என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • ஐந்து நாட்கள் வேலையை ஒரே நாளில் முடித்து விடுவீர்கள்.
    • ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே முதற் கவனம் செலுத்தி வந்தனர்.

    நாம் பார்த்த உதாரணத்தையே சற்று மாற்றிப் பார்ப்போம்.

    உங்களுடன் சேர்ந்து பணியாற்ற இருக்கும் ஒன்பது நபர்களும் உங்களுடைய பரம எதிரிகள் என்பதற்குப் பதிலாக, உங்களுடைய உயிர்த் தோழர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

    இந்நிலையில் உங்களுடைய பணி எப்படி இருக்கும்?

    ஐந்து நாட்கள் வேலையை ஒரே நாளில் முடித்து விடுவீர்கள்.

    எதனால் இப்படி?

    மனோவியல் நிபுணர்களின் ஆய்வு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    ஒரு மனிதருடைய முக்கியமான தேவை என்ன தெரியுமா?

    உணவா? அல்லது உடையா? அல்லது வேறு ஏதாவது ஆடம்பரமான வசதிகளா?

    இவை எவையுமே கிடையாது.

    நம்முடைய தேவைகளை வரிசைப்படுத்திய மனோவியல் நிபுணர்கள், நம்முடைய பாதுகாப்புக்குதான் முதலாவது இடத்தைக் கொடுத்துள்ளனர்.

    ஆதியில் நாம் அனைவரும் காடுகளில் வசித்தவர்களே. எந்த நேரத்தில் என்ன ஆபத்துகள் ஏற்படும் என்று எவருக்குமே தெரியாது.

    ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே முதற் கவனம் செலுத்தி வந்தனர்.

    அந்த மனநிலை இன்றளவும் நமது மனதில் ஒரு பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.

    அதனால் மற்றவர்களால் நமக்கு இடையூறுகள் ஏதாவது ஏற்படுமோ என்ற எண்ணம் நம்மை அறியாமலேயே நமக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.

    ஓர் உதாரணம். நீங்கள் சென்னையில் பணியாற்றி வருகிறீர்கள். இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை வாங்குகிறீர்கள்.

    அதற்கான பணத்தையும் தயார் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    அந்த வகையில் கிராமத்தில் உள்ள சொத்து ஒன்றை விற்று பணமாக ஒரு கோடி ரூபாயை ஒரு சூட்கேசில் எடுத்துக்கொண்டு இரவு ரெயிலில் பயணம் செய்கிறீர்கள்.

    நீங்கள் பயணம் செய்யும் முதல் வகுப்பு பெட்டியில் வேறு பலரும் உங்களோடு பயணம் செய்கிறார்கள்.

    உங்கள் கையில் அதிகமான பணம் உள்ளது. அதனால் உங்கள் கண்களுக்கு உங்களோடு பயணம் செய்பவர்கள் அனைவரும் திருடர்களைப் போன்றே தோன்றுவார்கள்.

    ஒவ்வொருவர் கண்களிலும் திருட்டுத்தனம் தெரியும்.

    நம்முடைய இயற்கை இவ்வாறுதான் உள்ளது. அதனைச் சீரமைத்தால் தான் நிம்மதியாக வாழ முடியும். செயல்பட முடியும்.

    அதற்காக அமைக்கப்பட்டது தான் இந்த ஐந்தாவது விதிமுறை.

    "அனைவரையும் நமது நண்பர்களாகக் கருத வேண்டும்."

    - இதுதான் இந்த ஐந்தாவது விதிமுறை.

    ஸ்ரீ பகவத்


    இந்த விதிமுறையை தங்கள் தொழில்களில் கடைபிடித்துப் பார்த்த சிலர் பலகோடி ரூபாய்களை சேமித்துள்ளனர்.

    நமக்கு எதிரிகளே கிடையாது என்றும், நாம் தொடர்பு கொள்ளும் அனைவரும் நமக்கு வேண்டியவர்களே என்றும் நாம் எடுத்துக் கொள்வோமேயானால் நமது மனம் சாந்தியுடன் செயல்படும்.

    ஓர் உதாரணம். தெருவில் உள்ள ரோட்டு ஓரத்தில் நமது வீடு அமைந்துள்ளது.

    தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

    அவர்கள் விளையாடும் பந்து அடிக்கடி நமது வீட்டு ஜன்னலில் விழுவதும், நாம் அவர்களை விரட்டுவதுமாக இருந்து வந்தது.

    அப்படி ஒரு நாள் சிறுவர்கள் அடித்த பந்து நமது வீட்டு ஜன்னலில் பட்டு, ஜன்னலில் உள்ள கண்ணாடியும் உடைந்து விட்டது.

    ' பந்தை அடித்த பையனுடைய தகப்பனாரிடம் நஷ்ட ஈடு வாங்கி விட வேண்டியது தான்' என்று கோபத்துடன் வெளியே வருகிறோம்.

    வெளியே வந்து பார்க்க, அவ்வாறு விளையாட்டின் போது பந்தை அடித்து ஜன்னல் கண்ணாடியை உடைத்தது நம்முடைய மகன் என்று தெரிகிறது.

    மகன் என்பதால் அவன் செய்தது சரியானதாக ஆகிவிடாது.

    தவறினை எவர் செய்தாலும் கண்டித்து தான் ஆக வேண்டும்.

    ஆனால் நமது மகனைக் கண்டிப்பதற்கும் அடுத்தவர்களைக் கண்டிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

    தவறு செய்தாலும் கூட எதிரி மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கும் நண்பர் மீது மேற்கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது.

    சிலர் உங்களுக்கு தேவை இல்லாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்களோ என்று நீங்கள் எண்ண ஆரம்பித்தீர்கள் என்றால், அந்த அளவுக்கு நீங்கள் பலவீனம் அடைந்து விடுவீர்கள்.

    'அவர்கள் எத்தகைய தீங்குகளை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நான் அவர்களுக்கு நல்லதை மட்டுமே செய்திடுவேன் ' என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்றால், அந்த அளவுக்கு நீங்கள் பலம் மிகுந்தவர்களாக ஆகி விடுவீர்கள்.

    நீங்கள் நட்பையும், அன்பையும் வெளிக் காட்டுவதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பதை மற்றவர்களும் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் உங்கள் உறவுகளும் செயல்களும் நல்ல முறையில் அமையும்.

    அடுத்ததாக வருவது ஆறாவது விதிமுறை.

    "நல்ல பழக்கங்களைக் கூட்டிக் கொள்; தீய பழக்கங்களைக் குறைத்துக் கொள்."

    உங்களுடைய இடது கையையும், வலது கையையும் காலையில் இருந்து இரவு வரை சேர்த்து வைத்துக் கொள்ளுமாறு உங்களிடம் கூறுவதாக வைத்துக் கொள்வோம். நீங்களும் அவ்வாறு செய்கிறீர்கள்.

    மறுநாள் எப்போதாவது ஒன்றிரண்டு முறை எவரும் உங்களிடம் கூறாமல் நீங்களாகவே அப்படி கைகளை சேர்த்து வைத்துக் கொள்வீர்கள்.

    ஒரு நாள் முழுவதும் பழகிய பழக்கம் உங்களை அறியாமலேயே உங்களோடு சேர்ந்து கொண்டு விட்டது.

    பழக்கங்கள் அனைத்தும் இவ்வாறுதான் நம்மோடு சேர்ந்து கொண்டு விடுகின்றன.

    முதலில் நாமாக ஆரம்பிப்போம். பிறகு அதுவே நம்மையும் இழுத்துச் சென்று விடும்.

    நல்ல பழக்கங்கள் என்று சிலவற்றை நாம் பழகி இருப்போம். அதனை நாம் ஒரு போதும் கைவிடலாகாது.

    புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை நாம் சிரமத்துடன் தான் ஆரம்பிக்கிறோம்.

    அதன்பிறகு அவற்றில் சுகங்காண ஆரம்பிக்கிறோம்.

    அவை பழக்கமாகி விட்டால், அவற்றை நாம் விட நினைத்தாலும் விட்டுவிட முடியாது.

    ஆகவே தீய பழக்கங்களில் இருந்து வெளி வந்திடவே முயன்றிட வேண்டும்.

    சில நல்ல பழக்கங்கள் தேவையற்று இருப்பது போலவும் தோன்றலாம்.

    ஆனாலும் கூட நல்ல பழக்கங்கள் எவற்றையும் கைவிட்டுவிடக் கூடாது.

    இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு முறை எனது இடது பக்க அடி வரிசை கடைவாய்ப் பல் ஒன்று வலியெடுக்க ஆரம்பித்தது. அந்தப் பல் அசையவும் ஆரம்பித்தது.

    இத்தகைய நிலையில் வலியெடுக்கும் பற்களைப் பற்றி ஏற்கனவே எனக்கு பழைய அனுபவங்களும் உண்டு.

    நாள் ஆக ஆக, இத்தகைய பற்களில் வலி கூடிக்கொண்டு தான் இருக்கும். பிறகு தாமாகவே விழுந்து விடும்.

    பல் வலி அதிகமாகிக் கொண்டிருக்கும் வரை ஏன் காத்துக் கொண்டிருக்க வேண்டும். எப்படியும் அந்தப் பல் சரியாகப் போவதில்லை.

    மருத்துவரிடம் சென்று பல்லை எடுத்துப் போட்டு விடலாம் என்று முடிவு செய்தேன்.

    பல் மருத்துவரிடம் சென்றேன்.

    எனக்குப் பிரச்சினை இடது பக்கத்தில். ஆனால் அவரோ எனது வலது பக்கப் பல்லுக்கு கேப் ஒன்றை மாட்டிவிட்டுவிட்டு,

    பிரச்சினையான பல்லுக்கு களிம்பு ஒன்றைக் கொடுத்து அனுப்பி விட்டார்.

    அந்தக் களிம்பைப் போட்டால் அந்தப் பல்லில் இரண்டு நாட்களுக்கு வலி மட்டும் குறைந்து விடும். ஆனாலும் அந்தப் பல்லை பயன்படுத்தி உணவு எதுவும் சாப்பிடமுடியாது.

    இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வலி வந்து விடும். அடுத்து என்ன செய்வது?

    மீண்டும் மருத்துவரைதான் பார்க்க வேண்டுமா?

    அந்நிலையில் பழைய நினைவுகள் வந்தன.

    இளமைக்காலத்தில் பல் துலக்கும்போது, நல்லது என்று கருதி பல்லின் ஊன்களுக்கு இரண்டு விரல்களால் மசாஜ் செய்வதுண்டு.

    கட்டைவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் ஊன்களை பத்து, பத்து ரவுண்ட் மசாஜ் செய்ய வேண்டும்.

    பழக்கம் ஏற்பட்டால் தான் அப்படி செய்ய

    முடியும். எடுத்த எடுப்பிலேயே அப்படி செய்து விட முடியாது. வாயினுள் விரல்களைவிட்டால் வாந்தி வந்துவிடும்.

    பழக்கப் படுத்திதான் இந்த மசாஜ்ஜை செய்ய முடியும்.

    இளம் வயதில் பற்கள் அனைத்தும் ஆரோக்கியமாகவே இருந்தன.

    மசாஜ் செய்தாலும் ஒன்று போல்தான் இருந்தது, மசாஜ் செய்யாமல் இருந்தாலும் ஒன்று போல்தான் இருந்தது.

    காலப்போக்கில் அதனைக் கைவிட்டு மறந்தும் போய்விட்டேன்.

    பல வருடங்களுக்குப் பிறகு அது நினைவுக்கு வந்தது.

    வலியுடன் அசைந்து கொண்டிருக்கும் பல்லுக்கு இந்த மசாஜ் உதவும் என்ற நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இருந்தாலும் கடைசி முயற்சியாக அதையும் முயன்று தான் பார்ப்போமே என்று மசாஜ் செய்து பார்த்தேன்.

    சொற்பமான முன்னேற்றம் தெரிந்தது.

    பதினைந்தே நாட்களில் பல்லின் வலியும் போய்விட்டது, அசைவும் போய்விட்டது.

    இன்றளவும் அந்த பல்லை பயன்படுத்திதான் உணவு உண்டு வருகிறேன்.

    சேலத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் ஞான முகாம் என ஒரு முகாம் ஒன்றை எங்கள் ஆசிரமத்தில் நடத்தி வருகிறோம்.

    அந்த முகாமிலும் இந்தச் செய்தியை நமது வகுப்பொன்றில் பகிர்ந்து கொள்வதுண்டு.

    ஒரு முறை மருத்துவ நிறுவனங்கள் ஒன்றின் மேலாளரும் கலந்து கொண்டிருந்தார்.

    இந்த மசாஜ் முறையைப் பயன்படுத்தி வலியுடன் அசைந்து கொண்டிருந்த அவருடைய பல்லையும் சரி செய்து கொண்டார். அவரிடம் பணியாற்றும் பல் மருத்துவர்களால் கூட நம்ப முடியவில்ல என்று அவர் தனது அனுபவத்தைக் கூறினார்.

    இப்படி எத்தனையோ நல்லவிதமான பழக்கங்களைத் தவறவிட்டு விடுகிறோம்.

    நல்ல பழக்கங்களை அதிகரித்துக் கொள்ள வேண்டுமே தவிர விட்டுவிடக் கூடாது.

    அது போல் தீய பழக்கங்களில் இருந்து விடுபட முடிவு செய்துகொள்ள வேண்டும்.

    தொடர்புக்கு: வாட்ஸஅப் - 8608680532

    • வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
    • மனிதன் தன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழிகளை தேடிக்கொண்டேதான் இருக்கிறான்.

    மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். "சீச்சீ! புத்தி ஏன் இப்படிப் போகிறது? பணமா முக்கியம்?" உங்களில் எத்தனை பேர் இந்த வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருக்கிறீர்கள்? என்னிடம் கூட சிலர் "ஏன் பொருளாதாரம் பற்றி எழுதுகிறீர்கள்? கடவுள், குடும்பம், சமையல் போன்ற விஷயங்கள் பற்றி எழுதலாம் அல்லவா?" என்று கேட்டிருக்கிறார்கள். வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவற்றைக் கேட்கும்போது ஏதோ பணம் தேடுவதும், அதற்கான வழிகள் பற்றிப் பேசுவதும் பாவம் என்பது போன்ற எண்ணம் தோன்றுகிறது அல்லவா? இது போன்ற கேள்விகள் செல்வத்தை நோக்கிய நம் பயணத்தில் நம்மை சோர்வடையச் செய்யும்.

    பணம் முக்கியமல்ல என்று கூறுபவர்கள் மறந்துவிட்ட விஷயம் ஒன்று உண்டு. பணத்துக்கானமுக்கியத்துவம் இன்று புதிதாக வந்தது அல்ல. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்று உள்ளது. ஆம், அப்போது வாழ்ந்த வள்ளுவர் கூட அறத்துக்கு 380 குறள்களும், இன்பத்துக்கு 250 குறள்களும் எழுதி விட்டு, பொருட்பாலுக்குத்தானே 700 குறள்கள் எழுதியிருக்கிறார்?

    இன்றும் இணையதளங்களின் ஹாட் டாபிக் காசு, பணம், துட்டு, மணி! துறவிகள் கூட"அத்தனைக்கும் ஆசைப்படு" என்று கூறும் காலம் இது. மனிதன் தன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழிகளை தேடிக்கொண்டேதான் இருக்கிறான். ஏனெனில் பணம் என்பது உலக இன்பங்களோடு, மனத் திருப்தியையும், ஆத்ம சாந்தியையும் கூடத் தரவல்லது.

    தீதின்றி வந்த பொருள்

    தங்கைக்கு ஒரு சுடிதார், தாத்தாவுக்கு ஒரு கைத்தடி, பாட்டிக்கு ஒரு பல்செட் இப்படியெல்லாம் நம் முதல் சம்பளத்தில் வாங்குவதில் நமக்கு எத்தனை மகிழ்ச்சி! நாம் எடுத்த ஹெல்த் இன்சூரன்ஸ் நம் பெற்றோருக்கு உதவும்போது எத்தனை மனத்திருப்தி! கடன் வாங்கியாவது நம் குழந்தைகளைப் படிக்க வைப்பது எத்தனை பெருமை!

    நம் போன்ற சாமானியர்களுக்கு இவையெல்லாம் இன்பம் என்றால், வாரன் பபெட், பில் கேட்ஸ், அசிம் பிரேம்ஜி போன்ற பெரும் பணக்காரர்கள் கோடிகளைக் கொட்டி ஏழைகளுக்கு உதவுவது முழுக்க முழுக்க அறம்! "பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை; தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை" என்ற வாலியின் வரிகளைப் பொய்யாக்கி விட்டவர்கள் இவர்கள். ஆகவே அறமும், இன்பமும் ஒன்றாகத் தரவல்ல இந்தப் பொருளை சம்பாதிக்கவும், பெருக்கவும் நாம் முயற்சி செய்வதில் எந்தத் தவறும் இல்லை!

    இந்த இடத்தில் ஒன்றை மட்டும் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்: பணம் எவ்வளவு முக்கியமோ, அது வரும் வழியும் அவ்வளவே முக்கியம். வள்ளுவர் கூறுவது போல் "தீதின்றி வந்த பொருள்" மட்டுமே அறத்தையும், இன்பத்தையும் தரும். பணம் செய்கிறேன் பேர்வழி என்று லஞ்சம், ஊழல், கொள்ளை போன்றவற்றிற்குத் துணை போனால், அப்புறம் அறமாவது, இன்பமாவது? ஆகவே சேமிப்பு, முதலீடு என்பது பற்றியெல்லாம் இந்தக் கட்டுரை பேசும்போது பணம் என்பது நேர்வழியில் வந்ததாக இருக்கவேண்டும் என்பதை தயவு செய்து மனதில் நிலைநிறுத்துங்கள்.

    தீதின்றி வந்த பணமாக இருந்தாலும், நாம் அதனை அறவழியில் செலவழித்தாலும், நம் வருங்கால வசதியைத் தீர்மானிப்பது நம் வருமானமல்ல; அந்த வருமானத்தில் நாம் எவ்வளவு சேமித்தோம்; எவ்வளவு முதலீடு செய்தோம் என்பதுதான். இது நான் கூறியதல்ல; பீட்டர் லின்ச் என்னும் முதலீட்டு வல்லுனர் கூறியிருப்பது.

    அவர் கூற்று எந்தக் காலத்திற்கும், எந்த நாட்டுக்கும், எந்த மனிதருக்கும் பொருந்துவதாக உள்ளது. உலக அளவிலும் சரி; இந்திய அளவிலும் சரி; இதற்கான ஏராளமான உதாரணங்கள் நம்மிடையே உள்ளன.

    கடன்பட்டுக் கலங்கிய மைக்கேல் ஜாக்சன்

    மைக்கேல் ஜாக்சன் தெரியும், அல்லவா? தன் பாட்டு, நடனம் போன்றவற்றால் உலகம் முழுவதையும் பித்துப் பிடித்து ஆட வைத்தவர். அவர் மட்டும் இந்த அறிவுரையைப் பின்பற்றியிருந்தால், மாடி வீட்டு ஏழையாக, கடனாளியாக இறந்திருக்க மாட்டார். தன் வாழ்நாளில் சுமார் 3 பில்லியன் டாலர்களை வருமானமாகப் பெற்ற கிங் ஆப் பாப், செலவழிப்பதிலும் கிங்தான்.

    மைக்கேல் ஜாக்சனின் கண் கவரும் கையுறைகளின் விலை மட்டுமே லட்சங்களைத் தொட்டது. 2600 ஏக்கர் தோட்டத்துடன் கூடிய பங்களா, 75 கார்கள், தனி விமானங்கள், ஹெலிகாப்டர்கள், அவருக்கு மட்டுமே சொந்தமான மிருகக் காட்சி சாலை, அதில் அவர் வளர்த்த ஒட்டகச் சிவிங்கிகள், புலிகள், முக்கியமாக பபிள்ஸ் என்ற பெயருடன் அவருடன் வலம் வந்த சிம்பன்சீ குரங்கு, அதற்கான ஆடை, அணிகலன்கள், இவை தவிர அவர் மீதிருந்த வழக்குகள் இவை எல்லாமே அவரின் வரவை விட செலவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தன.

    ஆனால் சேமிப்பு பற்றி சற்றும் கவலைப்படாமல் தன் செலவுகளை அதிகரித்தபடியே இருந்த மைக்கேல் ஜாக்சன், ஒரு கட்டத்தில் தினசரி செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் மட்டும் தன் வருமானத்தில் ஒரு 10 சதவீத அளவு சேமித்திருந்தால் கூட, கடனாளியாக இல்லாமல் கிங்காகவே வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவ்வப்போது வாங்கிய கடன்கள் 360 மில்லியன் டாலராக வளர்ந்து அனகோண்டாவாகப் படமெடுத்து நின்றபோது, அவர் நிம்மதி பறி போயிற்று. கோடிகளைக் கொட்டிக் குவித்த அவர், கடனாளியாக இறக்க நேர்ந்தது.

    வினையாகும் விளையாட்டுப் போக்கு

    இவர் மட்டுமல்ல; கையில் பணம் புரளும் போது மனித அறிவு தடம் புரண்டுவிடுகிறது என்பதை இந்த பண்ம சூழ் உலகம் அடிக்கடி நிரூபித்து வருகிறது. விளையாட்டு வீரர்களை நிஜ வாழ்வின் ஹீரோக்களாக எண்ணிப் போற்றுபவர்கள் அனேகம். ஆனால் விளையாட்டு வீரர்களில் 78 சதவீதம் பேர் ஓய்வு பெற்று இரண்டே வருடங்களில் தங்கள் பணத்தை இழந்து திவாலாகி விடுகிறார்களாம். அமெரிக்காவின் கால்பந்து விளையாட்டு வீரர் டெரல் ஓவன்சின் கதை இதற்கு உதாரணம். 80 மில்லியன் டாலர்களை கால்பந்து விளையாட்டில் அநாயசமாக ஈட்டிய இவரிடம் இன்றிருப்பது வெறும் ஐந்து லட்சம் டாலர்கள் மட்டுமே..

    சுந்தரி ஜகதீசன்

    பணம் வர வர தன் வாழ்க்கைத் தரத்தை பலரும் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயர்த்தும் ஆசை இவருக்கு வந்துள்ளது. தன்னிடம் அந்த அளவு பணமில்லாத போதும் மெர்சிடிஸ் கார், கண் கவரும் நகைகள் என்று செலவழித்தது தவறு என்று அவர் புரிந்து கொண்டபோது காலம் கடந்து விட்டிருந்தது.

    கல்லெழுத்து

    அமெரிக்காவின் 18வது ஜனாதிபதியாக இருந்த யுலிஸஸ் கிரான்ட், விளையாட்டு வீரர் மைக் டைசன் போன்ற பிரபலங்களின் கதையும் இதுவே. இவர்கள் கையில் புரண்ட பணத்திற்கு அளவேயில்லை. ஆனால் அதை சரியாக உபயோகித்து வாழ்வை வளமாக்கத் தவறியவர்கள் இவர்கள்.

    அவ்வளவு ஏன், நம் ஊரிலும் தியாகராஜ பாகவதர், சந்திரபாபு, சாவித்திரி போன்ற பிரபலங்கள் பணத்தின் உச்சியில் இருந்து சரிந்து, பாதாளத்தில் வீழ்ந்த கதைகளைக் கேட்டிருக்கிறோம் அல்லவா? தியாகராஜ பாகவதர் தமிழ் நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார். தங்கத் தட்டில்தான் சாப்பிடுவாராம். பல வீடுகளுக்கு உரிமையாளர். அவர் போல ஹேர்ஸ்டைல் அமைத்துக் கொள்வதுதான் அன்றைய பேஷன். ஆனால், 50 வயதுக்குள் அத்தனை செல்வத்தையும் இழந்த அவர் கண்பார்வை பாதிக்கப்பட்டு, வறுமையில் இறந்தார்.

    மகா நடிகை என்று கொண்டாடப்படும் சாவித்திரியும் முப்பது வருடங்கள் நடித்து, பணத்தின், புகழின் உச்சியில் இருந்தவர்தான். சென்னையின் ஹபிபுல்லா ரோடில் ஒரு பங்களா, கொடைக்கானலில் ஒன்று, ஐதராபாத்தில் ஒன்று என இருந்த வீடுகளும், இன்னும் பல சொத்துக்களும் கடனில் முழ்கின. உடல் நிலையும் பாதிக்கப்படவே, பல நாட்கள் கோமாவில் இருந்து இறந்தார்.

    நடிகர் சந்திரபாபு பற்றியும் அறிவோம். காரிலேயே மாடி வரை செல்ல வசதியாக அமைக்கப்பட்டிருந்தது அவர் பங்களா. ஆனால் அவரும் கடைசி காலத்தில் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டார். ஆகவே "உங்கள் வருங்கால செல்வ நிலையைத் தீர்மானிப்பது உங்கள் வருமானமல்ல; அந்த வருமானத்தில் நீங்கள் எவ்வளவு சேமித்தீர்கள்; எவ்வளவு முதலீடு செய்தீர்கள் என்பதுதான்" என்று அறிஞர்கள் கூறுபவை கல்லெழுத்தாக நம் மனதில் பொறிக்கப்பட வேண்டியவை.

    இந்தக் கட்டுரையில் பணம் பற்றிய நம் எண்ணங்கள் சரியே என்றும், வருமானத்தை விட, சேமிப்புதான் முக்கியம் என்றும் பார்த்தோம். இன்று வரை நீங்கள் சம்பாதித்தது எவ்வளவு, அதில் சேமித்தது எவ்வளவு என்று கணக்கிட்டுப் பாருங்கள். உங்கள் வருமானத்தில் குறைந்தபட்சம் 20 சதவீதம் நீங்கள் சேமித்திருந்தால்... பிடியுங்கள் வாழ்த்துக்களை! ஆல் த பெஸ்ட்!

    • தமிழ் இலக்கணத்திற்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த தமிழ் அறிஞர் அவர்.
    • தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்தவர்.

    சுமார் நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் வானொலியிலும் ஒரு தமிழ் அறிஞர் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. `தமிழைச் சிதைக்காதீர்கள், இலக்கணப்படி எழுதுங்கள்' என்று கண்டிப்போடு ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.

    அந்தக் குரலைக் கேட்டவர்கள் கண்ணை மூடிக் கொண்டு அவர் இலக்கணப் புலவர் முனைவர் முத்து கண்ணப்பர் என்று சொல்லி விடுவார்கள். தமிழ் இலக்கணத்திற்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த தமிழ் அறிஞர் அவர்.

    இலக்கணப் புலி செல்வநாத முதலியார், பிரசங்க சிந்தாமணி கோவிந்தசாமிப் பிள்ளை, திரு.வி. கல்யாண சுந்தரனார், ரா.பி. சேதுப்பிள்ளை, வையாபுரிப் பிள்ளை, கி.வா. ஜகந்நாதன் போன்ற பற்பல உயர்நிலைத் தமிழ் அறிஞர்களிடம் முறையாகத் தமிழ் இலக்கணம் பயின்ற பெருமைக்குரியவர் தி.முத்து கண்ணப்பர்.

    இலக்கணத்தில் பெரும்புலமை பெற்ற அவரை `இலக்கண முத்து' என்றே அறிஞர்கள் மதிப்போடு குறிப்பிடுவதுண்டு. `தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம், நல்ல தமிழ் அறிவோம், தமிழ்ச் சொல்லும் பொருளும்' உள்ளிட்ட அவரது நூல்கள் இளைஞர்களுக்குத் தமிழைப் பிழையின்றி எழுதக் கற்றுத் தருபவை. எளிதில் அனைவருக்கும் புரியக் கூடிய பழகு தமிழில் எழுதப் பட்டவை. யார் வேண்டுமானாலும் எளிதாக அந்த நூல்களைப் படித்து விளங்கிக் கொள்ள முடியும்.

    `முத்தமிழ்வேள், நெய்தல் இலக்கியச் செம்மல்' உள்ளிட்ட பற்பல பட்டங்களைப் பெற்றவர் முத்து கண்ணப்பர். தமிழக அரசால் தமிழ்த் தென்றல் திரு.வி.க விருதளித்து கவுரவிக்கப்பட்ட பெருமையும் அவருக்கு உண்டு.

    சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சங்கத் தலைவராக இருந்தவர். தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்தவர்.

    மகாத்மா காந்தியிடம் சமூக சேவைக்கான நேரடிப் பயிற்சி பெற்றவர். காந்தியத் தாக்கத்தால் எப்போதும் வெண்மை நிறக் கதர் ஆடையையே அணிந்து வந்தார்.

    `சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம்'அவரது ஆய்வு நூல்களில் மிக முக்கியமானது. இன்னும் பற்பல பழந்தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களின் ஆசிரியர் அவர். தமிழே வாழ்வாக வாழ்ந்தவர்.

    கி.வா.ஜ. பழமொழிகளைத் தொகுத்தது போல், `கடல் தந்த கவிதை' என்ற தலைப்பில் மீனவர்களின் நாட்டுப்புறப் பாடல்களைத் தேடித் தேடித் தொகுத்திருக்கிறார் முத்து கண்ணப்பர். அவரே சிறந்த கவிஞரும் கூட. மரபுக் கவிதைத் தொகுதிகள் பலவற்றின் ஆசிரியர்.

    சமூக சேவகி முத்துலட்சுமியின் பணிகளால் ஈர்க்கப்பட்ட அவர், `டாக்டர் முத்துலட்சுமி வாழ்க்கை வரலாறு' என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூல் வாழ்க்கை வரலாற்றுத் துறையில் குறிப்பிடத்தக்க ஒரு நூல்.

    தமிழ்ச் சான்றோரான அவரின் ஏராளமான சிற்றுரைகளை `சான்றோர் சிந்தனை' என்ற தலைப்பில் சென்னை வானொலி நிலையம் தொடர்ந்து ஒலிபரப்பி வந்தது.

    அந்தப் பதிவுகள் பல இப்போதும் இணையத்தில் கேட்கக் கிடைக்கின்றன. சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் கேட்போர் மனத்தில் பதியும் வண்ணம் அறநெறிகளை வலியுறுத்திப் பேசுவதில் அவருக்கு இணையான இன்னொருவர் இல்லை என்றே கூற வேண்டும். அவர் சொன்ன அறநெறிகள் அனைத்தையும் அவர் தம் சொந்த வாழ்விலும் பின்பற்றி வந்தார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

    குறிஞ்சி மலர் புகழ் பிரபல எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதி முனைவர் பட்டம் பெற விரும்பி, `பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும்' என்ற தலைப்பைப் பதிவு செய்தபோது, அவருக்கு ஆய்வு நெறியாளராக அமைந்தவர் முத்து கண்ணப்பர்தான்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    நா. பார்த்தசாரதிக்கும் அவருக்கும் இடையே நீடித்த நட்பு இருந்தது.

    முத்து கண்ணப்பரின் வழிகாட்டுதலோடு ஆய்வேட்டை நிறைவு செய்து பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்த நா. பார்த்தசாரதி, முனைவர் பட்டம் பெறுவதற்குள் காலமாகி விட்டார். நா. பார்த்தசாரதியின் ஆய்வேட்டைப் பின்னர் அதே தலைப்பில் தமிழ்ப் புத்தகாலயம் நூலாக வெளியிட்டது.

    முத்து கண்ணப்பர் எளிமையான வாழ்க்கை நடத்தியவர். தமது நண்பர்களை உயிராக மதித்தவர். தமது உயர்ந்த நட்புச் செல்வத்தையே பெறுதற்கரிய செல்வமாக மதித்துப் போற்றினார். தமது உற்ற நண்பர்களான தமிழ் அறிஞர்களுடன் அளவளாவுவதில் அவர் பெருமகிழ்ச்சி கண்டார்.

    தமிழ் மொழியைச் சிதைப்பவர்களைக் கண்டால், சீற்றம் கொள்வதை விட அதிகமாக வருத்தம் கொள்வார். அந்த வகையில் சீத்தலைச் சாத்தனாரின் வாரிசு அவர் என்று தான் சொல்ல வேண்டும்!

    `திரிகூட ராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி, செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து' போன்ற இடைக்கால இலக்கியங்கள் அனைத்தும் அவர் விரல் நுனியில் இருந்தன. சங்கப் பாடல்களையும் காப்பியங்களையும் கரைத்துக் குடித்திருந்தார்.

    எந்தப் பழந்தமிழ் நூல் குறித்து அவரிடம் சந்தேகம் கேட்டாலும் உடனுக்குடன் விளக்கம் தரக் கூடியவர். தமிழ் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கம் தருவதை வாழ்நாள் முழுவதும் ஒரு கடமைபோல் பின்பற்றியவர்.

    மேற்கோள்கள் அனைத்தையும் மனத்தில் வைத்திருப்பாரே தவிர எதன்பொருட்டும் புத்தகங்களை எடுத்து ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார். அவரது பழந்தமிழ் அறிவு கேட்பவர்களிடம் பிரமிப்பை ஏற்படுத்தும்.

    தமிழறிவு குறித்து மட்டுமல்ல. அவரது மனப்பாடச் சக்தி குறித்தும் அவரைச் சந்திப்பவர்கள் வியப்பில் ஆழ்வார்கள். ஆயிரக்கணக்கான செய்யுள்களை அவர் பிழையில்லாமலும், எந்தத் தடுமாற்றமும் இல்லாமலும் எடுத்துச் சொல்வார். பழந்தமிழைப் பொறுத்தவரை அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே விளங்கினார்.

    `அந்தக் காலத் தமிழறிஞர் பரம்பரையில் எஞ்சியிருந்த மிகச் சில விழுதுகளில் ஒருவர் முத்து கண்ணப்பர்' என அவர் காலமானபோது பலர் தங்களின் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்கள்.

    முத்து கண்ணப்பர் 1915 ஜூன் 4-ந்தேதி பிறந்தவர். நான்காம் வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். இளமையில் வறுமை அவரை வாட்டி வதைத்தது. நாள்தோறும் எட்டு மைல் நடந்தே சென்று கல்வி கற்றார்.

    1938 முதல் 42 வரை ராமகிருஷ்ண மடமே இவரை வளர்த்தது. ராமகிருஷ்ண மடம் உயர்ந்த ஆன்மிகச் செல்வராக இவரை உருவாக்கியது.

    இவர் எழுதியுள்ள `அவ்வை யார் வாழ்வும் வாக்கும்' என்ற நூலைத் தம்மைப் பராமரித்த ராமகிருஷ்ண மடத்தின் காலஞ்சென்ற துறவி சர்வக் ஞனானந்தருக்குத் தான் பக்தியோடு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

    முத்து கண்ணப்பர் வாரம் ஒருநாள் வீட்டிலோ, வெளியிலோ யாரிடமும் எதுவும் பேசாமல் முழுமையான மவுனவிரதம் இருப்பார். (பேராசிரியர் கு. ராஜவேலு கூட வாரம் ஒருநாள் மவுனவிரதம் இருக்கும் பழக்கமுடையவர்.) அவ்விதம் மவுனமாக இருப்பது தம்மை இறைச் சிந்தனையில் தோய்ந்திருக்கச் செய்வதாகவும் தமது ஆரோக்கியம் மேம்படுவதாகவும் அவர் சொன்னதுண்டு. அவர் தாம் ஒரு காந்தியவாதி என்பதைத் தம் மவுன விரதத்தாலும் மெய்ப்பித்தார்.

    `கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை' என்ற அவ்வை வாக்கால் அனுபவ பூர்வமாகக் கவரப்பட்ட இவர், பின்னாளில் அவ்வை தாசனாகவே ஆகிவிட்டார். அவ்வையின் வாழ்வியல் சார்ந்த படைப்புகளில் மனம் பறிகொடுத்தார். தாம் எழுதிய பல படைப்புகளை `அவ்வைதாசன்' என்ற புனை பெயரில்தான் எழுதிவந்தார்.

    அவ்வையைத் தம் அகத்தில் வைத்துப் போற்றிய இவர் தம் இல்லத்திற்கும் அவ்வை அகம் என்றே பெயர் வைத்தார். தமது புதல்வியரில் ஒருவருக்கு அவ்வை எனப் பெயரிட்டு மகிழ்ந்தது அவரின் அன்பு மனம்.

    பத்துக் குழந்தைகள் அவருக்கு. 4 ஆண்கள், 6 பெண்கள். அவரது மனைவி திருமதி கமலா, ஓய்வு பெற்ற ஆசிரியை.

    கி.வா. ஜகந்நாதனுக்கு முத்து கண்ணப்பர் மேல் மிகுந்த மதிப்புண்டு. முத்து கண்ணப்பரோ கி.வா.ஜ. வைத் தம் ஆசானாகவே மதித்தார். கி.வா.ஜ.வின் வீட்டுக்குச் சென்று அவரிடம் முத்து கண்ணப்பர் தொல்காப்பியத்தின் சில நுணுக்கமான பகுதிகளைக் கற்றுக் கொண்டார்.

    கி.வா.ஜ. கண்டிப்பான ஆசிரியர். விளக்கம் சொன்ன பின் தொல்காப்பிய நூற்பாக்களைச் சப்தம் போட்டுத் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்வார். உரத்த குரலில் முத்து கண்ணப்பர் கி.வா.ஜ. விடம் பாடம் கேட்ட நூற்பாக்களை ஒப்பிப்பார். அப்படி ஒப்பிக்காவிட்டால்

    கி.வா.ஜ. விடமாட்டார். தம்மைக் கி.வா.ஜ.வின் மாணவர் என்று வாழ்நாள் முழுதும் பெருமையோடு குறிப்பிட்டுக் கொண்டார் முத்து கண்ணப்பர்.

    கி.வா.ஜ. காலமானபோது முத்து கண்ணப்பர் மனத்தளர்ச்சி அடைந்தார். `ஓர் உயர்ந்த முருக பக்தரை முருகன் அழைத்துக் கொண்டுவிட்டான்!' என்று சொல்லி வருந்தினார். பின்னர் மெல்ல மெல்லத்தான் மனம் தேறினார்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மாண்புமிகு பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது மாநில மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் முத்து கண்ணப்பர். சிறிது காலத்தில், தான் ஒரு காந்தியவாதி என்றும் அரசியலில் தமக்கு நாட்டமில்லை என்றும் கூறி மேல்சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

    ஏழை எளிய மக்களுக்குத் தமிழ் கற்பிப்பதிலேயே மன நிறைவு ஏற்படுவதாகக் கூறித் தம் கல்விப் பணியை ஒரு தொண்டாகப் பின்னர் வாழ்நாள் முழுதும் தொடர்ந்தார்.

    தன் முயற்சியால் எப்படி உயர வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த இலக்கணப் புலவரான முத்து கண்ணப்பர் 2003 ஜனவரி 22-ந்தேதி காலமானார்.

    நான்கு வயதிலேயே தந்தையை இழந்த ஒருவர் சொந்த முயற்சியால் வாழ்வில் பெற்ற உயரம் வியக்க வைப்பது. விடாமுயற்சி மூலம் எவ்விதம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கு தமிழறிஞர் முத்து கண்ணப்பர் வாழ்வு இன்றைய இளைஞர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

    • கம்பினைப் பல்வேறு வகையான உணவாகச் சமைத்து உண்பதே சிறந்தது.
    • சத்தான கம்பு தோசை மிகுந்த சுவையாக இருப்பதுடன் அனைத்து வயதினரும் உண்ணும் விதமாகவும் இருக்கும்.

    கம்பு தானியத்தின் நிறம் நமக்குத் தெரியும், பச்சை. இளம் பச்சை என்று சொல்லலாம். தானியங்கள் எதையெடுத்தாலும் கிட்டத்தட்ட எல்லாமே வெள்ளைக்கு நெருக்கமான நிறம். கேழ்வரகு மட்டும் சிவப்பு நிறம் மாவாக அரைத்தால் மங்கின சிவப்பு நிறமாக இருக்கும். ஆனால் கம்பு மட்டுமே தனித்த நிறத்தில் இருக்கும். மாவாக அரைத்து சமைத்த பிறகும் அதன் அடிப்படையான இளம் பச்சை நிறத்தை அது இழப்பதில்லை.

    நம்முடைய ராஜ உறுப்புகள் ஐந்தும் ஒவ்வொரு நிறத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளன. பிற உறுப்புகள் குறித்து அப்புறம் பார்க்கலாம். கம்பு கல்லீரலுக்கு ஆதாரமான பச்சை நிறத்தைக் கொண்டுள்ளது. அதாவது பச்சை நிற உணவுப் பொருட்கள் முதன்மையாக கல்லீரலுக்குப் பலம் சேர்க்கிறது. பிற உறுப்புகளுக்கு சக்தி அளிக்காதா என்றால் அளிக்கும் தான். அதன் மாவுத்தன்மை மண்ணீரலுக்கு சக்தி அளிக்கும் தான். ஆனால் அதன் முதன்மைப் பண்பு கல்லீரலுக்குச் சக்தியைத் தருவதாகும். அதாவது உடலின் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும். நரம்பு மண்டலம் பலமடைந்தால் கல்லீரலின் துணை உறுப்பாகிய மூளை பலம்பெறும். மூளையைத் தலைமைச் செயலகம் என்போர் உண்டு. உடலின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்படுத்தும் திறன் மூளைக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கல்லீரல் பலம் பெறாமல் அல்லது சக்தி குன்றிய நிலையில் மூளை முழுச் செயற்திறனுடன் இயங்க முடியாது.

    அந்தவகையில் மூளைக்கும், அதன் செயற்திறனுக்கும் ஆதாரமாக இருப்பது ராஜ உறுப்பாகிய கல்லீரலே ஆகும். உடலின் மூன்றில் ஒரு பங்கு ரத்தத்தை எடுத்துக் கொள்வது மூளை. மூளையின் பெரும்பகுதி ஆற்றலை தன்வயப்படுத்திக் கொள்வது கண்கள். மூளைத்திறன் சிறப்பாக இருந்தால் தான் கண்பார்வையும் தெளிவாக இருக்கும். உடல் முழுதும் ரத்தத்தைக் கொண்டு சேர்ப்பது இதயம் தான். ஆனால் உடலில் உள்ள ரத்தத்ததை எந்தெந்த பகுதிக்கு எவ்வளவு அனுப்புவது என்ற நிர்வாகப் பணியை மேற்கொள்வது கல்லீரலே ஆகும். எனவே கல்லீரலுக்கு ஆற்றலைத் தரும் கம்பு தானியத்தை நம்முடைய உணவில் வாரத்திற்கு இரண்டு மூன்று முறையேனும் எடுத்துக் கொள்வது நமது உடல் நலத்திற்கும் மூளைப் பலத்திற்கும் நல்லதாகும்.

    கம்பங்கதிரைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் ஆதாரத் தண்டில் கதிர் நேரடியாக வானத்தை நோக்கிக் குத்திட்டு நிற்கும். அதாவது சூரியனை நோக்கிப் பார்த்தபடி இருக்கும். கதிர் மட்டுமல்ல, தானியத்தின் மணிகூட மேநோக்கியே இருக்கும். அதாவது சூரிய சக்தியை அப்படியே விழுங்கி விடும் ஆர்வத்துடன் முனைப்பு காட்டிக் கொண்டிருக்கும். சூரியனைப் பார்த்து நிற்கும் தானியத்தை நாம் உணவாக எடுத்துக் கொள்கிற பொழுது நாம் இயற்கையான வெப்ப ஆற்றலைப் பெறுகிறோம். இயற்கையான வெப்ப ஆற்றல் உடலின் உறுதித் தன்மைக்கு ஆதாரமாகும். குறிப்பாக கம்பு தானியத்தின் நிறம் கல்லீரலுக்கு சக்தியை வழங்குவது போல அதன் வெப்பக் கூறு நரம்பு மண்டலத்திற்கு உறுதியை, நிலைத்தன்மையை வழங்குகிறது. அதன் பசைத்தன்மை உயிரணுவை உற்பத்தி செய்வதில் மகத்தான பங்கு வகிக்கிறது. ஆகையால் இனப்பெருக்கத்தில் பேருதவி புரியும்.

    கம்பந்தானியத்தைச் சோறாகவும், கூழாகவும் காய்ச்சுவது குறித்துக் கடந்தவாரம் பார்த்தோம். இன்றைய நகரிய வாழ்க்கை முறையில் கம்பங்கூழ், கம்பஞ்சோறு உண்பது அவ்வளவு விருப்பமாக இருக்காது சிலருக்கு. போக கம்பினை நேரடியாக உணவாகச் சமைக்கும் பொழுது மெலிதான கசப்புச் சுவை தென்படும். எனவே எப்போதும் எல்லோருக்கும் பிடித்த உணவாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

    ஆகையால் கம்பினைப் பல்வேறு வகையான உணவாகச் சமைத்து உண்பதே சிறந்தது. நம்முடைய மரபுப்படியே பார்த்தாலும் கம்புத் தானியத்தில் எளிய சிறப்பான தின்பண்டம் ஒன்று செய்வார்கள். பொரிமாவுருண்டை என்று பெயர். முக்கால் பங்கு கம்பு, கால்பங்கு அரிசி இரண்டையும் பொரியும் அளவிற்கு தனித்தனியாக வறுப்பார்கள். பின்னர் அதனை ரவைப் பதத்திற்கு அரைத்து கைத் தாங்கும் அளவு வெந்நீரைத் தெளித்து உடன் நாட்டுச் சக்கரையும் சேர்த்து பிசைவார்கள். பின்னர் அக்கலவையை லட்டு போல உருண்டையாகப் பிடிப்பார்கள். காலையில் கிராமத்துத் தெருக்களில் "பொரிமாவுண்ட" "பொரிமாவுருண்ட" என்று கூவிக் கொண்டு வருவார்கள். குழந்தைகள் அடம் பிடித்து வாங்கி உண்ணும் அளவிற்குச் சுவையான தின்பண்டம் இந்தப் பொரிமாவுருண்டை.

    இன்றைய 2020 குழந்தைகளின் பெற்றோருக்கும் பெற்றோர் சற்றே நம்முடைய மரபில் இருந்து விலகி வந்து விட்டனர். எனவே சட்டென்று நாம் மரபுத் தின்பண்டத்தின் பக்கம் திரும்பி விடமுடியாது. எனவே இந்தப் பொரிமா உருண்டை மாவுடன் வாசனைக்கு ஏலக்காய்த் தூளும், சிறிதளவு நெய்யும், கோகோ பவுடர் அல்லது ஆர்லிக்ஸ் பவுடர் போன்றவற்றைச் சேர்த்துக் கொண்டால் அந்த பிளேவர் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றாகி விடும். கூடுதல் சுவைக்கு ஒன்றிரண்டு பாதாம் முந்திரிப் பருப்புகளை வறுத்து மேற்படி அரைவையுடன் சேர்த்துக் கொண்டால் குழந்தைகளின் விருப்பத்தில் இருந்து தப்பாது பொரிமா உருண்டை.

     

    இந்தப் பொரிமாவுண்டையை குழந்தைகள் பள்ளிக்குப் போகும்போது டப்பாவில் போட்டுக் கொடுத்து விட்டால் போகிற வழியிலேயே பேருந்தில், வேனில் சாப்பிட்டுக் கொண்டு போவார்கள். அல்லது பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் பொரிமா உருண்டை பிடித்துக் கொடுத்தாலும் வீட்டுப்பாடம், ட்யூசன் போன்ற இரண்டாம் கட்ட மூளை உழைப்பிற்குத் தயாராவார்கள். உண்மையில் குழந்தைகளை இவ்வளவு வருத்திப் படிக்க வேண்டுமா என்பதொரு முக்கியமான கேள்வி. அதனோடு முக்கியம் குறைந்தபட்சமாக அவர்களது மூளை உழைப்பிற்குரிய ஆற்றலை தரக்கூடிய சிறந்த தின்பண்டங்களையாவது வழங்குவது பெற்றோரது கடமையாகும்.

    எதிர்காலம் குறித்த அச்சத்தால் பெற்றோர் குழந்தைகளின் முதுகில் படிப்பு என்ற பெயரில் குழந்தைமையைச் சிதைக்கும் அளவிற்கு ஏகப்பட்ட சுமையை ஏற்றிக்கொண்டே போகின்றனர். இன்றைய உணவுமுறை முற்றிலும் சத்து நீக்கப்பட்டதாக இருப்பதை நாம் உணராமல் இல்லை. இந்தச் சூழ்நிலையில் குறைந்தபட்சமாக இன்னமும் கெடுக்கப்படாத நம்முடைய மரபு தானியத்தில் சமைக்கும் உயிர்ச்சத்து வழங்கும் பண்டங்களை இன்றைய குழந்தைகளின் பெற்றோர் உத்திரவாதப்படுத்த வேண்டியது கடமையாகிறது.

    தொடர்ந்து அரிசியை மட்டுமே பயன்படுத்துவது சத்துக்குறைபாட்டையே உருவாக்கும். இன்றைய நெல் விளைவிக்கும் முறை, அது அரிசியாகத் தீட்டப்படும் முறை என ஒவ்வொரு கட்டத்திலும் அதன் சத்து நீர்க்கப்பட்டதாகவே இருக்கிறது. நம்முடைய மரபு தானியங்கள் மிகை ரசாயன உரங்களை ஏற்க இயலாதவை என்பதால் அவற்றின் சத்துக்கூறுகள் பெருமளவு கெடுக்கப்படாததாக உள்ளது. எனவே நம்முடைய தானியங்களில் இருந்து நமக்குத் தேவையான கார்போ ஹைட்ரேட் புரதம் போன்ற முதன்மைச் சத்துக்களுடன் நுட்பமான உயிர்ச்சத்துக்களுடன் தாதுச் சத்துக்களும் கிடைக்கின்றன.

    அதுபோலவே இன்றைய சமைக்கும் முறையும் சத்துக்களை விலக்குவதாக உள்ளது. சமைக்கும் முறையிலும் நாம் கூடுதல் கவனம் செலுத்தியாக வேண்டும். இன்று பலரும் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்கிறோம் என்ற பெயரில் தானியங்களை உலர் மாவாக அரைத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது தோசையாக ஊற்றி உண்பதைப் பழக்கமாக வைத்துள்ளனர். அது நோயுற்றவர்களுக்கு வழங்கும் தண்டனையாக வறண்ட வரட்டி போல உள்ளது.

    கம்பு தானியம் இரண்டு பங்கு, ஒருபங்கு பச்சரிசி, ஒருபங்கு உளுந்து, சிறிதளவு வெந்தயம் ஆகியவற்றை நான்குமணி நேரம் ஊறவைத்து கிரைண்டரில் ஈரமாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவினை நான்கு மணிநேரம் புளிக்க வைத்தால் போதும். தடிமனாகவோ, சன்னமாகவோ எப்படி வேண்டுமானாலும் தோசைவார்த்து கல்லுடன் போராடாமல் எடுக்கலாம்.

    சத்தான கம்பு தோசை மிகுந்த சுவையாக இருப்பதுடன் அனைத்து வயதினரும் உண்ணும் விதமாகவும் இருக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் வழக்கமான தோசையைப் போலவே துணைப் பொருட்களுடன் சேர்த்து உண்ணலாம். கம்பு, அரிசி, கருப்பு உளுந்து ஆகியவற்றை ஒன்றாகவே ஊறவைத்து உடன் சீரகம், இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை உடன் சேர்த்து அரைத்து அரைமணி நேரம் வைத்திருந்து அடைபோலவும் ஊற்றி எடுக்கலாம். நெய் ஊற்றி வார்த்தெடுத்தால் துணைக்கு சட்னி சாம்பார் ஏதுமின்றி அப்படியே சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

     

    போப்பு, 96293 45938

    சதை தொளதொளப்பாக உள்ள ஆண், பெண் நடுத்தர வயதினர் இத்தகைய கம்பு அடையை உணவாக எடுத்துக் கொள்கிற பொழுது உடல் இறுக்கமடையும். அடிக்கடி எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்ற சத்துக்குறைபாடு உள்ளவர்களுக்கு இந்தக் கம்பு அடை சரியான மாற்று உணவாக இருக்கும். கம்பு அடையை உண்டால் உடல் இளைப்பு முடிவுக்கு வந்து சதைப்பிடிக்கத் தொடங்கும்.

    முன்னர் சொன்னது போல பொரிமா உருண்டை மாவுடன் தேங்காய்த் துருவல், எள் போன்றவற்றைப் போட்டுப் பிசைந்து கொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் வேக வைத்தால் உண்ணச் சுவையாக இருப்பதோடு உடலுக்கும் பலம் சேர்க்கும். வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகளுக்குக் காரணம் மாவுதன்மை மிகுந்த புளித்த உணவுகளே என்பதை நம்மில் பலரும் காணத் தவறுகிறோம். புளித்த மாவில் செய்த பண்டங்கள் மீண்டும் மீண்டும் வயிற்றில் தங்குவதால் அது அமிலமாக மாறி செரிமானத்தை பாதித்து சத்துக் குறைபாட்டை உருவாக்குகிறது. இங்கே கூறும் மாற்று உணவுகள் மேற்படி பிரச்சினைகளுக்கு எளிய தீர்வாக அமையும்.

    தேங்காய்த் துருவல், நெய், வாசனைக்குப் பால் பவுடர் போன்றவற்றை சேர்த்து தானியங்க ளைச் சமைக்கிற பொழுது அப்பண்டங்கள் மெத்தென்று மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நன்மை செய்யும்.

    பழங்காலம் தொட்டே புகழ்பெற்ற தேனும், தினையும் குறித்து அடுத்தவாரம் பார்ப்போம்.

    சுவைப்போம் சுகம்பெற.

    • ஒரு ஆண், பெண் இருவரும் குழந்தை பருவம் முதலே நண்பர்களாக இருப்பார்கள்.
    • பருவ வயதில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்

    பருவ வயது எனப்படும் பதின்ம வயது காலகட்டத்தில் ஹார்மோன்களால் ஏற்படுகிற மாற்றங்கள் காரணமாக ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே ஒரு முக்கியமான விஷயம் நிகழ்கிறது. அதாவது அவர்களின் எதிர்பாலினத்தவர் மீது தானாகவே ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த மாற்றங்கள் மற்றும் எதிர்பாலின ஈர்ப்பு காரணமாக அடுத்தடுத்து அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் நடக்கின்றன.

    பதின்ம வயதில் இயற்கையாகவே நடக்கிற விஷயங்கள்:

    ஒரு ஆண், பெண் இருவரும் குழந்தை பருவம் முதலே நண்பர்களாக இருப்பார்கள். அதுவரை நண்பர்களாக இருப்பவர்கள் பதின்ம வயதை எட்டியதும் அவர்களுக்குள் பையன், பெண் என்கிற உணர்வு வந்துவிடும். அப்போது அந்த பெண்ணுக்கு தான் அழகாக இருக்கிறேனா, அடுத்தவர்கள் தனது அழகை பார்த்து பாராட்டுகிறார்களா, தனது உடல் மாற்றங்கள் நன்றாக இருக்கிறதா என்கிற எண்ணங்கள் தோன்றுகிறது.

    அதேபோல் அந்த பையனுக்கும் தான் மற்றவர்களை கவரும் வகையில் இருக்கிறேனா, தான் பேசுவது ரசிக்கும் படியாக இருக்கிறதா, தான் ஒரு சினிமா கதாநாயகன் மாதிரி இருக்கிறேனா என்பது போன்ற பல எண்ணங்கள் அவரது மனதுக்குள் ஏற்படுகிறது.

    ஆனால் அவை அனைத்தும் தவறான விஷயம் அல்ல. இது பதின்ம வயது வரும்போது இயற்கையாகவே நடக்கிற விஷயங்கள். இன்றைக்கு உலகத்தில் வாழும் எல்லா மனிதர்களும் இந்த மாதிரியான நிலையை கடந்து தான் வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த பருவ வயதை கடப்பது என்பது பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய சவால். ஏனென்றால் பருவ வயது காலகட்டத்தில் இந்த குழந்தைகளின் மனதில் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று பலருக்கும் தெரிவதில்லை.

    பருவ வயதில் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்:

    பருவ வயதில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். நீ இதை செய்யாதே, இதை பார்க்காதே, இது தப்பு, நீ வெளியில் போகாதே, நீ வயதுக்கு வந்துவிட்டாய், நீ அவனுடன் பேசாதே, அங்கு தனியாக போகாதே என இப்படியெல்லாம் வரையறைகளை விதிக்கிறோமே தவிர, இதன் விளைவுகளை பற்றி நாம் எப்போதும் நினைப்பது இல்லை. இந்த வரையறைகளை குழந்தைகள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்றும் நாம் யோசிப்பதில்லை.

    ஆனால் அவர்களுக்கு இந்த பருவத்தில் அவர்களுடைய எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு வருவதால் அவர்களுடன் நிறைய பேச வேண்டும் என்று தோன்றும். யாராவது அவர்களை பாராட்டினால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அப்போது இன்னும் தங்களை பாராட்ட வேண்டும் என்று நினைக்க தோன்றும். யாராவது அன்பாக பேசினால் அவர்கள் மீது தானாகவே ஈர்ப்பு அதிகமாகும்.

    அவர்கள் ஒரு உதவி செய்துவிட்டால் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் போல, மனதளவிலும் உணர்வு பூர்வமான மாற்றங்கள் ஏற்படும். அதைவிட முக்கியமான ஒன்று, அவர்களுடைய உடல் ரீதியான ஹார்மோன்கள் மாற்றத்தினால் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கான பண்புகள் அவர்களிடம் அதிகரிக்கும்.

    அப்படியென்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள், தாங்கள் வயதுக்கு வந்துவிட்டோம், பெரியவர்கள் ஆகி விட்டோம் என்று கருதி அதுபோல யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி ஒரு முதிர்ச்சியான எண்ணம் அவர்களுக்கு தோன்றும். அப்படி யென்றால் வயதுக்கு வந்தவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ, அதையெல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

    பெண்களை வழிமுறைப்படுத்துவதில் பெற்றோருக்கு இருக்கும் சவால்கள்:

    நாம் வயதுக்கு வந்து விட்டோம் என்கிற நினைவு அவர்களுக்கு திரும்பத் திரும்ப வரும். எனவே நல்ல விஷயங்களை நினைப்பது என்பது இந்த காலகட்டத்தில் மிகவும் குறைவாக இருக்கும். ஏனென்றால் மற்றவர்களை கவருகிற விஷயங்கள் என்பது இந்த ஹார்மோன்களின் மாற்றங்களினால் ஏற்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் அவர்களிடம் எல்லா விஷயங்களிலும் மாற்றங்கள் ஏற்படும்.

    எதிர்பாலின ஈர்ப்பு, அதனால் ஏற்படும் உறவுகளுக்கான தூண்டுதல், அதில் இருக்கிற இன்பம், அதில் இருக்கிற ஆர்வம் ஆகியவை எல்லாம் அதிகமாக ஏற்படும். எனவே இந்த காலகட்டத்தில் அவர்களை வழிமுறைப்படுத்துவது என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவால்.

    இப்படி ஒரு உணர்வு வரும்போது அவர்களுக்கு கட்டுப்பாடு போடுவதை தவிர இதை எப்படி கடந்து வருவது என்று யாரும் சொல்லித் தருவதில்லை. அப்படியென்றால் இந்த பருவத்தை நல்ல முறையில் கடந்து வருகிற வழிகளை அவர்களுக்கு எப்படி தெளிவுபடுத்துவது என்பது ரொம்ப முக்கியமான விஷயம்.

    இதுபோன்ற முக்கியமான காலகட்டத்தில் இந்த குழந்தைகளுக்கு தேவை அறிவுரை கிடையாது. அறிவுரை சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் அறிவுரை சொன்னால் அதை செய்து பார்க்கத்தான் ஆசைப்படுவார்கள். நீ இதை செய்யாதே என்று அவர்களிடம் சொன்னால், அதை செய்து பார்க்க வேண்டும் என்று தான் தோன்றும். ஏனென்றால் அவர்களின் உடலிலேயே அதுபோன்ற மாற்றங்கள் வருகிறது.

    ஆனால் அவர்களுக்கு முதிர்ச்சி என்பது 19 அல்லது 20 வயதில் தான் வரும். அதாவது உடல் ரீதியாக அவர்களின் மூளைகளில் ஏற்படும் மாற்றங்களே அந்த முதிர்ச்சிக்கு காரணமாக அமைகிறது. மூளையில் ஏற்படுகிற மாற்றங்களினால் தான் முடிவு எடுக்கிற தன்மையும் அவர்களுக்கு 20 வயதில் வருகிறது. அதனால் தான் கார் ஓட்டுனர் உரிமம் கூட அவர்களுக்கு 18 வயது நிரம்பியவுடன் தான் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    அப்போதுதான் அவர்களுக்கு சவாலான விஷயங்களை சமாளிப்பது எப்படி என்பது தெரியும். எனவே பருவ வயதில் ஏற்படும் உடல் வளர்ச்சியின் ஒவ்வொரு விஷயங்களிலும் ஒரு விஞ்ஞான அடிப்படை இருக்கிறது. இது பல நேரங்களில் அவர்களுக்கும் தெரிவதில்லை, நாமும் தெரிந்து கொள்வதில்லை.

    எனவே தான் 20 வயதுக்கு முந்தைய பதின்ம வயது காலகட்டத்தில் இந்த குழந்தைகளுக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகிறது. எதிர் பாலினத்தவரை பார்த்தால் அவர்களுடன் பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கும். அப்படி பேசுவது சரியா தவறா என்று அவர்களுக்கு தெரியாது. மேலும் அந்த எண்ணத்தால் அவர்களுக்கு படிப்பிலும் கவனம் சிதறி விடும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    பருவ வயதை கடப்பது பற்றி சொல்லித் தருவதில்லை:

    அந்த பெண்ணுக்கு அந்த பையனிடம் அடிக்கடி பேச வேண்டும் என்பது போல் தோன்றும். அரட்டை அடிக்க வேண்டும் என்று தோன்றும். அவனுடன் பேசுவதுதான் அந்த பெண்ணுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். அப்படி பேசுவதில் ரொம்பவும் ஆர்வம் இருக்கும். இதனால் அவர்களின் படிப்பு விஷயங்கள் பாதிக்கப்பட ஆரம்பித்து விடும்.

    அப்போது அவர்களை யார் வழிநடத்துவது? தனக்கு ஏற்பட்டு இருக்கும் உணர்வு ரீதியான மாற்றத்தை அந்த பெண் தனது பெற்றோர்களிடம் போய் கூறினால் அவர்களுக்கு என்ன தோன்றும்? அது தப்பு என்று கண்டிப்பார்கள். செல்போனை பிடுங்கி வைத்துக் கொள்வார்கள். அவனிடம் பேசக்கூடாது என்றுதான் சொல்வார்களே தவிர இதை எப்படி கடப்பது என்பதை நாம் யாரும் சொல்லி கொடுப்பதே இல்லை.

    அப்படியென்றால் தங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் அந்த உணர்வு பற்றி அவர்கள் யாரிடம் கேட்பார்கள்? அவர்களை விட ஒரு வருடம் மூத்த தோழிகளிடம் கேட்பார்கள்.

    அவர்களுக்கு என்ன தெரியும்? இவர்களுக்கு தெரிந்த அளவுதான் தெரியும். ஆனால் அவர்கள் பெரியவர்கள் போல அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். ஓ... அப்படியா...? இந்த வயதில் இப்படித்தான் இருக்கும். இது தவறு இல்லை. நீ இதை செய் என்பார்கள். அவர்களுக்கு பல தோழிகள் இருந்தால் அவர்களுக்குள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி மாற்று கருத்துக்கள் இருக்கலாம்.

    மேலும் அவர்கள் இந்த காலகட்டத்தில் ஊடகத்தில் அதிகம் மூழ்கி கிடப்பார்கள். நிறைய சினிமா பார்ப்பார்கள். சினிமாவில் கதாநாயகன், கதாநாயகி என்ன செய்கிறார்களோ அதை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். கதாநாயகனோ, கதாநாயகியோ சினிமாவில் தவறான பழக்க வழக்கங்களை கொண்டிருந்தால் இதுதான் சரியான விஷயம் என்று நினைத்து அதை கடைபிடிக்க முயல்வார்கள். இது தவறு, இது சரி என்று சொல்வதற்கு யாரும் கிடையாது.

    அப்படி இந்த மாதிரியான விஷயங்களில் அவர்கள் ஈடுபடும் போது நிறைய சவால்களை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் புகை பழக்கம், மதுபழக்கம், மற்ற தீய பழக்க வழக்கங்கள் இளம் பருவத்தினருக்கு ஏற்பட்டால் இது ஒரு பெரிய பிரச்சினையாக எதிர்காலத்தில் உருவாகும்.

    அப்படியானால் அவர்களை இந்த காலகட்டத்தில் நல்வழிப்படுத்துவது எப்படி...? அடுத்த வாரம் பார்ப்போம்.

    • சிறு வயதிலேயே தமிழில் கவி பாடும் வகையில் தேவராசன் புலமை பெற்று இருந்தார்.
    • கவசம் என்பது நம்மை பாதுகாக்கும் அரண் என்று அர்த்தமாகும்.

    திருச்செந்தூர் தலத்தில்தான் கந்தசஷ்டி கவசம் பாடல் பிறந்தது என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கிறது. கந்தசஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராய சுவாமிகள் என்பவர் ஆவார். இவர் தமிழகத்தின் வட மாவட்டத்தில் உள்ள வல்லூர் என்ற ஊரில் பிறந்தவர்.

    இவரது தந்தை வீராசாமி பிள்ளை. இவர் கணக்காளராக பணிபுரிந்து வந்தவர். மைசூர் அரண்மனையில் கணக்காளராக இருந்ததால் இவருக்கு செல்வமும், புகழும் அதிகமாகவே இருந்தது. ஆனால் திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை இல்லாத குறை அவரை வாட்டியது.

    இதற்காக அவர் முருகனை மனமுருக வேண்டி விரதம் இருந்தார். முருகன் திருவருளால் வீராசாமி பிள்ளைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர் தேவராசன் என்று பெயரிட்டார். சிறு வயதிலேயே தமிழில் கவி பாடும் வகையில் தேவராசன் புலமை பெற்று இருந்தார்.

    தமிழ் அறிஞர்களுடன் பழகி தனது தமிழ் புலமையை மேம்படுத்திக் கொண்டார். இளம் வயதில் அவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரித்தது. இதனால் ஆலயங்களுக்கு செல்ல தொடங்கினார். நாளடைவில் இறைவன் மீது பாடல்கள் பாட தொடங்கினார்.

    மற்ற இறை அடியார்களிடம் இருந்து இவர் பாடல்கள் இயற்றுவதில் வித்தியாசமாக இருந்தார். கவசம் பாடல்களையே அவர் அதிகம் இயற்றினார். கவசம் என்பது நம்மை பாதுகாக்கும் அரண் என்று அர்த்தமாகும். போருக்கு செல்பவர்கள் எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கவச உடை அணிவது வழக்கம். அதில் இருந்துதான் கவசம் என்று சொல் வந்தது.

    உடலை கவசம் பாதுகாப்பது போல ஆன்மாவை பாதுகாத்து மேம்படுத்த இறைவனின் அருள் எனும் கவசம் நமக்கு கவசமாக இருக்க வேண்டும் என்பதில் தேவராசன் உறுதியாக இருந்தார். அந்த அடிப்படையில்தான் அவர் சிவ கவசம், சண்முக கவசம், சக்தி கவசம், நாராயண கவசம் போன்ற பாடல் தொகுப்புகளை எழுதி இருந்தார். இதனால் அவர் பெயர் தேவராய சுவாமிகள் என்று மாற்றம் கண்டு இருந்தது.

    ஒரு சமயம் இவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. எவ்வளவோ மருத்துவ சிகிச்சைகள் செய்தும் அவரது வயிற்று வலி தீரவில்லை. நாளுக்கு நாள் வயிற்று வலி அதிகரித்தபடி இருந்தது. எனவே வாழ்க்கையில் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. அதன் உச்சமாக தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அவர் முடிவு செய்தார்.

    கொங்கு மண்டலத்தில் இருந்த அவர் எங்கு, எப்படி, எப்போது தற்கொலை செய்து கொள்வது என்று யோசித்தார். நீண்ட யோசனைக்கு பிறகு திருச்செந்தூருக்கு சென்று முருகனை கும்பிட்டுவிட்டு கடலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்.

    அதன்படி கொங்கு மண்டலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நடந்தார். வழியில் மடங்களில் தங்கி சாப்பிட்டு ஓய்வெடுத்து திருச்செந்தூர் அடைந்தார். அப்போது திருச்செந்தூர் நகரமும், கோவிலும் விழா கோலத்துடன் இருந்தது.

    அப்போதுதான் தேவராய சுவாமிகளுக்கு திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கி இருப்பது நினைவுக்கு வந்தது. அவர் சென்ற சமயத்தில் கந்தசஷ்டி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கானவர்கள் திருச்செந்தூர் கோவிலிலும், சுற்றப்புறங்களில் தங்கி விரதம் இருந்து முருகனை வணங்கி கொண்டிருப்பதை கண்டார்.

    திருச்செந்தூர் கடலோரத்திலும் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டிருப்பதை பார்த்தார். இந்த சமயத்தில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வது என்பது இயலாத காரியம் போல அவருக்கு தோன்றியது. என்ன செய்வது என்று யோசித்தார்.

    திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா 10 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறும். இன்றுதான் முதல் நாள். இன்னும் 9 நாட்கள் என்ன செய்வது என்று தேவராய சுவாமிகளுக்கு தவிப்பு ஏற்பட்டது. வேறு வழியின்றி 9 நாட்களும் திருச்செந்தூர் ஆலயத்திலேயே தங்கி இருந்து கந்தசஷ்டி விழாவை கண்டு கழித்துவிட்டு உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

    அதன்படி திருச்செந்தூர் ஆலய பிரகாரத்தில் தங்கினார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கருவறை முன்பு நின்று வழிபட்டு வந்தார். அப்படி ஒரு தடவை அவர் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு கொண்டிருந்த போது அவர் காதுக்குள் யாரோ ஒருவர் கவசம் பாடு என்று சொல்வது போல இருந்தது.

    தேவராய சுவாமிகள் ஆச்சரியத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் இல்லை. திருச்செந்தூர் முருகனே தன்னை பாடச் சொல்லி உத்தரவிடுவதை உணர்ந்தார். எனவே முருகனை பாட தீர்மானித்தார். என்ன பாடுவது என்று யோசித்தபோது தற்போது நடக்கும் கந்த விழாவை அடிப்படையாக கொண்டு முருகன் அருள் பெற கந்தன் மீது சஷ்டி கவசம் பாடுவது என்று முடிவு செய்தார்.

    அதோடு நோய் நொடி இல்லாமலும், எதிரிகளால் அழிவு வராமலும் முருகன் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாட ஆய்வு செய்தார். உடலில் ஒவ்வொரு உறுப்பின் பெயரை சொல்லி காக்க என்று முருகனை வேண்ட நினைத்தார். அறுபடை தலங்களில் அருள்பாலிக்கும் ஆறு முருகன் மீதும் தனித்தனி சஷ்டி கவசம் பாடல்களை இயற்ற மனதில் உறுதி செய்து கொண்டார்.

    அன்றைய தினமே திருச்செந்தூர் பிரகார சன்னதியில் அமர்ந்து பாடத் தொடங்கினார்.

    சஷ்டியை நோக்க சரவண பவனார்

    சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்

    பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

    கீதம் பாடக் கிண்கிணி ஆட....

    -என்று தொடங்கி தேவராய சுவாமிகள் அந்த சஷ்டி கவசத்தை பாடினார். முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும், ஆறு பாடல்கள் பாடியுள்ளார். இப்பாடல்களில் முருகனின் அருள் திறமை, வீரம், சூரபத்மனை வென்றது போன்றவற்றைக் கூறி, 'நான் உனக்கு சரணம், என்னையும் காத்தருள்' என்று வேண்டுகின்றார். எளிய சொற்களை உபயோகித்து, எளிதாகப் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், பழனி, பழமுதிர்சோலை, சுவாமிமலை, திருத்தணி மற்றும் தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களுக்கு செல்லும் போதெல்லாம் நோயால் பாதிக்கப்பட்ட பலர் முருகன் அருளுக்காக ஏங்கி ஆங்காங்கே இருப்பதை கண்டு வருந்துவார். அவர்கள் அனைவரும் நலம் பெற முருகன் வழிகாட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்.

    கந்தசஷ்டி கவசம் பாடலை இயற்றிய போது தேவராய சுவாமிகளுக்கு இவையெல்லாம் நினைவுக்கு வந்தன. நோய்கள் மற்றும் மன கவலையால் பாதிக்கப்படுபவர்கள் முருகன் அருளால் கந்தசஷ்டி கவசம் பாடல்களை பாடினால் நோய்கள் நீங்கி மனதில் மகிழ்ச்சி பெற்று இன்பமுடன் வாழ வழி பிறக்க வேண்டும் என்ற நோக்கத்தை மனத்துக்குள் உள்வாங்கி கொண்டு கவசம் பாடலை பாடினார்.

    இந்த கவசத்தின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் திருச்செந்தூர் முருகனின் திருக்கையில் உள்ள வேலை போன்றது. எனவேதான் கந்தசஷ்டி பாடல் வரிகள் உடல், உள்ளம், உயிர் அனைத்துக்கும் கவசமாகவே மாறியது. அது மட்டுமின்றி கந்தசஷ்டி கவசம் மந்திரம் சக்தி கொண்டதாகவும் முருகன் அருளால் மேம்பட்டது.

    அதனால்தான் தேவராய சுவாமிகள் கந்தசஷ்டி கவசம் பாடலை பாடி முடித்ததும் அவருக்கு இருந்த வயிற்று வலி முழுமையாக குணம் அடைந்து இருந்தது. தன்னை போலவே கந்தசஷ்டி கவசத்தை படிப்பவர்களின் நோய்கள் தீர வேண்டும் என்று தேவராய சுவாமிகள் வேண்டிக் கொண்டார்.

    இந்த கவச பாடல் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியது. சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு. நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளப்பட்டது. அக்காலத்தில் நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதைப் பாடுவார்களாம்.

    ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி, காவல்தேடும் பாடல் அது. ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள வேண்டும் பாடலாக உள்ளது. ஒரு கால கட்டத்துக்கு பிறகு ஒலி வடிவத்திலும் கந்தசஷ்டி கவசம் வெளியானது. இது உலகம் முழுக்க கந்த சஷ்டி கவசம் பரவ வழி வகுத்தது.

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வீடுகளில் கந்தசஷ்டி கவசம் தெய்வீக பாடலாக ஒலித்தது. கந்தசஷ்டி கவசம் கேட்டால் மன நிம்மதி ஏற்படுவதாக பக்தர்கள் மகிழ்ந்தனர். கந்தசஷ்டி கவசத்தை தினமும் காலையில் பாடினால் அன்று முழுவதும் கந்தனின் அருள் சக்தி நமக்குக் கவசமாக இருந்து காப்பாற்றுகிறது என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    உண்மையிலேயே தேவராய சுவாமிகள் இயற்றிய ஆறு கவசங்களும் சக்தி வாய்ந்தவை. தற்போது கந்தசஷ்டி பாடலாக ஒலிப்பது திருச்செந்தூர் தலம் மீது தேவராய சுவாமிகள் பாடிய கவசம் மட்டுமே. மீதமுள்ள 5 அறுபடை வீடுகளின் கவசத்தையும் பாடினால் மனமும், உடலும் மாற்றம் பெறும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

    திருச்செந்தூர் தலத்தில் இயற்றி அங்கேயே அரங்கேற்றமான கந்தசஷ்டி கவசம் பாடலை ஒருவர் எந்த அளவுக்கு பாடுகிறாரோ அந்த அளவுக்கு அவரது இல்லங்கள் பனி போல மறைந்து அன்பும், பக்தியும் மனதுக்குள் நிறையும். இது கோடிக்கணக்கான பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.

    முருகனின் கந்தசஷ்டி கவசம் நம்மை என்றென்றும் காக்கும். அந்த கவச பாடல் திருச்செந்தூர் முருகன் அருளால் நமக்கு கிடைத்தது ஆகும். திருச்செந்தூருக்கு செல்லும் போது மறக்காமல் கவசத்தை பாடுங்கள். காலம் எல்லாம் தீராத இன்னல்கள் நீங்கி மாற்றங்கள் வருவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

    திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய இதே போன்ற அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • நாடு முழுவதும் எல்லோருமே அப்படித்தான் முடங்கி கிடந்தார்கள்.
    • எந்த அறிகுறியும் உடனே வெளியே தெரியவில்லை.

    ஜனவரி-2019 வழக்கமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்களில் குறைந்தது 10 நாட்களாவது ஓய்வுக்காக குடும்பத்துடன் வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்வேன். அதற்கு ஏற்ற வகையில்தான் படங்களுக்கும் கால்ஷீட் கொடுப் பேன்.

    அதே போலத்தான் அந்த ஆண்டிலும் கால்ஷீட்டுகளை கொடுத்து வைத்திருந்தேன். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தால் எளிதாகவும், கட்டணம் குறைவாகவும் கிடைக்கும் என்பதால் கணவர் சாகரிடம் பாஸ்போர்ட்டை பல முறை கேட்டும் அவர் தரவில்லை. இதனால் டிக்கெட் முன்பதிவும் தாமதமாகி கொண்டே வந்தது. அவர் ஏன் பாஸ்போர்ட்டை தராமல் இழுத்தடிக்கிறார் என்று எனக்கு எதுவும் புரியவில்லை.

    அவர் பாஸ்போர்ட்டை தராமல் இருக்கிறார்.. இந்த ஆண்டு 'டிரிப்' என்ன ஆகுமோ...? என்று என் தோழிகளிடம் சொல்லி புலம்பி வந்தேன்.

    ஜனவரி மாதம் வந்தாச்சு... இனியும் தாமதிக்க கூடாது என்று அன்று விடா பிடியாக பாஸ் போர்ட்டை கொடுங்க என்றேன்.

    அப்போதும் வழக்கம் போலவே 'கொஞ்சம் பொறுமையாக இரு' என்றார். என்னால் அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை.

    தொடர்ந்து நான் வற்புறுத்தியதும் அவர் சொன்னார், 'உலக அளவில் பெரிய அளவில் ஏதோ நடக்கப் போகு துங்கிறாங்க. நிலைமை மோசமாகலாம். எனவே கொஞ்சம் பொறுமையாக இரு' என்றார்.

    அதை கேட்டதும் எனக்கும் திக் என்றாகி விட்டது. எதுவும் புரியவில்லை. அப்படி என்னதான் வரப்போகுது என்று என்னால் எதுவும் யோசிக்க முடியவில்லை.

    ஆனால் அவர் உலக நடப்புகளை தெரிந்து வைத்திருந்ததால் சீனாவில் ஏதோ மர்ம நோய் பரவி வருவதாகவும் அது உலகம் முழுவதும் பரவலாம் என்பதையும் கேள்விப்பட்டு இருக்கிறார்.

    ஆனால் எப்போ வரப்போகுது? என்ன வரப்போகுது. அதனால் என்ன பாதிப்பு வரும்? என்று எதுவும் தெரியாத நிலையில் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

    அதன் பிறகு சீனாவில் இருந்து மிக மோசமான வைரஸ் ஒன்று பரவி கொண்டிருக்கிறது. அது தாக்கினால் ஆபத்து என்ற செய்திகள் வெளி வந்து கொண்டிருந்தன.

    மார்ச் மாதம் வந்தது. திடீரென்று 'லாக்டவுன்' என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டது. இதுவரை அப்படி ஒரு அறிவிப்பை கேட்டதும் இல்லை.


    ஊரடங்கு என்றால் கடைகள் பூட்டப்பட்டிருக்கும். மற்றபடி வெளியே வழக்கம் போல் வரலாம், போகலாம் என்றுதான் நினைத்தேன்.

    ஆனால் யாரும் வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை. அத்தியாவசிய தேவைக்கு கூட பொருட்கள் வாங்க முடிய வில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தேன். நாடு முழுவதும் எல்லோருமே அப்படித்தான் முடங்கி கிடந்தார்கள்.

    நான் சென்னையில் இருந்தேன். சாகர் பெங்களூருவில் மாட்டிக் கொண்டார். நாட்கள் போக போக கொரோனா வைரசின் வீரியமும் அதன் பாதிப்பும் தெரிந்தது.

    விதிகளை கடைபிடிக்காமல் கொரோனா தாக்கி ஏராளமானோர் மடிந்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் கட்டுப்பாடுகளையும் மீறி மக்கள் வெளியே நடமாடியதை பார்த்த போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இதனால் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் வெளியிட்டேன். அதில் வீட்டில் இருந்தே உங்கள் குடும்பத்தை மட்டுமல்ல நாட்டையும் காக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வீட்டிலேயே இருங்கள், குடும்பத்தினரோடு பொழுதை போக்குங்கள் என்று தெரிவித்தேன்.

    தினமும் சாகரோடு போனில் தான் பேச முடிந்தது. அவர் பேரிடர் வரப்போகிறது என்பதை முன் கூட்டியே உணர்ந்து பெட்டி பெட்டியாக முக கவசம், சானிடைசர், ஹேன்ட்வாஷ் எல்லாம் வாங்கி தந்துவிட்டார்.

    அவற்றை பயன் படுத்தியது புது அனுபவமாக இருந்தது. காய்கறிகள், பழங்களை கூட வெறுங்கையால் தொடகூட பயமாக இருந்தது. கையுறை அணிந்து வாங்குவது, பின்னர் பக்கெட்டில் மஞ்சள், உப்பு கலந்த தண்ணீரில் போட்டு எடுப்பது... இப்படி வீட்டுக்குள் கூட ஏகப்பட்ட கட்டுப்பாடு. அப்படி இருந்தும் எங்கள் வீட்டுக்குள்ளும் கொரோனா புகுந்தது. மொத்த குடும்பமும் மீண்டது.

    நான், அம்மா உள்பட மொத்த குடும்பமே கொரோனாவின் பிடியில் சிக்கியது. அம்மா வயதானவர் என்பதால் பாதிப்பு அதிகமாகி விடும் என்று போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ மனையில் சேர்த்தேன்.


    ஒரு வாரம் சிகிச்சைக்கு பிறகு அம்மாவுக்கு உடல் நிலை சீரானது. சாகர் பெங்களூருரில் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிறைய புறாக்கள் இருந்தது. அந்த புறாக்களின் எச்சம், இறகுகள் மூலம் ஒரு வகையான தொற்று நுரையீரலை பாதித்து இருக்கிறது. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் உடனே வெளியே தெரியவில்லை. ரொம்ப லேட்டாத்தான் அந்த பாதிப்பு தெரிந்தது. அதன்பிறகு தான் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சையின் பலனாக அதில் இருந்து குணமடைந்தும் விட்டார். ஆனால் அப்போது மருத்துவர் 'சாகருக்கு நுரையீரல் கடுமையாக பாதித்து இருக்கிறது. மாற்ற வேண்டியது வரலாம். அதற்கும் பதிவு செய்து வையுங்கள் என்றார். நான் அதை நம்பவில்லை. ஆனால் அந்த சூழ்நிலையும் விரைவிலேயே வந்தது.

    கொரோனா என்ற மிகப்பெரிய நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து எல்லோரும் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய கால கட்டம். ஒரு மனிதனுக்கு இப்படியெல்லாம் ஆபத்து வருமா? என்று என்னால் நம்ப முடியாத தருணம் அது. என் வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த தருணத்தை பற்றி அடுத்த வாரம் கூறுகிறேன்.

    (தொடரும்...)

    • பூஜை முறைகளை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
    • சிவபெருமானை பொருத்தவரை அவருக்கு வெப்பம் என்பதே பிடிக்காது.

    அக்கினி நட்சத்திர காலம் தொடங்கி விட்டது. 28-ந்தேதி தான் அக்கினி நட்சத்திரம் நிவர்த்தியாகும். இந்த இடைப்பட்ட நாட்களில் வெயில் வாட்டி வதைத்து விடும். இடையிடையே மழை பெய்யும் என்று சொல்கிறார்கள்.

    கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதுபோல நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் கோடை வெயில் தோஷத்தை நிவர்த்தி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்வது உண்டு. இதற்கான பூஜை முறைகளை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

    பொதுவாக அக்கினி நட்சத்திரம் என்பது சூரிய பகவான் பரணி நட்சத்திரத்தின் 3-ம் பாதத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தை கடக்கும் வரையிலான நாட்களைக் குறிக்கும். அதாவது சூரிய பகவான் 20 டிகிரியில் இருந்து 43 டிகிரி வரை பயணிக்கும் காலமாகும்.

    இந்த காலக் கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சிவபெருமானை பொருத்தவரை அவருக்கு வெப்பம் என்பதே பிடிக்காது. அவர் குளிர்ச்சியை விரும்புபவர். இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.

    அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் தேவர்களை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

    இதன் காரணமாக சிவபெருமானின் உடல் முழுவதும் வெப்பம் பரவியது. அவரது நெற்றிக்கண்ணும் வெப்பத்தால் தகித்தது. இதனால் சிவபெருமான் தலையில் கங்கையையும் நிலாவையும் சூடினார்கள். அப்படி இருந்தும் சிவபெருமானின் உடல் வெப்பம் குறையவில்லை.

    இதனால் அவர் உடல் சூட்டை தணிக்க அபிஷேகங்கள் செய்தனர். இடைவிடாது செய்யப்பட்ட அந்த அபிஷேகங்கள் காரணமாக, சிவபெருமான் அபிஷேகப் பிரியராக மாறினார். சிவபெருமானுக்கு நாம் எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் உடலும், உள்ளமும் குளிர்ச்சியாகி, மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல வரங்களை தந்தருள்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

    எனவே அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்தும், விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாரா அபிஷேகமாகும்.

    தாரா அபிஷேகம் என்பது சிவலிங்கத்துக்கு மேல் ஒரு பாத்திரம் கட்டி, அதன் அடியில் சிறு துளையிட்டு, அதில் இருந்து சொட்டு, சொட்டாக லிங்கம் மீது தண்ணீரை விழ வைப்பதாகும். இந்த தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள்.

    அதில் நிரப்பப்படும் தண்ணீரில் பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்படும். அந்த நறுமணத் தண்ணீர் சொட்டு, சொட்டாக விழும் போது, சிவபெருமானின் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியாகி விடுவார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் அக்கினி நட்சத்திர நாட்களில் தினமும் ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 10 மணிக்கு பூஜையின்போது அண்ணாமலையார் மீது தாரா அபிஷேக பாத்திரம் தொங்க விடப்படும்.

    சாயங்காலம் சாயரட்சை பூஜை நடக்கும் வரை அண்ணாமலையார் மீது சொட்டு, சொட்டாக தாரா பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் வாசனைத் திரவியங்கள் கலந்த தண்ணீரை அண்ணாமலையார் ழுமுமையாக பெற வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் அலங்காரம் செய்ய மாட்டார்கள்.

    அண்ணாமலையாருக்கு வழக்கமாக சாற்றப்படும் கிரீடம், நாகாபரணம், கவசம் உள்ளிட்டவை தாராபிஷேகம் சமயத்தில் இடம் பெறாது. இதன் காரணமாக தாரா அபிஷேகம் தண்ணீரை பெற்று அண்ணாமலையார் குளிர்ச்சி பெறுகிறார்.


    சைவத்தில் சிவபெருமானே.... நாம் வாழும் உலகமாக கருதப்படுகிறார். சிவபெருமானின் உக்கிரம் தணிய வேண்டுமானால், பூமி குளிர வேண்டும். இதை கருத்தில் கொண்டும் அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது.

    தாரா அபிஷேகம் செய்யப்படுவதால் திருவண்ணாமலை ஆலயத்தின் தினசரி வழிபாட்டு முறைகளில் எந்தவித மாற்றமும் செய்யமாட்டார்கள். வழக்கமான நேரங்களில் உரிய வழிபாட்டை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக லிங்கத்துக்கு சந்தனப் பொட்டு வைத்து, "ஓம் நமச்சிவாய" மந்திரத்தை சொல்லி, வெறும் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்தாலே பலன் கிடைக்கும் என்பார்கள். ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யும்போது அண்ணாமலையார் மனம் குளிர்ந்து அதிகமான பலன்களை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கையாகும்.

    தாரா அபிஷேகம் செய்ய, தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி செய்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தன விருத்தி ஏற்படும். நோய்கள் நீங்கும்.

    சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் கெட்ட சக்திகள் நம்மை அணுகாது. தீய எண்ணத்துடன் நம்முடன் பழகுபவர்கள் விலகி சென்று விடுவார்கள். பயம் நீங்கும்.

    தாராபிஷேகம் தவிர பொதுவாக சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்தால் தோல் நோய் குணமாகும். கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் முக்தி பெறலாம்.

    இதுபோல அக்கினி நட்சத்திர நாட்களில் எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் பெறலாம் என்று நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    அருகம்புல் தண்ணீரால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

    நல்லெண்ணை அபிஷேகத்தினால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    பசும்பால் அபிஷேகத்தினால் அனைத்து வித நன்மைகளும் கிடைக்கும்.

    தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம் கிடைக்கும்.

    பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.

    சர்க்கரை அபிஷேகம் துக்கத்தை போக்கும்.

    புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் லாபம் வரும்.

    இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல சம்பத்தும் கிட்டும்.

    உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

    அரைத்தெடுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

    வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.

    அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோட்சம் மற்றும் தீர்க்க ஆயுள் கிட்டும்.

    திராட்சை ரசம் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.

    பேரிச்சம்பழம் ரசத்தினால் அபிஷேகம் செய்தால் எதிரிகள் இல்லாமல் போவர்.

    நாவல்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கியம் கிட்டும்.

    மாம்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.

    மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.

    எலுமிச்சம் பழ தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆத்மஞானம் உண்டாகும். பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் மன தைரியம் பெறலாம்.

    தயிர் அபிஷேகத்துக்கு உதவினால் குடும்பத்தில் செல்வம் பெருகும். இளநீர் அபிஷேகம் செய்தால் மகிழ்ச்சி உண்டாகும். பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் சுகமான வாழ்வு அமையும்.

    அக்கினி நட்சத்திர நாட்களில் உங்களுக்கு வசதியான ஒரு நாளில் அண்ணாமலையாருக்கு இந்த அபிஷேகங்களை செய்யலாம்.

    அக்கினி நட்சத்திரம் நிறைவு பெறும் போது கடைசி 3 நாட்கள் அதாவது 26, 27, 28-ந்தேதிகளில் 1008 கலசாபிஷேகம் செய்வார்கள். காலை 10 மணிக்கு உச்சிக்கால பூஜை தொடங்கும்போது 1008 கலசாபிஷேகத்தை நடத்துவார்கள்.

    1008 கலசங்களில் நிரப்பப்பட்ட நீரை அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்வதை நேரில் பார்ப்பது அளவு கடந்த புண்ணியத்தைத் தரும். அக்கினி நட்சத்திர நாட்களில் அண்ணாமலையாரை குளிர்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக மதியம் தயிர் சாதத்தை நைவேத்தியமாக படைப்பதும் வழக்கத்தில் உள்ளது.

    அக்கினி நட்சத்திர நாட்களில் அண்ணாமலையாருக்கு மட்டுமின்றி அவரது அடியார்களுக்கும் உதவி, சேவை செய்தால் அபரிமிதமான பலன்களைப் பெற முடியும். திருவண்ணாமலையில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் உள்ளனர்.

    ஒரே ஒரு சிவனடியாருக்கு அக்கினி வெயிலை சமாளிக்க நீங்கள் குடை வாங்கி கொடுக்கலாம். கதராடை, செருப்பு, விசிறி போன்றவை வாங்கிக் கொடுக்கலாம். சிவனடியார்கள் மனம் குளிர்ச்சி அடைந்தால் அண்ணாமலையாரும் மனம் குளிர்ந்து உங்களை ஆசிர்வதிப்பார்.

    • ஒருமுறை தவறு செய்தால் இரு முறை அதனை சரி செய்யும் கஷ்டம் கூடி விடுகின்றது.
    • முழு விவரம் தெரியாமல் எந்த இடத்திலும் பேசி விடக்கூடாது.

    வாழ்க்கை மாறுவதுதான். நம் சிந்தனைகள் மாறினால் வாழ்க்கை மாறும்.....

    ஒரு விழாவுக்கு உங்களால் செல்ல முடியவில்லை. இது உங்கள் குடும்ப விழாவாக இருக்கலாம். ஏதோ தவிர்க்க முடியாத காரணத்தினால் உங்களால் செல்ல முடியவில்லை. ஆனால் நீங்கள் வராததை யாரும் பெரிய விஷயமாக, ஏன் சின்ன விஷயமாகக் கூட அக்கறை கொள்ளவில்லை. மதிக்கவில்லை என்றால் உடனே ஒன்றினை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

    அந்த உறவினர், நட்பு கூட்டம் நாம் சென்று பங்கேற்று இருந்தாலும் நாம் பெரிய மதிப்பு, மரியாதையினை பெற்றிருக்க முடியாது. எனவே நம் மரியாதை, மதிப்பு எந்த இடத்திலும் எப்படி இருக்கின்றது என்பதனை அறிந்தே செயல்பட வேண்டும்.

    ஒருவர் முயன்று அடுத்தவருடன் உறவினை வேண்டுமென்றே முறித்துக் கொள்கின்றார் என்றால் அந்த உறவினை ஒட்ட வைக்க அதன் பின்னே முயற்சிக்க வேண்டாமே.

    ஒரு நிகழ்வில் தீர்ப்பு என்பதனை நம் மனதில் தீர்மானிக்கும் முன் இருபக்கம் நடந்தவைகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

    யாராவது உங்களை பஞ்சாயத்து செய்ய சொல்லி கூப்பிட்டால் உடனே உங்களை நாட்டாமையாக கற்பனை செய்து ஓட வேண்டாம். நடந்தவைகளை மற்றவர்கள் விவாதிக்க ஓரமாய், அமைதியாய் அமர்ந்து கேளுங்கள். நிறைய புரியும்.

    ஒருமுறை தவறு செய்தால் இரு முறை அதனை சரி செய்யும் கஷ்டம் கூடி விடுகின்றது.

    பரந்த மனப்பான்மை உங்களது சிறப்பு அம்சமாக இருக்கட்டும்.

    நான் மட்டுமே எல்லோருக்கும் பின்னால் இருக்கின்றேன் என்ற புலம்பலை விட்டு விட்டு நான் என் பாதை வரிசையில் சரியாக போய் கொண்டிருக்கின்றேன் என்று நினைத்து செயல்பட்டு பார்ப்போமா.

    கமலி ஸ்ரீபால்


    வாழ்வில் என்ன வேண்டும் என எனக்கே தெரியவில்லை என்று குழம்புவதை விட்டு எனக்கு சரியான பாதையினை நான்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என மனதை தெளிவு படுத்தி பாருங்களேன்.

    சிலருக்கு முயற்சி செய்வதற்கே பயம். தவறு ஏற்படுமோ அல்லது தோல்வி ஏற்படுமோ என்ற பயம். ஆகவே எந்தவித முயற்சியும் செய்ய மாட்டார்கள். இது வாழ்வினை பயனற்றதாக்கி விடலாம். எனவே சற்று கவனத்துடன் கூடிய முயற்சி அவசியமாகின்றது.

    உடற்பயிற்சி செய்ய சோம்பலாகத்தான் இருக்கும். ஆனால் சுறுசுறுப்பாய் ஓடி-ஆடி நடக்கும் மகிழ்ச்சி சோம்பலை விரட்டி அடித்து விடுமே.

    சிந்தனையோடு செயலினை மாற்றுங்கள்- சிந்தனை மனதிற்குள் இருக்கலாம். அதனை வெளிப்படுத்தும் சொல்லிலும், செயலிலும் கவனத்தோடு இருக்க வேண்டும்.

    முழு விவரம் தெரியாமல் எந்த இடத்திலும் பேசி விடக்கூடாது. நம் வார்த்தைகளைக் கொண்டே பிறர் நம்மை அளந்து விடுவர்.

    கோபம் இருக்கும் போது வாயே திறக்க வேண்டாம். நாமே அறிந்திராத பல கடும் சொற்களையும், தீய எண்ணங்களையும் வெளியே கொட்டி விடு.

    நம் பெருமையை கட்டுப்பாடு இல்லாமல் நாமே பீற்றிக் கொள்வது போல் இருந்தால் வாயை 'கம்' போட்டு ஒட்டிக் கொள்ளவும்.

    பிறர் மனதை உடைப்பது போல் இருந்தாலும், நம்பிக்கையை உடைப்பது போல் இருந்தாலும் வாயே திறக்கக் கூடாது.

    எது ஆடம்பரம் என்ற சிந்தனையிலும் எண்ணத்திலும் மாற்றம் வேண்டும்.

    இரவில் நல்ல தூக்கம் இருப்பதைப் போன்ற ஆடம்பரம் ஒன்று இருக்க முடியுமா?

    நிதானமான காலை-பரபரவென்று ஓடாத காலை, எத்தனை பெரிய ஆடம்பரம் தெரியுமா?

    அமைதியான சூழலில் பறவைகளின் சத்தம் எத்தனை ஆடம்பரம் தெரியுமா?

    அப்படியே நிதானமாய் காலாற ஒரு நடை-அதுவும் இயற்கை சூழலில் நடப்பது அமோக ஆடம்பரம்.

    நமக்கு நியாயமான முறையில் எது பிடிக்குமோ அதனைச் செய்யும் உரிமை, சுதந்திரம் இருப்பது மிகப்பெரிய ஆடம்பரம்.

    வீட்டில் அன்பாய் தயாரிக்கப்பட்ட உணவு உண்பதும் ஆடம்பரமே. எனவே ஆடம்பரத்தினைப் பற்றிய சிந்தனைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.


    சிலர் ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால், செயலாற்றும் திறனும் இணைந்து இருக்க வேண்டும். வெறும் ஆழ்சிந்தனை மட்டுமே எந்த பயனையும் தராது.

    எண்ணங்களை சரி செய்தாலே ஜெயித்தவர்கள் ஆகி விடுகின்றோம். எண்ணங்கள் செயல்களையும் மாற்றி விடும்.

    'நல்லதே நினை, நல்லதே நடக்கும்' என்பது இதனால்தான்.

    இதனைக் கருத்தில் கொண்டே சிந்தனைகளைப் பற்றி வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.

    பிரம்ம முகூர்த்த வழிபாடு- பிரம்ம முகூர்த்தம் என்பது மிக முக்கிய காலமாக கருதப்படுகின்றது. பிரம்ம முகூர்த்தத்தில் எதை செய்தாலும், எதை வேண்டினாலும் நடைபெறும் என்பது ஐதீகம்.

    பொதுவில் பிரம்ம முகூர்த்தம் என்பதனை காலை 2 மணி முதல் காலை 5.30 மணி வரை என்பர். சிலர் காலை 4 மணி முதல் 6 மணி வரை என்றும் கூறுவர். அனைத்து விதமான சுபகாரியங்களுக்கும் ஏற்ற காலம் இது. படிப்பு, தியானம், வழிபாடு, கல்யாணம், கிரக பிரவேசம் என அனைத்தினையும் செய்யலாம். அதன் முழு பலனும் அப்படியே கிடைத்து விடுமாம்.

    இதற்கு விஞ்ஞான ரீதியாகவும் விளக்கம் சொல்கின்றனர். அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை சூரியனின் வெப்பமோ, சந்திரனின் குளிர்ச்சியோ முழுவதுமாக காணப்படாது. மத்தியமான கால நிலையில் இருக்குமாம்.

    இந்த சமயத்தில் நமது உடல் இயக்கங்கள் சீராக இருக்கும். பதற்றம் இல்லாத நிலை மனதில் அமைதியை உண்டாக்கும். இது ஒருவரின் மனம், உடல் இயக்கத்தினை சீராக்கி நம்மை ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

    பிரம்மாவே படைப்பின் கடவுள் என்கின்றனர். இரவு தூங்கி காலை கண் விழிப்பது புதிய பிறப்புக்கு சமம் என்கின்றனர்.

    இந்த விடியற்காலை பொழுதினை படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாவுக்கு சமர்ப்பிக்கின்றனர். அதனை பிரம்ம முகூர்த்தம் என்கின்றனர். இந்த நேரத்தில் ஒவ்வொரு கிழமையிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கு விளக்கேற்றி வழிபட உகந்த நேரமாகக் கூறுகின்றனர்.

    ஞாயிறு- அகல் விளக்கு- பெருமாள் வழிபாடு, பித்ரு தோஷம் நீங்கும். முற்பிறவி கர்ம வினைகள், கிரக தோஷங்கள் நீங்கும்.

    திங்கள்- அகல் விளக்கு- அம்பாள் வழிபாடு- பயம் நீங்கும். ஞானம் உண்டாகும்.

    செவ்வாய்- பஞ்ச லோக விளக்கு- கந்தசஷ்டி கவசம் சொல்லி முருக வழிபாடு- நோய், கண் திருஷ்டி, பீடை, செய்வினை கோளாறுகள் நீங்கும். புதன்- குத்து விளக்கு- துளசி சாற்றி, விஷ்ணுசகஸ்ரஹோமம் பாராயணம் செய்தல்- கிருஷ்ண வழிபாடு- குழந்தை பாக்கியம், கல்வி உயர்தல், கலைகளில் தேர்ச்சி ஏற்படும்.

    வியாழன்-அகலில் நெய் விளக்கு- சித்தர்கள், மகான்கள் வழிபாடு- சகல சவுபாக்கியமும் ஏற்படும்.

    வெள்ளி-வெள்ளி விளக்கு, கனகதாரா சுலோகம்- மகாலட்சுமி வழிபாடு- கடன்கள் தீரம், அஷ்ட லட்சுமியின் ஐஸ்வர்யம் ஏற்படும்.

    சனி- நல்ல எண்ணெய் அகல்விளக்கு- ஸ்ரீ ருத்திர மந்திரம் சிவ வழிபாடு- சனி தோஷம் நீங்கும். ஒரு பெரியவர் சொல்ல இதனை பகிர்ந்து கொள்கிறோம். மேலும் அவர் கூறியது.... * நம் பாதம் தான் செல்வம் தரும். இது மகாலட்சுமி யாகம் ஆகும்.

    * இந்த பாதத்திற்கு தனி மரியாதை உண்டு.

    * நம் கால் தவறி பிறர் மேல் பட்டு விட்டால் அவரை தொட்டு வணங்குகின்றோம். இல்லையெனில் ஸ்ரீ தேவி நம்மை விட்டு விலகி மூதேவி குடிபுகுந்து விடுவாள் என்பது நம்பிக்கை. மேலும் லட்சுமி விலகி கால் பட்டவரிடம் சென்று விடுவாராம்.

    ** எண்சாண் உடம்பிற்க்கு சிரசே பிரதானம் என்பர். ஆனால் பூஜை என்பது பாதத்திற்குத் தானே நடக்கின்றது. * உலகளந்த பெருமாள் தன் பாதத்தினால்தான் உலகை அளந்தார்.

    * பசுவின் பாதத்தில்தான் மகாலட்சுமி குடி கொண்டுள்ளாள் என்பர்.

    * புதுமணப்பெண் முதன் முதல் புகுந்த வீடு வரும்போது வாயிற்படியில் படி நெல், அரிசியினை தன் வலது காலால் தட்டிதான் வருகின்றாள். * பெரியவர்களை காலை தொட்டுதான் வணங்குகின்றோம்.

    * எனவே தான் பனிவான நடை அவசியம்.

    * காலை கழுவும் பொழுது குதிகாலையும் நன்கு நீர் ஊற்றி கழுவ வேண்டும். * பொதுவில் பலர் தனது காலை பிறர் தொட்டு வணங்க அனுமதிக்க மாட்டார்கள். அதிர்ஷ்டம் அவர்களை விட்டு சென்று விடக்கூடாது என்ற அக்கறை.

    * மேலும் தீயோர்கள் தொடும் போது அவர்கள் திருந்தாமல் இருந்தால் அந்த புனிதம் கெட்டு விடும் என்பர்.

    திருஷ்டி சுற்றி போட்டதை காலால் தவறி கூட மிதிக்க மாட்டார்கள். ஆக பாதத்திற்கு இத்தனை மதிப்பு கொடுக்கப்படுகின்றது என்பதனை அறிந்து கொள்வோம்.

    இவை அனைத்தையும் நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் படிப்பதில் தவறு இல்லை.

    10 நிமிடங்கள் சொல்லித் தரும் பாடங்கள் எவ்வளவு தெரியுமா?

    * 10 நிமிடங்கள் வீட்டில் அம்மா முன்பு அல்லது வேலை செய்யும் மனைவி முன்னால் அமர்ந்து அவர்கள் ஓடி ஓடி செய்யும் வேலையை கவனியுங்கள். வாழ்க்கை எவ்வளவு கடினம் என்று புரியும்.

    * 10 நிமிடம் குடிகாரன் முன்பு அமர்ந்து பாருங்கள். இதற்கு எதுவுமே சொல்லத் தேவையில்லை.

    * 10 நிமிடம் சாதுக்கள், சந்நியாசிகள், மகான்கள் முன்பு அமர்ந்து பாருங்களேன்.

    * 10 நிமிடம் ஆயுட் காப்பீடு முகவர் முன்னால் உட்காருங்கள். இறந்து போவது எவ்வளவு சிறந்தது என்று புரியும்.

    * 10 நிமிடம் வியாபாரிகள் முன்னால் உட்காருங்கள். நாம் சம்பாதிப்பது எவ்வளவு குறைவு என்று புரியும்.

    * 10 நிமிடங்கள் ஆசிரியர்கள் முன்பு அமர்ந்தால் மீண்டும் மாணவன் ஆக வேண்டும் என்று தோன்றும்.

    * 10 நிமிடங்கள் விவசாயி அல்லது தொழிலாளி முன்னால் அமர்ந்தால் நாம் இன்னமும் கடினமாக உழைக்கவில்லை என்று புரியம்.

    * 10 நிமிடம் ஒரு ராணுவ வீரன் முன்பு உட்கார்ந்தால் நம் சேவைகளும், தியாகங்களும் மிகக் குறைவு என்று புரியும்.

    * 10 நிமிடம் நல்ல நண்பன் முன் உட்கார்ந்தால் சொர்க்கம் தெரியும். ஆக ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் நாம் எப்படி செலவழிக்கின்றோம் என்பதே முக்கியம். படித்த முக்கிய பதிவு. பகிர்ந்து கொள்கிறோம்.

    நம் நேரம் என்பது நம்மை வாழ்விலும், பண்பின் தரத்திலும் உயர்த்துவதாக அமைய வேண்டும். சாக்கு போக்குகளை நீக்கி உடல் நலம், உள்ள நலம் பெறவே இக்கட்டுரைகள் எழுதப்படுகின்றது.

    • அரசனின் உயிருக்குள் இருக்கும் ஆண்டவனும் ஆண்டியின் உயிருக்குள் இருக்கும் ஆண்டவனும் ஒன்றுதானே!.
    • வாழ்த்துவதற்கும் வணங்குவதற்கும் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் அன்பும், வாய்நிறைய மலர்ந்திருக்கும் சிறு புன்னகையும் போதும்.

    வணக்கம் சொல்வதில் வாழ்வியல் நன்மைகள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளக் காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    இரு கரங்களையும் கூப்பி, நம்மைப் படைத்த இறைவனையும், நமக்கு உறுதுணையாக விளங்குகின்ற இயற்கையையும் உயிரினங்களையும் வணங்குவது என்பது காலங்காலமாக இருந்து வரும் மனிதகுலப் பழக்கமாகும். 'தொழுதல்' எனப்படும் வணக்க முறை ஆதிகாலத்தில் இயற்கையைத் தொழுவதிலிருந்தே தொடங்கியது ஆகும்.

    சூரியனையும், சந்திரனையும், நெருப்பையும், காற்றையும், மழையையும், மலையையும், குன்றையும், மரம் செடி கொடிகளையும், விலங்குகளையும், உயிரினங்களையும், கருவிகளையும் ஆதிமனிதன் வணங்கத் தொடங்கினான். அடிப்படையில் இது ஆற்றலை வணங்குகின்ற வணக்கமாகத் தொடங்கிப், பிறகு இயற்கையையே கடவுளாகவும் வழிபடும் முறையில் மனிதன் ஆழ்ந்தான்.

    எது நமக்கு உதவியாக இருக்கிறதோ அதற்கு நன்றி கூறுவது போல வணக்கம் செலுத்துவது; எது ஆற்றல் மிக்கதாக இருக்கிறதோ அதற்குப் பணிந்து வணக்கம் செலுத்துவது; எது நமக்கு அச்சம் தருவதாக இருக்கிறதோ அதற்கு அஞ்சி வணக்கம் செலுத்துவது… என இப்படிப் பலவகைக் காரணங்களால் வணங்கும் முறை வளர்ச்சி பெற்றது.

    ஆற்றல், அதிகாரம், செல்வமுடைமை ஆகியவை கண்டு வணக்கம் செலுத்திய மனிதன், காலப்போக்கில் அறிவுகண்டு தொழும் நிலைக்கும் உருவாக்கப்பட்டான். அறிவுலக எழுச்சிக்கு இந்தநிலை, பெரும் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் நல்கியது. செல்வந்தரையும், ஆட்சி அதிகாரமுள்ளோரையும், ஆன்மீகத் துறவிகளையும் அடிமைகள் போல வணங்கி வந்த நிலைமை மாறியது. படிப்பாளிகளையும் சிந்தனையாளர்களையும், எழுத்தாளர்களையும், அறிவாளிகளையும், விஞ்ஞானிகளையும் கலைஞர்களையும் போற்றி வணங்கக் கூடிய வணக்க நிலை புதிய அறிவுப் புரட்சி சமுதாயத்தை ஏற்படுத்தியது.

    பொதுவாக வணக்கம் செலுத்துவது என்பது, தகுதியில் குறைந்த ஒருவர், தகுதியில் தன்னைவிட உயர்ந்த ஒருவருக்கு இணங்கி நிற்பதற்கு அடையாளமாய் வணங்கி நிற்பது ஆகும். வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது, அங்குள்ள ஆண்டவன் நம்மைப் படைத்தவன் என்பதனால் நம்மைவிட உயர்ந்தவன் ஆகையினால் பணிந்து வணங்க வேண்டும். இது தெய்வ பக்தி ஆகும்.

    நாம் வாழும் நாடு நமக்கு, ஒழுக்கத்தை, வாழும் முறைமையை, சுவாசிக்கும் காற்றை, உண்ணும் நீரை, பருகும் நீரை, வாழ்வதற்குப் பாதுகாப்பான இடத்தைத் தருவதால் அதனையும் வணங்க வேண்டும்; இதற்கு தேசபக்தி என்று பெயர். இதைப்போல, பெற்ற தாய் தந்தையைப் பிள்ளைகளும், கட்டிய கணவனை மனைவியும் (தற்காலத்தில் கட்டிய மனைவியைக் கணவனும்- வணங்கினால் தப்பில்லை), குடும்பத்தில் மூத்தோர்களை இளையோர்களும், சமூகத்தில், அலுவல் இடத்தில் பணிபுரியும் மூத்தோர்களை இளைய ஊழியர்களும், தலைவர்களைத் தொண்டர்களும் ஆசிரியர்களை மாணவர்களும் வணங்கியே ஆக வேண்டும். வணங்குவது என்பது ஒரு மனிதனின் அடக்கத்தையும் பணிவையும் எடுத்துரைக்கும் ஒழுக்கப் பண்பாகும்.

     

    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

    வணங்குவது தவிர, வாழ்த்துவது என்பதும் அதன் சார்பாக உருவாகி வளர்ந்ததே ஆகும். வயதில் இளையோரையும், தகுதியில் குறைந்தோரையும் வாழ்த்துகிற முறைமை தொன்றுதொட்டு இருந்து வருகிற பழைய முறைமை ஆகும். அன்னதானம் செய்வதில் அனைவரையும் விஞ்சும் சிறப்போடு திகழ்ந்த சிறுகுடிக் கிழான் பண்ணனை.

    'என்னுடைய வாழ்நாளையும் சேர்த்து பண்ணன் சிறப்போடு வாழட்டும்' (யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!) என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வாழ்த்திப் பாடுகிறான். பரிசில் வேண்டி மன்னர்களைப் பாடவரும் புலவர் பெருமக்களும், மன்னர்களின் கொடைத்திறம் போற்றிப், பல்லாண்டு வாழ்க! என்று வாழ்த்திப் பாடும் மரபும் நம் தமிழகத்தில் உண்டு. வணங்கிப் பாடுவதிலேயே வாழ்த்திப் பாடுவதும் ஒரு கிளையாகச் செழித்துக் காணப்படுகிறது.

    ஆன்மீகத்தில் 'நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!' என்று சிவபெருமானை வாழ்த்தி மாணிக்கவாசகர் பாடுகிறார்; 'பல்லாண்டு! பல்லாண்டு! ' மணிவண்ணன் வாழ்க! என்று வைணவத்தில் பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடி வாழ்த்துகிறார். இன்று பெருந்திரள் கூட்டங்களில் தலைவர்களை வாழ்த்தித் தொண்டர்கள் எழுப்பும் 'வாழ்க!' முழக்கங்களும் வணக்கம் சார்ந்த வாழ்த்துகளே ஆகும்.

    உடல்மொழி குறித்த தகவல் பரிமாற்றக் குறியீடுகள் பல்வேறுவிதமாகக் கூறப்படுகின்றன. கைகளைத் தூக்கி, மடக்கி, நீட்டி, விரல்களை ஒவ்வொன்றாக நீட்டி மடக்கிக், குவித்து, விசையோடு கைகளை ஒருசேரவும் தனித்தும் உயர்த்தி, மடக்கி…. என்று ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு குறியீட்டு அர்த்தங்கள் இருக்கின்றன.

    'அவன் என்னைப்பார்த்துச் சுட்டுவிரல் நீட்டிப் பேசிவிட்டான்!'; 'அவன் கை முழங்கை மடக்கி என்னைச் சண்டைக்கு அழைத்துவிட்டான்'; 'அவன் தன் விரலால் என்னைப்பார்த்து எச்சரிக்கை விடுக்கிறான்!'; 'அவன் கைதட்டி என்னை இளக்காரமாய் அழைக்கிறான்!' என்றெல்லாம் நம் கைகளின் அசைவு மொழிக்குப் பல அர்த்தங்கள் உண்டு. ' இவை எதுவும் என்னிடம் இல்லை; இதோ இரண்டு வெறுங்கைகளையும் ஒன்றாகக் குவித்து வணக்கம் மட்டுமே செய்கிறேன்!; இது எனது பணிவின் அடையாளம்!' என்று பணிந்து நிற்பதே வணக்கம்.

    சக மனிதர்களைப் பார்த்து வணங்கிக்கொள்வதும், வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதும், நம்முடைய நல்லெண்ணத்தை, நம்முடைய நேர்முறைச் சிந்தனைகளை அவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டவே ஆகும்.

    அவரைப்பார்த்து வாழ்த்துவதும் வணங்குவதும் நமது கோழைத்தனத்தின் அடையாளம் என்று சிலர் கருதலாம். ஏன் வணக்கத்தையும் வாழ்த்தையும் பெறுவோருக்கும்கூடச் சற்று ஆணவம் தலைக்கேறலாம். ஆனால் 'எல்லா உயிரிலும் நானே இருக்கிறேன்' என்று ஆண்டவன் குறிப்பிடும்போது, நம்முடைய உடம்புக்குள் உயிராய் இருக்கின்ற ஆண்டவன், அடுத்த உடம்புக்குள் உயிராய் இருக்கின்ற ஆண்டவனை வணங்குவதும், வாழ்த்துவதும் தவறல்லவே!.

    அந்த வகையில் அரசனின் உயிருக்குள் இருக்கும் ஆண்டவனும் ஆண்டியின் உயிருக்குள் இருக்கும் ஆண்டவனும் ஒன்றுதானே!. உயிரெல்லாம் சமம் என்று ஆகும்போது, உடம்பை வைத்து, நிறத்தை வைத்து, அந்தஸ்தை வைத்து நீ சிறிசு! நான் பெரிசு! நீ முதலில் வணங்கு! பிறகுதான் நான் வணங்குவேன்! என்கிற ஆணவம் ஏன்?. வாழ்த்துவதற்கு ஏது இளமை மூப்பு? வாழ்த்தினால் வாழ்த்துவோரும் இணைந்தே வாழ்வர் என்பதுதானே வாழ்த்தின் தத்துவம்!.

    நகரத்தில் ஒரு நிறுவனம். மாடு போன்ற பெரிய விலங்குகளை வதைத்து, அவற்றின் இறைச்சியை உறை குளிரில் பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு அப்படியே ஏற்றுமதி செய்வது அதன் தொழில். அந்தத் தொழிற்சாலையில் நூறுபேர் வேலை செய்கிறார்கள். அந்த நிறுவனத்தில் மாட்டிறைச்சியை உயர் உறை குளிரில் வைத்தி ருக்க ஓர் அறை உண்டு. சாதாரண உடையோடு எவரும் உள்ளே சென்றுவிட முடியாது; உரிய வெப்பலாடைகளோடு சென்றாலும் அரை மணி நேரத்திற்குமேல் எவரும் உள்ளிருக்க அனுமதியில்லை; மீறியிருந்தால் உறைபனியில் அவர்கள் உறைந்து போய்விட நேரிடும்.

    அந்தக் குளிர்பதன அறைக்குள் ஒருவர் பணிநிமித்தமாக உள்ளே போனார். தனது கடமைகளை அரைமணி நேரத்திற்குள் முடித்துவிட்டு, அறைக்கதவுப் பக்கம் வந்தார்; அது தானியங்கிக் கதவு; தானாகவே பூட்டிக் கொண்டிருக்கிறது. உள்ளிருந்து திறக்கவும் வழியில்லை; அப்போது தொழிற்சாலை வேலை முடிகிற நேரம்; இனிமேல் யாரும் அங்கு வருவதற்கு வாய்ப்பில்லை. ஓங்கிக் குரலெடுத்து, யாராவது உதவிக்கு வருவார்களா? எனச் சத்தம்போட்டு அழைத்துப் பார்த்தார்; ஒன்றும் பயனில்லை.

    ஏனெனில் உள்ளிருந்து ஒருபொட்டுக் காற்றுக்கூட வெளியே போக முடியாத அளவுக்கு இருப்புத் தகடுகளால் அந்தக் குளிர்பதன அறைச்சுவர் உருவாக்கப்பட்டிருந்தது. தொலைபேசி, செல்பேசி வசதிகளும் இல்லை. அவர் முடிவுக்கு வந்துவிட்டார். விடியும் வரை யாரும் அறைக்கு வரப்போவதில்லை; அதற்குள் இன்னும் சிலமணி நேரத்தில், உறைபனியில் உறைந்து நாமும் செத்துப்போக வேண்டியதுதான்.

    அந்த நேரத்தில் அந்த இரும்புக்கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தால், அந்தத் தொழிற்சாலையின் வாயிற் காவலர், 'சார்! நீங்க இங்கேயா இருக்கீங்க?' என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார். ' நான் இங்கிருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?' போக இருந்த உயிர் திரும்ப வந்த மகிழ்ச்சியில் கேட்டார் அறையிலிருந்த நபர்.

    நடந்தது இதுதான். குளிர்பதன அறைக்குள் மாட்டிக்கொண்ட நபர் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பொறியாளர். இவரைப்போல அந்த நிறுவனத்தில் பலர் பணிபுரிந்தாலும் இவரிடம் மட்டும் சிறப்பான ஒரு குணம் உண்டு. அலுவலகத்தில் யாரைப்பார்த்தாலும், அவர்கள் சீனியர் ஜூனியர் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லாருக்கும் வணக்கமும் வாழ்த்தும் மகிழ்ச்சியோடு சொல்லுவார்.

    அதிலும் குறிப்பாக நிறுவனத்திற்குள் நுழையும்போது அந்த வாயிற்காவலரைப் பார்த்து, 'குட் மார்னிங்'; அதே போல மாலை வேலைமுடித்து நிறுவனத்தைவிட்டு வெளியே செல்லும்போது, ' குட் ஈவினிங்' 'நாளை சந்திப்போம்!' என்று மகிழ்ச்சிபொங்கச் சொல்லிவிட்டுச் செல்வார்.

    இனி வாயிற்காவலர் சொல்கிறார்," இந்த நிறுவனத்தில் கடை நிலை ஊழியராகப் பணியாற்றும் என்னையும் ஒரு மனிதனாகக் கருதி, எனக்கு நாள்தோறும் காலை மாலை இருவேளையும் வணக்கமும் வாழ்த்தும் சொல்லுகின்ற ஒரே மனிதர் இந்தப் பொறியாளர் மட்டும்தான். அதனால் நூறுபேரில் இவர் மட்டுமே என் நினைவில் நிற்பவர்.

    இன்று, காலை வணக்கம் சொல்லிவிட்டு உள்ளே சென்றவர், மாலை வேலைமுடித்து எல்லாரும் வெளியே சென்றபின்னரும் இவரை மட்டும் காணவில்லை; ஏனென்றால் நாளை சந்திப்போம் என்கிற மகிழ்ச்சிக்குரல் கேட்கவில்லை. உடனடியாக நான் செயல்படத் தொடங்கினேன்; நிறுவனத்திற்குள் ஒவ்வொரு அறையாகக், கழிவறை உட்படத் தேடினேன்; கடைசியாக இந்தக் குளிர் அறைக்குள்ளும் நுழைந்தேன். கண்டுபிடித்து விட்டேன். ஐயா! ஒங்க நல்ல மனசுக்கு எந்தக் குறையும் வராதையா! குட் ஈவினிங் ஐயா! நாளை சந்திப்போம்!" கண்ணீர் மல்க முடித்தார் வாயிற் காவலர்.

    அடக்கத்தின் வெளிப்பாடு பணிவு; பணிவின் வெளிப்பாடு வணக்கமும் வாழ்த்தும். வாழ்த்துவதற்கும் வணங்குவதற்கும் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் அன்பும், வாய்நிறைய மலர்ந்திருக்கும் சிறு புன்னகையும் போதும். எதை எழுதத் தொடங்கினாலும் வணக்கத்தோடு எழுதுவது!, யாரைப் பார்க்க நேரிட்டாலும் வாழ்த்தோடு பேசுவது!... வேறென்ன வேண்டும்? இந்த உலகம் முழுமையுமே நம்மைக் காத்திடும் சொந்தங்கள்தாம்.

    தொடர்புக்கு,

    94431 90098

    • அகத்தில் குழந்தையாக இரு; புறத்தில் அறிஞனாக செயல்படு.
    • நமக்கு என்னென்ன தேவையோ அவை நமக்கு வேண்டும் என்று முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

    பைபிள் கூறும் பத்து கட்டளைகள் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.

    நாம் நமது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள பத்து வகையான விதிமுறைகளை வகுத்துள்ளோம். அவற்றை நாம் இக்காலத்து பத்து கட்டளைகளாகவே எடுத்துக் கொள்ளலாம்.

    அவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிப்போம் ஆனால், அனைத்து சூழ்நிலைகளையும் எளிதாக எதிர்கொண்டு நல்வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

    அந்த பத்து விதமான விதிமுறைகள் என்ன என்பதையும் ஒவ்வொன்றாகப் பார்த்திடுவோம்.

    அகத்தில் குழந்தையாக இரு; புறத்தில் அறிஞனாக செயல்படு.

    இதுதான் முதலாவது விதிமுறை.

    அகத்தில் குழந்தையாக இருப்பது என்றால் என்ன?

    மனதில் ஏற்படும் எண்ணங்களும், உணர்வுகளும் நம்மை அறியாமல் தாமாகவே ஏற்படுகின்றன.

    இத்தகைய எண்ணங்கள் தாம் வரவேண்டும்; இத்தகைய உணர்வுகள் தாம் வரவேண்டும் என்று நாம் விரும்புவோம். அவற்றைச் சீரமைத்து ஒழுங்குபடுத்தப் போராடுவோம்.

    ஆனால் எந்தவொரு குழந்தையும் தன்னைச் சீரமைக்க எண்ணுவதில்லை. அது இயற்கையாக இருக்கிறது; கள்ளம் கபடமற்று இருக்கிறது.

    மனதைப் பொறுத்தவரை அது இயற்கையாக இருக்கவேண்டும். குழந்தையாக இருக்க வேண்டும்.

    மன இயக்கத்தைப் பொறுத்தவரை அங்கு அறிவுக்கு வேலை கிடையாது.

    அகத்தைப் பொறுத்தவரை நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழ்ந்தது கிடையாது.

    அனைத்தும் இயற்கையானவை. அனைத்தும் தெய்வீகமானவை. அங்கே நமது முயற்சிக்கோ, அறிவுக்கோ எந்தவொரு வேலையுமே கிடையாது.

    அனைத்தும் நன்றே; அனைத்தும் தெய்வீகமானவையே.

    அங்கு வாழ்வு மட்டுமே உள்ளது. அங்கு நிகழ்வு மட்டுமே உள்ளது. அங்கே செயல் என்று எதுவுமே கிடையாது. செய்வதற்கென்று எதுவுமே கிடையாது.

    உங்களோடு நீங்கள் உடன்பட்டு வாழ்வதுதான் குழந்தையாக இருப்பது.

    உங்களுடைய அகத்தில் நீங்கள் ஒரு குழந்தையாக மட்டுமே இருக்க வேண்டும்.

    உங்களுடைய செயல்கள் யாவும் எப்படி இருக்க வேண்டும்?

    அதுவும் குழந்தைத் தனமாக இருக்க வேண்டுமா?

    உங்கள் செயல்கள் அனைத்தும் ஒரு அறிஞனுடைய செயல்களாக இருக்க வேண்டும்.

    அறிவுக்கு எங்கே வேலை உள்ளது, எங்கே வேலை கிடையாது என்பதை நமது அறிவைக் கொண்டே புரிந்து கொள்ள வேண்டும்.

    அகத்தைப் பொறுத்தவரை அறிவுக்கு வேலை எதுவும் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படிப் புரிந்து கொள்வதையே ஞானம் என்னும் பெயரில் குறிப்பிடுகிறோம்.

    அறிவின் குறுக்கீடு எதுவும் இல்லாமல் நமது அகம் - மனது சுதந்திரமாக இயங்குவதையே, முக்தி, மோட்சம், விடுதலை என்ற பெயரில் குறிப்பிடுகிறோம்.

    இந்த விபரங்களை எல்லாம் நாம் ஆரம்பத்திலேயே விரிவாகப் பார்த்துவிட்டோம்.

    அதன் சாராம்சமாகவே இந்த முதலாவது விதிமுறையை வைத்துள்ளோம்.

    இனி அடுத்து வருவது இரண்டாவது விதிமுறை.

    "முடிந்துபோனதை யெல்லாம் முடித்துக் கொண்டு, அடுத்தது என்ன வென்று முன்னேற வேண்டும்"

    - இதுதான் அந்த இரண்டாவது விதி முறை.

    இந்த இரண்டாவது விதிமுறை என்ன கூறுகின்றது?

    முடிந்துவிட்ட ஒன்றை நினைத்து நினைத்து புலம்பிக் கொண்டிருப்பவர்கள் சிலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

    அப்படிப்பட்டவர்களால் அடுத்ததாக செய்ய வேண்டிய செயல்கள் எதனையுமே செய்ய முடியாமல் போய்விடும்.

    செயல் அளவில் முடிந்து போன ஒன்றை மனதளவிலும் முடித்துக் கொள்ள வேண்டும்.

    முன்பதிவு செய்திருந்த ரெயிலை தவற விட்டு விட்டோம்.

    தவறவிட்ட நிகழ்வு முடிந்து போன ஒன்று. அதனையே நினைத்து வருந்திக் கொண்டிருப்பதை விட்டுவிட வேண்டும்.

    அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதையே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ரெயிலுக்குப் பதிலாக பஸ்சையோ அல்லது விமானத்தைப் பிடிக்கவோ முயன்றிட வேண்டும்.

    முடிந்துவிட்ட ஒன்றிலேயே மூழ்கிக் கிடப்போமாயின், நாம் செயலற்று முடங்கிப் போய் விடுவோம்.

    ஆகவே முடிந்துபோனதையெல்லாம் முடித்துக் கொண்டு, அடுத்தது என்னவென்று முன்னேற வேண்டும்.

    அடுத்து வருவது மூன்றாவது விதிமுறை.

    புராண காலத்துக் கதைகளைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

    சிலர் இறைவனை நோக்கி தவம் செய்வார்கள். இறைவனும் அவர்களுடைய தவத்தினால் மகிழ்வடைந்து அவர்கள் கேட்ட வரத்தை வழங்குவார்.

    இக்காலத்தில் அப்படி வரங்களைப் பெறுவது சாத்தியம் இல்லையா?

    இப்போதும் அது சாத்தியமே.

    அப்படி என்றால் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

    நமக்கு என்னென்ன தேவையோ அவை நமக்கு வேண்டும் என்று முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

    இப்படி முடிவு செய்வது வேறு, வரங்கள் வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான்.

    அது போல் இன்னும் ஒன்றையும் கூறுவார்கள்.

    ஒரு முனிவர் கடும் தவம் செய்து கொண்டிருப்பார். சிலர் அவருக்கு இடையூறு செய்து அவருடைய தவத்தை கலைத்து விடுவார்கள்.

    தவம் கலைந்த முனிவரும் அப்படி தவத்தை கலைத்தார்கள் மீது கோபங்கொண்டு அவர்களை, "நாயாகப் போ!" என்று சபித்து விடுவார்.

    அத்தகைய சாபங்கள் இக்காலத்திலும் செயல்படுகின்றனவா?

    அத்தகைய சாபங்கள் இன்றளவும் செயல்படுகின்றன.

    நமக்கு ஏதாவது வேண்டும் என்று முடிவெடுப்பது வேறு;

    நமக்கு வேண்டியது நமக்குக் கிடைக்காது என்று முடிவு செய்வது வேறு.

    நமக்கு வேண்டியது நமக்குக் கிடைக்காது என்று முடிவு செய்து கொள்வது தான் சாபங்கள் ஆகும்.

    வரங்களையும், சாபங்களையும் நமக்கு நாமேதான் உருவாக்கிக் கொள்கிறோம்.

    நாம் நமக்கு வேண்டியதை அடைய நாம் செய்ய வேண்டிய செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.

    அப்படி நமது செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் விதமாக நாம் நமது செயல் முடிவுகளை யும் ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும்.

    அதற்கான அணுகுமுறைதான் இந்த மூன்றாவது விதிமுறை.

    நம்முடைய வெற்றிக்காக,

    1. சில செயல்களை செய்ய வேண்டும் என்றோ, அல்லது

    2. சில செயல்களை செய்ய வேண்டாம் என்றோ, ஏதாவது ஒரு முடிவை எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு முடிவுகளையும் மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ளக் கூடாது.

    சில சமயங்களில் இரண்டு முடிவுகளுமே சரியானதாக இருக்காது.

    அந்நிலையில் மூன்றாவது முடிவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அது என்ன மூன்றாவது முடிவு?

    இந்த முடிவு செய்யும் நிகழ்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற மூன்றாவது முடிவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பிறகும், செய்ய வேண்டாம் என்ற எண்ணம் வந்து கொண்டிருக்கலாம்.

    அப்படி அந்த எண்ணங்கள் வருமேயானால் அவற்றை நிராகரித்து விட வேண்டும்.

    அது போல் ஒரு செயலைச் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்த நிலையில், அந்தச் செயலை செய்ய வேண்டும், செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வருமேயானால் அவற்றையும் நிராகரித்து விட வேண்டும்.

    அதேபோல் முடிவெடுப்பதை தற்காலிகமாக ஒத்திப்போட வேண்டும் என்று முடிவெடுத்த பின்னரும், செய்ய வேண்டும் என்றோ அல்லது

    செய்ய வேண்டாம் என்றோ எந்தவொரு எண்ணங்கள் ஏற்பட்டாலும் அவை அனைத்தையுமே நிராகரித்துவிட வேண்டும்.

    இவ்வாறு, "ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றோ, அல்லது செய்ய வேண்டாம் என்றோ அல்லது முடிவு செய்வதை தற்காலிகமாக ஒத்திப்போடுவது என்றோ ஏதாவது ஒரு முடிவை எடுத்துக்கொள்ள வேண்டும்"

    - என்பதுதான் இந்த மூன்றாவது விதிமுறை.

    அடுத்து வருவது நான்காவது விதிமுறை.

    "எட்டியதை எடு; எட்டாததைக் கொடு"

    - என்பதுதான் இந்த நான்காவது விதிமுறை.

    உணர்மனம் என்றால் என்ன, முழு மனம் என்றால் என்ன என்பதை ஏற்கெனவே பார்த்துள்ளோம்.

    நமக்கு நன்கு தெரிந்த செயல்களை நாமாகவே எத்தகைய தடுமாற்றமும் இல்லாமல் எளிதாக செய்து முடித்துவிட முடியும்.

    ஆனால் நாம் எதிர்கொள்ளும் செயல்கள் அனைத்தும் அத்தகையதாக இருக்க முடியுமா?

    அவற்றுள் பல, சிக்கல்கள் நிறைந்ததாகவும் நம்மை மீறியதாகவும் இருக்கக்கூடும்.

    எட்டாதவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டால் என்ன ஆகும்?

    அந்நிலையில் செய்யக்கூடிய செயல்களைக் கூட செய்ய முடியாமல் போய்விடும்.

    ஆகவே எட்டக்கூடிய செயல்களை மட்டும் எடுத்துக் கொண்டு, எட்டாத செயல்களை எல்லாம் முழு மனதிடமோ அல்லது இறைவனிடமோ ஒப்படைத்து விட வேண்டும்.

    அந்நிலையில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் திறம்பட செய்து முடிக்க முடியும்.

    அடுத்து வருவது ஐந்தாவது விதிமுறை.

    ஓர் உதாரணம். நீங்கள் ஒரு மென்பொருள் பொறியாளர் என வைத்துக் கொள்வோம்.

    உங்கள் வேலையில் நீங்கள் ஒரு ஜீனியஸ். - அற்புதமான திறமைசாலி.

    நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் ஒரு பெரிய பணி ஒப்பந்தம் ஒன்றைக் கையில் எடுத்திருந்தார்கள். அந்த பணித் திட்டத்தில் உங்களைப் போன்ற திறமைசாலிகளால் மட்டுமே பணியாற்ற முடியும்.

    ஆயிரக்கணக்கானோர் பணியாற்றும் உங்கள் நிறுவனத்தில், இந்த விசேஷப் பணிக்காக உங்களைப் போன்ற பத்து பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

    ஒரு வருடம் இந்தப் பணியில் ஈடுபட வேண்டும். மூன்று மடங்கு ஊதியம் வழங்கப்படும்.

    பத்து நபர்களில் முதல் நபராக உங்களைத் தேர்வு செய்கின்றனர். இன்னும் ஒன்பது நபர்களையும் தேர்வு செய்கின்றனர்.

    எவராலும் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, உங்கள் பத்து நபர்களுக்கு மட்டும் என ஒரு பெரிய ஹாலையும் ஏற்பாடு செய்கிறார்கள்.

    இந்த உதாரணத்தில் வேறு ஒரு வித்தியாசமான அம்சமும் உள்ளது.

     

    ஸ்ரீ பகவத்

    அதென்ன வித்தியாசமான அம்சம்?

    உங்களோடு சேர்ந்து பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட மற்ற ஒன்பது நபர்களும், உங்களுடைய பரம எதிரிகள். உங்கள் கால்களை எப்படி வாரிவிடலாம் என்று ஒவ்வொரு விநாடியும் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்கள்.

    அத்தகைய நபர்களுக்கு மத்தியில் நீங்கள் ஒற்றை நபராக இருந்து வேலை செய்யவேண்டும்.

    அந்நிலையில் சாதாரண சராசரிப் பணிகளைக் கூட உங்களால் செய்ய முடியாது.

    இந்நிலையில் விசேஷமான பணிகளை உங்களால் எப்படி செய்ய முடியும்?

    தொடர்ந்து பார்ப்போம்...

    தொடர்புக்கு:

    வாட்ஸப் - 8608680532

    • ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கும் இந்த உற்சவம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும்.
    • டால்பின்களைக் கண்டு களிப்பதற்குப் பெயர் பெற்ற ஏரியாகும்.

    இந்தியாவின் பொக்கிஷம் என்று சொல்லப்படும் ஒடிசா மாநிலத்தில் பார்ப்பதற்கும் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி கொள்வதற்கும் ஏராளமான இடங்கள் உள்ளன.

    அதன் தலைநகரமான புவனேஷ்வர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் கம்பீரமாக அமைந்திருக்கிறது.

    மகாநதியின் தென்மேற்கு கரையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. பழைய காலத்தில் இதன் பெயர் கலிங்க தேசம்.

    புகழ்பெற்ற புனிதமான பூரியைச் சுற்றியுள்ள சில இடங்களை இங்கு பார்ப்போம்.

    பூரி ஜகந்நாதர் ஆலயம்

    புனிதமான இந்தத் தலம். புவனேஸ்வரில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    இந்தத் தலம் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. ஜரா என்ற வேடனின் அம்பால் உயிர் துறந்த கிருஷ்ணரின் உடல் கடலில் ஒரு மரம் போல் மிதக்க, கிருஷ்ணர் கனவில் கூறியவாறு அதை, புரியை ஆண்டு வந்த இந்திரதுய்மன் என்னும் மன்னன் எடுத்து, ஒரு சிலையை அமைக்க ஏற்பாடுகள் செய்தான்.

    பெருமாளே ஒரு முதிய தச்சர் வேடத்தில் தோன்றி 21 நாட்கள் யாரும் தான் வேலை செய்யும் அறையைத் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சிற்ப வேலையை ஆரம்பித்தார்.

    ச.நாகராஜன்


    15 நாட்கள் அறையில் இருந்து சத்தம் கேட்டது. அதன் பின்னர் கேட்கவில்லை. மூன்று நாட்கள் பொறுத்த மன்னன் பின்னர் அவசரப்பட்டு அறைக் கதவைத் திறந்தான். தச்சர், "21 நாட்கள் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையை நீ ஏன் மீறினாய். ஆகவே அரைகுறையாக உள்ள சிலையை அப்படியே பிரதிஷ்டை செய். இதை தரிசிக்க வருவோர் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடைவர்" என்று கூறினார். அங்கிருந்த பலராமர், சுபத்ரா, ஜெகந்நாதர் ஆகிய சிலைகளை முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் நிலையில் அரசன் பிரதிஷ்டை செய்தான்.

    கால கிரமத்தில் இந்தக் கோவிலை 1135ஆம் ஆண்டு ஆனந்தவர்மன் என்ற அரசன் புதுப்பித்தான். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்குள்ள மரத்தினாலான திருமேனிகள் புதுப்பிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் புரி ஜகந்நாதரின் ரத யாத்திரை பல லட்சம் மக்களை ஈர்க்கும் உலகப் பெரும் தேர்த்திருவிழா ஆகும். பத்து லட்சம் மக்கள் இந்த ரத யாத்திரையில் கலந்து கொண்டு ஜெகந்நாதரின் அருளுக்குப் பாத்திரமாகின்றனர்.

    16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு மஞ்சள் நிறத் தேரில் புரி ஜெகந்நாதரும், 14 சக்கரங்கள் கொண்ட சிவப்பு பச்சை நிறமுடைய தேரில் பலபத்ரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் தேர்வலம் வருவர்.

    ஒவ்வொரு தேர்ச்சக்கரமும் 7 அடி குறுக்களவு கொண்டது. ஜகந்நாதரின் தேரின் உயரம் 45 அடி ஆறு அங்குலம்; அகலம் 34 அடி ஆறு அங்குலமாகும். இந்தத் தேர்கள் வருடா வருடம் புதிதாக செய்யப்படுகின்றன. தேர் கட்டுவதில் வல்லவர்களான தச்சர்களால் குறிப்பிட்ட மரங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை மகாநதியில் மிதக்கவிடப்படுகின்றன. அவற்றை புரி அருகே எடுத்து குறிப்பிட்ட முறைப்படி இந்த விசேஷமான தேர்கள் அமைக்கப்படுகின்றன.

    தேரோடும் வீதியை தங்கத் துடைப்பத்தால் மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்வதுப் பாரம்பரியமாக இன்றளவும் நடைபெற்று வருகிறது.

    முதலில் பலபத்ரர் தேர், அடுத்து சுபத்ரா தேவி தேர், பின்னர் இறுதியில் நந்திகோஷ ரதம் எனப்படும் புரி ஜெகந்நாதர் தேர் முறையாகப் புறப்படும். ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கும் இந்த உற்சவம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். குண்டிச்சா கோவில் நோக்கிப் புறப்படும் இந்த ரத யாத்திரை மவுசிமா கோவில் வழியே செல்லும். அங்கு ஜெகந்நாதர் ஓய்வு எடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகந்நாதர் கோவிலை அடையும்.

    புரி கோவிலில் முதலில் சிங்க துவார் வழியே நுழைந்து 22 படிகள் ஏறி சந்நிதிக்குச் செல்ல வேண்டும். உள்ளே நுழைந்தவுடன் தீபத்தை வழிபடுதல் மரபு. ஜகந்நாதர் சந்நிதிக்கு இடது பக்கம் சுபத்ராவும் பலபத்ரரும் இருந்து அருள் பாலிக்கின்றனர். கோவில் கூரையில் கிருஷ்ண லீலை ஓவியங்கள் அழகுறத் திகழ்கின்றன.

    இறைவனுக்கு 56 வகையிலான பிரசாதங்கள் நைவேத்யம் செய்யப்பட்ட பின் இந்த மகா பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் இங்கு வழங்கப்படுகிறது.


    சிலிகா ஏரி

    பூரியில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிலிகா ஏரி ஆசியாவிலேயே மிகப் பெரிய உப்பு ஏரியாகும். இதை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது. இது மூன்று மாவட்டங்களை உள்ளடக்கி 1100 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள ஏரியாகும். இது டால்பின்களைக் கண்டு களிப்பதற்குப் பெயர் பெற்ற ஏரியாகும். சடப்படா நகரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியில் பல்வேறு இடங்களில் இருந்தும் வரும் காட்வால், முள்வால் பறவை உள்ளிட்ட ஏராளமான பறவைகளையும் காணலாம். பேரிக்காய் வடிவத்தில் உள்ள இந்த ஏரியுடன் 52 ஆறுகள் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்குவதற்கு எராளமான ஹோட்டல்கள் உள்ளன.

    கொனார்க் சூரியன் கோவில்

    பூரி நகரில் இருந்து வடகிழக்கில் 35 கிலோமீட்டர் தூரத்தில் கொனார்க் உள்ளது. இங்குள்ள கோவில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். சிவப்பு மணல்கற்களாலும் கருங்கற்களாலும் அழகுற அமைக்கப்பட்ட இந்தக் கோவிலை ஐரோப்பிய மாலுமிகள் கறுப்பு கோவில் பிளாக் பகோடா என்று அழைத்தனர்.

    நூறு அடி உயரமுள்ள ரதமானது 24 சக்கரங்கள் கொண்டதாகவும் ஆறு குதிரைகள் இழுத்துச் செல்வதாகவும் இருக்கும் படி அமைக்கப்பட்டது.

    இந்த தேரின் சக்கரத்தை வியப்புடன் அனைவரும் பார்ப்பது வழக்கம்.

    "இங்கே கல்லின் மொழி மனிதனின் மொழியையும் தாண்டிச் செல்கிறது" என்று நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வியந்து போற்றுகிறார்.


    யுனெஸ்கோ இதை பாரம்பரியக் கலைச்சின்னமாக அறிவித்துள்ளது.

    சந்திரபாகா கடற்கரை

    பூரியிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சந்திரபாகா கடற்கரை. இது உலகப் பிரசித்தி பெற்ற கொனார்க் சூரியதேவன் கோவில் தலத்திற்கு 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு ஏராளமானோர் வந்து சூரிய தேவனை வழிபடுகின்றனர்.

    எண்ணற்ற மக்கள் இந்த கடற்கரைக்கு, ரத சப்தமி தினத்தன்று வந்து கூடுகின்றனர்; சூரியனைத் தொழுகின்றனர். இங்கு நீர் விளையாட்டுக்கள் பிரபலம். படகு சவாரி உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும்.


    சூரியதேவன்கோவிலுக்கு உலகின் பாரம்பரிய தளம் என்ற அந்தஸ்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளது.

    ராம்சண்டி ஆலயமும் கடற்கரையும்

    குசபத்ரா நதி கடலுடன் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது ராம்சண்டி ஆலயம். கொனார்க் சூரிய கோவிலில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தேவி ராம்சண்டி இங்கு கோவிலில் குடியிருந்து அருள் பாலிக்கிறாள். தேவி ஒரு தாமரை மலரின் மீது வீற்றிருக்கிறாள். கோவிலின் பின் பக்கம் ஓடும் குசபத்ரா நதி கண்ணுக்கு இனிமையான காட்சியைத் தரும். இங்கு தசரா விழா சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள கடற்கரையும் மிகவும் பிரபலமான ஒன்று.

    இவை தவிர பார்க்க வேண்டிய ஆலயங்களும் பூங்காக்களும் அருங்காட்சியகங்களும் நிறையவே இந்தப் பகுதியில் உள்ளன.


    அவரவர் பட்ஜெட்டிற்கும் ஓய்வெடுக்க உள்ள காலத்தையும் பொறுத்து இந்த இடங்களுக்குத் திட்டமிட்டுப் பயணிக்கலாம்; புத்துணர்ச்சியைப் பெறலாம்!

    பழம்பெரும் ஆலயங்கள், அழகிய கடற்கரைகள், அடர்ந்த வனாந்திரங்கள், புகழ் பெற்ற பண்டைய வரலாறு, மனதை ஈர்க்கும் இயற்கை வனப்பு கொண்ட ஒடிசா இந்தியாவின் பொக்கிஷம் என்று சொல்வது சரிதானே!

    ×