என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஊட்டம் தரும் கம்பஞ்சோறு!
    X

    ஊட்டம் தரும் கம்பஞ்சோறு!

    • நம்முடைய நாட்டுத் தானியங்களில் கம்பில் தான் அதிக பசைத் தன்மை அதிக அளவில் உள்ளது.
    • நாட்டுத் தானிய உணவை உண்கிறபொழுது வயிற்றில் உணவு தங்கி வயிறு கீழிறங்கி தொப்பை போடவேண்டிய அவசியம் இருக்காது.

    கம்பினை சுமார் ஒருமணி நேரம் ஊறவைத்தால் போதும். நீரினை வடித்து உலர விட்டு உரலில் போட்டு உலக்கையால் இடிப்பார்கள். இரண்டு உலக்கை போட்டு இளம்பெண்கள் இருவர் ஜங் ஜங்கென்று தோள்பட்டை அதிர இடித்தால் தெருவே அதிரும். அக்காலத்தில் மிகவும் வசதியான வீடுகளில் கூட இடிவுரலைத் தனியாக வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஏன் ஈர மாவினை ஆட்டுகிற உரல் கூட தெருவுக்கு ஒன்றுதான் இருக்கும். தெருவுக்கு ஒன்றாக உள்ள உரலில் பண்டிகைக் காலங்களில் ஆட்டும்போது பத்துப்பதினைந்து பேர் வரிசை கட்டி ஆட்டினாலும் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொள்ள மாட்டார்கள். அப்படியே சண்டையிட்டாலும் அது ஓரிரு மணிநேரங்களுக்குக் கூட நீடிக்காது. ஓரிடத்தில் கூடியும் இணைந்தும் செய்தால் தான் வேலைநடக்கும். அடுத்த வேளைக்கு உலை வைக்கமுடியும் எனும்படிக்கான வாழ்க்கை முறை நம்மிடம் இருந்தது. எனவே சமூக ஒற்றுமை, பிணைப்பு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் அனைத்தும் தன்னியல்பாக அமைந்திருந்தது.

    ஆற்றுநீரை, ஏரி, குளம் நீரை பகிர்ந்து பயன்படுத்த வேண்டியிருந்தது. அதில் பற்றாக்குறை ஏற்பட்டபோது பிரச்சனைகள் எழாமல் இல்லை. ஆனால் அப்படி சிக்கல் எழும்போது யாரும் நீதிமன்றத்தை, நடுவர் மன்றத்தை நாடிச் செல்ல வேண்டிய நிலை இருந்ததில்லை. பிரச்சனை எழும்போதே அங்கே தீர்த்துவைப்பதற்கு ஒருவர் இருப்பார். ஊர்ப்பெரியவர், நாட்டாண்மை, பெரிய தலைக்கட்டு, அனுபவஸ்தர் என்று யாராவது இருப்பார்கள். இவர்களில் யாரும் பிரச்சனைகளின் மையத்தைத் தான் பார்ப்பார்களே தவிர சம்பந்தப்பட்டவர் வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்கமாட்டார். தனக்கு அதில் என்ன கிடைக்கும் என்று பார்க்க மாட்டார். தனக்கு வேண்டிய உறவுக்காரருக்கு நட்டம் ஏற்பட்டாலும் நீதியைத் தான் முன்வைப்பார்கள். அப்படித் தன்னலம் பாராத மனிதர்கள் இருக்கவே செய்தனர்.

    மக்களிடையே சாதிகள் இன்றைக் காட்டிலும் அன்று துல்லியமாகக் கோடுகிழிக்கப்பட்டு இருந்தாலும் சாதியப் பிளவுகள் இருந்ததில்லை. சாதிகளுக்குள் இணக்கமும் நெருக்கமும் இருக்கவே செய்தது. அதைத் தான் ஊர்க்கூடித் தேரிழுத்தல் என்றார்கள். கோவில் கொடை கொண்டாட்டம் மட்டுமல்ல, துக்கமும் கூட ஊர்க்கூடியே கழித்தது. ஆம் ஊரில் எந்தத் தெருவில் சாவு என்றாலும் ஊரின் மொத்த சனமும் துக்க வீட்டில் கூடி இருக்கும்.

    இறுதிச்சடங்கு நடந்து முடியும்வரை யாரும் காட்டுவேலைகள் தோட்டவேலைகள் எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எழுதப்படாத விதி இருந்தது. அந்த விதியை தன்னொழுங்காகவே அனைவரும் பின்பற்றி வந்தனர்.

    தீண்டாமை என்பது ஒரு கொடூர வியாதி தான். ஆனால் அதையும் மீறி சமூக ஒழுங்கு இருந்தது. இன்றும் சில கிராமப் புறங்களில் இந்த ஒழுங்கு பின்பற்றப்படுகிறது. மிகவும் அடித்தட்டில் உள்ள இறப்புச் சடங்குகளுக்குக் கூட பொருள் வளமை இல்லாத வீட்டில் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் ஊரில் உள்ள பெருந்தனக்காரர், பொருள் வசதிபடைத்தோர் அடுத்தவருக்குத் தெரியாமல் பணத்தைக் கையில் திணித்து விட்டுப் போவார்கள்.

    இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி சின்னஞ்சிறிய வாழ்வாதாரத்தைக் கூட ஆட்டைப்போடும் பெரிய மனிதர் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கத்தான் செய்தனர். ஆனால் சமூக இணக்கமும் மனிதத்துவமும் மேலோங்கி இருந்ததே அதிகம். அதனால் தான் சண்டைச் சச்சரவுகளை விட சமாதான காலம் நீடித்து இருந்தது.

    இடி உரலை வீட்டுக்குள் போட்டு இடித்துக் கொண்டிருந்தால் இடிக்கிற அதிர்வில் வீட்டுச் சுவர்களே விரிவு விட்டுவிடும். எனவே தெருவிலோ மந்தையிலோ தான் உரலைப் போட்டு வைப்பார்கள். அனைவரும் காட்டுவேலைகள் முடித்து விட்டு வந்து ஒரேநேரத்தில் தான் உலை வைப்பார்கள். ஆனாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கம்பினை உரலில் இடிப்பார்கள். கம்பினை இடிக்க உடலில் வலுவிருக்க வேண்டும். கம்பிடிக்க உடல் திறனில்லாத வயதானவர்களுக்கு இளம்பெண்கள் தாமாகவே முன்வந்து இடித்துக் கொடுப்பார்கள். சுமார் இருபது வயதில் இருந்து ஐம்பது வயதிற்கு உட்பட்டவர்களே இடிப்பார்கள். பெண்கள் எப்படித் தமக்குள் மிக எளிதாகச் சண்டையிட்டுக் கொள்வார்களோ அவ்வளவு எளிதில் இணக்கமாகியும் விடுவார்கள். அந்த இணக்க உணர்வு இருந்தால் ஒழிய ஒரே தாளலயத்தோடு கம்பு இடிக்க முடியாது.

    போப்பு, 96293 45938

    கம்பு தானியம் கேழ்வரகு அளவிற்கு இல்லையென்றாலும் சற்றுக் குறைவான அளவிற்கு இறுகல் தன்மை உடையதுதான். அதனால் நீரில் ஊற வைக்காமல் இடித்தால் இடிக்கவும் முடியாது. மீறி இடித்தால் மாவாக தெறிக்கும். நீண்டநேரம் முழுதாக ஊறிவிட்டால் இடிக்கும் பொழுது சொதசொதவென்று நுரைத்துப் பொங்கிவிடும்.

    கம்பஞ்சோறு வைப்பதற்குரிய பக்குவம் தவறி விடும். வாயில் போட்டு மெல்லும் பக்குவத்திற்கு ஊறவிட்டு இடித்தால் கம்பு பதமாக, நொய்யாக உடையும். ஈரமாகக் கெட்டி உருண்டையாகவும் பிடிக்கலாம். உதிரியாகவும் இருக்கும். இதுதான் கம்பஞ்சோறு காய்ச்சுவதற்குப் பொருத்தமான உடைப்பு ஆகும். கொதிக்கிற உலையில் உடைத்த கம்பினை பூச்சாறல் போல் பொழிந்தால் கட்டிப்படாமல் ஒன்றுடன் ஒட்டாமல் நொய் மலர்ந்து சோறாகும். சோறு முழுமையாக வெந்து விட்டதும் ஒன்றோடொன்று இணைந்து களி பதத்தில் இறுகத் தொடங்கும். அந்த நேரத்தில் அடுப்பில் தனலைத் தணித்து விடுவார்கள். மண்பாண்டத்தின் வெப்பத்தால் அடியில் ஒரு ஏடு பிடிக்கும் பாத்திரத்தில் உள்ள அடிச்சோறுவரை எடுத்த பின்னர் அந்த அடியேட்டினை பழத்தோலினை உரித்து எடுப்பது போல எடுத்தால் தோசை போல இருக்கும் ஏட்டினை உண்ண போட்டா போட்டி நடக்கும்.

    கம்பஞ்சோறு வைத்தால் சூடாக குழம்பு ஊற்றி சாப்பிடலாம். அதுவே மறுநாள் காலையில் குளிர்ந்த பின் இன்னும் இறுகலாகப் பதமாக கிரீம் கிரீமாக வழித்து எடுக்கலாம். ஆறின கம்பஞ்சோறு துணைக்கு தொட்டுக்கொள்ள எதுவும் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம். ஹார்லிக்சை விட சுவையாகவே இருக்கும். ஊட்ட பானம் என்று சொல்லப்படுபவற்றில் ஆதார சுவையை வழங்குவது சிறுதானியக் கலவையே ஆகும். சிறுதானியங்கள் உடலுக்கு ஊக்கம் தருபவையாகும். ஆனால் ஊட்ட பானங்களில் சேர்க்கப்படும் மணம், நிறம், சுவையூட்டிகள் மூளைக்குத் தூண்டலைத் தருகின்றன. எனவே தான் மீண்டும் மீண்டும் அவற்றை பருக வேண்டும் என்ற எண்ணம் ஓரிரு முறை பருகிப் பழகியவர்களுக்கு ஏற்படுகிறது.

    மேலும் சில பானப் (பவுடர்) பொடிகளில் அதீதமான சர்க்கரைச் சேர்மானம் செரிமான உறுப்புகளில் சட்டென்று ஓர்நிறைவின்பத்தை அளிக்கின்றன. ஆனால் இந்த நிறைவின்பம் நமது உள்ளுறுப்புகளைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியவை என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. இப்படியான உள்ளுறுப்புகளின் பாதிப்பால் ஹார்மோன் சுரப்பிகளும் இளம் வயதிலேயே ஏறுக்குமாறாகச் சுரக்கத் தொடங்குகின்றன. இவையே இன்று பரவலாகி வரும் நோய்களுக்கு ஆதாரப் பண்புகள்.

    சிறுதானியங்களை நேரடியாகப் பாரம்பரிய முறைப்படி எடுத்துக் கொள்கிறபோது அவற்றின் சத்துக்கள் உடலுக்குள் முழுமை பெற்று விட்டால் மீண்டும் அவற்றை எடுக்கத் தோன்றாது. இது சலிப்புணர்வல்ல. நிறைவுற்ற உணர்வே ஆகும். எனவே சுவையூட்டிகளையும், மணமூட்டிகளையும் சேர்க்காத வகையில் சிறுதானியங்களைப் பயன்படுத்துவதே உடலுக்கு நன்மை பயக்கும்.

    நம்முடைய நாட்டுத் தானியங்களில் கம்பில் தான் அதிக பசைத் தன்மை (glutun) அதிக அளவில் உள்ளது. நார்ச்சத்துடன் கூடிய பசைத்தன்மை உடலுக்கு அதிக ஊட்டத்தை வழங்கும். சதை வளர்ச்சிக்கு ஏற்றது கம்பின் பசைத் தன்மை. இந்த பசைத்தன்மை லினோலெயிக் (linoleic) அமிலப் பண்புடையதாகும். இந்த அமிலத்தின் உயிர்ப்பு (ஒமேகா) உடலில் சேரும் ஒவ்வாத பிற ரசாயனக் கூறுகளை எதிர்த்து நீக்கவல்லதாகும்.

    சரி, தற்காலத்தில் உரலும், உலக்கையும் அருங்காட்சிப் பொருளாகி விட்ட பின்னர் நகரிய வாழ்க்கை முறையில் கம்பஞ்சோற்றுக்கு கம்பினை இடிப்பது எப்படி? உரலையும், உலக்கையையும் கண்டுபிடித்து விட்டாலும் அதனை இடிக்கும் புஜபலம் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் கூட இல்லை. எனவே சுத்தம் செய்யப்பட்டக் கம்புவை ஒன்றிலிருந்து ஒன்றரைமணி நேரம் ஊற வைத்து வடிதட்டில் கொட்டி ஆறவிட வேண்டும்.

    நன்றாக உலர்ந்த பின்னர் மிக்சியின் பெரிய ஜாரில் விட்டு ஒரே ஓட்டாக ஓட்டாமல் நிறுத்தி நிறுத்தி கிளறி விட்டு கம்பு அளவைப் போல மூன்று மடங்கு நீர் வைத்து கெட்டிபடாமல் உதிரியாக நீரில் பெய்து சிம்மில் வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவேண்டும். நீர் வற்றியதும் அப்படியே அணைத்து சற்று நேரம் மூடி வைத்தால் பிரியாணி போல கமகமக்கும் கம்பஞ்சோறு.

    காலையில் இந்தக் கம்பஞ்சோற்றினை காலை நேரத்தில் மிதமான புளிப்பும் காரமும் கொண்ட தக்காளித் தொக்குடன் அல்லது தக்காளிச் சட்னியுடன் சாப்பிட்டுப் பாருங்கள். காலை டிபனுக்குப் பின் வரும் உண்ட மயக்கம் தோன்றாமல், இடையிடையே காபி, டீ குடிக்கத் தோன்றாமல் சரசரவென்று வேலை நடக்கும்.

    இதே கம்பினை அரைக்கிலோ கம்புடன் நூறுகிராம் தோலுடன் கூடிய உடைத்த உளுந்து போட்டு ஊற வைத்து கிரைண்டரில் விட்டு ஆட்டி ஆறு மணிநேரம் புளிக்க வைத்து தோசையாகச் சுட்டால் துணைக்கு ஏதும் தேவைப்படாமல் சாப்பிடலாம். தேங்காய்ச் சட்னியோ, தக்காளிச் சட்னியோ தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் வழக்கமாகச் சாப்பிடும் நான்கோ, ஐந்தோ சாப்பிடத் தோன்றாது. ஏனென்றால் நல்ல சத்து மிகுந்த கம்பு தோசை இரண்டு சாப்பிட்டாலே போதுமென்று தோன்றும். மிகு சத்துள்ள உணவை குறைவாக உண்டதும் உடல் நிறைவெய்தும். ஆகையால் நாட்டுத் தானிய உணவை உண்கிறபொழுது வயிற்றில் உணவு தங்கி வயிறு கீழிறங்கி தொப்பை போடவேண்டிய அவசியம் இருக்காது.

    இதைவிட இன்னொரு எளியமுறை அதேநேரத்தில் சத்தான உணவு குறித்து அடுத்தவாரம் பார்க்கலாம்.

    தொடர்வோம் சுவை.

    Next Story
    ×