமுகம் செய்யும் செவிலியருக்குப் பணம் என்று நம் குடும்பத்தினர் செய்யும் செலவில்தான் நம் வாழ்க்கையே துவங்குகிறது.
குழந்தைகளுக்கான தடுப்பூசியில் துவங்கி, ஸ்கூல், காலேஜ் கல்வி, வேலை, திருமணம், குழந்தைப் பேறு, சைக்கிள், பைக், கார், தங்கம், வீடு, குழந்தைகளுக்கான ஏற்பாடுகள், ஓய்வுக்காலம் என்று அதன் பின்வரும் ஒவ்வொரு கட்டத்திலும் பணத்தின் தேவையை, அவசியத்தை, நிர்ப்பந்தத்தை நாம் சந்திக்க நேர்கிறது.
ஏனெனில், வசதி இருப்போருக்கு எளிதில் திறக்கும் கதவுகள் மற்றவர்கள் தட்டித் தட்டி கை ஓய்ந்தாலும் திறப்பதில்லை. இதைக் காணும் நமக்கு வெறும் கை முழம் போட முடியாது என்ற உண்மை புரிய வருகிறது. இதனை சிறு வயதிலேயே உணர்பவர்கள் பணத்தை நோக்கிய தங்கள் பயணத்தை சீக்கிரமே ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்களுக்கு பயணம் சுகம்.
ஏற வேண்டிய சிம்மாசனம்
ஆனால் நம்மில் பலர் இதனைப் புரிந்து கொள்ளவே நெடுங்காலம் ஆகிறது. அப்படியே புரிந்துகொண்டாலும் பணக்காரன் என்ற சிம்மாசனத்தை நோக்கி ஏறுவதற்கு எத்தனை படிகளைத் தாண்ட வேண்டி வருகிறது! சிறந்த கல்வி, நல்ல வேலை, கை நிறைய சம்பளம், செலவைக் குறைக்கும் மனப்பான்மை, சேமிக்கும் சூழ்நிலை, முதலீடுகள் குறித்த அறிவு, சேர்த்த பணத்தைப் பாதுகாக்கும் ஞானம், இத்தனைக்கும் அடிப்படையாக நல்ல உடல் உரம் – இப்படி எத்தனை விஷயங்கள் தேவைப்படுகின்றன? அவற்றில் எத்தனை நம்மிடம் இருக்கின்றன? இவை இல்லாதவர்கள் என்ன செய்யலாம்?
இவற்றில் பல விஷயங்கள் உங்களிடம் இல்லை என்றாலும் உங்களால் ஒரு வசதியான வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும் என்றால் நம்புவீர்களா? உங்கள் வயது முப்பது, நாற்பது, இல்லை, ஐம்பது, என்றாலும் உங்களால் பணம் பற்றிய கவலை இல்லாமல் வாழ முடியும்; அதற்கான வழிமுறைகளைக் கூறுவதுதான் இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம்.
மக்கள் பலவிதம்
அநேகமாக நம்மில் பலரும் நாற்பது வயது வரை சேமிப்பு, முதலீடு போன்றவை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. நம் மீது, நம் இளமை மீது நம்பிக்கை இருக்கும்வரை எதுவுமே ஏற முடியாத பெரிய மலையாகத் தோன்றுவதில்லை. முதல் நரை தோன்றும்போது அல்லது மகள் இளமையின் தலைவாசலில் நிற்பதைக் காணும்போது சட்டென்று ஒரு கவலை தோன்றும்.
அதே நேரத்தில் நம்முடன் பணி புரிபவர்கள் நோய்வாய்ப்படுவதைப் பார்க்க நேரும்; அல்லது சிலர் வேலைநீக்கம் செய்யப்படுவதையும் காண நேரும். அப்போதுதான், நமக்கு வேலை போனால் எப்படி சமாளிப்போம் என்ற பயம் தோன்றும்.
இன்னும் சிலர் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே சேமிப்பிலும் ஒரு கண் வைத்து, பணம் சேர்த்திருக்கலாம்; ஐம்பது வயதை நெருங்கும்போது, பல காரணங்களால் அந்தப் பணம் கரைந்திருக்கலாம் அல்லது கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கலாம். இன்னும் சிலர், "குடும்பத்தை கவனிக்க இன்று நான் செலவு செய்கிறேன்; என் வயது காலத்தில் குடும்பம் என்னை கவனித்துக் கொள்ளும்" என்ற நம்பிக்கையில் சேமிப்பு குறித்து கவலையின்றி இருந்திருக்கலாம்.
இவர்கள் அனைவருமே இன்று எதிர் காலத்தை எண்ணிக் கலங்கும் நிலையில் இருப்பார்கள். பலர் தங்கள் தவறால்தான் இந்த நிலை வந்தது என்ற குற்ற உணர்வில் இருப்பதையும் பார்க்கிறோம். இன்று பொருளாதாரம் குறித்து நிறைய விழிப்புணர்வு வந்திருக்கிறது. கட்டுரைகள், யூடியூப் நிகழ்ச்சிகள் போன்றவற்றைப் பார்த்து தங்கள் பொருளாதார நிலைமையை சரி செய்ய பலரும் முயற்சி செய்கிறார்கள்.
செலவுகள் அதிகம்; சேமிப்போ எட்டாக்கனி
ஆனால், என்ன முயற்சி செய்து என்ன பயன் என்ற விரக்தியே மிஞ்சுகிறது. ஏனெனில், சம்பளம் அதிகமாக உயர்வதில்லை; ஆனால் செலவுகள் உயர்கின்றன. வீட்டு வாடகை வருடாவருடம் குறைந்த பட்சம் 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கின்றது.
பிள்ளைகளின் பள்ளிக்கல்வி என்று எடுத்துக் கொண்டால், ஹோம் ஒர்க் அனுப்புவதற்கு ஸ்மார்ட் போனும், காலேஜ் கல்விக்கு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டும் அத்தியாவசியமாக உள்ளன. பிள்ளைகளுக்கான கல்விச் செலவும் பெரியவர்களுக்கான மருத்துவச் செலவுகளும் வருடாவருடம் 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை ஏறுகிறது. பண்டிகைக்கு புத்தாடைகள், திருவிழாக்கள் மற்றும் திருமணங்களுக்காக பயணம் மேற்கொள்ளுதல், பரிசு வழங்குதல் என்பது போன்ற, உறவுகளுக்கான செலவுகளை எத்தனை குறைத்தாலும் கையில் உள்ள பணம் கரைவதைத் தடுக்க முடிவதில்லை.
இன்னொரு பக்கம் நிலவும் நிலை என்ன? தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. பத்தாயிரத்தை நோக்கி நகர்கிறது. வீட்டு மனைகள் மற்றும் அபார்ட்மென்ட்டுகளின் விலை பல லட்சங்களில் உள்ளது. வங்கிகள் தரும் வட்டி விகிதம் வருடாவருடம் உயரும் விலைவாசியை சமாளிப்பதற்குக் கூட உதவுவதில்லை. பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட் போன்றவை சற்று அதிக வருமானம் தரும் என்று கூறப்படுகிறது. ஆனால் அடிக்கடி அவை மேலும், கீழும் நகர்ந்து நம் லாப, நஷ்டங்களைத் தீர்மானிக்கின்றன. அது மட்டுமின்றி, அவற்றைக் கையாள கம்ப்யூட்டர் வசதிகளும், செய்திகளை உடனுக்குடன் பெறும் வசதியும் தேவைப்படுகிறது.

சுந்தரி ஜெகதீசன்
இத்தனையையும் மீறி, சேமிக்க முனைந்தால், சாண் ஏறுகிறது; முழம் சறுக்குகிறது. ஒவ்வொரு மாதமும் குறித்த தொகையை சேமிப்பது பிரம்மப் பிரயத்தனமாக உள்ளது. தப்பித் தவறிக் கடன் வாங்கி விட்டால், நிலைமை இன்னும் மோசமாகிறது. வாங்கும் சம்பளம் அத்தனையும் இ.எம்.ஐ. கட்டவே சரியாக இருக்கிறது. "இப்படி இன்றுள்ள நிலைமையை துல்லியமாகக் கூறும் நீங்கள், எந்த வயதிலும் சேமித்து முன்னேறலாம் என்று எந்த தைரியத்தில் கூறுகிறீர்கள்?" என்ற உங்கள் கேள்வி காதில் விழாமல் இல்லை.
வரலாறு முக்கியம்
முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். நம் நாடு வளர்ந்த நாடல்ல; விவசாயம் சார்ந்த நாடு. முப்பது வருடம் வேலை, முப்பது வருடம் ஓய்வுக்காலம், பென்ஷன், மியூச்சுவல் பண்ட் போன்ற பல பொருளாதார கருத்துக்கள் இங்கு கால் பதிக்கவே நாளாயிற்று. அவை அறிமுகமாகி, சுமார் நூற்றைம்பது, இருநூறு வருடங்கள் இருக்கலாம். அதற்கு முன்பு இருந்த விவசாயம் சார்ந்த சமூகத்தினருக்கு ஓய்வுக்காலம் என்பதே கிடையாது. வயது மூத்த காலத்தில் பிள்ளைகள் உடல் உழைப்பை கைக்கொள்ள, பெரியவர்கள் தங்கள் அறிவையும், அனுபவத்தையுமே பகிர்ந்து கொண்டனர்.
அவர்கள் வாரிசுகளான நமக்கும் மேற்கூறிய பென்ஷன், மியூச்சுவல் பண்ட் போன்றவை ஓரளவு புதியவையே. ஆகவே அவற்றைப் பூரணமாக உள்வாங்குவதில் நமக்கு சிரமம் உள்ளது. மேலும் நகரங்களில் உள்ளோருக்கு எளிதில் வாய்த்துவிட்ட சேமிப்பு வழிகள், கிராமம், சிற்றூர் போன்ற பின்தங்கிய இடங்களில் காலூன்றவே நாளாகியது. போன், இன்டர்நெட், கம்ப்யூட்டர் போன்ற வசதிகளும் மெல்ல மெல்லவே இந்த இடங்களுக்கு வந்து சேர்கின்றன.
ஜெயிக்கும் வழி
இவற்றையெல்லாம் மீறி இன்று வங்கிகளின் சேவை கடைக்கோடி மனிதனுக்கும் சென்று சேர்கிறது. போஸ்ட் ஆபீஸ், ஏ.டி.எம். பயன்பாடு, சேமிப்புத் திட்டங்கள் ஆகியவை நாடெங்கும் பரவி உள்ளன. அவற்றை பயன்படுத்தி முன்னேறும் வழியும் நமக்கு புலப்பட ஆரம்பித்துள்ளது.
ஓட்டப்பந்தயத்திலோ, நீச்சலிலோ ஜெயிக்க விரும்பினால் சிறுகச் சிறுக நம் உடல் உரத்தைப் பெருக்கவேண்டும்; தினந்தோறும் பயிற்சி செய்யவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சி நேரத்தைக் கூட்டவேண்டும். ஆனால் நாம் எடுத்த எடுப்பில் வானம் வசமாக வேண்டும் என்று எண்ணுகிறோம்; அகலக் கால் வைக்கிறோம்; கடன் வலையில் சிக்கி, இருப்பதையும் இழக்கிறோம். அப்படியானால், இந்த வாழ்க்கைப் பந்தயத்தில் ஜெயிக்கும் வழி என்ன? வரும் வாரங்களில் பார்க்கலாம்.
முதல் அடியை எடுத்து வையுங்கள்
முதலில் உங்களிடம் இருக்கும் பணம், சிறு நகைகள், சைக்கிள், பைக் போன்ற அசையும் சொத்து, அசையாச் சொத்து எவ்வளவு என்பதைக் கணக்கெடுங்கள். (இன்று இந்தக் கட்டுரையைப் படிக்கும் அளவுக்கு உங்களுக்குக் கல்வி இருந்தால் கண்டிப்பாக உங்களிடம் ஓரளவு பணமும், சம்பளம் தரும் ஒரு வேலையும் இருக்கும்.) அத்துடன் மாதாமாதம் உங்களால் எவ்வளவு பணத்தை சேமிப்புக்காக ஒதுக்கமுடியும் என்பதையும் கணக்கிடுங்கள். இந்த முதல் அடியை எடுத்து வைத்தாலே, எப்பேர்ப்பட்ட சுமையான பயணத்தையும் சுகமாக மாற்றிவிடலாம். ஆல் த பெஸ்ட்!
- நம்முடைய நாட்டுத் தானியங்களில் கம்பில் தான் அதிக பசைத் தன்மை அதிக அளவில் உள்ளது.
- நாட்டுத் தானிய உணவை உண்கிறபொழுது வயிற்றில் உணவு தங்கி வயிறு கீழிறங்கி தொப்பை போடவேண்டிய அவசியம் இருக்காது.
கம்பினை சுமார் ஒருமணி நேரம் ஊறவைத்தால் போதும். நீரினை வடித்து உலர விட்டு உரலில் போட்டு உலக்கையால் இடிப்பார்கள். இரண்டு உலக்கை போட்டு இளம்பெண்கள் இருவர் ஜங் ஜங்கென்று தோள்பட்டை அதிர இடித்தால் தெருவே அதிரும். அக்காலத்தில் மிகவும் வசதியான வீடுகளில் கூட இடிவுரலைத் தனியாக வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஏன் ஈர மாவினை ஆட்டுகிற உரல் கூட தெருவுக்கு ஒன்றுதான் இருக்கும். தெருவுக்கு ஒன்றாக உள்ள உரலில் பண்டிகைக் காலங்களில் ஆட்டும்போது பத்துப்பதினைந்து பேர் வரிசை கட்டி ஆட்டினாலும் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொள்ள மாட்டார்கள். அப்படியே சண்டையிட்டாலும் அது ஓரிரு மணிநேரங்களுக்குக் கூட நீடிக்காது. ஓரிடத்தில் கூடியும் இணைந்தும் செய்தால் தான் வேலைநடக்கும். அடுத்த வேளைக்கு உலை வைக்கமுடியும் எனும்படிக்கான வாழ்க்கை முறை நம்மிடம் இருந்தது. எனவே சமூக ஒற்றுமை, பிணைப்பு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் அனைத்தும் தன்னியல்பாக அமைந்திருந்தது.
ஆற்றுநீரை, ஏரி, குளம் நீரை பகிர்ந்து பயன்படுத்த வேண்டியிருந்தது. அதில் பற்றாக்குறை ஏற்பட்டபோது பிரச்சனைகள் எழாமல் இல்லை. ஆனால் அப்படி சிக்கல் எழும்போது யாரும் நீதிமன்றத்தை, நடுவர் மன்றத்தை நாடிச் செல்ல வேண்டிய நிலை இருந்ததில்லை. பிரச்சனை எழும்போதே அங்கே தீர்த்துவைப்பதற்கு ஒருவர் இருப்பார். ஊர்ப்பெரியவர், நாட்டாண்மை, பெரிய தலைக்கட்டு, அனுபவஸ்தர் என்று யாராவது இருப்பார்கள். இவர்களில் யாரும் பிரச்சனைகளின் மையத்தைத் தான் பார்ப்பார்களே தவிர சம்பந்தப்பட்டவர் வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்கமாட்டார். தனக்கு அதில் என்ன கிடைக்கும் என்று பார்க்க மாட்டார். தனக்கு வேண்டிய உறவுக்காரருக்கு நட்டம் ஏற்பட்டாலும் நீதியைத் தான் முன்வைப்பார்கள். அப்படித் தன்னலம் பாராத மனிதர்கள் இருக்கவே செய்தனர்.
மக்களிடையே சாதிகள் இன்றைக் காட்டிலும் அன்று துல்லியமாகக் கோடுகிழிக்கப்பட்டு இருந்தாலும் சாதியப் பிளவுகள் இருந்ததில்லை. சாதிகளுக்குள் இணக்கமும் நெருக்கமும் இருக்கவே செய்தது. அதைத் தான் ஊர்க்கூடித் தேரிழுத்தல் என்றார்கள். கோவில் கொடை கொண்டாட்டம் மட்டுமல்ல, துக்கமும் கூட ஊர்க்கூடியே கழித்தது. ஆம் ஊரில் எந்தத் தெருவில் சாவு என்றாலும் ஊரின் மொத்த சனமும் துக்க வீட்டில் கூடி இருக்கும்.
இறுதிச்சடங்கு நடந்து முடியும்வரை யாரும் காட்டுவேலைகள் தோட்டவேலைகள் எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எழுதப்படாத விதி இருந்தது. அந்த விதியை தன்னொழுங்காகவே அனைவரும் பின்பற்றி வந்தனர்.
தீண்டாமை என்பது ஒரு கொடூர வியாதி தான். ஆனால் அதையும் மீறி சமூக ஒழுங்கு இருந்தது. இன்றும் சில கிராமப் புறங்களில் இந்த ஒழுங்கு பின்பற்றப்படுகிறது. மிகவும் அடித்தட்டில் உள்ள இறப்புச் சடங்குகளுக்குக் கூட பொருள் வளமை இல்லாத வீட்டில் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் ஊரில் உள்ள பெருந்தனக்காரர், பொருள் வசதிபடைத்தோர் அடுத்தவருக்குத் தெரியாமல் பணத்தைக் கையில் திணித்து விட்டுப் போவார்கள்.
இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி சின்னஞ்சிறிய வாழ்வாதாரத்தைக் கூட ஆட்டைப்போடும் பெரிய மனிதர் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கத்தான் செய்தனர். ஆனால் சமூக இணக்கமும் மனிதத்துவமும் மேலோங்கி இருந்ததே அதிகம். அதனால் தான் சண்டைச் சச்சரவுகளை விட சமாதான காலம் நீடித்து இருந்தது.
இடி உரலை வீட்டுக்குள் போட்டு இடித்துக் கொண்டிருந்தால் இடிக்கிற அதிர்வில் வீட்டுச் சுவர்களே விரிவு விட்டுவிடும். எனவே தெருவிலோ மந்தையிலோ தான் உரலைப் போட்டு வைப்பார்கள். அனைவரும் காட்டுவேலைகள் முடித்து விட்டு வந்து ஒரேநேரத்தில் தான் உலை வைப்பார்கள். ஆனாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கம்பினை உரலில் இடிப்பார்கள். கம்பினை இடிக்க உடலில் வலுவிருக்க வேண்டும். கம்பிடிக்க உடல் திறனில்லாத வயதானவர்களுக்கு இளம்பெண்கள் தாமாகவே முன்வந்து இடித்துக் கொடுப்பார்கள். சுமார் இருபது வயதில் இருந்து ஐம்பது வயதிற்கு உட்பட்டவர்களே இடிப்பார்கள். பெண்கள் எப்படித் தமக்குள் மிக எளிதாகச் சண்டையிட்டுக் கொள்வார்களோ அவ்வளவு எளிதில் இணக்கமாகியும் விடுவார்கள். அந்த இணக்க உணர்வு இருந்தால் ஒழிய ஒரே தாளலயத்தோடு கம்பு இடிக்க முடியாது.

போப்பு, 96293 45938
கம்பு தானியம் கேழ்வரகு அளவிற்கு இல்லையென்றாலும் சற்றுக் குறைவான அளவிற்கு இறுகல் தன்மை உடையதுதான். அதனால் நீரில் ஊற வைக்காமல் இடித்தால் இடிக்கவும் முடியாது. மீறி இடித்தால் மாவாக தெறிக்கும். நீண்டநேரம் முழுதாக ஊறிவிட்டால் இடிக்கும் பொழுது சொதசொதவென்று நுரைத்துப் பொங்கிவிடும்.
கம்பஞ்சோறு வைப்பதற்குரிய பக்குவம் தவறி விடும். வாயில் போட்டு மெல்லும் பக்குவத்திற்கு ஊறவிட்டு இடித்தால் கம்பு பதமாக, நொய்யாக உடையும். ஈரமாகக் கெட்டி உருண்டையாகவும் பிடிக்கலாம். உதிரியாகவும் இருக்கும். இதுதான் கம்பஞ்சோறு காய்ச்சுவதற்குப் பொருத்தமான உடைப்பு ஆகும். கொதிக்கிற உலையில் உடைத்த கம்பினை பூச்சாறல் போல் பொழிந்தால் கட்டிப்படாமல் ஒன்றுடன் ஒட்டாமல் நொய் மலர்ந்து சோறாகும். சோறு முழுமையாக வெந்து விட்டதும் ஒன்றோடொன்று இணைந்து களி பதத்தில் இறுகத் தொடங்கும். அந்த நேரத்தில் அடுப்பில் தனலைத் தணித்து விடுவார்கள். மண்பாண்டத்தின் வெப்பத்தால் அடியில் ஒரு ஏடு பிடிக்கும் பாத்திரத்தில் உள்ள அடிச்சோறுவரை எடுத்த பின்னர் அந்த அடியேட்டினை பழத்தோலினை உரித்து எடுப்பது போல எடுத்தால் தோசை போல இருக்கும் ஏட்டினை உண்ண போட்டா போட்டி நடக்கும்.
கம்பஞ்சோறு வைத்தால் சூடாக குழம்பு ஊற்றி சாப்பிடலாம். அதுவே மறுநாள் காலையில் குளிர்ந்த பின் இன்னும் இறுகலாகப் பதமாக கிரீம் கிரீமாக வழித்து எடுக்கலாம். ஆறின கம்பஞ்சோறு துணைக்கு தொட்டுக்கொள்ள எதுவும் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம். ஹார்லிக்சை விட சுவையாகவே இருக்கும். ஊட்ட பானம் என்று சொல்லப்படுபவற்றில் ஆதார சுவையை வழங்குவது சிறுதானியக் கலவையே ஆகும். சிறுதானியங்கள் உடலுக்கு ஊக்கம் தருபவையாகும். ஆனால் ஊட்ட பானங்களில் சேர்க்கப்படும் மணம், நிறம், சுவையூட்டிகள் மூளைக்குத் தூண்டலைத் தருகின்றன. எனவே தான் மீண்டும் மீண்டும் அவற்றை பருக வேண்டும் என்ற எண்ணம் ஓரிரு முறை பருகிப் பழகியவர்களுக்கு ஏற்படுகிறது.
மேலும் சில பானப் (பவுடர்) பொடிகளில் அதீதமான சர்க்கரைச் சேர்மானம் செரிமான உறுப்புகளில் சட்டென்று ஓர்நிறைவின்பத்தை அளிக்கின்றன. ஆனால் இந்த நிறைவின்பம் நமது உள்ளுறுப்புகளைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியவை என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. இப்படியான உள்ளுறுப்புகளின் பாதிப்பால் ஹார்மோன் சுரப்பிகளும் இளம் வயதிலேயே ஏறுக்குமாறாகச் சுரக்கத் தொடங்குகின்றன. இவையே இன்று பரவலாகி வரும் நோய்களுக்கு ஆதாரப் பண்புகள்.
சிறுதானியங்களை நேரடியாகப் பாரம்பரிய முறைப்படி எடுத்துக் கொள்கிறபோது அவற்றின் சத்துக்கள் உடலுக்குள் முழுமை பெற்று விட்டால் மீண்டும் அவற்றை எடுக்கத் தோன்றாது. இது சலிப்புணர்வல்ல. நிறைவுற்ற உணர்வே ஆகும். எனவே சுவையூட்டிகளையும், மணமூட்டிகளையும் சேர்க்காத வகையில் சிறுதானியங்களைப் பயன்படுத்துவதே உடலுக்கு நன்மை பயக்கும்.
நம்முடைய நாட்டுத் தானியங்களில் கம்பில் தான் அதிக பசைத் தன்மை (glutun) அதிக அளவில் உள்ளது. நார்ச்சத்துடன் கூடிய பசைத்தன்மை உடலுக்கு அதிக ஊட்டத்தை வழங்கும். சதை வளர்ச்சிக்கு ஏற்றது கம்பின் பசைத் தன்மை. இந்த பசைத்தன்மை லினோலெயிக் (linoleic) அமிலப் பண்புடையதாகும். இந்த அமிலத்தின் உயிர்ப்பு (ஒமேகா) உடலில் சேரும் ஒவ்வாத பிற ரசாயனக் கூறுகளை எதிர்த்து நீக்கவல்லதாகும்.
சரி, தற்காலத்தில் உரலும், உலக்கையும் அருங்காட்சிப் பொருளாகி விட்ட பின்னர் நகரிய வாழ்க்கை முறையில் கம்பஞ்சோற்றுக்கு கம்பினை இடிப்பது எப்படி? உரலையும், உலக்கையையும் கண்டுபிடித்து விட்டாலும் அதனை இடிக்கும் புஜபலம் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் கூட இல்லை. எனவே சுத்தம் செய்யப்பட்டக் கம்புவை ஒன்றிலிருந்து ஒன்றரைமணி நேரம் ஊற வைத்து வடிதட்டில் கொட்டி ஆறவிட வேண்டும்.
நன்றாக உலர்ந்த பின்னர் மிக்சியின் பெரிய ஜாரில் விட்டு ஒரே ஓட்டாக ஓட்டாமல் நிறுத்தி நிறுத்தி கிளறி விட்டு கம்பு அளவைப் போல மூன்று மடங்கு நீர் வைத்து கெட்டிபடாமல் உதிரியாக நீரில் பெய்து சிம்மில் வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவேண்டும். நீர் வற்றியதும் அப்படியே அணைத்து சற்று நேரம் மூடி வைத்தால் பிரியாணி போல கமகமக்கும் கம்பஞ்சோறு.

காலையில் இந்தக் கம்பஞ்சோற்றினை காலை நேரத்தில் மிதமான புளிப்பும் காரமும் கொண்ட தக்காளித் தொக்குடன் அல்லது தக்காளிச் சட்னியுடன் சாப்பிட்டுப் பாருங்கள். காலை டிபனுக்குப் பின் வரும் உண்ட மயக்கம் தோன்றாமல், இடையிடையே காபி, டீ குடிக்கத் தோன்றாமல் சரசரவென்று வேலை நடக்கும்.
இதே கம்பினை அரைக்கிலோ கம்புடன் நூறுகிராம் தோலுடன் கூடிய உடைத்த உளுந்து போட்டு ஊற வைத்து கிரைண்டரில் விட்டு ஆட்டி ஆறு மணிநேரம் புளிக்க வைத்து தோசையாகச் சுட்டால் துணைக்கு ஏதும் தேவைப்படாமல் சாப்பிடலாம். தேங்காய்ச் சட்னியோ, தக்காளிச் சட்னியோ தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் வழக்கமாகச் சாப்பிடும் நான்கோ, ஐந்தோ சாப்பிடத் தோன்றாது. ஏனென்றால் நல்ல சத்து மிகுந்த கம்பு தோசை இரண்டு சாப்பிட்டாலே போதுமென்று தோன்றும். மிகு சத்துள்ள உணவை குறைவாக உண்டதும் உடல் நிறைவெய்தும். ஆகையால் நாட்டுத் தானிய உணவை உண்கிறபொழுது வயிற்றில் உணவு தங்கி வயிறு கீழிறங்கி தொப்பை போடவேண்டிய அவசியம் இருக்காது.
இதைவிட இன்னொரு எளியமுறை அதேநேரத்தில் சத்தான உணவு குறித்து அடுத்தவாரம் பார்க்கலாம்.
தொடர்வோம் சுவை.
- பார்வையற்ற ஒருவர் ரெயில் வண்டியில் பேனாக்களை விற்கிறார்.
- மனிதனின் உழைப்பே... கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.
நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நாளிதழ் உங்களுக்கு...எப்படிக் கிடைத்தது...?
பணம் கொடுத்ததால் கிடைத்தது.
பணம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது...?
உழைத்ததால் கிடைத்தது.
சரி..
அந்தப் பணத்தை செய்தித் தாளுக்கு ஏன் நீங்கள் கொடுக்க வேண்டும்....?
ஏனெனில் இந்த செய்தித்தாளுக்கு பின்னே நூற்றுக்கணக்கான மனிதர்களின் உழைப்பு உள்ளது.
உலகம் இயங்குவது உழைப்பாலே..
மனிதன் தோன்றிய நாளில் இருந்தே உழைப்பும் தொடங்கி விட்டது.
இதை எளிமையாக இப்படிக் கூறலாம்.
நாம் இன்று எழுதப் பயன்படுத்தும்,
யூஸ் அண்ட் த்ரோ... வகை எழுதுகோல் இதற்கு முன் என்னவாக இருந்தது.?
மை ஊற்றி எழுதும் பேனாவாக..
அதற்கு முன்னர்..?
மை தொட்டு எழுதும் பேனா..
அதற்கு முன்னர்..?
பென்சில்..
அதற்கு முன்னர்..?
பனையோலை..எழுத்தாணி.
அதற்கு முன்னர்..?
களிமண் சுடு பலகை/ கைவிரல்.
அதற்கு முன்னர்..?
பாறைக் குகை சுவர்கள்/கற்களால் சித்திரம்... தீட்டியது.
அப்படியானால் இன்றைய யூஸ் அண்ட் த்ரோ வகை எழுதுகோலிற்கு பின்னே ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உள்ளது.
பாறையில் எழுதியதில் இருந்து... படிப்படியாக இன்றைய எழுது கோலிற்கு வந்ததற்கு பின்னே நூற்றுக்கணக்கான மனிதர்களின் உழைப்பும்... அறிவும் உள்ளது.
நமக்கு முந்தைய மனித குலத்தின் உழைப்புதான் நம்முன் உள்ள இந்த நவீன உலகு.

கண்மணி ராசா, 8903543802
ஒரு சிறிய வியாபாரி சாலையோரம் கடை வைத்து காய்கறிகளை விற்கிறான்.
ஒரு பெண் தலைச்சுமையாக மீன்களை சுமந்துகொண்டு..வீட்டு வாசலுக்கே வந்து மீன்களை விற்கிறாள்.
பார்வையற்ற ஒருவர் ரெயில் வண்டியில் பேனாக்களை விற்கிறார்.
ஒரு ஆலைத் தொழிலாளி எந்திரங்களை இயக்குகிறார்.
அவரைப் போன்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர் களை ஆலை மேலாளர் நிர்வாகம் செய்கிறார்.
ஒரு அரசு ஊழியர் மக்களுக்காக பணிபுரிகிறார்.
இப்படி பல்வேறுபட்ட உழைப்பாளிகள்...
இவ்வுலகை உழைப்பால் உய்விக்கின்றனர்.
இன்று உலகின் முன்னணி தொழில் அதிபர்களிடம் அவர்கள் முன்னேறி வந்ததற்கு முக்கிய காரணம் கேட்டால்...
அவர்கள் கூறும் முதல் காரணம்...
எங்களது தொழிலாளர்கள் என்பதாகவே இருக்கும்.
அர்ப்பணிப்பு மிக்க தொழிலாளர்கள்தான் எந்தவொரு நிறுவனத்திற்கும் அடிப்படை.
உழைப்பு மகத்துவங்களை சாதிக்க வல்லது..
தஞ்சைப் பெரிய கோவில்..
தாஜ்மகால்..
இவையெல்லாம் மனித கூட்டு உழைப்பின் மகத்துவங்கள்.
இன்று உழைப்பு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது.
எங்கும் எதிலும் 'ஸ்மார்ட் உழைப்பு' விரும்பப்படுகிறது.
திட்டமிட்டு சிரமப்படாமல் உழைப்பதை உலகம் விரும்புகிறது.
ஸ்மார்ட் உழைப்பு என்பதை இப்படிப் புரிந்து கொள்ளலாம்.
நான்கு விறகுவெட்டிகள் தினமும் காட்டிற்கு செல்வார்கள்.
அதில் மூவர் போனவுடனே வேலையை துவங்கி விடுவார்கள்.
மற்றொருவர் அரைமணிநேரம் தாமதமாகவே மரம் வெட்டத் துவங்குவார்.
அதுபோலவே மாலையில் வேலையை அவர்களை விட முன்னதாக முடித்து விடுவார்.
விறகும் அவர்களைவிட அதிகம் வெட்டியிருப்பார்.
மற்றவர்களுக்கு இது புதிராக இருந்தது.
ஒரு நாள் அவர் ஏன் தாமதமாக வருகிறார் என கண்காணித்தனர்.
அவரோ தாமதமாக வரும் அந்த நேரத்தில் தனது கோடாரியைக் கூர்தீட்டிக் கொண்டிருந்தார்.
தினமும் காலையில் கோடாரியைக் கூர் தீட்டி விட்டு மரத்தை வெட்டுவதால் மற்றவர்களைவிட எளிதாகவும், விரைவாகவும், கூடுதலாகவும் விறகு வெட்ட முடிகிறது.
இந்த ஸ்மார்ட் உழைப்பே....
கால்களின் நீட்சியாய் சக்கரத்தைக் கண்டுபிடிப்பு செய்தது. வாகனம் உருவானது.
சித்திரம் தீட்டுவதன் நீட்சியாய்...
புகைப்படக் கருவியை கண்டுபிடிப்பு செய்தது.
பறவையின் நீட்சியாய்...
விமானத்தை கண்டுபிடிப்பு செய்தது.
யோசித்துப் பாருங்கள்....
இன்று நம் கையில் இருக்கும் அலைபேசி எத்தனை கருவிகளை உள்ளடக்கியுள்ளது.
எத்தனை வேலைகளை எளிதாக்கி உள்ளது.
அதனால்தான் அது ஸ்மார்ட் போன்.
இதுபோல பல திறமைகளை கொண்டதாக உழைப்பு இருக்கவேண்டும்.
மனிதனின் உழைப்பே... கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.
அதனோடு அவனின் அனுபவ அறிவு சேர்ந்தபோது மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.
அதனால்தான் திருவள்ளுவர், முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்றார்.
நீங்கள் எத்தகைய துயரில் இருந்தாலும் தீவிர உழைப்பு அதில் இருந்து உங்களை மீட்டெடுக்கும். சுருக்கமாக கூறினால்
"ஆழி சூழ் உலகு" என்பதைப் போல
"உழைப்பு சூழ் உலகு..." எனலாம்.
அத்தகைய உழைப்பை...
உழைப்பாளர்களைக் கொண்டாடும் நாளிது.
மே 1...
எந்தவித மத... சாதி.. புராண கதைகளும் இல்லாமல்...
மனித மாண்புகளைக் கொண்டாடவென உள்ள திருவிழாக்களில் முக்கியமான நாள் மே 1.
கொத்தடிமைபோல காலமின்றி உழைத்தவர்கள் கொதித்தெழுந்து போராடி, 8 மணிநேரம் தான் உழைப்பு என முடிவு செய்த நாள்.
இன்று ஓரளவுக்கேனும் தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பாக உள்ளதெனில் அதற்கு காரணம்,
மே 1 ன் போராட்ட வரலாறே காரணம்.
அயராத உழைப்பும்...
அதற்கேற்ற பலனுமே...
நம்மை...
நம் பூவுலகை
சுழல வைக்கும்.
உழைப்பே உயர்வளிக்கும்..
உழைப்பாளர்களே உலகை உய்விப்பர்.
மே தின வாழ்த்துகள்!
- சங்கப் பாடல்களைப் போன்ற ஓசை மரபில் அழகிய மரபுக் கவிதைகளை நிறைய இயற்றியுள்ளார்.
- உரைநடை எழுதும்போது வா.செ. குழந்தைசாமி என்ற சொந்தப் பெயரிலேயே எழுதுவார்.
தமிழறிஞரும் மரபுக் கவிஞருமான வா.செ. குழந்தைசாமி இந்தியப் பொறியியல் (நீரியல்) துறை விஞ்ஞானி. தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் உயர் படிப்புப் படித்தவர். நீர்வளத் துறையில் இவரது கண்டுபிடிப்பு `குழந்தைசாமி மாதிரியம்` என வழங்கப் படுகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.
திருச்சி அருகேயுள்ள கரூரைச் சேர்ந்த வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். அவரது மனைவி கே. சவுந்தரவல்லி திருப்பூரைச் சேர்ந்தவர். தம் கணவர் எண்பத்தேழு வயதில் காலமான பின், ஆண்டு தோறும் தம் கணவர் பெயரில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி வருகிறார் அவர்.
பழகுவதற்கு இனிய பண்பாளர் தமிழறிஞரும் விஞ்ஞானியுமான வா.செ. குழந்தைசாமி. ஆன்மிக நம்பிக்கை உள்ளவரல்ல. ஆனால் ஆன்மிக நம்பிக்கை உள்ள பலர் அவரது நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.
அந்த நட்பின் இடையே ஒருபோதும் எந்த விரிசலும் இருந்ததில்லை. அவரவர் கொள்கை அவரவருக்கு என்ற கருத்தும் அடுத்தவர் கொள்கைக்கு மரியாதை கொடுத்துப் பழகும் நாகரிகமும் அவரிடம் எப்போதும் இருந்தன.
சங்கப் பாடல்களைப் போன்ற ஓசை மரபில் அழகிய மரபுக் கவிதைகளை நிறைய இயற்றியுள்ளார். சித்தர் பாடல்களைப் போன்றவை அவை.
மனிதகுலம் வளர்ந்த வரலாறு முழுவதையும் அது நாகரிகமும் பண்பாடும் பெற்ற சரிதத்தையும் `மானுட யாத்திரை`யாக கவிதைப்படுத்தியிருக்கிறார்.
உரைநடை எழுதும்போது வா.செ. குழந்தைசாமி என்ற சொந்தப் பெயரிலேயே எழுதுவார். கவிதை எழுதும்போது குலோத்துங்கன் என்ற புனைபெயரில் எழுதுவார்.

திருப்பூர் கிருஷ்ணன்
குலோத்துங்கன் கவிதைகளுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்றுகூடச் சில அன்பர்கள் மேடையில் பேசியதுண்டு. (பி.எஸ். ராகவன் ஐ.ஏ.எஸ். தொடர்ந்து அப்படிக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர்.)
ஒருசீரான ஒலி ஒழுங்கு குலோத்துங்கன் கவிதைகளின் மேலான பண்பு. அவர் எழுதியவை யாவும் ஆசிரிய விருத்தம்போல் அமைந்த எளிய மரபுக் கவிதைகளே.
மரபில் வெண்பா, கட்டளைக் கலித்துறை போன்ற கடினமான யாப்பு வகைகளை அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை. கற்பனையை விடக் கருத்தே அவர் கவிதைகளின் மூலதனம். கவிதை எழுதுவதல்ல அவர் நோக்கம், கவிதை வடிவில் தம் கருத்துக்களைச் சொல்வதே அவர் நோக்கம் என்பதை அவரது கவிதைகள் புலப்படுத்துகின்றன.
`குலோத்துங்கன் கவிதைகள் - ஒரு திறனாய்வுப் பார்வை` என்ற தலைப்பில் கோவையில் வாழ்ந்த சிலப்பதிகாரத் தமிழ் அறிஞர் ம.ரா.போ. குருசாமி ஒரு சிறந்த ஆய்வு நூல் எழுதியிருக்கிறார்.
வா.செ.குழந்தைசாமியின் இலக்கியம் குறித்த நூல்களில் இன்னொரு முக்கியமான நூல், விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் வ.வே.சு. எழுதிய நூல்.
க.நா.சுப்பிரமணியம், அசோகமித்திரன், ஆர். சூடாமணி, (ஆங்கிலத்தில் எழுதும்போது சூடாமணி ராகவன்), இந்திரா பார்த்தசாரதி, ஜோதிர்லதா கிரிஜா, பிரேமா நந்தகுமார், கே.எஸ். சுப்பிரமணியம், பிரபா ஸ்ரீதேவன் போன்ற சிலர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதும் திறன் பெற்றவர்கள்.
வா.செ.குழந்தைசாமி அந்த வகையில் இவர்கள் வரிசையில் இணைகிறார். கட்டுரைகளை ஆங்கிலத்திலும் எழுதிய அவர் கவிதைகளைத் தமிழில் மட்டுமே எழுதி வந்தார்.
தமிழை அவரைப் போல் நேசித்தவர்கள் மிகக் குறைவு. பழந்தமிழும் அறியாமல் நவீனத் தமிழும் அறியாமல் ஆனால் `தமிழ் வாழ்க!` என்று மட்டும் கூச்சலிடுபவர்களைப் போன்றவர் அல்ல அவர்.
புறநானூறு தொடங்கி புதுமைப்பித்தன் சிறுகதை வரை, எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர். அனைத்து நூல்களைப் பற்றியும் அவரிடம் பேசி மகிழலாம். சங்க காலம் தொடங்கி வளர்ந்த பல நூற்றாண்டுத் தமிழில் ஆழங்கால் பட்டவர்.
திருக்குறளில் அபாரமான புலமை உடையவர். திருக்குறளே தம் வாழ்வின் வழிகாட்டி என்று அவர் சொல்வதுண்டு.
`வாழும் வள்ளுவம்` என்ற திருக்குறளைப் பற்றிய அவர் கட்டுரை நூல், சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றது. அறிவியல் துறையில் மட்டுமல்லாமல் இலக்கியத்திலும் முத்திரை பதித்த பெருமகன் என்ற பெருமையை அவருக்கு இந்தப் பரிசு பெற்றுத் தந்தது.
தம்மை விஞ்ஞானி என்று சொல்லிக் கொள்வதை விடத் தமிழ்க் கவிஞன் என்று சொல்லிக் கொள்வதையே பெரிதும் விரும்பினார். அப்படித்தான் தாம் அடையாளம் காணப்பட வேண்டும் என்று அவர் ஆழ்மனம் விரும்பியது. ஆனால் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத் தத்தை அவர் முன்னிலைப் படுத்தியபோது சில தமிழறிஞர்கள் அவரைக் கடுமையாக விமர்சிக்கவும் தலைப்பட்டார்கள்.
ஏற்கெனவே உள்ள தமிழ் எழுத்து வடிவத்தை மாற்ற முயல்வது வீண்வேலை என்றும் அவரைப் போன்ற உயர்நிலைப் பிரமுகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட முனையக்கூடாது என்றும் வன்மையான கண்டனக் கணைகள் தமிழ்ச் சூழலில் எழுந்தன. கண்டனங்கள் தாம் எதிர்பார்த் தவைதான் என்று பதறாமல் சொன்ன அவர், தம் நிலைப்பாட்டில் இறுதிவரை உறுதியாகவே இருந்தார். தொடர்ந்து எழுத்துச் சீர்திருத் தத்தைப் பற்றி மேடைகளில் பேசிவந்தார்.
சங்க காலம் தொட்டுக் காலந்தோறும் தமிழ் வரிவடிவம் மாறியே வந்திருக்கிறது என்றும், வீரமாமுனிவர் பல மாறுதல்களைச் செய்ய வில்லையா என்றும், அரசு வற்புறுத்தியதன் பேரில் எல்லா நாளிதழ்களும் பதிப்பகங்களும் சீர்திருத்த எழுத்துக்களைப் பயன்படுத்த வில்லையா என்றும் அவர் தம்மைத் தாக்கியவர்களை நோக்கி எதிர்க் கேள்விகளை எழுப்பினார்.
பொதிகைத் தொலைக்காட்சி அவரது எழுத்துச் சீர்திருத்த எண்ணங்களை மையப்படுத்தி, இரண்டு அரைமணிநேரப் பகுதிகளாக, இரண்டு வாரங்கள் அவரது நேர்காணல்களை ஒளிபரப்பியது.
நேர்காணல்களில் அவரிடம் பதற்றம் எதுவும் தென்படாது. கேள்விகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு பதில் சொல்வது, எந்தத் தயக்கமுமில்லாமல் பளிச்சென்று பேசுவது, அடுத்த கேள்விக்கு வழிவிட்டு, கேட்ட கேள்விக்கு மட்டும் கூர்மையாக விடையளிப்பது, கடினமான செய்தியைக் கூடப் பாமரனுக்கும் புரியும் வகையில் விளக்குவது என உரையாடல் கலையில் அவர் வித்தகர்.
மிகச்சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட. கைதட்டல்களுக்காக மலினமான நகைச் சுவையை அவர் நம்பியிருக்கவில்லை. அறிவுபூர்வமாகப் பேசியே சபையைக் கட்டக்கூடிய வல்லமை அவருக்கு உண்டு.
அவர் பேச்சின் இடையே கைதட்டல்கள் அதிகம் ஒலிக்காது. தம் ஆழ்ந்த சிந்த னையோடு பார்வையாளர்களைத் தன்வயப் படுத்துவார் அவர். ஆனால் அவர் பேசி முடித்தபின் எழும் கைதட்டல்கள் ஓய நெடுநேரம் பிடிக்கும். சபையில் அத்தனை பேர் மனங்களையும் அள்ளிச் சாப்பிட்டுவிடும் அவர் பேச்சு. தாம் பேசிய பேச்சுக்கள் பலவற்றைக் கட்டுரைகளாகவும் எழுதினார். எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூல்களாகவும் வெளியிட்டார்.
அவர் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் ஒன்றரை மணிநேரத்திற்குமேல் தங்குதடை இல்லாமல் மேடையில் பேசக் கூடியவர். ஆச்சரியம் என்னவென்றால் அவர் தமிழில் பேசும்போது ஆங்கில வார்த்தைக் கலப்பே இருக்காது. தமிழைத் தமிழாகவும் ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் கையாண்ட அறிஞர் அவர்.
ஆங்கிலம், தமிழ் இரண்டிலுமே செம்மாந்த மொழிவளம் படைத்தவர். வார்த்தைகளை உச்சரிப்பதில் மிகுந்த தெளிவுடையவர். ழகர ளகர லகரம், ணகர னகரம் போன்றவையெல்லாம் அவர் உச்சரிப்பில் மிகத் திருத்தமாக இருக்கும்.
அவர் பேசி முடித்தபிறகு ஒரு கம்பீரமான இசைக் கச்சேரி நிறைவுற்றதைப் போன்ற உணர்வே கேட்பவர்களுக்கு ஏற்படும்.
திருமூலர் போல கவிதையைக் கற்பனை உலகிலிருந்து அறிவுலகிற்குக் கடத்திச் சென்றவர் அவர்! கற்பனையல்ல, கருத்துக்களே அவர் கவிதைகளின் மூலதனம். ஓசை நயத்திலும் கூட அவரிடம் திருமூலர் சந்தத்தை நாம் உணர முடியும்.
உ.வே.சா. நூலகத்தின் தலைவராக இயங்கியவர். அவர் செயற்குழுக் கூட்டங்களை நிகழ்த்தும் பாணி அத்தகைய கூட்டங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுப்பதுபோல் இருக்கும்.
ஒரு வினாடி தவறாமல் சரியான நேரத்திற்கு வருகை தருவார். மற்றவர்களும் அப்படி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
உறுப்பினர்கள் வளவளக்காமல் கருத்தைச் சுருக்கமாகவும் கூர்மையாகவும் தெரிவிக்க வேண்டும் என்பார். ஒருவர் பேசும்போது மற்றொருவர் பேச ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.
நிறைவுரையில் விவாதபூர்வமாக குழு எடுத்த முடிவுகளை பகுத்தும் தொகுத்தும் எடுத்துச் சொல்வார். எடுத்த முடிவுகளை அறிக்கைப் புத்தகத்தில் எழுதச் செய்வார். வந்த உறுப்பினர்கள் அனைவரும் அதன்கீழ் ஒப்புதல் கையெழுத்திட்டார்களா என்பதைச் சரிபார்ப்பார்.
கூட்டத்தை நடத்தி முடித்தபின் அவர் கம்பீரமாக எழுந்து செல்லும்போது ஒரு சிங்கம் நடந்து செல்வதைப் போல் தோன்றும். நிர்வாகம் செய்வதில் அவர் ஒரு சிங்கம்தான் என்பதில் சந்தேகமில்லை.
பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற இந்திய அரசின் உயரிய விருதுகள் பெற்றவர். ஆறு கவிதைத் தொகுப்புகளும் ஏழு கட்டுரைத் தொகுப்புகளும் எழுதியுள்ள இவருக்கு தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் விருதளித்துக் கெளரவித்துள்ளது.
இவரது உயரிய தமிழ்ப் பணிகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் கெளரவ முனைவர் பட்டம் அளித்துள்ளது. தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி பற்றி ஓர் ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
தம் அறிவார்ந்த கட்டுரைகளின் இடையே தம் கவிதை வரிகளையே மேற்கோளாக அவர் கொடுப்பதுண்டு. அந்த சந்தர்ப்பங்களில் `என்றான் ஒரு கவிஞன்` என்று குறிப்பிடுவாரே தவிர, அது தம் கவிதைதான் என்பதைத் தெரிவித்துக் கொள்ள மாட்டார்.
தம் கட்டுரைகளின் இடையே தாம் எழுதிய கவிதைகளை அவர் தம் பெயரைச் சொல்லாமல் குறிப்பிட்டாலும், அவரது கட்டுரைகளுக்காகவும் கவிதைகளுக்காகவும் தமிழ் அவர் பெயரை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail
- பெண்களுக்கு உடல் அளவில் 13 வயதில் இருந்து 19 வயதுக்குள் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகிறது.
- ஆண்களை பொருத்தவரைக்கும் உயிரணுக்கள் உருவாகி வெளியே வருவது என்பது அவர்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றமாகும்.
குழந்தைகள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... 11 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களை டீன்ஏஜ் வயதினர் அல்லது பதின்ம வயதினர் என்று அழைப்போம். அதாவது இவர்கள் வளர் இளம் பருவத்தினர் ஆவார்கள். இந்த வளர் இளம் பருவத்தில் உள்ள குழந்தைகள் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
குழந்தை பருவத்தில் இருந்து மாறி சிறுவர், சிறுமி என்கிற பருவத்தை அடையும் அவர்கள் டீன்ஏஜ் வயது முடியும் வரை அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் ஏராளமான மாற்றங்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்கள். இந்த காலகட்டம் என்பது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த காலகட்டத்தை வெற்றிகரமாக கடப்பவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய முடியும்.
ஆனால் இந்த பருவ வயது காலகட்டத்தில் மனதளவில் தடுமாறி திசைமாறி செல்பவர்களின் வாழ்க்கை தோல்வியில் முடிகிறது. இந்த பதின்ம வயது காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றங்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை தெளிவாகவும், விரிவாகவும் காணலாம்.
பெரும்பாலான வீடுகளில் பதின்ம வயதினர் இருப்பார்கள் என்பதால் அவர் களை எப்படி வழிநடத்துவது என்பதை அவர்களின் பெற்றோர்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பதின்ம வயதில் உடல், மனம் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள்:
பெண்களுக்கு உடல் அளவில் 13 வயதில் இருந்து 19 வயதுக்குள் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகிறது. அதே நேரத்தில் சில குழந்தைகளுக்கு உடல் ரீதியிலான மாற்றங்கள் அதற்கு முன்பே வரக்கூடும் என்பதால் வளர் இளம் பருவம் என்பதை நாம் 11 வயது என்று வைத்துக் கொள்கிறோம்.
பொதுவாக இந்த வளர் இளம் பருவத்தில் ஏற்படுகிற மாற்றங்கள் வெளித்தோற்றத்திலும் பெண்களுக்கு பல பிரச்சினைகளாக உருவெடுக்கிறது. அதாவது உடல் ரீதியாக, மன ரீதியாக, குடும்ப ரீதியாக, சமுதாய ரீதியாக இந்த மாற்றங்கள் நிகழ்வது குறிப்பாக 13 வயதில் இருந்து 19 வயது வரைக்கும் தான்.
இந்த பதின்ம வயது கால கட்டத்தை ஒவ்வொரு பெண் குழந்தைகளும் கடந்து வருகிறார்கள். இன்று நாம் எல்லோருமே இந்த கால கட்டத்தை கடந்து தான் வந்திருக்கிறோம். எல்லோருமே இந்த காலகட்டத்தில் ஏற்படுகிற பல பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கிறோம். இவை அனைத்தும் உடல் ரீதியான பலவிதமான மாற்றங்களை நமக்கு கொடுக்கிறது. உடல் ரீதியான மாற்றங்கள் மட்டுமல்ல, மன ரீதியான பல மாற்றங்களும் ஏற்படுகிறது.
அதாவது இவர்களின் வாழ்க்கை நடவடிக்கைகளில் உடல் ரீதியான மாற்றம் இருக்கும். மன ரீதியான மாற்றம் இருக்கும். உளவியல் ரீதியில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் வித்தியாசமாக இருக்கும். அதனுடன் அவர்கள் இந்த காலகட்டத்தை எதிர்நோக்குகிற தன்மைகளும் சற்று வித்தியாசமாக இருக்கும்.
பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு வரும் காலகட்டம்:
ஒரு பெண், குழந்தை பருவத்தில் இருந்து வளர் இளம் பருவத்துக்கு போகும்போது இவர்களுக்கு உடல் ரீதியாக பல மாற்றங்கள், ஹார்மோன் ரீதியான மாற்றங்கள் ஆகியவை அனைத்தும் ஏற்படுகிறது. வளர் இளம் பருவம் என்பதை எதை வைத்து குறிக்கிறோம் என்றால் ஒரு பெண்ணை பொருத்தவரைக்கும் அவருக்கு மாதவிலக்கு வரும் காலகட்டம் ஆகும்.
ஆண்களை பொருத்தவரைக்கும் உயிரணுக்கள் உருவாகி வெளியே வருவது என்பது அவர்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றமாகும். அதாவது அவர்களின் வாழ்க்கையில் இதுவரை நடைபெறாத ஒரு விஷயம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
ஆண் குழந்தையாக இருந்தால் அவர்களுக்குரிய மாற்றங்கள் அனைத்தும் ஏற்படுகிறது. பெண் குழந்தையாக இருந்தால் உடல் அளவில் என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டுமோ அவை அனைத்தும் நிகழ்கிறது. இதுதான் அவர்களுக்கு வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம் ஆகும்.
இன்றைக்கும் உலக அளவில் அதிக அளவு மக்கள்தொகை கொண்டவர்களாக வளர் இளம் பருவத்தினர் தான் இருக்கிறார்கள். அவர்கள் பல கோடி பேர் இருக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் அவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் மிகமிக அதிகம். இதில் பல நேரங்களில் குடும்பங்களில் வரும் பிரச்சினைகளும் இந்த வளர் இளம் பருவத்தினரை வைத்துதான் ஏற்படுகிறது.
இவர்களை எப்படி கையாளுவது, இவர்களை எப்படி வழிநடத்துவது என்பது யாருக்கும் தெரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கே அவர்களை பற்றி பல நேரங்களில் தெரிவது இல்லை. இந்த வளர் இளம் பருவத்தில்தான் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வருகிறது. பருவ வயதை அடைந்து விட்டோம் என்கிற சிக்னல் ஆரம்பித்தவுடன் அவர்களுக்கான பிரச்சினைகளும் தொடங்குகிறது.
உடல் எடை, உயரம் கூடுதல், தோற்றங்களில் மாற்றம் ஏற்படுதல்:
இவர்களுக்கு பருவ வயதுக்கான மாற்றங்களை கொடுக்கும் நாளமில்லா சுரப்பிகள் வேலை செய்ய தொடங்கியவுடனே கூடவே இந்த பிரச்சினைகளும் ஆரம்பிக்கிறது. இவர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது? ஹார்மோன் தூண்டுதல் காரணமாக உடல் எடை கூடுகிறது. உயரம் கூடுகிறது. தோற்றங்களில் மாற்றம் ஏற்படுகிறது. பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு மார்பக வளர்ச்சி ஏற்படுகிறது. ஒரு முழுமையான பெண்ணுக்குரிய எல்லா மாற்றங்களும் உடலில் நிகழ்கிறது.
ஆண்களை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கும் உயரம், எடை கூடுகிறது. குரலில் மாற்றம் ஏற்படுகிறது. அவர்களுக்கும் உடல் அளவில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகிறது. இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்.
ஒரு பெண் குழந்தைக்கு மாதவிடாய் வந்து விட்டது என்றால் அவர்கள் பருவம் அடைந்து விட்டார்கள் என்று அர்த்தம். ஒரு பெண் பூப்பெய்துவது நல்ல அறிகுறி என்று நினைக்கிறோம். ஆனால் அதன்பிறகு அந்த குழந்தைகள் எதிர்நோக்கும் மாற்றங்களை நாம் யாரும் உணருவது இல்லை. அதனால் தான் பெரிய பிரச்சினையே வருகிறது.
உடல் ரீதியாக மாற்றம் வந்து விட்டதால் அந்த பெண் குழந்தைகள் திருமணத்துக்கு தயாராகலாம், குழந்தை பேறு பெறுவதற்கு தயாராகலாம். ஏனென்றால் அவர்களுக்கு முட்டைகள் வெளிவர ஆரம்பித்து விடுகிறது.
எனவே இந்த காலகட்டத்தில் வீட்டில் உள்ள பெற்றோர்களின் ஒரே பயம், குழந்தையை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், தவறான முறையில் கர்ப்பம் தரித்து விடக்கூடாது என்கிற எண்ணங்கள் இருக்கும். ஆனால் இந்த விஷயங்கள் குறித்து உங்கள் பெண் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி அவர்களை எந்த வகையில் அதுபற்றி அறிந்து கொள்ளக் கூடியவர்களாக ஆக்குகிறீர்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
பாலியல் உறவு பற்றி பேச தயங்கும் பெற்றோர்கள்:
பள்ளிக்கூடங்களில் கூட இதுபற்றி யாரும் தெளிவான வகையில் பேசுவதும் இல்லை, சொல்வதும் இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த குழந்தைகளுக்கு இதைப்பற்றி தெளிவான ஒரு விழிப்புணர்வு இல்லை. இந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு ஏற்கனவே உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களினால் ஒரு மனக்குழப்பம் இருக்கும்.
நாம் இதுவரை குழந்தைகளாக இருந்தோம். தற்போது இந்த மாதிரி திடீரென்று வளர்ந்து விட்டோமே, இதுபற்றி உயிரியல் ஆசிரியரிடம் கேட்டால் என்னவென்று தெரியும் என்று நினைத்து அவர்களிடம் கேட்டால் உனக்கு மாத விடாய் வந்து விட்டது, உன்னுடைய இனப்பெருக்க உறுப்புகள் முதிர்ச்சி ஆகிறது. உனக்கு முட்டைகள் வெளிவர ஆரம்பித்து விட்டது என்று சொல்வார்கள்.
ஆனால் இதில் முக்கியமான இன்னொரு விஷயம், அந்த சிறுமிகளுக்கு முட்டைகள் வெளிவரும் போது, ஒரு ஆணுடைய உயிரணு சேர்ந்தால் குழந்தை உருவாகும் என்பதை நிறைய நேரங்களில் யாரும் அவர்களுக்கு புரியும் படியாக சொல்வது இல்லை. அப்படி சொல்வதற்கு பெற்றோர்கள் பலரும் தயக்கம் காட்டுவார்கள்.
ஏனென்றால் குழந்தை எப்படி உருவாகும்? பாலியல் உறவு கொள்ளும்போது தான் உருவாகும். ஆனால் அந்த பாலியல் உறவுகளை பற்றி சிறுமிகளுக்கு நாம் யாரும் சொல்லித் தருவதில்லை. அதனுடைய மாற்றங்களால் என்ன நிகழும் என்பதை நாம் அவர்களுக்கு சொல்வ தில்லை.
ஆனால் இந்த காலகட்டத்தில் ஹார்மோன் களால் ஏற்படுகிற மாற்றங்கள் காரணமாக ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே முக்கியமான விஷயம் நிகழ்கிறது. அதாவது அவரவர்களின் எதிர்பாலினத்தவர் மீது தானாகவே ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது.
அந்த மாற்றங்கள் மற்றும் எதிர்பாலின ஈர்ப்பு காரணமாக அடுத்தடுத்து அவர்களுக்கு நிகழப்போவது என்ன...? அடுத்த வாரம் பார்க்கலாம்.
- சிவப்பிரகாசர் எந்த அளவுக்கு தமிழ் மீது புலமை பெற்றிருக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள விரும்பினார்.
- இருவரும் உதடு ஒட்டாமல் பாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சீபுரத்தில் குமாரசுவாமி தேசிகர் என்பவர் வசித்து வந்தார். சிவன் மீதும், முருகன் மீதும் இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் அளவில்லாத பக்தியும், பற்றும் இருந்தது. இதனால் குமாரசுவாமி தேசிகருக்கு பிறந்த குழந்தைகளும் ஆன்மீக பாதையில் தங்களை ஈடுபடுத்தி இருந்தனர்.
குமாரசுவாமி தேசிகருக்கு மொத்தம் 4 மகன்கள் பிறந்தனர். அவர்களில் முதல் மகன் சிவப்பிரகாசர். இவர் தமிழ் இலக்கியத்திலும், வடமொழி இலக்கியத்திலும் மிகுந்த புலமைப் பெற்று திகழ்ந்தார். இதன் காரணமாக இளம் வயதிலேயே பக்தி பாடல்கள் பாடுவதில் வல்லவராக இருந்தார்.
கல்வியில் ஓரளவு புலமை பெற்று இருந்தாலும் அவருக்கு தமிழில் உள்ள அனைத்து வகையான இலக்கண நுட்பங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த ஆசை ஏற்பட்டது. தமிழகத்தில் எங்கு சென்றால் இலக்கண நுட்பங்களை கற்றுக்கொள்ள முடியும் என்று ஆய்வு செய்தார்.
அப்போது அவருக்கு திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்வேறு இந்து சமய மடங்கள் தமிழ் இலக்கண அடிப்படையில் இறைவன் மீது பாடல் இயற்ற பயிற்சிகள் அளிப்பது தெரிய வந்தது. குறிப்பாக நெல்லை சிந்துபூந்துறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான மடம் இத்தகைய பயிற்சியை சிறப்பாக அளிப்பது அவரது கவனத்தை ஈர்த்தது.
எனவே பெற்றோரிடம் ஆசி பெற்று விட்டு தமிழ் இலக்கணத்தை மேலும் கற்றுக் கொள்வதற்காக அவர் திருநெல்வேலிக்கு புறப்பட்டு வந்தார். அப்போது நெல்லை தருமபுரம் ஆதீனத்தின் அதிபராக வெள்ளியம்பலவாண சுவாமிகள் இருந்தார்.
இவர் முத்தமிழிலும் தேர்ச்சிப் பெற்றவர். இயல், இசை, நாடகம் தொடர்பாக தமிழில் அவர் பெற்ற மேன்மை அவரோடு இருந்தவர் களையும் மேன்மை பெற செய்தது. இதை சிவப்பிரகாசர் ஏற்கனவே அறிந்து இருந்தார்.
தருமபுரம் ஆதீனத்துக்குள் நுழைந்ததும் அவர் வெள்ளியம்பலவாண சுவாமிகள் காலில் விழுந்து வணங்கினார். தமிழ் இலக்கணத்தில் நுட்பங்களை தெரிந்துக் கொள்வதற்காக காஞ்சீபுரத்தில் இருந்து வந்திருக்கும் தகவலை கூறினார். அதை கேட்டதும் வெள்ளியம்பலவாண சுவாமிகளுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.
சிவப்பிரகாசர் எந்த அளவுக்கு தமிழ் மீது புலமை பெற்றிருக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள விரும்பினார். அதற்காக அவர் ஒரு சோதனையையும் நடத்தினார். அந்த சோதனை மிக மிக வித்தியாசமானது.
முதலிலும் "கு", முடிவிலும் "கு", இடையில் ஊருடையான் என்ற வகையில் அமையும்படி அருமையான ஒரு வெண்பா பாடு பார்க்கலாம் என்று வெள்ளியம்பலவாண சுவாமிகள் அதிரடியாக சிவப்பிரகாசருக்கு உத்தரவிட்டார். இதை கேட்டதும் சிவப்பிரகாசர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த நிமிடமே அவர் ஒரு வெண்பாவை பாடினார்.
குடக்கோடு வானெயிறு
கொண்டார்க்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வார்க்கு -
வடக்கோடு தேருடையான் தெவ்வுக்குத்
தில்லைத்தோல் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னு முலகு- என்று சிவப்பிரகாசர் பாடினார்.
இந்தப் பாடலை கேட்டதும் வெள்ளியம்பல வாண சுவாமிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிவப்பிரகாசர் உண்மையிலேயே தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழில் அவருக்கு ஆழ்ந்த புலமையும் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார். அவருக்கு இலக்கண நுட்பங்களை சொல்லிக் கொடுக்க சம்மதித்தார்.
அதன்படி தமிழில் உள்ள ஐந்து இலக்கண நுட்பங்கள் அனைத்தையும் சிவப்பிரகாசருக்கு வெள்ளியம்பலவாண சுவாமிகள் ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தார். பல மாதங்கள் வெள்ளியம்பலவாண சுவாமிகள் பாதங்களை தொழுது சிவப்பிரகாசர் தமிழ் இலக்கணத்தில் முழுமையாக மேன்மை பெற்றார்.
நெல்லையில் தங்கியிருந்த நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவதை சிவப்பிரகாசர் வழக்கத்தில் வைத்திருந்தார். குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு தருமபுரம் ஆதீன மடத்தில் பெற்று வந்த பயிற்சிகள் நிறைவு பெற்றன.
இதனால் அந்த மடத்தில் இருந்து விடைபெற சிவப்பிரகாசர் தீர்மானித்தார். அதற்கு முன்னதாக தனது குரு வெள்ளியம்பலவாண சுவாமிகளுக்கு உரிய தட்சணை கொடுத்து கவுரவிக்க முன்வந்தார்.
ஆனால் சிவப்பிரகாசரிடம் எந்த தட்சணையோ, அன்பளிப்பையோ வெள்ளியம் பலவாண சுவாமிகள் எதிர்பார்க்க வில்லை. என்றாலும் அவர் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் முன் வைத்தார்.
வெள்ளியம்பலவாண சுவாமிகளுக்கு எந்த அளவுக்கு ஆதரவாளர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு பொறாமை பிடித்த எதிர்ப்பாளர்களும் இருந்தனர். வெள்ளியம்பலவாண சுவாமிகளை எப்போதும் மட்டம் தட்டுவதையே அவர்கள் வழக்கத்தில் வைத்திருந்தனர்.
அந்த வகையில் திருச்செந்தூர் ஆலயத்தில் இருந்த ஒரு புலவர் வேண்டும் என்றே வெள்ளியம்பலவாண சுவாமிகளை தரக்குறைவாக பேசிக் கொண்டே இருந்தார். இதுபற்றி அறிந்ததும் வெள்ளியம்பலவாண சுவாமிகள் மிகவும் வருத்தம் அடைந்தார்.
அந்த திருச்செந்தூர் புலவருக்கு தமிழ் இலக்கணம் வாயிலாக தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார். அந்த பதிலடி கொடுக்கக் கூடிய சரியான நபர் சிவப்பிரகாசர்தான் என்று நினைத்தார்.
எனவே அவர் சிவப்பிரகாசரிடம் திருச்செந்தூர் புலவர் பற்றி சொல்லி அவரை திருத்துமாறு கேட்டுக் கொண்டார். இதுதான் குருவுக்கு தரும் உண்மையான தட்சணை என்றும் அறிவுறுத்தினார்.
குருவின் இந்த வேண்டுகோளை சிவப்பிரகாசர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அன்றே அவர் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார். திருச்செந்தூர் ஆலயத்தில் முருகனை வழிபட்டு விட்டு பிரகாரத்தை வலம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஆணவம் பிடித்த அந்த திருச்செந்தூர் புலவர் அந்த பிரகாரத்தில் உட்கார்ந்து இருந்தார். அவர் சிவப்பிரகாசரை பார்த்து நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு சிவப்பிரகாசர், "நான் வெள்ளியம்பலவாண சுவாமிகளின் கால் தூசியில் இருப்பவன்" என்று பதில் அளித்தார். இதை கேட்டதும் அந்த ஆணவம் பிடித்த திருச்செந்தூர் புலவருக்கு கோபம் வந்தது.
அவர் சிவப்பிரகாசரை பார்த்து, "அந்த வெள்ளியம்பலவாண சுவாமிகளே ஒரு தூசிதான். நீ எம்மாத்திரம்?" என்று கிண்டலாக பேசினார். அதற்கு சிவப்பிரகாசர், "உங்களால் நேர்மையாக பாடல் இயற்றி வெற்றி பெற முடியுமா?" என்று சவால் விட்டார். இதைக் கேட்டதும் திருச்செந்தூர் புலவருக்கு கோபம் வந்தது.
"என்னோடு போட்டி போட வருகிறாயா?" என்று சவால் விட்டார். அந்த சவாலை சிவப்பிரகாசர் ஏற்றுக் கொண்டார். இருவரும் உதடு ஒட்டாமல் பாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதாவது யார் ஒருவர் முதலில் நிரோட்டக யமக அந்தாதி ஒன்றை முதலில் பாடுகிறாரோ அவரே போட்டியில் வென்றவர் என்று முடிவு செய்யப்பட்டது.
"நிரோட்டக யமக அந்தாதி" என்றால் என்ன தெரியுமா? தமிழில் உள்ள பல சிறப்புக்களில் நிரோட்டக யமக அந்தாதி வகை பாடல்களும் ஒன்றாகும். நிரோட்டகம் என்றால் நிர் + ஒட்டகம் என்று பிரித்து பொருள் அறிய வேண்டும். அதாவது நிரோட்டகம் என்றால் உதடு ஒட்டாமல் இருப்பது என்று அர்த்தமாகும்.
உதடு ஒட்டாத எழுத்துக்கள் கொண்ட சொற்களை பொருள் வருமாறு இணைத்துப் பாடுவது நிரோட்டகச் செய்யுள் ஆகும்.
திருக்குறளில் பல குறட்பாக்கள் நிரோட்டகமாக உள்ளன. நிரோட்டகச் செய்யுளுடன் யமக வடிவைச் சேர்ப்பது நிரோட்டக யமகம் ஆகும். யமகம் என்றால் செய்யுளின் ஒவ்வொரு அடியிலும் முதல் சில எழுத்துக்கள் அல்லது சொற்றொடர் திருப்பித் திருப்பி வரவேண்டும், ஆனால் வெவ்வேறு பொருளில் வர வேண்டும். இப்படி வந்தால் யமகம் ஆகும்.
அந்தாதி என்றால் ஒரு செய்யுளின் இறுதி அடியில் வரும் இறுதிச் சொல்லோ அல்லது எழுத்தோ அடுத்த செய்யுளின் முதல் அடியின் முதல் சொல்லாக அமைந்து பாடல்களைத் தொடுக்க வேண்டும்.
இப்படி நிரோட்டகமாகவும் யமகமாகவும் அந்தாதியாகவும் அமைந்திருக்கும் ஒன்றையே நிரோட்டக யமக அந்தாதி என்று நம் மூதாதை யர்கள் தமிழில் வரையறுத்து வைத்துள்ளனர். இத்தகைய நிரோட்டக யமக அந்தாதி வகையில் போட்டியிடுவது என்று திருச்செந்தூர் புலவரும், சிவப்பிரகாசரும் போட்டியில் குதித்தனர்.
முருகனை வணங்கிய சிவப்பிரகாச சுவாமிகள் உடனே 100 பாடல்கள் அடங்கிய திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதியைப் பாடி முடித்தார். போட்டிக்கு அழைத்த திருச்செந்தூர் புலவரோ ஒரு பாடலும் பாட முடியாமல் திணறியபடி இருந்தார். சிவப்பிரகாசர் 100 பாடல்கள் பாடியதும் அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
போட்டியில் தோற்ற அவர், சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அடிமை ஆனார். அவரை வெள்ளியம்பல சுவாமிகளிடம் அழைத்துச் சென்று சிவப்பிரகாச சுவாமிகள் ஒப்படைத்தார். ஆனால் வெள்ளியம்பலவாண சுவாமிகள் பெருந்தன்மையுடன் மன்னித்து அறிவுரைகள் கூறி திருச்செந்தூர் புலவரை அனுப்பி வைத்தார்.
திருச்செந்தூர் முருகன் மீது சிவப்பிரகாச சுவாமிகள் பாடிய நிரோட்டக யமக அந்தாதி பாடல்கள் அபூர்வமானது. எல்லோராலும் பாட இயலாது. 100 பாடல்கள் திருச்செந்தூர் முருகன் மீது இயற்றிய அந்த தொகுப்பு திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி என்று அழைக்கப்படு கிறது.
இந்த 100 பாடல்களில் 30 பாடல்கள்தான் கிடைத்தன. அந்த 30 பாடல்களும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிரோட்டகத்தில் ப, ம, வ, உ, ஒ ஆகிய எழுத்துக்கள் வராமல் செய்யுள்களை அமைக்க வேண்டும். கட்டளைக் கலித்துறையில் அமைக்கப்பட்ட நூல் இது.
இந்நூலில் திருச்செந்தூர் முருகப்பெருமானின் சிறப்பும், வீரமும் அருளும், தந்தையான சிவபெருமானின் திருவிளையாடல்களும், மாமனான திருமாலின் பெருமையும் பாடப்படுகின்றன. முதலையுண்ட சிறுவனைப் பதிகம் பாடி சுந்தரர் எழுப்பியது போன்ற புராணச் செய்திக் குறிப்புகளும் காணப்படுகின்றன.
திருச்செந்தூர் முருகன் மீது பாடப்பட்ட பாடல்களில் இது தனித்துவம் நிறைந்தது. திருச்செந்தூர் முருகனே இதை பாட வைத்ததாகவும் சொல்வார்கள். திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய இதே போன்று மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.
- படைத்தல் தொழிலை நடத்தி வரும் பிரம்மா அட்சய திருதியை நாளில் உலகத்தை படைத்தார்.
- கோடை வெயில் தாக்கம் தீர குடை, விசிறி, காலணி, பாய், போர்வை வழங்கினால் இன்ப வாழ்வு உண்டாகும்.
பஞ்சாங்கம் என்பது திதி, கிழமை, வாரம், நட்சத்திரம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களின் தொகுப்பு ஆகும். நமது நாட்டில் பெரும்பான்மையான பண்டிகைகள் பஞ்சாங்கத்தின் முக்கிய அம்சங்களான திதி மற்றும் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு அனுசரிக்கப்படுகின்றன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பிடுவது திதியாகும். பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் வளர்தல் என்று பொருள்.
ரோகிணி நட்சத்திரம் மற்றும் திருதியை திதியும் இணையும் நாளில் செய்யும் தான தர்மங்கள் மற்றும் வழிபாடுகளுக்கு பலமடங்கு பலன் உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க அட்சய திருதியை விசுவாவசு வருடம் சித்திரை 16ம்நாள் இன்று மாலை 5.32-க்கு (29.4.2025) துவங்கி சித்திரை 17-ம் நாள் (புதன்கிழமை) மதியம் 2.13-க்கு (30.4.2025) நிறைவடைகிறது.
செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் அட்சய திருதியையின் சிறப்புகள்:
அட்சய திருதியை நாளில் நடந்த வரலாற்று சம்பவங்கள்
படைத்தல் தொழிலை நடத்தி வரும் பிரம்மா அட்சய திருதியை நாளில் உலகத்தை படைத்தார். அதனால் தான் உலக மக்களுக்கு தேவையான வளங்கள் உற்பத்தியாகிக் கொண்டு இருக்கிறது. மக்கள்தொகை உபரியாகிக் கொண்டு இருக்கிறது.
அட்சய திருதியை நாளில் ஆதிசங்கரருக்கு ஏழை பெண் வறுமையிலும் நெல்லிக்கனியை தானம் தந்தார். மனம் குளிர்ந்த ஆதிசங்கரர் ஏழைப் பெண்ணின் வறுமை நீங்கும் எனக்கூறி, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமகாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஏழை பெண்ணின் வறுமையை போக்க தங்க நெல்லிக் கனிகளை மழையாக பொழியச் செய்தார்.
இதே நாளில் கிருஷ்ணன் வறுமையில் வாடிய தனது நண்பர் குசேலர் அன்புடன் கொடுத்த அவலை அட்சயம் என்று கூறி மூன்று பிடி உண்டு கோடி கோடியாக செல்வங்களை அள்ளிக் கொடுத்து குசேலனை குபேரனாக்கினார்.
மகா விஷ்ணுவின் அதிபதி கிழமையான புதன்கிழமையும் கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியும் இணைந்த நாளில் அட்சய திருதியை வருவதால் அன்றைய தினம் மகாலட்சுமி, நாராயணர் படம் வைத்து கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம் பாடி, குசேலர் கதை படித்து அவல் பாயாசம் வைத்து வழிபட்டால் பல தலைமுறை வறுமை, கடன், தீராத சொத்து பிரச்சினை, திருமணத் தடை தீரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்கு கடன் வழங்கிய குபேரன் அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியை வழிபட்டு சங்கநிதி, பதும நிதியை பெற்றதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் லட்சுமி குபேர பூஜை செய்தால் குறையாத செல்வம் உள்ள செல் வந்தர்களாக, லவுகீக வாழ்க்கைக்கு தேவையான அனைத்து ஐஸ்வர்யங் களையும் பெற்று பூரண நலத்துடன் வாழலாம்.
செய்ய வேண்டிய சுப காரியங்கள்
புதுக்கணக்கு தொடங்க, புதிய தொழில் துவங்க வீடு கட்ட ஆரம்பிக்க, கிணறு தோண்ட, நெல் விதைக்க, கல்வி கற்க ஆரம்பித்தல், பெண் பார்க்க, திருமணம் நிச்சயித்தல் போன்றவற்றிற்கு சிறந்த நாளாகும். பித்ரு கடன் தீர்க்க உகந்த நாள். திருதியை திதியின் அதிதேவதை கவுரி என்பதால் அன்று பார்வதி தேவியை வழிபட்டால் திருமணத் தடை அகலும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.
பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து செந்தாமரை மலர்களால் வழிபட்டால் தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.
செய்ய வேண்டிய தான தர்மங்கள்
கோடை வெயில் தாக்கம் தீர குடை, விசிறி, காலணி, பாய், போர்வை வழங்கினால் இன்ப வாழ்வு உண்டாகும். ஆடை தானம் செய்ய மன நிம்மதி கிட்டும் . தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வியில் மேன்மை கிட்டும். தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், உடல் நிலை மோசமானவர்களுக்கு மருந்து வாங்கித் தருவதால், உடல் ஆரோக்கியமாகும்.
அன்று பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து பசுவிற்கு உணவளித்தால் சகலபாவமும் நீங்கிநல்வாழ்வு உண்டாகும். மிக எளிமையாக சந்தனம், மஞ்சள் கிழங்கு, குங்குமம்,வெற்றிலை பாக்கு, உப்பு, முனை முறியாத பச்சரிசி போன்றவற்றை வாங்கினால் லட்சுமி கடாட்சம் கூடும்.பெண்கள் புடவை, ஜாக்கெட் மற்றும் மங்களப் பொருட்களை தானமாக வழங்க சுமங்கலித்தன்மை கூடும். படிக்கும் மாணவர் களுக்கு தேவையான பள்ளி உப கரணப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
அட்சய திருதியை நாளில் வாங்க வேண்டிய மங்களப் பொருட்கள்
அட்சயம் என்ற சொல்லுக்கு குறைவில்லாதது என்று பொருள். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் மென்மேலும் வளரும், இந்த நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து பாக்கிய பலனை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
சமீப காலத்தில் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்ற நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை. பரணி, பூரம், பூராடம் போன்ற சுக்கிரனின் நட்சத்திரம் வரும் நாட்களில் புதன், சுக்கிர ஹோரையில் தங்க நகை வாங்கலாம். அதே போல் புதன், வெள்ளி கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் சேர்ந்தது போல இருக்கும் நாட்களில் புதன், சுக்கிரன் ஹோரைகளில் நகை வாங்கினால் தங்கம் சேரும். விலை உயர்ந்த பொருளான தங்கத்தை எல்லோராலும் வாங்க முடியாது. அதுவும் தற்போது சாமானியர்களுக்கும் எட்டாத உயரத்தில் தங்கம் விலை இருக்கிறது. எனவே கடன் வாங்கி தங்கம் வாங்கும் எண்ணத்தை கைவிடுவது நல்லது. அன்று அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் ஐஸ்வர்யம் எப்போதும் தங்கும்.

பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள பொருட்களின் மேல் உள்ள மோகத்தை குறைத்தாலே குடும்பத்தில் இன்பம் கூடும். அதற்கு பதிலாக வேறு சில மங்களப் பொருட்களை வாங்குவதாலும் தானம் தர்மம் வழங்குவதாலும் ஐஸ்வர்யம் பெருகும். அட்சய திருதியை அன்று வாங்கக் கூடிய சில சுப மங்களப் பொருட்களைப் பார்க்கலாம்.
தானியங்கள்:
நாம் அன்றாடம் உணவு சமைக்க பயன்படுத்தும் தானியங்களில் நவகிரகங்களும் வாசம் செய்கிறார்கள். அன்று வீட்டு உபயோகத்திற்கு தேவையான நவதானியங்களை வாங்கி பயன்படுத்துவதும் தானம் வழங்குவதும் புண்ணிய பலன்களை அதிகரிக்கும். வீட்டில் எப்பொழுதும் உபரியாக தானியங்கள் இருக்கும்.
இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, ஆதரவற்றோர், ஏழை விவசாயிகள், நடைபாதை வாசிகளுக்கு தானம் செய்வது நல்ல காரியங்களுக்கு உதவுவது அளவற்ற புண்ணியத்தைக் அதிகரிக்கும். தானியங்களை தானம் வழங்கிட விபத்து, அகாலமரணம் நேராது. ஏழைகளுக்கு அன்ன தானம் அளித்தால் செல்வவளம் பெருகும்.
பழவகைகளை அளித்தால் உயர்பதவி கிடைக்கும்
பாதச் சுவடுகள்: ராமர் பாதம் போன்ற தெய்வங்கள் மற்றும் மகான்களின் பாதச் சுவடுகளை அட்சய திருதியை நாளில் வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட குருவருளும் திருவருளும் கிடைக்கும்.
தெய்வச் சோழிகள்: கடலில் இருந்து கிடைக்கப் பெற்ற இயற்கை சோழிகளின் தெய்வத்தன்மை மிகுதியாக இருக்கும். அதை முறையாக சுத்தம் செய்து மஞ்சள் துணியில் முடிந்து பூஜை அறையில் எப்பொழுதும் வைத்து வழிபட வீட்டில் பொருளாதார மேன்மை அதிகரிக்கும்.
ஸ்வஸ்திக் சின்னம்: இந்த சின்னம் மகாலட்சுமியின் சின்னமாகும். இது விநாயகர் சின்னமாகவும் கருதப்படுகிறது. இது பல மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில் புனிதமான, மங்களகரமான குறியீடாகப் பயன்படுத்தப்படும் ஒரு சின்னம். இதை வரைவதற்கு ஒரு குறிப்பிட்ட முறை உள்ளது. ஸ்வஸ்திக் சின்னம் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் உரிய முறையில் வடிவமைக்கப்பட்ட ஸ்வஸ்திக் சின்னம் வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபட செல்வமும் செல்வாக்கும் கூடும்.
ஸ்ரீசக்கரம்:
அட்சய திருதியை அன்று ஸ்ரீசக்கரம் வாங்கலாம். உரிய முறையில் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ சக்கரத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
தீராத துன்பங்கள் தீர்ந்து மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.ஸ்ரீ சக்கரம் உள்ள இடத்தில் துஷ்ட சக்திகளும் பில்லி, சூனியம் போன்ற மாந்திரீகங்களும் அண்டாது. இந்த சக்கரம் உள்ள வீட்டில் வாஸ்து குறைபாடு நீங்கும். குலதெய்வம் தெரியாதவர்களுக்கு ஸ்ரீ சக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம்.
வலம்புரிச்சங்கு: செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவத்தை அதிகரிக்க கூடிய மற்றொரு மங்களப் பொருள் வலம்புரிச் சங்கு. இந்த வலம்புரி சங்கு சக்தி வாய்ந்ததா என்பதை கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது. அதாவது இதை காதில் வைத்து கேட்கும்போது ஓம் என்ற பிரணவ மந்திரம் நமக்கு கேட்க வேண்டும். நல்ல சக்தி வாய்ந்த வலம்புரிச் சங்கை அட்சய திருதியை அன்று வீட்டில் வைத்து வழிபட வாழ்நாள் முழுவதும் வறுமை வராது கடன் அண்டாது. பவுர்ணமி அன்று வலம்புரிச் சங்கு வைத்து குபேர பூஜை செய்ய சொத்து சுகம் சேரும். அடமானத்தில் உள்ள நகைகள் சொத்துக்கள் மீண்டு வரும்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் மகாபாரதத்தில் தர்மனுக்கு சூரிய பகவான் அட்சய பாத்திரத்தை அளித்ததாக சொல்லப்படுகிறது. அது வற்றாமல் உணவுகளை வழங்கியதாக புராணங்கள் கூறுகின்றன். அட்சய திருதியை நாளில் வெள்ளி அல்லது பஞ்ச லோகத்தால் செய்யப்பட்ட சிறிய கிண்ணங்கள் சில வாங்க வேண்டும். குல, இஷ்ட தெய்வத்தை வேண்டி அந்த பாத்திரத்தில் அட்சயம் என்று எழுத வேண்டும். இப்பொழுது உங்களுக்கு அட்சய பாத்திரம் தயாராகி விட்டது. வசதி வாய்பிற்கு ஏற்ப எத்தனை கிண்ணம் வேண்டு மானாலும் தயார் செய்யலாம்.
அதில் அரிசி, பருப்பு போன்ற தானியங்களை நிரப்பி பூஜை அறையில் வைத்து வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உபரியான உணவுப் பொருட்கள் கிடைக்கும். அதில் வீட்டில் உள்ள தங்கம், வெள்ளி காயின்களைப் போட்டு வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். அதில் 5 ரூபாய் நாணயங்கள் 9 வைத்து வழிபட்டால் தொழில் பெருகி வருமானமும் வாழ்வாதாரமும் உயரும்.
சாஸ்திரங்களில் கூறப்பட்ட பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் மனிதர்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் உயர்த்தும். அதனால் உங்களால் முடிந்த மங்களப் பொருட்களை வாங்கி வைத்து மகாலட்சுமியை வழிபட ஐஸ்வர்யம் பெருகும்.அன்று அதிக ஆசையில் கடன் வாங்கி எந்த பொருளையும் வாங்கக்கூடாது.அன்று கடன் வாங்கினால் கடன் உபரியாகிக் கொண்டே இருக்கும்.மாலைமலர் வாசகர்கள் அனைவரும் தங்களது சூழ்நிலைக்கு தகுந்த பொருட்களை வாங்கி அட்சய திருதியை மகிழ்ச்சியாக கொண்டாடி வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள நல்வாழ்த்துகள்.
- ஒரு பிரச்சினையை பூதாகரமாக பார்க்காதீர்கள். முடிந்தவரை அதனை சிறு துண்டுகளாக உடைத்து விடுங்கள்.
- கோபம் உங்கள் சிந்தனையை, எண்ண ஓட்டத்தினை சுருங்க வைத்து விடும்.
கொளுத்தும் வெயிலில் தண்ணி குடியுங்கள்... தண்ணி குடியுங்கள்... என விடாமல் அறிவுறுத்தப்படுகின்றது. வீட்டிலே இருந்தால் கூட இந்த வெயிலில் வாடி விடுவீர்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணி குடியுங்கள். இதை அனைவரும் செய்துதான் ஆக வேண்டும். செய்வோம். ஆனால் தினந்தோறும் 8 கிளாஸ் தண்ணி குடியுங்கள் என்று சொல்றாங்களே. அதை எப்படி செயல்படுத்த சொல்கின்றார்கள். தெரியுமா?
* காலை 6 மணி முதல் 7 மணிக்குள் தூங்கி எழுந்து பல் விளக்கிய பிறகு 2 கிளாஸ் நீர் பருகுவது. * உடலில் நச்சுக்களை நீக்கும். * மூளைக்கு நீர் சத்து கிடைக்கும். * ஜீரண உறுப்புகள் சீராய் செயல்பட ஆரம்பிக்கும்.
* காலை 8 மணி முதல் 9 மணி அளவில் சிற்றுண்டிக்குப் பிறகு ஒரு கிளாஸ் நீர் பருகுவதால் மூட்டுக்கள் இறுக்கமின்றி இருக்கும்.
* மதிய உணவிற்கு 1 மணி நேரம் முன்னால் ஒரு கிளாஸ் நீர் பருகுவது அதிக கொழுப்பினை எரிக்கும். உடல் செயல் பாட்டுத்திறன் கூடும். ஜீரண சக்தி கூடும்.
* மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் அதாவது மதிய உணவு அருந்தி ஒரு மணி நேரம் சென்று ஒரு கிளாஸ் நீர் பருகுவது சீக்கிரம் முதுமை எற்படுவதினைத் தவிர்க்கும். திசுக்களின் உறுதிக்கு உதவும்.
* மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் ஒரு கிளாஸ் நீர், டீ பருகு வதற்கு முன்னால் அருந்தி னால் அசிடிடி பாதிப்பு குறையும்.
* மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் ஒரு கிளாஸ் நீர் அருந்துவதால் (இரவு உணவிற்கு முன்னால்) அதிக உணவு உட்கொள்வதினைத் தவிர்க்கும்.
* குடல் புற்றுநோய் பாதிப்பு அபாயம் 45 சதவீதம் குறைகின்றதாம்.
* இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் ஒரு கிளாஸ் நீர் அருந்துவது. இரவு உணவிற்கு பிறகு ஒரு மணி நேரம் சென்று சத்துகள் உடலில் நன்கு உறிஞ்சப்படுகின்றன.
* மலச்சிக்கல் இன்றி இருக்க உதவுகின்றது.
* இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் ஒரு கிளாஸ் நீர் அருந்துவது (தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்னால்) உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க உதவும்.
* பக்கவாத பாதிப்பு, இருதய பாதிப்பினை தவிர்க்க உதவலாம். இந்த ஆய்வு கட்டுரையினை படித்தேன். ஆரோக்கியம் என்பது சத்துணவு, நீர் இவற்றினை எடுத்துக் கொள்ளும் முறை என பல விரிவாக்கங்களைப் பெற்றுள்ளது. கடிகாரம் பார்த்து நிமிடம் தவறாமல் கடை பிடிக்க வேண்டும் என்ப தில்லை. ஆனால் முடிந்தவரை பின்பற்றலாம்.
பொதுவில் நீர் குடிப்பதற்கு விதி முறை போல சில விடாத முயற்சி களையும் நம் ஆரோக்கி யத்திற்காக நாம் செய்ய வேண்டும்.

* உங்கள் உணவு, தூக்கம், உடற்பயிற்சி மிக முக்கியம்.
* நம் நிலைக்கு நாம் முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
* எது கடினம் என்று வாழ்வில் எதிர் வந்து நிற்கின்றதோ அதனை அடித்து விரட்டி விடுங்கள். இல்லை எனில் கவலை ஆரோக்கியத்தினை விழுங்கி விடும்.
* எல்லா சூழ்நிலைகளையும் வெயிலோ, குளிரோ, கஷ்டமோ, நஷ்டமோ, நாம் அதனை ஈடு கொடுத்து வாழத்தான் வேண்டும். (கரப்பான்பூச்சி போல, கரப்பான் பூச்சி எந்த சூழலுக்கும் தன்னை சரி செய்து கொள்ளும்).
* ஒரு பிரச்சினையை பூதாகரமாக பார்க்காதீர்கள். முடிந்தவரை அதனை சிறு துண்டுகளாக உடைத்து விடுங்கள்.
* சம்பாதித்து சேமிக்க வேண்டும். இதுவும் தேவையான அளவிற்கு அவசியமே.
* குடைந்து குடைந்து யோசித்துக் கொண்டே இருக்க வேண்டாமே. வாழ்க்கை முடிந்து விடும். * நாம் நம் மீது அன்பு செலுத்தினால், நாம் நம்மீது மரியாதை செலுத்தினால், பிறரும் நமக்கு அதனைச் செய்வர்.
* அழிவுப் பூர்வமான சிந்தனை உடையவர்கள் பக்கத்தில் இருந்தால் உங்கள் சக்தியை இழந்து விடுவீர்கள். அவர்களிடம் இருந்து ஓடி விடுங்கள். உடல் நலம்! உடல் ஆரோக்கியம்தான் முதன்மை யான செல்வம் என்பதனை உணர வேண்டும். ஆகவே உடல் ஆரோக்கியத்தில் முழு அக்கறை செலுத்துங்கள்.
எப்போதும் பிறர் தோளில் சாய்ந்து பயணிக்காதீர்கள். மற்றவர்களையும் உங்கள் மீது சுமையாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஏனெனில் ஒவ்வொருவரின் இலக்கும் தனித்தனியானது. இதில் கூட்டு வேண்டாம்.
மற்ற மனிதர்களிடம் எதனையும் எதிர்பார்க்காமல் இருந்தாலே ஆரவாரமற்ற மகிழ்ச்சி இருக்கும். சக்தி நம் பொக்கிஷம். இதனை நம் வளர்ச்சிக்கு திறமையை வளர்ப்பதற்கும் உருவாக்குவதற்கும் பயன்படுத்த வேண்டும். சக்தியினை பயத்தால் விரயம் செய்யக்கூடாது. இளமைக் காலம் நிரந்தரமற்றது. அதனை திறமையை சேமிக்கும் காலமாக மாற்றிவிட வேண்டும். எதற்கு பிறரை மாற்ற முயல வேண்டும்.
அனைவர் கூறும் அறிவுரையினையும் ஏற்றால் குழம்பிதான் நிற்போம். சுய ஒழுக்கம் இல்லாமல் எந்த முன்னேற்றமும் பெற முடியாது.
ஒருவர் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்கு சுய ஒழுக்கம் அவசியம். இறப்பும் பிறப்பும் யாருக்கு இல்லை. இடைபட்ட காலத்தில் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டாமா?
அதற்கு உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் உங்களுக்குள்ளேயே இருக்கட்டுமே. பிறரிடம் புள்ளி மாறாமல் சொல்ல வேண்டுமா என்ன?
தனித்து இருக்கும் பொழுது அமைதி உங்களை நோக்கி கவர்ந்து வரும். தீய சக்திகள் சுத்தி இருக்காது. சுயமரியாதை உங்கள் வாழ்வில் முதல் இடத் தில் இருக்க வேண்டும். கோபம், வேகம் இவற்றினை ஒருவர் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிறரை கட்டுப்படுத்துவது கட்டுப்பாடு ஆகாது.
கோபம் உங்கள் சிந்தனையை, எண்ண ஓட்டத்தினை சுருங்க வைத்து விடும். மற்றவர் உங்களை எரிச்சல் அடையச் செய்யும் போது, கட்டுப்பாடுதான் மிகப் பெரிய சக்தி. அதனை இழக்க மாட்டேன் என உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.
மன உறுதி கொண்டவர்கள் கடுமையான சூழ்நிலைகளில் கூட, இது நிரந்தரமற்றது. தற்காலிகமானது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. தெளிவு பெற்று செயலாற்றுவோம் என்றே நினைப்பார்கள்.
நேர்கொண்ட பார்வை அமைதியான மூச்சு, தெளிவான படபடப்பற்ற குரல், பேச்சு இவற்றுடனேயே காணப்படுவர்.
ஒரு நல்ல மனிதராக பண்புள்ளவராக ஒருவர் உருவாக வேண்டும். என்றால் சில பழக்கங்கள் நம் ரத்தத்தில் இருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள சுய ஒழுக்கங்கள் அவசியம். தீய பழக்கங்களை ஒவ்வொன்றாக சீக்கிரம் விட்டு விட வேண்டும். வருங்காலம் பற்றிய கவலை கூடாது. தோல்விகளைக் கண்டு சுருங்க கூடாது.
தவறு செய்துவிட்டால் தவறு என்று ஒப்புக் கொள்ளலாமே.
எளிமையைவிட பணக்கார வாழ்வே கிடையாது. கடந்த காலம்- அது போய்விட்ட காலம். சிறு வியாபாரம் செய்து பார்க்கலாமே. ஆக்கப்பூர்வ எண்ணம், ஆக்கப்பூர்வ மக்கள் இது மட்டுமே தேவை.

கமலி ஸ்ரீபால்
உங்களிடம் இருக்கும். எதனையும் போற்றி கொண்டாடுங்கள். உதாரணம்- புத்தகங்கள், உங்கள் தாத்தா கால நாற்காலி,
திறமைகள்தான் உண்மையான சொத்து. சாக்கு போக்கு சொல்வது கவுரவக் குறைவு தான். தைரியம், துணிச்சல் இல்லாவிட்டால் வீட்டிலேயே முடங்கிவிடலாம்.
காலை 6 மணிக்குள் எழுந்திருப்பின் சாதனையாளன். உங்கள்வாழ்க்கையை நீங்கள் விரும்ப வேண்டும். அதற்கு காரணமும் வேண்டும். உங்கள் சக்தியினை அரட்டை அடிப்பதிலும், தேவையற்று ஊர் சுற்றுவதிலும் செல வழிக்காதீர்கள். வேண்டாத விஷயங் களையோ, வேண்டாத நபர்களையோ ஒதுக்கத் தெரிய வேண்டும். பொறாமை கூடவே கூடாது. ஒரு வரை அது அரித்து விடும். அன்றாடம் தனியாக சிறிதுநேரம் இருக்க வேண்டும்.
இந்த நொடியில் வாழுங்கள்.
நீங்கள் நீங்களாக மட்டுமே எப்பொழுதும் இருங்கள்.
* உடல் ஆரோக்கியம் வேண்டு மென்றால் 80 சதவீதம் உணவில் கட்டுப்பாடு தேவை. உடற்பயிற்சி 20 சதவீதம் தேவை.
* நிலைத்த மகிழ்ச்சி வேண்டு மென்றால் 80 சதவீதம் கொள்கையோடு, நோக்கத்தோடு வேலை செய்ய வேண்டும்.
20 சதவீதம் தமாஷ், கேளிக்கை என்று இருக்க வேண்டும்.
* பணம், செல்வம் வேண்டும் என்றால் நல்ல பழக்க வழக்கங்கள், குணங்கள் 80 சதவீதம் தேவை. 20 சதவீதம் கணக்காக இருக்க வேண்டும்.
* ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் 80 சதவீதம் பலர் அனுபவங்களை படித்து, கேட்டு முயலுங்கள்.
20 சதவீதம் மட்டுமே பேசுங்கள். * படித்து அறிய வேண்டுமா 80 சதவீதம் புரிந்து கொள்ளுங்கள்.
20 சதவீதம் நன்றாக படிப்பு கூடும்.
* 80 சதவீதம் கடும் முயற்சி கண்டிப்பாய் முன்னேற்றம் தரும். இதில் 20 சதவீதம் பல புது கருத்துக்கள், யுக்திகள் சேரும்.
* முக்கியமான செயல்களுக்கு 80 சதவீதம் முதலிடம் கொடுங்கள். 20 சதவீதம் வேலைகள் தானாகவே வரிசையில் அமைந்து விடும்.
முன்பெல்லாம் இப்படித்தான் செய்தார்களாம்
* தலை வலித்தால் வாழைப்பழம் சாப்பிடுவார்களாம். இதிலுள்ள மக்னீஷியம் ரத்த குழாய்களை தளர்த்தும்.
* மூட்டுவலிக்கு அன்னாசி பழம் சாப்பிடுவார்களாம். இது வீக்கத்தினை குறைக்க வல்லது.
* மலச்சிக்கலுக்கு ஆப்பிள் - இது நார்சத்து மிகுந்தது.
* தொண்டை வலிக்கு தேன் - கிருமி நாசினி.

* உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்குமாம்.
* வயிற்றுப்போக்குக்கு வாழைப்பழம்- பொட்டாசியம் சத்து நிறைந்தது.
* நீர் சத்து குறைவுக்கு தர்பூசணி- நீர்சத்து மிகுந்தது.
* சதை பிடிப்புக்கு இளநீர்- தாது உப்புகள் நிறைந்தது.
* அஜீரணம் கோளாறுக்கு இஞ்சி - வயிற்று பிரட்டல், அஜீரணம் நீக்கும்.
* சோர்வுக்கு ஓட்ஸ் - சக்தி அளிக்க வல்லது.
* ரத்த சோகைக்கு பசலை கீரை - இரும்பு சத்து அளிப்பது.
இவை 'சிகிச்சை அல்ல' உபசத்தாக பயன்படுத்தலாம்.
- நகைச்சுவை காட்சிகளாக கதை முழுவதையும் சொல்ல சொல்ல கேட்க நன்றாக இருந்தது.
- டைரக்டர் சொன்னது போலவே கதை வித்தியாசமாக இருந்தது.
நடிகர் பிரித்விராஜை 'வாடா என் மூத்த மவனே...' என்று நான் அழைத்தால் எப்படி இருக்கும்! அப்படியும் நடந்தது!
ஐதராபாத்தில் படப்பிடிப்பு தளத்தில் படமாக்கப்பட்ட முதல் காட்சி அது. ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பிரித்விராஜை அப்படித்தான் அழைத்தபடி வருவேன். அந்த காட்சி சூப்பராக அமைந்தது. ஷாட் முடிந்ததும் என் அருகில் பிரித்விராஜ் வந்தார். மெதுவாக 'மாம்... ஷாட் எடுத்து கொண்டிருந்த போது பலத்த வெடிச் சத்தம் கேட்டதே கவனிச்சீங்களா...? என்றார். வெடிச்சத்தமா.....? என்றதும் "ஆமாம்..... என் குட்டி இதயம்தான் அப்படி வெடித்து..." உங்களுக்கு சத்தம் கேட்கவில்லையா? என்று கேட்டு விட்டு அவரும் சிரித்து விட்டார்.
நான் எனது மகனாக அவரை பாவித்ததை நினைத்து அவருக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அவருக்கு மட்டுமா? எனக்கும்தான்!
அது ஒரு வித்தியாசமான மலையாள படம். 'புரோ டாடி' இதுதான் படத்தின் பெயர். படம் முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகள் நிறைந்தது.

கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு எல்லோருமே சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அந்த படம் பற்றி பேச வந்தார்கள். எனக்கு மோகன்லால் ஜோடி என்றதும் மகிழ்ச்சி அடைந்தேன். நானும் மோகன்லாலும் இணைந்து நடித்த மலையாள படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களாக அமைந்தது.
அந்த வரிசையில் மீண்டும் மோகன்லால் ஜோடி என்றதும் மகிழ்ச்சி. நகைச்சுவை காட்சிகளாக கதை முழுவதையும் சொல்ல சொல்ல கேட்க நன்றாக இருந்தது. அப்போது எனக்கு மகனாக நடிக்கப் போவது யார்? என்றேன். பிரித்விராஜ் என்றார்கள்.
அதை கேட்டதுமே எனக்கு சிரிப்பு வந்து விட்டது. பிரித்விராஜ் என்ன சின்ன பையனா? அவர் ஒரு சிறந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என்று மலையாள திரை உலகில் பன்முக திறமைகளோடு முன்னணி நட்சததிரமாக இருப்பவர்.
அவர் எனக்கு மகனாக நடித்தால் எப்படி இருக்கும்? அவரது அம்மா வயதுக்கு நான் பொருத்தமாக இருப்பேனா? என்று ஏகப்பட்ட குழப்பங்களோடு கதை சொன்ன போதே டைரக்டரிடம் 'என்ன சார் இது....? மோகன்லால் ஜோடியாக நான். அது ஓ.கே! என் மகனாக பிரித்விராஜ் என்றால்... அது எப்படி...? என்று இழுத்தேன்.

அப்போது டைரக்டர் 'மேடம் நீங்க. கதாபாத்திரங்களை வைத்து மட்டும் எடை போட வேண்டாம். கதை அமைப்பு நன்றாக இருக்கும். திரையில் வரும் போது ரொம்ப காமெடியாக இருக்கும். நிச்சயமாக ரசிகர்கள் ரசிப்பார்கள் என்றார். எனது எண்ணம் வேறு விதமாக இருந்தது. மலையாளத்தில் நானும் மோகன்லாலும் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே 'ஹிட்' படங்களாக அமைந்தவை. அதே போல் இந்த படமும் மோகன்லால் ஜோடியாக நடிப்பதால் நன்றாக வரும் என்ற நம்பிக்கையோடு ஒத்துக் கொண்டேன்.
படத்தின் முதல் நாள் முதல் காட்சி படமாக்கப்பட்ட போதுதான் எங்களுக்குள் சிரிப்பை அடக்க முடியவில்லை.
முதல் முறையாக மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பு முற்றிலும் ஐதாபாத்தில் நடந்ததும் இந்த படத்துக்குத்தான்.
டைரக்டர் சொன்னது போலவே கதை வித்தியாசமாக இருந்தது. ஒரே நேரத்தில் மாமியராக இருக்கும் நானும் கர்ப்பிணியாக இருப்பேன். எனது மருமகளும் கர்ப்பமாக இருப்பார். சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் காட்சி அமைப்புகளை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
44 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பட வேலைகள் முடிவடைந்ததும் தியேட்டர்களில் படத்தை வெளியிட எல்லோருக்கும் தயக்கமாக இருந்தது. ஏனென்றால் கொரோனா விலகினாலும் மக்களிடம் பீதி விலகவில்லை. எனவே தியேட்டருக்கு ஜனங்கள் வருவார்களா? என்ற சந்தேகம் இருந்தது. எனவே வேண்டாம் விஷப்பரீட்சை என்று படக்கு ழுவினர் படத்தை ஒ.டி.டி. தளத்தில் வெளியிட முடிவு செய்து வெளியிட்டார்கள்.
படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தின் நகைச்சுவைகளும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது வித்தியாசமான படம்.
வாழ்க்கை எவ்வளவோ அனுபவங்களை கற்றுத்தருகிறது. கடந்த காலங்களை கொஞ்சம் பின்னோக்கி திரும்பி பார்த்தால் பல விசயங்கள் ஆச்சரியத்தை தரும்.
ஐந்து வயதில் நடிக்க வந்த போது எதுவும் தெரியாது. சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போலத் தான் இருந்தேன். அப்போதெல்லாம் நடிப்புன்னா என்ன? என்பது கூட தெரியாது. டைரக்டர் சொன்னதை செய்வேன் அவ்வளவு தான். அப்போது கேட்டதெல்லாம் கிடைக்கும். முக்கியமாக எல்லோரும் சாக்லெட் வாங்கி தருவார்கள். அப்போது அந்த சாக்லெட் மட்டும் தான் எனக்கு சந்தோசத்தை தந்தது. வேறு எதைப்பற்றியும் அந்த வயதில் நினைக்க தோன்றவில்லை.
குழந்தை பருவத்தை கடந்து கதாநாயகியாக ஆன பிறகுதான் பல விசயங்கள் தெரிய வந்தது. ஒரு சிறந்த கதாநாயகி என்று நான் நினைப்பதை விட பலர் என்னை லக்கி ஹீரோயின் என்று நினைத்ததும் பாராட்டியதும் தான் எனக்கு பெருமையாக இருந்தது.
ஒவ்வொரு படத்திலும் நடித்த போது எவ்வளவோ கஷ்டங்கள், சிரமங்களை தாங்கி இருக்கிறேன். ஆனால் அந்த படம் வெளியாகி வெற்றி பெறும் போது பட்ட கஷ்டங்களும், சிரமங்களும் மறைந்து போகும்.
சினிமா வெறும் நடிப்பு தான். அது நிஜம் கிடையாது. டீன் ஏஜ் பருவத்தில் கதா நாயகியாக நடித்த போது பல படங்களில் கர்ப்பிணி, பிரசவிக்கும் தாய் என்ற வேடங்களில் நடித்து இருக்கிறேன். அந்த அனுபவம் கூச்சமாகவும், ஒருவித அனுபவத்தையும் கொடுத்தது. அதை கூட குக்கிராமங்களில் படப்பிடிப்பு நடந்த போது கிராமத்து ஜனங்கள் நிஜமாகவே நான் கர்ப்பிணி என்று நினைத்து வருத்தப் பட்டதை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. அதே நேரம் மற்றவர்களை மனிதாபி மானத்தோடு பார்க்கும் கள்ளமில்லா அவர்களி்ன உள்ளம் மெய்சிலிர்க்க வைத்தது.
ஆனால் நிஜ வாழ்க்கையில் நானும் கர்ப்பிணியாகி, குழந்தையை பெற்றெடுத்தது மறக்க முடியாத அனுபவம்.
தாய்மை உணர்வு என்பது அனுபவித்து ரசிப்பது. அது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இப்படிப்பட்ட எத்தனையோ அனுபவங்களின் தொகுப்புதானே வாழ்க்கை...? அதிர வைத்த மற்றொரு அனுபவத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.
(தொடரும்...)
- தன்னைப் படைத்த கடவுளையே அறிந்து கொள்வதற்கு இணையானது ஆகும்.
- அடுத்தவர் மதிப்பீடுகளாலேயே நம்முடைய வாழ்க்கையின் மதிப்பீடு அளவிடப்பெறுகிறது என்பது தவறான கணிப்பு ஆகும்.
வாழ்க்கையைப் பற்றிச் சிந்திப்பதே வாழ்க்கை! என்று வாழ்ந்து கொண்டிருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு செயல் அசைவிலும் நாம் கவனத்தோடு ஈடுபட வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் நமது வாழ்க்கையே மதிப்புமிக்கது ஆகும். விழிப்பது தொடங்கி, உறங்கப்போவது வரை.. ஏன் உறங்கிய பின்னரும்கூட, ஒவ்வொரு மனிதரும், தன்னைப்பற்றிய, தனது அங்கங்களைப் பற்றிய, தனது செயல் அசைவுகளைப் பற்றிய மிகுந்த கவனத்தோடு வாழ வேண்டியது அவசியமானது ஆகும். நமது அங்கங்களின் மதிப்புகளை, நமது வாழ்வியல் செயல்பாடுகளின் மதிப்புகளை ஆழமான நம்பிக்கையோடு தீர்மானித்துக்கொண்டு, அவற்றிற்கேற்பச் சிந்தனைத் திறத்தோடு வாழத் தொடங்கினால், உண்மையிலேயே நாம் வாழ்வது மதிப்புமிக்க வாழ்க்கையாக ஆகிப்போகும்.
நம்முடைய வாழ்வின் மதிப்பு என்பது என்ன?; நம்முடைய மதிப்பை எப்படி மதிப்பீடு செய்வது?; எந்தத் தராசு கொண்டு நம்மை நிறுத்துப் பார்ப்பது? நம்மை மதிப்பீடு செய்யச் சரியான நபர் யார்?.. இப்படிப் பல கேள்விகளோடு மனிதர் ஒவ்வொருவரும் தம்மைப்பற்றிய மதிப்பீட்டுத் தேடலில் ஈடுபடத் தொடங்கலாம்; உண்மையில் ஒவ்வொரு மனிதரும் தன்னை அறிந்து கொள்வது என்பதுகூடத், தன்னைப் படைத்த கடவுளையே அறிந்து கொள்வதற்கு இணையானது ஆகும். இதையே இன்னொரு வகையில், 'தன்னை அறிதலே கடவுளறியும் தத்துவம்' என்றும் கொள்ளலாம்.
ஓர் இளைஞன் திடீரெனக் கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவலோடு தவம் இயற்றத் தொடங்கினான்; இளைஞனின் புதுமையான ஆவலைப் புரிந்துகொண்ட கடவுள், அவனை ரொம்பவும் சோதித்துக் காலம் தாழ்த்தாமல், திடீரென அவன் கண்முன்னே தோன்றிக் காட்சி தந்து, "நான் தான் கடவுள்! உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். 'வாழ்க்கையின் மதிப்பு என்ன?. இதைத் தெரிந்துகொள்ள மிக்க ஆவலாய் இருக்கிறேன்!' என்றான் இளைஞன். கடவுள் அந்த இளைஞனின் கையில் ஒரு சிறிய கல்லைக் கொடுத்து, 'இதைக் கொண்டுபோய் ஊருக்குள் இருக்கும் வணிகப் பெருமக்களிடம் இதன் மதிப்பு எவ்வளவு என்று அறிந்து வா!. சாதாரண சாலையோர வியாபாரி தொடங்கி, நகரின் மிகப்பெரிய வைர வியாபாரி வரை சென்று மதிப்பை விசாரி!; ஆனால் யாரிடமும் விற்றுவிடாதே!. ஒவ்வொருவரும் சொல்லும் மதிப்பீட்டைக் கேட்டுக்கொண்டு வந்து என்னிடம் சொல்!. பிறகு நான் வாழ்க்கையின் மதிப்பைப் பற்றிச் சொல்கிறேன்!" என்றார் கடவுள்.
கல்லைப் பெற்றுக்கொண்டு கடைவீதிக்கு வந்த இளைஞன், ஓர் ஆரஞ்சுப்பழ வியாபாரியிடம் சென்று, கல்லைக் காண்பித்து," இதன் மதிப்பு எவ்வளவு?" என்று கேட்டான். அந்தக் கல்லை இருமுறையும் இளைஞனை ஒருமுறையும் ஏற இறங்கப் பார்த்த ஆரஞ்சு வியாபாரி," இந்தக் கல்லுக்கு, என்னிடமுள்ள ஆரஞ்சில் பனிரெண்டு பழங்கள் தரலாம்; அவை தாம் இந்தக்கல்லுக்கான மதிப்பு" என்றான் பழ வியாபாரி.
அந்த இடத்தைவிட்டு நகர்ந்த இளைஞன், கொஞ்சம் தொலைவில் இருந்த ஒரு காய்கறிக் கடைக்குச் சென்றான். வியாபாரியிடம், "இந்தக் கல்லின் மதிப்பு எவ்வளவு? இதைப் பெற்றுக்கொண்டு இதற்கு மாற்றாக நீ என்ன தருவாய்?" என்று கேட்டான். கல்லை வாங்கிக் கல்லாப் பெட்டிக்குள் போட்டுக்கொண்ட காய்கறி வியாபாரி, இதற்கு மாற்றாக, ஒரு சாக்குப்பை நிறைய உருளைக் கிழங்கு தருகிறேன்!; வீட்டிற்குக் கொண்டுபோய்ச் சமைத்துச் சாப்பிடு!" என்றான்.
காய்கறிக் கடைக்காரனிடம் கல்லைத் திரும்பப் பெற்றுக்கொண்ட இளைஞன் அதனை அருகில் இருந்த ஒரு பெரிய நகைக் கடைக்குக் கொண்டு சென்றான். கல்லை முழுமையாக ஆராய்ச்சி பண்ணிய நகைக் கடைக்காரர், இந்தக் கல்லுக்கு மதிப்பாக என்னால் ஒரு லட்சம் ரூபாய் காசாக வழங்க இயலும்" என்று பெருமிதமாகச் சொன்னார். "வேண்டாம்!. இது கடவுள் தந்தனுப்பிய கல்! வெறும் மதிப்பு மட்டுமே கேட்டு வரப்பணித்திருக்கிறார்!; கல்லைத் திருப்பித் தாருங்கள்! "என்றான் இளைஞன். உடனே நகைக்கடைக்காரர், "மேலும் ஐம்பதினாயிரம் சேர்த்து, ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் தருகிறேன்!" என்று பேரம் பேசத் தொடங்கினார்.
கல்லை வாங்கிக் கொண்டு அந்த ஊரிலேயே மிகப்பெரிய வைர நகைக் கடைக்குச் சென்றான் இளைஞன்; அங்குதான் அசல் அருவிலை மணிகள் எல்லாம் கிடைக்கும். கல்லைப் பெற்றுக்கொண்டு பரிசோதித்த வைர வியாபாரி, மிகுந்த மன மகிழ்ச்சியோடும், முக மலர்ச்சியோடும் இளைஞனைப் பார்த்துப் பேசினார், " இந்த விலை மதிக்க முடியாத கல்லை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? என்பது பெரிய புதிராக இருக்கிறது; இந்தக் கல்லை மதிப்பிட்டு விலைபேசி விற்கவோ, வாங்கவோ இந்த மண்ணில் யாராலும் முடியாது; உலகம் முழுவதையும் விலையாகப் பேசித், தனது வாழ்நாளையும் யாரால் முழுமையாக ஒப்படைக்க இயலுமோ… அவரால்கூட இந்தக் கல்லை வாங்கிவிட முடியாது. ஏனெனில் இந்த உலகிலேலேயே விலைமதிக்க முடியாத அரிய பொருள் இந்தக் கல்!" என்றார்.
கல்லை வாங்கிக் கொண்டு மீண்டும் கடவுளிடம் போய் நின்றான் இளைஞன்; நடந்ததையெல்லாம் விலாவாரியாக விளக்கிச் சொன்னான். மீண்டும் கேட்டான்,
'வாழ்க்கையின் மதிப்பு என்ன?' கடவுள் சிரித்துக்கொண்டே விளக்கத் தொடங்கினார். " நீ கொண்டு சென்ற கல் ஒன்றுதான்; ஆனால் மதிப்பீடுகள் வெவ்வேறானவை. ஆரஞ்சுப்பழ வியாபாரி, காய்கறி வணிகர், நகைக் கடைக்காரர், வைர வியாபாரி இவர்கள் அனைவரிடம் இருந்தும் நீ பெற்ற பதில்கள் தாம் உனது வாழ்க்கையின் மதிப்பைத் தீர்மானிக்கின்றன.

சுந்தர ஆவுடையப்பன்
நீ உண்மையில் விலை மதிக்க முடியாத 'மதிப்பை' உடைய வாழ்க்கைக்குச் சொந்தக்காரனாக இருக்கலாம்; ஆனால் சிலர் பழக்கடைக்காரர், காய்க்கடைக்காரரைப் போல உன்னைக் குறைத்து மதிப்பிடக்கூடும்; சிலர். நகைக் கடைக் காரரைப் போலச் சற்று உயர்த்தியும் மதிப்பீடு செய்யலாம். ஆனால் நமது வாழ்க்கையின் மதிப்பு, உலகில் எவர் மதிப்பீட்டையும் விஞ்சி நிற்கிற மதிப்பீடாகச், சிகரம் தாண்டிய உயரம் உடையதாகத் திகழ வேண்டும்.
உலகில் வாழ்க்கையின் மதிப்பு என்பது அவரவர் சிந்தையின், வாழ் தரத்தின் உயரம் சார்ந்ததாகவே அமைவு பெறுகின்றது. 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் போல மனிதர்களின் உள்ளத்தனையது உயர்வு' என்று கூட வள்ளுவப்பெருந்தகை இதன் சீர்மை பாராட்டுகிறார். அடுத்தவர் மதிப்பீடுகளாலேயே நம்முடைய வாழ்க்கையின் மதிப்பீடு அளவிடப்பெறுகிறது என்பது தவறான கணிப்பு ஆகும். அடுத்தவர் போற்றும் வாழ்வாக நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குமுன், முதலில் நாம் போற்றும் வாழ்வாக அது அமைகிறதா?: நாம் விரும்பும் வாழ்க்கையாக அதனை மாற்றிக்கொள்ள முடிகிறதா? என்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.
நம்மைப் பற்றிய மதிப்பை நாம் உயர்த்திக்கொள்வதன் மூலமாகத் தான் நமது வாழ்க்கையை மதிப்புமிக்க வாழ்க்கையாக வடிவமைத்துக்கொள்ள முடியும். நம்முடைய வாழ்க்கை குறித்த மதிப்பீட்டை முதலில் நமக்கு நாமே குறைத்து மதிப்பிடாமல், உயர்த்தி மதிப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டும்; இது உயர் மனப்பான்மை அல்லது ஆணவப்போக்கு என்று கூட சிலர் எண்ணிப் பின் வாங்கலாம்.
ஆனால் எந்த நேரமும் தன்னைப்பற்றிய சோக மதிப்பீட்டிலேயே வாழ்க்கையை நடத்தினால், அது எப்போதும் மதிப்பு மிக்கதாக உயரவே உயராது. சிலருக்கு எப்போதும் அடுத்தவர்கள் அவரையே விடாது கண்காணித்துக் கொண்டிருப்பதாக எண்ணம் தோன்றும்; அவர்களுக்காக வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டுமே என்கிற பரபரப்புப் பற்றிக் கொள்ளும். தனக்கு எவருமே மதிப்பு மிக்க அங்கீகாரம் வழங்குவதில்லையே என்கிற கழிவிரக்கம் பற்றிக்கொண்டு, எந்தச் செயலிலுமே விரும்பி ஈடுபட முடியாத அளவுக்கு மனத்தை வெற்றிடம் தொற்றிக்கொள்ளும்.
இவற்றில் இருந்தெல்லாம் விடுபட்டு வெளி வருவதற்கு முதலில் தம்மைப் பற்றிய, தமது திறமைகளைப் பற்றிய மதிப்புகளில் நம்பிக்கை வைக்க வேண்டும். அடுத்தவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்கிற கவலையை அடிப்படையில் நம்மிடமிருந்து அகற்றி விட்டால் போதும்; சுதந்திர உணர்வு நம்மிடம் இருந்து பொங்கிப் புறப்படத் தொடங்கும். அடுத்தவர் நம்மைப் பற்றிப் பேசுவதை வைத்தே உழப்பிக்கொண்டிராமல், மனம் இலகுவாகி விட்டால், நமது செயலிலும், சிந்தையிலும் தன்னம்பிக்கை ஊற்றெடுத்துக் கிளம்பி, நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விடும்.
நம்மைப்பற்றி அடுத்தவர் நினைப்பது அப்புறம் இருக்கட்டும்; முதலில் நம்மைப்பற்றி நாம் பெருமையாகக் கருதுவதற்குப் பயிற்சி பெறுவோம். நம்மை எப்போதும் நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருந்தால், நம்முடைய செயல்களை, நம்முடைய மதிப்புகளை யார் பாராட்டுவார்? யார் கொண்டாடுவார்?.
இந்த உலகம் பொறாமையாளர்களின் கூடாரம். இந்த உலகில் நமக்கு இணையானவர்கள் மட்டுமல்ல; நம்மைவிடத் தகுதியில் குறைந்தவர்கள்கூட, நமது வளர்ச்சிகண்டு பொறாமைப்படுகிறார்கள்.
அதுமட்டுமல்ல, சில இடங்களில் நம்மைவிடத் தகுதியில் பெரியவர்கள் கூட நம்மைக்கண்டு பொறாமைப் படுகிறார்கள். பெரும்பான்மையும் பொறாமைக் கண் கொண்டு மட்டுமே காணப் பழகி விட்டவர் களிடம் நம்மைப்பற்றி நல்ல மதிப்பீடுகளை எப்படி எதிர்பார்க்க முடியும். அவர்கள் சொல்வது எப்படி சரியான மதிப்பீடுகளாக ஏற்றுக் கொள்ளப்படும்?. எல்லா மதிப்பீடுகளும் அவர்களது அளவு கோல்களாலேயே அளக்கப்படுகின்றன.
நமக்கு இணையான அளவு கோல்களை நாம்தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும்?.
நாம் ஈடுபடும் சின்னச்சின்னச் செயல்களை எல்லாம் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்; நிகழுகின்ற சின்னச் சின்னத் தவறுகளுக்கெல்லாம் வருந்துவதோடு மட்டுமல்லால், நேர்ந்துவிட்ட தவறு மீண்டும் நிகழாமல் இருக்க உறுதி பூணுங்கள். நம்மிடமுள்ள திறமைகளை எல்லாம் தன்னம்பிக்கையோடு நமது மதிப்புகளாக வெளிக்கொணர அயராது பாடு படுங்கள்.
மனிதப்பிறப்பு மாண்புடைய பிறப்பு. அதன் ஒவ்வொரு செயலும் மதிப்பு மிக்கதாகவே இருக்கும். அடுத்தவர் நம்மைப் பார்த்துக் குறைகள் கூறலாம்; திருத்தங்கள் செய்யச் சொல்லலாம்; கண்ணை மூடிக்கொண்டு வாய்க்கு வந்தபடிப் பாராட்டி மகிழலாம்; நாம் எதற்குமே லாயக்கில்லை என்று தரைமட்டத்திற்கு அடித்தும் வீழ்த்தலாம். வருத்தப்படாதீர்கள்!; எதற்கும் வருத்தப்படாதீர்கள்!; வீணான பாராட்டிற்கும் மயங்கிப் போகாதீர்கள்!. நம்முடைய உயரம் என்னவென்பது அடுத்தவர் களைவிட நமக்குத்தான் தெளிவாகத் தெரியும்; தன்னம்பிக்கையோடு பயணப்படுங்கள்.
உலகம் உற்சாக உலகம்தான். ஆனால் அந்த உற்சாகம் அடுத்தவர் மூலமாக நூறு சதவீதம் வந்து விடும் என்று மட்டும் எண்ணி விடக்கூடாது. நம்முடைய மதிப்பை நன்றாகவே கணித்து வைக்கப் பழகிவிட்டால் அடுத்தவர் கணிப்புகளுக்குக் கலங்கவோ, களிப்பெய்தவோ அவசியம் இருக்காது. மதிப்புமிக்கது வாழ்க்கை; அதை மேலும் மேலும் மதிப்புமிக்கதாக ஆக்க, மதிப்புமிக்க செயல்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும்.
தொடர்புக்கு 9443190098
- இயற்கைக் காட்சிகளையும் கீழே உள்ள கடற்கரையையும் பார்த்து மகிழலாம்.
- லைட் ஹவுஸ் கண்டிப்பாக பார்த்து மகிழ வேண்டிய இடமாகும்.
ஆந்திரபிரதேசத்தில் ஒரு அழகிய காஷ்மீர் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் கடற்கரைகள், நீர்வீழ்ச்சி, அருங்காட்சியகங்கள், அருமையான ஆலயங்கள் உள்ள இடமாகும். குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த மகிழ்ச்சி தரும். இங்கு பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. அவற்றில் சில இதோ:
கைலாச கிரி
நூறு ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்கா 360 அடி உயரத்தில் ஒரு குன்றில் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது.

ச.நாகராஜன்
இங்கிருந்து இயற்கைக் காட்சிகளையும் கீழே உள்ள கடற்கரையையும் பார்த்து மகிழலாம். இங்குள்ள முக்கியமான ஈர்ப்பு வெண்மை வண்ணத்தில் உள்ள சிவ பார்வதியின் அழகிய சிலைகளாகும். 40 அடி உயரம் உள்ளவை இந்தச் சிலைகள்.
இங்கு ரோப் கார் வசதி உள்ளது. ஆகவே அதிக உயரத்தில் இருந்து கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
ஆர்.கே.பீச்
ராமகிருஷ்ணா கடற்கரை என்பதன் சுருக்கமே ஆர்.கே.பீச். இதன் அருகே தான் டால்பின் நோஸ் உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் இது உள்ளது. மக்கள் விரும்பி வரும் கடற்கரை இது.
சப்மரீன் மியூசியம்

இந்த அருங்காட்சியகம் நிஜமாகவே ஒரு சப்மரீனுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கிறது. ஐ.என்.எஸ். குருசுரா என்ற இந்த சப்மரீன் இந்தியாவின் ஐந்தாவது சப்மரீன் ஆகும்.
இந்த மியூசியம் ஆர்.கே. கடற்கரை அருகில் வார் மெமோரியல் அருகே உள்ளது. நமது வலிமை, தேசபக்தி, வீரர்கள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் செய்திகள், கட்டுரைகள், படங்கள் இங்கு உள்ளன.
டால்பின் நோஸ்
விசாகப்பட்டினத்தின் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ள டால்பின் நோஸ் பகுதியில் இருந்து வங்கக் கடலில் அழகைப் பார்த்து மகிழலாம்.1175 அடி உயரத்தில் இருந்து சூர்ய அஸ்தமனத்தையும் பார்த்து மகிழலாம்.

இங்குள்ள லைட் ஹவுஸ் கண்டிப்பாக பார்த்து மகிழ வேண்டிய இடமாகும். இது யாரடா மற்றும் கங்குவரம் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. டால்பினின் மூக்கை நினைவுபடுத்துவது போல் உள்ளதால் இதற்கு டால்பின் நோஸ் என்ற பெயர் ஏற்பட்டது.
ரிஷிகொண்டா கடற்கரை
வங்கக் கடலில் அமைந்துள்ள அழகிய கடற்கரை இது. 15 கிலோ மீட்டர் தூரத்தில் இது உள்ளது. பெயருக்கேற்றபடி இது கிழக்குக் கடற்கரையின் மணிமகுடமே தான்!

கடலில் பல்வேறு நீர் விளையாட்டுக்களை விளையாட விரும்புவோர் இங்கு அவற்றை விளையாடி மகிழலாம்.
போர்ரா குகைகள்
விசாகப்பட்டினத்தில் இருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது போர்ரா குகைகள்.
சுமார் 2600 அடி உயரத்தில் இருந்து 4300 அடி உயரம் வரை உள்ளன. அனந்தகிரி மலைத்தொடரில் 2310 அடி உயரத்தில் அமைந்துள்ளது போர்ரா குகைகள்.

இதைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. பசுக்களை மேய்க்கும் சிறுவன் பசு ஒன்றை மேய்த்துக் கொண்டிருந்த போது அது அங்கிருந்த துளை ஒன்றின் வழியே கீழே விழுந்து விட்டது. அதைத் தேடிச் சென்றவர்கள் இந்த குகையைக் கண்டு அதிசயித்தனர். அங்கு ஒரு சிவலிங்கமும் காணப்பட்டது. சிவபிரானே பசுவைக் காப்பாற்றியதாக ஐதீகம் நிலவுகிறது. இங்கு பின்னர் ஒரு ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள பெரிய குகைகளுள் இதுவும் ஒன்று.
யாரடா கடற்கரையில் சூர்ய அஸ்தமனக் காட்சி
யாரடா கடற்கரை விசாகப்பட்டினத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கங்காவரம் கடற்கரை மற்றும் துறைமுக, டால்பின் மூக்கு, ஆகியவை இதன் அருகிலேயே உள்ளன.
இந்தக் கடற்கரையில் சூரியன் மறையும் காட்சி அழகிய காட்சி என்பதால் இங்கு ஏராளமானோர் திரள்வது வழக்கம்.

இங்கு படிந்துள்ள வண்டல் மண் பற்றிய ஆய்வில் இந்த மண்ணானது அருகில் உள்ள புறா மலை அமைந்திருப்பதன் விளைவால் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வண்டல்கள் சேர்வதும் பின்னர் அரிமானத்தால் அவை நீங்குவதுமாக இருக்கின்றன!
விசாகப்பட்டினம் மிருகக்காட்சி சாலை
விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இது.

இங்கு அழகிய மான்கள், யானைகள், இமயமலைக் கருங்கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளையும், பட்டாம்பூச்சிகளையும் ஏராளமான பறவைகளையும் பார்த்து மகிழலாம். சிறுவர்கள் மகிழ்ச்சி அடைவர். மூன்று பக்கம் கிழக்குத்தொடர்ச்சி மலைகள் இருக்க நான்காவது பக்கம் வங்கக் கடல் திகழ 625 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது இது.
சிம்மாச்சலம் கோவில்
விசாகப்பட்டினத்திற்கு வடக்கே பத்து மைல் தூரத்தில் உள்ள இந்தக் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது சிம்மாச்சலம் மலையில் ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. வராக நரசிம்மர் எழுந்தருளி அருளும் இந்தத் தலம் 32 நரசிம்மத் தலங்களில் ஒன்றாகும்.

5 வாயில்களுடன் அமைந்துள்ள இது ஒரு கோட்டையைப் போல காட்சியளிக்கிறது. இதைப் பற்றிய புராண வரலாறுகளும், சரித்திர வரலாறுகளும் ஏராளம் உள்ளன.
கடிகி நீர்வீழ்ச்சி
கடிகி நீர்வீழ்ச்சி இயற்கைச் சூழலில் அமைந்த ஒரு நீர்வீழ்ச்சி. கோஸ்தானி ஆற்றில் இருந்து வரும் நீர் 50 அடி உயரத்தில் இருந்து கடிகி என்ற கிராமத்தில் நீர்வீழ்ச்சியாக விழுகிறது. போர்ரா குகை அருகே உள்ளது இது.
இங்கு மலைமீது டிரெக்கிங் செய்ய வசதிகள் உண்டு. இங்கு முகாமிட்டும் தங்கலாம். நுழைவுக் கட்டணம் எதுவும் இங்கு கிடையாது. மேலே செல்ல ஜீப் வசதிகள் வாடகைக்குக் கிடைக்கும். போர்ரா குகைக்கும் இதற்கும் உள்ள தூரம் 5 கிலோமீட்டர் தான்!
அரக்கு பள்ளத்தாக்கு
கடிகி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் பார்க்க வேண்டிய இடம் அரக்குப் பள்ளத்தாக்கு என்ற மலை வாசஸ்தலம் ஆகும். காடுகள் அடர்ந்த இயற்கைச் சூழல் நிறைந்த பகுதி இது. இது காப்பித் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இது உள்ளது. இந்தப் பகுதியில் தான் 30-க்கும் மேற்பட்ட போர்ரா குகைகள் உள்ளன.
பீம்லி பீச்
பீமுனிப்பட்டினம் கடற்கரை என்பதே பீம்லி பீச்சாக மருவி அழைக்கப்படுகிறது.
பஞ்ச பாண்டவரில் ஒருவரான பீமனின் பெயரைக் கொண்டது இது. கொஸ்தனி ஆறு வங்காள விரிகுடாவுடன் கலக்கும் இடத்தில் இந்தக் கடற்கரை உள்ளது. பக்கத்தில் உள்ள பவுரலகொண்டா மலைப்பகுதியில் ஏராளமான தேவதாரு மரங்களைக் கண்டு மகிழலாம். 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தக் கடற்கரை விசாகப்பட்டினத்தில் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும்.
மொத்தத்தில் அழகிய கடற்கரைகள், ஆறு கடலில் கலக்கும் சங்கம இடம், கோவில், நீர்வீழ்ச்சி, அருங்காட்சியகங்கள் என பல்வேறு சுற்றுலா அம்சங்களைக் கொண்ட விசாகப்பட்டினம் சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்ற ஒரு இடமாகும்.
- சமுதாயத்திற்கு தீங்கு இழைப்பவரைக் கண்டு நாம் ஒதுங்கி வாழ்வதே நன்று.
- சான்றோர்களின் உபதேசம் பெற முன்ஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும்.
அதிகாரம்: சிற்றினம் சேராமை
இந்த அதிகாரத்தில்,
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
என்ற குறளில் தொடங்கி
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.
சமுதாயத்தில் மேல்மக்கள் என்ற தகுதியை உடையவர்கள் உயிர்க்கொலை செய்யாதவர்களாகவும் ஜீவதயவு உடையவர்களாகவும் இருப்பார்கள்.
தாய்-தந்தை, மனைவியிடம் அன்பு காட்டுவார்கள். நண்பர்களிடமும், உறவினர்களிடமும் நட்பு பாராட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். பிறர் மனம் வருந்தும்படியான செயல்களையோ, பேச்சுக்களையோ பேச மாட்டார்கள். இவர்கள் சான்றோர்களின் தொடர்பும், சன்மார்க்க சங்கத்தில் அல்லது சாது சங்கங்களின் தொடர்பும் உள்ளவர்களாக இருப்பார்கள்.
திருஅருட்பா, திருவாசகம், திருமந்திரம் போன்ற முற்றுப்பெற்ற ஞானிகளின் நூல்களை இவர்கள் படிப்பார்கள். நண்பர்களுக்கு பாதுகாவலாக இருப்பார்கள். சிறுமை புத்தி உள்ளவர்களிடம் நட்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வார்கள்.
ஒரு சிலர் புலால் உண்ணுவார்கள். துஷ்ட தேவதைகளுக்கு உயிர்பலி கொடுப்பார்கள். வரம்புக்குட்படாத பேச்சுக்களை பேசுவார்கள். அவர்கள் சொல்லும், செயலும் தான்தோன்றித் தனமாகவே இருக்கும். பாவ, புண்ணியத்தைப் பார்க்காமல் பிறருக்கு தீங்கு இழைப்பதையே பெருமையாக நினைத்து ஆணவமாகவே செயல்படுவார்கள். இத்தகையவர்களை நீச்சர்கள் எனக் கூறுவதுண்டு. இவர்களையே இந்த அதிகாரத்தில் சிற்றினத்தார் என்று வள்ளுவர் கூறுகின்றார். குணப்பண்பு இல்லாமல் பாவத்தை மட்டுமே செய்கின்ற மக்களிடம் ஆன்மீகவாதிகள், மேல்மக்கள், ஜென்மத்தை கடைத்தேற்றுபவர்கள் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதையும் ஆசான் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார்.
சமுதாயத்திற்கு தீங்கு இழைப்பவரைக் கண்டு நாம் ஒதுங்கி வாழ்வதே நன்று. இல்லையேல் அவர்களின் எண்ண அலைகள் நம்மை பாதிக்கும். அதனால் நம்முடைய அறிவும் குழப்பமடையும்.
பொருள் பற்று உள்ளவர்கள், நெறி தவறி பொருள் சேர்ப்பவர்கள், சாவை பற்றி சிந்திக்காமல் மனம்போன போக்கில் வாழ்பவர்கள் மீண்டும் பிறவி எடுத்து நரகத்தை அனுபவிப்பார்கள்.
உடலாலும் உள்ளத்தாலும், செயலாலும் பிறருக்குத் தீமை செய்யாதிருக்க வேண்டும். உலகநடையில் இருந்தாலும் தலைவன் மீது பக்தி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
உடம்பில் காமம் இருக்கும் வரை மனம் தூய்மை அடையாது, விகாரமாகவே இருக்கும். இது இருள் தேகம், மருள்தேகம், நச்சுதேகம், விஷதேகம். எனவே இந்த தேகத்தின் குண இயல்பை அறிய வேண்டும்.

தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்
இந்த தேகம் மனிதனுக்கு நரகத்தை உண்டாக்கும் என அறிந்து அதில் உள்ள களிம்பை, மாசை, குற்றத்தை நீக்க வேண்டும். அதனை நீக்கி காமத்தை வென்றவர்கள் ஞானிகள். அவர்களின் திருவடியைப் பற்றினால் ஒழிய தேகக்குற்றத்தை நீக்க முடியாது. இதற்கு உபாயம் ஒன்று தியானம், மற்றொன்று புண்ணியம்.
புண்ணியவான்களின் திருவடியைப் பற்றினால் அன்றி புண்ணியம் செய்ய முடியாது. பூஜை செய்ய செய்ய ஜீவதயவு உண்டாகும். ஜீவதயவு இல்லையென்றால் அருள்பெற முடியாது. அருளில்லை என்றால் ஜென்மத்தை கடைத்தேற்ற முடியாது.
கீழ்த்தரமான எண்ணமும், செயலும் உள்ளவர்களிடம் சான்றோர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள். இவர்களிடம் சேராததையே சிற்றினம் சேராமை என்று கூறுவார்கள்.
தாழ்ந்த புத்தி உள்ளவர்களுக்கு சான்றோர்களின் உபதேசம் கிடைக்காது, கேட்டாலும் அவர்களுக்கு புரியாது. அவர்களுக்கு எந்த விதத்திலும் பலிக்காது.
சான்றோர்களின் உபதேசம் பெற முன்ஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும். முற்றுப்பெற்ற முனிவர்களின் திருவடியைப் பற்றினால் சான்றோர்களின் உபதேசம் புரியும். சிறுமை புத்தி உள்ளவர்களுக்கு எதுவுமே புரியாது.
எந்த இயற்கை இந்த உடம்பை கொடுத்ததோ அந்த இயற்கையின் துணைக்கொண்டு பூஜை, புண்ணியம் செய்து இந்த காமதேகத்தை வெல்ல வேண்டும். எல்லாவற்றிற்கும் திருவருள் துணை வேண்டும்.
மழை பெய்யும்போது மழைநீர் தூய்மையாகவே இருக்கும். ஆனால் அந்த நீர் எந்த நிலத்தில் விழுகின்றதோ அந்த இடத்தின் தன்மை அல்லது அந்த நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மாறும். அதுபோல் எந்த இடத்தைச் சார்ந்து நாம் இருக்கின்றோமோ நமது செயல்பாடுகளும் அவ்வாறே அமையும். எனவே சான்றோர்களைச் சார்ந்து வாழ்வது நமக்கு சிறப்பறிவைத் தரும்.
மனம் எந்த அளவிற்கு செம்மையாக உள்ளதோ அந்த அளவுக்கு அங்கே பொது உணர்வு இருக்கும். ஞானிகளை வணங்கினால் பொது உணர்வு, சான்றோர் தொடர்பு, ஆன்மீக நாட்டம் ஏற்படும்.
மனம் தூய்மையாக இருந்தால் செய்கின்ற செயலில் தூய்மை இருக்கும். பொதுசேவையில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று சுயநலத்திற்கோ, சுயவிளம்பரத்திற்கோ பயன்படுத்துதல் கூடாது. அத்தகையவர்கள் தீராத பழியை ஏற்பார்கள்.
சிற்றினம் சேர்ந்தால் வினை சூழும். ஞானிகளின் திருவடியைப்பற்றி சான்றோர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் நல்ல வாழ்க்கை, நிறைந்த செல்வம், நல்ல நட்பு, நல்ல உறவு, பலரும் கரம் கூப்பி நம்மை நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என்று கூறுகின்ற வாழ்க்கை உண்டாகும்.
பண்புள்ள மக்கள் தொடர்பு இருந்தால் நல்ல செயலை செய்யலாம். வஞ்சகர்கள் தொடர்பு இருந்தால் தீமை செய்து பாவியாகலாம்.
முற்றுப் பெற்றவர்களின் திருவடியைப்பற்றி பூஜை செய்வோம், புண்ணியம் செய்வோம், ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வோம்.






